மறுநாள் காலையிலும் தன் பிரதிபலிப்பிற்குப் பக்கவாட்டில் ரோஜாவைக் கண்ட மாதுளை, அதையொத்து இதழ்களை விரித்து மலர்ந்தாள். அச்சிவப்பு மலரைச் சூடி, அதே நிறத்தில் பொட்டு வைத்து, அதே வர்ணப் புடவையணிந்து, நேற்று மாலை உள்ளூர்ப் பேருந்தில் கேள்வியுற்ற பாடலை முணுமுணுத்தபடியே அவள் வெளியே வர, அவளிற்கு முன்னதாகச் சமையலறையில் தட்டும் சோறுமாக நின்றிருந்தான் மதுசூதனன்.
“சாப்பிடுமா” என்று அவளுக்கும் ஒரு தட்டினை நீட்டினார் சிந்தாமணி.
“இன்னைக்கு வேலைக்குப் போகலையோ?” அவள் கேட்டதும் அழகான புன்னகையைச் சிந்தினான் அவன்.
அடுத்ததாகத் தாயிடம் திரும்பியவன் “பாருமா. நைட்லாம் என்ட்ட சண்டை கட்டி, என்னைத் தூங்க விடாம செஞ்சுட்டு இப்போ ஒன்னுமே தெரியாத மாதிரியே பேசுறா, ம்மா” என்று கொளுத்திப் போட்டான்.
“ஐயையோ, அத்தை! நான் சண்டையே போடல, அத்தை” அவளோ அவனது இப்புதுமையான நடவடிக்கையால் பதற்றமடைந்தாள்.
“அம்மா, நீயே சொல்லு. நான் என்னைக்காவது உன்கிட்ட பொய் சொல்லிருக்கேனா? சொல்லுமா”
“அத்தை, நான் என்ன கேட்டேன்னு நானே சொல்றேன். காலைல நேரமா போயிட்றீங்களே, இராத்திரி லேட்டா வரீங்களே, அப்படி என்ன தான் வேலை செய்றீங்கனு கேட்டேன். அதுக்குப் போய் உங்கள்ட்ட இப்படிலாம் கோத்து விட்றாரு. தப்பா நான் எதுவுமே கேக்கல, அத்தை”
“அம்மா, சுத்த பொய்! உங்களைக் கண்டிக்க ஆள் இல்லை; உங்க அம்மா பாசம் கொடுத்தே கெடுத்து வச்சுருக்காங்கன்னுலாம் சொன்னாமா இவ”
“என்னங்க! சும்மா இருங்க. அத்தை, இவரை நம்பாதீங்க” அவள் நயமாய்ச் சிணுங்கினாள்.
“கேட்டியாமா; பெத்த தாய்ட்டயே புள்ளைய நம்பக் கூடாதுனு சொல்லுறா. நம்ம ரெண்டு பேரையும் அவ பிரிக்கப் பாக்குறாமா. விடாத” அவனோ பாகுபலியின் விங்கலத் தேவர் மாதிரி ஏற்றி விட்டான்.
நல்லவேளையாக, அந்த சிவகாமி தேவியைப் போல இந்த சிந்தாமணி சூழ்ச்சியில் சிக்கவில்லை “டேய், கம்முனு இருடா. அவன் சும்மா விளையாட்றான்மா. தங்கச்சிங்க யாரும் இல்லைனா, இவன் இப்படித் தான் சேட்டையக் கூட்டுவான். நீ அவனைச் சட்டைய பிடிச்சுக் கேளுமா. நேரங்கெட்ட நேரத்துல ரெண்டு மணி, மூனு மணிக்குத் தான் வேலைய முடிச்சுட்டே வருவான். நாம கேட்டா காதுலயே போட்டுக்க மாட்டான். நீ தான் கேக்கணும்” அவர் அவளுக்குச் சகல உரிமைகளையும் வாரி வழங்கினார்.
“இதுவரை கேக்கல, அத்தை. இனிமேல் பாருங்க” அவள் அவனைக் கண்ணுற்றபடி மிதப்பாகக் கூறினாள்.
“முத்துமாரி அன்னைக்கே சொன்னான். சொல்பேச்சு கேக்கலைனு சூடு, கீடு போட்ற போற. நீ பாக்குற விதமே பயம்மா இருக்கு” அவன் பயமென்ற வார்த்தையை அழுத்திச் சொன்ன விதத்திலேயே, அவனுக்குப் பயமில்லை என்பது தெளிவானது.
அவன் உண்டு முடித்து, முன்னரே சென்று, தன் இருசக்கர வாகனத்தைத் துடைக்கலானான். கைப்பையை எடுத்துக் கொண்டு பின்னே வந்தவள், அவனைக் கண்டும் காணாமல் எப்போதும் போல நடையைக் கட்டினாள்.
