மாதுளை உயிரைத் துளைக்கும் விதமாக மதுசூதனனைக் கண்ணுற, வன்முறையற்ற ஓர் உயிர் வதையை அனுபவித்தான் ஆடவன்.

“மாது, அப்படிப் பாக்காதன்னு எத்தனை தடவை சொல்றது!”

“நான் கடுப்புல பாத்துட்டுருக்கேன்”

“எனக்கு வேற மாதிரில்ல தோனுது!”

“எந்த மாதிரி?”

“அவசியம் சொல்லணுமா?” அவனது குரல் ஆழ்கிணறு போல இறங்கி ஒலிக்க, அவள் உடனடியாகக் கரையேறினாள்.

“அத்தையும் சுலோவும் முல்லை வீட்டுக்குப் போயிருக்காங்களாம்; ஃபோன் பண்ணாங்க. நாம டின்னர் கடையில சாப்டுக்கலாமா? எதிர்த்தாப்புல கூட ஒரு ஹோட்டெல் பாத்தேன்”

“எது, அந்த ஹோட்டலா?” அவன் வாகனத்திலிருந்தபடியே குறிப்பிட்ட அந்த உணவகத்தைச் சுட்டினான்.

“ஏன், அதுக்கென்ன?” அவனின் அதிர்ச்சிக்கான மூலம் அவளுக்குப் பிடிபடவில்லை.

“ஒன்னும்ல. போகலாம்” என்று அவன் சம்மதிக்கவும் இருவரும் அவ்வுணவகத்திற்கு நடையைக் கட்டினர்.

அவர்கள் உட்சென்று அமர்ந்தபோது, ஊழியர்களைத் தவிர்த்து அவ்விடம் ஆள் அரவமற்று காணப்பட்டது. 

உணவகத்தின் உரிமையாளரே இருக்கையில் இருந்து எழுந்து வந்து “வாமா, நல்லாருக்கியா?” என்று மாதுவை வரவேற்றார்.

“ஆன், நல்லாருக்கேன்” என்று சம்பிரதாயத்திற்காக இதழ் விரித்தவள், அவர் விலகிய பின்னர் கணவனிடம் கிசுகிசுத்தாள் “இந்தக் கடைக்கு வர கஸ்டமர்ஸ் எல்லாரையும் இப்படித் தான் உபசரிப்பாங்களா? புதுசா இருக்கு”

அவனோ அவளின் கூற்றில் கலகலத்தான் “ஹஹஹா… மாது, அவன் என் மாமன்; உனக்கு அண்ணன். புரியலையா? மதி, சுரேஷ், ரிஷி மூனு பேருக்கும் மூத்தவர் இவரு தான். வாசு; எங்க மாமாவோட மூத்த பையன்”

“ஓ… உங்க மாமாவுக்கு இவரோட சேத்து மொத்தம் நாலு பசங்களா! அவ்ளோ தானா? இன்னும் இருக்காங்களா?”

“சொல்றேன். இங்க வேணாம்” என்றவன் வேறு விடயங்களை அவளுடன் கலந்துரையாடினான். 

அரைமணி நேரத்தில் வயிறார உண்டுவிட்டு, சீரக மிட்டாயை மென்ற வண்ணம் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். தெருவைக் கடக்கும் போது அவன் அக்கறையோடு அவளின் கரம் பற்றிக் கொண்டான்.

“சும்மாலாம் சொல்லக் கூடாது; ஃப்ரைடு ரைஸ் ரொம்ப நல்லாருந்துச்சுங்க” அவள் சற்று முன் உண்ட உணவைச் சிலாகிக்க

அவனும் அதன் சுவையை ஆமோதித்தான் “அவரு கையாலயே செஞ்சிருப்பாரு. அதான் இவ்ளோ ருசி!” 

“நல்லா தான் சமைக்கிறாங்க. ஆனாலும் கடையில கூட்டமே இல்லை” உணவகம் வெறிச்சோடி இருப்பதற்கான காரணத்தை அவள் அலசி, ஆராய முனைந்தாள். 

