பகுதி – 21.
கார்முகில், சுமித்ரா திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது. அந்த ஒரு மாதமும் சம்பளம் இல்லாத விடுப்பை எடுத்திருந்தாள் அவள். அன்று அவள் வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தது. அவளது புத்தம்புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாசலில் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தது.
அவள் குளித்துமுடித்து, கண்ணாடிக்கு முன்னால் நின்று உடை மாற்றிக் கொண்டிருக்க, அங்கே தன் அலைபேசியில் பார்வையைப் பதித்தவாறு அமர்ந்திருந்தான் கார்முகில். அவனைக் கண்ணாடியினூடே பார்த்தவாறு நின்று இருந்தாள் சுமித்ரா.
அவளது பார்வை மொத்தமும் தன்மேல் இருக்கிறது எனத் தெரிந்தும், அவளை அவன் கண்டுகொள்ளவே இல்லை. அப்படிச் சொல்லிவிட முடியாது, அவளை அவதானித்தவாறே அமர்ந்து இருந்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
“முகி…” அவள் அவனை அழைக்க, ‘என்ன?’ என்பதுபோல் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“இந்த ட்ரஸ் எனக்கு நல்லா இருக்கா?” அவள் கேட்க, பார்வையை அவள்மேல் நிலைக்கவிட்டான். அவன் கண்களில் ரசனை இல்லை, அவளைப் பார்க்கையில் ஒளிரும் அந்த கண்களில் ஒளி இல்லை. தன்னை படபடக்கச் செய்யும் அவன் பார்வை இல்லை. அவளுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
“நீ எப்போதுமே அழகுதான்… இப்போ இன்னும் ரொம்ப அழகா இருக்க” அவன் சொல்ல, அவளுக்கு கண்களில் முணுக்கென கண்ணீர் எட்டிப் பார்க்க, அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தாள். அவனுக்கு அவள் அழுதால் சுத்தமாகப் பிடிக்காது. அதுவும் அவளது கண்ணீரைக் கண்டால் அவன் மிகவும் பலவீனமாக உணர்வான் என அவளுக்குத் தெரியும்.
அவனை அப்படி பலவீனமாக்கிப் பார்க்கும் தைரியமின்றி தன்னை அவள் கட்டுக்குள் வைத்திருந்தாள். “தேங்க்ஸ்…” என்றவள், “இன்னைக்கு சாயங்காலம் ஆதவனுக்கு பிறந்தநாள் பார்ட்டி இருக்கு., உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அதுக்கு நாம கண்டிப்பா போகணும்” அவள் சொல்ல,
“எனக்கு ஞாபகம் இருக்கு… சாயங்காலம் நீ நம்ம வீட்டுக்கு வந்துடறியா? இல்லன்னா அப்படியே உங்க அக்கா வீட்டுக்கு போறியா?” அவளிடம் கேட்டான்.
“முதல்நாள் ஆபீஸ் போறேன், பெண்டிங் வேலை எல்லாம் எக்கச்சக்கம் இருக்கும். அதை முடிக்கவே ரொம்ப டயர்ட் ஆயிடும். பிறகு அப்படியே போனால் அது சரியா வராது. நம்ம வீட்டுக்கு வந்துட்டு ட்ரஸ் மாத்திட்டுத்தான் போகணும்” அவள் சொல்ல, சற்று யோசனையானான்.
“அப்போ… நான் ட்ராப் பண்ணிட்டு, உன்னை சாயங்காலம் பிக்கப் பண்ணிக்கறேன். எப்படியும் உன் ஆபீஸ்க்கு போக கால்மணி நேரத்துக்கும் மேல ஆகும். டயர்டா இருக்கும்னு வேற சொல்ற, பிறகு ஏன் தனியா வண்டியில் போகணும்னு சொன்ன?” அவளிடம் கேட்டான்.
‘உனது இந்த அக்கறை எல்லாம் என்னை இன்னும் குற்ற உணர்வுக்கு இட்டுச் செல்கிறது’ என அவனிடம் அவள் எப்படிச் சொல்வாள்? இப்பொழுது கூட அவனது பேச்சு அவளை பலவீனமாக்குவதை அவன் உணர்வானா?
“உங்களுக்கு இது தேவையில்லாத அலைச்சல் தானே… காலையில் ஓகே, சாயங்காலம் சில நேரம் முன்னப் பின்ன ஆகலாம். தேவையில்லாமல் நீங்க அங்கே வந்து காத்துட்டு இருக்க வேண்டி வரும், அதான் வேண்டாம்னு சொன்னேன்” அவள் சொல்ல, அவளை மறுப்பாக பார்த்தான்.
“இதெல்லாம் ஒரு மேட்டரா? கடையில் உட்காருவதை, கார்ல உட்கார்ந்துட்டு போறேன். அதில் என்ன இருக்கு?” அவன் கேட்க, அப்படியும் மறுத்தாள்.
