அங்கிருந்த யாருமே மாதுளை கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறியதைக் கவனிக்கவில்லை. முழுதும் முற்றாக உள்ளம் கலங்கிய நிலையில் அவள் எங்குச் செல்வாள்; தன் ஆருயிர் அன்னை வீட்டினில் தஞ்சம் புகுந்திருந்தாள். 

நியாய விலைக் கடையிலிருந்து போராடி வாங்கிய கோதுமையைப் புடைத்தபடி அர்ச்சனா தேவி வினவினார் “மாப்ள உன்னை வீட்டை விட்டு போகச் சொன்னாரா?”

“அவரு தனியா வேற சொல்லணுமா? ஒரு ரூபா, ரெண்டு ரூபா இல்லமா. மொத்தமா அறுபதாயிரம். பெரிய தப்பு பண்ணிட்டேன். வீட்டைப் பாத்துக்கோன்னு சொல்லி, ஒரு பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சாங்க. நான் அஸால்ட்டா இருந்துருக்கேன். எனக்கு இப்போ என்ன செய்றதுன்னே தெரியலமா”

“கடவுளே! சோதனைக்கு மேல சோதனையா வருதே” என அவர் வாய்விட்டுப் புலம்ப, தெருவில் ஓர் இருசக்கர வாகனத்தின் ஒலிப்பான் ஓங்கி ஒலித்தது.

“அவரு தான்மா” என்றவள் அன்னையின் மடியிலிருந்து பதறியடித்து எழுந்தமர்ந்தாள்.

“அம்மா, மாமா வந்திருக்காரு” வெளியில் இருந்து பாய்ந்தோடி வந்த முத்துமாரி தமக்கையின் கூற்றை உறுதிப்படுத்தினான்.

“மாது… மாது…” கணவனின் குரல் முழு வீச்சில் ஒலிக்க, அவளின் இதயம் தடதடத்தது.

அவளுக்கு முந்தி அன்னையார் வாயிலுக்கு விரைந்தார் “உள்ள வாங்க, மாப்ள”

“மாது வந்தாளா, அத்தை?” அவன் காரியத்தில் கண்ணாக இருந்தான்.

“இங்கத் தான் இருக்கா” சொல்லும்போதே அவர் எச்சிலைக் கூட்டி விழுங்கினார்.

“மாதுவை வரச் சொல்லுங்க”

அவனது தடாலடியில் அவரே சற்று மிரண்டு தான் போனார் “அவளுக்கு…” 

“எனக்குக் காரணம்லாம் வேணாம். இப்பவே மாது என் கூட வரணும். உங்களுக்கு அவளோட பேசணும்னா, காலையில கூட்டிட்டு வரேன். அப்போ பேசிக்கங்க” அவன் வாகனத்தில் அமர்ந்தபடியே, தன் வாதத்தில் பிடியாக நின்றான்.

“அக்கா, மாமாவை டென்ஷன் படுத்தாம வாக்கா” என்ற மாரி அவளை இழுத்து வந்து வெளியில் தள்ள, குனிந்த தலை நிமிராமல் பின்னிருக்கையில் ஏறிக் கொண்டாள் அவள்.

“மாப்ள, கோவப்படாதீங்க. அவ பொதுவா தப்பு செய்யுற ஆள் கிடையாது‌. ஒருதரம் எடுத்துச் சொன்னாலே புரிஞ்சுப்பா” என்ன தான் அவள் ஆயிரம் குறைகள் கண்டறிந்தாலும் தன்னுடைய ஒரேயொரு செல்வப் புதல்வியாயிற்றே! அவளுக்காக மருமகனிடம் கெஞ்சினார் தந்தையார்.

“நீங்க பயப்படுற மாதிரி எங்களுக்குள்ள எந்த விரோதமும் இல்ல‌. பேசித் தீக்கப் போறேன், மாமா” என்றவன் வாகனத்தை முறுக்க, அது வேகத்தோடு சீறிப் பாய்ந்தது.

அத்தருணம் அவள் நெஞ்சமோ முயல் குட்டியாய் மாறி, ஏதாவதொரு பொந்துக்குள் மறைந்து கொள்ளத் தவித்தது. அவனோ அவளைப் பதுங்கவிடாமல் அறைக்குள் இட்டுச் சென்று, கண்களோடு கண்கள் நோக்கித் தாக்குதல் நடத்தினான்.

“ஸாரிங்க” அவள் இமைகள் படபடக்க, கரங்களைப் பிசைந்தவாறு தயை கோரினாள்.

“என் முகத்தைப் பாத்துப் பேசு” அவன் தன் கரங்களைப் பின்னால் இறுக்கி, உறுதிபட இயம்பினான்.

