பகுதி – 4.
சுமித்ரா இத்தனை இலகுவாக தாங்கள் கேட்டதற்கு சம்மதம் சொல்வாள் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவே இல்லை. ஒரு வருடத்திற்கு முன்னர் கேட்டதற்கு எல்லாம் அவ்வளவு சென்டிமெண்டாக பேசி ஒவ்வொருவரின் வாயையும் அடைத்து இருந்தாள்.
அப்படி இருக்கையில் இன்றைக்கு கேட்ட உடனே சம்மதம் சொன்னால் அவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்களா என்ன?
“கண்ணம்மா நிஜமாத்தான் சொல்றியாடா?” செல்வம் தன் ஆச்சரியத்தை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினார்.
“என்னப்பா கேள்வி இது?” என்றவள் இன்னும் சலுகையாக தாயின் மடியில் வசதியாக படுத்துக் கொண்டு கால் நீட்டிக் கொண்டாள்.
“இல்ல… கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும், என்னவோ உன்னை நாங்க தலை முழுகப் பார்க்கறோம் என்ற விதத்தில் பேசிட்டு இருந்தியா, அதான் கேட்டேன்” செல்வம் சொல்ல, மலர்ந்து புன்னகைத்தாள்.
“அதெல்லாம் சும்மா… காலம் முழுக்க உங்களுக்கு சுமையா எல்லாம் இருக்க மாட்டேன்ப்பா” அவள் சொல்ல, அவளை ஆதூரமாகப் பார்த்தார்.
“ஏய் என்னடி பேச்சு இது? நீ எங்களுக்கு சுமையா? வாய் மேலேயே போடப் போறேன் பார்” அனிதா கோபம் கொள்ள, தாயின் கரத்தை இறுக பற்றிக் கொண்டாள்.
“சரி… இப்படிச் சொல்லவா? என்னை செட்டில் பண்ணி விட்டு, என் குழந்தைகளை எல்லாம் பார்க்க உங்களுக்கும் ஆசை இருக்கும் தானே. உங்க ஆசையை எல்லாம் நிராசையா எல்லாம் மாற்ற மாட்டேன் போதுமா?” அவள் சொல்ல, அனிதாவுக்கு முகம் கொள்ளா புன்னகை.
“என் தங்கம்…” மகளை கொஞ்சிக் கொள்ள, தாயோடு ஒட்டிக் கொண்டாள்.
“உனக்கு எப்படி மாப்பிளை வேணும் கண்ணம்மா?” செல்வம் கேட்க, சில நொடிகள் எதையோ தீவிரமாக சிந்தித்தாள். அவள் அப்படி யோசிக்கவே, அவளைப் பெற்றவர்கள் இருவரும் அவளையே பார்த்து இருந்தார்கள்.
“என்னம்மா அவ்வளவு தீவிரமா யோசிக்கற? வரிசையா நிறைய டிமேண்ட் வச்சிருக்கியா என்ன?” தாய் கேட்க,
“ச்சு குறுக்கே பேசாதீங்கம்மா” என்றவள், இன்னும் சில நொடிகள் எடுத்துக் கொண்டாள்.
அவர்கள் அவளையே பார்த்திருக்க, “எனக்கு நீங்க எப்படியோ, அப்படி நான் அவருக்கு இருக்கணும். நீங்க என்னை நேசிக்கற மாதிரி, நான் உங்களை நேசிக்கற மாதிரி எங்களுக்குள் அன்பு இருக்கணும். என்னோட ஆசை அவ்வளவுதான்…” அவள் சொல்ல, அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்றே தெரியவில்லை.
“கண்ணம்மா…” செல்வம் உருகிப் போய் அழைக்க,
“ஐ மீன் இட் ப்பா… அவர் வாழ்க்கையில் நான் முக்கியமானவளா இருக்கணும். என்னோட ஒரே எதிர்பார்ப்பு அது மட்டும்தான்” அவள் குரலில் அத்தனை தீவிரம் இருந்தது.
‘ஒரு மனிதனைப் பார்த்த உடனே அது எப்படிம்மா தெரியும்?’ என செல்வம் கேட்க வந்ததை அவர் அவளிடம் சொல்லவில்லை. கணவனும் மனைவியும் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“இந்த அழகு, படிப்பு, வசதி…” செல்வம் அவள் மனதை அறிய வேண்டி துருவினார்.