வாகனத்தின் மீது ஏறி அமர்ந்தவன் “ஹலோ, ஹோன்டா கம்பனி ஓனருங்களா? என்னயா வண்டி தயாரிச்சு விக்குற! என் பொண்டாட்டிக்கு இதுல போறதுக்கு, பஸ்ல போறதே பரவால்லனு தோனுது போல. இப்படியே போனா கம்பனி தேறாதுயா; தேறவே தேறாது!” என்று அலைபேசியே இல்லாமல் காற்றில் அளவளாவிக் கொண்டிருந்தான்.
அதைக் கேட்டவள் திரும்பி நின்று உதடுகளைச் சுளித்தாள் “எதையும் நேராவே சொல்ல மாட்டீங்களா!”
“வாங்க, மேடம். வந்து என் வண்டியில உக்காருங்க. உங்களின் வருகைக்காகத் தான் இந்தப் பின்னிருக்கை ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறது”
‘பேச்சைப் பாரு; ரோட்ஸைட் ரோமியா மாதிரி!’ என்று உள்ளுக்குள்ளே முறுக்கியபடி தனக்கான இருக்கையை, தகுந்த இடைவெளிவிட்டு, நிரப்பினாள் அவள்.
“போலாமா, மேடம்? மனசுக்குள்ள என்னைத் திட்டிக்கிட்டே, முந்தானைய அலைபாய விட்ராதீங்க. பத்திரம்!” என்றான் அவன் பாதியளவே முகத்தைத் திருப்பி.
“என்ன?” அவள் பக்கவாட்டுக் கண்ணாடியின் ஊடாக அவனை முறைத்தாள்; பின்னே ஊஞ்சலாடிய தன் முந்தானையையும் மடியில் முடிந்து கொண்டாள்.
“பத்திரம்னு நான் என்னைச் சொன்னேன்” என்றவன் சட்டென்று கைப்பிடியை திருக, அவளின் மாராப்பு அவனுடைய பரந்த முதுகில் சென்று உரசி வைத்தது.
“பாத்துப் போங்க” என்றவள் மேலும் அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்தாள் “அப்படியே பஸ் ஸ்டான்ட் வழியா போயிடுவோம். மாரி என்ன செய்றான்னு ஒரு எட்டு பாத்துட்டுப் போவோம்”
அவன் சம்மதமாய்ப் பேருந்து நிலையத்திற்கு வண்டியை விட, காலையிலேயே அதிஅற்புதமான காட்சி ஒன்று அவ்விடம் அரங்கேறிக் கொண்டிருந்தது. முத்துமாரி பேருந்திற்காக அங்குக் காத்திருக்க, தனியார்ப் பள்ளிச் சீருடை அணிந்திருந்த ஒரு மாணவி அவனது சுருட்டை முடியை விரல்களால் அலைந்தவாறு கதையளந்து கொண்டிருந்தாள்.
“மச்சான் மாட்டிக்கிட்டான்!” மது நகைச்சுவையாகக் கூற
“ம்ச்ச், வண்டிய எடுங்க” என்றாள் அவள் அவர்களையே கூர்ந்தபடி.
அவ்விரு இளவயதினரும் தோளைத் தொட்டு, ஒருவரையொருவர் தள்ளிவிட்டுச் சிரித்தவாறே பள்ளி செல்லும் ஓர் அரசுப் பேருந்திலேறி மறைந்தனர்.
***
அன்றிரவு பத்தரை மணிக்கே வீடு திரும்பியிருந்த மதுசூதனன், மூன்று நான்கு நோட்டுப் புத்தகங்களை வைத்து மது விடுதியின் அன்றைய கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டிருந்தான். பாத்திரங்களைத் துலக்கி, சமையலறையை அப்புறப்படுத்தி விட்டு வந்த மாதுளை, அவனது எழுதுகோளுக்கு அருகே தன் அலைபேசியை நகர்த்தினாள். ஒளிர்ந்த அதன் திரையில் சித்தி, அத்தை, அமுதா, மற்றும் இன்னபிற உறவுகளும் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
“என்ன இது?” கட்டிலில் சம்மணமிட்டிருந்தவன் அவளைக் கேள்வியாக ஏறிட்டான்.
“எங்க வீட்டு ஸைடு விருந்துக்குப் போக வேண்டிய லிஸ்ட்டு. நான் உங்க தங்கச்சிங்க வீட்டு விருந்துக்குத் தனியா போனேன்ல. நீங்களும் தனியா போயிட்டு வந்துடுங்க” சாமர்த்தியமாகப் பேசுகிறோம் பேர்வழி என்று அவள் வாயைவிட்டாள்.
அதற்கு அதிர்வின்றி சிரித்தவன் “அது தானா உனக்குக் கோவம்! வா, இன்னொரு ரௌன்ட் சேந்து போயிட்டு வரலாம்” என்றான் அவன் அமர்த்தலாக.
“ஐயையோ, நான் வரலைப்பா!” என்று அலறியவள் அவனது பாயை எடுத்துக் கீழே விரித்தாள்; தான் அதில் படுப்பதற்காக.