“மன்னிச்சுருங்க. இப்படி ஒரு திருட்டு நடக்கும்னு நான் எதிர்பாக்கல”

“நீ செஞ்சது தப்பு தான். அதுக்கு நீ ஸாரி கேக்கணும் தான்‌. அதை விட பெரிய தப்பு என்ன தெரியுமா? உங்க வீட்டுல ஓடி ஒளிஞ்சது. நீயா அந்தக் காசைலாம் எடுத்து வச்சுக்கிட்ட?” 

அந்தக் கேள்வியில் திருதிருத்து, அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.‌

“பின்ன? யாரோ ஒருத்தன் திருடுனதுக்கு நீ ஏன் ஓடணும்? எந்தச் சிக்கலா இருந்தாலும் நேருக்கு நேர் ஃபேஸ் பண்ணக் கத்துக்கோ”

பதில் மொழி ஏதுமின்றி மௌனம் காத்தாள் அவள்.

“நீ சந்தோஷமா இருக்கும்போது, எப்போ வேணாலும் அம்மா வீட்டுக்குப் போகலாம். நான் உன்னைத் தடுக்க மாட்டேன். அதுக்கான உரிமையும் எனக்கில்ல. ஆனா, உன் மனசு குழப்பத்துல இருக்கும்போது நீ என்னைத் தான் தேடணும். நான் உன்னைத் தான் தேடுவேன். நமக்குள்ள நடந்திருக்கிற கல்யாணத்துக்கு அர்த்தமே அது தான். எங்க அம்மாகிட்ட அன்னைக்கு என்னமோ சொன்னியே? இது தான் நீ பொறுப்பா நடந்துக்குற இலட்சணமா?” 

அவளும் எத்தனை முறை தான் தயை கோருவாள்! சிறிது நாழியெடுத்து “சாப்டீங்களா? சாப்புட்றீங்களா?” என்றாள் பதவிசாக.

அவன் இசைவு தெரிவித்து கட்டிலில் ஓய்ந்தமர, அவள் தன் உள்ளங்கைகளில் பெருகிய வியர்வையைச் சேலையில் துடைத்தபடி வெளியே வந்தாள். 

“அத்தை…” சமையலறையில் இருந்த சிந்தாமணியைத் தயக்கத்துடனே எதிர்கொண்டாள்.

“விடுமா. காசு தான! ஒரு நாள் வரும். ஒரு நாள் போகும். அதுக்காக நீங்க ரெண்டு பேரும் கடிச்சுக்காதீங்க. எங்கப் போறதா இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போ”

“இனிமேல் இப்படி நடக்காது, அத்தை” என்றவளை சுலோ ஆதரவாக நெருங்கினாள்.

“அண்ணி, அண்ணா கஷ்டப்பட்டு உழைச்ச காசு எங்கயும் போய்டாது. கண்டிப்பா திரும்பக் கிடைச்சுடும். நீங்க தான் இதை எடுத்துச் சொல்லி அண்ணாவ ரிலாக்ஸ் பண்ணணும். நீங்களே பாதில விட்டுட்டுப் போனா எப்படி?” இவள் மென்மையாக வினா எழுப்ப, அவள் சிரித்து மழுப்பினாள்.

ஐம்பது ரூபாய்க்கே தங்கையைக் காய்ச்சி எடுத்தவன், அறுபதாயிரத்திற்கு என்ன செய்வானோ என்கிற இயல்பான அச்சம் அவளுள் மேலோங்கியது‌. அவளின் கணக்குப்படி, அவளுடைய ஒன்றரை மாத உழைப்பை ஒரே நாளில் தொலைத்துவிட்டு நிற்கிறாள். அவனிடம் நிதியுதவி பெறக் கூடாது என்பதில் அத்துணை திண்ணமாக இருந்தாளே! இப்போது அவளால் காணாமல் போன பணத்தை எங்ஙனம் திருப்பிச் செலுத்துவாள்? வீடு கட்டும் பணியை முடுக்கி விட்டிருப்பதால் முன்கூட்டியே நெருக்கடி நிலையில்  இருப்பவளுக்கு, நடந்தேறிய சங்கடத்தால் காய்ச்சலே வந்து விடும்‌‌ போலானது. 

இருவருமாக உண்டு முடித்த பின்னர், அவன் பதமாக விசாரணையை மேற்கொண்டான் “எப்படி இது நடந்துச்சு? உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?”

“நானும் எல்லா கோணத்துலயும் யோசிச்சுப் பாத்துட்டேன். எங்க அப்பா முத கொண்டு… நம்ம குடும்பத்துல எல்லாருமே பூஜை நடந்த இடத்துல தான் இருந்தாங்க. நான் தான் கடைசியா வீட்டைப் பூட்டுனேன்; முதல் ஆளா திரும்பியும் வந்தேன். யாரோ நாம இல்லாத நேரம் பாத்து உள்ள புகுந்து, பணத்தை எடுத்துக்கிட்டு, சாவியைக் கதவுலயே விட்டுட்டுப் போயிருக்காங்க. சாவி கதவுல ஊசலாடிட்டு இருக்குறதைப் பாத்ததும் என் கை, கால்லாம் உதற ஆரம்பிச்சுருச்சு” என்றவளின் உடல் அந்நொடியில் மீண்டும் சிலிர்த்து அடங்கியது‌.