“போன ஆறு மாசத்துல, இந்தக் கடை ரெண்டு தடவை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்கிட்ட மாட்டிக்கிச்சு”

“அச்சச்சோ! அப்பறம்?”

“என்னோட தாய் மாமா இந்தப் பாரை நடத்தி, நல்ல வருமானம் பாத்தப்பறமும் ஒரு இடத்துல ஓஞ்சு உக்காந்துர்ல; பழைய தொழில்ல சிலத மறுபடி எடுத்து நடத்துனாரு. அதுல ஒன்னு தான் இந்த ஹோட்டல்; அவரு இருந்தப்போ, சுமாரா ஓடுனுச்சு; இப்போ ஒரேயடியா படுத்துடுச்சு”

“ஏன் அப்படி?”

“எல்லாம் சோம்பேறித்தனம் தான். எனக்கு எப்படி மாமா பாரை எழுதி வச்சாரோ, அது போல வாசுவுக்கு ஹோட்டல எழுதி வச்சாரு. இவரு என்ன பண்ணாரு; வாரத்துக்கு ரெண்டு நாள் கடைய இழுத்து மூடிட்டு மாமியார் வீட்டுக்குப் போயிடுவாரு. சன்டே, சாட்டர்டேனா கூட பரவால்ல, மாது. வார நாள்லயே கடை மூடிக் கிடக்கும். பஸ் ஸ்டான்டுக்குப் போறவங்க, வரவங்க ஒன்னு, ரெண்டு பேர் இந்தப் பக்கம் சாப்பிட வருவாங்க. உணவுப் பாதுகாப்புத் துறை ரெய்டு வந்த சேதி நியூஸ் சேனல், சோசியல் மீடியாலலாம் தீயா பரவிடுச்சு. அதனால, கடை காத்து வாங்கிட்டு இருக்கு”

“வாசு அண்ணாவுக்கு வேற ஏதாவது வகையில வருமானம் வருதா? வியாபாரம் ஆகாம வீட்டுல எப்படிச் சமாளிக்குறாங்க?”

“மாமியார் வீட்டுல கொஞ்சம் வசதி. இங்க எதாவது பிரச்சனைன்னா, அங்கக் கிளம்பிப் போயிடுவாரு‌. அவருக்குக் குழந்தை, குட்டி எதுவும் இல்லை. அவங்க ரெண்டே பேர் தான். அப்படியே பொழப்பு ஓடுது”

“உங்க தாய் மாமா உங்களுக்கு இவ்ளோ உதவிருக்காரு. நீங்க பாத்து அவர் மகனுக்கு ஏதாவது பண்ணக் கூடாதா?”

“நானா செய்ய மாட்டேன்னேன்! எங்க அம்மா விட்ட சாபத்தால தான் அவருக்கு வாரிசு இல்லாம போச்சுன்னு ஊரே நம்புது. கொடுமை என்னனா, வாசுவும் அந்த வதந்திய நம்பிட்டு இருக்காரு. அதனாலயே அவருக்கும் எங்க குடும்பத்துக்கும் போக்கு வரத்து இல்லாம ஆயிடுச்சு. அவங்க குடும்பத்துக்குள்ளயே அண்ணனுக்கும் தம்பிங்களுக்கும் பேச்சு வார்த்தை எதுவும் கிடையாதுனா பாத்துக்கோயேன்”

“இந்தக் காலத்துலயும் இதெல்லாமா நம்புறாங்க?”

“நம்புறாங்க. நான் வாசுவுக்கு சூனியம் வச்சுட்டேன்; அதான் அவரோட ஹோட்டல் விளங்காம போய்டுச்சுன்னு யாராவது கதை கட்டுனாலும் நாலு பேரு நம்பத் தான் செய்வாங்க”

“அத்தை அப்படிப்பட்ட ஆள்னு சொன்னா நானே நம்ப மாட்டேன். பொறந்ததுல இருந்து அவங்களைப் பாத்து வளந்துமா அவங்க குணம் தெரியல! முதல்ல, நம்ம அத்தை எதுக்காக அவங்களுக்குச் சாபம் விடணும்?”

