பகுதி – 23.
கார்முகிலின் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து, அதியனும் அவனும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். பொதுவாகவே அதியன் அவ்வளவாக அவன் வீட்டுக்குள் வர மாட்டான். ஆனால் அவனை அப்படி விட மாட்டான் கார்முகில்.
அன்றைக்கு வேண்டிய சரக்கு அனைத்தையும் கார்முகில் வாங்கி வந்து அவனை அழைக்க, பெரிதாக தன் மறுப்பைக் காட்டினான்.
“வேண்டாம் முகில்… உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சால் என்னை வீட்டுக்குள்ளே சேர்க்கவே மாட்டார்” சற்று பயத்துடனே சொன்னான்.
“எங்க அப்பாவுக்கு உன்னைப் பிடிக்கும்டா அதியா. என்ன அவர் உன்கிட்டே அதை காட்டிகிட்டதில்லை அவ்வளவுதான். என் ஃப்ரண்ட்ஸ் முக்கால்வாசிபேர், என்கிட்டே இருக்கும் பணத்துக்காகத்தான் என்னோட பழகுறாங்க. அது எனக்கே தெரியும்…
“ஆனா என்னால் எந்த காரியமுமே உனக்கு ஆக வேண்டிய தேவை இல்லை என்ற பிறகும்… நீ என்னோட பழகறது அவருக்கு பிடிக்கும். அதோட நீ உன் சொந்தக் காலில், சுயமா… அவரைப்போலவே முன்னேறி வருவதால் உன்மேலே அவருக்கு தனி அக்கறையும் உண்டு” அவன் சொல்ல,
“அந்த மதிப்பை நான் கெடுத்துக்கணுமா முகிலா? அதோட நீ தண்ணியடிப்பியா?” நம்ப முடியாமல் கேட்டான்.
“ஏன்டா… உனக்குத் தெரியாதா என்ன? பசங்களோட சேர்ந்தா சில நேரம் நாம பார்ட்டி பண்ணி இருக்கோம் தானே. நீயே உனக்கு அடிபட்டு சரியானப்போ பார்ட்டி கொடுத்தியே” அவனிடம் கேட்டான்.
“அது சரிதான்… அதெல்லாம் வெளியே… இது… வீட்டில் வச்சு எப்படிடா?” தயக்கமாகவே கேட்டான்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்… நீ வர்ற அவ்வளவுதான்” முடிவாகச் சொல்லிவிட்டு கிளம்பினான்.
“அப்போ சரக்கெல்லாம்?” அவன் தடுக்க,
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றான்.
“இது என்னோட ட்ரீட்டா… அப்போ நான்தானே செய்யணும்?” அதியன் அவனிடம் கேட்டான்.
“இது உனக்கு நான் தர்ற ட்ரீட்… அப்படி வச்சுக்கலாம், வா… சும்மா தொணத் தொணங்காதே… நைட் ஒன்பது மணி, எங்க வீட்டு மொட்டை மாடி, நீ வர்ற…” என்றவாறு சென்றுவிட்டான்.
அவன் சொன்ன நேரத்துக்கு வெகுவாக தயங்கியவாறு அங்கே வந்தான் அதியன். “வாடா… என்னவோ வீட்டைக் கொள்ளையடிக்கப் போறவன் மாதிரி எதுக்கு இப்படி பம்மிகிட்டு வர்ற? வா…” என்றவாறு அவனை வீட்டுக்குள் அழைக்க, அவனுக்குப் பின்னால் சுமித்ரா நின்றிருந்தாள்.
அதியன் ஒரு மாதிரி சங்கடமாக அவளைப் பார்க்க, “வாங்க… நான் எதுவும் நினைக்கலை… நீங்க மாடிக்கு போங்க, நான் வர்றேன்” அவள் சொல்ல,
“நீங்களுமா?” அவன் கேட்ட விதத்தில் வாய்விட்டே சிரித்தாள்.
“நான் சும்மா கம்பெனிக்கு கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு கோக் மட்டும் குடிப்பேன்ங்க…” அவன் புன்னகை முகமாகச் சொல்ல, அதியன் அசடு வழிய, அவளது அந்த சிரிப்பை ஒரு மாதிரி ஏக்கமாகப் பார்த்தான் கார்முகில்.
அவனது பார்வையைப் பார்த்த சுமித்ரா கிச்சனுக்குச் செல்ல, அதியன் அதைக் கண்டு கொள்ளாதவன் போல் நின்று கொண்டான். கார்முகில், அதியனை அழைத்துக்கொண்டு அவன் மாடி ஏறினான்.
“உன் அம்மா அப்பா எல்லாம் எங்கேடா?” அதியன் கேட்டான்.