“ஏ, கட்டில்ல வந்து படுத்துக்க. உனக்குக் கீழப் படுத்தா தூக்கம் வராது; சளி பிடிச்சுக்கும்னு அர்ச்சனா அத்தை சொன்னாங்க”
“அதெல்லாம் ஒன்னுமில்லயே!” என்றவள் அவன் சொல்லச் சொல்லக் கேட்காமல் தரையில் படுத்தாள்.
அவன் கணக்கு பார்த்து முடிக்க இரண்டு மணி நேரங்களுக்கும் மேலானது. அதுவரை அவள் தூக்கம் வராமல் பிரண்டு கொண்டே இருந்தாள். அவன் நோட்டுப் புத்தகங்களை ஓரங்கட்டிவிட்டு விளக்கை அணைத்து, கட்டிலில் சாய்ந்தான். அந்தக் கட்டில் முழுக்க அவளின் ஸ்பரிசம் இதமாய் நிரம்பிக் கிடந்தது. முதுகு வலியில் அவள் எழுந்தமர்ந்துவிட, அவன் அவளை நோக்கி விசிலடித்தான்.
“இதுக்குத் தான் புருஷன் சொன்னா கேக்கணும். கட்டுனவன்கிட்டயே பந்தா பண்ணக் கூடாது” என்றவன் அவளைக் கட்டிலுக்கு விரட்டிவிட்டு, கீழே வந்து படுத்துக் கொண்டான்.
“உங்களுக்குத் தரையில படுக்குறதால உடம்பு நோகலையா?” அவள் தூக்கம் வராமல் கேட்டாள்.
“இல்ல. நான் என்னைக்குமே சொகுசுக்குப் பழகுனது இல்ல. மேல போறவன்லாம் ஒரு நாள் கீழ வந்தே தீருவான். இந்தப் பாய், தலைகாணி இல்லாம கூட என்னால தூங்க முடியும்” என்று அவன் கூறி உறக்கத்தில் அமிழ்ந்துவிட, அது குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியவளுக்குத் தூக்கம் தூரப் போனது.
விடியலில் மாதுளையின் கரங்களால் பாலித்தீன் பையொன்று சரசரக்கும் சத்தம் கேட்டு அவன் கண்விழித்தான். அவன் தன் அலைபேசியைத் துலாவி எடுக்க, நேரம் அப்போது தான் நான்கைரையைத் தொட இருந்தது. மாது அந்நேரத்திற்கு எழும் ஆளில்லை என்று அவன் நன்கறிவான்.
அவன் விழிப்புற்றதைக் கண்டு கொண்டவள் “நீங்க குளிச்சுட்டு வந்துட்றீங்களா? நான் குளிக்கப் போகணும்” என்றாள்.
“வந்து குளிச்சுக்கிறேன்” என்றவன் தூக்கக் கலக்கத்தோடே ஒரு சட்டையை அணிந்து கொண்டு மது விடுதிக்குப் புறப்பட்டான்.
“இருங்க. தூக்கம் கலையுற மாதிரி கொஞ்சம் டீ குடிச்சுட்டுப் போங்க. வண்டி ஓட்டணும்ல!” என்றவள் அவசர கதியில் ஒரு கோப்பை தேநீரைத் தயாரித்து வந்து நீட்டினாள்.
அவன் அதை வாங்கிக் கொள்ளவும் அவள் குளியலறைக்குள் நுழைந்து கதவடைத்தாள். அவன் கடைக்கான
சரக்குகளை இறக்கி வைத்துவிட்டுத் திரும்பி வந்தபோது, சுலோ தூங்கி வழிந்தபடியே வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். சமையலறையில் மருமகளும் மாமியாரும் சேர்ந்து கொண்டு அரிசிச் சோற்றோடு, கதை வடிக்கும் ஒலியும் ஒலித்தது. முதல் காரியமாக அவன் தன் சட்டைப் பையிலிருந்த புது ரோஜாவிற்கு, அலமாரியில் அரியாசனம் தேடிக் கொடுத்தான். அதன் காம்பு கூட கசங்காமல் மலர் சூடிக் கொண்ட மாது நேரத்தோடு கிளம்பி நிற்க, அவனும் அவளுக்கு ஈடு கொடுத்துத் தயாரானான்.
அவனோடு வாகனத்தில் ஏறி அமர்ந்தவள் “கோவிலுக்குப் போயிட்டு காலேஜுக்குப் போலாம்ங்க” என்றாள்.
“உனக்கு இன்னைக்கு பீரியட்ஸுனு நினைச்சேன்” அவன் மெதுவாகக் கூறினான்.
“ஆமாம். அதனால, கோயிலுக்குப் போகக் கூடாதுனு எதுவும் இருக்கா?”
“அப்படித் தான் இதுவரை பாத்துருக்கேன்”
“எங்க அம்மா அப்படி என்னைப் பழக்கலையே!”
