பகுதி – 8.
கடந்த ஒரு வாரமாக செல்வம் சற்று டென்ஷனாகவே சுற்றிக் கொண்டிருந்தார். அது வீட்டில் இருப்பவர்களுக்கும் நன்கு புரிந்தது. அன்றைக்கு சுபிதாவும் வீட்டுக்கு வந்திருக்க, அவள் தாயோடு பேசிக் கொண்டிருந்தாள்.
அவளது மகன் சுமித்ராவோடு இருக்க, அவள் அவனோடு ஐக்கியமாகிவிட்டாள். ஆதவனுக்கும் சுமித்ரா என்றால் கொள்ளை பிரியம். இங்கே இவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால், அவளுடனையேதான் சுற்றிக் கொண்டிருப்பான்.
தாய், பாட்டி அழைத்தால் கூட போக மாட்டான். சில நேரம் அனிதாவோடு ஒட்டிக் கொள்வான், அதுவும் சுமித்ரா அலுவலகம் போயிருந்தால் மட்டுமே நடக்கும். அன்றைக்கும் அப்படித்தான், சுபிதா தாயோடு பேசிக் கொண்டிருக்க, செல்வம் அவசரமாக கிளம்பி கடைக்குப் போனார்.
“என்னம்மா அப்பா எதுக்கு ஒரு மாதிரி மந்திரிச்சு விட்ட மாதிரியே அலையிறாங்க?” செல்வம் தன்னிடம் ஒழுங்காக பேசவில்லை என்பதால் சுபிதா கேட்டாள்.
“அதை ஏன் கேட்கற? எல்லாம் நம்ம சுமி கல்யாண விஷயம் தான்”.
“அந்த பாலா ஏதாவது பிரச்சனை பண்றானா என்ன?” புரியாமல் கேட்டாள்.
“அது இல்ல… போலீஸ்ல அவன் பேர்ல முன்னெச்சரிக்கையா கம்ப்ளெயின்ட் பண்ணி வச்சாச்சே. அதனால் அது பிரச்சனை இல்லை, இது வேற”.
“வேறையா? என்னன்னு சொல்லுங்கம்மா”.
“உனக்கு மூர்த்தி, சுதா அவங்களைத் தெரியும் தானே?” தாய் கேட்க, இவளுக்கு தெரியவில்லை.
“நீங்க யாரைச் சொல்றீங்கன்னு தெரியலையேம்மா… அவங்களுக்கு என்ன?”.
“அவங்களையே தெரியலைன்னா, அவங்க மகன்… கார்முகிலை உனக்கு எப்படித் தெரியும்?” அவர் புலம்ப,
“யாரு முகிலா? அவன் என் காலேஜ் என் பேட்ச் தான்… அவனுக்கு என்ன? ரொம்ப நல்லவனாச்சே…” அப்படியும் தாய் சொல்ல வருவது அவளுக்குப் புரியவில்லை.
“அப்படியா? அவனைத்தான் நம்ம சுமிக்கு பார்க்கலாம்னு உங்க அப்பா சொன்னாங்க” அனிதா தயங்கிச் சொல்ல, சுபிதா தாயின் முகம் பார்த்தாள்.
“என்ன அவனையா? ரொம்ப நல்லவன்தான்… அதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனா… நம்ம சுமியோட அழகுக்கு, அவன்…” என்றவள் அப்படியே நிறுத்திவிட்டாள்.
“அதையேத்தான் நானும் சொன்னேன்… ஆனா உங்க அப்பாவுக்கு அவகிட்டே பேசியாவது பார்க்கலாமேன்னு ஒரு எண்ணம். அவளை ஒரு நல்லவன் கையில் கொடுக்கணும்னு நினைக்கறார். பார்க்கற எல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் தட்டி வேற போகுதா, அந்த வருத்தம் வேற” அவர் சொல்ல,
“ஓ…” என்றவள் எதையோ யோசித்தாள்.
“என்ன சுபி யோசிக்கற?”.
“இல்ல… நம்ம சுமி எல்லா விஷயத்திலும் கொஞ்சம் வித்தியாசமாத்தான் யோசிப்பா. எனக்கென்ன தோணுதுன்னா, அவகிட்டே சொல்லிப் பார்க்கலாமே…” தங்கையைப் பற்றி தெரிந்தவளாக சொன்னாள்.