“ஒருவேளை வினோத்தோட வேலையா இருக்குமா?” எனக் கேட்டு நிமிர்ந்தவனின் விழிகளில் அப்படியொரு கூர்மை!

“அந்தப் பையனை நான் நாள் பூரா பாக்கவே இல்லையே. சுலோவும் அவ ஃப்ரென்டும் ஃபோன்ல பேசிட்டு இருந்ததை வச்சுப் பாக்கும்போது, அவன் ஊர்லயே இல்லைன்னு தோனுது”

“ம்ம். நீ காலைல இருந்து எங்கெங்க போன, வந்த?” அவன் அடுத்த கேள்வியை முன்வைத்தான்.

“காலையில உங்க கடைக்குப் போனேன். அங்கருந்து நேரா சைட்டுக்குப் போய்ட்டு, மறுபடி வீட்டுக்கு வந்துட்டேன். நடுவுல வேற எங்கயுமே நிக்கல. கதவைப் பூட்டிட்டு சாவிய ஹேன்ட்பேக்ல தான் வச்சேன். அது எப்படி, யார் கைக்குப் போனுச்சுனே விளங்க மாட்டேங்குது”

“ஹேன்ட்பேகை எங்கெங்கலாம் இறக்கி வச்ச? நல்லா யோசிச்சு பதில் சொல்லு” 

“அதுவும் முன்ன சொன்ன அதே ரெண்டு இடத்துல தான். நீங்க ஃபோன் பண்ணப்போ, பாரோட பில்லிங் கவுன்டர்ல வச்சு எடுத்தேன். அப்பறம் நம்ம மனையில இருந்த மரத்துல கொஞ்ச நேரம் தொங்க விட்டுருந்தேன். அங்கச் சுத்தி நிறைய பேர் இருந்தோம். அப்போ யாரும் பையில கை வச்சுருக்க வாய்ப்பே இல்ல. பார்லயோ, வழியிலயோ தான் சாவி தொலைஞ்சு போயிருக்கணும்” 

அவன் உடனே அலைபேசியை எடுத்து, கண்காணிப்புக் கருவியின் இன்றைய பதிவைப் பரிசோதித்தான். அவன் அவளுக்கு அழைப்பு விடுத்த தருணம் வரை வீட்டுச் சாவியுடன் இணைந்த சங்கிலி, கைப்பையின் பக்கவாட்டில் தான் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அவள் அலைபேசியை ஆராய்ந்து எடுத்தபோது, தீபக் கௌரா மட்டுமே அங்கிருந்திருக்கிறான். அவள் கைப்பையை மறைத்துக் கொண்டு நின்றதால், பின்னால் என்ன நடக்கிறது என்பது பார்வைக்குப் புலப்படவில்லை‌. கௌரா ஒன்றிரண்டு முறை கைப்பையை உற்றுநோக்குவதும், அதனை நோக்கி கரத்தை நீட்டுவதும் காட்சியாகப் பதிவாகியிருந்தது. பின்பு கால்சட்டைப் பையில் கையை நுழைத்தவன், தனது அலைபேசியை எடுத்துப் பார்க்கலாகிறான்.‌ மதுவின் அழைப்பு துண்டிப்பான மறுநிமிடமே மாது அவன் பக்கம் திரும்பி, கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளாள்.

“தீபக் சாவியை எடுத்துருப்பானா? இதுநாள் வரைக்கும் சந்தேகப்பட்ற வகையில எதுவும் நடந்துட்ருக்கானா?” மாது அவனின் குணாதிசயங்களை அறிந்து, தெளிவுபடுத்திக் கொள்ள விழைந்தாள்.

“இப்போலாம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்றனே. ஈவ்னிங் டியூட்டி அவன் தான் இருந்து பாத்துக்கிறான். கல்லால ஒரு பைசா கூட குறைஞ்சதில்ல”

“அப்டீனா அவசரப்பட வேணாங்க. தப்பே செய்யாதவனை நாம விசாரிக்கப் போனா, அந்த ஒரு காரியமே அவனைக் கொல்லாம கொன்னுரும். நிதானமா இருங்க”

“சாவி வெளிய எங்கயாச்சும் விழுந்திருந்தாலும், அதை எடுத்தவனுக்கு நம்ம வீடு தெரிஞ்சுருக்கணுமே. திருடனுக்கு நீ யாருனு தெரிஞ்சிருக்கு; நான் ஊர்ல இல்லைனு தெரிஞ்சிருக்கு. அப்படிப் பாத்தா, நமக்குத் தெரிஞ்ச யாரோ தான் இந்த வேலையைப் பாத்துருக்கணும். அந்தத் திருடன் பார்ல வேலை செய்யுறவங்கள்ல ஒருத்தனா கூட இருக்கலாம்” என்றவன் தானாகவே நித்திரை தழுவும் வரையில் அதே சிந்தனையாக இருந்தான்.

