இரவு முழுக்கக் கணவனை விட்டுப் பிரியாமலும் பிரிய இயலாமலும் அவன் நெஞ்சத்திலே குடி கொண்டிருந்தாள் மாது. விடியலில் அலாரம் அடிக்க, இருவராலும் இமைகளைப் பிரிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அலைபேசி அழைப்பு வர, அவன் சிரமப்பட்டு அதை ஏற்றுப் பேசினான்.
“மாது, மாது… லோடு இறக்க பசங்க வந்துருக்காங்க. எழுந்திரு, அம்மு! என் சக்கரைக் கட்டி! எழுந்திருடி” அவன் மெல்லிய குரலில் கெஞ்சினான்.
கரங்களை உயர்த்திச் சோம்பல் முறித்தவள் திடீரென்று வந்த ஞானோதயத்தால், பேந்தப் பேந்த விழித்து தன் ஆடைகளைத் தேடினாள். அதில் அவன் கமுக்கமாகச் சிரிக்க, அவனை இரண்டு மொத்தினாள். அவளை அள்ளி மேலே இட்டுக் கொண்டவன், இச் இச்சென்று முத்தக் கணைகளைத் தொடுத்தான்.
“மது… ஆரம்பிக்காதீங்க. வீட்டுக்குப் போகலாம்” என்று அவள் தப்ப முயல, அவளது கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டவனுக்கு அவளை விடுவிக்க மனமேயில்லை.
தீபக்கிடமிருந்து மற்றொரு அழைப்பு வந்து அவளை அவன் வசமிருந்து தப்புவித்தது. அவள் அரக்கப் பறக்க சீலையை உடுத்திக் கொண்டு வெளியே செல்லத் தயாரானாள்.
“ஹே, இப்படியே எங்கப் போற?” என்றவன் அவளின் கரம் பற்றித் தடுத்து, மறைவாக நிறுத்தினான்.
பின்னர் அவன் முன்கதவைத் திறக்க, அங்கே குழுமியிருந்த ஆட்கள் அவனைக் கண்டு அதிர்ந்து விழித்தனர்.
“நீ உள்ள என்னணா பண்ணிட்டு இருக்க?” என்றான் ஒரு சுமை தூக்கும் தொழிலாளி.
“அது மழை வந்துச்சா. மழையில நனைஞ்சா ஜலதோஷம் பிடிச்சுக்கும்னு உள்ளயே படுத்துத் தூங்கிட்டேன்” என்ற அவனது பதிலில் தீபக் உட்பட அனைவருமே அவனை விநோதமாகக் கண்ணுற்றனர். “என்னடா லுக்கு? போங்கடா. போய் வேலையைப் பாருங்க” என்று அவன் விரட்டினான். அவர்கள் நேராக உள்ளே நுழைய முனைய, “இங்க இல்லடா. முதல்ல மேல போங்க. இந்தாங்க சாவி” என்றான் வாசலை மறித்துக் கொண்டு.
அதிகாலையிலேயே அவனிடம் வசை வாங்க விரும்பாதவர்கள் முந்திக் கொண்டு படியேறினர். தீபக்கோ வாயிலில் கிடந்த காலணிகளைக் கண்டுவிட்டு, அவனை ஏறிட்டு அர்த்தமாகச் சிரித்தான்.
இவனுடைய பார்வைக் கோணத்தை யூகித்து “டேய், போடா! உனக்கு வேற தனியா சொல்லணுமா?” என்று அதட்டி, தோள்பட்டையில் அடியொன்று வைத்தான் மது.
“இன்னும் அஞ்சு நிமிஷத்துல சரக்கு ஏத்திட்டு வண்டி வந்துரும். அதுக்குள்ள இடத்தைக் காலி பண்ணிக்கங்க” என்ற இவன் பொங்கி வழியும் சிரிப்போடு இரண்டாவது தளத்திற்கு நடையைக் கட்டினான்.
இவனது தலை மறைந்ததும் கதவுக்குப் பின்னிருந்த மனைவியை இழுத்துச் சென்று, கீழிருந்த நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றினான் அவன்; அவளை வீட்டில் இறக்கிவிட்ட கையோடு மறுபடியும் விடுதிக்கு விரைந்தான்.
அவளுக்குக் கதவைத் திறந்துவிட்ட அத்தையார் “இப்போ தான் வரீங்களா? இராத்திரி பூரா எங்கமா போனீங்க?” எனக் குறுக்கு விசாரணை நடத்தினார்.
