அடுத்த வாரத்தில் நிச்சயம் முடிந்து மதுசூதனனுக்கும் மாதுளைக்கும் திருமணம் நிகழ்ந்தேறியது. மாப்பிள்ளை வீட்டினர் வரதட்சணை என்று எதுவும் தனியாகக் கேட்கவில்லை. வரதட்சணை தருமளவு அவர்களிடம் எதுவும் இருக்கவுமில்லை. கட்டில், பீரோ, மெத்தை ஏதாவது வாங்கலாம் என்று நினைத்தால், பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம்; இப்போதிருக்கும் வீட்டில் அவற்றையெல்லாம் வைக்க இடம் போதாது என்று மறுத்துவிட்டார் சிந்தாமணி. ஒரு பெரிய மண்டபத்தில் அவர்களின் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. மண்டபச் செலவு மாப்பிள்ளை வீட்டினருடையது; விருந்துச் செலவு பெண் வீட்டாருடையது எனப் பிரித்துக் கொண்டனர். மண்டபத்தின் அளவைப் பார்த்து பெண் வீட்டினருக்குப் பிரமிப்பு தான்; இது தங்கள் தகுதிக்கேற்ற சம்மதம் தானா என்ற சந்தேகத்திற்கு ஆட்பட்டனர்; மண்டபத்திலேயே பெண்ணுக்கான சீர்வரிசையைப் படம் போடும் வழக்கம் அப்பகுதியில் இல்லாததால் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டனர். திருமணமும் விருந்தும் முடிந்து, மாப்பிள்ளை வீட்டிற்குப் போனவர்கள் அதன் எளிமையில் சற்றே ஆசுவாசப்பட்டனர். அதுவும் பிரம்மாண்டமாய் இருந்திருந்தால் பெண் வீட்டினரின் நெஞ்சம் நிச்சமாய் ஆட்டம் கண்டிருக்கும். வீடு அவர்களின் செல்வாக்கிற்கு ஏற்ப சிறியதாக இருக்கவே, இது நமக்கு அதிகப்படியோ என்ற ஐயத்திலிருந்து மீண்டனர்.
பெண் வீட்டில் போதிய இடமின்மையால் முதலிரவு இங்கேயே ஏற்பாடானது. அவளை நேரத்திலேயே அறையினுள் விடுத்து கதவை மூடிவிட்டனர். வெளியில் உறவினர்களின் உரையாடல்களைத் தாண்டி, மணமகனின் குரல் அண்மையில் கேட்டது.
“மாமா, நான் ஒரு எட்டு கடை வரைக்கும் போயிட்டு வந்துட்றேன். எவனோ கடை வாசல்ல வம்பு வளத்திட்டு இருக்கானாம்”
“அத நான் போய்ப் பாக்குறேன், மச்சான். நீ பேசாம உள்ள போ”
“மாமா…”
“சொன்னா கேளு”
“மா…”
“கேளு”
அதற்கு மேல் மதிவாணனை எதிர்த்து அவன் பேசத் துணியவில்லை. அடுத்ததாகக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு, இங்கிருந்த மாதுவுக்குப் படபடவென்றானது. உள்ளே வந்தவன் அலைபேசியை நெற்றியில் வைத்துத் தட்டிக் கொண்டே யோசிக்கலானான். மதிவாணன் மது விடுதி வரை செல்லக் கூடிய ஆளில்லை; தனக்குப் பதில் ரிஷிவர்த்தனையோ, சுரேஷையோ தான் அனுப்பி வைப்பார். அவர்களைச் சமாளிப்பது பெரிய விடயமில்லை என்று எண்ணியவன், இப்போது கட்டிலில் தலை நிமிராமல் இருந்தவளைக் கண்ணுற்றான்.
“மாதுளை…”
அவள் படக்கென்று அவனை ஏறிட்டாள்.
அந்த விழியம்புகள் அவனைப் புயல் வேகத்தில் வந்து தாக்கியும் வீரனவன் சமாளித்து நின்றான் “நான் ஒன்னு கேட்டா, கோச்சுக்க மாட்டியே!”
“அது நீங்க கேக்குறதப் பொறுத்து”
“எனக்கு ஒரு அவசர வேலை. கடை வரைக்கும் போகணும்”
“போயிட்டு வாங்க”
“நான் திருப்பி வர வரைக்கும் நீ சமாளிச்சுப்பியா?”