“அவங்க ரிலேட்டிவ் வீட்டு கல்யாணத்துக்கு போயிருக்காங்க” அவன் சொல்ல, அவனை முறைத்தான்.
“இதை முன்னாடியே சொல்ல மாட்டியா? நான் இவ்வளவு பயந்திருக்க மாட்டேன்” அதியன் சொல்ல, இப்பொழுது சிரிப்பது கார்முகிலின் முறை ஆனது. அவர்களுக்கு வேண்டிய அனைத்து சைட்டிஷ்களையும் கீழே சென்று எடுத்து வந்தவள் அவர்கள் முன்னால் அவற்றை வைத்தாள்.
“என்னங்க இவ்வளவு?” அதியன் அவளிடம் கேட்டான்.
“இதையெல்லாம் நான் செய்யலை, வேலைக்கார அக்காதான் செய்தாங்க, சோ நம்பி சாப்பிடலாம்” அவள் புன்னகை முகமாகச் சொல்ல, அவனோ பதறினான்.
“ஹையோ… நான் அப்படி அர்த்தத்தில் கேட்கலைங்க” அவன் சொல்ல, அவனைப் போலியாக முறைத்தாள்.
“அதியன், இப்போ எதுக்கு இவ்வளவு பதறிப்போய் பதில் கொடுக்கறீங்க? என்னையும் உங்கள்ள ஒருத்தியா, ஒரு ஃப்ரண்டா பாருங்க… நான் பேசறது எல்லாம் சாதாரணமா தெரியும். சரி ஆரம்பிங்க” என்றவள் அவர்களுக்கு அருகே அமர்ந்து கொண்டாள்.
முகிலன் வெளியே அடுக்கி வைத்த பியர் பாட்டில்களைப் பார்த்தவன் சற்று அதிர்ந்தான். “மாப்ள, எதுக்குடா இத்தனை? நாம ரெண்டு பேர் தானே… ஆளுக்கு ஒன்று போதாது?” அவனிடம் கேட்டான்.
“ம்ஹும்… இல்ல… இன்னைக்கு நான் நிதானம் தவறும் அளவுக்கு குடிக்கணும். எனக்கு ஆசை…” அவன் சொல்ல, அதியன் பெரும் சங்கடத்தோடு சுமித்ராவைத்தான் பார்த்தான்.
‘விடுங்க…’ என்பதுபோல் அவனைப் பார்த்தவள் தன் கோக் பாட்டிலை கரத்தில் எடுத்துக் கொண்டாள்.
“அதியன், நீங்க எப்படி இவருக்கு ஃப்ரண்டு ஆனீங்க?” மெதுவாக பேச்சு கொடுத்தாள்.
“எது ஒரு பெரிய கதைங்க…” என்றவன், தான் அங்கே கடையை சின்னதாக துவங்கியது முதல், கார்முகிலைப் பார்த்தது, அவனாகவே வந்து பேசியது, நட்பானது என ஒவ்வொன்றாகச் சொன்னான். இத்தனை வருடங்களில் அதன் வளர்ச்சி, அது வளர கார்முகிலின் உதவி என அனைத்தையும் சொல்ல, கேட்டுக் கொண்டாள்.
அடுத்ததாக இருவரும் அவனது கடை, வேலை எனப் பேச, கார்முகில் அவர்களுக்கு நடுவில் செல்லவே இல்லை. அதியன் தன் நண்பனின் நல்ல குணம், அவன் மஹதியை காப்பாற்ற எழுந்த முயற்சியில் பட்ட அடி, கார்முகில் அவனுடனே இருந்தது என எல்லாம் சொன்னான்.
“ஹாஸ்பிட்டலுக்கு பணம் கட்டினது கூட ஓகேங்க, ஆனால் என் கூட யாருமே இல்லைன்னு, ஒரு வாரம் நைட் என் கூடவேதான் இருந்தான். யாருங்க செய்வா? அதுவும் இவன் எனக்குச் செய்யணும்னு அவசியமே கிடையாது. ரொம்ப நல்ல மனசுங்க அவனுக்கு…” அதியன் இதைச் சொல்லிவிட்டு அவளை சில நொடிகள் பார்க்க, அதை அவன் சொன்னதன் காரணம் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.
“எனக்கு அவங்களைப் பற்றி நல்லாவே தெரியும் அதியன்” உள்ளுக்குள் கலங்கும் மனதை அடக்கியவாறே சொன்னாள்.
மேலும் சில நிமிடங்கள் அவர்களோடு இருந்தவள், “சரி… நீங்க கண்டினியூ பண்ணுங்க, நான் போய் படுக்கறேன். அதே மாதிரி நீங்க, இப்படியே உங்க வீட்டுக்கு போகக் கூடாது. இங்கே மேலேயே இருக்கும் கெஸ்ட் ரூம்ல படுத்துக்கோங்க” அவள் சொல்ல, மறுத்து எதையும் அவன் சொல்லவில்லை.