“அவன் ஃபோட்டோவை காட்டி, எப்படி அவகிட்டே தைரியமா பேச? உங்க பொண்ணுக்கா இருந்தா இப்படி பார்ப்பீங்களான்னு கேட்டா, இதுவரை அவளைப் பார்த்துகிட்டது எல்லாம் பாழாப் போய்டும் சுபி” தாய் சொல்ல, அவளுக்கு என்னவோ சுமி அப்படி பேசுவாள் என்று எல்லாம் தோன்றவில்லை.
“இல்லம்மா… நம்ம சுமி அப்படி கிடையாது” இவள் உறுதியாகச் சொல்ல,
“அடப் போடி, அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கறோம்னு சொன்னப்போ என்ன சொன்னான்னு சொன்னேன் தானே?” என்றார்.
“அம்மா, அது நீங்க மாப்பிள்ளை பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவ சொன்னது. மற்றபடி அவ சீரியஸா எல்லாம் சொல்லி இருக்க மாட்டா”.
“என்னவோ போ… அந்த முகில் நினைப்பு உங்க அப்பாவுக்கு வந்ததுக்கு பிறகு, வேற எந்த வரனையும் அவ்வளவு ஆர்வமா பார்க்கவே மாட்டேங்கறார்” அனிதாவின் குரலில் மலை அளவுக்கு வருத்தம்.
“சரிம்மா… அவன் ஃபோட்டோ ஏதாவது வச்சு இருக்கீங்களா?” தாயிடம் கேட்டாள்.
“இல்ல சுபி, எல்லாம் உங்க அப்பா ஃபோன்ல தான் இருக்கு”.
“ஓ… அப்படியா? அப்போ சரி, சாயங்காலம் அப்பா வரட்டும். நைட் டின்னர் அப்போ அவகிட்டே நைசா பேசச் சொல்வோம்”.
“இந்த விஷப் பரீட்சை அவசியமா?” அனிதா தயங்க,
“அவன் மட்டும் சுமியைக் கட்டிகிட்டா, அவளை உள்ளங்கையில் வச்சு தாங்குவான். அவனைப்பத்தி தெரியாமல் பேசறீங்க”.
“என்னவோ போ… நீ சொல்ற, எனக்கு மனசு கிடந்தது அடிச்சுக்குது” தாய் சொல்லிக் கொண்டிருக்க, அதைக் கேட்டவாறே அங்கே வந்தாள் சுமி.
“என்னத்துக்குமா மனசு அடிச்சுக்குது?” சுமி கேட்க,
“அது… அது…” சட்டென அவருக்கு என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியவில்லை.
“எல்லாம் உன் கல்யாண விஷயம்தான் வேற என்ன?” சுபி சொல்ல, அவள் தாயை முறைத்தாள்.
“நான் இப்போ உங்களோட இருக்கறதில் உங்களுக்கு என்ன வருத்தம்னு கேட்கிறேன்? அப்பாவோட முகமும் ஒரு வாரமா சரியில்லை, ஒரு வேளை கடையில் ஏதும் பிரச்சனையா இருக்குமோன்னு அங்கேயும் போய் பார்த்துட்டேன். அப்படியெல்லாம் எதுவும் இல்லை.
“என் கல்யாண விஷயம்தான் உங்களை எல்லாம் போட்டு இப்படி அழுத்துதுன்னா, நீங்க யாரைக் கை காட்டறீங்களோ அவரை நான் கண்ணை மூடிகிட்டு கல்யாணம் பண்ணிக்கறேன். இனிமேல் நான் எதுவும் மறுக்கலை போதுமா?” அவள் கோபமாக சொல்ல, ஆதவன் அவள் முகத்தை உற்று பார்த்தான்.
தன் சித்தி இப்படி ஒரு குரலில் பேசியதே இல்லையே என்ற எண்ணம் அவனுக்கு. “யா…யா…யா…யா… க்… ஆ… யா…யா….” அவள் இடுப்பில் இருந்தவன், தாயைப் பார்த்து ஒரு விரல் நீட்டி, அவர்களிடம் புரியாத மொழியில் கோபமாக பேசினான்.
