மாதுளை கணவனை நெருங்கி அவசரமாக வாய் பொத்தினாள் “ஷ்ஷ்ஷ்!”

அவளது கரத்தை விலக்கியவன் “சிரிக்கக் கூட கூடாதா? இதுக்குத் தான் உன்னை மேடம்னு கூப்பிட்றது. ரூல்ஸா போட்டுத் தள்ளுறவங்களை வேற எப்படிக் கூப்புட்றதாம்!” என்றான் இதழ் கொள்ளாப் புன்னகையுடன்.

“நான் ஒன்னும் ரூல்ஸ் போடல. வெளிய எல்லாரும் தூங்குறாங்க. இந்த நேரத்துல இவ்ளோ சத்தமாவா சிரிப்பாங்க!” என்று முறையிட்டவள் மாற்றுத் துணியோடு குளியலறைக்குள் நுழைந்தாள்.

இரவு உடைக்கு மாறி, முகம் கழுவி வந்தவள் முடிந்திருந்த கூந்தலை விடுவித்துவிட்டு கட்டிலில் சாய்ந்தாள். கீழே பாயில் படுத்திருந்த மது, தலையணையை நெஞ்சிற்கடியே வைத்து இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தான்.

“எதுக்காக உங்க மாமாகிட்ட என்னைக் கோத்து விட்டீங்க?” அவள் ஒளிவு மறைவின்றி கேட்டாள்.

அலைபேசியை அணைத்தவன் இருளிலும் அவளின் விழிகளைத் தேடியறிந்து பதிலளித்தான் “நீ இந்த வீட்டோட ஒரே மருமக. இனிமே நீ தான் எல்லாருக்கும் பதில் சொல்லணும்”

“ஓஹோ!” என்றாள் அவள் எள்ளலுடன்.

“இல்லையா பின்ன?”

“அப்படியே நான் சொல்லித் தான் இங்க எல்லாம் நடக்குற மாதிரி பேசுறீங்க!”

“ஆமா. நீ கேட்ட ஒரு கேள்விக்காகத் தான் நான் காலைச் சாப்பாடு வீட்டுல சாப்பிட்றேன்; இராத்திரி சீக்கிரம் வரேன்”

“நிஜமாவா?”

“என்னைத் தெரிஞ்சவங்க யார்ட்ட வேணாலும் கேட்டுப் பாரு. காலைல நாலரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்புனன்னா, மதியம் ரெஸ்ட் எடுக்கத் தான் திரும்பி வருவேன். மறுபடி கடைக்குப் போயிட்டா, இராத்திரி வந்து படுக்க மணி பன்னெண்டு, ஒன்னு ஆயிடும்”

தான் கூறுவதை அவள் நம்ப முற்படவில்லை என்பதை, அவளுடைய முகத்திலிருந்தே குறிப்பறிந்தான் அவன்.

“உனக்குக் கொஞ்சங்கூட கடமை உணர்ச்சியே இல்லை; போ!”

“ஆமாமா, அதுவும் உங்களுக்குத் தான் ஜாஸ்தி இருக்கு” என்று சொல்லி அவள் தன் உதடுகளைச் சுளித்துக் காட்டினாள்.

அந்தப் பாவத்தை இரசித்துக் கொண்டிருந்தவன், திடீரென்று “ம்ச்ச்” என்றபடி தலையை உலுக்கினான்.

“என்னாச்சு, மது?”

“மதியத்துல இருந்து ஒரே தலைவலி. நானும் சரியாகும்னு பாக்குறேன். அப்படியே தான் இருக்கு”

“உங்களுக்கும் காய்ச்சல் வரப் போகுதுனு நினைக்கிறேன். நீங்க கட்டில்ல படுத்துக்கோங்க. கீழ படுத்தா, அதிகமா தூக்கி விட்டுரும்”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. தூங்கி எழுந்தா சரியா போயிடும்” என்றவன் தைலத்தைத் தேய்த்துக் கொண்டு, உச்சந்தலை வரை போர்வையால் மூடிப் படுத்தான்.

அடுத்த நாள் விடியலில் அவனால் கண்களைத் திறக்கவே இயலவில்லை. அதிகாலையிலே எழுந்த மாது, நேரம் கடந்தும் தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள். அவனை எழுப்ப அவளுக்கு ஏனோ மனம் வரவில்லை‌. சமையலறைக்கு வந்தவள் இரவு வாங்கிய பாலைத் தீயிலேற்றி தேநீர் தயாரிக்க, ஒருவர் பின் ஒருவராய் எழுந்து வந்தனர்.

