Home Love & Romanceஉனக்கென பிறந்தவள் நானே – 1.

உனக்கென பிறந்தவள் நானே – 1.

by infaalocious

பகுதி – 1.

சுமித்ரா, அந்த மருத்துவமனை வளாகத்துக்குள் தன் ஸ்கூட்டியை அத்தனை வேகமாக கொண்டு வந்து நிறுத்தினாள். அவள் வந்த வேகத்தையும், வண்டியை நிறுத்திய வேகத்தையும் பார்த்த செக்யூரிட்டியே சற்று அரண்டுதான் போனார்.

அந்த மிரட்சியினால் மட்டுமே வண்டியை அங்கே பார்க் செய்யக் கூடாது எனச் சொல்லக் கூட மறந்து போயிருந்தார்.

அவர் மறந்துவிட்டாலும், சற்று தூரத்தில் நின்றிருந்த மற்றொரு செக்யூரிட்டி அதை மறக்கவில்லை. “யோவ் ராமேந்திரா, அந்த புள்ளை வண்டியை வழியிலேயே நிறுத்திட்டு போகுதுய்யா. அதைப் பார்த்துட்டு நீ என்னய்யா பண்ற? டாக்டர் மட்டும் இப்போ வந்து பார்க்கணும், உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவார்.

“இதுக்கு டாக்டர் கூட வர வேண்டாம், அந்த சூப்ரவைசர் வந்தால் போதும், இன்னைக்கு நீ தீர்ந்த” இன்னொரு செக்யூரிட்டி சொல்ல அப்பொழுதுதான் தெளிந்தார்.

வேகமாக சுமித்ராவின் பின்னால் ஓடியவர், “இந்தம்மா பாப்பா… நில்லு” அவள் பின்னாலேயே அவர் ஓட, அதை அவள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை. அவள் அத்தனை அவசரத்தில் இருந்தாள்.

அங்கே நின்றிருந்த லிப்டுக்குள் நுழைந்தவள், லிப்டின் கதவை மூடத் துவங்க, சரியாக அந்த நேரம் ராமேந்திரன் அவளைப் பிடித்துவிட்டார்.

“அம்மாடி, வண்டியை வழியில் நிறுத்தி இருக்கீங்க. அதை ஓரமா, பார்கிங்கில் நிறுத்திட்டு போங்க” வேகமாக அவளைத் தடுத்தார். லிப்டுக்குள் ஏற்கனவே வேறு ஆட்களும் இருக்க, லிப்டின் கதவில் கை வைத்து அதை நிறுத்தவும் முடியாத சூழல் அவருக்கு.

“நீங்களே நிறுத்திடுங்க… நான் கொஞ்சம் அவசரமா போக வேண்டி இருக்கு தாத்தா… ப்ளீஸ்…” என்றவள் லிப்டின் கதவு மூடப் போன இறுதி நொடியில், தன் கையில் இருந்த கீயை அவரை நோக்கி தூக்கிப் போட்டாள்.

அவளது ‘ப்ளீஸ்’ என்ற கெஞ்சலை விட, ‘தாத்தா’ என்ற அவளது அழைப்பு அவரை அமைதிபடுத்த, கையில் இருந்த கீயோடு திரும்பி நடந்தார். பொதுவாக இப்படி ஏதாவது என்றால் அவருக்கு அவ்வளவு கோபம் வரும். ஆனால் இப்பொழுது ஏனோ அப்படி கோபப்பட முடியவில்லை.

அவள் கண்களில் இருந்த தவிப்பா? அவள் உடல்மொழியில் தெரிந்த பதட்டமா? அதில் மனம் கனத்துப் போக, ‘அந்த புள்ளை தேடி வந்த யாருக்கும் எதுவும் ஆகக் கூடாது’ என்ற வேண்டுதலோடு வெளியே வந்தார்.

