காலையிலேயே நம் மதுசூதனன், மாதுளையைத் தனது இருசக்கர வாகனத்தில் அமர்த்திக் கொண்டு கல்லூரிக்குப் பறந்தான். அவர்களின் வழியில் மற்றொரு வாகனம் சீற்றத்தோடு குறுக்கே புகுந்து மறைந்தது.

அந்த வாகன ஓட்டியை அவள் எளிதில் அடையாளம் கண்டாள் “மது, உங்களுக்கு இந்தப் பையனை முன்ன பின்ன தெரியுமா? எனக்குத் திரும்பத் திரும்ப இவனைப் பாக்குற மாதிரியே ஃபீல் ஆகுதுங்க. அடிக்கடி நம்ம ரூட்ல கிராஸ் ஆகுறான் போல தெரியுது. காலையில மட்டும் இல்ல. சாயந்தரம் நான் தனியா வரும்போதும் இவன் கண்ணுல படுறான்”

“நமக்குத் தெரிஞ்சவன் தான்” அவன் இறுக்கத்தோடு கூறினான்.

“உங்க ஃப்ரென்டா அவரு?”

“இல்லை. நம்ம சுலோவோட லவ்வரு”

“என்னங்க, இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க? நம்ம சுலோ காதலிக்கிறாளா?”

“ம்ம்ம். ரெண்டு வருஷமா ஓடிட்டிட்டு இருக்கு. ஆனா, அவங்க சேர மாட்டாங்க”

“எதை வச்சு அப்படிச் சொல்றீங்க? நீங்க ஏதாவது பண்ணி அவங்களைப் பிரிக்கப் போறீங்களா?”

“அவங்களே பிரிஞ்சுட்டா நல்லது. இவன் நம்ம குடும்பத்துக்குச் சரியா வர மாட்டான், மாது”

“வசதி இல்லைனு பாக்குறீங்களா?”

“குணமே சரியில்லைங்குறேன்” அவன் எரிச்சலடைந்தான்.

அதற்கு மேல் அவள் அதைக் குறித்து ஆராயவில்லை. அவர்களுடைய வாகனம் பேருந்து நிலையம் வழியாகக் கடந்து செல்ல நேர்ந்தது. இவ்விருவரும் இயல்பாக எதிர்ப்புறம் அலசியபோது, மாரியும் மேகலாவும் விழிப் பரப்பில் அகப்பட்டனர். வயதில் சிறியவர்கள் இருவரும் இப்போது கூட சிரித்துப் பேசியவாறு தான் இருந்தனர். அன்றைய நாளை விட, இருவருக்கிடையே ஈரடி இடைவெளி விழுந்திருந்தது. அவ்வளவே கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான வேறுபாடு.

“இவன் திருந்தவே மாட்டான்!” என்று சொல்லி தமக்கை வேதனை கொண்டாள்.

“அவனை ரொம்பவும் கன்ட்ரோல் பண்ண நினைக்காத. அவங்க வெறும் ஃப்ரென்ட்ஸ் தான். அநாவசியமா கண்டிக்கப் போய், நாமளா எதையும் தூண்டிவிட வேணாம். சரியாகிடுவான். விடு” என்றான் மது நிதானித்து.

அத்தகைய தருணங்களில் அவனது பொறுமையின் எல்லை கண்டு அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அன்றிரவு…

அவள் மும்முரமாய்ச் சமையலில் ஈடுபட்டிருக்க, அவளின் அலைபேசி சிணுங்கியது.

அழைப்பு ஏற்கப்பட்டதும் “வீட்டுக்கு வந்துட்டியா?” என மறுமுனையில் இருந்த கண்ணாளன் வினா வீசினான்.

“மணி எத்தனை ஆகுது? இன்னமும் வராம இருப்பாங்களா?” என்றாள் அவள் சுற்றி வளைத்து.