“நல்லது. போலாங்களா, மேடம்?” என்றவன் அருகிலிருந்த கோவிலுக்கு வாகனத்தைச் செலுத்தினான்.
ஒன்றிரண்டு பக்தர்களோடு, அணில்களின் தாவல்களோடு, சின்னஞ்சிறு குருவிகளின் கீச்சுக் குரல்களோடு, புறா இறக்கைகளின் படபடப்புகளோடு அவர்களை இனிதே வரவேற்றது அந்த ஆலயம். இருவருக்கும் அந்தக் காலைப் பொழுது மிகவும் இரம்மியமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.
***
கல்லூரி மதிய வேளையின் போது அவள் பாடமெடுக்கத் துவங்க, மாணவர்கள் அனைவரும் தூங்கித் தூங்கி வழிந்தனர்.
“என்னாச்சு, பசங்களா? மதியம் ஹாஸ்டல்ல செம கட்டா! இப்படிச் சொக்கி விழறீங்க?”
“காலைல இருந்து எல்லாரும் கிளாஸா எடுத்துத் தள்றாங்க, மேம். முடியல. நாங்களும் எவ்வளவு நேரம் தான் படிப்பாளிங்க மாதிரியே நடிக்கிறது!” என்று ஒருவன் நித்திரைச் சுருதியிலேயே கூற, அவளுடன் சேர்ந்து சக மாணவர்களும் கலகலத்தனர்.
“அப்போ கிளாஸ நிப்பாட்டிட்டு, சர்ப்ரைஸ் டெஸ்ட் வச்சிருவோமா?”
“ஐயோ! அதுக்கு நீங்க கிளாஸே எடுத்துட்டுப் போயிரலாம்” அவசரமாக ஒரு மாணவி அந்த விஷப் பரீட்சைக்குத் தடா இட்டாள்.
“வேற என்ன செய்யலாம்? பசங்களத் தூங்க விட்டு கிளாஸ் எடுக்குறது என்னோட பாலிஸி இல்லையே” அவள் விரலிடுக்கிலிருந்த சுண்ணக் கட்டிக்கு மேசையில் ஓய்வு கொடுத்தவாறு சொன்னாள்.
“மேம், உங்க மேரேஜ் லைஃப் எப்படிப் போகுது?” முதல் இருக்கை மாணவி ஆர்வத்துடன் வினவினாள்.
“அது இப்போ ரொம்ப முக்கியம்! அதைத் தான் செம் எக்ஸாம்ல கேக்கப் போறாங்களா?”
“எப்போவும் புஸ்தகத்தக் கட்டிட்டுத் தான அழறோம். கொஞ்சம் வாழ்க்கைப் பாடத்தையும் கத்துக்கலாமேன்னு…” அருகிலிருந்த தோழி கண்களாலே கெஞ்சினாள்.
“டீச்சர்ஸோட பெர்சனல தெரிஞ்சுக்க அவ்ளோ ஆர்வம்!” அவள் கையிலிருந்த சுண்ணாம்புத் துகள்களைத் தட்டிவிட்டுக் கொண்டே புருவம் உயர்த்தினாள்.
“அப்போ தான் மேம் ஈஸியா கனெக்ட் பண்ணிக்க முடியுது” என்றான் மற்றொரு மாணவன்.
“என் மேரேஜ் லைஃபுக்கு என்ன; அது பாட்டுக்குப் போகுது!”
“முதல்ல ஸ்மூத்தா தான் போகும்; போகப் போக குண்டுங்குழியுமா இருக்கும்னு சொல்றாங்களே. அது உண்மையா, மேம்?” வேறொரு மாணவி கேட்டாள்.
“அந்தளவுக்கு எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் பத்தாதே. அடுத்த செம்ல வேணா சொல்றேன்”
“உங்க ஹஸ்பன்ட் பேரு என்ன, மேம்?” மீண்டும் முதலிருக்கை மாணவி வினா வீசினாள்.
“மதுசூதனன்” அவள் நிமிர்வாகக் கூறினாள்.
மற்றொரு மாணவனின் கேள்வி “ஸார் என்ன வேலை பாக்குறாரு, மேம்?”
“சொந்தமா பிசினெஸ் பண்றாருடா”
அதைத் தொடர்ந்து இயல்பான அடுத்த கேள்வியும் வந்து விழுந்தது “என்ன பிசினெஸ், மேம்? அது தெரிஞ்சா நாங்களும் இன்ஸ்பையர் ஆவோம், இல்லையா!”
அவளுக்கோ நெஞ்சத்தின் ஆழத்தில் நெருடல் ஆரம்பமானது “இன்ஸ்பையர் ஆகுற அளவுக்குப் பெருசா எதுவும் இல்ல”
அவளுடைய கணவனின் வருவாய் மூலத்தை வகுப்பிற்கே பட்டவர்த்தனமாக்கினான் மற்றொரு மாணவன் “பஸ் ஸ்டான்ட் பின்னாடி இருக்குற மிஸ்டிக் பார் உங்களோடது தானா, மேடம்?”