“என்ன ராமேந்திரா, எங்கையா அந்த பொண்ணு? வண்டி வழியில் நிக்குதுய்யா” அவர் பின்னாலேயே வந்த ரஜினி அவரிடம் படபடத்தார். வண்டி நேராக வாசலுக்கு முன்பே இருக்க, யார் பார்த்தாலும் அவர்கள் இருவருக்கும்தான் பிரச்சனை என்பதால் கேட்டார்.

“அந்த புள்ளைக்கு ரொம்ப அவசரம் போல ரஜினி. கீயை கொடுத்துட்டு போச்சு, நானே வண்டியை எடுத்து பார்க்கிங்கில் விட்டுடறேன்” ராமேந்திரன் சொல்ல, ரஜினி அவனை முறைத்தார்.

“உன்ன திருத்தவே முடியாதுய்யா. இங்கே வர்ற யாரு சுகமா வாரா? எல்லோரும் ஏதோ ஒரு பிரச்சனையோடத்தான் வராங்க. அதுக்காக வழக்கத்தை எல்லாம் மாற்ற முடியுமா? இப்போ அவங்க வேலையை நீ பார்த்தால், உன் வேலையை யார் பார்க்கறது?” சிறு கண்டிப்பான தொனியிலேயே பேசினார்.

“விடுப்பா… என்ன எப்பவுமா செய்யறோம்?” என்றவாறே சுமித்ரா நிறுத்திவிட்டுப் போயிருந்த வண்டியை எடுத்து ஓரமாக நிறுத்தப் போனார். அதே நேரம் லிப்டுக்குள் இருந்து வெளியேறிய சுமித்ராவோ, தாய் சொன்ன அறை எண்ணைத் தேடி ஓடினாள்.

ஏற்கனவே அது எங்கே இருக்கிறது என அவர் தெளிவாகச் சொல்லி இருக்கவே, பரபரவென கண்களை அலையவிட்டு, எண்களை அலசியவாறே வந்தவள் தான் தேடி வந்த எண்ணைக் கண்டுகொண்டாள்.

அதைப் பார்த்தவுடன் அவள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை எனலாம்.

“அம்மா… அக்கா…” என கிட்டத்தட்ட அலறியவாறே அறைக்குள் பாய்ந்தாள்.

“ஷ்…ஷ்…ஷ்…” அவளது அன்னையும் அக்காவும் ஒன்றுபோல் அவளை அடக்கியதை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

“இப்போ எதுக்கு கத்துற? அவனே இப்போதான் அழுகையை நிறுத்தினான்” தாய் சொல்ல, அதை அவள் கேட்கும் நிலையில் எல்லாம் இல்லை.

“அக்கா… குட்டி எங்கே? எனக்குப் பார்க்கணும்” குதிக்காத குறையாக கேட்டவள், தன் அக்காவின் கரங்களுக்குள் பாந்தமாக அடங்கி இருந்த அந்த மலர்க் குவியலை அப்பொழுதுதான் பார்த்தாள்.

இவள் போட்ட சத்தத்தில் சுபிதாவின் கரத்தில் இருந்த அவளது மகன் மெதுவாக நெளிந்து, தன் சிணுங்கலை வெளிப்படுத்தினான்.

“அக்கா… ஹாஸ்பிடல் வர்றீங்கன்னு ஏன் என்கிட்டே சொல்லவே இல்லை? இங்கே வந்த பிறகும், குட்டி பிறந்த பிறகு எனக்கு சொல்றீங்க? உங்க ரெண்டுபேர் மேலேயும் நான் செம கோபத்தில் இருக்கேன். நீ குட்டியை என்கிட்டே கொடு” என்றவள் தன் அக்காவின் கரத்தில் இருந்து பிடுங்காத குறையாக அவனை வாங்க முயன்றாள்.

“சுமி… இரு… நானே குழந்தையை தரேன், இப்படி பிடுங்காதே” என்றவாறே தன் கரத்தில் இருந்த தன் மகனை தங்கையின் கரத்துக்கு இடம் மாற்றினாள்.