“அது… சும்மா ஒரு லாங் டிரைவ் போனோம், அத்தை” மூளைக்குத் தோன்றியதை அளந்துவிட்டாள் மருமகள்.
“இதெல்லாம் லீவ் போட்டுட்டு செய்யக் கூடாதா? எங்க அவன்?”
“கடையில லோடு இறக்கப் போயிருக்காரு, அத்தை”
“ஓய்வே இல்லாம அலையுறான்மா. நீ தான் அவனுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கணும்”
“நான் பாத்துக்குறேன், அத்தை. இதுக்கப்பறம் இராத்திரில வெளிய போறதைக் குறைச்சிக்குறோம்” என அடக்கி வாசித்தவள், தலையைக் கூட நிமிர்த்தாமல் அறைக்குள் புகுந்தாள்; குளிக்க வேண்டும், உடை மாற்ற வேண்டும் என ஏதேதோ தோன்றியும் ஒருவித அயர்ச்சியோடு படுக்கையில் சரிந்தாள். எவ்வளவு நேரம் தூங்கினாளோ அவளுக்கே தெரியாது. அவளை ஒரு கரம் வந்து பலமாக அழுத்தி, தன்னுள் அடக்கிக் கொண்ட போது தான் மீண்டும் விழிப்புற்றாள். அக்கணத்தில் தோன்றிய நிறைந்த உணர்வோடு கணவன்புறம் திரும்பிப் படுத்தவள், கண்களைத் திறவாமலே வினவினாள் “அதுக்குள்ள வந்துட்டீங்களா?”
“அதுக்குள்ளவா? நான் போய் வர மொத்தமா ரெண்டு மணி நேரம் ஆச்சுடி”
“பொய் சொல்லாதீங்க” அவள் சிணுங்கினாள்.
“தூங்கு மூஞ்சி!” அவளின் நாசியைச் சுரண்டியவாறே அவன் அவளைச் சீண்டினான்.
“பேசாம தூங்குங்க, மச்சான். உடம்புலாம் அடிச்சுப் போட்ட மாதிரி வலிக்குது” அவள் அவனது நெஞ்சில் நித்திரை கொள்ள முயல
“இவ்ளோ நாள் நீ சொல்றதை நான் கேட்டேன். இனிமேல்…” என்றவன் தூண்ட வேண்டிய இடத்தில் தீண்ட, அவளின் தூக்கம் கலைந்து தூர ஓடியது.
“மச்சான், சேட்டை பண்ணாதீங்க. நான் காலேஜ் போகணும்” அவள் விழிகளைச் சுருக்கி மன்றாடினாள்.
“முடியாது. முடியாது. நீயில்லாத ஏக்கத்துலயே நான் செத்துருவேன்டி”
“அப்படிலாம் பேசாதீங்க” அவள் அவசரமாக அவனின் வாய் பொத்தினாள்.
“அப்போ என்ன செய்ற… அஸ் ஐ அம் ஸஃபரிங் ஃபரம் ஹெவி பாடி பெய்ன் அப்படின்னு லீவ் லெட்டெர் எழுதிக் கொடுத்துட்டு, இன்னைக்குப் பூரா எனக்கு நேரம் ஒதுக்குற. சரியா?”
“ம்ஹூம்ம். மாட்டேன்”
“நானும் உன்னை விட மாட்டேன்ன்” என்றவன் அவளின் கரங்களை எடுத்து, தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டான்.
இருவரும் காதல் கீதம் இசைத்து முடிக்க, அவன் உறங்கக் கூட நேரமில்லாமல் பணிக்குத் திரும்பினான். அவள் பகல் பத்து மணிக்கு எழுந்தும் உறக்கம் கண்களைச் சுழற்றியது. நிறுத்தி நிதானித்துக் குளித்து முடித்தவள் அறையைக் கடந்து வெளியே வர, நாத்திகள் நால்வரும் வரவேற்பறையில் ஒன்று கூடியிருந்தனர்.
‘தப்பான நேரத்துல வந்து மாட்டிக்கிட்டோமே’ அவள் உணர்ச்சிகளை மறைக்கத் தெரியாமல் கீழுதட்டைக் கடித்தாள்.
“அண்ணியாரே, தூக்கம் போதுமா?” புன்னகையோடு அவளை வம்பிழுத்தாள் சுலோச்சனா.