“என்னை நீங்க வீட்ல விட்டுட்டு, திரும்ப கடைக்கு அலையணும்… கஷ்டம் தானே?” அவள் தயங்க,
“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை… உனக்கு ஓகேயா? அதை மட்டும் சொல்லு” அவன் அப்படிச் சொன்ன பிறகும் அவளால் மறுக்க முடியவில்லைதான்.
ஆனாலும் மனம் ஒரு மாதிரி அழுத்த, “உங்களோட ஒண்ணா ஒரே காருக்குள்ளே யாரோ போல என்னால் உட்கார்ந்துட்டு வர முடியாது முகி…” அவள் குரலும் முகமும் கலங்க சொல்ல, அவன் முகம் அப்படியே இறுகிப் போனது.
“நான் வெளியே இருக்கேன் வா…” என்றவன் விடுவிடுவென அறைக்கு வெளியே சென்றுவிட்டான். நெஞ்சை முட்டிக்கொண்டு அழுகை வெடிக்க, சில பல நிமிடங்கள் அழுதாள். பிறகு நேரமாவதை உணர்ந்து, தன்னை திருத்திக்கொண்டு வெளியே வந்தாள்.
அவளைப் பார்த்த சுதா, “அம்மாடி… என்னம்மா முகமே இப்படி வீங்கிப் போயிருக்கு? உடம்பு எதுவும் சரியில்லையா என்ன?” அவள் முகம் சிவந்து தடித்திருக்க, பதறிப்போய் கேட்டார்.
“லேசா கோல்ட் வர்ற மாதிரி இருக்கு அத்த, வேற எதுவும் இல்லை” வேகமாக அவரை சமாதானப்படுத்தினாள்.
“கோல்ட்ன்னு சொல்ற, பிறகு எதுக்கு இன்னைக்கு வேலைக்கு போய்கிட்டு? பேசாமல் வீட்ல இருந்து ரெஸ்ட் எடும்மா” அவர் அக்கறையாகச் சொன்னார்.
“ஒரு மாசத்துக்குப் பிறகு இன்னைக்குதான் அத்த முதல் முறையா வேலையில் ஜாயின்ட் பண்ணப் போறேன். இன்னைக்கு மட்டும் லீவ் போட்டால், இந்த வேலையவே நான் மறந்துட வேண்டியதுதான். ரொம்ப முடியலைன்னா நான் வந்துடறேன்” அவள் சமாதானப்படுத்தினாள்.
“சுதா… அவளை விடு… வெளியே போகும்போது தடை சொல்லாத” கணவர் சொல்ல, சுதா அதற்கு மேலே அவளைத் தடுக்கவில்லை.
“மத்தியானம் எனக்கு கால் பண்ணி எப்படி இருக்குன்னு சொல்லணும். அதுவும் வீடியோ கால்…” சுதா சொல்ல, அதற்கு ஒத்துக்கொண்டு கிளம்பினாள்.
அவள் வெளியே வருகையில் கார்முகில் காரைக் கிளப்பிக் கொண்டு தயாராக காத்திருந்தான். அவள் முன்னிருக்கையில் வந்து அமர, காரைக் கிளப்பினான். அவன் காரோடு வெளியே வருகையில் ஆராதனா அவள் வீட்டில் இருந்து மகளோடு வெளியே வந்தாள்.
“அக்கா… கிளம்பிட்டீங்களா? ஹாய் மஹதி…” காரை அவர்களுக்கு அருகே நிறுத்திச் சொன்னான்.
“ஆமா அண்ணா… நீங்களும் கிளம்பிட்டீங்களா? ஹேய் சுமி… நீயும் ஆபீஸ்க்குப் போறியா என்ன? எப்போ இருந்து?” இதற்கு முன்னர் அவளைப் பார்த்தது இல்லை என்பதால் கேட்டாள்.
“இன்னைக்குதான் முதல் நாள்…” அவள் பதில் கொடுக்க, “ஆல் தி பெஸ்ட்…” அவள் சொல்ல, கார்முகில் காரை நகர்த்தினான்.
“இவங்க விஷயம் என்ன ஆச்சு? அதியன் அவங்க என்ன சொல்றாங்க?” அவனிடம் கேட்டாள்.
“அவன் கேட்க தயங்கிட்டு இருக்கான், கொஞ்ச நாள் போகட்டும்… ஏதாவது சரியான சந்தர்ப்பம் பார்த்து ஆராதனா கிட்டே பேசணும்” அவன் யோசனையோடு சொன்னான். அதை சுமித்ராவும் கேட்டுக் கொண்டாள்.
கார் அலுவலகம் நோக்கி நகர, இந்த ஒருமாத வாழ்க்கையை அவள் மனம் அலசியது. அதுவும் இரண்டாவது நாள் இரவில் தனிமையில் அத்தனை பதைபதைப்போடு அவனுக்காக காத்திருந்தாள். அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் அறைக்குள் வந்தவன் நேராக குளிக்கச் சென்றான்.
‘அவனிடம் எப்படிப் பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?’ என மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் இப்பொழுது பேசாதே எனச் சொல்லிவிட்டாலும் அவளால் பொறுமை காக்க முடியவில்லை.
