Home Love - Family - Romanceஉனக்கெனப் பிறந்தவள் நானே – 20.

உனக்கெனப் பிறந்தவள் நானே – 20.

by infaalocious

பகுதி – 20.

“சுமி, முகில்… வாங்க வந்து சாப்பிடுங்க, சாப்பிட்ட பிறகு பேசிக்கலாம்” சுதா அழைக்க, கார்முகில் சுமித்ராவின் பெற்றவர்களைப் பார்த்தான்.

“அத்த, மாமா… நீங்களும் சாப்பிட வாங்க” அவன் அழைக்க, அவர்கள் முகங்களில் புன்னகை என்றால், சுமித்ராவின் முகத்தில் ஒரு நிம்மதி.

தான் செய்து வைத்த செயலின் காரணமாக தன்னைப் பெற்றவர்களிடம் அவன் எப்படி நடந்துகொள்வானோ? என அவள் பயந்திருக்க, அதற்கு அவசியமே இல்லை என்பதுபோல் அவன் நடந்துகொண்டால் நிம்மதி வராதா என்ன?

“நாங்க சாப்ட்டுதான் வந்தோம் மாப்ள, நீங்க சாப்பிடுங்க” செல்வம் சொல்ல, அனிதா மகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் முகத்தில் நேற்று இருந்த உற்சாகம், சந்தோஷம் எதுவும் கொஞ்சம் கூட தெரியவில்லையே.

அவர் கவனிப்பதை சுமித்ரா கவனிக்கவே இல்லை. அவளது கவனம் மொத்தமும் தன் கணவன் மீது என்கையில் அவள் வேறு எதை கவனிப்பாளாம்? அனிதாவை அவள் கவனிக்காமல் போக, கார்முகில் அதை முழுதாக உணர்ந்தான்.

“என்ன அத்த? பொண்ணுகிட்டே தனியா பேசணுமா? கூட்டி போய் பேசுங்க. சுமி… அத்தையை அழைச்சுட்டு போ…” கார்முகில் சொல்ல, அனிதா பதறிப் போனார். அவனது அந்த பேச்சில் சுமித்ரா சட்டென தெளிந்தாள்.

அவன் அப்படியே பேசியதன் காரணமே அவள் தெளியவேண்டும் என்பதற்காகத்தானே, அது சரியாக வேலை செய்தது.

“ஐயோ மாப்ள… அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீங்க முதல்ல சாப்பிடுங்க” அவன் கவனிக்கும் அளவுக்கு செய்துவிட்டோமே என சங்கடமானார்.

“அத்த, எதுக்கு இப்போ இவ்வளவு பதறிப் போறீங்க? இதெல்லாம் எல்லா அம்மாவும் செய்யறதுதான். இருபத்தஞ்சு வருஷமா கைக்குள்ளேயே பொத்தி வச்சு வளர்த்த பொண்ணு, திடீர்ன்னு வேற வீட்டுக்கு மொத்தமா அனுப்பி வைக்கும்போது உள்ளுக்குள்ளே ஒரு பயம் இருக்கத்தானே செய்யும்?

“என்னதான் மாப்பிள்ளையைப் பற்றி வெளியே விசாரிச்சு, அவன் நல்லவன்னு தெரிஞ்சுகிட்டாலும், அதை பெற்ற பொண்ணு வாயாலே கேட்டு தெரிஞ்சுகிட்டாதான் நிம்மதி. அதனால் இங்கே உங்களை யாரும் தப்பா நினைக்கலை” கார்முகில் சொல்ல, அனிதாவுக்கு மனதுக்கு நிறைவாக இருந்தது.

“அனிதா, என் பையன் சொல்றது சரிதான்… நானும் ஒரு பொண்ணை பெற்று வளர்த்து வேற வீட்டுக்கு கட்டிக் கொடுத்திருக்கேன். எனக்கும் புரியும்… உன் பொண்ணை தங்கமாட்டம் நாங்க பார்த்துக்கறோம்” சுதாவும் சொல்ல, அனிதா செல்வத்தின் பக்கம் சென்று அமர்ந்துவிட்டார்.

“நீங்க பார்த்துப்பீங்கன்னு எங்களுக்கும் தெரியும்… இது அம்மாவோட மனநிலைன்னு வச்சுக்கோங்க” அனிதா சங்கடமாக சொல்ல, அனைவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.