அவள் ‘இதைச் செய்கிறாயா? எனக் கேட்க்காமல், ‘இதைச் செய்கிறாய் அவ்வளவுதான்’ என்ற விதத்தில் பேசி இருக்க, அவன் எங்கே மறுக்க?
“சரிம்மா… தேங்க்ஸ்…” அவன் சொல்ல, ‘பார்த்துக்கோங்க’ என்பதுபோல் பாட்டில்களையும், கார்முகிலையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனிடம் ஜாடையில் சொல்ல, அதை அவனும் புரிந்து கொண்டான்.
‘நான் பார்த்துக்கறேன்’ என்பதுபோல் அவன் நெஞ்சில் கை வைத்துக் காட்ட புன்னகை முகமாக கீழே இறங்கிவிட்டாள்.
சுமித்ரா தங்கள் அறைக்குச் சென்று படுத்தவள், கொஞ்ச நேரத்திலேயே தூங்கிவிட்டாள். நேரம் செல்லத் துவங்க, மேலே பார்ட்டி களை கட்டத் துவங்கியது. அதியன் இரண்டு, மூன்று பியரோடு நிறுத்திவிட, கார்முகில் நிறுத்தும் வழியைக் காணோம்.
அதியனுக்கு இரண்டு நாள் கழித்துதான் திருமணம் என்பதால், அவனும் ஒரு பாட்டில் அதிகமாகவே குடித்து இருந்தான். பொதுவாகவே இருவரும் அவ்வளவு குடிப்பது இல்லை. பார்ட்டி பண்ண எனப் போனால் கூட, கார்முகில் எல்லாம் தன் நிலையில் நிற்பான்.
“எனக்கு இதுதான் லிமிட்” என அளவுக்கு மேலே ஒரு சொட்டு கூட குடிக்க மாட்டான். ஆனால் அப்படிப்பட்டவன், இன்று நிதானம் இழக்கும் அளவுக்கு குடித்தான். கிட்டத்தட்ட ஆறு பியர் பாட்டில்களுக்கு மேலே காலி செய்து தள்ளினான். அதைப் பார்த்து ஆதியனே பயந்து போனான்.
“முகிலா, என்னடா இது? இப்படிக் குடிக்கற? திடீர்ன்னு இந்த அளவுக்கு குடிச்சா உடம்பே அதைத் தாங்காதுடா வேண்டாம்” அவனைத் தடுத்தான்.
“இல்லடா அதியா, இன்னைக்கு இன்னைக்கு நான் குடிக்கணும், நிறைய குடிக்கணும். என்னையே மறக்கும் அளவுக்கு குடிக்கணும்?” அவன் குழறலாகச் சொல்ல, அதியன் அவனையே பார்த்திருந்தான்.
“உனக்கு என்னடா குறை? பாசமான குடும்பம், இப்போ அழகான அன்பான மனைவி… இதைவிட வேற என்ன வேணும்? எதுக்கு இப்படி குடிக்கணும்? சுமித்ரா நீ நினைக்கற அளவுக்கு சுயநலமானவங்க இல்லைடா…” சுமித்ரா தன்னிடம் கூட எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் பழகவே அவனிடம் சொன்னான்.
அவர்கள் இங்கே பேசத் துவங்கிய நேரம், சுமித்ராவுக்கு விழிப்பு வந்திருக்க, நேரம் பார்த்தவள் அது பன்னிரண்டைக் கடந்து காட்டவே எழுந்து விட்டாள். தன் அருகே கார்முகிலைக் காணவில்லை என்பதாலேயே அவ்வாறு செய்தாள்.
‘இவரை எங்கே? அங்கேயே படுத்துட்டாரா? இல்லைன்னா இன்னும் முடிக்கலையா?’ எண்ணியவள் மாடி ஏறினாள். சரியாக அப்பொழுதுதான் அதியன் பேசத் துவங்கி இருந்தான். அவன் பேசியது இருளின் நிசப்தத்தில் அவளுக்குத் தெளிவாகவே கேட்டது.
அவனும் அவள் அங்கே இல்லை என்பதாலோ என்னவோ குரலை தாழ்த்தியும் பேசி இருக்கவில்லை. அவன் அவ்வாறு சொல்லவே, கார்முகிலின் பதில் என்னவாக இருக்கும் எனத் தெரிந்துகொள்ள, அப்படியே நின்றுவிட்டாள்.