“நான் இங்கயே தான் இருப்பேன். யாராச்சும் வந்து என்னைத் துருவுனா உண்மையச் சொல்லிடுவேன். முத நாளே என்னைப் பொய் சொல்ல வைக்காதீங்க”
“நீ பொய்லாம் சொல்ல வேணாம். ரூம்லயே அமைதியா காத்துட்டுரு. நான் போற வேகத்துலயே வந்துடுவேன்” என்றவன் குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான்.
சில நிமிடங்கள் கழித்து, அவள் குளியலறைக் கதவைத் திறக்க அதனுள் மற்றொரு கதவு இருந்தது. அந்த மற்றொரு கதவை அவள் திறக்க முயல, அது வெளிப்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. அது தான் வீட்டின் பின்வாயில் போல என அவளாக முடிவெடுத்துக் கொண்டாள். மீண்டும் கட்டிலில் வந்தமர்ந்தவள் அலைபேசியைப் பார்க்க, திருமணத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் பலரும் வாழ்த்துச் செய்திகள் அனுப்பியிருந்தனர். அதை அவளின் மருதாணியிட்ட விரல் நகர்த்திக் கொண்டே வர, புதிதாய் ஓர் எண்ணிலிருந்து செய்தி வந்தது.
“ஸாரி” எனும் ஐந்தெழுத்துக்களுடன் ஒளிர்ந்த அச்செய்தியைத் தொட்டு அவள் உள்ளே சென்றாள்; அந்த எண் மதுசூதனனுடையது என்பதை இறுதி மூன்று எண்களை வைத்து அடையாளம் கண்டாள். அதை எவ்வாறு சேமிப்பது என்று அவள் சிந்தித்துக் கொண்டிருக்க, அதற்குள்ளாகவே அவன் திரும்பி வந்திருந்தான்.
அவள் சட்டென்று எழுந்து நிற்க, அவன் அவளைக் கையசைவால் அமர்த்தினான். தனது அலைபேசியை அலமாரியில் ஓரங்கட்டியவன் மடமடவென்று ஒரு செம்பு நீரை அருந்தினான் “ஸாரி, முத நாளே உன்னைக் காக்க வச்சுட்டேன்” அவன் ஈரமாகியிருந்த தன் உதடுகளைத் துடைத்தவாறு சொன்னான்.
“பரவால்ல” அவளிடம் நிறையவே ஒதுக்கம் தெரிந்தது. அவளைப் பெண் பார்த்து பூ முடிந்ததில் இருந்து திருமணமானது வரை அவன் அனுப்பிய முதல் வார்த்தையும், பேசிய முதல் வார்த்தையும் தயை கோரலாக இருக்கவே அவளின் உவகைக்குப் பஞ்சமாகிப் போனது.
“நம்ம கடைய கொஞ்சம் ரீடிஸைன் பண்ணிட்டு இருந்தோம். அதான் உன்கிட்ட பேசவே டைம் கிடைக்கல. நேத்து தான் அந்த வேலையே முடிஞ்சுது. அதுக்குள்ள, இப்போ ஒரு பிரச்சனை”
“ஓ… பிரச்சனை முடிஞ்சுதுங்களா?”
“ஆன், முடிஞ்சுது. அதான் பாதி வழியிலயே திரும்பி வந்துட்டேன்”
“ஓகே…” அவளுக்குப் பிடிக்காத தொழிலைப் பற்றிய பேச்சினை அவன் எடுக்க, அவளது குரல் மென்மேலும் உள்வாங்கியது.
“கல்யாணத்தப் பத்தி, இந்த நாளப் பத்தி எதாவது ஐடியா இருக்கா, மாது?”
“கொஞ்சம் கொஞ்சம் தெரியும்”
“திருமண வாழ்க்கைல உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்னென்ன?”
“பெருசா எதுவும் இல்ல”
“தயங்காமச் சொல்லுங்க”
“மூனு வேளை சாப்பாடு, தங்குறதுக்கு இடம், நாள் கிழமைனா நல்லதா ஒரு துணிமணி, முக்கியமா கடன் பிரச்சனை இல்லாம இருக்கணும். எனக்கு சந்தோஷத்த விட நிம்மதி முக்கியம். நானா யார் வம்புக்கும் போக மாட்டேன். மத்தவங்களும் அந்த லிமிட்ல இருந்துட்டா போதும்” அவள் நிதானத்தோடு கூறி அவனை ஏறிட, அவன் மௌனியாகி இருந்தான் “நான் அதிகமா எதுக்கும் ஆசைப்பட மாட்டேன். இதுவரை அப்படித் தான்”
“என்னைப் பத்தி எதுவும் கேக்க மாட்டீங்களா?”