அடுத்த நாள் தீபக் கௌரா பணிக்கு வரவில்லை. முதலாளி விடுத்த அழைப்புகளையும் ஏற்கவில்லை. மனோஜ் வழக்கம் போல கச்சிதமான நேரத்தில் மது விடுதிக்குள் அடியெடுத்து வைக்க, இவன் அவனிடம் விசாரிக்கலானான்.

“மனோஜ்…”

“சொல்லுங்கணா”

“இந்த தீபக் எங்கப் போனான்? உன்கிட்ட லீவ் எதுவும் கேட்டுருந்தானா?”

“இல்லையே, ணா. நேத்திலருந்து ஸ்ட்ரெஸ்லயே சுத்திட்டு இருந்தான். மதியத்தோட ஆள் திடீர்னு காணாமப் போயிட்டான். அப்போல இருந்தே அவன் ஃபோனையும் எடுக்கல. அவனுக்குப் பதிலா பார்ட் டைமர் மணிய நான் வேலைக்குக் கூப்டுக்கிட்டேன்”

“ஓ! சரி, பாரு” இவன் ஆழ்சிந்தையுடன் கையிலிருந்த பேனாவின் பின்முனையை அழுத்தி அழுத்தி விடுவிக்க

“எதுவும் பிரச்சனையாண்ணா?” என்றான் அவன்.

“ஒன்னுமில்ல. கஸ்டமர்ஸைக் கவனி” என்று சொல்லி, தனது மனநிலைக்குத் திரையிட்டான் இவன்.

மாலையில் பணி முடிந்ததும் கணவனைச் சந்திக்கும் பொருட்டு மது விடுதிக்கு வந்திருந்தாள் மாது.

“அந்த தீபக்கை ஆளையே காணும்.‌ அவனைச் சந்தேகப்பட்றதா, வேணாமா? ஒன்னுமே புரியல. ஃபோனைக் கூட எடுக்க மாட்றான்” வருத்தம் மேலிட செப்பினான் மது.

“நாளைக்கு வரைக்கும் பாப்போம். எதாவது எமெர்ஜென்சியா இருக்கலாம். அவனுக்கு உடம்பு முடியாம கூட போயிருக்கலாம். ரெண்டு நாள் ஆனாலும் பரவால்லனு பொறுமையா பாத்துட்டு, விசாரிக்குற வகையில விசாரிச்சுக்கலாம்”

“அவனை இப்பவே தூக்கிட்டு வந்து உண்மையை வர வைக்கணும்னு ஒரு மனசு சொல்லுது. அவன் அந்த மாதிரி ஆளில்லைனு இன்னொரு மனசு சொல்லுது‌. அவன் என் கண்ணுல படாத வரைக்கும் இதே உறுத்தலா இருக்கும் போல. நீ சொல்ற மாதிரி, பொறுமையா இருக்கணும்னு தான் நினைக்குறேன். தாக்குப் பிடிக்க முடியுமானு தெரில”

அவள் சமாதானம் கூறி அவனை அமைதிப்படுத்திவிட்டு அங்கிருந்து அகல முனைய, வியர்வை ஊற்றிலேயே குளித்த நிலையில் தீபக் உள்நுழைந்தான். அவனைப் பின்பற்றி நால்வர் கட்டையும் கம்புமாக ஓடி வர, மது இவர்களிடம் விரைந்தான்.

“ஹலோ, ஹலோ… இங்க என்ன பிரச்சனை? எதுக்கு இவனைத் துரத்துறீங்க? இது தொழில் நடக்குற இடம். இங்க இப்படிலாம் கலாட்டா பண்ணீங்கன்னா, போலிஸைக் கூப்ட வேண்டி வரும். வெளிய போங்க முதல்ல. எதாருந்தாலும் வெளிய வச்சுப் பேசிக்கலாம்” அவன் அவர்களை அக்கணமே வழிமறித்தான்.

“நீ தானா அவனுக்கு வேலை போட்டு கொடுத்தவன்? வா, வா, நீயும் வெளிய வா” என்றவர்கள் தீபக்கையும் அவனையும் ஒருசேர வெளிப்பக்கம் அழைத்துச் சென்றனர்.

இது என்ன புது கலவரம் எனத் திகிலடைந்த மாது, அந்த அறுவரையும் சப்தமின்றி பின்தொடர்ந்தாள்.

“நீ யாருமா?” அவர்கள் வினா தொடுக்கவும்

“நான் அவரோட வொய்ஃப்” என்று விடை பகர்ந்தவள், ஆதரவாக மதுவின் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

அப்போது வீதியைக் கடந்து ஓடி வந்த ஓர் இளம்பெண் “தீபக்…” என்றபடி இவன் மேல் விழுந்து தழுவிக் கொண்டாள்.