“அதைப்பற்றி எல்லாம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லைப்பா. நம்மகிட்டே இல்லாத பணமா? வசதியா? அழகு… நான் எதிர்பார்க்கற குவாலிட்டி அவர்கிட்டே இருந்தால், என் கண்ணுக்கு அவர் அழகாகத்தான் இருப்பார்ப்பா” இப்படிச் சொன்ன மகள் பேரழகி என்பதில் அவருக்கு கர்வம் உண்டானது.
‘அவனை’ என அவள் சொல்லாமல், ‘அவரை’ என மகள் சொல்ல, தனக்கு வரப்போகும் அவன்மேல் இப்பொழுதே மகள் வைத்திருக்கும் மதிப்பைக் கண்டு பூரித்தார்.
ஐந்தரை அடி உயரம், உயரத்துக்கு ஏற்ற எடை, நல்ல சிவந்த நிறம், மேல்தட்டு மக்களின் நளினம், நாகரிகம், நுனிநாக்கு ஆங்கிலம் என ஆளை அசரடிக்கும் வல்லமை கொண்டவள். ‘இவளது அழகைப்பற்றி இவளுக்குத் தெரியுமா இல்லையா?’ என எத்தனையோ முறை சுபிதாவே ஆச்சரியப்பட்டு இருக்கிறாள்.
‘என் பொண்ணுக்கு அவளோட இந்த அழகால், அவளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது ஆண்டவா’ என தினம் தினம் அனிதா கடவுளிடம் வேண்டுதல் வைப்பார்.
தன் மகள் செல்லும் இடம், வீட்டை விட்டுச் சென்றால் அவள் வீடு திரும்பும் வரைக்கும் செல்வமே மகளை தன் கண்காணிப்பிலேயே வைத்திருப்பார். அவளது அழகு அவளுக்கு மிகவும் ஆபத்தானது என தன் சிறகுகளுக்கு உள்ளேயே அவளை பாதுகாத்து வருபவர்.
அப்படிப்பட்ட மகள், தனக்கு வருபவன் தனக்கு இணையான அழகோடு இருக்க வேண்டும் எனக் கேட்காமல், அவன் எப்படி இருந்தாலும், என் மனதுக்குப் பிடித்துவிட்டால் அவன் பேரழகனாகத்தான் இருப்பான் எனச் சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்.
சுமித்ரா அப்படியே அவளது அப்பாவின் சாயல் கொண்டிருந்தாள். அந்த அழகும், உயரமும், முக லட்சணமும் அவளது அப்பாவின் குடும்பத்தில் இருந்து அவளுக்கு வந்தது. இவளைப் பார்க்கும் எந்த ஆண்மகனும், மீண்டும் ஒரு முறை அவளைப் பார்த்துவிட்டே செல்வான்.
பெண்கள் எல்லாம் நிச்சயம் அவள் அழகைக் கண்டு சிறு பொறாமை கொள்வார்கள். அவளுடன் பயின்ற சில தோழியரின் திருமணங்களுக்கு அவள் செல்கையில் எல்லாம், “சுமி, மேக்கப் கொஞ்சம் கம்மியா பண்ணிக்கடி, பிறகு மணப் பொண்ணு யாருன்னு கெஸ்ட்டுக்கு எல்லாம் சந்தேகமே வந்துடும். அதைவிட மாப்பிள்ளை அவன் மனைவியை விட்டு, உன்னை சைட் அடிக்கும் ஆபத்து இருக்கு” என சொல்லியே அழைத்துச் செல்வார்கள்.
அவர்கள் அப்படிச் சொன்னால், “அந்த அளவுக்கு நிலையில்லாத மனநிலை கொண்ட ஒரு மாப்பிள்ளை அவளுக்கு அவசியமே இல்லை” என இவள் குறை பட்டுக் கொள்வாள்.
“அப்போ நான் உடனே தரகர் கிட்டே சொல்லி வைக்கறேன். அப்படியே நம்ம அசோசியேஷன்லயும் சொல்லி வைக்கறேன்” செல்வம் சொல்ல,
“ஆறு மாசம் போகட்டும்ப்பா” வேகமாக இடையிட்டாள்.