அவனது அந்த செய்கையில் மற்றவர்கள் மூவரும் வாய்விட்டு சிரித்துவிட்டார்கள்.
“ஆது கண்ணா… சித்தியை அவங்க கோபப்படுத்திட்டாங்கன்னு நீ அவங்களை திட்டறியாடா கண்ணா. பார்த்தீங்களா என் மகனை?” என்றவள் அவனைக் கொஞ்சி முத்தமிட்டாள்.
“டேய்… கோபத்துல கொந்தளிச்சது அவ, நீ எங்களை திட்றியாடா. உன்ன…” சுபி மகனை போலியாக அடிக்க முயல, சுமி அவனை தூக்கிக் கொண்டு ஓடினாள்.
ஆதவனுக்கு சிரிப்பென்றால் அப்படி ஒரு சிரிப்பு. அவன் கலகலத்துச் சிரிக்க, அந்த இடத்தில் அத்தனை நேரமாக நிலவிய இறுக்கம் மொத்தமாக தொலைந்து போனது.
“ஏய் விளையாடியது போதும், வா… வந்து சாப்ட்டுட்டு ஆபீஸ்க்கு கிளம்பு” தாய் அழைக்கவே விளையாட்டை கை விட்டார்கள்.
அவள் மேஜைக்கு முன்னால் வந்து அமர்ந்தவள், ஆதவனையும் மேஜைமேல் அமர்த்திக் கொண்டாள். இட்லியை எடுத்து வைத்து சாப்பிட்டவள், அப்படியே ஆதவனுக்கும் ஊட்ட, அவனும் சித்தியிடம் சமத்தாக வாங்கிக் கொண்டான்.
“ம்மா… உங்க பேரனுக்கு இருக்கற ஓரவஞ்சனையை பார்த்தீங்களா? நான் சாப்பாடு ஊட்ட இவன் பின்னால் நாய் மாதிரி தொங்கணும். என்னை அந்த வீடு முழுக்க ஓட விடுவான். இங்கே என்னன்னா, அவகிட்டே ஒரு இடத்திலே உட்க்கார்ந்து எப்படி சாப்பிடறான் பாருங்க” சுபி சொல்ல, அதை அனிதா ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டி இருந்தது.
“நீங்க ரெண்டுபேரும் என்ன எங்க வாயை பார்த்துட்டு இருக்கீங்க? சாப்பிடல…? உட்கார்ந்து சாப்பிடுங்க” அவர்களை அழைத்தாள்.
“நீ சாப்ட்டுட்டு கிளம்பு, நாங்க பிறகு நிதானமா சாப்ட்டுக்கறோம்” சுபி சொல்ல, தன் உணவைத் தொடர்ந்தாள்.
சுமித்ராவோ, “நாம பேசினது பாதியில் அப்படியே நிக்கிது. சாயங்காலம் மாமாவை வரச் சொல்லி, இவனை கொஞ்ச நேரம் வெளியே கூட்டி போகச் சொல்லு, நாம பேசணும்” என்றவளது குரலில் இருந்த தீவிரத்தில் இவர்கள் கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.
“சரி பேசலாம்… நீ அதையே யோசிச்சுட்டு இருக்காமல் உன் வேலையையும் கொஞ்சம் பாரு” அனிதா சொல்ல, தாயை முறைப்பாக பார்த்தவாறே ஆதவனோடு எழுந்து சென்றாள்.
கைகழுவி, அவனுக்கும் வாய் கழுவிவிட்டு சுபிதாவிடம் கொடுத்தவள், தாய் கொடுத்த லஞ்ச் பேகை வாங்கிக் கொண்டாள். சுமித்ராவுக்குள் பெரும் எண்ண ஓட்டமே நடந்து கொண்டிருந்தது.
அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் அன்றைய நாளைக் கடத்த, இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தாள் சுமித்ரா. அதற்கு முன்பாகவே செல்வமும் அங்கே இருக்க, தாய் அவரை வரச் சொல்லி இருப்பார் எனப் புரிந்து கொண்டாள்.