“அக்கா, அப்படியே உன்னை மாதிரியே இருக்கான்க்கா… ரோஸ் கலர்ல, பட்டு மாதிரி இருக்கான்…” என்றவளது கண்களில் கண்ணீர். குழந்தை மெல்லியதாக சிணுங்க, தன் கரத்தை மெதுவாக அசைத்து, அவன் அழுகையை குறைக்க முயன்றாள்.

“டேய் கண்ணா… சித்திடா… சித்தி… சித்தி…” என்றவள் தேம்பி அழ, அவர்களது தாய் அனிதா தன் இளைய மகளை, தான் ஈன்று எடுக்காத இளைய மகளை தன் தோளோடு அணைத்துக் கொண்டார். அதே நேரம் சுபிதாவோ தன் தங்கையின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

“அழாதடி லூசு…” அவளை மென்மையாக கடிந்தும் கொண்டாள்.

“எனக்கு அழ வருதே… குட்டி எவ்வளவு அழகா இருக்கான் பாரேன். என் கண்ணே பட்டுடும் போல. பல வருஷத்துக்கு முன்னாடியே இப்படி ஒரு குட்டி தம்பி…” அவள் சொல்லிக் கொண்டே போக,

“சுமி…” அவளது பெறாத தாய் போட்ட அதட்டலில் வாயை இறுக மூடிக் கொண்டாள். ஆனாலும் அழுகை மட்டும் நிற்காமல் தொடர, அக்காவும், அன்னையும் ஆளுக்கு ஒரு பக்கமாக அவளை அணைத்துக் கொண்டார்கள்.

“சுமி, இப்போ எதுக்கு இப்படி அழற? குழந்தையைப் பார், நீ பேசின உடனே அழுகையை நிறுத்திட்டான் பார்” தாய் சொல்ல, தன்னை தேற்றிக் கொள்ள முயன்றாள்.

“அக்கா… வாழ்த்துக்கள்க்கா… வர்ற அவசரத்தில் எதுவுமே வாங்காமல் வந்துட்டேன்” அவள் வருத்தமாகச் சொல்ல, அக்காவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘யாரு இவளா?’ என்றுதான் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கேட்டுக் கொண்டது.

“நீ வாங்கிட்டு வருவன்னு நாங்க எதுவுமே வாங்கலையே. அவசரத்துக்கு டயப்பரும், ஒரு குழந்தைக்கான ‘பெட்’ மட்டும்தான் வாங்கினோம்” தாய் குறைபோல் சொல்ல, அவள் முகம் வாடி விட்டது.

“ஹையோ அப்படியா? அப்படின்னா நான் இப்போ போய் வாங்கிட்டு வரவா? ஆனா எனக்கு இவனை விட்டுப் போக மனசே வரலையே. அம்மா, இங்கே பாருங்களேன்… எவ்வளோண்டு வாய்… அழுறப்போ எப்படி உதட்டை பிதுக்கறான் பாருங்களேன். குட்டி கை, குட்டி விரல்… காலைப் பார்க்கணும்…” சிணுங்கியவாறு தாயின் முகம் பார்த்தாள்.

“அதுக்கென்ன பாரேன்…” தாய் சொல்ல,

“இல்ல வேண்டாம்… நான் பிறகு பார்த்துக்கறேன்” என்றவள், “கண்ணா… எதுக்கு அழறீங்க? பசிக்குதா? அம்மா அடிச்சுட்டாளா? பாட்டி திட்டிட்டாங்களா?” படுக்கையில் இருந்து இறங்கியவள் குழந்தையை கொஞ்சிக்கொண்டே அறைக்குள் நடந்தாள்.

அவளது குரலை அடையாளம் கண்டுகொண்டேன் என்பதுபோல், அவளது கை அசைவுக்கும், அவள் குரலிலும் கிறங்கியவாறு கொஞ்சம் கொஞ்சமாக உறங்கிப் போனான் குழந்தை.