“அம்மா… அத்தைக்கு ஸ்வீட் கொடுத்தீங்களா?” கார்முகில் கேட்க,

“அதெல்லாம் வந்த உடனே காபி, ஸ்வீட் எல்லாம் ஆச்சு மாப்ள, நீங்க சாப்பிடுங்க” செல்வம்தான் சொன்னார்.

“அப்படியா? அப்போ சரி… அம்மா, அப்பா, நீங்க சாப்ட்டீங்களா?” தாயிடம் கேட்டான்.

“எல்லாரும் சாப்ட்டாச்சுப்பா… நீயும் சுமியும் மட்டும்தான் சாப்பிடணும்” தாய் சொல்ல, அவளோடு சேர்ந்து தானும் சாப்பாட்டு மேஜையின் முன்னாள் அமர்ந்தான்.

“அத்த… எனக்கென்னவோ உங்க மருமக முகமே சரியில்லாத மாதிரி இருக்கு. எதுக்கும் கொஞ்சம் விசாரிங்க…” குமார் சொல்ல, குழலி அவனைப் பார்வையால் சுட்டாள்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை… நான் நல்லாத்தான் இருக்கேன்” தன்னை ஒருமாதிரி திரட்டிக் கொண்ட சுமித்ராதான் இதற்கு பதில் கொடுத்தாள். கார்முகிலின் வீட்டினருக்கு குமாரின் மீது கோபம் எழுந்தாலும் அதைக் காட்டிக்கொள்ள முடியாதே.

“என்னங்க… எனக்கு வாமிட் வர்ற மாதிரி இருக்கு, கொஞ்சம் உள்ளே வரீங்களா?” குழலி கணவனை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அவன் மனைவியின் பின்னால் கிட்டத்தட்ட ஓடினான்.

“அவர் அப்படித்தான்ம்மா… அவருக்கு என்னவோ நம்ம முகில் என்றாலே ஆவறது இல்லை. நீ சாப்பிடு…” சுதா சொல்ல, துடிக்கும் இதயத்தை அடக்கும் வழி தெரியாமல் உணவை விழுங்கி வைத்தாள். அவள் கார்முகிலைப் பார்க்க, அவனிடம் எந்த விதமான மாற்றமும் இருக்கவில்லை.

அவனிடம் பேசிவிட மனம் தவியாய் தவிக்க, தனிமை எப்பொழுது கிடைக்கும் என மனம் ஏங்கத் துவங்கியது.

அறைக்குள் தன் கணவனை அழைத்துச் சென்ற குழலி, அவனை அப்பொழுதே அவன் வீட்டுக்கு கிளம்பிச் செல்ல சொல்லிவிட்டாள். “நீயும் என்னோடவே திரும்பி வர்றதா தானே சொல்லி இருந்த?” குமார் பரிதாபமாக கேட்டு வைக்க, அவள் கோபம் கொஞ்சமும் குறையவில்லை.

“நான் ஏற்கனவே சொன்னதுதான்… எங்க வீட்டு விஷயம் எதுவாக இருந்தாலும் நீங்க அதில் தலையிடவோ, கருத்து சொல்லவோ கூடாது. அவங்க விஷயத்தை அவங்க பார்த்துப்பாங்க…” குரலில் அத்தனை கடுமை இருந்தாலும், அவள் குரல் உயரவே இல்லை.

“என்ன நீ? நான் இந்த வீட்டு மாப்பிள்ளை… நான் இங்கே பேச எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இப்போ வெளியே போய், நீ என்னை வீட்டுக்கு கிளம்பிப் போகச் சொல்றன்னு சொன்னால், என்ன ஆகும்னு தெரியுமா?” வெளியே சுமித்ராவின் வீட்டினர் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் தைரியமாகவே பேசினான்.

அவர்கள் முன்னால் எப்படியும் இவர்கள் தன்னை விட்டுக் கொடுக்க மாட்டார்கள், அப்படிச் செய்தால் அது இவர்களுக்குத்தானே தலை குனிவு என எண்ணினான். அவனது நினைப்பு நொடிக்குள் அவளுக்கும் புரிந்து போனது.

“அப்படியா? உங்களுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருந்தால், இப்போ… இந்த நிமிஷம் வெளியே போய் சொல்லுங்க பார்ப்போம்” அவள் அசராமல் சொல்ல, அவன்தான் அடங்கிப் போக வேண்டி இருந்தது.