“கண்ணம்மா… இப்போ பார்க்க ஆரம்பிச்சால் தான் ஆறு மாசத்தில் எல்லாம் முடிவாகும். பிறகு கல்யாண வேலை, சத்திரம் கிடைக்கறது இப்படி நிறைய இருக்கும்மா” செல்வம் சொல்ல, அதற்கு மேலே அவள் மறுக்கவில்லை.
பெற்றவர்கள் இருவரும் சட்டென அமைதியாகிவிட, “அம்மா பசிக்குது?” சுமித்ரா தாயைக் கலைத்தாள்.
“அன்னம்மா என்ன செய்து வச்சிருக்காங்கன்னு பார்த்துட்டு வர்றேன். நீ போய் ட்ரஸ் மாத்திட்டு வா, அப்படியே அக்காவும் மாமாவும் சாப்பிட வர்றாங்களா கேளு” தாய் சொல்ல அவள் எழுந்து சென்றுவிட்டாள்.
அவள் செல்லவே, “என்ன அனிதா இவ இப்படிச் சொல்றா? வர்ரவனோட குணம், பின்புலம், பழக்கவழக்கம் என எல்லாத்தையும் ஓரளவுக்கு நாம தெரிஞ்சுக்க முடியும். இவளோட ஒரே எதிர்பார்ப்புக்கு அவன் ஒத்து வருவான்னு நாம எப்படி தெரிஞ்சுக்கறது?” செல்வத்துக்கு கவலை தொற்றிக் கொண்டது.
“கடவுள் மேலே பாரத்தை போட்டு பார்க்க ஆரம்பிப்போம்ங்க. எல்லாம் நல்லபடியாவே நடக்கும்” மனைவி சொல்ல, அவரும் ஏற்றுக் கொண்டார். தங்கள் பொறுப்பு அதிகரித்து இருப்பது அவருக்குப் புரிந்தது.
குன்றத்தூரில் இருந்தது அவர்களது குட்டி பங்களா, கீழே கூடம், மூன்று அறைகள், கிச்சன் என இருக்க, மாடியிலும் விஸ்தாரமான கூடம், மூன்று அறைகள், ஒரு சின்ன லைப்ரேரி அறை ஒன்றும் இருந்தது.
சுபிதாவுக்கும், சுமித்ராவுக்கும் தனித்தனி அறைகள் மாடியில் இருந்தாலும், சுபிதாவின் திருமணம் வரைக்கும் ஒரே அறையில்தான் இருந்தார்கள். அவளது திருமணத்திற்கு பிறகுதான் சுமித்ரா தனி அறைக்கு மாறினாள். ஆனால் இப்பொழுது குழந்தைக்கு மூன்று மாதம் ஆகும் வரைக்கும் கீழே இருக்கும் அறையிலேயே சுபிதா இருக்குமாறு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
தன் அறைக்குள் வந்தவள் அங்கே மேஜைமேல் இருந்த அந்த புகைப்படத்தை தன் கரத்தில் எடுத்துப் பார்த்தாள். அதில் இருந்தது அவள்தான்… ஆனால் அவள் கையில் இருந்த நாய்க்குட்டியின் மீது அவளது கவனம் சென்றது.
முன்னங்கால்கள் இரண்டையும் இழந்த ஒரு கையடக்க நாய்க்குட்டி அது. அவள் பத்தாவது படிக்கும் பொழுது அவள் நாய்க்குட்டி வேண்டும் என அடம் பிடிக்கவே, அவளை நாய்கள் கிடைக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கே எத்தனையோ ரகங்களில் விதம் விதமான நாய்கள் இருக்க, அவள் தேர்ந்தெடுத்ததோ, பிறந்து இரண்டு மாதங்களே ஆன இந்த நாய்க்குட்டியைத்தான்.
“அது வேண்டாம்… நாங்களே அதை எங்கேயாவது கொண்டு போய் விடற ப்ளான்ல தான் இருக்கோம். நீங்க வேற பாருங்க” அங்கே விற்பனை இடத்தில் இருந்த பையன் சொல்ல, வேகமாக அதன் கூட்டைத் திறந்து அந்த குட்டி நாயை கையில் தூக்கிக் கொண்டாள்.