நம் கணவன் தன்னை யாரிடமும் விட்டுக் கொடுக்கவே கூடாது. அது அவனது நண்பனாகவே இருந்தாலும் கூடாது என மனம் எதிர்பார்க்க நின்றுவிட்டாள்.
“நான் இல்லைன்னு சொல்லவே இல்லையேடா… அவ தேவதை… என்னோட தேவதை. எனக்கான தேவதை. பிரம்மன் எனக்காகவே படைத்து, எனக்காகவே இந்த பூமிக்கு அனுப்பின என் தேவதை. அவளை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? இவ்வளவு…” என்றவன் கரத்தை அகலமாக விரித்துக் காட்டினான்.
அவன் அப்படிக் காட்டுவது அவளுக்குத் தெரியவில்லை என்றாலும், அவன் என்ன செய்திருப்பான் என அவளுக்குத் தெரிய, இதழ் ஓரம் ஒரு புன்னகை கீற்று. கூடவே கடைவிழியோரம் மெல்லிய நீர்ப்படலம்.
“எனக்கு அவளை ரொம்ப புடிக்கும், ஆனா அவளுக்கும் என்னை… விடுடா…” எதையோ சொல்ல வந்து அப்படியே நிறுத்திவிட்டான். நண்பனே என்றாலும் அவனிடம் தன் அந்தரங்கத்தை வெளிப்படுத்த அவனால் முடியவில்லை.
“சரி… போதும்… கீழே போய் படுத்துக்கோ…” அதியன், அவன் சொல்லாமல் விட்டதை தோண்டித் துருவி கேட்காததே அவன் மேல் ஒரு பெரும் நல் மதிப்பை அவளுக்குக் கொடுத்தது. தன்னவன் எதையும் சொல்லி வைக்காதது அவள் மனதை நிறைத்தது.
“அதியா… நான் ஒரே ஒரு விஷயம் சொல்றேன்… அதை மட்டும் கேட்டுக்கறியா?” கார்முகில் கேட்க, “வேண்டாம்…” என்றவன் பாட்டில்களை எல்லாம் ஒதுக்குவது அது ஏற்படுத்திய ஒலியில் இருந்து அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
கார்முகில் கேள்வியாக நிறுத்த, அதியனை விட, சுமித்ரா அவன் பேச்சைக் கேட்க ஆர்வமானாள்.
“முகிலா, நீ எதையும் சொல்ல வேண்டாம்… நீ போய் படுத்துக்கோ, வா…” அவனைக் கைபிடித்து எழுப்ப முயன்றான்.
“இல்ல நான் சொல்லணும்…” என்றவன் சட்டமாக அமர்ந்து கொள்ள, அதியனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“முகிலா…” அப்படியும் அவனைத் தடுக்கவே முயன்றான்.
“உனக்கு சீனியர் என்ற முறையில் ஒன்னே ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. நீ உன் லைஃப் பார்ட்னர்க்கு என்ன செய்ய நினைக்கறியோ எல்லாம் செய். அன்பைக் கொட்டு, பாசத்தைக் காட்டு… ஆனா பதிலுக்கு அவங்ககிட்டே இருந்து எதையும் எதிர்பார்க்காதே.
“’எதையும்’ன்னு நான் எதைச் சொல்றேன்னு உனக்குப் புரியுதா? உனக்குப் புரியாது… அதையும் நானே சொல்றேன். அவங்ககிட்டே இருந்து இன்டிமசி… அப்படின்னா…” அவன் விளக்கம் கொடுக்க முயல, அவன் வாயை தன் கரத்தால் மூடினான்.
“எனக்குப் புரியுது முகிலா… போதும்…” அவனைத் தடுத்தான்.
“இல்ல… எனக்குச் சொல்லணும்… நீ அவங்ககிட்டே இருந்து எதையும் எதிர்பார்க்காதே, குறிப்பா செக்ஸை எதிர்பார்க்காதே. எதிர்பார்க்கவே செய்யாதே… அப்படி எதிர்பார்க்கறன்னு தெரிஞ்சாலே அலையிறன்னு நினைச்சுப்பாங்க. அலையவிட்டு வேடிக்கை பார்க்கணும்னு நினைப்பாங்க” அவன் சொல்லிக் கொண்டே போக, சுமித்ரா ஸ்தம்பித்தாள்.
“எதுக்குடா நாம கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறோம்? நமக்கு ஒரு துணை வேணும், அதைவிட அவங்களை முழுசா தெரிஞ்சுக்கணும், அவங்களுக்குள்ளே மூழ்கணும்னு நமக்கு ஆசை இருக்காதாடா? இருக்கும் தானே… ஆனா…” என்றவன் கண்ணீர்விட, அது அதியனை அசைத்துப் பார்த்தது.