“யாரும் அவங்களப் பத்தி அவங்களே குறையா சொல்லிக்க மாட்டாங்க. அதனால, நானே பாத்துத் தெரிஞ்சுக்குறேன். பிடிச்சோ, பிடிக்காமலோ நம்ம வாழ்க்கை ஒன்னு சேந்துடுச்சு. வாழ்ந்து தானே ஆகணும்”
‘எனக்குப் பிடிச்சுத் தான் இந்தக் கல்யாணம் நடந்துச்சு’ என்று சொல்ல அவனது வாய் பரபரத்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் “என்னைப் பத்தின குறைய நானே சொல்லட்டா? நீங்க கேக்க ரெடியா?”
“சொல்லுங்க” அவளுக்கும் ஒரு துளி ஆர்வம் துளிர்த்தது.
“நான் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குற ஆளுங்க. ஊருக்கு ஒரு கெடுதல்னா, முதல்ல நான் என் குடும்பத்தைத் தான் சேஃப்டி பண்ணுவேன். அப்பறம் தான் மத்தவங்களாம். என் குடும்பம்னா என் அம்மா, தங்கச்சிங்க மட்டுமில்ல; எங்க மாமா குடும்பத்தையும் சேத்துத் தான் சொல்றேன். அந்த லிஸ்ட்ல இப்போ நீங்களும் உங்க அப்பா, அம்மா, தம்பியும் சேந்துட்டீங்க”
அவளோ மறுபடியும் தலை குனிந்து கொண்டாள்.
“ஏங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்க?”
“நீங்க முதல்ல பேசுனதுலாம் சரி தான். எனக்குப் புரியுது. ஆனா… நீங்க கடைசியா சொன்னது, லைட்டா ஐஸ் வைக்குற மாதிரி இருக்குங்க”
“என்னங்க நீங்க? ரொம்ப தான் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் போல நடந்துக்குறீங்க. போங்க!”
“அதெல்லாம் விடுங்க. உங்களோட இன்டென்ஷன் என்னனு சொல்றீங்களா? எனக்குப் பதட்டமாவது குறையும்”
“இன்டென்ஷனா?”
“ம்ம். வெளிப்படையா சொல்லிடுங்க”
“அப்படிலாம் நான் எதையும் முடிவெடுத்து வரலைங்க. நடக்குறது நடக்கட்டும்”
“புரியல”
“உங்க விருப்பத்தோட இன்னைக்கு அது நடந்தாலும் சரி; நடக்கலைன்னாலும் சரி”
“என் விருப்பத்தோடனா அது இந்த ஜென்மத்துல நடக்காதுங்க” அவளுடைய கூற்றின் எதிர்மறைத் தன்மைக்கு மாறாக அவள் புன்னகைத்தாள்.
“ஏங்க அப்படிச் சொல்றீங்க?” புது மாப்பிள்ளையானவன் திகைத்தான்.
உள்ளத்தில் இருப்பதை அவனிடம் சொல்வதா, வேண்டாமா என்று அவள் தயங்கினாள்.
“மாது… என்ன?” அவன் கேள்வியாகக் கையுயர்த்தினான்.
“எனக்கு… நீங்க செய்யுற தொழில்ல இஷ்டம் இல்லைங்க. எங்க அப்பா குடிச்சுக் குடிச்சே தான் நாசமா போயிட்டாரு. அதையே நீங்க பொழப்புக்காகச் செய்யறது எனக்குப் பிடிக்கல”
அவனுக்கு இருதயம் நின்று துடித்தது “அப்டீனா… கல்யாணம் வேணாம்னு சொல்லிருக்கலாமே”
“அம்மா சொன்னாங்க; வேலைய வச்சு ஆள எடைபோடாதன்னு… எனக்கு உங்களப் பத்தி ஒரு ஐடியாவும் இல்லைங்க. அப்பறம் எப்படி என் விருப்பத்தோட அது நடக்கும். உங்களுக்கு வேணும்னா நடத்திக்கங்க”
‘நடத்திக்கணுமா? இவ என்ன பேசுறா!’ அவன் சிலையாகச் சமைந்து போனான்.