இவளை அந்நால்வரும் மிகுந்த பிரயத்தனத்தோடு இவனிடமிருந்து பிரித்தெடுத்தனர்.

“இவன் உயிரோட இருக்கணும்னா, எங்க பொண்ணு இருக்குற பக்கம் தலை வச்சு கூட படுக்கக் கூடாதுனு கண்டிச்சு வைங்க.‌ அதையும் மீறி இவன் காதல், கல்யாணம்னு முயற்சி பண்ணா, நடக்கப் போறதுக்கு நாங்க பொறுப்பில்ல” அவர்கள் குதியாய்க் குதித்தனர்.

“என்னங்க பேசுறீங்க? எதுக்கு இவ்ளோ முரட்டுத்தனமா நடந்துக்குறீங்க?” வன்முறையாளர்களிடம் நியாயம் பேச முயன்றான் மது.

“போயும் போயும் ஒரு குடிகாரனுக்கு என் பொண்ணைக் கட்டி வைக்க முடியாது” என்றார் அப்பெண்ணின் தந்தை.

“பார்ல வேலை செய்றவன்னா, குடிகாரனா தான் இருக்கணுமா?” என்று எதிர்கேள்வி கேட்டாள் மாது.

“நான் பாத்து அவன் இப்போ வரை குடிச்சது இல்ல. உண்மையிலயே உங்களுக்கு அது தான் பிரச்சனையா?” என்றான் மது அழுத்தமான பாவனையோடு.

“வெளி மாநிலத்துலருந்து அண்டிப் புழைக்க வந்த நாயி, வந்த வேலையை மட்டும் பாக்கணும். எங்க வீட்டுப் பொண்ணோட மனசைக் கலைக்கப் பாத்தா, நாங்க கலாட்டா செய்வோம்” அவர்களின் தரப்பு தீபக்கைத் தரக்குறைவாக எண்ணுவது வெட்ட வெளிச்சமாயிற்று.

“அப்படிலாம் நினைச்சதும் ஒரு பொண்ணு மனசைக் கலைச்சிட முடியாதுங்க. அந்தப் பொண்ணுக்கும் பிரியம் இருக்குறதால தான, இப்படிப் போட்டுருக்குற நைட்டியோட ஓடி வந்துருக்கு” 

“பாசமாவது மண்ணாவது! அவனோட சேந்து எங்க பொண்ணும் நாடோடி வாழ்க்கை வாழணுமா? முதல்ல அவன் என்ன படிச்சிருக்கான்? மிஞ்சிப் போனா பதினைஞ்சாயிரம் சம்பளம் வாங்குவானா? அவன் ஊர் என்ன, சொந்தக்காரங்க எப்புடின்னு எதுவுமே தெரியாது. கல்யாணம் பண்ண கொஞ்ச நாள்லயே ஏமாத்திட்டு ஓடிட்டான்னா?”

“உண்மையிலயே அதான் பிரச்சனையா? சம்பளம் அதிகமா இருந்தா, ஊர் பேரு தெரிஞ்சா இப்பவே கட்டி வச்சுடுவீங்களா?” என்றான் மது காரணமாய்.

“யோவ், நீ என்னையா அவனுக்கே சப்போர்ட் பண்ணிப் பேசிட்டுருக்க. உங்க வீட்டுப் பொண்ணு இவனை மாதிரி ஒரு பரதேசிப் பயல காதலிக்கிறேன்னு வந்து நின்னா, நீ கட்டிக் கொடுப்பியா? சொல்லு”

“உங்க பொண்ணு அவன் தான் வேணும்னு வந்து நிக்கிறாளே. இந்த மாதிரி என் தங்கச்சி ஆசைப்பட்டுருந்தா, கல்யாணத்துக்கு ஒத்துட்ருந்துருப்பனா இல்லையான்னு தெரியல. அதே நேரம் வேற ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்து, அவன் வாழ்க்கையையும் சேத்துக் கெடுக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் யோசிச்சுப் பண்ணுங்கன்னு தான் சொல்றேன்”

“இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கவும் கூடாது” என்பதாக இறுதி முடிவெடுத்தவர்கள், பெண்ணைத் தங்கள் அகத்திற்கு இழுத்துப் போக முயற்சித்தனர்.

இவளோ பிடியை உதறித் தள்ளிவிட்டு, மீண்டும் தீபக்கையே நாடினாள். இடையோடு கட்டியணைத்து, இவனது முதுகுப்புறம் மறைந்து கொண்டவள் “நான் வர மாட்டேன். உங்களோட வரவே மாட்டேன்” என அரற்றினாள்.