“இனிமேல் நான் உங்களோட வாழலைன்னு நான் சொன்னால் என்ன ஆகும்னு தெரியுமா?” பதிலுக்கு அவள் ஒரு மிரட்டல் விடுக்க, அவனுக்கு கிலி பிடித்தது. அவள் மட்டும் அப்படிச் சொன்னால், கொஞ்சம் கூட தயவே பாராமல், அவனை அந்த நிமிடமே அவர்கள் வீட்டை விட்டு அனுப்பி விடுவார்கள் என அவனுக்குத் தெரியாதா என்ன?

“நான் கிளம்பிப் போறேன்…” அவன் பட்டென சொல்லிவிட, தன் வெற்றியை அவள் தன் முகத்தில் காட்டவில்லை. அப்படிக் காட்டினால் அது தன் கணவனை காயப்படுத்தும் என புரிய, ஒரு அன்பு கொண்ட மனைவியாக அவன் கன்னம் வருடினாள்.

“நான் ஒரு வாரம் இங்கே இருந்துட்டு, பிறகு வர்றேன்” அவன் முன்னர் கேட்ட கேள்விக்கும் அவள் பதில் சொல்ல, அவன் முகம் மலர்ந்து போனது.

அதை உள்ளுக்குள் ரசித்தாலும், “என் அண்ணன் விஷயத்தில் இனிமேல் நீங்க தலையிடக் கூடாது” குரலில் அப்படி ஒரு இறுக்கம். அந்த குரலே அவனுக்குள் சிறு பயத்தை விதைக்க, “இனிமேல் பேசலை” உடனே சரண்டர் ஆனான்.

“இதுக்கு முன்னாடி நீங்க என் அண்ணாவை என்ன வேணா அவமானப்படுத்தற மாதிரி பேசி இருக்கலாம். ஆனா இனிமேல் அண்ணி முன்னாடி நீங்க ஒரு வார்த்தை பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்” அவள் சொல்லாமல் விட்டது இன்னதென அவனுக்குப் புரிந்தது.

“அதான் பேச மாட்டேன்னு சொல்லிட்டேன் தானே… நான் கிளம்பிடறேன்” என்றவன் அதற்கு மேலே அங்கே இருக்கவில்லை. சில நேரம் இப்படியான மனிதர்களின் வாழ்க்கையை காப்பதும் அவனுக்குள் இருக்கும் சிறு நேசம்தானோ?

குமார் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு உடனே கிளம்பிவிட, சுதா அவனை இருந்து மதியம் விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லச் சொன்னார். கூடவே மறுநாள் சுமித்ராவின் வீட்டில் அவர்கள் அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருக்க, அதற்கும் அழைத்தார்.

“நாளைக்கு அங்கே மதியம் விருந்துக்கு கண்டிப்பா வர்றேன் அத்த. இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றவன் போயே விட்டான்.

“என்னம்மா இது?” கார்முகில் தங்கையிடம் கேட்டான்.

“போகட்டும்ண்ணா விடுங்க… இது உங்களுக்கான நாள், அதை என்ஜாய் பண்ணுங்க” அவள் சொல்ல, அவளது வார்த்தைகள் சுமித்ராவுக்குள் இறங்கி சுருக்கென தைத்தது.

“அப்போ நாங்க கிளம்பறோம்… நாளைக்கு எல்லோரும் விருந்துக்கு வீட்டுக்கு வாங்க. பொண்ணு மாப்பிள்ளையையும் ஒரு ரெண்டு மூணு நாள் அங்கே தங்கற மாதிரி அனுப்பி வைங்க” அனிதா முறையாக அனைவரையும் வரவேற்றார்.

“கண்டிப்பா வர்றோம்…” சுதா சொல்ல,

“என்ன அத்த, ஒரு வாரம் நாங்க அங்கே இருக்கலாம்னு நினைச்சால், நீங்க மூணு நாளோட நிறுத்திட்டீங்க? அப்போ அதுக்கு மேலே இருக்க வேண்டாமா?” கார்முகில் கேலிக் குரலில் கேட்க, அனிதாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

“நீங்க எத்தனை நாள் வேணா அங்கே வந்து தங்கலாம் மாப்ள, இனிமேல் அதுவும் உங்க வீடுதான்” திருமணத்துக்கு முன்னர் சொன்னதை அவன் நினைவில் வைத்து இருக்கிறானே என அவர் மனம் நிறைந்து போனது.

“அப்போ நாங்க கிளம்பறோம்… வர்றோம் மூர்த்தி” செல்வம் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டார்.