“ஆமாடா. அதுக்குத் தான் சொல்றேன்; அதைப் பாத்துலாம் நீங்க இன்ஸ்பையர் ஆக வேணாம். நீங்க யாரும் அந்தப் பக்கம் எட்டி கூட பாக்கக் கூடாது. என்னைக்கு ஒருத்தன் கிளாஸ கையில எடுக்குறானோ, அன்னைக்கே அவன் லைஃப் குளோஸுனு அர்த்தம். அத்தோட அவனோட இலட்சியம், குடும்பம், குறிக்கோள் எல்லாம் குழிக்குள்ள போயிடுது. கவனமா இருங்க, பசங்களா! ஆரம்பத்துல எல்லாரும் அதை ஒரு திரில்லுக்காகத் தான் செய்றாங்க; அடுத்த கொஞ்ச நாள்லயே திரும்பி வர முடியாத தூரத்துக்குப் போய்ச் சிக்கிடுறாங்க. போதைக்கு அடிமையாகுறதுங்குறது ஒருவழிப் பாதை; சேதாரம் இல்லாம திரும்பி வர முடியாது” அவள் தன் கரங்களைக் கட்டிக் கொண்டு நிதானமாக எடுத்துரைத்தாள்.
முதலிருக்கை மாணவி வாயடைத்துப் போய் அமர்ந்திருக்க, அருகிலிருந்தவள் வினவினாள் “ஏன் மேம், நம்ம ஐடியாலஜி ஒத்துப் போகாதவங்களோட எப்படி ஃபேமிலிய ரன் பண்றது? உங்களோட கருத்தும் மது ஸாரோட கருத்தும் ஒன்னுக்கொன்னு முரண்படுதே. முதல்ல எப்படி இந்தக் கல்யாணம் பாசிபிள் ஆச்சு, மேம்?”
“லவ்வுக்கும் நமக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே. எதுவும் செட்டாகல. வேற வழி!” என்று அவள் புன்னகையுடன் கூறவும் அனைவரும் சிரித்து வைத்தனர் “ஜோக்ஸ் அபார்ட், நம்ம குடும்பத்துலயே ஒருத்தருக்கு இறை நம்பிக்கை ஜாஸ்தியா இருக்கும்; ஒருத்தர் சாமிங்குறதே வெறும் கல்லுன்னு சொல்வாங்க. நமக்குத் தெரிஞ்சவங்கள்லயே, ஒருத்தங்க அளவுக்கதிகமா நல்ல சகுனம் பாப்பாங்க. ஒரு சிலர் வருஷத்துல முந்நூத்தறுபது நாளும் அசைவம் சாப்பிடுவாங்க. வேற சிலர் அசைவம்னாலே முகத்தச் சுளிப்பாங்க. நம்ம எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி இல்லைங்கறதுக்காக ஒவ்வொருத்தரா ஒதுக்கி வைக்க ஆரம்பிச்சா, கடைசில ஒத்தையில தான் நிக்கணும். ஆஃப்டர் ஆல், மனுஷன் ஒரு சமூக விலங்கு. நம்மளால துணை இல்லாம உயிர் வாழ முடியாது. அதனால, விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தான்”
“கல்யாணம்னாலே பயம் வருது, மேம்!” என்றாள் முதலிருக்கை மாணவி கண்களைப் பொத்திய வண்ணம்.
“நானும் கல்யாணத்துக்கு முன்னாடி இதே டயலாக் தான்மா சொல்லிட்டு இருந்தேன். நம்மூர் பொண்ணுங்களுக்கு அதுல சாய்ஸே கிடையாது. கல்யாணம்குறத கட்டாய வினாவாக்கி வச்சிருக்காங்க”
“கல்யாணம் பண்ணாமலே வாழ்க்கைல பாஸ் ஆக வழி இருக்கா, மேம்?” அருகிலிருந்த மாணவி, ஆசிரியர் வழங்கிய சுதந்திரத்தில், முனைப்புடன் கேட்டாள்.
“அந்த டாக்டிக்ஸ் எனக்குத் தெரிஞ்சுருந்தா, நான் ஏன் இந்த நிலைமைல மாட்டிருக்கப் போறேன்!” என்று சொல்லிச் சிரித்தாள் மாது. இறுதி இருக்கையைச் சேர்ந்த மாணவன் கொட்டாவி விட “ஒருத்தருக்குக் கதை கேட்டுக் கேட்டு தூக்கம் வந்துருச்சு. நாம பாடத்துக்குப் போயிடலாம். இன்னைக்கு நாம பாக்கப் போற டாப்பிக்; வெக்டார்ஸ்” என்றவள் மும்முரமாகப் பாடம் கற்பிக்கத் துவங்கினாள்.