“அப்பா… எனக்கு இந்த பப்பி தான் வேணும். யாருக்குமே இதைப் பிடிக்காது, ஆனா இதுக்குன்னு நான் இருப்பேன்ப்பா. எனக்கு இதையே வாங்கித் தாங்க” அவள் சொல்ல,
“இதை நீங்க ஃப்ரியாவே வாங்கிட்டுப் போங்க” அவன் சொல்ல, அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.
“ஏன் வேண்டாம்? இதுக்குன்னும் ஒரு மதிப்பு இருக்கு” என்றவள் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டே அந்த நாய்க்குட்டியை தூக்கி வந்தாள். அந்த நாய்க்குட்டியை பின்னங்காலில் நடக்க பழக்கியது முதல், டாய்லெட் ட்ரெயினிங் கூட கொடுத்து, தன்னுடனே வைத்துக் கொண்டாள்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் மூளையில் கட்டி வந்து, சில நாட்களில் அது இறந்து போனது. அது வரைக்கும் அந்த ‘டோனி’க்கு இவள் என்றால் உயிர். இவளுமே அதன்மீது உயிரையே வைத்திருந்தாள்.
அது இறந்த அன்று, அவள் அழுத அழுகை… அவளது பெற்றவர்கள் போன பொழுது, அனிதாவும் விட்டு வந்தாளே, அந்த நாளுக்கு ஒத்திருந்தது. அவளை சமாதானப்படுத்தி தேற்றவே நிறைய நாள் ஆனது. அதற்குப் பிறகு அவள் நாய் வேண்டும் என கேட்ட பொழுது அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
பிறகு நேரமாவதை உணர்ந்து அந்த புகைப்படத்தை கீழே வைத்துவிட்டு உடை மாற்றச் சென்றாள்.
அடுத்து வந்த நாட்கள் முதல் செல்வம் தன் மகளுக்கு மாப்பிள்ளை வேட்டையே நடத்தினார். ஜாதகம் பொருந்தி, அவர்கள் வசதிக்கும் இணையான வரன்களை அவர்கள் சல்லடை போட்டு சலித்தார்கள்.
நிறைய வரன்களை அவர்களே வேண்டாம் என மறுக்க, சிலவற்றை அந்த ஆண்களின் புகைப்படத்தை பார்த்த நொடியே அவள் மறுத்தாள். “என்னம்மா பார்த்த உடனே வேண்டாம்னு சொல்ற, அவங்க கிட்டே ஜஸ்ட் பேசியாவது பார்க்கலாமே” செல்வம் ஒருமுறை கேட்டேவிட்டார்.
“இல்லப்பா… என் மனசு இவர்தான் உன் ஆளுன்னு சொல்ல மாட்டேங்குது. அது மட்டும் இல்லை, சிலர் எல்லாம் என்னோட சீனியர்ஸ், ஸ்கூல் சீனியர்ஸ்… நம்ம சரக்கிள்ள அவங்களில் சிலரை எனக்கு தெரியும். அவங்க குணம் எல்லாம் எனக்கு செட் ஆகாதுப்பா” அவள் சொல்ல, அவளை எதற்காகவும் அவர்கள் கட்டாயப்படுத்தவே இல்லை.
நாட்கள் இப்படியே செல்ல, ஆறு மாதங்கள் ஓடி இருந்தது. சுபிதாவின் குழந்தைக்கு ‘ஆதவன்’ என பெயர் வைத்தது முதல், அவன் குப்புற விழுந்து தவழவும் துவங்கி விட்டான். ஆனால் சுமித்ராவின் மனதுக்கு பிடித்தவிதத்தில் எந்த வரனும் அமையவில்லை.
குழந்தைக்கு ஏழாம் மாதம் துவங்கவே, சுபிதா தன் கணவன் வீட்டுக்கே சென்றும் விட்டாள். அப்பொழுதுதான் ஒரு வரன் வர, அந்த இடம் அவர்கள் அனைவருக்குமே திருப்தியாக இருந்தது. வெளிநாட்டில் படித்து, இங்கே இப்பொழுதுதான் ஒரு கணினி நிறுவனத்தை துவங்கி இருந்தான்.