அறைக்குள் சென்ற மதி மதுசூதனனை உசுப்பினார் “மாப்ள, யோவ்! அஞ்சு மணிக்குலாம் கடையில இருக்கணும்பியே. என்னயா பண்ணுது உடம்புக்கு?”

அவன் முணுமுணுத்த சேதி இன்னதென்று வெளியில் கேட்கவில்லை.

“சரி, நீ படு. நான் பாத்துக்குறேன்” என்றவர் தன் தம்பியை அணுகினார் “ரிஷி, மச்சானுக்கு உடம்பு முடியல போல. கடை வரைக்கும் போயிட்டு வந்துரு”

“சரி, ண்ணா. நான் பார்ல லோடு இறக்கிட்டு, அப்படியே சூப்பர் மார்க்கெட் போயிட்றேன்” என்று கூறி இவன் லுங்கியில் இருந்து முழுக்கால் சட்டைக்கு மாறினான்.

“அதான் சரி” என்ற மதி அடுத்ததாகப் பிள்ளைகளை எழுப்பும் பணியில் ஈடுபடலானார்.

சுலோ வீட்டை ஒழுங்கு செய்ய, சிந்தாமணி ஓடியாட வலுவில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தார். முல்லை சோறு வடிக்க, ரம்யா புளியோதரைக்குத் தயார் செய்தாள். மாது துணைக்குத் துணையாக உதவிக் கொண்டே, கொத்தவரங்காயை வறுத்து முட்டையைப் பொறித்தாள்‌. முல்லையும் ரம்யாவும் முன்னெச்சரிக்கையாகக் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் மதிய உணவு நிரப்பப்பட்டது. மற்றவர்கள் குளித்துக் கிளம்ப, சிந்தாமணி தள்ளாடித் தள்ளாடி காலை உணவிற்கு உப்புமாவும் சட்னியும் செய்து வைத்தார். மதிவாணனும் அவருடைய இரு மகன்களும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லலாயினர். அங்குப் போய் உடைமாற்ற வேண்டிய வேலை அவர்களுக்கு மீதம் இருந்தது‌. 

“அண்ணி, அம்மாவையும் அண்ணனையும் பாத்துக்கங்க” என்று கரிசனத்தோடு மொழிந்த ரம்யா, தன் இரு மகள்களுடன் ஸ்கூட்டியில் புறப்பட்டாள்.

“அம்மா, வீட்டுக்கு வரியா என்னோட?” உண்ட தட்டைக் கழுவியவாறே முல்லை வினவ

அவர் உடன் செல்ல மறுத்தார் “இன்னொரு நாள் வரேன், பாப்பா. நீ பத்திரமா வீட்டுக்குப் போ; ஃபோன் பண்ணு”

முல்லையும் விடைபெற்றுக் கிளம்ப, மாது அறைக்குள் நுழைந்தாள். தினந்தோறும் அவளுக்குக் காலை வணக்கம் கூறிய ரோஜாவை இன்று அதற்கான இடத்தில் காணவில்லை. அதை நாள் தவறாமல் பரிசளித்துக் கொண்டிருந்தவனோ தட்டுத் தடுமாறியவாறு ஒரு துவாலையைக் கைப்பற்ற, அவள் அதிர்ந்து ஏறிட்டாள். 

“ஹலோ, என்ன‌ செய்றீங்க? இந்த நிலைமைல குளிக்கப் போறீங்களா! காச்சலோட குளிச்சு, நீங்களே வினையத் தேடிக்காதீங்க. இன்னைக்கு நீங்க எங்கயும் போகக் கூடாது; சொல்லிட்டேன்”

“நேத்தும் சாயந்தரமே‌ வீட்டுக்கு வந்துட்டேன். ஒரு தடவை நான் நேருல போனா தான், அங்க வேலை ஒழுங்கா நடக்கும்”

“அப்படீனா நானும் வரேன். தனியா போக வேணாம்”

“உனக்குத் தான் அங்க வரப் பிடிக்காதே” அவன் கம்மிய குரலில் பேசினான்.

“பிடிக்காது தான். அதுக்காக, உங்களை இப்படியே விட முடியுமா!” என்றவள் அவனுடனே மது விடுதியைச் சென்றடைந்தாள்.