“அண்ணா… மதியம் சாப்ட்டே போகலாமே…” சுதா சொல்ல,

“இல்லம்மா… வீட்ல இன்னும் கெஸ்ட் எல்லாம் நிறையப்பேர் இருக்காங்க. விருந்துக்குன்னு தனியா வந்துட்டு போக முடியாதுன்னு தங்கிட்டாங்க, அவங்களை எல்லாம் நாங்க போய் கவனிக்கணும். ஆனால் கண்டிப்பா இன்னொரு நாள் சாப்பிடற மாதிரி வர்றோம்” அவர்கள் சொல்ல, அதற்கு மேலே அவர்களைத் தடுக்கவில்லை.

அவர்கள் கிளம்பிச் செல்லவே, “அப்பா… பெயின்ட் லோட் ஒன்னு வந்திருக்கு. அதை என்னன்னு பார்த்து இறக்கி வச்சுட்டு வர்றேன்” கார்முகில் திடுமெனச் சொல்ல, அனைவரும் அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தார்கள்.

“அண்ணே… என்ன விளையாடறியா நீ? அண்ணி கூட இருந்து பேசிட்டு இருக்காமல், இப்படி அவங்களை தனியா விட்டுட்டு போறேன்னு சொல்ற?” குழலிதான் அவனிடம் கேட்டாள்.

“குழலி, நாளையில் இருந்து ஒரு வாரம் அத்தை வீடு… அப்படியே ஹனிமூன்க்கு ஒரு வாரம். ஆக மொத்தம் ரெண்டு வாரம் அவ இங்கே இருக்க மாட்டா. இன்னைக்கு மட்டும்தான் அவ உங்களோட இருப்பா.

“உங்களுக்கும் இவ கூட பேசிப் பழக ஆசை இருக்கும் தானே. இந்த ஒரு நாளில் எதுவும் நடந்துடாது, நான் போய்ட்டு ரெண்டு மணி நேரத்தில் வந்துடறேன்” அவன் சொல்ல, அவன் சொன்ன காரணம் சரியாக இருக்கவே அவர்கள் மறுக்கவில்லை.

ஆனாலும் குழலியோ… “அதுக்குன்னு இன்னைக்கு வெளியே கடைக்குப் போகணுமாண்ணா? எங்களோட சேர்ந்து நீயும் இருக்கலாமே” அவனிடம் சொன்னாள்.

“நான் போகலைன்னா அப்பா போகணும்மா. அப்பாவைப் பார்… காலைப் பிடிச்சுட்டு உட்கார்ந்து இருக்காங்க. ரெண்டு நாளா அப்பாவுக்கு சரியான அலைச்சல், இப்போ எப்படி அப்பாவை  அனுப்பட்டும்னு சொல்லு?” அவளிடம் கேட்க, அது அவளுக்கும் புரிந்தது.

“ஓ… அப்போ சரி… நாங்க பேசிக்கறோம். அண்ணிக்கு ஓகேவான்னு கேட்டியா? நீபாட்டுக்கு போறேன்னு சொல்ற?” குழலி அவனைச் சீண்டினாள்.

“அதுக்கென்ன கேட்டுட்டா போச்சு…” என்றவன், “சுமி… நான் கடைக்கு கொஞ்ச நேரம் போயிட்டு வரவா?” அவளிடம் கேட்க, அவள் கண்கள் அவனிடம் ‘போகாதேயேன்’ கெஞ்சியது. இதழ்களோ அதற்கு மாறாக, “கண்டிப்பா போய்த்தான் ஆகணும்ன்னா போய்ட்டு வாங்க” அவள் சொல்ல, கிளம்பப் போனான்.

“நான் இப்போ வர்றேன்…” என்றவள் அவன் பின்னாலேயே அறைக்குப் போக, அறைக்கதவை பூட்ட முடியாத நிலை. அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, கதவைப் பூட்டுவது சரியாகத் தோன்றவில்லை.

“முகி… எ…எ…னக்கு உங்களோட பேசணும்” வார்த்தைகளில் தடுமாற்றம், அவளிடமோ அத்தனை தவிப்பு.

“நான் ரொம்ப ரொம்ப கோபத்தில் இருக்கேன், இப்போ பேசறது கண்டிப்பா சரி வராது. வார்த்தைகள் தவறா விழுந்துட்டா, காலத்துக்கும் அது நமக்கு உறுத்தும். ஒரு ரெண்டு நாள் கழிச்சு நிதானமா பேசிக்கலாம், புரியும்னு நினைக்கறேன்” அவன் சொல்ல, அவள் என்ன சொல்வாளாம்?

“நான் சொல்றதை மட்டுமாவது கேளுங்களேன் ப்ளீஸ்…” அவனிடம் பேசாமல் நிச்சயம் அவளால் நிம்மதியாக இருக்கவே முடியாது எனத் தோன்றியது.

கதவை ஒரு பார்வை பார்த்தவன், “நைட் பேசு கேட்கறேன்” என்றவன் தான் அணிந்திருந்த டிஷர்ட்டை மாற்றிவிட்டு, அன்று அவள் எடுத்துக் கொடுத்ததை அணிந்து கொண்டான். அவனது அந்த செய்கைகள் ஒவ்வொன்றும் அவளைப் பலமாக தாக்கியது.

“நான் போய்ட்டு வர்றேன்ம்மா… குழலி அவளைப் பார்த்துக்கோ… அவ கூடவே இரு” என்றவன் செல்ல, அதைக் கேட்டவாறே அங்கே வந்தாள். சுமித்ராவிடமும் ஒரு தலையசைப்பில் விடை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

அவன் தன் காரை எடுத்துக்கொண்டு செல்ல, தன் கடைக்கு முன் நின்ற அதியன் அவனது காரைப் பார்த்துவிட்டு புருவம் நெரித்தான். தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் வெளியே ஓடி வந்து அவன் காரை மறித்தான்.

அதியனைப் பார்த்துவிட்டு அவனும் காரை நிறுத்த, “எங்கடா மாப்ள இந்த நேரம்? அதுவும் காரை எடுத்துட்டு தனியா போற?” பக்கத்து இருக்கை காலியாக இருக்கவே கேட்டான்.

“கடையில் கொஞ்சம் வேலை இருக்குடா அதான்…” அவன் முகம் பார்க்காமலே சொன்னான்.

“என்ன? கடையில் வேலையா? என்னடா விளையாடுறியா? உன் முகமே சரியில்லை… என்னன்னு சொல்லுடா” என்றவன் அங்கே போக்குவரத்துக்கு கொஞ்சம் இடைஞ்சல் ஆகவே, அங்கே வேலைக்கென வைத்திருந்த பையனிடம் கடையை ஒப்படைத்துவிட்டு அவனோடு காரில் ஏறிக் கொண்டான்.

“ஒன்றும் இல்ல அதியா, நீ கடையைப் பார்…” என்றவனுக்கு உள்ளுக்குள் கொந்தளித்த உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை. வீட்டில் இருந்த அவ்வளவு நேரமும் எப்படியோ தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். ஆனால் அதியனின் முன்னால் அது முடியாமல் போக, அவன் கண்கள் இரண்டும் ரத்தமென சிவந்து போனது.

அதைப் பார்த்த அதியன் சற்று திடுக்கிட்டுத்தான் போனான். “மாப்ள, வண்டியை இப்படி ஓரமா நிறுத்து… நீ நிதானத்துல இல்லை” அவன் கரமும் நடுங்கிக் கொண்டிருக்கவே சொன்னான்.

அவன் சொன்னதை மறுக்காமல் கேட்ட கார்முகில், காரை சாலையோரம் அப்படியே நிறுத்திவிட்டான். “என்னடா மாப்ள? என்ன பிரச்சனை? என்கிட்டே சொல்ல முடியும்ன்னா சொல்லுடா” கார்முகிலை இப்படி ஒரு கோலத்தில் அவன் பார்த்ததே இல்லை என்பதால் கேட்டான்.

“என்கிட்டே எதுவும் கேட்காதே அதியா… என்னால் எதையும் சொல்ல முடியாது” அவன் சொல்ல,

“முகிலா… ஒரு நிமிஷம்… நீ இறங்கு…” அவன் சொல்ல, காரிலிருந்து இறங்கினான். அவன் இறங்கவே, தான் காரை ஓட்டிக்கொண்டு கார்முகிலோடு தன் வீட்டுக்குச் சென்றான்.

தன் வீட்டில் அவனை விட்டவன்… “ஒரு பத்து நிமிஷம்… உனக்கு என்ன தோணுதோ, செய்யணும்னு தோணுதோ செய். நான் பக்கத்தில் போய் டிபன் சாப்ட்டு வர்றேன்” அவன் சொல்லிச் செல்ல, அதியனின் வீட்டுக்குள் நுழைந்தவன் வாய்விட்டே அழுதான்.

அவனது அழுகுரலைக் கேட்ட அதியன் திகைத்துப் போனான். அவன் இப்படி வாய்விட்டே அழுகிறான் என்றால், நிச்சயம் அவனது திருமண வாழ்க்கையில் ஏதோ சிக்கல் என அவனுக்குப் புரிந்தது. மனது ஒரு மாதிரி பாரமாகிப் போக, அவனால் எதுவும் செய்ய இயலாத நிலை.

கார்முகிலோ தரையில் மடிந்து அமர்ந்தவன் குலுங்கி அழுதான். மனதுக்குள் இருந்த ஏமாற்றமும், வலியும் கண்ணீராக வெளியேறியது. ‘ஏன்? ஏன்? ஏன் இப்படிப் பண்ணா? என்னைப் பிடிக்கலைன்னா எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிகிட்டா? இப்படி ஒரு வலியை எனக்கு பரிசாக கொடுக்க நினைத்தவள், எதற்காக என்னோடு இணக்கமாக முன்னர் நடந்து கொண்டாள்?’ அவனுக்குள் கேள்விகள் மட்டுமே படையெடுத்தது.

அவனது அலைபேசிக்கு அந்த நேரம் பல குறுந்தகவல்கள் வந்து விழ, அது யாராக இருக்கும் என அவனுக்குப் புரிந்தது.

“சாரி…” “ஐ கேன் எக்ஸ்ப்ளேன்…” “டோன்ட் பீ மேட் அட் மீ” “ரியலி சாரி… நான் எதையோ நினைச்சு செய்ய, அது எப்படியோ முடிஞ்சுடுச்சு” அவளது தகவல்கள் வந்துகொண்டே இருக்க, அதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவன் பார்ப்பது தெரிய, இன்னும் விடாமல் அனுப்பினாள். ஆனால் எதற்கும் அவளுக்கு பதில் கொடுக்கவே இல்லை. அவன் அப்படி பதில் கொடுக்காதது, அவளை இன்னும் வருத்த, இன்னும் பல மன்னிப்புகளை வேண்டினாள்.

“ஐ லவ் யூ… எனக்கு உங்களைப் பிடிக்கும், ரொம்ப பிடிக்கும். ஐ ப்ராமிஸ்…” அவள் அதை அனுப்ப, அதைப் பார்த்தவனுக்கு அதை எப்படி எடுத்துக்கொள்ள என்றே தெரியவில்லை.

‘இப்போ இப்படி சொல்றவ, பிறகு ஏன் என்னை நேற்று அவாய்ட் பண்ணா?’ அதற்கு அவனுக்கு பதில் தெரிந்தே ஆகவேண்டும்.

அவளுக்கு அவன் அழைக்க, தங்கள் அறைக்குள் இருந்தவள், பாத்ரூமுக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டாள்.

“முகி… முகி… முகி… பேசுங்க… சாரி, ரியலி சாரி… நான் இப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கவே இல்லை” அவனிடம் படபடத்தாள்.

அவளது தவிப்பும், கண்ணீரும் அவனைச் சுட, “ஏன்? ஏன் அப்படிப் பண்ண?” அவளிடம் கேட்டான்.

அவள் எப்படிச் சொல்வாள்? என்னவென அவளுக்கு விளக்கம் கொடுப்பாள்? அவனுக்கு எப்படி விளக்கம் கொடுக்க முடியும்? தவிப்பு, தவிப்பு… உள்ளுக்குள் மொத்தமும் தவிப்பு மட்டுமே. ‘உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தேன்’ எனச் சொல்வது சுத்த பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தது.

“அது… அது… நீங்க நேர்ல வாங்களேன்” அவள் குரல் நடுங்க, அவனுக்கு கோபம் கொப்பளித்தது.

“உன்னால் என்னை நேசிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். வீணாக எதையும் முயற்சி செய்யாதே” என்றவன் அழைப்பை வைத்துவிட, மனதளவில் நொறுங்கிப் போனாள்.

‘இல்ல… இல்ல… அது அப்படி இல்லை…’ அவனிடம் கதறத் துடித்த வார்த்தைகள் எல்லாம் கண்ணீராக கரைந்து வெளியேறியது.

You may also like

1 comment

kothai suresh March 31, 2026 - 12:06 am

ஏற்கனவே அவனுக்கு காம்ப்ளெக்ஸ், இவ வேற வினைய இழுத்து விட்டுட்டு, பாவம் அவன்

Reply

Leave a Reply to kothai suresh Cancel Reply

About Me

Featured