அதுவும் அவன் மத்தியானம் சொன்ன வார்த்தைகள் ‘உன்னால் என்னை நேசிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். வீணாக எதையும் முயற்சி செய்யாதே’ அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அவள் வீட்டில் இருந்த பொழுது அவனது தாய், தங்கையிடம் அவனது கோபம் பற்றி கேட்ட பொழுது அவர்கள் இருவருமே ஒன்றுபோல் சொன்னது ஒரே வார்த்தைதான்.
‘முகிலுக்கு கோபமே வராது? அவன் கல்யாண விஷயத்தில் கூட பிடிவாதம்தான் காட்டினானே தவிர, கோபமெல்லாம் காட்டினதே இல்லை. அவன் கோபப்பட்டு நாங்க பார்த்ததே இல்லை’ என்பதுதான்.
அதுவும் குழலி ஒரு படி மேலே போய், ‘என் வீட்டுக்காரர் அவனை ரொம்ப ஒரு மாதிரி டீஸ் பண்ணுவார். அப்போ கூட விலகித்தான் போவானே தவிர, மறுபடியும் மச்சான் என்ற விதத்தில் அவர்கிட்டே பேசத்தான் செய்வான்.
“நான்தான் சொல்லிகிட்டே இருப்பேன், அவர்தான் மூஞ்சை காட்டறாரே, அவர்கிட்டே பேசாதன்னு. அதுக்கு கூட அவர் உன் புருஷன், அவர்கிட்டே நான் மூஞ்சை திருப்பிகிட்டு பேசாமல் போறது நல்லா இருக்காதுன்னு சொல்வான். அவன் அவ்வளவு நல்லவன்’ அவள் சொன்ன விதத்தில் நிஜத்தில் சுமித்ராவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“ஒரு வேளை கோபம் வந்தால்?” அவள் கேட்டு வைக்க, அவர்கள் இருவருமே அவளை யோசனையாகப் பார்த்தார்கள்.
“அவனுக்கு கோபம் வந்து நாங்க பார்த்ததே இல்லைம்மா” சுதா அவள் கன்னம் வழிக்க, அவளுக்கு தன் உள்மன உணர்வுகளை மறைப்பது அவ்வளவு போராட்டமாக இருந்தது.
பாத்ரூமுக்குள் நுழைந்துகொண்ட கார்முகிலுக்கு, வெளியில் சென்று அழுது கரைந்துவிட்டு வந்த பிறகும், தன் ஏமாற்றத்தை, வலியை மறைப்பது அத்தனை கடினமாகத்தான் இருந்தது. என்ன செய்து, என்ன சொல்லி தன்னையே சமாதானம் செய்ய என அவனுக்குத் தெரியவில்லை.
நிஜத்தில் அந்த அளவுக்கு அவள்மேல் பித்தாக இருந்தான். அதுவும் அவள் திருமணத்திற்கு முன்பே தன்னிடம் காட்டிய இணக்கம். அவளது அனுசரணை, அன்பு… அதை உணர்ந்தவன் அவள்மேல் உயிரையே வைத்துவிட்டான்.
தாலி கட்டுவதற்கு முன்பே அவள்மேல் பித்தாக இருந்தவன், ‘இனி தடையில்லை’ என்ற கொண்டாட்டத்தில், உல்லாசத்தில் இருக்கையில் அவனை வேரோடு வெட்டி வீழ்த்திய அவளது செய்கையில் மனம் ரணப்பட்டு போனது.
செய்வதையும் செய்துவிட்டு அவள், சொன்ன ‘லவ் யூ’வும், ‘உங்களை எனக்குப் பிடிக்கும்’ என்ற வார்த்தைகளும் பச்சைப் புண்ணின் மீது மிளகாயைத் தூவும் வலியைத்தான் கொடுத்தது.
‘அப்படி நேசிக்கிறவ இப்படித்தான் செய்வாளா? உங்க ஊர்ல இதுதான் உங்க காதலா? இல்லையென்றால் காதலைக் காட்டும் விதமா? அவளுக்கு என் மனநிலை நன்றாகவே தெரியும் அப்படியும்…’ என எண்ணியவனுக்கு அதுதான் இன்னும் வலியைக் கொடுத்தது.
அவள் என்னதான் சமாதானம் செய்தாலும் அதை ஏற்கும் நிலையில் அவன் சுத்தமாக இல்லை. பேச வேண்டும் என காத்திருப்பவளிடம் அவனால் முகத்தைக் காட்டவும் முடியவில்லை.
தனக்கு இத்தனை பெரிய அநீதியைச் செய்தவளிடம் தன் வருத்தத்தை, கண்ணீரைக் காட்டுவது கூட தனக்கு தலையிறக்கம் என நினைத்து குமைந்தான்.
‘அவளால் என்னை நேசிக்கவே முடியாது’ என்னும் நினைப்பு மட்டும் வானம் மட்டும் வளர்ந்துகொண்டே சென்றது.