அவள் கீழேயிருந்த வாகனம் நிறுத்துமிடத்தில் நின்று கொண்டு, அவனை மட்டும் அனுப்பி வைக்க முற்பட்டாள் “ஒரு மணி நேரத்துல வந்துடுங்க. நான் இங்கயே இருக்கேன்”

“சரி, அந்த வேன்ல வெய்ட் பண்ணு” என்றவன் அலுவல் வாகனத்தினுடைய சாவியை அவளிடம் ஒப்படைத்துப் போனான்.

வாகனத்தினுள்ளே சில மது வகைகள் அட்டைப் பெட்டிகளுக்குள் இருந்தபடி எட்டிப் பார்க்க, அவள் அதில் அமர விழையவில்லை‌; அதன் மீது சாய்ந்து பாடல்களைக் கேட்டவாறு நேரத்தை ஓட்டினாள். அவள் கொடுத்த கால அவகாசம் முடிவதற்குள்ளாகவே மது ஒற்றை ரோஜாவோடு திரும்பினான்.

ரோஜாவைப் பெற்றுக் கொண்டு அவனோடு இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தவள் “ஹாஸ்பிடலுக்கு வண்டிய விடுங்க” என ஏவினாள்.

“எனக்கு ஒன்னும் இல்ல, மாது” தான் நன்னிலையில் இருப்பதாக, அவன் காண்பித்துக் கொள்ள முயன்றான். அந்த அரைகுறை ஆறுதல் அவளுக்குப் போதுமானதாக இல்லை.

“ஒன்னும் இல்ல தான். நீங்க ஹாஸ்பிடலுக்குப் போங்க” என்று கூறி, விடாப்பிடியாக அவனை மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றாள் அவள். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வழியிலும் ஒரே அறிவுரை தான் “ஒரு நாள் வீட்டுல படுத்திருந்தா தப்பில்ல. எப்பவும் வேலை, வேலைன்னு ஓடிட்டுத் தானே இருக்கீங்க. இன்னைக்கே ரெஸ்ட் எடுத்துட்டா, நாளைக்குத் தப்பிப்பீங்க. இல்லைனா, ஒரு வாரம் படுத்தி எடுத்துரும்”

அன்று முழுக்க அவள் அவனை வெளியே எங்கேயும் அனுமதிக்கவில்லை. இரவு நேரம்‌ அவனைக் கட்டிலில் படுக்க வைத்து, அவள் தரையில் பாய் விரித்தாள். 

“கீழ படுக்காத‌. உனக்கும் காய்ச்சல் வரப் போகுது” என்று அவன் முன்னெச்சரிக்கை செய்தான். ஆனால், அவளுக்கோ இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை. 

ஏற்கனவே வீட்டில் இருவருக்குக் காய்ச்சல் இருந்ததாலும், தரையில் படுத்ததாலும் மறுநாள் அவளுக்கு உடல் நலன் சுகமில்லாமல் ஆயிற்று. விடியலில் மது விடுதிக்குச் சென்று‌விட்டு ரோஜா மலரோடு அவன் வீடு திரும்ப, மலர் சூட வேண்டியவளோ போர்வை அணைப்பில் இருமிக் கொண்டிருந்தாள். காலையிலேயே அவன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் பலனில்லை. அவள் மிகவும் சோர்வாகத் தென்பட்டாள்.

“அம்மா வீட்டுக்குப் போய் வேணா இருந்துட்டு வா” என்று அவன் எதார்த்தமாக இயம்ப, கண்களைச் சுருக்கி ஏதோ போல அவனை ஏறிட்டாள் மாது. 

அந்தப் பார்வைக்கான பொருள் ஆடவனுக்குப் பிடிபடவில்லை‌. வீறு கொண்டு எழுந்தவள் புடவையை மாற்றிக் கொண்டு, நான்கு கவளங்கள் சோற்றை விழுங்கிவிட்டு கல்லூரிக்குப் புறப்பட்டாள். அவன் குளித்து முடித்து வருவதற்குள் அவள் பாதித் தெருவைக் கடந்திருந்தாள். அவன் அடித்துப் பிடித்துக் கொண்டு போய் அவளை வழிமறித்து, தனது வண்டியில் ஏற்றினான். கல்லூரி வாயிலை அடைந்த பிற்பாடு, பேச்சே இன்றி, விறுவிறுவென்று வளாகத்திற்குள் நடந்து மறைந்தாள் அவள்.