இவ்விருவரையும் அவர்கள் தாக்க முற்பட, மாது இடையே குறுக்கிட்டாள் “அவங்க ரெண்டு பேரும் மைனர் இல்லையே? அடல்ட்ஸ் தான. அவங்க இஷ்டம் போல விடுங்களேன். பப்ளிக்ல டிராமா பண்ணி, எதுக்காக உங்க மானத்தை நீங்களே கெடுத்துக்குறீங்க?”

“எது, நாங்க டிராமா பண்றோமா?” அவர்கள் அவளை மையமாக வைத்துச் சீறினர்.

“ம்ச்ச். இது சரிப்பட்டு வராது. வாங்க, எல்லாரும் போலிஸ் ஸ்டேஷனுக்கு நடங்க. அங்கயே ரெண்டுல ஒன்னு பேசி முடிச்சுடலாம்” என்ற மது தீபக்கை அழைத்துக் கொண்டு, விறுவிறுவென முன்னேறினான்.

அவர்கள் கால்நடையாய் அருகிலமைந்த மகளிர்க் காவல் நிலையத்தினை அடைந்து, அங்கிருந்த உதவி ஆய்வாளரிடம் தத்தமது வாதங்களை முன்வைத்தனர்.

“இவனை யார்னே தெரியலைங்கறாங்களே. எப்படி இவனோட கல்யாணத்தை நடத்தி வைக்கிறது? நாள பின்ன எசக்கு பிசக்கா எதுவும் ஆயிடுச்சுனா, நீங்களா கேரன்டி கொடுப்பீங்க?” தலைவலிக்குத் தைலத்தை அள்ளிப் பூசிக் கொண்டே, மகளிர்க் காவலர் அவ்வழக்கைத் தட்டிக் கழிக்க முற்பட்டார்.

“ப்ளீஸ், மேம். என்னை அவரோட சேத்து வைங்க. இவங்களோட என்னை அனுப்புனீங்கனா, கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க‌. ஏற்கனவே மாப்பிள்ளைலாம் பாத்துத் தயாரா இருக்கு. அப்படி ஒரு சம்பவம் நடந்தா, எனக்குச் சாகுறதத் தவிர வேற வழியில்ல” அப்பெண், காவியா, கண்ணீர் மல்க மன்றாடினாள்.

அதனால் உள்ளளவில் பாதிக்கப்பட்ட மாது “அவங்களச் சேத்து வச்சுருங்க, மேடம். நாங்க பாத்துக்குறோம். அவங்களுக்கு நடுவுல சண்டை, சச்சரவுனா நாங்க பொறுப்பெடுத்துக்குறோம்” என்று உறுதியளித்தாள். 

“ஏம்மா, உன் வயசென்ன?” அவர் அதட்டலாகக் கேட்க

காவியா விழிகளைத் துடைத்த வண்ணம் பதில் மொழிந்தாள் “இருவத்தி மூனு, மேம்” 

“தம்பி, உன் பேரு, அட்ரெஸைலாம் இங்க எழுது. தமிழ் எழுத, படிக்கத் தெரியுமா?” என்றவர் ஒரு நோட்டுப் புத்தகத்தை தீபக்கிற்கு முன்பாக வீசினார்.

அவன் ஆங்கிலத்தில் தன்னுடைய பெயர், வயது, பிறந்த தேதி, கைப்பேசி எண், பூர்வீகம், தற்போதைய விலாசம் மற்றும் உத்தியோகம் என அனைத்துத் தகவல்களையும் காகிதத்தில் வடித்து முடித்தான்.

அதை ஒருமுறை படித்துச் சரிபார்த்தவாறு “நம்ம தலைமையிலயே சிறப்பா கல்யாணத்தை முடிச்சுருவோம்‌. போய் மஞ்சள் கயிறு ஒன்னு வாங்கிட்டு வாங்க” என்றார் அவர். 

இவன் தன் சட்டைப் பையிலிருந்த கருகமணியை உருவ, “எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்க போலவே. ம்ம்ம். மாட்டி விடு” என உத்தரவிட்டவர் “ஈஸ்வரி, இந்த குரூப்ப ஒரு ஃபோட்டோ எடு” என்று சக ஊழியரை ஏவினார். 

காவலர்களின் மத்தியில் மிக மிக எளிமையாக இவர்களின் திருமணம் அரங்கேறியது‌.

“நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட. ரெண்டு பேரும் உருப்படாம போயிருவீங்க” என்று அந்நால்லர் படை வசைபாடத் தொடங்கியது.

“ச்சூ… அஞ்சு வருசமா ஒரு பொம்பளைப் புள்ளைய லவ் பண்ண விட்டுட்டு, இப்போ தான் சாபம் விட்றானுங்க. அவங்க விஷயத்துல இனிமே நீங்க யாரும் தலையிடக் கூடாது. உங்களால எதுவும் பிரச்சனைன்னு தெரிஞ்சுது; நாலு பேரையும் கூப்டு வச்சு பென்ட நிமித்துருவேன். எல்லாம் வெளிய போ” என்றபடி மேசையில் லத்தியைத் தட்டினார்‌ அவர்.