“இன்னைக்குக் காலேஜ் இல்லையா, அண்ணி?” என்று கேட்டாள் ரம்யா.
“சாப்பிடாம கூட எப்படித் தான் தூங்குறீங்களோ! பசி வந்தா எனக்குத் தூக்கம் கூட வராதுப்பா” என்றாள் கால்களை நீட்டி அமர்ந்திருந்த சுதா.
“உங்க அண்ணன் மாதுவை எங்கயோ வெளியக் கூப்டுப் போயிருக்கும் போல. நைட்டுலாம் தூக்கம் இல்லாம புள்ளை என்ன பண்ணும். பாவம்!” மருமகளுக்குத் துணை வந்தார் நம் சிந்தாமணி.
“தலைல ஈரம் சொட்டுது. நல்லா துவட்டுங்க. துவட்டிட்டுச் சாப்பிடுங்க” என்று எடுத்துரைத்தாள் முல்லை.
இவள் அங்ஙனம் கூறியதில் அவளுக்கு ஆச்சரியம் தான். மூத்த நாத்தியின் பல்வேறு குணாதியசங்களில் இந்தக் கரிசனமும் அடக்கம் போல என எண்ணிக் கொண்டாள். அத்துடன் அமைதியாக உண்டு முடித்தவள், அவர்களின் அரட்டைக்குச் செவிசாய்த்தபடி அங்கேயே ஐக்கியமாகிவிட்டாள். அவளின் சிந்தை அடிக்கடி மதுவின் பேரில் பாய, அதிலிருந்து முழுதாக வெளிவரும் வழியறியாமல் திணறினாள் பாவை. மதியவேளை வீட்டு வாசலில் தன்னவனின் வாகனச் சத்தம் கேட்டு அடங்க, அவளின் இதயம் ஒரு விநாடி நின்று துடித்தது.
உள்ளே வந்தவன் தாயின் அருகே அமர்ந்தவாறு “மாது, சாப்பிட்டியா?” என்றான்.
“நாங்க இத்தனை பேரு இங்க உக்காந்துருக்கோம். உனக்கு அண்ணி மட்டுந்தான் கண்ணுக்குத் தெரியுறாங்களோ?” என்று தமையனை வாரினாள் முல்லை.
இது தான் அசலான முல்லை. எதையும் உள்ளத்தில் ஒளித்து மறைக்கத் தெரியாதவள். இவளுடைய வாய் வார்த்தைக்கு வடிகட்டி என்பதே கிடையாது. மனதில் உதிப்பதை அப்படியே கொட்டி விடுவாள். இவளின் அமர்க்களமான கேள்வியில் சத்தமின்றி சிரித்தாள் நம் மாது.
“என் பொண்டாட்டிய நான் தான் நலம் விசாரிப்பேன். உங்களலாம் கவனிச்சுக்க அவ இருக்கா. அவளை நான் தான கவனிக்கணும்”
“ஓஹோ! கதை அப்படிப் போகுதா?” என்று கலகலத்தாள் ரம்யா.
“நம்ம புருஷங்களாம் அண்ணன்ட்ட தான் வந்து பாடம் படிக்கணும்” என்றாள் சுதா தயக்கத்தை உடைத்து.
“எங்க அண்ணனோட அறிவே அறிவு!” சிலிர்த்துப் போய்ச் சில்லறையைச் சிதறவிட்டாள் சுலோ.
“என்ன சுலோ, ஃபைனல் எக்ஸாம்லாம் எப்படி எழுதியிருக்க? பாஸ் ஆயிடுவியா?” அவன் கேட்ட விதத்தில் இவளைப் பயம் கவ்வியது.
“ஓ!” சுருக்கமாகப் பதிலளித்தாள் இவள்.
“இந்த ஓக்கு அர்த்தம் என்னனு இன்னும் பத்து நாள்ல தெரிஞ்சுடும்” எனத் தங்கையை இடித்துரைத்தாள் ரம்யா.
“அடுத்து என்ன செய்யப் போற? மேல படிக்கிறியா?” என்று விசாரித்தான் தமையன்.
“மறுபடியும் படிக்கணுமா?” இளையவளிடமிருந்து அதிர்வலைகள் வெளிப்பட்டன.
“சரி, ஏதாவது வேலைக்குப் போ” என்றான் அவன் அடுத்து.
“ஆன்?” அதற்கும் இவள் விழித்தாள்.