“அப்பா…” என்றவாறு அவர் அருகே செல்ல முயல,
“முதல்ல போய் ஃப்ரஷ் ஆகிட்டு வா…” தாய் சொல்லவே, அவர் சொன்னதை மறுக்காமல் செய்தாள். அவள் வழக்கமாக இரவில் அணியும் நைட் ட்ரஸ்ஸை அணிந்துகொண்டு அங்கே வர, திலக் ஆதவனோடு வெளியே செல்வது தெரிந்தது.
“அக்கா, மாமா சாப்ட்டாங்களா?” அவள் சுபிதாவிடம் கேட்க,
“அவர் இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டீ ஸ்னேக்ஸ் எல்லாம் சாப்ட்டார். நீ வா…” அவள் அழைக்க, சுமித்ரா சென்று செல்வத்தின் அருகே அமர்ந்து கொண்டாள்.
அவரது வலக்கரத்தை முழுதாக கோர்த்துக் கொண்டவள், அவர் தோளில் சாய்ந்து கொண்டாள். “என்னம்மா டயர்டா இருக்கா?” அவர் கேட்டுக் கொண்டிருக்க, அனிதா டீ கப்போடு அங்கே வந்தார்.
பொதுவாக அவள் அந்த நேரம் டீ குடிப்பது இல்லை என்றாலும், இன்று பேச வேண்டி இருக்கவே மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.
அதை ஒரு வாய் பருகியவள், “அப்பா, நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்…” அவள் சொல்லத் துவங்க,
“ஒரு நிமிஷம்மா…” என்றவாறு வேகமாக அவளைத் தடுத்தார்.
“என்னப்பா சொல்லுங்க…” என்றவள் அவர் முகம் பார்த்தாள்.
“முதல்ல இந்த பையனைப் பார்… நீ என்ன நினைக்கறன்னு பிறகு சொல்லு” என்றவர் தன் அலைபேசியை இயக்கி, அன்று அவர் எடுத்த கார்முகிலின் புகைப்படங்களை அவளிடம் காட்டினார்.
அதைப் பார்த்தவள் இனிதாக அதிர்ந்து போனாள். ‘அட நம்ம பிட்லி’ அவள் மனம் நினைக்க, அவளது புருவம் இடுங்கியது.
‘ஒரு வேளை… அப்படியா?’ வேகமாக சிந்தித்தவள், தன் சிந்தை கொடுத்த விடையில் இன்னும் இனிதாக அதிர்ந்தாள்.
“இவருக்கு என்னப்பா? ஆள் பார்க்க மேன்லியா இருக்கார், என்ன கொஞ்சம் கலர்ந்தான் கம்மி…” அவள் சொல்ல,
“கொஞ்சம் இல்லை…” சுபிதா வேகமாகச் சொன்னாள்.
அக்காவை முறைத்தவள், “நீங்க சொல்லுங்கப்பா…” அவள் தகப்பனின் முகம் பார்த்தாள்.
“இது கார்முகில் வண்ணன்… என் சிநேகிதன் மூர்த்தியோட மகன். ரொம்ப நல்லவன்… குணமும் தங்கம். என்ன அவனோட இந்த நிறத்தைக் கொண்டு அவனுக்கு பொண்ணு எதுவும் சரியா அமையலை.
“எனக்கு… எனக்கு… நான்… இவனை உனக்குப் பார்க்கலாம்னு ஒரு யோசனை. என்னடா அப்பா இப்படி ஒருத்தனை உனக்குப் பார்க்கறேனேன்னு நீ என்னை தப்பா…”
“எனக்கு இவரைப் பிடிச்சிருக்குப்பா…” அவள் பட்டென சொன்னாள்.
“எ…எ…என்னம்மா…?” தான் சரியாகத்தான் கேட்டோமா என்ற தடுமாற்றம் அவரிடம்.
“எனக்கு இவரைப் பிடிச்சிருக்கு, நான் இவரை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன்” அவள் மீண்டும் அழுத்தி, நிதானமாகச் சொல்ல, அனைவரும் அப்படியே அமர்ந்து விட்டார்கள்.