கார்முகில் சொன்ன விஷயம் எந்த அளவுக்கு அவளைத் தாக்கியதோ, அதே அளவுக்கு அவனது குரலும், அவன் அழுகையும் அவளைத் தாக்கியது.
“முகிலா… நீ நினைக்கற மாதிரி எதுவும் இருக்காதுடா. எழுந்துக்கோ… வா… ரொம்ப நேரமாச்சு…” அவனைக் கைபிடித்து எழுப்ப, அவர்கள் வருவது தெரிய சுமித்ரா தான் நின்ற இடத்தில் இருந்து அசையவே இல்லை.
மாடிப்படிக்கு அருகே அவள் நின்றிருக்க, அங்கே கார்முகிலோடு வந்த அதியன் அவளைப் பார்த்து அதிர்ந்தான். கார்முகிலுக்கோ கண்களைத் திறக்கக் கூட முடியவில்லை. அவன் தலை தோய்ந்து விழுந்திருக்க, அதியனில் தோளில் தொற்றிக் கொண்டு இருந்தான்.
அதியன் சுமித்ராவிடம் என்னவென சொல்வது எனத் தடுமாற, அவள் மாடியில் இருந்த அறையைக் கை காட்டினாள். கார்முகிலை அப்படியே படிகளில் அழைத்துச் செல்வது நல்ல முடிவு இல்லை எனத் தெரிய, அவள் காட்டிய அறைக்குள் நுழைந்தான்.
கார்முகிலை படுக்கையில் விட்டவன், தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான். சுமித்ராவின் கண்ணீரே, அவள் கார்முகில் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டாள் என அவனுக்குச் சொல்லாமல் சொன்னது.
அவன் அப்படியே அங்கேயே அமர்ந்திருக்க, பாத்திரம் எழுப்பும் ஓசையில், அவற்றை அவள் எடுப்பது புரிய, வேகமாக அறைக்கு வெளியே ஓடினான்.
“ஐயோ, நீங்க எதுக்குங்க எடுக்கறீங்க? இதையெல்லாம் நானே கிச்சன்ல கொண்டு போய் வைச்சுடறேன். நீங்க விடுங்க… போய் படுங்க…” அவள் முகம் பாராமல் சொல்ல, அவளுக்கும் அவனை ஏறிட்டும் பார்க்க முடியவில்லை.
அதியனுக்கு ஏதாவது ஒரு வார்த்தை பேசினாலும் ஏதும் தவறாகப் போய்விடும் எனத் தோன்ற அவன் வாயைத் திறக்கவே இல்லை. “நான் கீழே போகும்போது வச்சுடறேன்… நீங்க போங்க” அவள் சொல்ல, ஏனோ பிடிவாதமாக அவனால் அங்கே நிற்க முடியவில்லை.
“சாரிங்க…” என்றவன் சென்றுவிட, அங்கே மேலே டேங்குக்கு செல்ல வேண்டி இருந்த இரும்பு ஏணிப் படியில் அப்படியே அமர்ந்துவிட்டாள். வலித்தது… அப்படி வலித்தது… கன்னத்தில் கண்ணீர் கடகடவென இறங்க, அப்படியே அமர்ந்துவிட்டாள்.
‘என்ன செய்ய? எப்படி அவனை மாற்ற?’ எதுவும் புரியவில்லை. எவ்வளவு நேரமோ தெரியாது, அவள் அப்படியே அமர்ந்துவிட, எங்கேயோ கேட்ட சத்தத்தில் கலைந்தவள், நேரமாவதை உணர்ந்து அறைக்குள் சென்று படுத்துவிட்டாள்.
மறுநாள் காலையில் கண்விழித்த அதியன், மார்க்கெட்டுக்கு கூடச் செல்லாமல், கார்முகில் எழ வேண்டி காத்திருந்தான். காலையில் சென்றால்தான் ஃப்ரஷ் காய்கறியை கடையில் வைக்க முடியும் என்ற பொழுதும் அவன் போகவே இல்லை.
அவனை அதிக நேரம் காக்க வைக்காமல், எட்டு மணிக்கு எல்லாம் கண் விழித்தவன், அதியனை அங்கே அப்பொழுது எதிர்பார்க்கவே இல்லை. பட்டென படுக்கையில் எழுந்து அமர்ந்தவன், தான் இருந்த அறையைத்தான் சுற்றிப் பார்த்தான்.
அவன் பார்ப்பதைப் பார்த்தவன், “என்னடா? இவன் எப்படி இங்கேன்னு யோசிக்கறியா? நைட் நடந்தது, நீ பேசினது ஏதாவது உனக்கு ஞாபகம் இருக்கா?” அவனிடம் கேட்க, தன் தலையை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.
தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. கரங்களால் நெற்றியை அழுத்தமாக பற்றிக் கொண்டவன், “என்ன அதியா சொல்ற? புரியலை? இந்த தலைவலி வேற கொல்லுது. ஸ்… ஆ…” கரத்தால் நெற்றியை அழுத்தினான்.
“நான் சொல்லப் போறதைக் கேட்டா, தலைவலி போய், நெஞ்சு வலி வரும்” அவன் சொல்ல, அவன் முகத்தை ஏறிட்டான்.
“நேத்து நைட் கொஞ்சம் பெர்சனலா அதிகம் பேசிட்ட முகிலா. அதை சுமித்ரா அவங்களும் கேட்டுட்டாங்க. அழுதுட்டாங்கடா, என்னால் அவங்க முகத்தை பார்க்கவே முடியலை. அதை உன்கிட்டே சொல்லிட்டுப் போகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். பார்த்துக்கோடா…” என்றவன் கிளம்பிச் செல்ல, கார்முகிலும் அவனுடனே வந்தான்.
அவர்களைப் பார்த்த சுமித்ரா, “வந்துட்டீங்களா? சூடா டீ குடிச்சுட்டு போங்க” என்றவள், “அக்கா… ரெண்டு டீ எடுத்துட்டு வாங்க” கிச்சனைப் பார்த்து குரல் கொடுக்க, மறுக்கப் போனவன், டீ வந்துவிட, குடித்துவிட்டே அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றுவிட, கார்முகில் சுமித்ராவின் முகத்தைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தான். தான் பேசியதை சுமித்ரா கேட்டுவிட்டாள் என்பதே என்னவோ போல் ஆயிற்று. அதுவும் அதியன் சொன்னதைக் கேட்டு, அவனே அதிர்ந்தான் என்றால், சுமித்ராவின் நிலை என்னவாக இருக்கும் என அவனுக்குப் புரிந்தது.
“சுமி… சாரி…” அவன் மெதுவாகச் சொல்ல, அவளோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவன் கரத்தில் ஒரு மாத்திரையைக் கொடுத்தவள், “தலை வலிக்குது தானே… இதை போட்டுக்கோங்க” என்றவள் அதற்கு மேலே அவனிடம் பேசவில்லை.
அவளிடம் அவன் பேச முயல அதை அவள் கண்டு கொள்ளவும் இல்லை. அன்றைக்கு மட்டும் இல்லை. அடுத்த இரண்டே நாளில் அதியனின் திருமணம். அதற்குச் சென்று வந்தவர்கள், தொடர்ந்த மாலை விருந்திலும் கலந்து கொண்டார்கள்.
சுமித்ராவின் அமைதி அவனை என்னவோ செய்ய, “நான் நிதானத்தில் இல்லை, இருந்திருந்தால் அந்த தப்பு நடந்திருக்காது. ரியலி சாரி” அவளை நிறுத்தி வைத்து, அவள் கரத்தைப் பிடித்துக்கொண்டு அவள் கண்களைப் பார்த்தவாறு சொன்னான்.
“நானும் சாரி…” அவள் இறுக்கமாகச் சொல்ல, அவன் சென்றுவிட்டான். அவர்களுக்குள் ஒரு பிரேக்கிங் பாயின்ட் நிச்சயம் வேண்டும். அது எங்கே இருக்கிறது என்றுதான் இருவருக்கும் தெரியவே இல்லை.
‘அவளால் என்னை நேசிக்க முடியாது. என்னோடு மனம் ஒன்றி இருக்க முடியாது’ என அவன் இன்னுமே பலமாக நம்பினான். அவன் மனதுக்குள் அந்த எண்ணம் அப்படியே பதிந்து போயிருக்க, அவனால் அதை விட்டு வெளியே வர முடியவில்லை.
அவனும் அதில் இருந்து வெளியே வரப் பார்க்கிறான் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் அது தோல்வியில் முடிய, அதை அப்படியே விட்டுவிட்டான். அதே நேரம் அவளிடம் தெரிந்த சின்ன ஒதுக்கம் அவனை இயல்பாக இருக்க விடவில்லை.
‘அவளை எப்படி தன்னிடம் இயல்பாக இருக்க வைப்பது?’ என எண்ணியே சோர்ந்து போனான். அவனிடம் தானாகவே பேசினாள், அவன் கேட்டதற்கும் மறுக்காமல் பதில் சொன்னாள். அவன் முகம் பார்த்து உரையாடினாள்… அப்படியும் அவளது ஒதுக்கம் அவனுக்குப் புரிந்தது.
“நீ முன்ன மாதிரி இல்லை” அவளிடம் அவன் சொல்ல, புருவம் நெரிய அவனைப் பார்த்தாள்.
“இல்லையே… நான் அப்படியேத்தான் இருக்கேன்” அவள் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தான்.