அது நல்லபடியாக நடக்கத் துவங்கி இருந்தது. ஆளும் பார்க்க நல்ல கம்பீரமாக அழகாக இருந்தான். சுமித்ராவுக்கும் அவனைப் பார்த்தவுடன் எதுவும் தோன்றவில்லை என்றாலும் செல்வம் அந்த அவனைப்பற்றி நிறைய பேசவே நேரில் பார்க்க சம்மதித்தாள்.
“பெண் பார்க்கன்னு எல்லாம் வரச் சொல்லாதீங்க ப்பா. எவ்வளவோ ஹோட்டல், ஷாப்பிங் மால் எல்லாம் இருக்கு, அங்கே எங்கேயாவது வரச் சொல்லுங்க. சும்மா ஒரு கேஷுவல் டால்க் அவ்வளவுதான். நான் பேசிப் பார்த்துட்டு பிறகு சொல்றேன்… அதுக்கு முன்னாடி நீங்க எந்த உறுதியும் கொடுக்காதீங்க” அவள் சொல்ல அவர்கள் மறுப்பார்களா என்ன?
அவள் சொன்னபடியே ஒரு ஷாப்பிங் காப்ளக்சில் இருந்த ஃபுட் கோர்ட்டுக்குச் சென்றாள். அவள் காத்திருக்கத் துவங்கி அரைமணி நேரத்துக்கு மேலாகியும் அவன் வரும் வழியைக் காணோம். அவள் கிளம்பி விடலாம் என நினைக்கையில், தான் ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதாகவும், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவதாகவும் அவனிடமிருந்து குறுந்தகவல் வந்தது.
அதைப் பார்த்தவள் சற்று கடுப்பானாலும், தகவல் சொல்லிவிட்டானே என அவனுக்காக காத்திருந்தாள். அந்த ஃபுட் கோர்டில் எவ்வளவு நேரம்தான் எதையும் வாங்காமல் வெறுமனே அமர்ந்திருக்க முடியும்? எனவே தனக்கென ஒரு ஜூசை வாங்கிக் கொண்டு அங்கே அமர்ந்தாள்.
அலைபேசியையும் எவ்வளவு நேரம் பார்ப்பது எனத் தோன்றவே, அதை கீழே வைத்துவிட்டு சுற்றிலும் வேடிக்கை பார்க்கத் துவங்கினாள். அப்பொழுது இவள் இருந்த இடத்துக்கு நேர் எதிரில் இருந்த நடை பாதையில் அவள் கவனம் சென்றது.
அங்கே இரு ஆண்கள் ஒரு பெண்ணை நோக்கிச் செல்ல, அதில் இருந்த ஒருத்தனில் அவள் கவனம் சென்றது. கொஞ்சம் கருமை நிறத்தில் இருந்தவனது உடைத் தெரிவு அவளை கவர்ந்தது. ‘இவ்வளவு கறுப்பா?’ நிஜத்தில் அவள் இப்படி யாரையும் இதுவரை பார்த்த நினைவே இல்லை.
அவள் சட்டென அந்த பெண்ணை கவனிக்கவே, அந்த கருமை நிறக் கண்ணனை அவள் ஒரு முகச் சுழிப்போடு பார்ப்பது தெரிந்தது. அது சுமித்ராவின் புருவத்தை இடுங்கச் செய்தது. வேகமாக அவள் அவன் முகம் பார்க்க, அவன் முகத்தில் சிறு சலனம் கூடத் தெரியவில்லை.
இன்னும் சொல்லப் போனால், ‘எனக்கு இது பழக்கம்தான்’ என்ற பாவனை கூட இல்லை. தன் அருகே நின்றவனிடம் எதையோ சொல்லி சிரிப்பதும், அந்த பெண்ணிடம் எதையோ சொல்ல, அவளோ அதைக் கண்டு கொள்ளக் கூட இல்லை.