சில விநாடிகள் கழித்து அவள் அவனை மருண்ட பார்வையுடன் ஏறிட்டாள் “நான் தப்பா எதுவும்…”
“இல்லல்லல்ல. நாம பேசுன வரைக்கும் போதும். மீதிய நாளைக்குப் பேசிக்கலாம். எனக்குத் தூக்கம் வருது” என்றவன் விளக்கை அணைத்துவிட்டு, கீழே பாய் விரித்துப் படுத்துக் கொண்டான்.
தான் பேசியது அவனை ஏதோ ஒரு வகையில் பாதித்து விட்டது என அவளுக்குப் புரிந்தது. ஆனால், அவனைச் சமாதானப்படுத்த அவள் விழையவில்லை. சிறிது நேரம் உறக்கம் வராமல் பிரண்டவள் தன் அலைபேசியைக் கையில் எடுத்தாள். அவனின் எண்ணை வெறுமனே ‘H’ என்று சேமித்து அவள் உள்நோக்க, அதன் முகப்புப்படமாக அவர்களின் திருமணப் புகைப்படம் பளிச்சிட்டது. திரையை அமர்த்திவிட்டு ஒருமுறை அவனது முதுகுப்புறத்தை அவள் ஆராய்ச்சிப் பார்வையிட்டாள். சீரான சுவாசம் அவன் உறங்கிவிட்டதை உறுதிப்படுத்த, அவளும் வேறுபுறம் திரும்பி உறங்கிப் போனாள். அடுத்த நாள் அவள் எழுந்தபோது குழந்தைகளின் கூச்சல் காதைக் கிழித்தது.
“ஏ, அத்தை தூங்குறாங்க. கத்தாதீங்கடா. மாமா அடிச்சுப் போட்ருவாரு” என்ற சிந்தாமணியின் அதட்டலில் அவள் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தாள்.
இரவு கீழே கிடந்த பாயையும் ஆளையும் காணவில்லை. கதவு இலேசாகத் திறந்து கிடக்க, அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
‘இந்த மனுஷன் சொல்லாம கொள்ளாம எங்கப் போனாரு?’ என்று யோசித்தவள் கதவைத் தாழிட்டுவிட்டுக் குளிக்கச் சென்றாள்.
அவள் ஈரமான கூந்தலை உலர்த்தியபடி வெளியே வர, வரவேற்பறையில் அவனைத் தவிர அனைவரும் இருந்தனர். அவள் சங்கடமான சிரிப்புடன் அவர்களைக் கடந்து சமையலறைக்குள் நுழைந்தாள்.
அவளுக்குப் பாலாற்றித் தந்த சிந்தாமணி “தலை வாரி ரெடியாகிக்கமா. சுரேஷ் வீட்டுக்கு விருந்துக்குப் போகணும்” என்றார்.
“எது, சென்னைக்கா?” அவள் அறியாமையில் கேட்டாள்.
“அத்தை, மாமா இருந்த வீடு இங்க ஒன்னு இருக்கு, அண்ணி. நாங்க லீவுக்கு வந்தா அங்கத் தான் தங்குவோம். அங்கத் தான் இப்போ நாம போகப் போறோம்” என்றாள் சுதா வெளியிலிருந்தபடி.
“அப்படினா சரி” என்றவள் பாலை ஒரே மடக்கில் கவிழ்த்துக் கொண்டு, உடை மாற்றி வந்தாள்.
சுதாவும் சுரேஷும் காரில் ஏறி அமர, மற்றவர்கள் அவர்களை வழியனுப்ப வாயில் வரை வந்தனர்.
“அத்தை, அவரு எங்க? நேரா அங்க வந்துடுவாரா?” என்று வினவினாள் மாது.
“இல்லமா. யாருக்கோ காசு செட்டில் பண்ணணும்னு நேரமா கிளம்பிப் போயிட்டான். நீ மட்டும் போயிட்டு வந்துடு” அவர் வாஞ்சையுடன் கூற, அவளோ முகம் வாடினாள்.
அடுத்த நாள் ரிஷியின் இல்லத்தில் விருந்து ஏற்பாடாகி இருந்தது. அங்கும் அவன் உடன் வரவில்லை. அவன் மது விடுதிக்குத் தேவையான சரக்குகளை, வாகனத்திலிருந்து இறக்கி வைக்கச் சென்றிருப்பதாக ரம்யா தெரிவித்தாள்.
அன்று மாலையில் வீடு வந்தவள் நேராக அத்தையிடம் சென்றாள் “நாளைக்கு எங்கயாவது போகணுமா, அத்தை?”