அவள் அவனுக்காக காத்துக் கொண்டே இருக்க, அவன் வெளியே வரும் வழியைக் காணோம் எனவும் பாத்ரூம் கதவை தயக்கத்தோடு தட்டினாள். “என்னங்க… உள்ளே இவ்வளவு நேரமா என்ன பண்றீங்க?” மெதுவாக குரல் கொடுத்தான்.
‘நான் இங்கே என்ன செய்தால் உனக்கு என்ன?’ அவளிடம் கத்தத் துடித்த நாவை அடக்கினான்.
‘எது எப்படியோ, அவ உன்னை நம்பி இங்கே வந்திருக்கா. நீ அவளை காயப்படுத்தக் கூடாது’ அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் நிதானமானான்.
அதியன் அவனிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது. “என்ன வேணா நடந்திருக்கட்டும் முகில். கொலைக் குற்றவாளிக்கு கூட அவன் பக்க நியாயம் என்னன்னு கேட்டுதான் தீர்ப்பு சொல்வாங்க. அதனால் நிதானமா முடிவெடு…” கார்முகிலின் முகம் அழுது வீங்கிப் போயிருக்கவே, நடந்தது இன்னதெனத் தெரியவில்லை என்றாலும் சொன்னான்.
அதை நினைத்துப் பார்த்தவன், “இதோ வர்றேன்…” என்றவன் குளித்துவிட்டு இடையில் கட்டிய டவ்வலோடு வெளியே வந்தான். அந்த வெள்ளை நிற துவாலை அவன் இடுப்பைச் சுற்றி படர்ந்திருக்க, அந்த நிலையிலும் அந்த முரட்டு ஆண்மகனை அவள் ரசித்துப் பார்த்தாள்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சென்று உடை மாற்றி வந்தவன் படுக்கையில் அமர்ந்தான். ‘என்ன சொல்லணுமோ சொல்’ என்னும் பார்வையை மட்டுமே அவள் பக்கம் செலுத்த, அவளுக்கு நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
“முகி… நான் சொல்றதை நீங்க நம்பணும்…” என்ற கோரிக்கையோடு அவள் துவங்க, அவளையே நிதானமாகப் பார்த்திருந்தான். உள்ளுக்குள் மனம் குமைந்து தவிக்க, ‘நம்பறதா? உன்னையா? நம்பித்தானே இப்படி மோசம் போயிருக்கிறேன்’ என உள்ளுக்குள் எண்ணியவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
“நான்… நான்… சும்மா உங்ககிட்டே விளையாடிப் பார்க்கலாமேன்னு” அவள் தான் செய்ய முயன்ற செய்கையினை எப்படி விளக்குவது எனத் தெரியாமல் தடுமாறினாள்.
அவள் இப்படிச் சொல்லவே, அவன் இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை எட்டிப் பார்க்க, இதழ் ஓரத்தில் ஒரு அலட்சிய புன்னகை கூட வந்து அமர்ந்தது. அதுவே அவளிடம் ‘இதுதான் விளையாட்டா?’ எனக் கேட்க, அவள் இதயம் நின்று துடித்தது.
அனிதா சொன்னதுபோல், ‘உன்னைப்பற்றி முழுசா தெரிய முன்னாடி எதையும் செய்து வைக்காதே கண்ணம்மா’ எனச் சொன்னது காதுக்குள் ஒலிக்க, அடிவயிறு கலங்கியது.
“ஐ ஸ்வேர்… நீங்க குளிச்சுட்டு வெளியே வந்த உடனே உங்ககிட்டே உண்மையைச் சொல்லத்தான் காத்திருந்தேன். ஆனால் என்னை அறியாமலே நான் தூங்கிட்டேன்… அதுதான் உண்மை” இப்படி ஒரு நிலையில் நின்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டதில் அவள் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது.
“ஓ… அப்படியா?” இப்படிக் கேட்டவனது மனநிலை என்னதென அவளால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவன் நார்மல் மோடுக்கு திரும்பவில்லை என அவன் முகமே காட்டிக் கொடுக்க, என்ன சொல்லி அவனை மாற்றுவது என்றும் அவளுக்குத் தெரியவில்லை.
“முகி… என்னை நம்புங்களேன்…” அவன் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள். அந்த அவள் கண்களை, அதில் தெரியும் தவிப்பை, கலக்கத்தை விழி எடுக்காமல் பார்த்தான்.
அவள் கண்கள் பொய் சொல்லவில்லை என அவனுக்குச் சொல்லத் தவிக்க, அதை அவன் பிடிவாதமாக படிக்க மறுத்தான்.
“நான் நம்பறேன்… ஆனா நான் சொன்ன விஷயம்… அதுதான் உண்மை. உன்னால் என்னை நேசிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்” அவன் அதே வார்த்தைகளை அப்படியே திருப்பிப் படிக்க நொறுங்கிப் போனாள்.
“இல்ல… இல்ல… அது உண்மை இல்லை முகி…” அவள் கதற, அவளை அப்படி தவிக்க விடுவதில் இவன் உடைந்து போனான். அவள் அப்படி அழுவதை அவனால் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை.