“வேற என்ன தான் செய்யறதா உத்தேசம்?” அவன் உருட்டி மிரட்ட, இவள் மௌனம் சாதித்தாள்.
“பேசாம ஒரு நல்ல பையனா தேடி, கல்யாணத்தை முடிச்சு வச்சிடுங்க” இது சுதா.
“என்ன, இதுக்கு மட்டும் அமைதியா இருக்க? இதுக்கா உன்னைப் படிக்க வச்சாங்க?” என்று திட்டினாள் முல்லை.
“இப்ப நானா வந்து உங்கள்ட்ட எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்கனு கேட்டேன். இன்னைக்கு நான் தான் உங்களுக்குக் கிடைச்சனா? முதல்ல ரிஸல்ட் வரட்டும். ஆள விடுங்க, சாமி” என்று புலம்பியபடி அங்கிருந்து தப்பியோடினாள் இளையவள்.
“மாமா, எப்போ என்னைக் கடைக்குக் கூப்டுப் போவீங்க? எனக்கு விளையாட டிரக் வேணும். அம்மா சென்னைல இருந்து எந்தப் பொம்மையுமே எடுத்துட்டு வர விடல” சுதாவின் மகன் சோகமே உருவாகக் கோரிக்கை விடுத்தான்.
“உனக்கு டிரக் வேணும்னா வாங்கிக்கலாம். மாமாக்கு அசதியா இருக்கு. மாமா கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வரேன். சாயந்தரமா அத்தை உன்னைக் கடைக்குக் கூப்டுப் போவாங்க. அதுவரை சமத்தா இரு. அம்மாவ இதுக்கு அப்பறம் நீ இம்சை பண்ணக் கூடாது. அம்மா வயித்துக்குள்ள தம்பி, பாப்பா இருக்காங்க. இதையும் மீறி என் தங்கச்சிக்குக் கஷ்டம் குடுத்த, மாமா உன்னை பாஷை தெரியாத ஊருக்கு லாரி ஏத்தி விட்டுருவேன்”
அந்த அதிரடியில் இவன் அலறிப் புடைத்துக் கொண்டு பாட்டியாரிடம் தஞ்சமடைந்தான்.
“மாமா சும்மா சொல்றாங்கப்பா. நீ அழாத” பேரனின் கன்னம் கிள்ளி வாஞ்சையாய் மொழிந்தார் சிந்தாமணி.
“நீ சேட்டை பண்ணீனா கண்டிப்பா செய்வேன்” அவன் இவனை எளிதில் விடுவதாய் இல்லை.
அவன் செய்த அட்டகாசத்தில் அந்தப் பிஞ்சு பாலகன் பாவமாய்ப் பாட்டியின் முந்தானையில் முகம் புதைத்துக் கொண்டது.
அடுத்ததாக இருக்கை நீங்கி எழுந்தவன் மனையாளிடத்தில் கரம் நீட்ட, அவளோ கண்டும் காணாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். “மாது!” அவன் அழுத்தமாக அழைத்தான்.
“எனக்குத் தூக்கம் வரல. நான் கொஞ்ச நேரம் உக்காந்துருந்துட்டு வரேங்க”
“கதைலாம் அப்பறம் பேசிக்கலாம். இப்ப வா” அவன் வெளிப்படையாக நடந்து கொண்டது அவளின் கூச்சத்திற்கு வழிவகுத்தது.
“அண்ணன் கூப்புட்றப்பவே போயிடுங்க, அண்ணி. டென்ஷன் தலைக்கேறிடப் போகுது” என முல்லை அறிவுறுத்தவும் அவளுக்கு அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை.
கதவடைத்ததும் அவளை அவன் அணைக்க வர, அதற்கே பின்வாங்கினாள் அவள் “தூங்குங்க, மது. கண்ணுலாம் செவந்து கிடக்கு”
“தூங்க தான்டி போறேன்” என்றவன் அவளை இறுக்கியணைத்து, அவள் மார்பில் தலை சாய்த்தபடியே நித்திரையில் ஆழ்ந்தான். நடுநடுவே உறக்கம் கலைந்தபோது ஐந்தாறு முத்தங்கள் நல்கவும் அவன் தவறவில்லை.
அன்றிரவு...