அவர்கள் பம்மி, பதுங்கி முக்கல் முனகலுடன் புறப்பட்டனர்.

“ஏய், உன்னைத் தான்பா. கௌராவா உன் பேரு? பொண்ணு வீட்டுல வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துறது, குடிக்கிறது, அப்பறம் இந்தப் பிள்ளையப் போட்டு அடிக்கிறது, எவன் கூடயாச்சும் சேத்து வச்சு அசிங்கமா திட்றது, நடந்து முடிஞ்ச கல்யாணத்துல இருந்து எஸ்கேப் ஆகப் பாக்குறது, அப்படி இப்படினு எதாச்சும் ஃபிராடு வேலை பாக்க நினைச்ச… இத பின்னாடி விட்டு முன்னாடி எடுத்துடுவேன்” லத்தியை ஓங்கியவாறு அவர் தன் நாக்கைத் துருத்தினார். 

“இவன்னா எனக்கு உசுரு, மேடம்” என்றவனோ பச்சென்று புது மனைவியின் கன்னத்தில் முத்தம் பதிக்க, இவள் இவனுடைய கைவளைவுக்குள் செவ்வானமாய்ச் சிவந்தாள்.

“இதெல்லாம் இங்க வச்சுப் பண்ணக் கூடாது‌. கிளம்பு. கிளம்பு” தன்னுடைய பத்ரகாளி ரூபத்திற்கு அடியில் சிரிப்பை மறைத்தவர், லத்தியை ஆட்டி ஆட்டியே புதுமணத் தம்பதியரை விரட்டிவிட்டார்.

காவல் நிலையத்தில் இருந்து வெளிவந்ததும் “ரெண்டு பேரும் எங்கத் தங்கப் போறீங்க? கையில காசுலாம் இருக்கா?” என்றான் மது அக்கறையும் அன்புமாக.

“கொஞ்ச நாளாவே அவங்க வீட்டுல தகராறா தான் போயிட்டுருந்தது‌. உஷாரா போன வாரமே வீடு பாத்து வச்சிட்டேன், பையா. நோ பிராப்ளம். நாங்க பாத்துக்கிறோம். எதுனா பிராப்ளம்னா உங்கள்ட்ட வரோம். நீங்களும் பாபியும் இப்போ போலவே ஃப்யூச்சர்லயும் பஞ்சாயத்து பேசி விடுவீங்க தானே?” என்றுரைத்து தீபக் புன்னகைக்க, இவனது உடையாளும் புன்னகைத்து ஆனந்தக் கண்ணீருடன் கரங்கூப்பினாள்.  

மணமான மகிழ்ச்சியோடும் துள்ளலோடும் விடைபெற்றுப் போகிறவர்களை, நம்மிருவர் வியப்புடன் பார்த்திருந்தனர். அன்றைய களேபரத்தில் தங்களின் பண விவகாரமே அவர்களுக்கு மறந்து போயிற்று.

***

ஒருநாள் தேநீர்க் கடையில் நின்றபடி, தெரிந்தவர்கள் சிலரிடம் அளவளாவிக் கொண்டிருந்தான் மது.

“ஏ, மனோஜ்… மனோஜ்…” உடனிருந்தவர் ஓங்கி அழைத்தார்.

மது திரும்பிக் காண்பதற்குள் மனோஜ் சிட்டாகப் பறந்து மறைந்திருந்தான். 

“புது பைக் வாங்குனதுல இருந்து, இந்த மனோஜ கையிலயே பிடிக்க முடியறதில்ல. சிட்டா பறக்குறான்” என்றார் அவர் தேநீரை உறிஞ்சியபடி.

“புது பைக்கா? மனோஜ் பைக்கை மாத்திட்டானா?” அவனறிந்த வரையில் இன்றளவும் பழைய, இரும்புக் கடையில் எடைக்குப் போகக் கூடிய ஓர் இருசக்கர வாகனத்தில் தான் மனோஜ் பணிக்கு வந்து போகிறான்.

“ஆமாப்பா. அட்வான்ஸ் மட்டும் ஐம்பதாயிரம் கட்டிருக்கானாம். நம்மளால மாசம் ரெண்டாயிரம் மிச்சம் பண்ண முடியல. அவன் கைல மட்டும் பணம் புரளுது‌.‌ ஆமா, அவனுக்கு எவ்ளோ சம்பளம் கொடுக்குற?” திரியைக் கொளுத்திப் போட்டவர், தான் வைத்த வேட்டு இன்னதென்று தெரியாமலே உரையாடலைத் தொடர்ந்தார்.