“நீ என்னை நேசிப்பது உண்மை என்றால் இனிமேல் என் முன்னாடி அழாதே. இப்படி உன்னைக் கல்யாணம் செய்து கூட்டி வந்தது இந்த அளவுக்கு உன்னை அழ வைக்கவா? என்னால் அதை தாங்கிக்க முடியலை” என்றவனது குரலில் இருந்த வருத்தத்தில் உடைந்தே போனாள்.
“என்னை நீங்க மன்னிக்கவே மாட்டீங்களா?” அவன் கன்னம் தாங்கி, அவனிடம் கெஞ்சலாக கேட்டாள்.
“மன்னிக்கற அளவுக்கு நீ என்ன தப்பு செய்த? என் தகுதிக்கு மீறி பேராசைப் பட்டது நான் தானே. எனக்கு இந்த தண்டனை அவசியம் தான்” அவன் விரக்தியாகச் சொல்ல, அவளுக்கு துக்கம் பெருகியது. அவன் கண் முன்னால் அழக் கூடாது எனச் சொல்லிவிட, அங்கே இருந்த பாத்ரூமுக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
அழுகை என்றால் அப்படி ஒரு அழுகை, விம்மி வெடிக்க… தேறிக்கொள்ளவே முடியாத அளவுக்கு ஒரு அழுகை. ஆற்றுவார், தேற்றுவார் யாருமின்றி அப்படி ஒரு அழுகை அழுதாள். அவளை அப்படி அழ விடுவது அவனைக் கொல்லாமல் கொன்றது.
“சுமி… சுமி… இன்னும் எவ்வளவு நேரம் இப்படி அழுவ? வெளியே வா…” கதவை படபடவென தட்டி அவளை அழைத்தான்.
வேகமாக கதவைத் திறந்தவள், “அப்போ எல்லாம் அவ்வளவுதானா?” அவள் கேட்ட விதத்தில் அவன் கண்கள் இரண்டும் கலங்கிப் போனது. அவளை இழுத்து இறுக்கமாக, மிகவும் இறுக்கமாக கட்டிக் கொண்டான்.
அவன் அவ்வாறு செய்ததில் அவளது அழுகை இன்னும் பொங்க, அவன் நெஞ்சிலேயே விழுந்து, முகம் புதைத்து கதறித் தீர்த்தாள்.
“அழாத… உன்னை அழாதன்னு சொன்னேன்” அவன் எவ்வளவோ சமாதானம் செய்தும், அவள் சமாதானமாகாமல் போகவே, இறுதியில் அவன் சற்று குரல் உயர்த்த அதுதான் கொஞ்சம் வேலை செய்தது.
“நான் விளையாட்டா தான் செய்தேன்” பரிதாபமாக அவன் முகம் பார்த்தாள்.
“நான் அப்போ விளையாடும் மூடில் இருக்கலை” அவன் பதில் கொடுக்க, அவளுக்கு ‘ஐயோ’ என்று இருந்தது.
“நான் என்ன செய்யட்டும்?” அவனிடமே கேட்டாள்.
“நாம இதை இப்படியே விட்டுடலாம். இந்த ரூமுக்கு உள்ளே கண்டிப்பா என்னால் ஒரு கணவனா நடந்துக்க முடியாது. அந்த நிலையை நான் தாண்டிட்டேன். இந்த ரூமுக்கு வெளியே நாம நார்மல் கப்பிள் தான். நான் சொல்றது உனக்குப் புரியுதா?” அவன் கேட்க மறுப்பாக தலை அசைத்தாள்.
அவளை அழைத்துவந்து படுக்கையில் அமர்த்தியவன், அவள் முகத்தை அழுத்தமாக துடைத்துவிட்டு, அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தான். அவளும் அதை வாங்கி மறுக்காமல் குடிக்க, பாட்டிலை மீண்டுமாக வைத்துவிட்டு வந்து அவள் அருகில் அமர்ந்தான்.
“என்னால ஃபிசிக்கலா உன்னை நெருங்க முடியும்னு தோணலை” அவன் ஆழ்ந்த குரலில் சொல்லி நிறுத்த, அவளுக்கு நின்றிருந்த கண்ணீர் உடைப்பெடுத்தது.
“என்னை நீ எப்படி, எந்த மனநிலையில் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னியோ தெரியலை. ஒரு வேளை யாருக்காவது உன்னை நிரூபிக்க என்னை கல்யாணம் செய்துகொண்டாயா என்றும் புரியலை. நான் காயப்பட்டுட்டேன்… என்னால் அதில் இருந்து எப்போ மீண்டு வர முடியும்னு தோணலை.
“நான் உன்மேல் வைத்த நேசம் உண்மை. ரொம்ப எதிர்பார்த்து, அது அப்படியே மொத்தமா ஏமாற்றமா உணர்ந்து, உருமாறி… ரொம்ப வலிக்குது. எனக்கு உன்னைப் புரிஞ்சுக்கத் தெரியலையா? இல்லன்னா தகுதிக்கு மீறி ஆசைப் பட்டுட்டேனோன்னு அது வேற ஒரு பக்கம் குற்ற உணர்ச்சியைக் கொடுக்குது” அவன் அத்தனை வலியோடு சொல்ல, நொந்தே போனாள்.