“ஆமாம்மா. இன்னும் முல்லை வீட்டுக்குப் போகாம இருக்குல்ல. முக்கியமானவங்க இவங்க மூனு பேரு தான். மத்த விருந்தலாம் பொறுமையா பாத்துக்கலாம்”
“எனக்கு விருந்துக்குப் போறதுல சிரமம் இல்ல, அத்தை. இனிமே உங்க பையன் கூட வந்தா தான் விருந்துக்கே போவேன். இல்லைனா, நான் போகலை” அவள் முடிவாகச் சொன்னாள்.
“போன வாரமே முடிக்க வேண்டிய வேலைமா. முடியாம இழுத்துட்டு நிக்குது. அவன் இப்படிலாம் நடந்துக்குற ஆள் இல்லை தான்…”
“பரவால்ல, அத்தை. நான் கொண்டு வந்த பொருள்லாம் அது அது அப்படியே கிடக்கு. அந்த வேலையப் பாக்குறனே”
“சரிம்மா. உன் இஷ்டம்” என்று அவர் ஒப்புதல் அளிக்கவும் அவளுக்கு இரு நாட்கள் அதிலேயே ஓடிப் போனது.
அடுத்து வந்த சனிக்கிழமையில் அந்த வீடே வெறிச்சோடிக் கிடந்தது. சுலோ கல்லூரிக்குச் சென்றிருக்க, சிந்தாமணி மட்டுமே வீட்டிலிருந்தார்.
“அத்தை, நான் எங்க வீட்டுக்குப் போயிட்டு வரேன்” என்று அவள் முனைப்புடன் கூற
அவர் அவளிடம் இலகுவாக வினவினார் “மதுகிட்ட சொல்லிட்டியாமா?”
“இல்லையே” அவள் சிந்தை வயப்பட்டு அசையாதிருந்தாள்.
“ஒரு வார்த்தை அவன்ட்ட சொல்லிடுமா”
அவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவள் அலைபேசியை அழுத்தினாள் “ஹலோ, ம்… ம… என்னங்க! நான் மாது பேசுறேன்”
“சொல்லு”
“வீட்டுலயே இருக்க போர் அடிக்குது. அம்மா வீடு வரைக்கும் போய்ட்டு வரவா?”
“இப்போ எங்க இருக்க?”
“நம்ம வீட்டுல இருக்கேன்”
“நீ அங்கயே இரு. எங்கயும் போக வேணாம்” என்று கூறி அவன் அழைப்பைத் துண்டித்தான்.
மகன் எப்படியும் சம்மதித்திருப்பான் என்ற நம்பிக்கையில் “அவன்ட்ட சொல்லிட்டல்ல. போயிட்டு வாமா” என்றார் சிந்தாமணி.
“அவரு போக வேணாம்னு சொல்லிட்டாரு, அத்தை”
“அப்படியா சொன்னான்?” அவரால் அறவே நம்ப இயலவில்லை.
“ம்ம்” அவள் வாட்டத்துடன் ஆமோதித்தாள்.
“அவன் வேற எதோ நினைப்புல சொல்லிருப்பான். நீ கிளம்பு. நான் பேசிக்குறேன்” என்றார் அவர் சமாதானமாய்.
“இல்ல, அத்தை. நான் போகல” என்றவள் மீண்டும் அறைக்குள் புகுந்து அடைந்து கொண்டாள்.
அவர் உடனே மகனுக்கு அழைப்பு விடுக்க, அவன் அதை ஏற்பதாகத் தெரியவில்லை. அடுத்த சில கணங்களில் அவனது இருசக்கர வாகனம் வரும் சத்தம் கேட்டது. அவர் ஆவலுடன் வெளியே எட்டிப் பார்க்க, ஒரு கரத்தால் ‘எங்கே’ என்று வினவியபடி வரவேற்பறைக்குள் வந்தான் மகன். புன்னகையுடன் உள்ளே கைக்காட்டியவர், துணி துவைக்கும் நோக்கில் மாடிக்கு நடந்தார்.
அறையினுள்ளே மாது தன் தம்பியிடம் புகைந்து கொண்டிருந்தாள் “இல்லடா. நான் அங்க வரல”
“இப்போ தான வரேன்னு சொன்ன?” மறுமுனையில் இருந்தவன் குழப்பமடைந்தான்.
“ஆமா, சொன்னேன். இப்போ வரப் பிடிக்கல. போதுமா?” என்று சத்தமிட்டவள் அலைபேசியை மெத்தையில் எறிந்தாள்.