“முல்லை இருக்காள்ல. அவளை வாசுவுக்குத் தான் கட்டி வைக்கணும்னு என் அத்தை, மாமா சொல்லி வச்சுட்டு இறந்துட்டாங்க. இவரு கட்டிக்க மாட்டேன்னு ஒத்தைக் கால்ல நின்னு சாதிச்சிட்டாரு. அப்போ ஒரு தடவை அவருக்கும் அம்மாவுக்கும் செம சண்டை. சொந்தத்துல கல்யாணம் பண்ணா குழந்தை முடமா பொறக்கும்னு நம்பிக்கிட்டு, முல்லைய வேணாம்னுட்டாரு. அந்தத் தகவல் உண்மை தான்னு நானும் டிவில பாத்துருக்கேன். என் தங்கச்சியோட வாழ்க்கைனு வரும்போது, அவரு பக்கம் என்னால சப்போர்ட் பண்ண முடியல. தெய்வாதீனமா, இதுவரை நம்ம குடும்பத்துல பிறந்த எந்தக் குழந்தைங்களுக்கும் அந்த மாதிரி எதுவும் ஆகல”

“இவரு வேணாம்னு சொன்னப்புறம் தான் மதி அண்ணாக்கும் முல்லைக்கும் கல்யாணமாச்சா?”

“கரெக்ட்”

“அடுத்தடுத்து இருந்த மாமாவோட பசங்க, உங்க மத்த ரெண்டு தங்கச்சிங்களைக் கட்டிக்கிட்டாங்களா?”

“உன்கிட்ட சொல்லிருக்கனா? மாமாக்கு மூனாவதா பொறந்த பையன் சுரேஷ். ரிஷி தான் கடைசிப் பையன்”

“அப்பறம் எப்படி ரிஷிக்கு ரம்யான்னு முடிவு பண்ணீங்க?”

“நாங்க எங்க முடிவு பண்ணோம்! காதல்னா என்னனே தெரியாத வயசுலருந்து அதுங்களுக்கு நடுவுல ஒரு ரீல் ஓடிட்டு இருந்துருக்கு”

“அப்படியா சங்கதி! அதான் ரம்யா ரிஷி அண்ணாவப் பத்தின பேச்சை எடுத்தாலே மச்சான், மச்சான்னு உருகுறாங்களா! அவங்களுக்கு இடையில வயசுப் பொருத்தம் சரியா இருந்துச்சா?”

“இல்லை தான். ரம்யா ரிஷிய விட ரெண்டு மாசம் பெரிய பொண்ணு. நாங்களா சொல்லலைனா, இந்த விஷயம் எங்கருந்து வெளிய தெரியப் போகுது! அப்படியே மூடி மறைச்சிட்டோம். அவங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒன்னு, ரெண்டு வருஷம் ரிஷி நம்ம வீட்டுல சும்மா தான் சுத்திட்டு இருந்தான். மொத புள்ளை பெத்துட்டுத் தான் சொந்தமா சம்பாதிக்கவே ஆரம்பிச்சாய்ங்க”

“அட பாவிகளா! உங்க குடும்பத்துல அவ்ளோ கெடுபிடியா இருக்குற மாதிரி ஒன்னும் தெரியலயே. அத்தை அவங்க காதலைலாம் அஸால்ட்டா ஏத்துக்கிட்டுருக்காங்க‌. அப்டீனா, உங்க காதலுக்கும் சம்மதம் சொல்லிருக்கணுமே?”

ஒவ்வொரு படிக்கும் நியாயம் பேசியபடியே முன்னேறியவர்கள், இப்போது மதுவிடுதியின் பிரதான வாயிலை அடைந்திருந்தனர். அவள் தொடுத்த வினா அவனை நேரடியாக இதயக் கண்ணில் தாக்கிற்று. 

‘அந்தக் காதலியே நீ தான்னு நான் எப்படிச் சொல்லுவேன்!’ அவன் மொழியறியா பாலகன் போல விழி பிதுங்கி நின்றான்.