இரவுவேளை அவன் வேலை முடிந்து வீட்டினுள் புக, சிந்தாமணி வார்த்தைகளால் அவனைக் கவ்வினார் “மாதுட்ட வில்லங்கமா எதாச்சும் பேசி வச்சியாடா? அந்தப் பொண்ணு சாப்பிடாமலே இருக்கா; நான் சொன்னாலும் கேக்க மாட்றா” 

“நான் என்னனு பாக்குறேன்” என்று சமாதானம் சொல்லி, அவன் அறைக்குள் காலெடுத்து வைத்தான். அங்கு மாது உடலைக் குறுக்கிக் கொண்டு பாயில் படுத்திருந்தாள்.

“மாது, எதுக்கு மறுபடியும் தரையில படுத்திருக்க? சாப்பிட்டு வந்து கட்டில்ல படு; வா” அவன் கூறியதிற்கு அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

“மாது…” அவன் குனிந்து அவளது தோளில் கைவைக்க, அவள் வேகமாகத் தட்டிவிட்டாள். 

அவளின் முகத்திற்குப் பக்கமாக வந்து சம்மணமிட்டு அமர்ந்தவன் “ஹே, என்னமா? என்ன பிரச்சினை உனக்கு?” என்றான் தணிவாக.

அவனை நிமிர்ந்து நோக்கியவளுக்குக் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது “அத்தைக்கு உடம்பு சரியில்லாம போச்சு; இங்கத் தான் இருந்தாங்க; முல்லை கூப்பிட்டும் போகல. உங்களுக்கும் உடம்பு சரியில்லாம போச்சு. நீங்களும் இங்கயே தான் இருந்தீங்க. எனக்கு உடம்பு சரியில்லைனா மட்டும், அம்மா வீட்டுக்குப் போகணுமா? அதுக்கு என்ன அர்த்தம்? இது என் வீடில்லைனு அர்த்தமா? என்னை உங்களால பாத்துக்க முடியாதுன்னு அர்த்தமா?”

அங்கிருந்து எழுந்து சென்றவன் தட்டு, டம்ளரோடு பாய்க்குத் திரும்பி வந்தான். 

“எந்திரி, மாது” என்றவன் அவளின் தோளைத் தொட்டுத் தூக்கி அமர்த்தினான்.

“எந்திரி. இதைச் சாப்பிடு” அவன் தட்டை நீட்ட, அவள் வாங்க மறுத்தாள்.

அவனே உணவைப் பிசைந்து ஊட்ட, அவள் தயக்கத்துடன் வாயைத் திறந்தாள் “அம்மா வீட்டுக்குப் போனா, நீ பாட்டு ரெஸ்ட் எடுக்கலாம்; அங்க உனக்குப் பெருசா வேலை இருக்காதுங்குற நல்லெண்ணத்துல தான் காலைல அப்படிச் சொன்னேன். இங்கயே நீ அம்மா வீடு மாதிரி ஃபீல் பண்ணா, எனக்கு உண்மையிலயே சந்தோஷம் தான்”

அவளுக்குச் சட்டெனப் புரையேற, அவன் தலையில் தட்டி வெந்நீர் பருகச் செய்தான்.

“இவ்ளோ உடம்பு முடியாத நிலைமையில, எதுக்கு இன்னைக்குக் காலேஜ் போன? என் மேல கோவப்பட்டு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்குற. நான் ஃபோன் பண்ணாலும் எடுக்கல. மதியம் போல காலேஜுக்கே வரலாமானு கூட பாத்தேன்…”

“அப்படிலாம் வந்துராதீங்க” அவள் பதற்றத்தோடு தெரிவித்தாள்.

“ஏன், நான் உன் புருஷன்னு வெளிய தெரியக் கூடாதா?” அவன் உள்ளார்ந்த வேதனையுடன் வினவினான்.

“அப்படிலாம் இல்லை. சாதாரணக் காய்ச்சலுக்காக நேருல வந்து விசாரிச்சா, சைல்டிஷா இருக்கும். மத்தபடி, நீங்க நினைக்கிற மாதிரிலாம் கிடையாது. காலேஜுக்கு வந்தாலும் வரலைனாலும் நீங்க என் ஹஸ்பன்ட்ங்குறதுல மாற்றமில்லையே”

“என்னோட தொழில் பிடிக்காதுன்னு சொன்னியே!”

“ஆமா தான். உங்களைப் பிடிக்காதுன்னு சொல்லலையே” அவள் வெகு இயல்பாகக் கூறிவிட்டு, மாத்திரையை விழுங்கி, கட்டிலிற்கு நகர்ந்தாள்.

