Home Antiheroஎன் சரியும்.. உன் அழகான தவறும்..

சரி – 01

அந்த மருத்துவமனை அறையின் வெண்மையான சுவர்கள் வழக்கமாக அமைதியாக இருந்தன.

ஆனால் அங்கிருந்த யாருக்கும் அந்த வெண்மை அமைதியை தரவில்லை.

மெல்ல ஒலிக்கும் இயந்திரங்களின் ‘டிக்… டிக்…’ இதய துடிப்பை அளக்கும் கருவியின் ஒற்றை கோடு, மருந்தின் மெல்லிய வாசனை, காலடியின் சத்தம் கூட ஒலிக்காத மெதுவான செவிலியர் நடை…

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு தாய் மனதின் அச்சம் மட்டும் அந்த அறையை நிரப்பியிருந்தது.

படுக்கையில் சுமதி படுத்திருந்தார்.

முகம் சோர்வாக இருந்தாலும் கண்களில் உறுதி தெரிந்தது.

அவரின் படுக்கை அருகே நின்றிருந்தான் வேந்தன். பாரி வேந்தன்.

கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நின்றான்.  வேந்தனின் தோள்கள் இறுக்கமாக இருந்தது. அவன் உள்ளம் குழம்பிக் கொண்டிருந்தது.

“ம்மா… உங்க முடிவை மாத்த மாட்டீங்களா?” அவன் கேட்ட குரலில் பயமும், வேதனையும் அப்பட்டமாக தெரிந்தது.

சுமதி மெதுவாக மூச்சை இழுத்து விட்டார். “உன் கல்யாணத்த பார்க்காம நான் அந்த ஆப்ரேஷன் ரூமுக்குள்ள போக மாட்டேன் வேந்தா…”

அந்த வார்த்தை அவனை சற்றே அசைக்க வைத்தது.

“ம்மா… நீங்க திரும்பி வந்ததும் ஜாம்ஜாம்னு நடத்தலாம்.

இப்போ அவசரமா எதுக்கு?” அவன் குரல் உடைந்து கொண்டே போனது.

சுமதி சிரிக்க முயன்றார்.  ஆனால் அந்த சிரிப்பு தாயின் கண்களை எட்டவில்லை.

“வேந்தா… அம்மா சொன்னா கேட்ப இல்ல?” என்றார் மூச்சிரைக்க.

அவன் அவர் கைகளைப் பிடித்தான்.

அந்த கைகளில் பலம் குறைந்திருந்தது.

ஆனால் பாசம் குறையவில்லை.

“ஒரு தடவை நீங்க சொல்லி நான் கேட்கல… அதனால  எந்தளவுக்கு கஷ்டப்பட்டேன் எனக்கு தெரியும்… இப்போ மறுபடியும் அந்த தப்பை செய்ய மாட்டேன்…ஆனா இது…” அவன் வாக்கியத்தை முடிக்கவில்லை.

சுமதி கண்களை மூடி திறந்தார். “எனக்கும் என் பையன் குடும்பம் குட்டின்னு வாழறதை பார்க்க ஆசையா இருக்கு வேந்தா.. அதுக்காகவே நான் திரும்பி வருவேன்…ஆனா ஒருவேளை…” என்று தடுமாறினார்.

“ம்மா!” கிட்டத்தட்ட கத்தவே செய்தான் வேந்தன்.

அந்த குரலில் பயம் இருந்தது. அதைவிட பதட்டம் இருந்தது. அன்பு இருந்தது. பரிதாபம் இருந்தது.

“ம்மா அப்படியெல்லாம் பேசாதீங்க..” என்றான் சத்தமாக.

மகனின் பதட்டம் அவரை மேலும் பேச தூண்டியது “இல்ல.. நான் பேசல… ஆனா எனக்கு பயமா இருக்கு. என் பையன் கல்யாணத்தை நான் பார்க்கனும். அது உன் கைலதான் இருக்கு.. ஆதி ரொம்ப நல்ல பொண்ணுடா… உன்னை நல்லா பார்த்துப்பா… நம்ம தாத்தா பாட்டிக்கும் அவளை ரொம்ப பிடிக்கும்…” என்றார் மென்மையாக.

அந்தக் குரலில் வேந்தன் சற்றும் அசையாமல் நின்றான்.

அவனது கைகள் சற்றே தன் தாயின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டன.

மகனின் பயத்தை உணர்ந்த சுமதியும், அவன் விரல்களைப்  பிடித்துக் கொண்டார் மென்மையாக.

அவன் பேசவில்லை. அவன் அழவில்லை.

அவன் கோபப்படவும் இல்லை.

ஆனால் மனதுக்குள் மட்டும் ஒரு புயல் அதிவேகமாக சுழன்று கொண்டிருந்தது..

ஆதி.

அந்த பெயர் காற்றில் மிதந்து வந்து அவன் காதில் சேர்ந்தது.

அவன் கண்கள் சற்று இறுகின.

கடமை. அம்மா.  உயிர். வாழ்க்கை.