சுமித்ராவுக்கு சுறுசுறுவென ஒரு கோபம் எழுந்தது. ‘ஒருத்தரோட நிறத்தை வைத்து அவரை கீழாக பார்ப்பதா?’ அவளுக்குள் சிறு ஆத்திரம். அதைவிட அந்த கருமை நிறக் கண்ணன் அந்த பெண்ணை அத்தனை இயல்பாக அணுகும் விதம் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அந்த பெண் அவனை நேருக்கு நேராக பார்க்க கூட தயங்க, அவனோ தன் நண்பனைக் காட்டி, அவன் தோளைத் தட்டி என்னவோ சொல்லிக் கொண்டே இருந்தான். அவன் பேசிக் கொண்டு இருக்கையிலேயே அந்த பெண், அவனுக்கு அருகே இருந்தவனிடம் எதையோ சொல்லி, அவனது கையைப் பிடித்து கிட்டத்தட்ட இழுத்துச் சென்றாள்.
அதைப் பார்த்த சுமித்ராவின் ரத்தம் கொதிக்க, தன்னை மீறி இருக்கையில் இருந்து எழுந்தே விட்டாள்.
அதே நேரம், அந்த ஜோடி செல்ல, அந்த கருமை நிறத்தவனோ தோளைக் குலுக்கிவிட்டு, பார்வையை இவள் இருந்த பக்கம் திருப்பியவன், அவளை நோக்கி, அந்த கடையை நோக்கி வந்தான்.
சுமித்ரா தன்னை மீறி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பழைய படங்களில் ‘அட்லி’ மேக்கப் இல்லாமல் இருக்கையில் எந்த நிறத்தில் இருப்பானோ அப்படி ஒரு நிறம். நல்ல வெள்ளை நிறக் கண்கள் அவன் முகத்தில் பளிச்சென இருக்க, ‘அப்பா என்ன ஒரு பவர்’ என எண்ணிக் கொண்டாள்.
வேடிக்கை பார்த்த அவளுக்கு ரத்தம் கொதிக்க, பாதிக்கப் பட்டவனோ ஏதோ ஒரு பாடலை ‘ஹம்’ செய்தவாறே அந்த ஃபுட் கோர்ட்டுக்குள் நுழைந்தான். அவனும் அவள் வாங்கிய அதே வாட்டமெலோன் ஜூசை வாங்கிக் கொண்டான்.
நேராக அவளுக்கு எதிராக முகம் பார்த்தவாறு அவள் மேஜைக்கு முன் இருந்த அந்த மேஜையின் முன்னால் அமர்ந்தான். அவன் ஜூசை உறிய, அவனது அலைபேசி இசைத்தது. அதைப் பார்த்தவன், ஒரு நொடி புருவம் சுருக்கிவிட்டு அதை எடுத்தான்.
“அதியன்… என்னடா இந்த நேரம் கூப்ட்டிருக்க? ஓ… அப்படியா? நானா? மாலுக்கு வந்தேன். நம்ம ஃப்ரண்டு ஒருத்தனுக்கு லவ்வு செட்டாகற நிலையில் புட்டுக்கற மாதிரி இருந்தது. அதுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன்.
“அதுவா…? அவன் கொஞ்சம் கலர் கம்மின்னு அந்த பொண்ணு ஃபீல் பண்ணுச்சாம். ‘என் கூட மட்டும் வாடா’ன்னு கூப்ட்டான். என் பக்கத்தில் அவன் கலராத்தான இருப்பான், செட் ஆகிடுச்சு” என்றவன் கடகடவென சிரிக்க, அவளுக்கு ஆத்திரமும் ஆச்சரியமும் ஒருங்கே எழுந்தது.
“ஹாய்… என்ன கிளம்பிட்டீங்களா? ஒரு முக்கியமான மீட்டிங், அதை விட்டு வர முடியலை” தனக்கு எதிரில் வந்து அவன் நிற்க, அப்பொழுதுதான் தான் நின்று கொண்டிருப்பதையே உணர்ந்தாள்.
“ஹாங்… இல்ல…” என்றவள் அமர,
“ஜஸ்ட் ஒரே நிமிஷம்…” என்றவன் மீண்டும் தன் அலைபேசியோடு வெளியே விரைய, சுமித்ரா இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
வந்தவனை விட, அந்த ‘அட்லி’யை அவள் கவனிக்கத் துவங்கினாள். “அதியா… திட்டாதடா… என்னால் முடிஞ்ச ஒரு சின்ன உதவி… சரி, சரி… நான் நேர்ல வந்து உன்கிட்டே திட்டு வாங்கிக்கறேன். இப்போ நீ எதுக்கு ஃபோன் பண்ண அதைச் சொல்லு” முகில் கேட்டுக் கொண்டிருக்க, அதியனோ அலைபேசியை வைத்துவிட்டான்.