அந்த வார்த்தைகளை மனைவி வாயால் கேட்டவனோ, மெய் மறந்து அவ்விடமே உறைந்துவிட்டான். அவளுக்கு அமுதூட்டிய கரம் அவளின் அமுத ஈரத்தைச் சுமந்தபடி நீண்ட நேரம் அசையாதிருந்தது. மறுதினம் எழுந்தபோது மாதுவின் உடற்சோர்வும் மனச்சோர்வும் முற்றிலுமாக நீங்கியிருந்தது. கண்ணாடிக்கு அருகே இருந்த ரோஜா அவளைப் பார்த்துச் சிரிக்க, அவளும் பளிச்சென்று புன்னகைத்தாள்‌. அவளுடைய உற்சாகத்தின் முன் ரோஜாவின் செம்மை தோற்றுத் தான் போனது. இன்று அவளைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல இயலாதபடி, மதுவுக்கு வேலைப்பளு அதிகமிருப்பதாக சிந்தாமணி தகவலளித்தார். அவனின் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி அவள் பேருந்து நிலையத்திற்கு நடந்தாள். இன்றும் முத்துமாரி அதே மாணவியுடன் உரையாடிக் கொண்டிருக்க, தமக்கை அவனுடைய பார்வையில் படாமல் கல்லூரிப் பேருந்திலேறி அமர்ந்தாள். சாளரம் வழியே வருடிச் சென்ற காற்று, நேற்றைய கணவனின் தொடுகையைத் தேவையின்றி நினைவூட்டியது. அந்நாளின் முடிவில் இரவும் நிலவும் வந்த பிறகும் அவன் வீடு வராமல் போகவே அவள் கவலையுற்றாள்.

“அத்தை, நான் நம்ம கடை வரைக்கும் போயிட்டு வந்துட்றேன்” தலைவனைக் காணாமல் தலைவிக்கு இருப்பு கொள்ளவில்லை போலும்.

“இந்த நேரத்துல எதுக்குமா நீ அங்கப் போற? இன்னும் கொஞ்ச நேரத்துல மதுவே வந்துருவான். பொறு” என்று எடுத்துரைத்தார் சிந்தாமணி.

“அன்னைக்கே உடம்பு சுகமில்லாம பைக்கோட கீழ விழப் பாத்தாரு. ஏதோ நான் கூட இருந்ததால அலெர்ட் பண்ணேன். நேத்து நைட்டு கூட இருமிட்டுத் தான் இருந்தாரு. ஃபோன் வேற நாட் ரீச்சபிள்னு வருது. நான் எதுக்கும் நேருல போய்க் கூட்டிட்டு வந்துட்றனே”

“தனியா போகாதமா. சுலோவ வேணும்னா துணைக்கு அழைச்சுட்டுப் போ”

“அவ படிச்சுட்டு இருக்கா, அத்தை. பயப்படாதீங்க. எனக்குத் தெரிஞ்ச ஏரியா தான். எதுனாச்சும்னா கால் பண்றேன்” என்று சொல்லி துப்பட்டாவைத் தோளில் சரித்தவாறு அவள் வெளியேறினாள்.

சிந்தாமணி பெருமூச்சுவிட்டபடி கடிகாரத்தை நோக்க, பெரிய முள்ளும் சிறிய முள்ளும் போட்டியிட்டு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தன. 

மாது கடையின் முதல் மாடியில் நின்று கொண்டு கண்ணாடிச் சுவர் வழியே உள்ளே துலாவ, அந்நேரம் ஒருவன் வெளியே வந்தான் “அண்ணி… நீங்க எங்க இங்க?” தடையேதுமின்றி அவளைச் சொந்தம் கொண்டாடினான்.

“என்னை உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியுமாவா? நான் மனோஜ். மது அண்ணாக்கு ரைட் ஹேன்ட் மாதிரி. வாங்க. உள்ள வாங்க. என்ன சாப்புட்றீங்க? ஜூஸ்?”

“இல்ல, எதுவும் வேணாம். நான் அவரைப் பாக்கணும். எங்க அவரு?” 

“நீங்க உள்ள வெய்ட் பண்ணுங்க. நான் அண்ணனைக் கூட்டிட்டு வந்துட்றேன்” என்று அவன் கதவைத் திறந்து பிடிக்க

அவளின் கால்கள் நகர மறுத்தன “நான் இங்கயே நிக்கிறேன்.‌ நீங்க போயிட்டு வாங்க”

அவன் சம்மதமாய்த் தலையசைத்து அங்கிருந்து அகன்றான்.