இந்த நான்கின் நடுவே அவன் அல்லாடிக் கொண்டிருந்தான்.

நிமிர்ந்து தாயின் முகத்தைப் பார்த்தான்.  அவள் கண்களில் ஒரு வேண்டுகோள் மட்டும்.

அதற்கு மேல் அவனால் இல்லை என்று சொல்லவே முடியவில்லை.

“சரி ம்மா…” என்றான் குரல் அடைக்க,

அந்த இரண்டு எழுத்துகள் —

அவன் வாயிலிருந்து வந்தபோது

அது சம்மதமா?

சரணாகதியா?

அல்ல தன் அம்மாவின் உயிரை காப்பாற்றும் முயற்சியா?

அவனுக்கே புரியவில்லை.  அந்த வார்த்தை.. அந்த இரண்டு வார்த்தை அவனது வாழ்க்கையை மட்டும் அல்ல… இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது என்று அவனுக்கே அப்போது தெரியவில்லை.

அதே நேரம்…

அந்த செய்தி ஆதினியின் காதில் விழுந்தபோது

அவள் கைகளில் இருந்த புத்தகம் தரையில் வழுந்தது.

“பாரி வேந்தன்…”

அந்த பெயர் அவளுக்கு புதிதல்ல.

சொந்த அத்தை மகன்.

ஆனால் பல வருடங்களாக பேசாத உறவு.

அத்தை கணவர் செய்த தவறு.

இரு குடும்பங்களுக்குள்ளே ஒரு பேரமைதியான, அசைக்கவே முடியாத ஒரு  சுவரை கட்டி எழுப்பியிருந்தது.

“பாரி வேந்தன்… உன் அத்த பையன்…” அவளுக்கு அந்த பெயர் புதியதல்ல. தன் சொந்தங்களின் மூலம் கேள்விப்பட்டிருக்கிறாள்.

சொந்த அத்தை பையன்தான்.. ஆனால் இரு குடும்பங்களிலும் பேச்சு வார்த்தை குறைந்திருந்தது, அத்தை கணவர் செய்த செயலால்.

அதனால் அதிகம் அவர்களிடம் பேசியதில்லை. பார்த்தாலும் கவனிக்காமல், கவனம் பெறாமல் கடந்து வந்துவிடுவாள். ஆனால் அத்தை மேல் மிகுந்த பாசம், வெளியில் பார்க்கும் போது, சிறு புன்னகையுடன் நலம் விசாரிக்க தவறியதில்லை.

அவரும் அவளை பார்த்தால் “எப்படி இருக்க ஆதிம்மா?” என்று பாசமாக கேட்பார். அவரிடம் ஒதுங்கி செல்ல  முயன்றதில்லை. விடவும் மாட்டார்.

ஆனால் அந்த அத்தை மகன், இப்போது “கணவன்” என்ற சொல்லுடன் சேர்ந்திருக்கின்றான்.

அவள் மார்புக்குள் ஏதோ வித்தியாசமான உணர்வு.

அது ஏற்றுக்கொள்ளும் உணர்வு அல்ல.

ஆனால் முழுக்க மறுக்கும் உணர்வும் அல்ல.

“அப்பா… நான்…” ஆதினிக்கு வார்த்தைகள் திக்கின. நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டு சதி செய்தது..

“இது நம்முடைய கடமை, ஆதினி.” என்றார் மகளிடம் சுப்பு தெளிவாக. அந்த குரலை அவளால் அலட்சியம் செய்ய முடியாது. அது அவரின் உறுதியான, இறுதியான வார்த்தை என்று எல்லோருக்கும் புரிய வைக்கும் குரல்.

பல வருடங்களாக பேசாமல் இருந்த தன் சகோதரியின் குடும்பத்துக்கு, மீண்டும் ஒரு பாலம் கட்ட வேண்டிய நேரம் இது என்று அவர் நினைத்தார்.

அதோடு சாவின் விழிம்பில் இருக்கும் தங்கையின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய கடமையும் அவருக்கு இருந்தது.

ஆனால் கலா மட்டும் அமைதியாக இருக்கவில்லை.

“என் அண்ணன் பையனுக்குத்தான் ஆதியை நான் கொடுக்க நினைச்சேன்…” அவரது குரலில் ஏமாற்றம் இருந்தது.

“என் பொண்ணுக்கு என் தங்கச்சி பையன்தான் மாப்பிள்ளை.” சுப்புவின் குரல் கடினமானது.

“இங்க பார் கலா.. என் பொண்ணுக்கு என் தங்கச்சி பையன்தான் மாப்பிள்ளை. உன் மகனுக்கு உன் சொந்தத்திலேயே பார். நான் உன்னை எதுவும் கேட்கமாட்டேன். என் பொண்ணு வாழ்க்கையில விளையாட நினைக்காத..” என மிகவும் கண்டிப்புடன் சொல்லி சென்றிட, கலாவிற்கு கணவன் மேல் ஆத்திரமும் கோபமும் பொங்கியது.