மது நேரத்திலேயே வீடு திரும்பிவிட, மாதுவை அவ்விடம் காணவில்லை. அவள் மாரியோடு சுதாவின் மகனையும் கடை வீதிக்கு அழைத்துச் சென்றுவிட்டு, தாமதமாகத் தான் வீடு வந்தாள். அவளுடன் உணவுண்டு முடித்து அறைக்குள் புகுந்த மது, அவளை ஒட்டி உரசிக் கொண்டு நிலைப்பேழைக் கண்ணாடியின் முன்பாகத் தங்கள் இணையை அழகு பார்த்தான்.
அவன் அன்று கொடுத்த வெள்ளையில் சிவப்பு ரோஜாக்கள் இட்ட சேலை அவளுடலைக் கச்சிதமாகத் தழுவியிருக்க, “இந்த சாரி எப்போடி ரெடி பண்ண?” அவன் உருகிப் போய்க் கேட்டான்.
“நடுவுல நீங்க ஹாஸ்பிடல், வேலைன்னு மாத்தி மாத்தி அலைஞ்சீங்கள்ல. அப்போ அம்மா வீட்டுக்கு எடுத்துட்டுப் போய், நானே தைச்சுட்டு வந்துட்டேன். இந்த பேக் டிஸைன் எப்படி இருக்கு?” என்று வினவியவாறு அவள் தன் கூந்தலை முன்பக்கமாக ஒதுக்கினாள். முதுகுப்புறத்தில் கைப்பை வடிவில் அவளின் மேனி பளிச்சிட, அதற்கு மேலே இருபக்கங்களிலிருந்தும் பட்டையாக முடியிடப்பட்டிருந்தது.
“இது எதுக்குக் கீழ மட்டும் கொஞ்சமா முதுகை மறைச்சிருக்க? அதையும் காத்தாட விட வேண்டியது தான?” அவன் சிரிக்காமல் கேட்டான்.
“அவ்வா! எப்படி மச்சான் இவ்ளோ கரெக்டா கெஸ் பண்றீங்க? கீழ மெலிசா ரெண்டு வரிசைக்கு நாட் வச்ச ஒரு ப்ளௌஸ் டிஸைன் நானும் பாத்தேன், மச்சான். அது மாதிரியும் ஒன்னு தைக்கணும். உங்களுக்கு மட்டும் தனியா போட்டுக் காட்டுறதுக்கு”
“மேடம் என்னை மயக்கப் பாக்குறீங்களோ?”
“ஐயே!” அவள் முகத்தைச் சுளித்தாள்.
“நடிக்காதடி” என்றவன் பின்னிருந்து தோள்பட்டையோடு அவளை வளைத்துப் பிடித்து, ஆசை தீர இதழ்த் தேனைப் பருகினான்.
அவள் ஆதாரத்திற்கு அவனின் கன்னம் பற்றி, சிகையைக் கோதினாள்.
“மாதும்மா... இவ்ளோ அலங்காரத்துலயும் ஏதோ ஒன்னு குறையுதே” என்றவன் எங்கிருந்தோ ஒரு ரோஜா மலரை எடுத்து அவள்முன் நீட்டினான்.
“தேங்க் யூ!” என்றவள் அதனை ஆழமாக முகர்ந்து வாசம் பிடித்தாள். பின்பு அவன் முகம் நோக்கித் திரும்பியவள் “மதியம் வரைக்கும் பேன்ட், ஷர்ட்ல தான சுத்திட்டு இருந்தீங்க. எப்போ வேட்டி, சட்டைக்கு மாறுனீங்க? ஆள் ரொம்ப அம்சமா தெரியுறீங்க” என்றாள் சிலாகிப்புடன்.
“அது இருக்கட்டும். நீ எப்போ நைட் டிரெஸ்ஸுக்கு மாறுவ?” அவன் கிறக்கத்துடன் காதோரமாகக் கிசுகிசுத்தான்.
“மாறலாமே. அது சம்பந்தமா, காலையிலயே ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன். நம்ம கட்டில் கடக், முடக்குங்குது. எனக்கு இது ஒத்து வரும்னு தோனல”
“அதுக்குத் தான் நம்ம முன்னோர்கள் கண்டுபிடிச்ச ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு. டட்டடய்ன்… பத்தமடைப் பாய்” என்றபடி கட்டிலிற்கும் சுவற்றிற்கும் இடைப்பட்ட சந்தில் ஒரு பாயை விரித்தான் அவன்.