வெளிப்புறமிருந்து உள்ளே நுழைய இருந்த மற்றோர் ஊழியன் “யார் வேணும்? கஸ்டமரா? கடை மூடுற டைமாச்சு” என்றான் கெடுபிடி குறையாமல்.

“இல்லை. உங்க ஓனரைப் பாக்க வந்தேன். மது… மதுசூதனன்”

“ஓ, பையா! ஆவோ. அவரு மேல இருக்காரு” என்றான் அந்த இந்திவாலா.

அவள் அமைதியாக அவனைப் பின்தொடர்ந்து அடுத்த மாடிக்குப் படியேறினாள்.

“பையா உங்கள வரச் சொல்லிருந்தாரா? என்ன விஷயம்?”

“நான் அவரோட வொய்ஃப்”

“அச்சா!” அவன் குரலில் வியப்பு மேலிட்டு அடங்கியது.

“பையா உள்ள தான் இருக்காரு. போங்க” என்று இவன் கூறவும் அவள் கதவைத் தள்ளித் திறந்தாள்‌.

அதேவேளை கீழிருந்து அங்கு ஓடி வந்த மனோஜ் “அவங்களை ஏன்டா இங்கக் கூட்டிட்டு வந்த?” என்று இந்தி மொழியில் எரிச்சல்பட்டான்.

“அவங்க தான் பையாவ பாக்கணும்னு சொன்னாங்க” இவன் தமிழிலேயே பதிலுரைக்க

“எதாவது பிராப்ளமா, மனோஜ்?” என்றாள் மாது குழப்பத்துடன்.

“ஒன்னுமில்ல, அண்ணி. ஒன்னுமில்ல.‌ நீங்க போங்க” என்று அவன் பச்சையாகச் சமாளித்தான்.

அவள் உள்ளே புகுந்து கதவை விடுவிக்க, அது தானாக மூடிக் கொண்டது. வெளியே அந்த இருவரின் விவாதம் இந்தியில் தொடர, அவள் அடி அடியாய் முன்னேறினாள். முன்புறம் கதவிருந்ததைப் போலவே பின்புறமும் கண்ணாடிக் கதவு இருந்தது. அதன் மறுபக்கத்தில் அமைந்த உப்பரிகையில் தான் அவள் தேடி வந்த கண்ணாளன் இருந்தான்; வேறொரு நவநாகரிக நங்கையுடன் கதையளந்தபடி. அவனிடம் தும்மல் வருவதற்கான அறிகுறி தெரியவும் அந்தப் பெண் தன்னுடைய கைக்குட்டையை அவனிடம் வாரி வழங்கினாள். அதைப் புன்னகையோடு பெற்றுக் கொண்டவன் தும்மல் வராத பின்னும் அதைக் கால்சட்டைப் பையில் பத்திரப்படுத்தினான். அந்தக் காட்சியை அசைவின்றி கண்ணுற்றிருந்தாள் நம் மாது‌. எதேச்சையாகத் திரும்பியவன் கதவிற்குப் பின்னால் நிற்பவளைப் பார்த்துவிட்டு இருக்கை நீங்கி எழுந்தான். 

அவன் கதவைத் திறந்த வண்ணம் “அனுஷா, இவங்க தான் என் வொய்ஃப்; மாதுளை” என்று அறிமுகப்படுத்த, அந்த நங்கையின் முகம் மொத்தமாய் விழுந்துவிட்டது.

***

வரும் வழியில் மழை கொட்ட ஆரம்பிக்க, மதுவும் மாதுவும் நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குக் கதவைத் திறந்துவிட்ட சிந்தாமணி, மழைக்கு ஒதுங்காமல் வந்ததற்காக இருவரையுமே கடிந்து கொண்டார். அதைக் காதில் வாங்கியும் வாங்காமல் அறைக்குள் நுழைந்தவர்களை, மௌனமே பெரும்பாலும் ஆட்சி செய்தது. இரு துவாலைகளைக் கண்டெடுத்து மழைத் துளிகளை ஒற்றியெடுக்கத் தொடங்கியவன், அவற்றில் ஒன்றை அவளிடத்தில் தந்தான்‌. அவள் அதை இறுகப் பற்றிய வண்ணம் ஆழ்சிந்தையில் மூழ்கிக் காணப்பட்டாள்.

“மாது, துவட்டிக்க. இப்போ தான் காய்ச்சல் குணமாச்சு. மறுபடியும் வந்துரப் போகுது” என்றான் அவன் அக்கறையாய்.