அவன் விடையே சொல்லாமல் அழைப்பைத் துண்டித்திட, அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அலைபேசியை ஓரங்கட்டிவிட்டு தன் பணியைத் துரிதப்படுத்தினாள். அடுத்த அரைமணி நேரத்தில் அழைப்பில் தொலைந்து போனவன் நேரில் வந்தான். அந்நேரம் சிந்தாமணி தொலைக்காட்சி நாடகத்தில் ஈடுபட்டிருக்க, மாது கட்டில் முனையில் அமர்ந்தபடி அதில் ஒளிபரப்பான காட்சியை எள்ளலுடன் விமர்சித்துக் கொண்டிருந்தாள். வரவேற்பறையின் உள்ளே நுழைந்த மது தன்னவளின் தோளில் இருமுறை தட்டிவிட்டு அறைக்குள் நடந்தான். ஏதோ அவசிய விவகாரம் போல என்று எண்ணிக் கொண்டு அவளும் அவனைப் பின்தொடர்ந்தாள். முதல் அறையைக் கடக்கும்போது, எதேச்சையாக அவள் சுலோச்சனாவைக் கவனித்தாள். இளைய நாத்தி மடியில் வைத்திருந்த புத்தகத்திற்கு நடுவே, அலைபேசித் திரை மிளிர்ந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது. உடனே மாதுவின் நினைவலை, காலையில் காண நேர்ந்த அந்த ஆடவனை நோக்கி ஆர்ப்பரித்தது‌. அதே சிந்தையுடன் அவள் முன்னேறி தங்களது அறைக்குள் காலெடுத்து வைக்கவும் மது கதவடைத்தான். அதற்கான காரணத்தை அவள் கணிக்கும் முன்னரே, சுட்டு விரலைப் பற்றியிழுத்து நிலைப்பேழைக்கும் அலமாரிக்கும் இடையே அவளை நிறுத்தியிருந்தான் கள்வன்.

“மது… என்ன பண்றீங்க? இதுக்கு நேரா தான் அந்தப் பக்கம் சுலோ உக்காந்துருக்கா. நான் பேசிட்டு இருக்கிறது கூட அப்படியே அவளுக்குக் கேக்கும்” என்று அவள் முறையிடவும்

அதிலிருந்த நியாயத்தை உணர்ந்தவன் “ஓ! ஸாரி” என்றபடி அவளைக் கட்டிலுக்கும் அலமாரிக்கும் இருந்த இடைவெளியில், வடதிசை நோக்கி நிறுத்தி வைத்தான்.

இப்போதும் அவளின் விரல்களை மட்டுமே அவன் தீண்டியிருந்தான்; மற்றொரு கரத்தை அவளது தலைக்கு மேலே சட்டமாக நிலைநாட்டி, அவளுடைய சரீரத்தைவிட்டு போதிய தொலைவு தள்ளியிருந்தான்.

“இங்க என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியல” பெண்ணவள் தவிப்பாக உணர்ந்தாள்.

“புரிய வைக்கிறேன். இதுவரை நேருக்கு நேரா சொல்லலைல்ல. முறைப்படி அதைச் சொல்லணும்ல?”

“என்னன்னு?”

“ஐ லவ் யூ!” அவனது முகம் வெட்கத்தில் இளகி, பாகாகக் கரைந்தது. 

அதையே கண்ணாடி போல அவளும் பிரதிபலித்தாள். அதே வேளை, பேச்சில் மெழுகள்ளிப் பூசி தன் மனப் போராட்டத்தை மறைக்கவும் செய்தாள் “ம்ச்ச். இப்போ இது ரொம்ப முக்கியம்! சாப்பிட வாங்க” 

“ஹே! நில்லு. ஒருத்தன் இங்க எவ்ளோ ஃபீலிங்க்ஸோட காதலைச் சொல்லிட்டு இருக்கேன். கொஞ்சமாச்சும் மதிக்கிறியா?”

அவள் துணிவைக் கூட்டி, ஒருமுறை அவனைக் கீழிருந்து மேலாக விழிப் பாவையால் அளந்தாள்‌.

அது போன்றதொரு நிலையில் அவன் வாயிலிருந்து செந்தமிழ் ஊற்றெடுக்காமல் போனால், அவன் நம் மதுவல்லனே. அவனுடைய அதரங்களிலிருந்து வடிந்த தமிழ்த்தேனில் புதிதாய் ஒன்றுமில்லை; நாம் ஏற்கனவே கேட்டறிந்த பொய்யில் புலவரின் குறள் தான் “நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்…” என்று அவன் துவங்க

“தாக்கணங்கு தானைக் கொண்டன்னதுடைத்து; அதானே?” அவள் அழுத்தந்திருத்தமாக முடித்து வைத்தாள்.

“ஞாபகம் வச்சுருக்க போலவே. கேடி!”

“ஆமா, இதுக்கென்ன அர்த்தம்?”

“நிஜமாவே தெரியாதா? நீ என்னைப் பாக்குறன்னு நானும் பாக்குறேன். அப்போ நீ ஒரு எதிர்பார்வை பாக்குற பாரு! அந்தப் பார்வை எப்படி இருக்குன்னா; அதிக சக்தி படைச்ச ஒரு போர் தெய்வம், ஒரு படையவே துணைக்குக் கூட்டிட்டு வந்து அடிச்சுத் துவம்சம் பண்ணுற மாதிரி இருக்கு”

“ஓ! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?” அவள் கன்னத்தில் விரல் வைத்து அதிசயித்தாள்.

“நீ ஒவ்வொரு முறையும் என்னை அப்படித் தான் பாக்குற. இப்போ, இப்போ கூட அதே பார்வை தான். இதயத்தை அடிச்சுத் துவைச்சுக் காயப் போட்டுடுது”

“அழகா இருந்தீங்க. பாத்தேன். அது ஒரு குத்தமா?” அவள் இளநகையோடு நவின்றாள்.

“இஸ் இட்?” அவனின் முகத்தில் மல்லிகைப் பந்தல் போல புன்னகை பூத்துக் குலுங்கியது.

“ஆமா. அதுவும் வேட்டி, சட்டைல… ம்ம்ம்!” அவள் பெருமிதத்துடனும் அபிநயத்துடனும் அவனது வசீகரத்தைப் பறைசாற்றினாள்.

“நீயும் பேரழகி தான்!” 

“நான் சொன்னேங்கறதுக்காக நீங்க திருப்பிச் சொல்ல வேணாம். எனக்கே என்னைப் பத்தி தெரியும்” என்றவள் அகல முனைய

அதற்கு அவன் இடம் தரவில்லை “மாது, நீ அழகில்லனு யார் சொன்னது? உங்க அப்பா அடிக்கடி உன் பேரை வச்சு, மாதுளம்பழம் ஜோக் அடிக்கிறாரே. அதனால அப்படி ஒரு நினைப்பு உன் மனசுல வந்துடுச்சா? இல்லை, ஏன்னு எனக்கு நிஜமாவே புரியல”

“கலரை விடுங்க. அது அவ்ளோ முக்கியம் இல்ல‌‌. உங்க ஸ்கின் பாருங்க; எவ்ளோ ஸ்மூத்தா இருக்கு! இதுவே என் முகத்தைப் பாருங்க; குண்டும் குழியுமா கிடக்கு” அவள் அங்ஙனம் புகன்றுவிட்டுச் சிரித்தாள்.

“நான் எனக்கு வரப் போற எதிர்கால துணைவிக்காகக் கஷ்டப்பட்டு, என் மேனியைப் பராமரிச்சு வச்சிருக்கேன். நீயும் எலுமிச்சம் பழச்சாறை எடுத்து மூஞ்சுலத் தேச்சிக்கோ. என்னை மாதிரியே பாலிஷ் ஆயிடுவ”

“அச்சோ! எரியாதா?” அவளின் விழிகள் அதிர்ச்சியில் தெறித்தன.

“எரிஞ்சுது தான். அழகுக்குனு ஒரு விலை இருக்கு. அதைக் கொடுத்தாகணுமே”

“நம்மளால அதெல்லாம் தாங்கிக்க முடியாது. அதுக்கு நான் இப்படியே இருந்துட்டுப் போயிடுவேன்”

“இதுவும் ஒரு வகையில நல்லது தான்‌”

அவன் எந்த விதத்தில் அவளின் மாசு, மருக்களுக்குப் பச்சைக் கொடி காட்டுகிறான் என்பது அவளுக்குப் பிடிபடவில்லை‌. அவள் சிந்தனைக்காட்பட்ட பொழுதில், அவனது தேகம் ஒரு விரற்கட்டை அளவு அவளின் அண்மைக்கு நகர்ந்திருந்தது.

சுவற்றைத் தாங்கிப் பிடித்திருந்த விரல்களில் ஒன்று அவளின் முக வடிவத்தைக் காற்றிலேயே ஓவியம் தீட்டியது “இந்தப் பருக்கள என் முத்தத்தாலயே கரைக்கணும். இந்தப் பள்ளங்கள முத்தம் வச்சு, முத்தம் வச்சே நிரப்பணும். இந்தக் கரும்புள்ளிய முத்த ஈரத்துலயே அழிக்கணும். ம்ம்”

அவன் காதல் இரசம் சொட்ட சொட்ட அவ்விதம் மொழிந்ததில், பாவையின் நெஞ்சில் நில நடுக்கமே மூண்டது. அச்சத்தோடும் படபடப்போடும் அவள் எச்சில் விழுங்க, வழுவழுவென்றிருந்த தொண்டைக் குழி மித வேகத்தில் ஏறி இறங்கிற்று.

“இது எல்லாமே உன் விருப்பத்தோட நடக்கணும். அதுவரை…” என்றதோடு அவன் விலகவும் தான், இத்தனை நாழியாக நுரையீரலுக்குள் அடக்கி வைத்திருந்த மூச்சையே அவளால் வெளிவிட இயன்றது. 

***

வார இறுதி நாளில் மதுவும் மாதுவும் தம்பதியர் சகிதமாய் மதிவாணன் மற்றும் முல்லையின் அகத்திற்குச் சென்றிருந்தனர். அவர்கள் வாயிலை அடைந்தபோது, பக்கத்து வீட்டு மாடியிலிருந்து வாசு படியிறங்கினார். மாதுவைக் கண்டு அவர் மென்முறுவல் சிந்த, அவள் பல் தெரிய சிரித்து வைத்தாள். மதிவாணனின் இல்லத்தை ஒட்டினாற்போல அமைந்திருந்த அவ்வீடு வாசுவினுடையது என அவளுக்குத் தானாகவே புலப்பட்டது.

அதே நேரம் “வாங்க! வாங்க!” என்று மதிவாணன் வரவேற்க, அவளும் மதுவும் மகிழ்வுடன் உள்நுழைந்தனர்.

“முல்லை, தண்ணி எடுத்துட்டு வா” என்று அவர் கூக்குரலிட, இவளும் மகன்களும் வெளியே வந்தனர்.

“மாமா!” என்று இளையவன் பாய்ந்து வந்து மதுவைக் கட்டிக் கொள்ள, மூத்தவன் சற்று தள்ளியே நின்றான்.

“டேய், பெரியவனே! ஸ்கூல்லாம் எப்படிப் போகுது?” என்று கேட்டு மருமக்கள் இருவரையும் தன்னோடு அமர்த்தி வைத்தான் மது.

தமையனையும் அண்ணியையும் நலம் விசாரித்த கையோடு முல்லை சமையலறைக்குத் திரும்ப, மாதுவும் உடன் சென்றாள்.

“முல்லை, இதுல பசங்களுக்கு ஸ்நாக்ஸும் ஃப்ரூட்ஸும் இருக்கு. இது நான் உங்களுக்காக வாங்குன ஆரி செட்” என்றவாறு இரு பைகளை நீட்டினாள் அவள்.

ஆரி வேலைப்பாட்டிற்குத் தேவையான பொருட்கள் அடங்கிய அந்தப் பெட்டியை முல்லை ஆவலுடன் திறந்து நோக்கினாள் “நல்லாருக்கு. எங்க வாங்குன, மாது?”

“ஆன்லைன்ல ஆர்டர் போட்டேன். உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமேன்னு வாங்குனேன்” என மேலும் சில நிமிடங்கள் பேசியிருந்துவிட்டு, அவள் சமையலறை நீங்கினாள். மீண்டும் வரவேற்பறைக்கு வந்தடைந்தவள் “பின்னாடியும் இடம் இருக்கா?” என்றாள் கண்களால் உலா சென்று.

“ஆமாம்மா. போய்ப் பாரு. மது, வீட்டைச் சுத்திக் காட்டிக் கூட்டிட்டு வா” என்றார் மதி.

அதற்கிணங்கி மது அவளைப் பின்கட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த வீடு உள்ளேயும் புறத்தேயும் மிகவும் விசாலமாக இருந்தது; பின்புறம் தோட்டம் உருவாக்கப்பட்டு மரங்களும், செடிகளும், கொடிகளுமாகப் பசுமையாகக் காட்சியளித்தது‌.

“நல்ல பிளானிங்கோட இடம்விட்டுக் கட்டிருக்காங்கல்ல” அவள் ஆச்சரியம் மேவிட செப்பினாள்.

“ஆமா. முல்லையோட கல்யாணத்துக்குப் பிற்பாடு கட்டுன வீடு இது. இந்தத் தென்னைலாம் நாங்க குடும்பமா சேந்து, ஆளுக்கொன்னு நட்டு வச்சோம். இப்போ நெடுநெடுன்னு வளந்து நிக்குது” அவன் அண்ணாந்து நோக்கியபடி கடந்த காலத்தை அசைபோட்டான்.

“இங்க நல்லாருக்குங்க. வெயில் காலத்துல இப்படி மரத்தடில வந்து உக்காந்துட்டா வெக்கையே தெரியாது; குளுகுளுனு இருக்கும்” என்றபடி பரவசப்பட்டவளின் விழிகளில் தரையோடு படர்ந்திருந்த சின்னஞ்சிறு பட்டு ரோஜாக்கள் அகப்பட்டன. “ஹை, பட்ரோஜா! இதலாம் கண்ணுல பாத்தே பல வருஷம் ஆகுது. கலர் கலரா கலக்கலா இருக்கே” என உற்சாகத்தில் மிதந்தவள் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்து, அவற்றை அருகாமையில் இரசித்தாள். 

சந்தேகத்திற்கு இடமேயின்றி அவற்றுள் அதிகம் பிரகாசித்த சிவப்புநிற மலரை அவள் கொய்யப் போன வேளை “மாது!” என்ற முல்லையின் அழைப்புக் குரல் கேட்கலானது. 

“நீ இரு. நான் போய்ப் பாத்துட்டு வரேன்” என்ற மது வீட்டிற்குள் விரைந்தான்.

தங்கை தந்தனுப்பிய பழச்சாறு கோப்பைகளோடு அவன் வந்து பார்க்கையில், மாது அங்கிருந்த கோழிக் கூண்டருகே தென்பட்டாள்.

அவள் திடுதிப்பென்று கோழிகளை விரட்டும் நோக்கத்தோடு கழி ஒன்றைத் தேட, அவன் அவசரமாக அவளை அணுகினான் “மாது… என்ன செய்யப் போற?”

“மது, அந்தக் கோழி இருந்துட்டு இந்தக் கோழிய அட்டாக் பண்ணுதுங்க. பாவம் இது; வலில காச்மூச்சுனு கத்துது” அவள் பள்ளிச் சிறுமி கணக்காக, தான் கண்ட காட்சியைத் தவறாகக் கற்பிதம் செய்து கொண்டு அரற்றினாள்.

அவளின் அகமுடையான் சூழ்நிலை புரிந்து தெளிவோடு விளம்பினான் “அது கோழி இல்ல, மாது; சேவல்”

“அது என்னவா வேணா இருக்கட்டும். நான் அதைத் துரத்திவிட்டு வரேன்‌. பொறுங்க”

“அப்படிலாம் பண்ணக் கூடாது. கொஞ்சம் நிதானமா யோசிமா”

“இதுல யோசிக்க என்ன இருக்கு? இப்படியே விட்டா, இந்தக் கோழிக்கு அடிபட்டுரும்ங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. அந்தச் சேவல் பண்ண அராஜகத்த நீங்க கண்ணால பாக்கலையே!”