அந்நேரம்‌ ஏதோ தேவையாக மனோஜ் அவனை அழைக்க, இந்தப் பக்கம் மாதுவின் அலைபேசியும் கூக்குரலிட்டது. புது எண்ணிலிருந்து அழைப்பு வரவே சிந்தனையுடன் அவள் அதை ஏற்றாள். மறுமுனையில் காவல் அலுவலர் ஒருவர் பேச, அவளுக்குத் தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. அடுத்தது அன்னையும் அமுதாவும் மாறி மாறி அழைக்க, பெண்ணவள் பதற்றமடைந்தாள். அவளை முன்னே அனுப்பிவிட்டு, வேக வேகமாக மது விடுதியை மூடும் பணியில் ஈடுபடலானான் மது. மாது தனியே நடந்து சென்று இரண்டு, மூன்று தெருக்கள் தள்ளியிருந்த காவல் நிலையத்தினை அடைந்தாள். அவளுக்கு அங்கு ஒரு காவல் நிலையம் இருப்பது தெரியும். அவ்வழியே எத்தனையோ முறைகள் கடந்து போயிருக்கிறாள். அதனுள்ளே காலெடுத்து வைப்பது அதுவே முதல் முறை. அங்கு அடியெடுத்து வைக்கும்போதே, விசாரணை உட்பட பல்வேறு திரைக் கலவரங்கள் நினைவில் எழுந்து பாவையைக் கதிகலங்கச் செய்தன. தன் தந்தையை அவ்விடம் பிடித்து வைத்திருந்தால் கூட அவளுக்கு இந்தளவு நெஞ்சம் பரபரத்திருக்காது. அவர் இது போன்ற வம்பு, தும்புகளை விலைக்கு வாங்கக் கூடிய நபர் தான்‌. ஆனால், இன்று விசாரணைக்கு இழுத்து வரப்பட்டிருப்பதோ அவளுடைய தம்பி முத்துமாரி. அவனையும் அவன் வயதையும் கருத்திற்கொண்டு அவள் தன் நடையை விரைவுபடுத்தினாள். காவல் நிலையத்தின் உட்புறம் இடப்பட்டிருந்த இருக்கையில் அர்ச்சனா தேவி அழுதபடி அமர்ந்திருந்தார். காவல் ஆய்வாளரது மேசையின் முன்பு, முத்துமாரி பள்ளிச் சீருடையில் அமர்த்தப்பட்டிருந்தான். அமுதாவின் கணவன் இவனைத் தன்னுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி காவலர்களிடம் மன்றாடிக் கொண்டிருந்தான். மேலும் அவளுக்கு அடையாளம் தெரியாத ஓரிணை தம்பதியர், அங்கே கோப முகமாகத் தென்பட்டனர்.

“ஸார், என்ன ஸார் இங்கப் பிரச்சனை?” அவள் அந்தக் களேபரத்தினுள் அதிரடியாகத் தலையைக் கொடுத்தாள்.

“யாரும்மா நீ?” என்றார் அங்கிருந்த தலைமைக் காவலர்.

“நான் மாதுளை. முத்துமாரியோட அக்கா” அவள் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டாள்.

“முதல்ல யார், என்னனு சொல்லிட்டு கேள்வி கேளுங்க” என்ற தலைமைக் காவலரின் அறிவுரைக்கு அவள் தலையசைக்க, “ஒரு நிமிசம்… என்ன தான் தலை போற காரியமா இருந்தாலும் ஐயாவுக்கு வணக்கம் வச்சுட்டு பேச ஆரம்பிங்க” என்றார் அவர் கூடுதலாக.

‘அவனவன் இருக்குற கடுப்புல; ஐயா, கொய்யான்னாட்டு!’ அவள் உள்ளுக்குள் எரிச்சல்பட்டாள். அது அடுத்ததாகக் காவல் ஆய்வாளருடன் அரங்கேறிய உரையாடலிலும் கசிந்தது “வணக்கம், ஸார்‌. நான் இந்தப் பையனோட அக்கா. சிடிஇ காலேஜ்ல லெக்சரெரா இருக்கேன். என்ன பிராப்ளம், ஸார்? ஒரு மைனர் பையன இந்த நேரத்துல ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்து உக்கார வச்சிருக்கீங்க. அந்த அளவுக்கு என்ன நடந்துச்சு? லீகலா தான் இதைச் செய்யுறீங்களா?”