அதைப் பார்த்தவள், “அம்மா தூங்கிட்டானே… எழுப்பி விடுங்க…” அவள் தாயிடம் சொல்ல, அவரோ அவளை முறைத்தார்.

“காலையில் பதினோரு மணிக்குப் பொறந்தான், இப்போ மணி மூணு. இவ்வளவு நேரமா அழுதுகிட்டே இருந்து, பால் குடிக்கவும் தெரியாமல் அவனை சமாதானப்படுத்தி, பால் கொடுத்து தூங்க வச்சா, வந்து எழுப்பி விட்டுட்ட.

“எழுப்பின நீயே அவனை தூங்கவும் வச்சுட்டன்னு பார்த்தா, தூங்கினவனை எழுப்பி விடுங்கன்னா சொல்ற? இப்போ என்கிட்டே நல்ல அடிதான் வாங்கப் போற பார். அவனை கொடு, நான் தொட்டில்ல படுக்க வைக்கறேன்.

“இவன் தூங்கற நேரத்தில்தான் உன் அக்காவும் தூங்கிக்க முடியும். அவன் எழுந்து பசிக்கு அழுதா நாம என்னத்த கொடுக்கறது. நீ கொஞ்ச நேரம் தொல்லை பண்ணாமல் அமைதியா உட்க்கார். நீ மதியம் சாப்ட்டியா? அதைச் சொல்லு…” என்றவாறு அவள் கரத்தில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார்.

“அம்மா… அம்மா… நானே வச்சுக்கறேன்” அவள் குழந்தையை கொடுக்க மறுத்து, தாயிடம் சின்னக் குரலில் மறுக்க, அவரோ அவளை முறைத்தார்.

“கை சூட்டுக்கே பழகிட்டா பிறகு கீழே படுக்கவே மாட்டான். கொடு முதல்ல…” அவளை நெருங்க, குழந்தையோடு சேர்ந்து தானும் திரும்பிக் கொண்டாள்.

“அவன் கீழே படுக்கவே வேண்டாம்… நான் ஒருத்தி சித்தின்னு எதுக்கு இருக்கேனாம்? நானே வச்சுக்கறேன்” அவள் பிடிவாதம் பிடிக்க அனிதா நோகாமல் தன் தலையிலேயே அடித்துக் கொண்டார்.

“உன்னை வச்சுகிட்டு முடியலை… சுமி…” அவர் கொஞ்சம் அழுத்தமாக அழைக்க, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.

“நானே இவனை படுக்க வச்சுக்கறேன்… ஆனால் இந்த ஹாஸ்பிடல் தொட்டில் எல்லாம் வேண்டாம்” அவள் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே அவளது அலுவலக கொலீக் ஒருவன் ஒரு சின்ன தொட்டிலோடு அங்கே வந்தான்.

அதை படுக்கையின்மேல் அவன் வைக்க, அழகிய ரிபன் சுற்றப்பட்டு, புத்தம் புதிதாக இருந்த அதை தாயும் மகளும் ஒரு சேரப் பார்த்தார்கள்.

‘உன்னைப்பற்றி தெரியாதா?’ என பெற்றவர்கள் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள். வந்தவன் குழந்தையை எட்டி நின்று ஒரு பார்வை பார்த்தான், அவ்வளவுதான். அதற்கு மேலே குழந்தையை தொட்டுப் பார்க்க கூட அவன் செய்யவில்லை.

சுமித்ரா குழந்தையை அலுங்காமல் அதில் படுக்க வைக்க, குழந்தையோ கொஞ்சமாக அசைந்து கொடுத்தான். அதில் இருந்த பக்கிளை அலுங்காமல் போட்டு விட்டவள், அதை தூளி போல் அசைத்துக் கொடுத்தாள்.

“விடு… அவன் தூங்கிப்பான்” தாய் சொல்ல,

“ஷ்… குழந்தை தூங்கறான் தானே, இப்படி பேசறீங்க” சுமித்ரா சொல்ல, சுபிதா வாய் பொத்தி சிரித்துவிட்டாள்.