“போச்சு… வச்சுட்டானா?” தன் அலைபேசியால் நெற்றியில் தட்டிக் கொண்டவன், தன் ஜூஸில் கவனமானான். அவனது அந்த குணம், எங்கோ ஒரு மூலையில் அவள் மனதைத் தீண்டியது.
“ஒரு முக்கியமான கால்… அதான் விட முடியலை. நீங்க ஏதாவது சாப்பிடறீங்களா? மதியம் சாப்பிட நேரமே இல்லை. இஃப் யூ டோன்ட் மைன்ட்… நான் ஏதாவது ஆர்டர் பண்ணிக்கவா? சாப்ட்டுட்டே பேசலாம்” என்றவன் அவள் பதில் சொல்லும் முன்பே எழுந்து சென்றுவிட்டான்.
அந்த வந்தவனை அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. தன் வாழ்க்கையில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வில் அவன் நடந்துகொள்ளும் விதம்?
தாமதமாக வந்ததற்கு ஒரு மன்னிப்பு கேட்கவில்லை. அவனது நேரம் அவனுக்கு எவ்வளவு உயர்வானதோ, அதே அளவுக்கு அவளது நேரம் அவளுக்கு விலையானது தானே. அப்படி இருக்கையில் அதை வீணடிக்கச் செய்ய அவனுக்கு என்ன உரிமை இருக்கிறதாம்?
வந்ததே தாமதமாக, அப்படியும் தன் அலைபேசியை ஒதுக்கி வைக்காமல், அதனுடனே அவன் ஐக்கியமான செய்கை அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ‘சாப்பிடக் கூட நேரமின்றி அப்படி யாருக்கு, எதற்கு உழைக்கிறானாம்?’ அவள் எண்ணுகையில் கையில் உணவோடு திரும்பி வந்தான்.
“நீங்க ஜூஸ் குடிக்கறதைப் பார்த்தேன், அதான் ஏதாவது வேண்டுமான்னு நான் கேட்கலை” என்றவாறே அவன் உண்ணத் துவங்க, அங்கே இருப்பதே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.
அதே நேரம் அந்த ‘அட்லி’ அவளைத் தாண்டிச் செல்ல முயன்றவன், அவளுக்கு அருகே குனிந்து எழுந்தான். அவள் சட்டென தன் காலை இழுத்துக்கொண்டு அவனைப் பார்க்க, “இது உங்க கர்ச்சிப்பா?” அவன் கேட்க, “ஆமா… தேங்க்ஸ்” என அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டாள்.
“அதை யாரோ மிதிச்சுட்டாங்க போல, யூஸ் பண்ணாதீங்க” அவள் தன் வாயை அந்த கர்ச்சிப்பால் துடைத்துக் கொள்ளப் போகவே வேகமாகச் சொன்னான்.
“ஓ… ஓகே…” அவள் அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள். முகிலோ அவளிடம் சொல்லிவிட்டு அவளைத் தாண்டி இரண்டு எட்டு வைத்தவன், ‘ப்பா… என்ன பொண்ணுடா… அவ என்னைப் பார்த்து முகத்தை திருப்பிக்கலை தானே?’ என எண்ணியவன், நின்று அவளைத் திரும்பிப் பார்க்க முயன்றான்.
அவன் அப்படி நின்றது அவனையே பார்த்திருந்த அவளுக்குப் புரிய, ‘திரும்பி என்னைப் பார்க்கப் போறான்’ என அவள் நினைக்க, தன்னை நொடியில் அடக்கிக் கொண்ட கார்முகில் வேகமாக அங்கே இருந்து அகன்றான்.
1 comment
ஹீரோ சாரே ..!ஒரு தடவை அவளை திரும்பி பாத்திருக்கலாம்.
இருவரும் மீட் பண்ணியாச்சு ..சூப்பர்❤️