“முகி… அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உங்களுக்கு என்ன குறை? ஏன் இப்படியெல்லாம் நினைக்கறீங்க? நான்தான் சொதப்பிட்டேன்” செய்துவைத்த செயலின் வீரியம் அவளை சுழற்றி அடித்தது.
“கொஞ்ச நாளைக்கு நம்ம தனிமையில் என்னை என் போக்கில் விட்டுடு. இந்த ரூமுக்கு வெளியே நாம சாதாரண கணவன் மனைவியா இருந்துக்கலாம். அறைக்குள் பேச்சுக்கு கூட அப்படி வேண்டாம். அது என்னை ரொம்ப காயப்படுத்தும்” அவன் அத்தனை வெளிப்படையாக சொல்லிவிட, அவளுக்கு நெஞ்சை முட்டிக்கொண்டு வந்தது.
வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ஏமாற்றத்தின் வலியை அவள் சுவைத்தாள். இதற்கு முன்னர் வீட்டிலும் சரி, அலுவலகம், நண்பர்கள் என அனைவரிடமும் அவள் இப்படித்தான் விளையாடி இருந்தாள்.
‘ஹையோ… மறந்துட்டேனே? செய்யலையே…’ இப்படி முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அவள் சொல்கையில் அதை நிஜமென நம்பி ஏமாந்து போவார்கள். அதற்குப் பிறகு அடுத்த நொடியே அவள் அதைச் செய்து கொடுக்கையில் அவர்கள் முகங்கள் பல மடங்கு மலர்ந்து, பூரித்துப் போகும்.
அதைப்பார்த்து இவள் சந்தோசம் கொள்வாள். அவர்களை அப்படி சந்தோஷப்படுத்திப் பார்க்கையில் அந்த சந்தோசம் இன்னும் ரெட்டிப்பு அடைவதை அவள் கண்கூடாக கண்டிருக்கிறாள். அவனிடமும் அவள் அதையே முயற்சி செய்ய, அது மிகவும் கேவலமான முறையில் தோல்வியைத் தழுவி இருந்தது.
“சரி… நான் செய்யலை…” அவள் சொல்லிவிட, இரவு உணவை முடித்துவிட்டு வந்து படுத்துக் கொண்டார்கள். ஆனால் அறைக்கு வெளியே அவன் அவளிடம் நடந்துகொண்ட முறை, பார்வையில் கூட அவள்மீதான விலகலை அவன் காட்டிக் கொள்ளவே இல்லை.
அங்கே மட்டுமா? அவளது வீட்டுக்குச் சென்று, அங்கேயும் அப்படித்தான். அறைக்கு வெளியே அவளை விட்டு அவன் நீங்கவே இல்லை. அவள் கரத்தை கோர்த்துக் கொண்டு அமர்ந்திருப்பது, அவளோடு சேர்ந்து கேரம், கார்ட்ஸ் என விளையாடியது, ஒன்றாக அமர்ந்து லேட் நைட் மூவி பார்த்தது என ஒரு காதல் கணவனாகவே நடந்து கொண்டான்.
அதுவே அவளது அறைக்குள் நுழைந்துவிட்டால் போதும். அவனுக்குள் வேறு ஏதோ ஆவி நுழைந்ததுபோல் அவன் செய்கை மாறிப் போகும். அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச மாட்டான், பேச என்ன பார்க்க கூட மாட்டான்.
அவள் ஏதாவது பேச முயற்சி செய்தாள், ஆமா அவளால் முயல மட்டுமே முடிந்தது. “பெர்சனல் டாக் வேண்டாம்… சும்மா ஏதாவது பேசணும்ன்னா மட்டும் பேசலாம்” அவன் சொல்லிவிட, அவளும் என்னதான் செய்ய?
அவள் வீட்டில், அங்கே இருந்த ஒரு வாரமும் அவள் கூடவேதான் சுற்றிக் கொண்டிருந்தான். அவனது கடைக்கு கூட செல்லவில்லை. அவள் எங்கே இருந்தாலும் அங்கே இருந்தான். அதைப் பார்த்து பெரியவர்களுக்கு எல்லாம் அந்த்தனை நிம்மதி, பூரிப்பு.
அவன் இயல்பாகவே அதைச் செய்தான். ஆனால் அதை அனுபவித்தவளுக்குத்தான் மனதே விண்டு வலித்தது. அவளை கட்டிக்கொண்டான், ஒட்டிக்கொண்டான், அவளோடு இழைந்தான் என எதுவும் இல்லை. ஆனால் அவளுடனே இருந்தான்.
அவர்கள் தேனிலவுக்குச் சென்ற இடத்திலும் அதே தான். திடுமென மாறிய வெதர், உணவும் சட்டென மாறினால் வயிறு சரியில்லாமல் போகும் என்று அதற்கு எல்லாம் கவனமெடுத்து பார்த்துக் கொண்டான். வெந்நீரைத் தவிர வேறு எதையும், குடிக்க, குளிக்க கூட அவன் அனுமதிக்கவில்லை.