“சுமி, நீ நிஜமாத்தான் சொல்றியா?” அனிதாதான் அங்கே நிலவிய மௌனத்தைக் கலைத்தார்.
“இதில் பொய் சொல்ல என்னம்மா இருக்கு?” அவரிடம் எதிர் கேள்வி கேட்டாள்.
“சுமி, நல்லா யோசிச்சுக்கோ… இப்போ ஏதோ ஒரு வேகத்தில் சரின்னு சொல்லிட்டு, பிறகு வருத்தப்படக் கூடாது” சுபிதா தங்கையின் அருகே வந்து அமர்ந்தாள்.
“அம்மா அடிக்கடி ஒரு விஷயம் சொல்வாங்க உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியலை… அதாவது வைரக்கல்லோட மதிப்பு செங்கல் வியாபாரிக்குத் தெரியாதுன்னு சொல்வாங்க. அதுக்காக நான் என்னை வைரம்னு சொல்லிக்கலை, இவருக்கு நான் மதிப்பானவளா இருப்பேன்னு சொல்றேன்” அவள் சொல்ல, சுபிதா தங்கையையே பார்த்திருந்தாள்.
அதைப் பார்த்தவள், “என்னக்கா, எதுக்கு அப்படிப் பார்க்கற?” அவளிடம் கேட்டாள்.
“இல்ல… நீ முகிலை இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கியா?” யோசனையாக கேட்டாள்.
“ஏன் உனக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்தது?”.
“இல்ல… அப்பா அவனோட ஃபோட்டோவை காட்டின உடனே நீ ஷாக் ஆகலை. முகம் சுழிக்கலை, அதைவிட, அவனைப்பற்றி நல்லா தெரிஞ்சவ மாதிரி பேசின… அதை வைத்துதான் சொல்றேன். நீ முகிலை பார்த்து இருக்கியா?” அவளிடம் கேட்டாள்.
“ம்… ஆமா… ரெண்டு மூன்று முறை பார்த்து இருக்கேன். அப்பா ஒரு முறை நான் ஒரு ‘பிட்லி’யைப் பற்றி சொன்னேனே அது இவர்தான்” என்றவள் அவனைப் பார்த்ததைப் பற்றி, நடந்த விஷயங்களைப் பற்றி தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள்.
அவள் சொல்லச் சொல்ல, அனைவருக்கும் அதைக் கேட்டு ஒரு பக்கம் வருத்தம் என்றால், மறு பக்கம் அவன் செய்கையை நினைத்து ஆச்சரியமாகவும் இருந்தது.
“என்னங்க… நாம பேசிக்கறோம், அவங்க ஒத்துப்பாங்களா? அதுவும் அந்த பையன்… ஒரு மாதிரி காம்ப்ளக்ஸ் ஆயிட்டா என்னங்க பண்றது?” அனிதா தன் கவலையை வெளியிட்டார்.
“இல்லம்மா… எனக்குத் தெரிஞ்சு முகில் அப்படி கிடையாது. அவனைப்பற்றி எவ்வளவோ எதிர்மறை விமர்சனங்கள், டீசிங், புல்லிங் எல்லாம் இருந்திருக்கு. அதையெல்லாம் ரொம்ப ஸ்போட்டிவா எடுத்து கடந்து வந்தவன் அவன். இப்போ எப்படின்னு தெரியலை…” சுபிதா சொல்ல, அனைவருக்கும் அந்த கவலையும் எழுந்தது.
“எனக்குத் தோன்றுவதை நான் சொல்லவா?” சுமித்ரா கேட்டாள்.
“சொல்லும்மா…” செல்வம் கேட்கவே,
“எனக்கென்னவோ அவர் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டார்ன்னு தோணுது. அப்படியே அவரை ரொம்ப ஃபோர்ஸ் பண்ணா, அவர் என்கிட்டேதான் வந்து நிப்பார். அப்போ நான் பார்த்துக்கறேன்” அவள் சொல்ல, அனைவருக்கும் கொஞ்சம் குழப்பம்தான்.
“சரிம்மா… அப்போ நான் மூர்த்தி கிட்டே பேசவா?” அவர் கேட்க, அவளும் உடனே ஒத்துக் கொண்டார். செல்வம் உடனடியாக தன் அலைபேசியை எடுத்துக்கொள்ளப் போக, அனிதா தடுத்தார்.