அதை யார் மேல் காட்ட என தெரியாமல், அங்கு பாவமாக யோசனையில் நின்றிருந்த மகளிடம் “போ.. போடி.. உன் அப்பா பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டு.. வாழ்க்கை நல்லாருக்கும்..” என கத்திவிட்டு செல்ல,

அந்த வார்த்தை, ஆதினியின் மனதில் விழுந்த போது

அது ஆசீர்வாதமா?  அல்ல சாபமா? என அவளுக்கே புரியவில்லை.

அவள் பேசவில்லை. அழவில்லை. எதிர்த்துக் கேள்வி கேட்கவும் இல்லை.

ஆனால் அந்த நொடியில், அவள் வாழ்க்கை ஒரு புது பயணத்தை தொடர ஆரம்பித்தது.

அவள் அமைதியாக அறைக்குள் சென்றாள்.

ஆதினியின் வீட்டில் பதட்டம் குறையவில்லை. கலாவிற்கு இந்த சம்மந்தம் வேண்டவே வேண்டாம் தான். மென்மையான குணம் கொண்ட தன் மகளின் வாழ்க்கை மேல் அவருக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும்.

கணவரின் பேச்சில் அது மேலும் கூடி போனது

“நீங்க இந்த கல்யாணத்தை, இப்போ முடிவே பண்ணிட்டீங்களா?” என்றார் கலா வருத்தமாக.

சுப்புவிற்கு  மனைவியின் வருத்தம் புரியாமல் இல்லை. ஆனாலும் உயிருக்கு போராடும் தங்கையின் நிலை அவரை வேறு பேசவிடவில்லை. அதோடு தங்கையின் கணவரைப் போல இல்லை வேந்தன். அது அவருக்குத் தெரியும். அதனால் தான் சுமதி கேட்டதுமே ஒத்துக் கொண்டார்.

“ஆமா கலா.” என்றார் சுப்பு சலிப்பாக.

“அவங்க வீட்டுல நடந்ததை நீங்க மறந்துட்டீங்களா?”

“அது முடிஞ்சு போன விஷயம்.”

“உங்க தங்கச்சிக்காக என் பொண்ணை பலி கொடுக்குறீங்களா?”

அந்த கேள்வி காற்றில் நின்றது.

“அவள் இப்போ ஐசியுல சீரியசா இருக்கா கலா…”

சுப்புவின் குரல் மெலிந்து வந்தது.

.

“அவளுக்கு ஒரே ஆசை — தன் பையன் கல்யாணம் மட்டும்தான்.” என்றார் மேலும்.

“உங்களால நம்ம பொண்ணு சந்தோஷமா இருப்பாள்னு உத்தரவாதம் தர முடியுமா?” என்ற கேள்வியுடன் நின்றார் கலா.

சுப்பு அதற்கு பதில் சொல்லவில்லை, அமைதியாக நின்றார்.

“எந்த கல்யாணத்துக்கும், யாராலயும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனா நம்மளால முடிஞ்சதை நம்ம செய்யணும்.” என்றார் தீவிரமாக.

“நீங்க அப்பா மாதிரி பேசுறீங்க, அதுவும் சரிதான்…

நான் அம்மா மாதிரி பயப்படுறேன்… இதுவும் சரிதான்” என்றார் வேதனையாக.

அந்த வரியில் கோபம் இல்லை.

ஒரு தாயின் அச்சம் மட்டும். அது சுப்புவுக்கும் புரிந்தது.

அவர் கதவின் பக்கம் பார்த்தார்.

அறைக்குள் மகள் இருக்கிறாள். நிச்சயம் வேதனைப்பட்டு, மனதைக் குழப்பிக் கொண்டிருப்பாள் என்று அவருக்குத் தெரியும்.

ஆனால் இப்போது அவர் கையில் எதுவும் இல்லையே..

சுப்பு நினைத்தைதைப் போலவே, ஆதி ஜன்னலருகே தான் நின்றிருந்தாள். வெளியில் இரவு இறங்கிக் கொண்டிருந்தது.

“இது என் சரியா? அல்லது அவனின் தவறா?” அவளுக்கே தெரியவில்லை.

அந்த இரவு, ஒரு தாய் உயிருக்கு போராடினாள்.

ஒரு மகன் கடமைக்கு தலை குனிந்தான்.

ஒரு பெண் தனது வாழ்க்கை எந்த திசையில் செல்லப் போகிறது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

இது முடிவல்ல, இதுதான் ஆரம்பம் என ஆதவன் விடியலில் உதிக்க காத்துக் கொண்டிருந்தான்.

You may also like

1 comment

M. Sarathi Rio March 1, 2026 - 6:20 pm

திருமணங்கள் சொர்க்கத்தில் மட்டும் நிச்சயிக்கப்படுகின்றன என்று யார் சொன்னார்கள், வாழ்வா ? சாவா ? என்னும் மரணப்போராட்ட படுக்கையிலும்
நிச்சயிக்கப்படும் போல.

😀😀😀
CRVS (or)CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured