மறுதினம் மாலை…

சுலோச்சனாவும் மாதுளையும் மிஸ்டிக் மது விடுதியின் இரண்டாவது மாடியில் காத்திருக்க, மதுசூதனன் அங்கே வந்தான்.

“ஹேப்பி பர்த்டே, அண்ணா!” இளையவள் அவனை மேம்போக்காக அணைத்து, கன்னத்தில் முத்தம் வைத்தாள்‌.

அவள் சிறுமியாக இருந்தபோது அக்கம் பக்கத்தினர் யாரோ பகிர்ந்த திட்டத்தின்படி, ஒரு பிறந்த தினத்தில் பரிசுக்குப் பதிலாக அவனுக்கு முத்தமிட்டாள்‌. அன்றிலிருந்து இன்று வரை தங்கை‌க்காரி தொடர்ந்து அளிக்கும் விலை மதிப்பில்லா பரிசுப்பொருள் அந்த முத்தம் தான். தந்தையைப் பார்த்து வளர்ந்திராத தங்கைக்குத் தமையனே தந்தை ஆகிறான். தந்தையாகப் பொறுப்பெடுத்த தமையனுக்குத் தங்கையே முதல் குழந்தை ஆகிறாள். எனில், அம்முத்தம் தந்தை மற்றும் மகளுக்கிடையே பரிமாறப்படும் நேச ஊற்றிற்கான முத்திரை.

“நீயும் அண்ணியும் ஹேப்பியா இருக்கணும்” சுலோ இதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்தினாள்.

அந்நொடியின் மகிழ்ச்சியை மீறி, அவளை வருத்திக் கொண்டிருக்கும் காயத்தின் தடம் கண்ணீர்க் கோடாய் வெளிப்பட்டது‌. அக்காயம் ஆற வேண்டும், அவளின் எதிர்காலம் ஒளிர வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு அவளது முன்நெற்றியை வருடிக் கொடுத்தான் அவன்.

அருகிலிருந்த மாது “ஹேப்பி பர்த்டேங்க. காஸ்ட்லியா எதுவும் கிஃப்ட் பண்ண முடியல” என்றுரைத்து, தயக்கத்துடனே ஒரு பெட்டகத்தை அவனிடம் நீட்டினாள்.

அவன் திறந்து நோக்க, அதில் ஒரு கைக்கடிகாரம் இருந்தது. அதன் மதிப்பு இரண்டாயிரத்திற்குக் கூடுதலாக இருக்கலாம்.

அவனது அனுதின அணிகலன்களில் கைக்கடிகாரம் மட்டும் அவளுக்குக் குறையாகத் தோன்றியது. ஏற்கனவே அவன் வசமிருக்கும் கடிகாரத்தை விட, அவனுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றை வாங்கி வந்திருந்தாள் “போட்டுப் பாருங்க”

அந்தப் பெருந்தேடலின் பயனைக் கரத்தில் வைத்துக் கொண்டு, அவன் அவளை ஒருவிதமாகப் பார்த்தான்.

அவர்களுக்குத் தனிமையை வழங்கி “நான் வெளிய இருக்கேன். பேசிட்டு வாங்க” என்றதோடு சுலோ நழுவினாள்.

“பொருளை வாங்கிக் கொடுத்துட்டா மட்டும் போதுமா? இதைக் கட்டிவிட தனியா ஆள் பாக்கணுமா?” என்றான் அவன் சீண்டலாய்.

அவள் அவனைக் கரம் பிடித்து உப்பரிக்கைக்கு அழைத்துச் சென்றாள். கடிகாரத்தை அணிவித்த பின்னரும் அந்தக் கரத்தை விடுவிக்க அவளுக்குப் பிரியப்படவில்லை போலும். கரத்தோடு கரம் கோர்த்தபடியே சுற்றிலும் நோட்டம் விடுத்தாள். உப்பரிகையின் சுற்றுச் சுவரில் வரிசையாகத் தொட்டிச் செடிகள் அணி வகுத்திருந்தன. அவையனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்தவை.

அதில் அதிசயித்தவள் அவனை உடன் வருவித்தபடி “இதெல்லாம் ரோஸ் செடியா?” என்றாள் விழி விரிய.

“இல்ல, மாங்காச் செடி” நகைச்சுவையாமாம்!

“மது… இதெல்லாம் எனக்காகவா? இதுலருந்து தான் தினமும் ரோஜாப் பூ பறிச்சுட்டு வரீங்களா?” அவளின் இருதயம் துள்ளிக் குதித்தது‌.

“ம்ம்‌. சில நாள் இராத்திரியே பறிச்சு, நம்ம வீட்டு ஃப்ரிட்ஜ்ல வச்சுருவேன்‌. விடிஞ்சதும் கண்ணாடிக்குப் பக்கத்துல வச்சுட்டுக் கடைக்குக் கிளம்புவேன். இல்லைனா, காலையில பறிச்சுட்டு வந்து உன் கையில கொடுத்துடுவேன். தினமும் கடையில வாங்குனா கட்டுப்படியாகுமா? ரோஸ் ரேட்டு இருபது ரூபாய்லருந்து ஐம்பது ரூபாய்க்கு எகிறிடுச்சு”

தான் ஒரு ரோஜாப் பைத்தியம் என்பது அவனுக்கு எப்படித் தெரிந்தது என அவள் தெளிய முனையவில்லை. கண்ணிருந்தும் குருடாக இருந்தாள் “எப்படி இத்தனை செடிய மெயின்டய்ன் பண்றீங்க? கடையவும் கவனிச்சுட்டு, இதையும் பராமரிக்க சிரமமா இருக்காதா?”

“ராகவின்னு ஒரு பொண்ணு; தோட்டக்கலைத் துறையில வேலை பாக்குது. அவங்ககிட்ட சந்தேகம்னா கேட்டுப்பேன். சும்மா சொல்லக் கூடாது; கிளியர் கட்டா தீர்வு சொல்லிடுவாங்க” என்றவன் அந்நங்கையை அடையாளம் காட்டும் எண்ணத்தில் அலைபேசியைத் திரையைத் தேய்த்தான்.

மாதுவிற்கோ அதில் துளி நாட்டமுமில்லை. அலைபேசியைத் உயர்த்திப் பிடித்திருந்த அவனது கரத்தை அமர்த்தியவள், முதலில் கோபமாக அவனைக் கண்ணுற்றாள். காலமுள் நகர நகர, சினம் மட்டுப்பட்டு அலட்சியம் எஞ்சியது.

“நீ கட்டிவிட்ட வாட்ச் உனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கா? இந்தக் கைய விடவே மாட்டேங்குற?” அவன் எள்ளலுடன் இதழ்கள் விரித்தான்.

அவனின் ஆழ்பார்வையோடு தன் கூர்பார்வையை ஒன்றவிட்டு, அவனது புறங்கையில் அதரங்களை ஒற்றியெடுத்தாள் அவள்.

“ஹேய்!” மேனி மயிர்க் கூச்செறிய அவனிடம் ஒரு மெல்லிய அதிர்வு.

“ஸாரி, அந்த மொமென்ட்ல அப்படி நடந்துகிட்டேன்” அவள் பதற்றத்தில் ஈரடிகள் பின்னேறினாள்.

“உன் பர்த்டே எப்போன்னு சொல்லு. உன்னோட இந்த கிஃப்ட்டைத் திருப்பித் தரணும். ஆனா, இப்படியே இல்ல” என்றவனின் விழிகள் அவளின் அதரங்களைக் குறிவைத்துத் தாக்க, பாவையவளால் தாக்குப்பிடிக்க இயலவில்லை.

அவள் அங்கிருந்து தப்பியோட முயல, “ஏ, மாது!” என்று அவன் ஆர்ப்பரித்தான்.

அதே வேளை அனுஷா உப்பரிகைக்கான கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். அவளை சுலோச்சனாவும் இரு தோழிகளும் புடை சூழ்ந்தனர். அவர்களின் கரங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பொருட்கள் இடம்பெற்றிருந்தன.

கடினியைக் கடை பரப்பிய அனுஷா “ரெண்டு பேரும் சேந்து வெட்டுங்க” என்றாள் இன்முகமாய்.

மது தன்னவளின் கரம் பற்றி அதை வெட்ட, வண்ணச் சிதறல்கள் தூறி இருவருக்கும் ஆசி மேவின.

“ஐ விஷ் யூ லக் வித் யுவர் பியூட்டிஃபுல் லைஃப் அஹெட்” அனுஷா மனதாற வாழ்த்து தெரிவிக்க, இவளைக் குறித்த மாதுவின் மனக்கிலேசங்கள் தேய்ந்து மறைந்தன.

***

மாதுளைக்கு மாங்கல்யம் பிரித்து, கோர்த்து அணிவிப்பதற்காகச் சொந்த பந்தங்கள் பலரும் அந்தச் சிறிய வீட்டில் நிரம்பியிருந்தனர்.

“இந்த அப்பா எங்கமா போனாரு?” மாது கண்களால் அலசியவாறே கேட்டாள்.

“தெர்லடி. பிள்ளைங்களுக்கு மிட்டாய் வாங்கித் தரேன்னு போனுச்சு” வரிசை கட்டி நின்ற பல வேலைகளுக்கு மத்தியில், அர்ச்சனா தேவி கணவரைக் கவனிக்கத் தவறியிருந்தார்.

“எல்லா பசங்களும் இங்க இருக்கறப்போ, அவர் யாருக்கு மிட்டாய் வாங்கித் தரப் போயிருக்காரு?” அவளின் ஐயம் தீர்ந்தபாடில்லை.

“இங்கத் தான் எங்கயாவது சுத்திட்டு இருக்கும். வந்துரும். நீ கண்டதையும் யோசிக்காம, சம்பந்திகிட்ட போ” என்று தாயார் ஏவினார்.

மாது மாப்பிள்ளை வீட்டு உறவினர்களுடன் கலந்து உட்கார, அவளின் கழுத்தில் புது பொன்தாலி ஏற்றப்பட்டது. கூடவே ஓரிணை தங்கக் காதணிகளும் ஒரு தங்க ஆரமும் அணிவிக்கப்பட்டன. அவள் ஆச்சரியத்துடன் கணவனை உற்றுநோக்க, அவன் தித்திக்கும் புன்னகையுடன் கட்டிலில் அமர்ந்திருந்தான். தன் உடன்பிறப்புகளுக்கு எதையோ உணர்த்தும் முனைப்பில், அவன் இச்செயலைச் சபையில் ஆற்றியிருக்கிறான். இதற்குப் பின்னிருப்பது தன் மனைவியை யாருமே குறைவாக மதிப்பிடக் கூடாதென்கிற ஆதங்கம்.

மாது மகிழ்ச்சித் திளைப்பினில் நீந்திக் கொண்டிருந்த நேரம், இராமசாமி தடாலடியாக உள்ளே நுழைந்தார். அவருக்கு அர்ச்சனா பார்த்துப் பார்த்து உடுத்தி அனுப்பிய வெள்ளைச் சட்டை, செம்மண்ணும் புழுதியுமாய் அலங்கோலமாகியிருந்தது. அவரது நடையில் ஒரு தள்ளாட்டம்; வார்த்தைகளில் ஒருவகை தடுமாற்றம்; உடலெங்கும் வியர்வை ஊற்று வழிந்தோடியது. மது வாடையும் ஏகத்திற்கு வீசிற்று. அந்நிகழ்விற்கு வருகை தந்திருந்தவர்களை, அவர் வாயாற உறவு பாராட்டினார்; அவர்களை உயர்த்திப் பேசிக் கொண்டாடினார்; வீடு அதிரச் சிரித்தார்.

மற்றவர்களோ அவரிடம் விலக்கம் காட்டினர். சிலர் அருவெறுப்பாய் முகம் சுழித்தனர். பிறந்த வீட்டு உறவுகளிடம் மானம், மரியாதை கெட்டது போதாதென, புகுந்த வீட்டினரிடமும் ஏளனத்தைத் தேடித் தந்துவிட்டார் இராமசாமி. நடந்தேறும் சங்கடத்தினால் மாதுவிற்குக் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. அங்கிருந்தவர்களுக்காக எதிர்வீட்டில் தயாராகிக் கொண்டிருந்த விருந்து, அதன் இறுதித் தருவாயை எட்டியது. அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, அமுதாவும் சேகரும் விருந்தாளிகளைத் தங்கள் இல்லத்திற்கு அப்புறப்படுத்திக் கொண்டு போயினர். இங்கே மிஞ்சியது மாதுவும் அவளின் பெற்றோரும் மட்டுமே.

“நீ தான் காசு கொடுத்து விட்டியா?” தொண்டை கரகரக்க இயலாமையுடன் அன்னையை ஏறிட்டாள் அவள்.

“இல்லையே. நான் கொடுக்கலையே. ஏதுயா உனக்குக் காசு? எதைக் கொண்டு போய் அடமானம் வச்ச? சண்டாளப்பாவி!” இவரிடமும் ஆற்றாமை பொங்கியது.

“ஐயோ! பையன் கையிலருந்த பிரேஸ்லெட்டைக் காணும். அதுக்குள்ள எங்கப் போச்சு? தேடுங்க” என்ற கூக்குரல்கள் வெளியே மூள, வானம் இடிந்து தலை மேல் விழுந்ததைப் போன்றதோர் துன்பக் கடலில் மூழ்கினர் தாயும் மகளும்.

சென்னையிலிருந்து தம் வினைகெட வந்திருந்த சுதா மற்றும் சுரேஷ் தம்பதியரின் புதல்வன் கரத்திலிருந்த தங்க அணிகலனைக் காணோம். சேதியறிந்து உறவினர்கள் பலரும் வீட்டின் உள்ளும் புறமும் அலசி ஆராய்ந்தனர். அத்தேடலுக்குப் பலனேதும் கிட்டாமல் போகவே, விருந்து முடிந்து கிளம்பும் வரை அதைப் பற்றிய சலசலப்பாகவே இருந்தது. அர்ச்சனா தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு, உறவுகளை வழியனுப்புவதில் மும்முரமானார். முத்துமாரி விருந்து பரிமாறியதில் தொடங்கி, தாய்க்குத் துணை புரிவது வரை ஓயாமல் உழைத்தான்‌. மாது மட்டும் தலைவிதியே என ஓர் ஓரமாய் உட்கார்ந்துவிட்டாள். போதையில் ஆட்டமாடி, பாட்டு பாடி, உள்ளே உடுத்தியிருக்கும் பட்டாப்பட்டி வெளியே தெரியுமளவு உறங்கிக் கொண்டிருக்கும் தந்தையைக் காண்கையில் அவளிற்குக் கோபாவேசம் பிரவாகமெடுத்தது.

“மாது, போலாமா?” கணவன் இயல்பாக அழைக்க

“நீங்க போங்க. நான் பொறும்மயா வரேன்” என்றவள் நிலம் நோக்கிய நிலையிலேயே பெருமூச்செறிந்தாள். அவள் பொறுமை எனும் பதத்தை உச்சரித்த விதத்தில், அவளிடம் அது இருப்பில்லை என அவனுக்குத் தெளிவானது.

நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில் வாதம் வேண்டாம் என நினைத்தவன், தங்கை மற்றும் தாயோடு வீட்டிற்குப் புறப்பட்டான். போதை முற்றிலும் வடிந்து, இராமசாமி நிலையாக எழுந்தமர இரவாகிப் போனது.

“ஏன்பா இப்படிப் பண்ண? முதல்ல அம்மாவோட நகையலாம் அடமானம் வச்சுக் குடிச்ச. அதுல ஒரு பொட்டு தங்கத்தைக் கூட நீ மீட்டதா சரித்திரமே இல்ல. பத்தாவது பப்ளிக் எக்ஸாம் அப்போ, நான் படிக்க வச்சிருந்த நோட்ஸை எடைக்குப் போட்டு குடிச்ச. இன்னொரு தடவை தம்பியோட சைக்கிளை வித்துக் குடிச்ச. இப்போ… நீ பண்ணிருக்கிற காரியம் உனக்கே நல்லாருக்கா? நான் எப்படி அவங்க மூஞ்சில மறுபடி முழிப்பேன்? உனக்குப் புள்ளையா பொறந்ததை நினைச்சாலே அசிங்கமா இருக்கு” தந்தையுடனான முறையிடலின் முடிவில், துக்கம் தாளாமல் தேம்பி அழுதாள் மாது.

அவள் எவ்வளவு தான் அழுது புலம்பினாலும் அது திருந்தாத ஜென்மம் எனத் தாயாருக்குத் தெரிந்திருந்தது. குடிப் பழக்கத்தை விட்டு விடும்படி கெஞ்சி, கணவர் காலடியில் அவர் கொட்டாத கண்ணீரா! “அழாதடி. மாப்பிள்ளை ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. அவருக்குத் தான் உங்க அப்பாவைப் பத்தி தெரியுமே. அவரு புத்தி சொல்லித் தான் இத்தனை நாள் குடிக்காம இருந்துச்சு. இன்னைக்குத் திடீர்னு என்ன கேடு வந்துச்சோ?” அர்ச்சனா பரிவாக எடுத்துரைத்தார்.

“என்ன தெரியும் அவருக்கு?”

மகள் நாசியை உறிஞ்சியபடியே வினவ, தான் தவறுதலாக உளறிக் கொட்டியதையே அப்போது தான் உணர்ந்தார் அர்ச்சனா.

“அம்மா, அவரு எப்போ அப்பாவுக்கு அட்வைஸ் பண்ணாருன்னு கேட்டேன்” மகள் மென்மேலும் கேள்வியின் அழுத்தத்தைக் கூட்டினாள்.

அதில் அவர் ஊமையாகிவிட, அவளின் வினவல் தம்பியின் புறம் திரும்பிற்று “மாரி, என்னடா நடந்துச்சு?”

அதன் பின்பே இளையவனின் கை உடைந்த கதையும், தாயாரின் கண் அவிந்த கதையும் வெளிச்சத்திற்கு வந்தன. அச்சம்பவத்தைத் தன்னிடமிருந்து மறைத்த தாயாரை அவள் திட்டித் திட்டி ஓய்ந்தாள். தந்தையாருக்குப் பல படிகள் மேலாக வசை விழுந்தது. அப்படியும் அவளது மனம் நிம்மதியை எட்டவில்லை. அடுத்த நாள் காலையில் புகுந்த வீட்டிற்குத் திரும்பியவள், அத்தையாருக்கு உதவலாம் என்று நினைக்க அப்பொறுப்பை சுலோ ஏற்றிருந்தாள். தனதறைக்கு வந்தவள் கழுத்திலிருந்த ஆரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, வேகமாகக் குளித்துத் தயாராகினாள். மது விடுதியில் சரக்குகளை இறக்கி முடித்து இல்லம் திரும்பிய மது, அவளைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல முற்பட்டான்.

“பஸ் ஸ்டான்டுக்குப் போகணும்” அவன் ஏதோ ஓட்டுநர் போலவும் அவள் பயணி போலவும் அவனிடம் காரணத்தைச் சொல்லாமலே ஏவினாள்.

அவனும் தோண்டித் துருவாமல் அவள் குறிப்பிட்ட விலாசத்தில், தன் வாகனத்தைக் கொண்டு போய் நிறுத்தினான்.

சுற்றி முற்றி எதையோ தேடியவள் “இங்க ஒரு அடகுக் கடை இருக்கணுமே” என்றாள் முணுமுணுப்பாய்.

“அது இந்தத் தெருவுல இல்ல. பத்து, பதினொரு வருஷமா அடுத்த தெருவுல தான் இருக்கு” என்றான் அவன் கரங்களைக் கட்டியபடி.

“ஓ!”

“இத்தனை மணிக்கு எவனும் கடையைத் தொறந்து வைக்க மாட்டான். சாயந்தரம் பாத்துக்கலாம்” என்றவன் அவளுக்கு ஏதோ பணத் தேவை என்றே எண்ணினான்.

அன்றைய மாலை அவனே அவளை அடகுக் கடைக்கு இட்டுச் செல்ல, கடைக்காரர் அத்தம்பதியரை மேலும் கீழும் பார்த்தார். சில நாட்களுக்கு முன்னர், வினோத்தின் புகைப்படத்தோடு மது இவரைச் சந்தித்தான்; இந்தப் புகைப்படத்தில் இருப்பவன் ஏதாவது நகையைக் கொண்டு வந்தால், இரு நாட்கள் கழித்து வருமாறு கூறித் திருப்பியனுப்பும்படி கேட்டுக் கொண்டான். தெருவில் கிடைத்த செயினை அடகு வைக்க இயலாததால் தான் வினோத் அதை சுலோவிற்குப் பரிசளிக்க முயன்று, நற்பெயர் சம்பாதிக்கிறேன் பேர்வழி எனக் கையும் களவுமாகப் பிடிபட்டான். இன்று அதே மதுவின் மனைவியோ சொந்தத் தந்தையின் புகைப்படத்தைக் காண்பித்து, இவர் இந்தப் பக்கம் வந்தாரா என விசாரித்துக் கொண்டிருக்கிறாள். இவர்களுடைய உற்றார் அனைவரும் இதே இரகம் தான் போல என உள்ளுக்குள்ளே நொடித்தார் கடைக்காரர்.

“அப்படி யாரும் வரலைமா. கிளம்புங்க” என்று அவர் கறாராக உரைத்திட, அத்தம்பதியர் அவ்வூரிலே நடத்தப்பட்டு வரும் மற்றொரு அடகுக் கடையை நாடினர்.

இது டாஸ்மாக்கிற்கு அருகிலேயே வாகாக அமைந்திருந்தது. இங்கே தான் அவள் தேடி வந்த கையணி கிடைக்கப் பெற்றது. ஓராயிரத்து தொள்ளாயிரத்து அறுபது ரூபாய் தேவைக்காக, இருபதாயிரம் பெருமானமுள்ள நகையை அடமானம் வைத்திருந்தார் அவளருமை தகப்பனார். அதை மீட்க ஈராயிரம் முதலுடன் நாற்பது ரூபாய் வட்டிக்காசு வேறு; கையில் திரும்பப் பெற ஆயிரத்தெட்டு விசாரணை வேறு. அடுத்த தடவை இராமசாமி என்கிற பெயரில் யாராவது வந்தால் எந்தப் பொருளையும் அடமானமும் பெறக் கூடாது, பணமும் தரக் கூடாது என இரு கடைக்காரர்களையும் அவள் கண்டித்தாள். இருப்பினும், இவ்வூரின் எண்ணற்ற குடிகாரர்களில் இந்தவொரு குடிகாரனை மட்டும் இவர்களால் எங்ஙனம் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும் என்றும் அவளுக்குத் தோன்றாமலில்லை. கையணியை மீட்டதோடு அவ்விருவரும் தாய் மாமனின் பூர்வீக வீட்டினைச் சென்றடைந்தனர். அங்குத் தான் சுதாவும் சுரேஷும் இரு நாட்களாகத் தங்கியிருக்கின்றனர்‌. நாளை சென்னை திரும்புவதற்காக மும்முரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, அவர்களின் வருகை எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

“எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” அந்த அணிகலனை மீண்டும் மகனின் கரத்தில் அணிவித்தபடி சுரேஷ் வினவினான்.

“கொஞ்சம் மெனக்கெட்டுத் தேட வேண்டியிருந்தது” என்றாள் மாது நடந்தவற்றை உள்ளுக்குள்ளேயே புதைத்து.

சற்று நேரம் இவர்களுடன் பேசியிருந்து விட்டு, அவர்கள் தம்முடைய அகத்திற்குப் புறப்பட்டனர்.

“நீ சீரியஸாகுற அளவுக்கு இது ஒரு விஷயமே இல்ல. அதான் பொருள் கிடைச்சுடுச்சுல்ல‌. டென்ஷனை விடு” அவளுக்கு ஆறுதல் அளிக்கவே அவ்விதம் உரைத்தான் மது.

அதே சமயம் மாதுவின் உள்ளம் எரிமலையாய்ப் பொங்கிக் கொண்டிருந்ததை அவன் அறியவில்லை‌. “இது சாதாரண விஷயமே கிடையாது. என்னைக்கா இருந்தாலும் அவங்களுக்கு உண்மை தெரியத் தான் போகுது. என் மானம் கப்பலேறத் தான் போகுது. அப்பாவுக்கு அசட்டுத் தைரியம் கொடுத்து வச்சிருக்கீங்க‌, மது. அவர் தப்பு செஞ்சது தெரிஞ்சும் தட்டிக் கேக்காம இருக்கறது, அவரை ஊக்கப்படுத்துறதுக்குச் சமம். அவருக்கு எங்கருந்து இவ்ளோ துணிச்சல் வந்துதுன்னு தெரியாம நானே முழிச்சிட்டிருக்கேன். அவரு பண்ணது திருட்டு. அதை நியாயப்படுத்தாதீங்க, ப்ளீஸ்! இனிமே எங்க குடும்ப விஷயத்துல நீங்க தலையிடாதீங்க, மது” குடும்பத்தினருடன் சேர்ந்து அவனும் நடந்த உண்மையை மறைத்துவிட்டானே என்கிற ஆதங்கம் அவளை அங்ஙனம் பேச வைத்தது.

அந்த இறுதி வரியில் வெளியான ஒவ்வொரு சொல்லும் தீயின்றியே ஆடவனைச் சுட்டன.

***

மாது நீண்ட நாட்களுக்குத் தனது சம்பளப் பணத்தைத் தொடாமலே வைத்திருந்தாள்; பின்பு வீடு கட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன், அதற்கான திட்டமிடலைத் தொடங்கினாள்; மாதச் சம்பளத்தில் தாயாருக்கு ஐந்தாயிரம், தனக்கு ஐந்தாயிரம் போக மீதியைக் கட்டுமானத்திற்குச் செலவிடுவதாக முடிவெடுத்தாள்; தனக்கான ஒதுக்கீட்டில் ஒரு பகுதியை சிந்தாமணிக்குப் பகிர்ந்தளித்தாள். அவருக்கு அதில் விருப்பமில்லை எனினும் மருமகளின் வற்புறுத்தலின் பேரில் வாங்கிக் கொண்டார். ஒரு நன்னாளில் கட்டுமானப் பணிகளைத் துவக்கி வைப்பதாய் முடிவானது. நடுவில் மதுவிற்கும் மாதுவிற்கும் பேச்சு வார்த்தை குறைந்து போனதால், அவள் அது குறித்த அறிவிப்பைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போனாள். அவளிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போன அர்ச்சனா, நேரடியாக மருமகனுக்கே அழைத்துவிட்டார்.

“ஆன், அத்தை… தெரியும், தெரியும். அம்மா சொல்லிட்டு இருந்தாங்க. நீங்களும் மாமாவும் பாத்துப் பண்ணா சரி தான்.‌ எனக்கு பார் அஸோசியேஷன்ல ஒரு மீட்டிங் இருக்கு. நான் தான் செயலாளர். போய்த் தான் ஆகணும். முன்னாடியே சொல்லலைனா என்ன? இதுவொரு பிரச்சனையே இல்ல. என்னோட ஆசையெல்லாம் பூஜை நல்ல விதமா முடியணும். நான் இன்னொரு நாள் வந்து சைட்டைப் பாக்குறேன். இதுக்காகலாம் வருத்தப்படாதீங்க, அத்தை”

‘எதுவுமே பிரச்சனை இல்ல, இல்லைனு தான் எப்பவுமே சொல்றாரு. இந்த மனுஷனுக்கு எது தான் பிரச்சனையா படுமோ!’ அவர்களின் உரையாடலைச் செவி மடுத்த மாது மனதிற்குள் வெந்து தணிந்தாள்.

அழைப்பைத் துண்டித்த கையோடு “மாது, என்னால ஃபங்க்ஷனுக்கு வர முடியாது” என அவன் முகத்திற்கு நேரே மொழிய, அவள் அமைதியாகத் தலையசைத்தாள்.

மறுநாள் அதிகாலை கணவன் குளிக்கும் சத்தம் கேட்டு அவள் கண்விழித்தாள். அவள் தேநீர் தயாரிக்க வெளியே வர, அத்தையும் நாத்தியும் எங்கோ செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

“இப்போ நாங்க முல்லை வீட்டுக்குப் போறோம்மா. பத்து மணி போல, எல்லாரும் சேந்தே, நீ சொன்ன இடத்துக்கு வந்துட்றோம். வீட்டை நல்லா பூட்டிக்க” என்றுவிட்டு அவரும் சுலோவும் புறப்படலாயினர்.

அடுத்ததாக, மது வெள்ளைச் சட்டையும் வேட்டியுமாக வெளியேறினான். அவள் சமைத்து முடித்து நிதானமாகக் கிளம்பி கணவனுக்கு அழைத்திட, அழைப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை. தாமதிக்காமல் கைப்பையை எடுத்துக் கொண்டு, அவள் மது விடுதிக்கு விரைந்தாள்; முதல் மாடியினுள் முதன்முறையாக அடியெடுத்தும் வைத்தாள். அங்கே பணம் செலுத்துமிடத்தில் நம் கௌரா தென்பட்டான்.

“மது எங்க? காலையில இங்க வந்தாரா, தீபக்?” அவள் சுற்றி வளைக்காமல் நேரடி வினா வீசினாள்.

அந்நேரம் தொலைபேசி ரீங்காரமிட, அவளிடம் பொறுத்திருக்கும்படி சைகை ஆற்றிவிட்டு இவன் அதை ஏற்றான். அவள் சுற்றிலும் ஒருமுறை நோட்டம் விட, அந்த வளாகம் முழுக்க மின்னொளியில் மிளிர்ந்தது. ஆங்காங்கே அமர்ந்து சிலர் மதுவருந்திக் கொண்டிருந்தனர். அவள் எதிர்பார்த்த அளவு அந்த இடம் அவளைப் பாதிக்கவில்லை. பின்புறம் ஒரு மூலையில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டிருப்பதைக் கவனித்தவள், மெல்ல மெல்ல தீபக்கின் புறம் திரும்பினாள். அவனுக்குப் பின்னிருந்த சுவற்றில் வாடிக்கையாளரே அரசன், அரசன் எப்போதும் பேரம் பேச மாட்டார் என்கிற வழக்கு ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தீபக் உரையாடி முடித்துத் தொலைபேசியைக் கீழிறக்க, இக்கணம் அவளுடைய கைப்பேசி சப்தமிட்டது. அங்கிருந்த மேசையில் கைப்பையை இறக்கி வைத்தவள், உள்ளிருந்த கைப்பேசியை எடுத்துச் செவிக்குக் கொடுத்தாள்.

“கடையில என்ன பண்ற?” மறுமுனையில் இருந்த கணவன் ஆழ்ந்த குரலில் வினவினான்.

சட்டெனத் திரும்பி கண்காணிப்புக் கருவியை ஏறிட்டவள் ‘நம்மள லைவா பாத்துட்டுத் தான் இருப்பாரு போல’ என்கிற யோசனையில் கீழுதட்டைக் கடித்தாள்.

“ஹலோ…” அவனிடமிருந்து ஓர் அழுத்தமான அழைப்பு.

“எங்க இருக்கீங்க?”

“சொன்னேன்ல. ஒரு மீட்டிங் இருக்கு. மாவட்டத்துக்குப் போயிட்டு இருக்கேன். வர சாயந்தரம் ஆகிடும்” அவனது பின்னணியில் காற்று அலைபாயும் ஓசை மேலிட்டது.

“சரி. பாத்துப் போயிட்டு வாங்க”

“நீ அத்தைகிட்ட போகல?”

“போகணும்”

“ம்ம்ம்” அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருந்ததால் அவனாலும் அதிகம் பேச இயலவில்லை.

“ம்ம்” என்றவள் அவனாக அழைப்பைத் துண்டிக்கும் வரையில் தொடர்பில் நீடித்தாள்‌.

‘பார் ஓனர்லாம் சேந்து மீட்டிங் நடத்துனா எப்படி இருக்கும்? எல்லாரும் குடிச்சுட்டுக் கூத்தடிப்பாங்களா?’ என்ற அளவில் தான் அவளின் புரிதல் இருந்தது.

“அவர்ட்ட பேசிட்டேன்” அவள் தீபக்கிடம் நிலவரத்தைத் தெரிவிக்க, இவன் வெறுமனே புன்னகைத்தான்.

பின்னர் அவள் கைப்பையை அணிந்து, தங்களின் மனைக்கு நடையைக் கட்டினாள். அங்கே அவளின் பெற்றோரும் தம்பியும் முன்னரே வந்து காத்திருந்தனர். மாது வந்த பிற்பாடு அவளின் புகுந்த வீட்டினர் மகிழுந்தில் வந்திறங்கினர்.

“நீங்களாம் வந்ததுல ரொம்ப சந்தோஷம், தம்பி” அர்ச்சனா மதி மற்றும் ரிஷியின் வருகையால் அகமகிழ்ந்து‌ சொன்னார்.

“நாங்க இத்துணூண்டு இருந்தப்போ, எங்கப்பா எங்களை அர்ச்சனா அத்தை வீட்டுக்குக் கூப்டுப் போனாரு. மதுவையும் எங்களையும் ஒன்னா நிக்க வச்சு ஒன்னு சொன்னாரு. கடைசி காலம் வரை உங்களுக்கு அவன் தான்; அவனுக்கு நீங்க தான்; என்னைக்கும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுத் தரக் கூடாது; நாள பின்ன நான் உயிரோட இல்லைனாலும் நீங்க ஒத்துமையா இருந்தா பிழைச்சுக்கலாம்னு புத்தில ஏறுற மாதிரி பேசுனாரு. அப்போல இருந்து நாங்க இப்படித் தான் இருக்கோம். இனிமே நீங்களும் இந்த விஷயத்தை மனசுல ஏத்திக்கணும். நாமலாம் ஒரே குடும்பம் தான்மா” என்றார் மதி தெள்ளத் தெளிவாய்.

அக்கருத்தை மற்றவர்களுமே இன்முகத்துடன் ஆமோதித்து ஏற்றனர். உற்றார் கூடி நிற்க மனையில் பூமி பூசை செய்விக்கப்பட்டு, அஸ்திவாரம் இடும் பணி ஆரம்பமானது. பல வருடங்களுக்கு முன்னதாக இழுக்கப்பட்ட மின் இணைப்பு, சிறு மேற்கூரையால் பாதுகாக்கப்பட்டிருந்தது. ஆழ்துளைக் கிணறு உருவாக்குமளவு வசதி இல்லாமையால், தண்ணீருக்கு நகராட்சியை நம்பியே செயலில் இறங்கியுள்ளனர். இப்போதைக்கு அடித்தளம் நிரப்புவதற்கு மட்டுமே அவர்களின் சேமிப்பு காணும். குறைந்தது நான்கு பக்கங்களுக்குச் சுவர்கள் எழுப்பி, காற்றோட்டமான சமையலறை மற்றும் இரு படுக்கை அறைகளுடன் தாராளமான குளியலறையைக் கட்டுவதே மாதுவுடைய நோக்கம். அஸ்திவாரப் பணிகள் நிறைவுற்ற பின் மாதாந்திர வருமானத்தைச் சார்ந்தே கட்டிடம் விரிவடையும். கையில் முழுத்தொகை இன்றி கட்டுமானத்தைத் தொடங்கியிருப்பது சவால்களும் சிக்கல்களும் நிறைந்த காரியம் தான். இருந்தும் ஏதோ ஒரு உத்வேகத்தில், நம்பிக்கையில் சொந்த வீட்டுக் கனவை நோக்கிய பயணத்தைத் துவங்கிவிட்டாள் மாது.

பூசை நிறைவேறியதும் அத்தையாரும் நாத்திகளும் ரம்யாவின் வீட்டிற்குச் செல்லலாயினர்‌. மாது தனித்து இல்லம் திரும்பியபடி சாவியைத் துழாவ, அது கைக்குக் கிட்டவில்லை; மாறாக வீட்டு நிலைக்கதவில் தொங்கிக் கொண்டிருந்தது. அக்காட்சியைக் கண்ட நொடியில் அவளுக்கு முகமெங்கும் வியர்த்துக் கொட்ட, கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தாள். பொருட்கள் யாவும் போட்டது போட்டபடி கிடக்க, அறைக்குள் இருந்த நிலைப்பேழை அகலத் திறந்து கிடந்தது. அவள் பதற்றத்தோடு புடவைகளைக் கலைத்து வீச, அதற்கு அடியில் மறைந்திருந்த தங்க ஆரம் எப்படியோ பிழைத்துக் கொண்டது. அவள் உடனடியாக வீட்டினருக்கு அழைத்துத் தகவல் தெரிவித்தாள்.