“அப்பா, மாமா எல்லாம் எங்கே?” அவள் கேட்க,

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டே போ…” அனிதா நொடித்துக் கொள்ள, தாயை செல்லமாக முறைத்தாள்.

“ம்மா…” கண்டனமாக குரல் கொடுக்கவே,

“அவங்க ரெண்டு பேரும் நீ வரதுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் வீட்டுக்குப் போனாங்க. நைட் மாப்பிளை இங்கே தங்கறதா சொல்லி இருக்கார். நாம வீட்டுக்குப் போறோம்” அவர் அழுத்தமாகச் சொல்ல, தாயை முறைத்தாள்.

“நீங்க போங்க, நான் எதுக்கு? நான் வர மாட்டேன்” அவள் பிடிவாதமாகச் சொல்ல, இப்பொழுது அனிதா மகளை முறைத்தார்.

“என்கிட்டே அடி வாங்கி ரொம்ப நாள் ஆச்சுல்ல, அதான் இப்படி பேசற. நைட் கிளம்பி போயிட்டு, காலையிலே வரோம் அவ்வளவுதான்” அவர் முடித்துவிட, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

அந்த நேரம் அங்கே வந்தான் சுபிதாவின் கணவன் திலக். வழக்கமாக அவனைப் பார்த்தவுடன் மலர்ந்து புன்னகைக்கும் சுமித்ரா அன்று அமைதியாக அவன் முகம் பார்க்காமலே அமர்ந்திருக்க புருவம் நெரித்தான்.

“என் மச்சினியை யார் வெறி ஏற்றினது? இவ இப்படி கிடையாதே” அவன் சொல்ல, கணவனை எச்சரிக்கும் பார்வை பார்த்தாள் சுபிதா.

அது அவனுக்குப் புரியாமல், “என்ன? எதுக்கு இப்படிப் பார்க்கற?” அவன் கேட்டு வைக்க, அவளோ வெளிப்படையாக தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

“ஏய் என்ன? எதுக்கு இப்படி செய்யற?” அவன் கேட்டு வைக்க, அவன் முன்னால் கோபமாக நின்றிருந்தாள் சுமித்ரா.

அவன் புரியாத குழப்பத்தோடு அவளைப் பார்த்து வைக்க, “என் அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளை உங்களோட அழைச்சுட்டு போனீங்க சரி. அவ கேரிங் ஆனப்போ முதல் மூணு மாசம்தான் எங்களோட இருந்தா, பிறகு ஒன்பதாவது மாசம்தான் அவளை இங்கே அனுப்பினீங்க.

“வந்த ஒரே வாரத்தில் அவளுக்கு குழந்தையே பொறந்துடுச்சு. அப்போ நான் எப்போதான் அவ கூட இருக்கறது? நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது, நான் அவ கூடத்தான் இருப்பேன். நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கறீங்க அவ்வளவுதான்…” அவள் கோபமாகச் சொல்ல, அவனோ திடுக்கிட்டான்.

“சுமி… நீயாம்மா இது?” அவன் வராத கண்ணீரை துடைப்பதுபோல் பாவனை காட்ட, அவளோ நகராமல் நின்றாள்.

“சுமி… முதல்ல வா நீ…” அனிதா மகளது கைபிடித்து இழுத்துக் கொண்டு வெளியே செல்ல, தானும் தாயுடனே இழுபட்டுச் சென்றாள்.

அவர்கள் வெளியே செல்லவே, “என்ன ரொம்ப சூடா இருக்கா?” என்றவன் மனைவியின் அருகே அமர்ந்து அவள் கரத்தை இறுக பற்றிக் கொண்டான்.

“அவதான் என் கூடவே இருப்பேன்னு சண்டை போட்டுட்டு இருந்தா. சரியா அந்த நேரத்துக்கு நீங்களும் வந்து சேர்ந்தீங்க” அவள் சொல்ல, அவளை ஒட்டி அமர்ந்தவன், அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான். ஒரு வாரப் பிரிவுதான் என்றாலும், அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் கணவனுக்கு அது நெடுநாள் பிரிவே.