அவள் கட்டிலில் அமர்ந்து கண்ணீர் வடிக்க, “மாதுளை” என்றான் மதுசூதனன் பின்னிருந்து.
அவள் தன்னிச்சையாகத் திரும்பி நோக்க, “அத்தை வீட்டுக்குப் போகணும்னு சொன்னியே. ரெடியாயிட்டு வா” என்று கூறி வெளியே நடந்தான் அவன்.
நம்மைக் காரணமே இல்லாமல் அழ வைத்துவிட்டு நேரில் வந்து நிற்கிறானே! இதை அலைபேசியிலேயே சொல்லியிருந்தால் ஆகாதாமா? பல்வேறு எண்ணவோட்டங்களுடன் முகங்கழுவி வந்தவள், அத்தையிடம் சொல்லிக் கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்தாள். அவன் ஒரு பூக்கடையின் முன் வாகனத்தை நிறுத்த, அவள் காரணம் கேட்காமலே இறங்கிக் கொண்டாள்.
“அக்கா, மல்லி எவ்ளோ?” அவன் சட்டைப்பையைத் துலாவியவாறு கேட்டான்.
“முழம் நூறு ரூபா, கண்ணு”
“ரெண்டு முழம் தாங்க” என்று அவன் கூற
அவளோ அவசரமாக “அக்கா, ஒரு முழம் போதும்” என்று அளவைச் சுருக்கினாள்.
“ரோஸ் எவ்ளோ, அக்கா?” அவன் அடுத்த மலருக்குத் தாவினான்.
“ஒன்னு இருபது ரூபா, கண்ணு”
“ரெண்டு தாங்க”
“அதுவும் ஒன்னு போதும்” அவள் இடைப்புக
அவன் இம்முறை அவள் சொல்வதை ஏற்காமல், கடைக்காரரிடமே நேரடியாகப் பேசினான் “நீங்க ரெண்டு தாங்க. அதில்ல. சிவப்பு ரோஜா; ரெண்டு”
அவள் பூவை வாங்கிக் கொண்டு விழிக்க, “அவங்க ஹேர்பின் கொண்டு வரல. நீங்களே வச்சு விடுங்க” என்று அவனே தொடர்ந்தான்.
“அட்டை பத்து ரூபா, கண்ணு” கடைக்காரர் அதற்கும் கணக்கு பார்க்க
“ரெண்டு ஊசி தான. சும்மாவே வச்சு விடலாம். வச்சு விடுங்க” என்றான் மது நூற்று நாற்பது ரூபாய் சில்லறையை நீட்டி.
பூச்சூடிக் கொண்ட மாது வண்டியில் ஏற முனைய, “வீட்டுக்குப் பழம் ஏதாவது வாங்கு” என்று ஏவினான் அவன்.
கையில் பணம் ஏதும் இல்லாமல் வெறுங்கையோடு வந்திருந்தவள், சிரத்தையேதும் இன்றி பழக் கடையை வெறுமனே கண்ணுற்றாள். அவனே இறங்கிச் சென்று நாலைந்து வகை பழங்களை அள்ளிப் போட்டு, வாகனத்தைக் கிளப்பினான். பல நாட்கள் கழித்து வீடு வந்ததும் அவளுள் ஏதேதோ உணர்வுகள் பொங்கி வந்தன. அன்னையை ஒருமுறை தன்னோடு அவள் இறுக்கிக் கொண்டாள்; தம்பியின் சிகையைக் கலைத்து விளையாடினாள்; தந்தையை நலம் விசாரித்தாள்; அமுதாவின் இல்லத்திற்குப் போய் வாய் ஓயாமல் கதையளந்தாள். வளர்ப்பவர்களிடம் திரும்பிய செல்லப் பிராணியைப் போல ஒரே நேரத்தில் துள்ளலாகவும் ஆசுவாசமாகவும் உணர்ந்தாள் பெண்ணவள். மதுசூதனன் விருந்துண்டு முடித்துப் புறப்பட எத்தனிக்க, மகளை அவனின் பின்னோடு அனுப்பி வைத்தார் அர்ச்சனா.
அங்கே முத்துமாரி அவனது இரு சக்கர வாகனத்தை ஆசையுடன் வலம் வந்து கொண்டிருந்தான் “மாமா! புது வண்டியா, மாமா? இன்னும் ரெஜிஸ்டிரேஷன் கூட பண்ணலையா? நம்பர் பிளேட்ட காணும்”
“ஆமாடா. இப்போ தான் எடுத்தேன். ஓட்டிப் பாக்குறியா?”