***
அன்று மாலை பிறந்தகத்தில்…
“மாப்பிள்ளை வீட்டுல அனுசரிச்சுப் போறியா? இல்ல, எதுக்கெடுத்தாலும் முறுக்கிட்டு நிக்குறியா?” என்றார் அர்ச்சனா தேவி மகளுக்குப் பிடித்த கொண்டைக் கடலையை அவித்தபடி.
“அமைதியா தான் போறேன்” அவள் சலிப்புடன் கூறினாள்.
“மாப்பிள்ளை உன்னை சந்தோஷமா வச்சுக்குறாரா?”
அவள் பதில் கூறவே சங்கடப்பட்டாள் “ஆன்”
“குழந்தை பொறக்குறதைத் தள்ளி போடுற வேலைலாம் வச்சுக்காதீங்க. அப்படித் தான் உன் சித்தி பொண்ணு நாலு வருஷம் தள்ளிப் போட்டுட்டா. இப்போ டிரீட்மென்டுக்காக ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியா அலையுறா”
அதற்கும் வெறுமனே முனகி வைத்தாள் மாது “ம்ம்ம்”
“அதைத் தான் நீங்களும் செஞ்சிட்டு இருக்கீங்களா?” என்றார் அவர் குற்றஞ்சாட்டும் பாவனையில்.
“அம்மா, ஏன்மா? டிபிகல் மம்மி மாதிரி நடந்துக்காத. எங்களோட தனிப்பட்ட விவகாரத்துல மூக்கை நுழைக்கறத நிறுத்து” மகள் அழுத்தமாகக் கூறினாள்.
“சரி, சரி. காலைலயும் முடிஞ்சா நீயே எழுந்து சமைச்சிரு. உங்க மாமியாருக்கு வேலை வைக்காத”
“என்னால முடிஞ்சா செய்ய மாட்டனா? நைட் மட்டுந்தான் செய்ய முடியுது. காலைல வேலைக்குக் கிளம்பவே நேரம் சரியா இருக்கு”
“உங்க நாத்தனாருங்க கூடலாம் ஃபோன் போட்டுப் பேசுறியா?”
“காரணமே இல்லாம என்ன பேசச் சொல்லுற?”
“சும்மா கூப்பிட்டு, பிள்ளைங்க எப்படி இருக்காங்க; அண்ணா எப்படி இருக்காருன்னு கேக்க வேண்டியது தான். காசா, பணமா?”
“எதுவும் அவசியம்னா பேசிக்கிறேன். தொடக்கத்துல ஒட்டி உறவாடிட்டு, அப்பறம் எதுனா சண்டைனா பிச்சிக்கிட்டுப் போறதுக்கா! உனக்கும் உன் நாத்தனாருக்கும் அப்படித் தான முட்டலும் மோதலுமா போகுது”
“எங்க கதைய விடு. அவளாம் நாத்தானரா அவ? போறாமை புடிச்சவ!”
“நாம வாழுற வாழ்க்கைக்குப் போறாமை வேற புடிக்குறாங்களாக்கும்” அவள் இகழ்ச்சியாக இதழ் வளைத்தாள்.
“உனக்கு நல்ல இடத்துல சம்பந்தம் அமைஞ்சதுல உங்க அத்தைக்காரிக்கு எவ்ளோ வகுத்தெரிச்சல், தெரியுமா? நீ என்னத்த கண்ட! நாம ஒரு நாள் சந்தோஷமா இருந்துட்டாலும் சுத்தியுள்ள ஒருத்திக்கும் பொறுக்காது. மாப்பிள்ளை வீட்டுக்கு வந்ததுமே சுத்திப் போட்டுரு. இவளுங்க கண்ணுலாம் பொல்லாத கண்ணு!”
“ஆமா, அவரு அப்படியே குழந்தை. சுத்திப் போடுறாங்க!” அவள் மெல்லிய குரலில் முனகினாள்.
“என்ன, பாப்பா?” அன்னை கிடுக்கிப்பிடி வீச
“போட்றேன்மா, சுத்திப் போட்றேன்” ஒப்புக்குத் தலையசைத்து வைத்தாள் மகள்.
“ஆமா, இந்த அப்பா எங்கப் போச்சு?” என்று அவள் கேட்ட நேரம் சரியில்லாத நேரமாகப் போயிற்று.
அவளின் தந்தை முழு போதையில் தள்ளாடிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார். அதைச் சாளரத்தின் ஊடே கண்ட தாயும் மகளும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
“ஏய், அர்ச்சனா! என்னாடி மாப்பிள்ளை பாத்து வச்சிருக்க? ஒரு வாய் சரக்கு கூட தர மாட்டேன்னுட்டான் நாதாரி…” அவரது வாயைப் போலவே வார்த்தைகளும் நாற்றமடித்தன.
“யோவ், நாந்தான் குடிக்குறதுக்குனு ஒரு நாள் விட்டு ஒரு நாள் காசு தரேன்ல. அது போதலையா உனக்கு? ஏற்கனவே மானத்த வாங்குனதுலாம் போதாதுன்னு, மாப்பிள்ளையோட கடை வரைக்கும் போயிட்டியா நீயு! அவ புருஷன் வீட்டுக்குப் போய் நிம்மதியா வாழ்றதா, வேணாமாய்யா?”