ஆடவனுக்கோ நிலைக்கதவில் போய் முட்டிக் கொள்ளலாம் என்கிற நிலைமை “ம்ச்ச். உனக்குத் தான் ஒன்னும் தெரியல. அதுங்க சண்டைலாம் போட்டுக்கல”

“பின்ன, விளையாடுதுங்களா? கோழியோட உச்சிலயே அந்தச் சேவல் அலகை வச்சுக் கொத்துதுங்க. ரொம்ப ஆக்ரோஷமா நடந்துக்குது” அவளின் பார்வைக் கோணம் மாறுகிற வழியையே காணோம்!

“அடியே, அதுங்க இணை சேருது” அவன் இறங்கிய குரலில் பட்டெனப் போட்டுடைத்தான்.

அவளிதழ்கள் தன்னிச்சையாக அசைந்தன “இணை சேர்றதா?” 

“எல்லாத்தையும் விளக்கிட்டுருக்க முடியாது, மாது. அது தான் இயற்கை” அவன் பல்லைக் கடித்துக் கொண்டு ஓதினான்.

“ஸ்ஸ்ஸ். புரிஞ்சுருச்சு. எக்ஸ்ப்ளய்ன் பண்ண வேணாம், ப்ளீஸ்” அவளைப் பதற்றம் கட்டியணைத்த அக்கணம், கோழியின் விசித்திர ஓசையெழுப்பலும் சேவலின் இறக்கைப் படபடத்தலும் பின்னணியில் தொடர்ந்தபடி இருந்தது. 

அவற்றையும் மதுவையும் மாற்றி மாற்றி கண்ணுற்றவள், மறுமொழி ஏதுமின்றி உட்புறம் ஓடிவிட்டாள்.

“இந்தா, இந்த ஜூஸப் பிடி” என்றவன் அவளுக்கு எதிர் இருக்கையில் அரசத் தோரணையில் அமர்ந்தான்.

“மாடில லவ் பேர்ட்ஸ் இருக்கு; பாக்குறியாமா?” என்று அக்கறையுடன் வினவினார் மதி.

‘பாத்த வரைக்குமே போதும் போதும்னு ஆயிடுச்சு!’ என உள்ளுக்குள் நொந்தவள் “அப்பறம் பாத்துக்குறேன், ணா” என்றாள் பணிவுடன்.

“அரசாங்க உத்தியோகத்துக்கு முயற்சி பண்ணலாம்ல, மாது? நீ அதுக்கு எலிஜிபிளா?”

“ஆன், ணா. நெட் எழுதி நல்ல பெர்சென்டேஜ் வச்சிருக்கேன். இந்த டௌனுக்குள்ள அசிஸ்டன்ட் ப்ரொஃபெஸர் ஆகுறதுக்கான வாய்ப்பு ஒன்னும் அமைய மாட்டேங்குது. குடும்பத்தை விட்டுட்டு என்னால தூரமாவும் போக முடியாது. நோட்டிஃபிகேஷன் எதுவும் வந்தா சொல்லுங்கணா. எனக்கும் அந்தக் கனவு இருக்கு”

“வெரி குட்! உன் கனவை விட்ராத. நான் எனக்குத் தெரிஞ்சவங்கள்ட்ட சொல்லி வைக்கிறேன்”

“தேங்க்ஸ், அண்ணா” அவள் பாந்தமாய்ப் புன்னகைத்தாள்.

அடுத்ததாக முல்லை உணவு பரிமாற, மதியைத் தவிர்த்து மற்ற அனைவரும் கறி விருந்துண்டனர்.

இப்போது முல்லையும் வரவேற்பறையில் வந்தமர, மதி இலகுவாக விசாரித்தார் “அப்பறம்… வீட்டோட கட்டுமான வேலைய எப்போ ஆரம்பிக்கப் போறீங்க?”

“வீடா? நாங்களா?” மாது வெளிப்படையாக வியந்தாள்.

“ஆமாம்மா. மது இன்னும் சொல்லலையா? கல்யாணம் முடிஞ்ச பிறகு அந்த வேலையத் தொடங்குறதா சொல்லிட்டு இருந்தான். கடைசி வரை அந்தப் பழைய வீட்டுலயே குடித்தனம் நடத்துறதா ஐடியாவா? முதல்ல, அங்க உனக்கு வசதியா இருக்கா?”