“ஐயோ! வேணாம், மாமா. ஸ்கூல் முடியுற வரைக்கும் வண்டியில கை வைக்கக் கூடாதுனு அக்கா சொல்லிருக்கு. சொன்ன பேச்சைக் கேக்கலைனா கை, கால்ல சூடு போட்ருவா. இராட்சஷி!” இவன் தன் தமக்கைக்கு மிச்சம் மீதம் வைக்காமல் புகழ்மாலை சூட்டினான்.
“நானும் ஜாக்கிரதையா இருக்கணும் போல!” மது சித்திரக்காளை கணக்காக நகைத்தான்.
அதைக் கேட்டு முத்துமாரியும் சிரித்தான் “உங்ககிட்ட அவ பருப்பு வேகுமானு தெர்லயே, மாமா. கொஞ்சம் சந்தேகம் தான். ஏன் மாமா பழைய மாடலா எடுத்துருக்கீங்க? ரேஸ் வண்டி மாதிரி எடுத்துருக்கலாம்”
“குடும்பஸ்தன் ஆயிட்டேன்ல, தம்பு. புயல் வேகத்துல பறந்த காலம்லாம் மலையேறிப் போச்சு!”
அவன் தன் தம்பியிடம் வெகு இயல்பாகப் பழகுவதை, அவள் அமைதியுடன் பார்த்து நின்றாள்.
“நீ பொறுமையா வா” என்று அவன் அவளை நோக்கி இயம்பிட, அவள் பதவிசாகத் தலையாட்டி வைத்தாள்.
வாகனத்தை முன்னோக்கிச் செலுத்தியவன் நிதானமாகப் பக்கவாட்டுக் கண்ணாடியைச் சரிசெய்ய, அது தன்னைக் காணவா அல்லது தெருவைக் காணவா எனப் புரியாமல் பார்த்திருந்தாள் பாவை.
***
திங்கட்கிழமை காலையில் அவள் பணிக்குத் தயாராக, முகம் பார்க்கும் கண்ணாடியின் அருகே ஒரு சிவப்பு ரோஜா அவளை நோக்கி இலையசைத்தது.
அவள் அதை விரல்குழந்தையைப் போல பார்த்துப் பக்குவமாக வெளியே சுமந்து வந்தாள் “அத்தை, இந்த ரோஸ் நீங்களா வாங்கி வச்சீங்க?”
“இல்லமா” என்றார் சிந்தாமணி மதியவேளைக்கான உணவைப் பாத்திரத்தில் இட்டபடி.
“சுலோ எதுவும் வாங்கி வச்சாளா?” அவளுக்குச் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.
அங்கே வந்த இளைய நாத்தனார் “நான் வாங்கி வைக்கல. ஆனா, என் டிரெஸ்ஸுக்கு இது மேட்ச் ஆகுது. நானே வச்சுக்கவா, அண்ணி?” என்று கேட்டதோடு அந்த மலரைத் தன் கையில் இடம்மாற்றிக் கொண்டாள்.
இவள் ஒரு தோள்பையை எடுத்துக் கொண்டு, ரோஜாவைக் கூந்தலில் செருகி, கல்லூரிக்குப் பறந்துவிட தனக்கு விருப்பமான மிட்டாயை மற்றொரு குழந்தை பறித்துக் கொண்டதைப் போல பாவமாய்க் காட்சியளித்தாள் மாது.
அவளைக் கவனித்துவிட்டு மென்னகை பூத்த சிந்தாமணி “அந்த ரோஸ் எங்க இருந்தது?” என்றார் அர்த்தமாய்.
“எங்க ரூம்ல இருந்தது, அத்தை”
“சுலோ அத வாங்கியிருந்தா, ஃப்ரிட்ஜ்ல தான் வச்சுருப்பா. அவ ஏன்மா உங்க பெட்ரூம்ல கொண்டு வந்து வைக்கப் போறா? நல்லா யோசி” என்று அவர் உரைக்கவும் இதய மையத்தில் ரோஜா முள் தைத்தாற்போல இருந்தது பாவைக்கு.