அதுவும் திருமணம் முடிந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு அவள் தாய்மை அடைந்திருக்கவே, அவளை தூசு கூட நெருங்காமல் பார்த்துக் கொண்டான். அவள் தாய்மை அடைந்த பிறகு அவளுக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என விலகி இருந்து விரதம் காத்தான்.

அது அனிதாவுக்கும் தெரியும். அப்படி இருக்கையில் குழந்தை பிறந்தவுடன் ஒரு கணவனின் மனநிலை என்னவாக இருக்கும் என எண்ணியே அனிதா கூட அன்று இரவில் அங்கே தங்க வேண்டாம் என முடிவெடுத்தார்.

அப்படி இருக்கையில் தன் சின்னமகள் புரியாமல் நடந்து கொண்டால், அவரும் என்னதான் செய்ய?

“அம்மா…” அவள் மறுப்பாக சொல்லத் துவங்க, அவளை அந்த காரிடாரின் இறுதிக்கே அழைத்துச் சென்றுவிட்டார்.

“சுமி… நீ இன்னும் சின்னப் பிள்ளை இல்லை. சொன்னால் புரிஞ்சுக்கணும்… நாளைக்கே அக்காவை டிச்சார்ஜ் பண்றதா சொல்லிட்டாங்க. இன்னைக்கு ஒரு நைட்… அக்காகூட மாமா இருக்கட்டும். அக்கா வீட்டுக்கு வந்துட்டா, ஆறு மாசத்துக்கு அங்கே தானே இருக்கப் போறா?” தாய் சொல்ல, சட்டென என்ன உணர்ந்தாளோ வாயை மூடிக் கொண்டாள்.

“அக்கா கேட்டுகிட்டாளா?” சிறுத்துப்போன குரலில் சங்கடமாக கேட்டு வைத்தாள்.

“சுமி…” மகளது குரலில் இருந்த துள்ளல் காணாமல் போன அந்த நொடி, அனிதா பதட்டமாகிவிட்டார். அவளை நெருங்கி அவள் கரத்தை பிடிக்க, தாயின் தோள் சாய்ந்து கொண்டாள். அதென்னவோ சுமித்ராவின் முகம் வாடிவிட்டாலே அனிதா தாங்க மாட்டார்.

அவருக்கு அவர் பெற்ற மகள் சுபிதாவை விட, அவர் பெறாத மகளான சுமித்ராவின் மீது உயிரையே வைத்திருந்தார்.

“சரி நாம வீட்டுக்குப் போகலாம்… ஆனா அக்கா நம்ம வீட்டுக்கு வந்த பிறகு நான் அவ கூடவேதான் இருப்பேன்” தன்னை மீட்டுக் கொண்டவள் தாயிடம் சொல்ல, அனிதா புன்னகைத்துக் கொண்டார்.

“அக்கா பிள்ளையை வளர்ப்பது சித்தியோட வேலை தானே… நீ வா…” அவர் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே, அவளது கொலீக் வேறு ஒருத்தி கையில் பரிசுப் பொதியோடு வந்து சேர்ந்தாள்.

“ஆரம்பிச்சுட்டியா?” மகளிடம் கேட்டவருக்கு அத்தனை சந்தோசம். அடுத்து வந்த ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் குழந்தைக்கென ஒவ்வொன்றாக வந்து சேர, தாயும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அங்கே இருந்த திலக்கோ, “நான் ஏதாவது வாங்கறதுக்கு மிச்சம் வச்சிருக்கியா?” அவன் கேட்டுக் கொண்டு இருக்கையிலேயே, தன் கைப்பைக்குள் இருந்து ஒரு சின்ன நகைப் பெட்டியை வெளியே எடுத்தாள்.