அர்ச்சனா காரஞ்சாரமாகப் பேசியது எதுவும் அவருக்கு உரைக்கவேயில்லை “அந்தப் பிச்சைக்காரப் பய கூட என் பொண்ணு இனிமே வாழவே கூடாது. அந்தத் தாலிய இப்பயே, இங்கயே கழட்டி கையில கொடு. அவன் முகரைல போய் வீசிட்டு வரேன்” என்று ஆவேசமாகக் கூறியவர் தாலியைப் பறிக்கும் நோக்கோடு முன்னேற, மகள் உடல் நடுங்கி, உள்ளம் துடிக்க இரண்டடிகள் பின்னேறினாள்.
கண்முன் தெரியாமல் வீட்டினுள் புக முயன்றவர், உயரம் குறைவாக இருந்த வாசற்காலில் பலமாக முட்டிக் கொண்டார். அதில் நிதானமிழந்து, கால் தடுமாறி அருகிலிருந்த கால்வாயில் விழுந்து வைத்தார் இராமசாமி. அர்ச்சனாவும் எட்டியிருந்த அமுதாவும் அவரைத் தூக்கும் எண்ணத்தில் ஓடோடி வர, மாதுளை அதிர்ச்சியில் அவ்விடமே உறைந்து நின்றாள்.
***
இரவு தயக்கத்துடனே வீட்டிற்குள் நுழைந்தான் மதுசூதனன். சிந்தாமணி தொலைக்காட்சி நாடகத்தை ஓடவிட்டபடி நித்திரையில் ஆழ்ந்திருக்க, அடுத்ததாக இருந்த இளையவளின் அறையும் இருளில் மூழ்கிக் கிடந்தது. அவனின் அன்பிற்குரிய மனைவி மட்டும், தூங்காமல் கொள்ளாமல், அமைதியே உருவாகச் சமையலற்கட்டில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள்.
“மாதுளை…” அவன் பாந்தமாக அழைத்தான்.
“சாப்பிட வாங்க”
“கோவமா இருக்கியா?”
“என்னத்துக்கு? முதல்ல சாப்பிட்டுட்டு வந்து சேருங்க” என்றவள் ஒரு தட்டில் அன்னம் பரிமாறிக் கொடுத்துவிட்டு அறையினுள் சென்றாள்.
அவன் பேருக்கு உணவருந்தி, உள்ளே வந்து கதவடைத்தான் “உங்க அப்பா இன்னைக்குக் கடைக்கு வந்துருந்தாரு” என்று தனது வெள்ளாடையைக் கழற்றியவாறு சொல்லலானான்.
“ஓசி குடிக்கு ஆசைப்பட்டு வந்திருப்பாரு. மாமன் – மருமகன் உறவுலாம் கடைக்கு வெளிய மட்டுந்தான்னு தெளிவா சொல்லிடுங்க. இல்லைனா, நெதமும் இதே பாடா படுத்தி எடுத்துடுவாரு”
“நானும் அதான் சொன்னேன். ஆனா, அவரு அதை நல்ல விதமா எடுத்துக்கலயே”
“அதுவும் தெரியும். டாஸ்மாக்ல வாங்கிக் குடிச்சுட்டு, நேரா எங்க வீட்டுக்குத் தான் வந்தாரு. போதைல சாக்கடைல வுழுந்துருச்சு லூஸு” அவள் நொந்து போய்த் தலையிலடித்துக் கொண்டாள்.
“அச்சச்சோ, அப்பாக்கு அடிபட்டுருச்சா? எனக்கு நீ ஃபோன் பண்ணியிருக்கலாமே” அவன் பதறித் தான் போனான்.
“குடிச்சா எங்களையே வண்டை வண்டையா பேசுவாரு. இதுல உங்கள வேற கூப்புட்டு வச்சு அசிங்கப்படுத்தணுமா! இது என்ன இன்னைக்கு, நேத்தா நடக்குது? இப்படித் தினமும் எங்களைக் கஷ்டப்படுத்துறதுக்கு, ஒரேயடியா அவரு போய்ட்டா கூட பரவால்ல. அவரால எவ்ளோ பண நஷ்டம்! எவ்ளோ அவமானம்!” கட்டிலில் கிடந்த துணிகளை அகற்றிக் கொண்டே அவள் வேதனைப்பட்டாள்.
“அவரு நல்ல அப்பாவா இல்லாம இருக்கலாம். அதுக்காக இப்படிப் பேசாத, மாது. அப்பானு ஒருத்தர் இல்லாத வாழ்க்கை இதை விட நரகமா இருக்கும்” கட்டிலில் வந்தமர்ந்தவன் எங்கோ வெறித்தவாறு இயம்பினான்.