அடுத்த நாள் அவள் எழுந்தபோதும், கண்ணாடிக்கு அருகே, ஒரு சிவப்பு ரோஜா ஈரிலைகளை விரித்து அவளை வரவேற்றது. இம்முறை அவள் எந்த விசாரணையும் எழுப்பாமல், அதை நெஞ்சாற ஏற்று தனது சிகை மன்றத்தின் மகுடமாக்கினாள். அதைத் தனக்குப் பரிசளித்தவனின் முகம் கண்முன் தோன்றி மறைய, ரோஜா இதழ்களின் செம்மை அவளின் கன்னங்களுக்கும் பரவிற்று. அவள் தன் சேலை மடிப்பைச் சரிபார்த்துக் கொண்டே வெளியே வர, கல்லூரிக்கு எட்டு வைத்த சுலோவின் கூந்தலிலும் ஒரு சிவப்பு ரோஜா எட்டிப் பார்த்தது. அதில் அவளின் புன்னகை இருமடங்காக விரிந்தது. அத்தையார் அவளது சிகை அலங்காரத்தைக் கண்ணுற்று மகிழ்ந்தபடியே ஒரு தட்டில் சோற்றை நீட்டினார்.
“அத்தை, நீங்க பூ வைக்கறதில்லையா?”
“இல்லமா. உங்க மாமா செத்ததுக்கு அப்பறம் விட்டுட்டேன்”
“ஏன் அத்தை, நீங்க மாமாவ கல்யாணம் பண்ணதுக்கு அப்பறமா பூ வைக்க ஆரம்பிச்சீங்க?” அவள் ஒளிவு மறைவின்றி கேட்டாள்.
“இல்லமா” அவர் சலனமின்றி பதிலளித்தார்.
“அப்பறம் ஏன் அத்தை அவர் இல்லைனதும் பூ வைக்கறத நிறுத்தணும்!”
“அவர் வாங்கிக் கொடுத்து, நான் வச்சே பழகிட்டேன். அவர் போனதுக்கு அப்பறம் யாரும் பூ வேணுமான்னும் கேக்கல. எனக்கா வாங்கணும்னும் தோனல” அவரின் கூற்றில் அவளுக்கு ஏதோவொரு செய்தி பிடிபட்டு, நழுவியது.
அன்று இரவு மதுசூதனன் கடிகாரத்தின் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் மேல் நோக்கிக் கூடும் நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான்.
கதவைத் தாழிட்டு அவன் அறைக்குள் வர, அதிசயமாய் அவள் விழித்திருந்தாள் “வேலைலாம் முடிஞ்சுதுங்களா?”
“ம்ம்ம்”
“காலைல கோழி கூவுறதுக்கு முன்னாடியே எழுந்து எங்கப் போறீங்க?”
“டெய்லி அஞ்சு மணிக்கு லோடு வரும்மா. அத நாந்தான் பாத்து இறக்கி வைக்கணும்”
“இராத்திரி வர இவ்ளோ லேட்டாகுது!”
“கடை பத்து மணிக்கு க்ளோஸிங். கணக்கு வழக்குலாம் பாக்கணும்ல” அவன் தன் வெண்ணாடையைக் கழற்றிவிட்டு, டீசர்ட்டுக்கு மாறியபடியே விடை பகர்ந்தான்.
அவள் சத்தமிடுவாள், சண்டைக்கு வருவாள் என அவன் நினைத்திருக்க, “சரி” என்று சொல்லி அவள் படுத்துக் கொண்டாள்.
நிலைப்பேழைக் கண்ணாடியின் வழியே அவளின் இறுகிய முகம் கண்டவன், நீண்ட நேரமாக அவ்விடமே நின்று எதையோ தேடிக் கொண்டிருந்தான்; அவளுடைய முகத்தை மேலும் சிறிது நாழி தரிசித்திடும் நோக்கில். அவனின் நடமாட்டத்தை உணர்ந்தவள் சிறிதாக இமை விரித்துப் பார்த்துவிட்டு, மறுபுறம் திரும்பிப் படுத்தாள். முன்னர் அவளின் அழகு முகம் தெரிந்த இடத்தில் தன் நெடிய விரல் கொண்டு இதய வடிவத்தை வரைந்தவன், தான் தொலைத்தது எப்பொருள் எனவும் யாரிடம் எனவும் விளங்கிக் கொண்டவனாய் உறங்கச் சென்றான்.
***
2 comments
மாது ஏன் இவ்ளோ ஒதுக்கம் காட்டுறா?
மதுவைப் பத்தி அவளுக்கு எதுவும் தெரியாதுல்ல க்கா அதான் 😊