குழந்தைக்கென குட்டி செயின், இடுப்புக்கு கொடி, காலுக்கு கொலுசு, கைக்கு சின்ன வளையல் என அனைத்தையும் அவள் தங்கத்திலேயே போட்டுவிட, அதை அங்கே இருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.

சுமித்ராவுக்கு தன்னைச் சார்ந்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்க அவ்வளவு பிடிக்கும். அதுவும் எதிர்பாராத நேரங்களில் அவள் கொடுக்கும் சர்ப்ரைஸ் எல்லாம் அவர்களை திக்கு முக்காடச் செய்துவிடும்.

அவளிடம் எதையாவது செய்யச் சொன்னால், அதை சிறப்பாகவே செய்து விடுவாள். ஆனால் அவர்கள் கேட்கையில், “ஹையோ மறந்துட்டேனே… செய்யலையே…” எனதான் முதலில் சொல்வாள். ஆனால் சட்டென தான் முடித்துவிட்டதைச் சொல்லி, அவர்களை திக்குமுக்காடச் செய்து விடுவாள்.

அவளைச் சார்ந்தவர்களை சந்தோஷத்தில் வாயடைக்கச் செய்வது அவளுக்குப் பிடிக்கும். சுமித்ரா என்றாலே அப்படித்தான். அவளது இந்த குணத்துக்குப் பின்னால் இருந்தது அனிதா தான்.

அனிதாவும், அவளது தங்கை ஸ்ரீதேவியும் இரட்டைப் பிள்ளைகள். உருவத்தில் ஒற்றுமை கொண்ட இரட்டையர்கள். சில நொடிகளுக்கு முன்னர் பிறந்ததால் அனிதா அக்காவாகிப் போனாள் அவ்வளவுதான்.

அனிதா சின்ன வயதிலேயே செல்வத்தை காதலித்து, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அதில் பிறந்த வீட்டு தொடர்பு முழுதாக விட்டுப் போயிருந்தது. மீண்டும் அவர் தாய் வீடு போனது, தன் இரட்டை சகோதரியான ஸ்ரீதேவி, அவளது கணவனின் இறப்பு செய்தியை கேட்டுத்தான் அங்கே போனார்.

அங்கே அனிதாவைப் பார்த்த மறு நிமிடமே மூன்று வயது சுமித்ரா, “அம்மா…” என அழைத்து அவளை இறுக கட்டிக் கொண்டாள். அவளை விட்டு நீங்க மறுத்தாள். ஆனால் அனிதாவைப் பெற்றவர்கள் தங்கள் பேத்தியை கைப்பற்ற முயன்றார்கள். மகளை வீட்டை விட்டு அனுப்ப முயன்றார்கள்.

வேறு வழியின்றி அனிதாவும் ஊருக்கு வர, சுமித்ராவுக்கு காய்ச்சல் அதிகமாகி ஜனனி கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். வேறு வழியின்றி அனிதாவுக்கு தகவல் கொடுக்க, அந்த நேரம் அனிதா தன் இரண்டாவது குழந்தையை வயிற்றில் தாங்கி இருந்தார்.

மருத்துவமனையில் இவளைப் பார்த்தவுடன் அவளைப் பெற்றவளுக்கு எங்கே இருந்துதான் அத்தனை ஆத்திரம் வந்ததோ, அவளைப் பிடித்து தள்ளி விட்டார்.

தங்கள் பேத்தியை தங்களிடமிருந்து பிரிக்க வந்த வில்லியாக அவளைப் பார்த்ததன் விளைவில் நேர்ந்த செய்கை அது. ஆனால் அது பாதகமாகிப் போனது…. வயிற்றில் இருந்த குழந்தை அழிந்து உதிரம் காலில் பெருக, பெற்றவள் துடித்துப் போனாள்.

ஆனால் முடிந்ததை மாற்ற யாரால் முடியும்? வயோதிகம், செய்துவிட்ட செயலின் வீரியம் எல்லாம் சேர, சுமித்ராவும் அனிதாவை விட்டு விலகாமல் போக, அவளை விட்டுக் கொடுத்தார்கள்.