“முதல்ல எல்லோரும் டின்னர் சாப்பிடுவோம், பிறகு நிதானமா அவர்கிட்டே பேசுங்க. சுபி, மாப்பிள்ளையை வரச் சொல்லு…” தாய் சொல்ல, அவளும் திலக்கை வரச் சொன்னாள்.
இரவு உணவை முடித்த செல்வம், மூர்த்திக்கு அழைக்க, அந்தப் பக்கம் அழைப்பு எடுக்கப் பட்டது.
“சொல்லு செல்வம்… என்ன இந்த நேரம் கால் பண்ணி இருக்க? ஏதும் முக்கியமான விஷயமா?” பொதுவாக அவர் இந்த நேரம் அழைப்பது இல்லை என்பதால் கேட்டார்.
“ஆமா பெர்சனல் விஷயம் அதான் இந்த நேரம் கூப்ட்டேன். இப்போ நீ ஃப்ரீயா பேசலாமா?” செல்வம் கேட்க,
“டின்னர் முடிச்சுட்டு ரிலாக்ஸா தான் உட்க்கார்ந்து இருக்கேன், சொல்லு” அவர் கேட்க, செல்வம் விஷயத்தைச் சொல்லவும் கேட்ட மூர்த்திக்கு சில பல நொடிகள் பேச்சே வரவில்லை.
“என்ன செல்வம் சொல்ற? உன் சின்ன பொண்ணையா? தண்ணி எதுவும் போட்டிருக்கியா? நிதானத்துல தானே இருக்க?” நக்கல் குரலில் கேட்டார். தான் கேட்ட விஷயத்தை அவரால் நம்பவே முடியவில்லை.
“ஏன் மூர்த்தி இப்படி கேட்கற? நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ இப்படி பேசறியே”.
“செல்வம், இது நாம பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம் கிடையாது. உன் பொண்ணு, அவளோட முடிவுதான் முக்கியம்”.
“அவகிட்டே பேசி, அவ சம்மதம் வாங்காமல் நான் உன்கிட்டே பேசுவேனா? நாங்க எல்லாம் பேசிட்டோம் அவளுக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம்னு சொன்ன பிறகுதான் உனக்கு நான் கால் செய்தேனே” செல்வம் சொல்ல, அப்படியும் மூர்த்திக்கு நம்பத்தான் முடியவில்லை.
“செல்வம், எதுக்கும் நீ இன்னொரு முறை அவ கிட்டே கேட்டு கன்ஃபாம் பண்ணிட்டு, எனக்கு காலையில் சொல்றியா?” அவர் சொல்ல, செல்வம் வாய்விட்டே சிரித்துவிட்டார்.
“மூர்த்தி, நீ சுதாவை அனிதாகிட்டே பேசச் சொல்லு… நான் ஃபோனை வைக்கறேன்” என்றவர் புன்னகையோடு வைத்துவிட்டார்.
வெளியே போர்டிகோவில் அமர்ந்திருந்த மூர்த்தி, வேகமாக எழுந்து மனைவியைத் தேடி கிட்டத்தட்ட ஓடி வந்தார். அவர் வந்த வேகத்தைப் பார்த்த சுதா சற்று திடுக்கிட்டுத்தான் போனார்.
“என்னங்க என்ன ஆச்சு? எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க? உங்களுக்கு என்ன வயசு போகுதா? திரும்புதா? ஒன்னு கிடக்க ஒன்று ஆனால் என்ன பண்ண முடியும்?” கணவனை மென்மையாக கடிந்து கொண்டார்.
“நான் சொல்லப் போறதைக் கேட்டா நீயே துள்ளி குதிப்ப” என்றவர் விஷயத்தைச் சொல்ல, சுதா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.
“என்ன?” என்றவர் அசையாமலே போக, வேகமாக சென்று தண்ணீர் எடுத்துவந்து மனைவிக்கு கொடுத்தார்.
“என்னங்க சொல்றீங்க? நீங்க இருங்க, நான் அனிதாவுக்கு ஃபோன் பண்றேன்” என்ற சுதா வேகமாக தன் அலைபேசியைத் தேடி எடுத்து அழைத்தார்.