“அந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்! போதும்னு நினைச்சா அதுவே தாராளம், அண்ணா” என்றுரைத்து அவள் தன் கணவனை ஏறிட, சுந்தரனின் இதழோரம் புன்முறுவல் நெகிழ்ந்தது‌.

அதைத் தொடர்ந்து அவனது அலைபேசி அழைக்க, அதற்குப் பதில் பகர்ந்தவாறு அவன் வெளியேறினான்.

உடனே மதி முதுகை வளைத்து மாதுவிடம் இரகசியம் போல கூறலானார் “மாது, நான் ஒன்னு சொன்னா கேட்டுப்பியா? மது நம்ம குடும்பத்துக்காக நிறைய உழைச்சுட்டான்; எங்க மாமா இருந்து செஞ்சிருக்க வேண்டியது அத்தனையும், அவரை விட அஞ்சு படி அதிகமாவே செஞ்சிட்டான்‌. தங்கச்சிங்களுக்காக அவன் உழைக்காத நாளே இல்ல. வாழ்க்கையில அவனுக்குன்னு தேடிக்கிட்ட ஒரே ஒரு சந்தோஷம் நீ தான்‌‌. அவன் உன்னை நல்லா பாத்துப்பான்னு தெரியும்…”

மது தன் மச்சினன் என்பதாலேயே அவர் இந்தளவு ஆதரவு தெரிவிக்கிறார் என்று அவளுக்கு நினைக்கத் தோன்றியது. அவர் அவ்விதம் பறைந்ததிற்கான பின்புல ஆதாரத்தை அவள் துளியேனும் அறிய முற்படவில்லை.

“நீயும் அவனை நல்லா பாத்துக்கணும்; யூஸுவல் மனைவிமார் மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்குலாம் சண்டை பிடிக்காம, அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகணும். இதுவும் உங்க நல்லதுக்காகத் தான் சொல்றேன். புரியுதில்ல?” அவர் தன் உள்ளங்கையில் விரல்களை உராய்ந்த வண்ணம் தீவிரமாக எடுத்துரைத்தார்.

“கண்டிப்பா, ணா” அவள் முழுமனதாகச் சம்மதம் தெரிவித்தபோது மது திரும்பி வந்திருந்தான்.

சிறிது நேரம் கூடி உரையாடிய பின்னர், அவர்கள் அங்கிருந்து விடைபெற்றனர். மது விடுதியில் பணி புரியும் தீபக் கௌரா, அங்கு வந்து ஏதோ தனிப்பட்ட வேலைக்காக மதுவின் இருசக்கர வாகனத்தைக் கொண்டு போனான். எனவே, அவனும் மனையாளும் பொடி நடையாக வீட்டிற்குச் செல்லலாயினர்.

“கொஞ்ச நேரத்துல என்ன வேலை பாக்க இருந்த? அந்தக் கோழி கடுப்பாகி சாபம் விட்டுருந்தா என்னாகுறது? உன்னலாம் வச்சுட்டு, ஹையோ!” அவன் அவளைப் பகடி செய்து அம்சமாக நகைத்தான்.

“எல்லாம் எனக்குத் தெரியும். அதுங்க ஜோடி சேரும். அப்பறம் முட்டை வரும். அதுலருந்து குஞ்சு பொரிக்கும். அதான? அதான?”

“ச்சோ… மாது, உனக்கு அது பத்தி தெரியலைங்குறத மறுபடி மறுபடி நிரூபிச்சிட்டே இருக்காத” அவன் நெற்றியில் தட்டிக் கொண்ட விதம் பெண்ணவளைச் சீற்றத்திற்கு உள்ளாக்கியது.

அவர்கள் ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக் கொண்டு நடை பயின்ற அப்பாதையிலிருந்து, ஏழு தெருக்கள் தள்ளி வடகிழக்கில் இருந்த சிறிய வீட்டினில்..‌.