அவளை அப்படி பார்த்துக் கொண்டான். ஒரு நல்ல நண்பனைப்போல், அதைவிட ஒரு படி மேலே ‘பெஸ்ட்டி’ என ஒரு கேட்டகரிக்குள் வரையறுக்கும் விதத்தில் அவன் நடந்துகொண்டான். அதற்கு மேலே ஒரு பார்வை, செய்கை எதுவும் கிடையாது.
அவளை தோளோடு அணைத்துக் கொண்டான், கை கோர்த்து நடந்தான், நெற்றியில் முத்தம் கூட வைத்தான். அனைத்திலும் ‘கணவன்’ என்றவன் எங்கேயும் இல்லை. ஒரு பாதுகாவலன், துணை… அதற்கு மேலே எதையும் அவளால் உணரவில்லை.
அந்த நொடி அவளுக்கு அது புரிந்தது. கணவனே ஆனாலும், சாதாரண தொடுகைகள் ஒரு மனைவிக்கு கிளர்ச்சி மூட்டுவது இல்லை. கொண்டவனின் பார்வை துவங்கி, உடல்மொழி, குரல் என அனைத்தும் ஒன்றாக கலந்தால் மட்டுமே பெண்ணவளைத் தூண்ட முடியும்.
இரவில் படுக்கையில் கூட சில முறை அணைத்து இருந்தான். ஆனால் அவனைக் கணவனாக அவளால் உணரவே முடியவில்லை. அவனது ‘அந்த’ பார்வைக்காக, குழைந்து போகும் உடல்மொழிக்காக, கிறங்கி ஒலிக்கும் குரலுக்காக ஏங்கிப் போனாள்.
அங்கே இருந்த ஒரு வாரமும் அவளோடு அவ்வளவு இணக்கமாகவே இருந்தான். ஆனால் ‘இணக்கமாக’ இல்லை. அது இப்பொழுது வரைக்கும் தொடர, அவளும் விலக்கி நிறுத்தப்பட்டாள்.
அவனோ தனக்குள் உரு போட்டுக் கொண்டிருந்த ஒரே விஷயம்… ‘அவளை உன்னவளாக நினைக்காதே, நெருங்காதே’ அப்படி ஒரு நினைப்பு கூட மனதுக்குள் எழாமல் பார்த்துக் கொண்டான். அப்படி அவள்பால் மனம் ஈர்த்தால் அவளது ‘அந்த’ செய்கையை நினைத்துக் கொண்டான்.
அவன் எப்பொழுதுமே மிகுந்த மனக் கட்டுப்பாடு உடையவன், அது அவனுக்கு கை கொடுக்க விலகி நிற்க அவனால் முடிந்தது. பிடிவாதமாக விலகி நின்றான். எதையும் நினைக்கவே கூடாது, அதிலும் அவளை தனிப்பட்ட விதத்தில் நினைக்கவே கூடாது என சங்கல்பமே செய்து கொண்டான்.
தன் உள்மன போராட்டம் வெளியே தெரியக் கூடாது என இதழ்களில் எப்பொழுதும் ஒரு செயற்கை புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டான். அமைதியாக இல்லாமல், ஏதாவது பேசிக் கொண்டே இருந்தான். அவனது இந்த மாற்றங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் போனது.
அமைதியாக எதையோ பறிகொடுத்தவன் போன்று அமைதியாக இருந்தால்தானே மற்றவர்கள் கண்டு கொள்வார்கள். அவன் பேசிக்கொண்டே, கலகலப்பாக சிரித்துக்கொண்டே இருக்க, ‘தன் மகன் இந்த திருமணத்தால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறான்’ என அவனைப் பெற்றவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.
ஆனால் அவனது வித்தியாசம் அதியனுக்கும், சுமித்ராவுக்கும் மட்டுமே புரிந்தது. ‘எல்லாம் என்னால…’ வேதனை அவள் நெஞ்சை அறுத்தது. அதியனுக்கோ அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாத வருத்தம்.
“ஏன்டா மாப்ள இப்படி இருக்க?” ஒருமுறை அவனிடமே கேட்டுவிட்டான்.
“எப்படி இருக்கேன்?” அவனிடமே திருப்பிக் கேட்டுவைக்க, அதியன் அவனை முறைத்தான்.
“என்ன விளையாடறியா? அவங்களைப் பார்த்தால் அவங்களும் ஃபீல் பண்ற மாதிரிதான்டா இருக்கு. கொஞ்சம் உன் பிடிவாதத்தை விட்டு யோசிடா…” அதியன் சொல்ல, அதற்கு கார்முகில் பதில் சொல்லவே இல்லை.
‘என்னை விட, உனக்கு எல்லாம் தெரியுமோ?’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தவன் பதில் கொடுக்காமலே எழுந்து சென்றுவிட்டான். அதைப் பார்த்து அதியன் அத்தனை வருத்தப்பட்டான்.