அதில் கால்களை மடக்கி அவனுக்கு நேரெதிராக அமர்ந்தவள் “இந்த சிவப்புக் கலர் என்னைக் கயிறு கட்டி இழுக்குதுங்க” என்றாள் கண்களில் மயக்கத்துடன்.
அவளின் விரல்களுக்கு இடையே வீற்றிருந்த ரோஜாவும் சிவப்பு தான். அவன் அணிந்திருந்த சட்டையும் சிவப்பு தான். அவளின் மெய் வர்ணத்தை மூடியிருந்த இரவிக்கையும் சிவப்பு தான். அவற்றில் அவள் எந்தச் சிவப்பினைக் குறிப்பிடுகிறாள்?
“பிடிச்சுருக்கா? உனக்கு விருப்பப்பட்டா அப்படியே சாப்பிடலாம். ஃபுல்லி ஆர்கானிக்” அவன் பார்வை எங்கெங்கோ முட்டி மோதி மலரில் வந்து நிலைத்தது.
அவள் அந்த ரோஜாவின் ஓர் இதழை அதரங்களுக்கிடையே பற்றியிழுக்க, மேலிட்ட ஆவலோடு அவன் அதைப் பங்கிட முற்பட்டான். அதில் சில இதழ்கள் இடம் மாறின. சில இதழ்கள் கசங்கின. சில இதழ்கள் கடிபட்டன. அவையே காதலின் சுவையையும் கூட்டின.
அடுத்த சில மணித் தியாலங்களுக்கு அவளுள் பரவசமடைந்து திக்கு முக்காடிப் போனவன், அவளைத் தோளில் சரித்துக் கொண்டு பாடலும் பாடினான் “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி! நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!”
“எல்லாம் சரி தான். இப்போ இந்தப் புடவையை எதுக்காகக் கிழிச்சீங்க? ஒரே ஒரு தடவை தான் கட்டுனனே” விழியிலிட்ட மை கலைந்து வடிந்தும் கலையாக இருந்த அவள் பொய்யாகக் கோபப்பட்டாள்.
“இது மாதிரி மச்சான் உனக்கு ஆயிரம் புடவை வாங்கித் தரேன், செல்லம். முக்கியமான நேரத்துல ஊக்குல மாட்டிட்டு வர மாட்டேனு மக்கர் பண்ணிடுச்சு. நானென்ன செய்ய?”
“ரொம்ப மோசம் நீங்க” அவளின் குற்றச்சாட்டிற்கு அத்தாட்சியாய் அவனிதயம் பெருமிதம் கொண்டது.
“உன்னால எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும் போலருக்குடி. காலைலருந்து உன் நினைப்பு மட்டுந்தான் மண்டைக்குள்ள ஓடிட்டேயிருக்கு. நாளைக்கு என்னலாம் பாடுபடப் போறேனோ!”
“இங்க மட்டும் என்ன வாழுதாம்! ரெண்டு நிமிஷத்துக்கு ஒருக்கா ஸோன் ஔட் ஆயிட்றேன். கண்ட கண்ட நினைப்பும் மனசுக்குள்ள பேயாட்டம் போடுது. நாம ஹனிமூன் ஃபேஸ்ல இருக்கோம்னு நினைக்கிறேன். கொஞ்ச நாள் போனா அலுப்பு தட்ட வாய்ப்பிருக்கு”
“அப்படிங்குற?”
“ம்ம். உங்களுக்கு என்ன தோனுது?”
“இப்படியே உன் மேல பித்தா இருந்துடலாம்னு தோனுது”
“மீ டூ, மது. ஆமா, அந்த சோஃபாவ என்ன பண்ணீங்க?”
“அதுவா, பத்திரமா ஸ்டோரேஜ் ரூம்ல கொண்டு போய் வச்சிட்டேன். நாம புது வீட்டுக்குக் குடி போனதும் அது நம்ம பெட்ரூம்க்கு வந்துரும்”
“எவனாவது சோஃபாவைக் கொண்டு வந்து பெட்ரூம்ல வைப்பானா?”
“நான் வைப்பேன்டி. அதுக்கான காரணம் என்னனு உனக்குத் தனியா விளக்கணுமா?”