முதலில் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் பத்திரமாக இருப்பதாகவே சிந்தாமணி வாக்களித்தார். சில மணி நேரங்களில் மது வீடு வந்த பிறகே, நிலைப்பேழைப் பெட்டத்தில் இருந்த அறுபதாயிரத்தைக் காணவில்லை என்பது தெரிய வந்தது. அங்குப் பணம் வைப்பதும் எடுப்பதும் அவன் ஒருவனே என்பதால், அது களவாடப் பட்டிருப்பதையும் அவனால் மட்டுமே உறுதிப்படுத்த இயன்றது. நிலைப்பேழையைப் பூட்டாமல் சென்ற தனது அலட்சியத்தை எண்ணி, ஒருபுறம் மனம் நொந்தாள் மாது.

“இல்ல, ரிஷி‌. போலிஸ்க்குலாம் போகல. யார், என்னனு தெரியாம அவசரப்படவும் முடியாது. என்ன ஒன்னு, இந்த மாசமும் வீடு கட்டுற வேலைய ஆரம்பிக்க முடியாது. சுதாவோட வளைகாப்பு வேற வருதில்ல. சிம்பிளா தான் பண்ணப் போறோம். ஆனா, செலவு இருக்கு. அதுலாம் வேணாம்பா. சம்மர் லீவ் விடப் போறாங்க. ரெண்டு பிள்ளைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும். உனக்கு எதுக்கு வீண் சிரமம்? மதி மாமாவே கொடுக்கிறேன்னு தான் சொன்னாரு. நான் வேணாம்னு மறுத்துட்டேன்” நிலைப்பேழையைச் சுற்றி வலம் வந்தபடி, அவன் அலைபேசியில் அளவளாவினான்.

அங்கிருந்த கட்டிலை நகர்த்திப் போட்டு நிலைப்பேழைக்கு மேலிருந்த பழைய புத்தக மூட்டைக்குள் அவன் கரத்தை நுழைக்க, அதில் பதுக்கி வைத்த பணக் கட்டுகளுக்கு எவ்வித பங்கமும் நேர்ந்திருக்கவில்லை. அவற்றை அலுங்காமல் தன் வசப்படுத்தியவன், கீழிறங்கி அன்னையை அழைத்தான்.

“அம்மா, இதை முல்லைட்ட கொடுத்தனுப்பு. மதி மாமா வீட்டுல இருந்தா பத்திரமா இருக்கும்” என்றதும் சிந்தாமணி அவற்றை முந்தானையில் பெற்று, ஒரு மூடியிட்ட பாத்திரத்தில் அடுக்கலானார்.

வரவேற்பறையில் நின்றிருந்த மூன்று தங்கையரும் மாறி மாறி அந்தத் திருடனைக் கரித்துக் கொட்டினர்.

“அவன்லாம் நல்லாவே இருக்க மாட்டான். அடுத்தவன் காசைத் தொட்ட அந்தக் கை விளங்காம போயிடும். அவனோட குடும்பம் நாசமா போயிடும். அறுபதாயிரத்துக்கு ஆசைப்பட்ட அவனுக்கு இலட்சக் கணக்குல நட்டமாகி, நடுத்தெருவுக்குத் தான் போகப் போறான்” சுலோவின் ஆத்திரம் வார்த்தைகளாக வெளிப்பட்டது.

“எதுக்கு இவ்ளோ கூச்சல்? இங்கப் பெருசா சேஃப்டி இல்லைங்கறது தெரிஞ்ச விஷயம் தான. கையில அதுக்குத் தான் அவ்ளோவா பணம் வச்சிக்கிறது இல்ல. பாரோட லைசென்ஸை ரினியூவ் பண்ணனும். அதுக்குக் கணக்கு பாக்கறதுக்காகக் கொஞ்சமா வீட்டுக்கு எடுத்துட்டு வந்தேன். அதுல தான் சொதப்பிடுச்சு” தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மது நிலைப்படுத்த முனைந்தான்.

“ஆன், தெரியுதில்ல. இங்கப் பாதுகாப்பு இல்லைனு தெரியுதில்ல. நாங்களும் எவ்ளோ நாளா வேற வீடு கட்டுணன்னு சொல்லிட்டுருக்கோம்? கேட்டா தான? நாங்க உதவி செஞ்சா தான் நீ குறைஞ்சு போய்டுவியே!” மிகுந்த வேதனையுடன் குறைபட்டுக் கொண்டாள் ரம்யா.

“உன் புருசன் மதி மாமாட்டயும் சுரேஷ்ட்டயும் பேசிட்டுச் சொல்றேன்னு சொல்லிருக்காரு‌. உங்களுக்குக் கடன் வாங்கியாவது ஒரு வீட்டைக் கட்டணும். அவ்ளோ தான? கட்றேன். ஆளாளுக்கு இதான் சாக்குனு பொரிஞ்சு தள்ளாதீங்க”

“கடனே இல்லாமலாம் யாராலயும் வீடு கட்ட முடியாது. முதல்ல உன் கொள்கைப் பிடிப்புல இருந்து வெளியில வா. நாங்க என்ன எங்களுக்காகவா கேக்குறோம்! அம்மாக்காக, அண்ணிக்காக, நாளைக்கு வரப் போற குட்டிக்காகத் தான இவ்ளோ தூரம் சொல்றோம்” என்று முல்லை நவில, அந்த இக்கட்டிலும் அவனிடம் ஒரு மெல்லிய புன்னகை அரும்பிற்று.

உடனே நினைவு வந்தவனாய் வீட்டினுள் பார்வையை ஓட விட்டவன், “இவ எங்கப் போனா?” என்றவாறு மாதுவைக் காணாமல் திகைத்தான்.

***

You may also like

Leave a Comment

About Me

Featured