தாமதிக்காமல் மது விடுதிக்கு வந்து சேர்ந்த மது, பழைய காணொளிப் பதிவுகளை அலசினான். இத்தனை நாட்களாக பணம் செலுத்தும் இடத்திலேயே கவனத்தை வைத்திருந்தவன் இப்போது குவியத்தை மாற்றினான். அன்று மாது கதவைத் தள்ளி வெளியேறிய சமயம், மனோஜ் இரண்டாம் மாடியில் இருந்து இறங்கி வந்திருக்கிறான். அவள் அகல்வதைக் கண்டவன், அங்கேயே நின்று நிதானித்து எதையோ கூர்கிறான். அவளை அழைக்கும் உந்துதலோடு கையை உயர்த்தியவன், எதனாலோ அச்செய்கையிலிருந்து பின்வாங்குகிறான். அவன் படிகளில் இறங்கத் துவங்க, படிக்கட்டும் நடைபாதையும் இணையும் பகுதி கண்காணிப்புக் கருவியில் சிக்கவில்லை. அந்த மறைவுப் புள்ளியில் தான் சாவி கைப்பையிலிருந்து நழுவி விழுந்திருக்க வேண்டுமென மது கணித்தான். 

அடுத்து வாகனம் நிறுத்துமிடத்தில் பொருந்தியிருக்கும் படமியின் படி, மாது தன் பாட்டிற்குச் சாலையில் இறங்கி வீதியைக் கடக்கிறாள். அதைத் தொடர்ந்து மனோஜ் இருசக்கர வாகனத்தோடு எங்கோ சென்றுவிட்டு, பத்து நிமிடங்களில் திரும்புகிறான். அவனுடல் முழுவதும் வியர்த்துக் கொட்ட, கழிவறைக்குப் போய் முகம் கழுவி வருகிறான். மறுபடியும் வாகனத்தில் ஏறிக் கிளம்புகிறவன், இருபது நிமிடங்கள் கழித்தே திரும்பி வந்துள்ளான். அவனது வேலை நேரம் முடியும் வரை ஒருவித பதற்றத்துடனே காணப்படுகிறான். அந்தக் குற்றத் தடயங்களைக் கண்கொண்ட நம் மதுவின் விழிகள் தகிக்கும் கணலாய்ச் சிவப்பேறின.

இங்கே நம் மாது, பேனா வாங்கும் நோக்கில் ஓர் அங்காடியைத் தேடியடைந்தாள்.

“மேம்!” பக்கத்து அருந்தகத்திலிருந்த மாணவன் ஒருவன் அவளை நோக்கிக் கையசைத்தான். மாணவ நண்பர்கள் சிலர் அவனுடனிருந்தனர்.

“இங்க என்னடா பண்றீங்க?” அவள் கேள்வியுடன் அழகாகப் புருவங்களை ஏற்றி இறக்கினாள்.

“ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம்னு வந்தோம், மேம். நீங்களும் வாங்க, மேம். உக்காருங்க” என்று அவன் அழைப்பு விடுத்தான்.

மற்றொரு மாணவன் குனிந்து அவளிடம் நாற்காலியை நகர்த்தினான்.

கைப்பையை மடியில் வைத்து அதில் அமர்ந்தவள் “டேய், தம் அடிச்சியா? இப்படி நாறுது” என்று வினவி, காற்றில் கரத்தை விசிறினாள்.

“அவன் பான் சாப்பிடுவான், மேம். அதான் அப்படி” மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சிரித்தனர்.

“பாத்துடா. லேகியம் சாப்பிட்ட மயில்சாமி மாதிரி பல்லுலாம் கருத்துடப் போகுது”

அவர்கள் கூட்டாக “அவரு யாரு, மேம்?” என்று திருப்பிக் கேட்டனர்.

“அது சரி. நீங்க டூகே கிட்ஸுங்கறதையே மறந்து பேசிட்டுருக்கேன்”

“இந்தாங்க, மேம். உங்களுக்குப் பிடிச்ச ஆரஞ்ச் ஜூஸ்” என்று ஒருவன் நீட்ட, அது குவளையைத் தாண்டி வழிந்தது.

அதிலிருந்து சில துளிகள் சேலையில் சிந்திவிட “பாத்து, பாத்து…” என்றவள், அவ்வேளை கீழே தவறவிட்ட கைக்குட்டையை எடுக்க முனைந்தாள். 

அதே கணம் எதிர்திசையில் போதை தலைக்கேறி நடந்து வந்த இராமசாமி, நிலைதடுமாறி தெருவில் வீழ்வது அவளின் விழிகளுக்கு அகப்பட்டது. 

“அப்பா!” என்ற கூவலுடன் அவள் சடுதியில் தந்தையாரிடம் ஓட்டம் பிடிக்க, அதிவேகத்தில் பயணித்த ஓர் இருசக்கர வாகனம் அவளை அடித்துத் தூக்கிற்று.

“மேம், மேம், மேம்!” என்ற கூக்குரல்கள் எட்டுத் திக்கிலும் பரவலாய் எழுந்தன.

***

You may also like

Leave a Comment

About Me

Featured