“நீங்க இருக்கீங்க பாருங்க. உங்க வேலையே பிடிக்காம தான் கல்யாணம் பண்ணேன். அங்கயே வச்சு உங்க கைங்கரியத்தைக் காட்டிட்டீங்கள்ல. உங்க காதலைப் பத்தி என்னைத் தவிர எல்லார்ட்டயும் உளறி வச்சுருப்பீங்க போல. மதி அண்ணா அன்னைக்குப் பேசுனத்துக்கான அர்த்தம், எனக்கு இப்போ தான் புரியுதே. அவருக்கு எல்லா கதையும் முன்னமே தெரிஞ்சுருக்கு”
“மதி மாமான்னு சொன்னதும் தான் ஒன்னு ஞாபகத்துக்கு வருது. இந்தக் கோழி இருக்குல்ல கோழி… இந்தச் சேவல் இருக்குல்ல சேவல்…” என்று அவன் நேக்காக வம்பிழுக்க
“மது!” அவள் அவனது பகடியில் கன்னம் சிவந்து, அவனது புயத்தில் முகம் மறைத்தாள்.
விடிந்தும் விடியாத வேளையில் அவள் நீராடிக் கொண்டிருக்க “லட்டு!” என்றழைத்தபடி அவன் குளியலறைக் கதவைத் தட்டினான்.
“வரேன், மது” என்றவள் உள்பாவாடையை முடிந்தபடி கதவைத் திறந்தாள்.
“தங்க மயிலு!” அவன் அவளின் கன்னங்களைப் பற்றி வலுவாக அழுத்தினான்.
“என்னாச்சு உங்களுக்கு? நிமிஷத்துக்கு ஒரு கொஞ்சல் கொஞ்சுறீங்க?”
“இதுலாம் எத்தனை நாள் கனவு தெரியுமாடி?” என்றவன் அவளை வளைத்துப் பிடித்து, மிக நெருக்கத்தில் நிறுத்தினான்.
“நான் அல்ரெடி குளிச்சிட்டேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாம கெளம்புறீங்களா?”
“ஓகே. ரெண்டு முத்தா மட்டும் கொடுத்துட்டுப் போயிட்றேன்”
“கன்னத்துலயா?” அவள் கேள்வியாய் விழி விரித்தாள்.
“அப்டீனா மொத்தம் நாலு முத்தா” என்று பூடகமாகக் கணக்கிட்டவன் தனது வாக்கை நிறைவேற்றிய பிற்பாடே மது விடுதிக்குப் புறப்பட்டான்.
அவன் திரும்பி வந்தபோது, அவள் கல்லூரிக்குத் தயாராகி இருந்தாள். அவனுடன் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தவள் “என்னங்க, நான் ஒரு ரீல்ஸ் பாத்தேன். அதுல நம்ம கடையைத் தான் காட்டுனாங்க. அந்த வீடியோல பத்துப் பன்னெண்டு பொண்ணுங்க இருந்தாங்க. நம்ம கடையைப் பத்தி நல்ல விதமா சொன்னாங்க”
“அது பேரு பார்ட்டெர், மாது. நாம அவங்களுக்கு ஃப்ரீயா டிரிங்க்ஸும் ஸ்நாக்ஸும் தந்தோம். அவங்க நம்ம சர்வீஸைப் பாத்துட்டு, பிடிச்சுப் போய்ப் பிரமோஷன் பண்ணாங்க”
“இதான் உங்க வியாபார உத்தியா?”
“அப்ப தான்டி கடைக்குக் கூட்டம் வரும்”
அவள் அவனை இடையோடு அணைத்துத் தோள் சாய்ந்தாள்.
“பொண்டாட்டி, பப்ளிக்! பப்ளிக்!” அவன் எச்சரிக்க
“அதனால என்ன? என் புருஷன். நான் என்ன வேணாலும் செய்வேன்” என்றாள் அவனின் தோளில் மோவாயைப் பதித்து.
விரிந்த புன்னகையுடன் அவளது கரத்தை இழுத்து வயிற்றில் பொருத்திக் கொண்டான் அவன்.
அவளோ ஒரு படி முன்னேறி அவனுடைய முதுகில் முத்தம் வைத்தாள் “என்னங்க, நாம ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாமா?”
“கேக்கறதுக்கு நல்லா தான் இருக்கு. ஆனா, அது எவ்ளோ கஷ்டமான ப்ராசெஸ் தெரியுமா?”
“தெரியாது தான். நீங்க இப்ப பாக்குற வேலையும் ரெஸ்டாரன்ட் பிசினஸும் கிட்டத்தட்ட ஒரே ஃபார்முலா தான?”