“எனக்கு சொல்லத் தெரியலை… ஆனா நீ முன்ன மாதிரி என்கிட்டே இல்லை” அவன் அழுத்திச் சொல்ல, அவளுக்குள் மென்னகை எழ, அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தாள். அவனுக்கு அவள்மேல் தாங்க முடியாத வருத்தம் இருப்பதுபோல், அவன்மேல் அவளுக்கும் சின்ன மனத்தாங்கல் இருக்கவே செய்தது.
‘நான் அவருக்கு எதையும் மறுக்கலையே… தப்பு செய்துட்டேன், வருந்தறேன், மன்னிப்பையும் கேட்டாச்சு. அவருக்கு இடைவெளி கொடுத்து ஒதுங்கியும் நின்னாச்சு, இதற்கு மேலே நான் என்ன செய்ய?’ அவளுக்குப் புரியவில்லை.
‘சரி பார்ப்போம்…’ என அவள் விலகியே நிற்க, அது கார்முகிலுக்குள் ஒரு கோபத்தை, ஆற்றாமையை கொடுத்துக் கொண்டு இருந்தது.
அதியன் – ஆராதனா திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே, அவர்களை விருந்துக்கு என வீட்டுக்கு அழைத்தான். அவர்களை வரவேற்ற பெரியவர்கள் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தாலும் அவர்களுக்கு இடைவெளி கொடுத்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
விருந்து வேளை தடபுடலாக முடிய, சுமித்ரா ஆராதனாவை அழைத்துக் கொண்டு தங்களது அறைக்குச் சென்றாள். இருவரும் அமர்ந்து பேச, ஆராதனா சட்டென அமைதியாக, சுமித்ரா அதை தெளிவாக உணர்ந்து கொண்டாள்.
சுமித்ராவின் அக்கா, தாய்… என அனைவரும் அவளிடம் கேட்ட அதே விஷயம். இப்பொழுது ஆராதனாவும் தன்னிடம் அதையே கேட்கப் போவது புரிந்தது.
“என்ன கேட்கணுமோ கேட்டுடு ஆரு. எனக்கு முகிலைப் பிடிக்கலையா? ஏன் இப்படி இருக்கேன்? எங்களுக்குள்ளே ஏதும் பிரச்சனையா? இதைத்தான் கேட்க நினைக்கற? இதற்கு பதில் சொல்லியே நான் ஓய்ந்து போகிறேன்.
“எனக்கு அவரைப் பிடிச்சுதான் கல்யாணம் பண்ணிகிட்டேன். அவருக்குன்னு நான் இருக்கணும்னு யோசிச்சு தான் செய்தேன். ஆனால் என்னோட விளையாட்டு குணம் கொஞ்சம் பிசக, எல்லாம் தப்பா போய்ட்டு.
“இப்போ அதை சரி செய்ய முடியாமல் முழிக்கறேன் போதுமா? இப்போ என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்?” அவள் படபடக்க, ஆராதனாவுக்கு அதற்கு மேலே எதுவும் சொல்ல முடியவில்லை.
அவர்களிடம் விடைபெற்றுச் செல்ல, சுமித்ராவுக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தது. அவர்கள் செல்லவே, அறைக்குள் வந்த கார்முகிலை பிடித்துக் கொண்டாள்.
“நீங்க உங்க மனசுக்குள்ளே என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க? நான் ஒத்துக்கறேன், நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்… பண்ணிட்டேன். அதை சரி செய்ய ஒரு சேன்ஸ் கொடுக்கலாம் தானே. அதை விட்டு… இப்படி ஏன் நடந்துக்கறீங்க?” அனைவரின் கேள்விக்கு உள்ளாவது அவளை பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்கி இருந்தது.
ஏனென்றால் அனைவரின் கேள்வியும் அவளை மட்டும்தானே துளைக்கிறது. அவனிடம் யாரும் எதையும் கேட்கவில்லையே. அவர்களுக்கு சமாதானம் சொல்லியே ஓய்ந்து போவது கடுப்பாக வேறு இருந்தது.
அவள் நிஜமாகவே அந்த எண்ணத்தில் அனைத்தையும் செய்து வைத்திருந்தால் எப்படியோ? ஆனால் அது அப்படி இல்லை எனவும் அவளுக்கு அதிகம் வலித்தது. ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவளை, மேலும் அவர்கள் நோகடித்தால் அவளும் என்னதான் செய்ய? எனவே அவனிடம் பொங்கிவிட்டாள்.