“உங்க கஷ்டம் புரியுது. அப்பா இல்லாம நீங்க ஒத்தையாளா இந்தக் குடும்பத்தைச் சுமக்குறீங்க. அது எவ்ளோ சிரமம்னு எனக்குத் தெரியாம இல்ல. ஆனா, உங்களுக்கு ஒரு குடிகார அப்பா இருந்து, ஊர் பூரா கடனா வாங்கிக் குவிச்சு, நல்ல நாள் கெட்ட நாள்ல கூட வாய் வகுத்தக் கட்டாம, போற வர இடமெல்லாம் ஏழரைய இழுத்துட்டு வந்தா தான் நான் சொல்றது உங்களுக்குப் புரியும்” அவள் கட்டிலில் ஓய்ந்தமர்ந்தவாறு புலம்பினாள்.
“என் அப்பா அப்படி இல்ல தான். உண்மையில, அவரு மதுக் கடைங்கள எதிர்த்து போராட்டம் செஞ்சவரு. அதுக்காகவே தீக்குளிச்சு உசுர விட்டுட்டாரு” அவன் தங்கள் குடும்பத்தின் மறுபக்கத்தை வெளிச்சம் போட
பெண்ணவள் திடுக்கிட்டாள் “என்ன சொல்றீங்க, மது?”
“ம்ம். அப்பா ஒரு அரசியல் கட்சியோட முக்கியப் பிரமுகரா இருந்தாரு. எங்களை விட கட்சி முக்கியம்னு நினைக்குற அளவு, வெறித்தனமான தொண்டரா இருந்தவரு”
“பிறகு எப்படி நீங்க அதையே தொழிலா செய்றீங்க? அந்தச் சம்பவம் உங்களைப் பாதிச்சிருக்கணுமே!”
“உலகத்தப் பத்தி எந்த வெவரமும் தெரியாத அம்மா. பசியில வாடுற நாலு தங்கச்சிங்க. அப்போ எனக்கு வெறும் பதினாறு வயசு. பத்தாவது முடிச்சுட்டு டிப்ளமோ சேந்துருந்தேன். கன்டினியூ பண்ண முடியல. எல்லாத்துக்கும் பணம் தேவைப்பட்டுச்சு. இந்தக் கடை எங்க மாமா எனக்குத் தந்தது. எங்களோட பிரச்சனைய எல்லாம் தீத்து வச்சது இந்தக் கடை தான். செய்யும் தொழிலே தெய்வம்குற மாதிரி, என்னைக்கும் என் தொழில என்னால விட்டுக் கொடுக்க முடியாது”
“நான் உங்க நிலைமைல இல்லாத வரைக்கும் நீங்க அனுபவிச்ச வலி எனக்குப் புரியப் போறதில்ல. நீங்க கடுமையான உழைப்பாளி, மது. அதுல சந்தேகமே இல்ல. இதுவே நீங்க ஒரு பெட்டிக் கடை வச்சிருந்தா கூட நான் பெருமைப்பட்டுருப்பேன். எங்க அப்பா குடிச்சுச் சீரழிஞ்சதும் இல்லாம, எங்க குடும்பத்தையும் ஒருவழி பண்ணிட்டாரு. அதலாம் கூட இருந்து பாத்ததாலயோ, என்னவோ; உங்க தொழில் விஷயத்துல என்னையே என்னால சமாதானப்படுத்திக்க முடியல. ஸாரி!”
“ஸாரி கேக்குற அளவு இங்க ஒன்னும் நடந்துடல. நாம கடந்து வந்த பாதைகள் வெவ்வேறனாலும், இதுக்கு மேல பயணிக்கப் போறது ஒரே பாதை தான். நமக்குள்ள ஒரு புரிதல் வரும்னு நான் நம்புறேன். பொறுத்திருந்து பார்ப்போம்”
“உங்களுக்குப் பொறுமை ஜாஸ்தி தான்!” என்றவள் படுக்கையை நேர்செய்யத் துவங்கினாள்.
அவள் எந்த அர்த்தத்தில் பேசுகிறாள் எனப் புரியாமல் திருதிருத்தான் நம் மது. அவள் பாட்டிற்குப் படுத்த பத்து நிமிடங்களுக்குள் உறங்கிவிட்டாள். பாயில் வந்து படுத்தவனோ, நீண்ட நேரத்திற்குக் கால்களை ஆட்டியபடி, காலையில் இருந்து நடந்தேறியவற்றை அசை போடலானான்.
***
4 comments
இராமசாமிக்கு கை கால் கூட போயிருக்கனும்..
😨😨இன்னும் அவரோட பல பரிமாணங்கள நீங்க பாக்க வேண்டிருக்குக்கா
இப்படியும் ஒரு அப்பா, அப்படியும் ஒரு அப்பா
ஆமா 🙃 நல்லவங்களுக்கு காலமே இல்ல. அவரு உயிரோட இருந்துருந்தா மது இந்தத் தொழிலுக்கே வந்துருக்க மாட்டான்