இராமசாமி வெள்ளைச் சொக்காயை உடுத்திக் கொண்டு, தனது வேட்டியைச் சரிசெய்து இரண்டே எட்டுக்களில் அடுப்படியை நெருங்கினார்; சட்டியைக் கிளறி அதிலிருந்த உணவுப் பண்டத்தை வேறு கிண்ணத்தில் ஊற்றி மூடினார். அதற்கொரு மஞ்சள் பையை அவர் துழாவ, அந்தத் தேடுதலின் விளைவாக இன்ன பிற பாத்திரங்கள் கீழே விழுந்து உருண்டன.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அர்ச்சனா தேவி, அத்தகைய கடமுட சத்தத்தில் சட்டெனக் கண் விழித்தார் “யோவ், எங்கயா கிளம்பிட்டுருக்க?”

“மாது போன வாரம் ஆசைப்பட்டு நண்டு இரசம் கேட்டுச்சுல்ல. நான் நேருல பாத்துக் கொடுத்துட்டு வந்துட்றேன்”

“மாரிய அனுப்பிக் கொடுக்கச் சொல்லிக்கலாம். நீ எங்கயும் போக வேணாம். சும்மா கிட!” அவர் தன் நீண்ட கூந்தலைக் கொண்டை முடிந்தபடி கூறினார்.

“என் பொண்ணோட விருப்பத்தை நிறைவேத்துறத விட வேற எனக்கு என்ன வேலை, சொல்லு? அதைச் செய்ய விடாம தடுக்கிறியே… நீயெல்லாம் தாயா? நாய்டி. நீ ஒரு நாய். உன் குடும்பமே ஒரு நாய்க் குடும்பம்” அவரின் அநாகரிகச் சொல்லாடல் அவர் போதையின் பிடியில் இருப்பதை வெளிச்சமிட்டது‌.

“உன்னைக் கொடுக்க வேணாம்னு சொல்லல. இந்த நிலைமைல அங்கப் போய் உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காதன்னு தான் சொல்றேன். அவளே இப்போ தான் பழசலாம் மறந்துட்டு, உன்ட்ட முகங்கொடுத்துப் பேச ஆரம்பிச்சிருக்கா. அதுக்குள்ள அடுத்த எழவக் கூட்டாதயா” அவர் பதவிசாகத் தான் அறிவுறுத்தினார்.

குடி எனும் அரக்கனின் ஆளுமையில் இருந்தவரோ ஆத்திரம் மூளைக்கேறி, கையிலிருந்த கிண்ணத்தை ஓங்கி அடித்தார்‌. அர்ச்சனா தன் முகத்தை மூட முயன்றும் அக்கிண்ணம் சுவற்றில் மோதித் திறந்து, அதிலிருந்த சூடான இரசம் அவரின் இடக்கண்ணில் சிதறி விழுந்தது.

“உன் வேலை என்னமோ அதைப் பாருடி, ***” அவர் வசைபாட ஆரம்பித்த விதத்தில் கூளங்கள் பலவும் தோற்று வீழ்ந்தன.

அவரின் கூச்சல் கேட்டு தெருவில் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாரி வீட்டினுள் ஓடி வந்தான். அன்னை கண் கலங்குவதைக் கண்டவன் தானும் கலக்கமடைந்தான் “அம்மா, என்னாச்சுமா? அம்மா!”

“எனக்கு ஒன்னுமில்ல. அந்தாள வெளிய விடாத, மாரி. உங்க அக்கா வாழ்க்கையச் சந்தி சிரிக்க வச்சிடுவான் இவன். கதவை இழுத்துச் சாத்துடா” எரிச்சலுக்குள்ளான விழியை ஒருபுறம் துடைத்தவாறே அர்ச்சனா மகனை ஏவினார்.

மாரி வேகத்தோடு வீட்டு முன்கதவை அழுத்தித் தாழிட்டான். மூர்க்கமான இராமசாமியோ ஆங்காரத்தோடு இளையவனை இழுத்துத் தரையில் தள்ள “ஐயோ, என் புள்ள!” என்று அலறினார் தாயார்.

மூடியிருந்த அவ்வீடு ஒப்பாரி மற்றும் ஓலங்களினால் நிறையத் துவங்கியது. 

***

You may also like

2 comments

Sivakami February 22, 2026 - 3:23 pm

என்ன ஜென்மமோ..

Reply
Ezhilmathi GS February 22, 2026 - 6:34 pm

திருந்தாத ஜென்மம் சகி 🤦🏻‍♂️

Reply

Leave a Comment

About Me

Featured