காருக்குள் அத்தனை அடர்த்தியாக மௌனம் நிலவ, அதை இருவரும் கலைக்கவே இல்லை. அவனிடம் நிறையவே பேச முயன்ற சுமித்ரா, அவனை உடல் அளவில் தூண்டும் விதமாக எதையுமே செய்யவில்லை.
அவள் அப்படி எதையாவது செய்து, அது அவனை இன்னும் காயப்பட்டுவிட்டால்? அதைவிட அவளை ஏதாவது அதைக்குறித்து சொல்லிவிட்டால் தன்னால் தானகவே முடியாது என யோசித்தே விலகி இருந்தாள்.
காரை அவளது அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தவே அவள் இறங்கிக் கொள்ளப் போக, “சாயங்காலம் ஐந்தரைக்கு நான் இங்கே இருப்பேன்” அவன் சொல்ல, அமைதியாக தலை அசைத்துவிட்டு இறங்கிவிட்டாள்.
பொதுவாக அவளுக்கு வேலைக்குச் செல்வது, நண்பர்களைப் பார்ப்பது இது எல்லாம் அவ்வளவு பிடிக்கும். ஆனால் இன்று எதுவுமே பிடிக்கவில்லை. ‘வாழ்க்கை எப்போ சரி ஆகும்?’ அது மட்டுமே அவளுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.
அவள் அலுவலகத்துக்குள் வர, அவளைப் பார்த்தவுடனே அனைவரும் புன்னகை முகமாக வரவேற்றார்கள். ‘லாங் கேப்…’ ஓரிருவர் சொல்லிச் செல்ல அனைவருக்கும் அதே புன்னகையே. அன்று முழுவதும் அவள் தன் வேலையில் மட்டுமே மூழ்கி இருந்தாள்.
உணவு இடைவேளையில் அவள் தனியாக அமர்ந்து கொள்ள, அதைப் பார்த்து அனைவருக்குமே திகைப்பு. “என்ன சுமி… தனியா உட்க்கார்ந்து இருக்க? கல்யாணம் ஆன உடனே சோலோவா உட்கார்ந்து ட்ரீம் அடிக்கணுமா?”
“அவரை விட்டு வந்த கவலையா?”.
“உன் ஆள் ஊட்டி விடாமல் சாப்பிட பிடிக்கலையா?” ஏதேதோ கேள்விகள். அதற்கு என்ன பதில் சொன்னாள் என்பது கூட தெரியாமல் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு உணவை விழுங்கி வைத்தாள்.
சுதா அந்த நேரம் அவள் உடல்நிலையைக் குறித்து கேட்டு ஃபோன் செய்ய, அவரிடம் தான் நன்றாக இருப்பதாக பேசிவிட்டு வைத்தாள்.
மாலையில் வேலை நேரம் முடிய, கார்முகிலோடு அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள். வீட்டுக்குச் சென்று, உடை மாற்றிவிட்டு, சுதா, மூர்த்தியோடு சுபிதாவின் வீட்டுக்குப் போனாள்.
அவளைப் பார்த்தவுடன், “சித்தி…. சித்தா…” என்றவாறு ஓடிபோய் அவளைக் கட்டிக் கொண்டான் ஆதவன்.
“ஆது கண்ணா… ஹேப்பி பெர்த்டே டா…” என்றவள் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள். அவர்கள் அனைவருமே வாழ்த்த, அவளைச் சுற்றி வந்து எதையோ தேடினான்.
அவனது தேடலை உணர்ந்த பிறகுதான், தான் அவனுக்கு கிப்ட் எதுவுமே வாங்கவில்லை என்ற நினைவே அவளுக்கு வந்தது.
“சித்தி… என் கிப்ட் எங்கே? எங்கே ஒளிச்சு வச்சிருக்கீங்க? எனக்குத் தெரியும். நானே கண்டு பிடிக்கறேன் பாருங்க…” என்றவன் தேடத் துவங்க, நிஜத்தில் சுத்தமாக உடைந்து நின்றாள்.
‘ச்சே… இதை எப்படி மறந்தேன்?’ அவள் நினைக்க,
“என்னம்மா கிப்ட்டை காரிலேயே மறந்து வச்சுட்டு வந்துட்டியா?” சுதா கேட்க, அவள் என்ன பதில் சொல்வாள்? முதல்முறையாக அவள் ஒன்றை மறந்திருக்கிறாள். அதுவும் ஆதவனின் பிறந்தநாளுக்கான பரிசை மறந்திருக்கிறாள். அவளால் எப்படி மறக்க முடிந்தது? அவள் அப்படியே சிலையாகிப் போனாள் என்பதுதான் உண்மை.
அந்த நேரம் அங்கே வந்த சுமித்ராவின் வீட்டினர் அதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, கார்முகிலுக்கு எதுவும் புரியவே இல்லை.
1 comment
அவனா அவளின் செய்கையை புரிந்து கொண்டால் தான் உண்டு.
சூப்பர்❤️