அவள் தன் சிந்தனையைக் கலைக்காமலே மெதுவாகத் தலையை உலர்த்த, அவனின் விழிகள் அவளைத் தான் மொய்த்திருந்தன; நெற்றி, இமை, கன்னம், காது, நாசி, இதழ்கள் எனக் கண்ட இடங்களிலும் சிதறிக் கிடந்த மழைப் புள்ளிகளை இணைத்து கோலமிட வேண்டும் என மனம் பரபரத்தது. விரல்கள் ஐந்தையும் உள்ளங்கைக்குள் மடக்கி அவன் தன் ஆர்வத்தை அடக்கிக் கொண்டான். ஈரம் சொட்டிய சட்டையைக் கழற்றி கூடையில் எறிந்துவிட்டு, நிலைப்பேழையைத் திறந்தவன் ஓர் உள்சட்டையை எடுத்து அணிந்தான். 

அதற்குள்ளாக “ஆ… பாம்பு, பாம்பு!” என்று ஓர் அலறல் மாதுவிடமிருந்து வெளிப்பட்டது. 

அவன் கதவை ஒருக்களித்துக் காண, திறந்து கிடந்த குளியலறையிலிருந்து ஐந்தடிக்குக் குறையாத ஒரு கண்ணாடி விரியன் தலையைத் தூக்கிக் கொண்டு ஊர்ந்தபடி வந்தது.

அது தன் பிளவுபட்ட நாக்கை வெளியே நீட்டி அதற்கான பிரத்தியேக சமிக்ஞையை எழுப்ப, அதனால் கலவரமடைந்தவன் அவளுக்கும் மேலாகக் கத்தினான் “ஆஹ்… பாம்பு…”  

அவர்களின் திசையில் அந்த அரவம் பரபரக்க, அவன் பயத்தில் அவளது தளிர் இடையைப் பற்றினான். முதலாவதாக இருந்த மாதுவின் காலடியை அது நெருங்க, அவள் அச்சத்தின் உச்சத்தில் அவனைக் கட்டியணைத்து மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். அவன் எச்சரிக்கையாக ஒரு விநாடி கண்களைத் திறந்து ஆராய்ந்தபோது, அந்தச் சர்ப்பம் அங்கிருந்து சுலோச்சனாவின் அறைக்குச் சென்றிருந்தது. 

அதைத் தொடர்ந்து “அம்மே… பாம்பு!” என்று கடைக்குட்டி திடுக்கிடும் சத்தம் வீடு முழுக்கப் பரவிற்று.

வாகாகக் கட்டிலில் ஏறி நின்று கொண்ட சுலோச்சனா “அம்மா, அம்மா, பாம்புமா! பாம்பு!” என்று கூக்குரலிட, வரவேற்பறையில் படுத்திருந்த சிந்தாமணி விரைந்தெழுந்து முன்கதவைத் திறந்துவிட்டார். 

நல்லவேளையாக, பாம்பு சமையற்கட்டிற்குள் புகாமல் கதவின் வழியாக விடைபெற்று மறைந்தது. 

“எவ்ளோ பெரிய பாம்பு! இந்தக் கன்றாவி எங்கருந்துடி வந்துச்சு?” என்றார் சிந்தாமணி நெஞ்சில் கைவைத்து.

“எனக்கும் தெர்லமா. அண்ணா ரூம்ல இருந்து தான் வந்துருக்கும் போல” என்றாள் சுலோ கட்டிலிலிருந்து இறங்காமலே.

இவளின் அறையிலிருந்த கழிவறைக் கதவை இழுத்து மூடியவர், “மது, மாது, பாத்ரூம் கதவை ஒழுங்கா மூடி வைங்க. இல்லாட்டிப் போனா இப்படித் தான் கண்டது கழுதையும் உள்ள புழங்கும்” என்று கூறிவிட்டு படுக்கைக்குத் திரும்பினார். “அந்தக் கடவுள் தான் காப்பாத்துனாரு!” என்ற அவரின் முணுமுணுப்பு அடங்குவதற்குள்ளாக மின்சாரம் தடைப்பட்டது.

“ச்ச்ச, இந்த நேரத்துலயா கரன்ட் போகணும். நாளைக்கு நடக்கப் போற எக்ஸாம்ல பாஸ் பண்ண மாதிரி தான்!” என்று சுலோ புலம்ப

“படிச்ச வரைக்கும் போதும். காலைல நேரமா எழுப்புறேன்.‌ இப்போ படுத்துத் தூங்கு, பாப்பா” என்றார் சிந்தாமணி ஆதுரமாக.