“இல்லை. எங்க மாமாவே நிறைய முறை முயற்சி பண்ணித் தோத்துட்டாரு”
“நாம ஒரு தடவை முயற்சி செஞ்சு பாப்போமே? தோத்தாலும் பரவால்ல”
அவன் அவளுடன் வாதம் நிகழ்த்த விரும்பவில்லை. அவளின் விரல்களில் மென்மையாக முத்தமிட்டு, யோசனையில் ஆழ்ந்தான். அவன் அவளைக் கல்லூரியில் இறக்கிவிட்டு, மது விடுதிக்குச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தத் துர்செய்தி வந்து சேர்ந்தது.
“அண்ணா, அண்ணி வேலை பாக்குற காலேஜ்ல ஏதோ ஃபயர் ஆக்சிடென்ட்டாம். சீக்கிரம் போய் என்னனு பாருங்க” என்று ஒருவன் கூவவும் மது ஒரு விநாடி கூட தாமதியவில்லை;
அந்தச் செய்தி உண்மையா, புரளியா என்று ஆராயக் கூட முயற்சிக்கவில்லை; வாயுவேகம் மனோவேகமாக இருசக்கர வாகனத்தில் பறந்தான். அவன் நேரில் சென்று கண்டபோது, கல்லூரியின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. திகைப்பினால் காலையில் மனைவி அணிந்திருந்த உடையின் வண்ணம் கூட அவனிற்கு நினைவில் வர மறுத்தது. உள்ளே நடந்த கலவரத்தில் எல்லாரும் சம்பித்திருக்க, அவனைத் தடுத்து நிறுத்துவோர் யாருமில்லை. முன்பொரு நாள் வெளியிலிருந்தே அவள் காண்பித்த அடையாளத்தை வைத்து, அவளின் பிரதான வகுப்பறையை அடைந்தான் அவன். அங்குப் புத்தகங்களும் பைகளும் மூலைக்கொன்றாகச் சிதறிக் கிடக்க, மாணவர்கள் பின்னங்கால் பிடறியில் அடிக்க வெளியேறிக் கொண்டிருந்தனர். வெகு சமீபத்தில் மாதுவின் கத்தல் ஒலி கேட்க, அவன் குரல் வந்த திசையில் ஓட்டம் பிடித்தான். அங்கிருந்த ஓர் ஆய்வகம் அதீத நெருப்பிற்கும் புகைக்கும் மூலாதாரமாக விளங்கியது. அதன் வாயிலில் நின்று கொண்டு மாதுவும் வேறு சில மாணவர்களும் நெருப்பை அணைக்க முயன்றனர்.
தீ அவர்களுக்குக் கட்டுப்படுவேனா என ருத்ர தாண்டவம் புரிந்து கொண்டிருக்க, “கிருஷ், வெளிய வாடா. ப்ளீஸ், கிருஷ்! இப்படித் தப்பு தப்பா முடிவெடுக்காத” என்று அவள் கதறினாள்.
ஆம். கிருஷ் தான் இத்தகைய காரியத்தை அரங்கேற்றிவிட்டான். முதல்வரிடம் இவன் தயை கோராத காரணத்தினால், தேர்வு எழுதும் வாய்ப்பு இவனுக்கு மறுக்கப்பட்டது. இவனுடன் பயின்ற பிற மாணவர்கள் மூன்றாம் ஆண்டிற்கு முன்னேறிவிட, இவன் ஓராள் மட்டும் இளைய மாணவர்களுடன் இணைந்து பாடம் பயில வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். அதை ஏற்றுக் கொள்ள முடியாத விரக்தியில், இங்ஙனம் ஆய்வகத்தில் தீயை மூட்டிவிட்டான் இந்தக் கலகக்காரன். கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அத்தனை பேரையும் கலங்கடித்தது போதாது என, தீக்குளிக்கப் போவதாக அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான் இவன். சூழ்நிலை கை நழுவிக் கொண்டிருக்கும் அத்தகைய விளிம்பு நிலையில் மாது தவித்திருக்க, அவளின் நாமத்தை ஓங்கி அழைத்தான் மது.
அந்த அழைப்பினில் விளுக்கென்று நிமிர்ந்தவள், அச்ச கணங்களில் பெற்றவளை நாடும் சின்னஞ்சிறு மழலையைப் போல ஒரே வீச்சில் அவனைப் பாய்ந்தோடிக் கட்டிக் கொண்டாள்.
***