அவள் தங்கள் வீட்டுக்கு வந்த அன்று, சுபிதா சொன்ன வார்த்தை… “உன்னாலதான் எனக்கு தம்பிப் பாப்பா இல்லாமல் போயிடுச்சா?” அவள் கேட்டு வைக்க, மூன்று வயது குழந்தையான சுமித்ராவுக்கு அப்பொழுது அது புரியவில்லை.

ஆனால் அந்த வார்த்தைகள் அவள் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்து போனது. பத்து வயதை நெருங்கிய பொழுது அவள் தன் தாயிடம், அதாவது அனிதாவிடம் அதைப்பற்றி கேட்டாள்.

“நான் இல்லன்னா இங்கே தம்பிப் பாப்பா இருந்திருப்பானா?” என்று. அதை சுபிதாவே எதிர்பார்க்கவில்லை. சுபிதாவுக்கு அப்பொழுது இருபது வயது. கல்லூரி இரண்டாம் வருடத்தில் இருந்தாள். முதலில் எப்படியோ, ஆனால் அதற்குப் பிறகு அவளுக்கு சுமித்ராவை அவ்வளவு பிடித்தது.

அப்படி இருக்கையில் அவள் இப்படிக் கேட்டால் எப்படி பொறுப்பாள்? தங்கையை கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள். அப்பொழுது அவளை அமர்த்தி அனிதா பேசினார்.

“இந்த உலகத்திலேயே மிகப்பெரிய விஷயம் எது தெரியுமா? மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான். உன்னோட உருவத்தில் நான் என் தங்கையைப் பார்க்கறேன். நீ என்கூட இருக்கறதே எனக்கு பெரிய சந்தோசம் சுமி ம்மா.

“இது கிடைச்சிருந்தா? இருந்திருந்தா? இந்த சிந்தையே நம்மளை எப்போதும் சிதைச்சுடும். இந்த நிமிஷம், நாம யாருக்காக இருக்கறோம்? யாரை சந்தோஷமா வச்சுக்கறோம்? அதில் தான் இருக்கு. உனக்காக நான் இருக்கிறேன் என்பதே எனக்கு சந்தோசம்டா.

“இப்போ நீயும் இங்கே இல்லைன்னா சுபிதா தனியா தானே இருந்திருப்பா. நீ எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம், அதனால் இப்படி இனிமேல் யோசிக்கவே கூடாது” தாய் சொன்னதை அப்படியே மனதில் ஏற்றிக் கொண்டாள்.

தொடரும்……….

You may also like

8 comments

sivaranjantharsini February 14, 2026 - 7:08 pm

சுமி பாசக்கார பொண்ணுமட்டுமல்ல நல்ல பொண்ணும் கூட,
ஆத்தர் ஜி ….!நம்மஹீரோவை கண்ணுல காட்டலையே…!
(என்ன நாள் எபி வரும் ஆத்தர் ஜி)

Reply
infaalocious February 14, 2026 - 7:18 pm

அடுத்த எபியில் ஹீரோ வருவார்! மிக்க நன்றி!

(திங்கள், புதன், வெள்ளி பதிவுகள் வரும்)

Reply
Thani February 14, 2026 - 7:27 pm

நன்றி ஜி❤️

Reply
Usha kuppuswamy February 14, 2026 - 11:47 pm

Nice starting beautiful bonding between sisters with a lovable n caring mother

Reply
vaishanika.😍😍 February 18, 2026 - 10:12 am

அருமையான பதிவு 😍😍😍😍

Reply
infaalocious February 19, 2026 - 7:06 am

மிக்க நன்றி!

Reply
Usha kuppuswamy February 14, 2026 - 11:47 pm

Nice starting beautiful bonding between sisters with a lovable n caring mother

Reply
infaalocious February 19, 2026 - 7:07 am

மிக்க நன்றி!

Reply

Leave a Reply to Thani Cancel Reply

About Me

Featured