புத்தகங்களைத் தொப் தொப்பென்று மூலைக்கு ஒன்றாக விசிறிவிட்டு, இளையவள் படுக்கையில் சரிவதை அந்தக் கட்டில் கிறுக் கிறுக்கென்று ஒலியெழுப்பிப் பட்டவர்த்தனம் செய்தது.

இத்தனை நாழியும் மாதுளையின் அணைப்பினில் இருந்தான் நம் மது. எவ்வளவு தான் விழிகளை மூடியிருந்தும், அவனை இறுக அணைத்திருந்தும் அவளுடைய தேகம் ஆலிநீர் தெறித்தோடும் இலை போல நடுங்கிக் கொண்டிருந்தது.

“மாது, பாம்பு…”

“எங்க, எங்க?” அவள் மேலும் அவனை ஒன்றிக் கொள்ள, சுகமான இம்சையை ஆர்ப்பாட்டமின்றி அனுபவித்தான் கள்வன்.

“அது டாடா, பை‌ பை சொல்லி அரைமணி நேரமாகுது”

“அப்பாடா, போயிடுச்சா” என்றவள் சர்வ சாதாரணமாக விலக முனைய, அவளை அவன் விடுவித்தபாடில்லை.

அப்போது தான் அவனின் கரம் தனது இடையில் அழுந்தப் பதிந்திருப்பதை உணர்ந்தவள் சங்கடத்தில் நெளிந்தாள்.

“மது, உங்க கையு…” 

“ஓ, ஸாரி” என்று குழைந்தபடி அவன் ஒரு கரத்தை விலக்கினான்.

அவனுடைய மற்றொரு கரம் அவளின் முதுகுப் புறத்தில் படிந்து, அவளைத் தன்னோடு ஒட்டி நிறுத்தியிருந்தது‌.

“மது, இன்னொரு கையும்” 

“ஓ” என்றவன் அவளின் மேனியிலிருந்து தன் கரத்தைப் பிரிக்க முடியாமல் பிரித்தெடுத்தான்.

இளமைச் சாரலில் இருந்து ஓடி ஒளிய இயலாமல் அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கும்போதே, அவளின் கூந்தல் அவனது கைக்கடிகாரத்தில் சிக்கியிருந்தது‌.

“அஹ்…” அவள் வலியில் முனக

“அச்சோ, ஸாரி, ஸாரி, மாது” என்று பதறியவன் நிறுத்தி நிதானமாக அந்தக் கூந்தல் கற்றைக்கு விடுதலை கொடுத்தான்; அவளுக்கும் தான்.

“வேணும்னே பண்றீங்க, மது”

“நான் என்ன பண்ணேன்?”

“கை இங்க வைக்கிறீங்க; அங்க வைக்கிறீங்க. இதெல்லாம் சரியில்ல” அவளின் நாசித் துவாரத்தில் இருந்து வெப்பக்காற்று வீசி அவனைத் தாக்கிற்று.

இதயம் படபடக்க, அவன் நாவினில் தானாக மரியாதை கூடியது “ஏங்க நீங்க தாங்க வந்து என்னைக் கட்டிப்பிடிச்சீங்க. நானே இவ்ளோ கிட்டத்துல பாத்துப் பயந்து போயிருக்கேன். பா.. பாம்பைப் பாத்துப் பயத்துல வெடவெடத்துட்ருக்கேன். என்னைப் பாத்து… இப்படி ஒரு வார்த்தை…” நடிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஈடு கொடுத்தான் அவன்.

தன் மீது தான் தவறோ என்ற எண்ணத்துடன் அவள் குளியலறையை நோக்கி பாதம் வைக்க, அவனுடைய நீண்ட விரல்கள் அவளது முந்தானையில் வேண்டுமென்றே சிறைபட்டன. அதற்கும் அவள் கோழிமுட்டை கணக்காகக் கண்களை விரிப்பாளோ என்கிற சலனம் தோன்றவே, அவளின் ஸ்பரிசத்தை அவன் மெல்ல மெல்ல கைநழுவவிட்டான்.

***

You may also like

4 comments

Subhashini A February 12, 2026 - 12:43 pm

Haha nan than sonnen la ivanukku settai koodi pocunnu

Reply
Ezhilmathi GS February 12, 2026 - 12:48 pm

Ha ha 🤣

Reply
Vathani S February 12, 2026 - 4:57 pm

அடேய்

Reply
Ezhilmathi GS February 12, 2026 - 6:48 pm

🤣🤣

Reply

Leave a Reply to Vathani S Cancel Reply

About Me

Featured