“என்ன அனிதா, இவர் என்னென்னவோ சொல்றார்?” அவரிடம் கேட்க,
“ஆமா சுதா, சுமி உன் மகனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டா. நீ… உன் மகன்கிட்டே பேசிட்டு, ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு பொண்ணு பார்க்க வாங்க” அவர் அழைக்க, சுதாவால் நம்பவே முடியவில்லை.
“அனிதா… நிஜமாவா? நீ எதுவும் ப்ரேன்க் பண்ணலையே” சுமித்ராவின் அழகு அவரை அவ்வாறு கேட்கத் தூண்டியது.
“இல்ல சுதா…”, “அப்போ… சுமி கிட்டே நான் ஒரு வார்த்தை பேச முடியுமா? நானே நேர்ல கேட்டுடறேனே” சுதா தயங்கி தயங்கி கேட்க, அனிதாவுக்கு அவர் நிலை நன்கு புரிந்தது.
“ஒரு நிமிஷம் இரு…” என்றவர், “சுமி… கொஞ்சம் கீழே வாயேன்” குரல் கொடுக்க,
“என்னம்மா… ஆது இப்போதான் தூங்கப் போனான், சரியா எழுப்பி விட்டீங்க. என்னன்னு சொல்லுங்க” அவள் மாடியில் இருந்தே கேட்டாள்.
“சுதா பேசணுமாம்…” தாய் சொல்ல,
“முகிலோட அம்மா சுமி. நீ போ… நான் அவனை பார்த்துக்கறேன்” சுபிதா சொல்ல, சுமித்ரா கீழே இறங்கி வந்தாள்.
தாயிடமிருந்து அலைபேசியை வாங்கியவள், “சொல்லுங்க ஆன்ட்டி…” குரல் கொடுத்தாள்.
“அம்மாடி சுமி… இவங்க சொல்றது எல்லாம் உண்மையா? நிஜமாகவே முகியை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா? எனக்கு உன் வாயால் பதில் வேணும்…” அவர் குரல் நடுங்குவது இவளுக்கு நன்கு புரிந்தது.
“ஆன்ட்டி, எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகரீங்க? சரி சொல்றேன் கேட்டுக்கோங்க, எனக்கு உங்க பையன் முகிலை கல்யாணம் பண்ணிக்க பரிபூரண சம்மதம். நீங்க அவர்கிட்டே பேசிட்டு சொல்லுங்க” என்றவள் அலைபேசியை தாயிடம் கொடுத்துவிட்டாள்.
“என்ன சுதா, இப்போ திருப்தியா? அனிதா கேட்க,
“எனக்கு இன்னும் கூட நம்ப முடியலை அனிதா, என்னவோ கனவு காணுற மாதிரியே இருக்கு. எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை… சுமி… அவ…” சுதா அத்தனை படபடத்தார்.
“எல்லாம் நல்லபடியா நடக்கும் சுதா. நீ உன் மகன் கிட்டே பேசிட்டு ஒரு நல்ல முடிவா சொல்லு” என்றவர் அலைபேசியை வைத்துவிட்டார். விஷயத்தை காலை வரைக்கும் கூட அடக்கி வைக்கும் பொறுமை இல்லாமல், சுதா… கார்முகிலை அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டார்.
அதைக் கேட்டவன் உச்ச பட்சமாக அதிர்ந்து போனான் கார்முகில். ‘இவங்களுக்கெல்லாம் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு’ உள்ளுக்குள் எண்ணியவன் தாயை நம்பாத பார்வை பார்த்தான். அவரும் அவனையேதான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
1 comment
அட போங்கப்பா ..!அவள் தான் தெளிவா சொன்னாளே முகிலனை பிடிச்சு இருக்கு என்று அப்புறம் என்ன ஆள் ஆளுக்கு ஒரு கேள்வி ,
முகிலா முதல்ல நீ தான் மகிழ்ச்சி அடையணும் அதைவிட்டுவிட்டு என்னன்னவோ கேள்வி எல்லாம் கேட்டுக்கிட்டு.