கார்முகில் எப்பொழுதுமே மிகவும் நிதானமானவன். அவளை விட்டு விலகி நின்று விரதம் காப்பதே அவனுக்கு கொடுமையாக இருந்தது. இடையில் அவள் வேறு தன்னை விட்டு விலகி நிற்பது இன்னும் கடுப்பாக இருக்க, அவன் அந்த நொடி நிதானத்தில் இல்லை.
“நான் என்ன செய்தேன்? எதுவும் இல்லையே…” அவன் தோளைக் குலுக்க, அவளுக்கு கடுப்பானது.
“எதுவுமே இல்லையா? எதுக்கு இப்படி எல்லார்கிட்டேயும் சிம்பதி கிரியேட் பண்ற மாதிரி நடந்துக்கறீங்க? எல்லாரும் என்கிட்டே தானே கேள்வி கேட்கறாங்க. பதில் சொல்லி முடியலை, எனக்கு கடுப்பாகுது. நான் உங்களை லவ் பண்ணலைன்னு நீங்க எப்படி முடிவு பண்ணலாம்? என் மனசைப்பற்றி எனக்குத்தான் தெரியும்.
“அன்னைக்கு நான் என்னை அறியாமல் தூங்கிட்டேன்… ஐ ஜஸ்ட் ஸ்லெப்ட் அதுதான் நான் செய்த மிகப்பெரிய தப்பு. அதற்குப் பிறகு நான் உங்களை என்கிட்டே வர வேண்டாம்னு சொன்னேனா?
“‘லவ் மேக்’ பண்ணக் கூடாதுன்னு சொன்னேனா? என்னை தொடக் கூடாதுன்னு சொன்னேனா? இல்ல கிஸ் பண்ணக் கூடாதுன்னு சொன்னேனா? ஏன் விலகி இருக்கறீங்க? இப்போ தள்ளி இருக்கறது நீங்கதான், நான் இல்லை…” நாட்கள் மாதங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்க, அவளும் எவ்வளவுதான் தாங்குவாள்?
எனவே அவனிடம் பொங்கிவிட்டாள். அவனுமே அந்த நொடி நிதானம் தவற, வார்த்தைகளை சிதறடித்தான்.
“ஓ… அப்போ, இப்போ எல்லா தப்பும் என்மேலே திரும்புதா? நீ கொஞ்சம் அழகா இருந்தால், நான் உன்னை எப்போ தொடலாம், எந்த நேரம் தொடலாம்னு நீ டிஸைட் பண்ணுவியா? நீ சொல்ற நேரம், நீ ஃபிக்ஸ் பண்ற நேரம்தான் நான் உன்கிட்டே வரணுமா? அப்படியா?” அவன் கேட்டு வைக்க, அப்படியே உறைந்தாள்.
என்ன வார்த்தை சொல்லிவிட்டான்… அவள் கனவில் கூட நினைக்காத விஷயம். அவள் அதிர்வை அவன் அவதானித்து இருக்கலாம்… நிதானித்து இருக்கலாம்… எதுவும் இல்லை.
“கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு டெஸ்ட் வைத்தவள் தானே நீ. அப்போவே நான் எல்லாத்தையும் மொத்தமா முடிச்சு இருக்கணும். அன்னைக்கு நீ நல்ல ‘மூட்’ல இருந்த அதனால் அப்படி நடந்துகிட்ட. நான் உன் கழுத்தில் தாலி கட்டின அன்னைக்கு உனக்கு ‘மூட்’ இல்லை அப்படித்தானே?” அவன் கேட்டு முடிக்கையில் அவள் கரம் இடியென அவன் கன்னத்தில் இறங்கி இருந்தது.
“ஏய்…?” என்றவன் தானும் அவளை அடிக்க கை ஓங்கியவன், அவள் கண்களில் உயிர்வலியைக் காணவே சட்டென நிதானித்தான்.
“நான் தப்பு பண்ணினேன்… ஆனா நீங்க பழி சுமத்திட்டீங்க. இல்ல, நான் இதை ஒத்துக்க மாட்டேன். நான் கனவில் கூட நினைச்சுப் பார்க்காத ஒரு விஷயத்தை சொல்லிட்டீங்க. எப்படியான ஒரு வார்த்தைகளை நான் என் துணைகிட்டே இருந்து கேட்கவே கூடாதுன்னு நான் நினைச்சேனோ அதை சொல்லிட்டீங்க. “தேவையில்லாத பழியை சுமந்துட்டு என்னால் உங்களோட வாழ முடியாது. இனிமேல் உங்களுக்கும் எனக்கும் நடுவில் எதுவுமே இல்லை. இட்ஸ் ஓவர் முகி… இட்ஸ் ஓவர்” என்றவள் அறையை விட்டு வெளியேற நொறுங்கிப் போய் தலையில் கை வைத்தவாறு அப்படியே அமர்ந்துவிட்டான்.