“வாங்கமா. நீங்க லெக்சரரா? இல்ல, லாயரா? ப்ரொசீஜர் படி தான் இங்க எல்லாம் நடந்துட்டு இருக்கு. அவனைக் கூப்டு வச்சு பஞ்சாயத்து வைக்கணும்னு எங்களுக்கென்ன தலையெழுத்தா! உங்க இஷ்டத்துக்கு எதையாவது கற்பனை பண்ணிக்காதீங்க. உங்க தம்பி மேல பொய்யா எந்த வழக்கும் பதியல. பையன் மைனர்ங்குறதால சைல்ட் வெல்ஃபேர் ஆபிஸர்க்குத் தகவல் சொல்லிருக்கோம்; வந்துட்டுருக்காங்க. அவங்க வந்த பிறகே பொறுமையா விசாரணைய ஆரம்பிச்சுக்கலாம். நீங்க ஓரமா போய் உக்காருங்க” அவர் அவளை விடவும் ஏகத்திற்குச் சிடுசிடுத்தார்.

சில நிமிடங்கள் கழித்து “ஆமா, வார்த்தைக்கு வார்த்தை மைனர்னு சொல்றீங்களே. அவன் பண்ண வேலை மைனர் மாதிரி இல்லையே!” என்று குத்தலாகப் பேசினார்.

சிறிது இடைவெளிவிட்டு “இந்தக் காலத்துல புள்ளைங்களப் பெத்து விட்றதோட சரி; வளக்குற வழியைக் காணோம். அதுங்க என்னனா தெருத் தெருவா, தருதலையா சுத்திட்டுத் திரியுதுங்க. ஸ்கூல்ல டீச்சர் அடிச்சாலே பேரென்ட்ஸ் காச்மூச்னு சண்டைக்கு வந்துர வேண்டியது. அப்பறம் எப்படி இதுங்க உருப்படும்!” என்றவாறு அவர் தொடரவும் அர்ச்சனா தேவி ஓவென்று ஒப்பாரி வைத்தார்.

“கரெக்ட்டு, ஸார். பொம்பளைப் புள்ளைங்க மனசைக் கெடுக்குறதுக்குனே இந்தப் பசங்க வெளிய வரானுங்க, ஸார். இதெல்லாம் இந்தப் பையன் தனியா யோசிச்சுச் செஞ்ச மாதிரி தெரியல. குடும்பமா உக்காந்து சதி திட்டம் தீட்டிருப்பாங்க போல” அந்த மத்திம வயது ஆண் அளவிற்கதிமாகவே புகார் வாசித்தார்.

“இந்த வீணா போனவன் என்ன தான்யா பண்ணித் தொலைச்சான்? யாராவது சொல்லுங்களேன்” என்று கேட்டு அர்ச்சனா மூக்கைச் சிந்தினார்.

“இங்க நிக்கிறாங்களே; இவங்களோட பதினாறு வயசு பொண்ணைக் காணும். யாரைக் கேட்டாலும் கடைசியா இவனோட தான் அந்தப் பொண்ணைப் பாத்ததா அடிச்சுச் சொல்றாங்க. இது அந்தப் பொண்ணோட ஃபோனு. இதுல தம்பியும் அவங்களும் லேட் நைட் சாட்டிங் பண்ணிருக்குறது என்ன! அவங்க இவருக்கு ஆயிரம், ஐநூறுன்னு காசு அனுப்பிருக்குறது என்ன! மாத்தி மாத்தி செல்ஃபிக்கு ஹார்ட் வுட்றது என்ன! இத்தனையும் பாத்த பின்னாடி, அந்தப் புள்ளை காணாம போனதுல தம்பிக்குத் தொடர்பு இருக்குறதா சந்தேகம் வருமா? வராதா?” என்றார் காவல் ஆய்வாளர் தீவிரமான பாவனையில்.

மறுத்து எது பேசினாலும் அவர்கள் சீற்ற நிலையை அடைவதால், மாது தாயாரின் கரத்தை இறுகப் பற்றியவாறு அமைதி காத்தாள். அத்தருணம் மதுசூதனன் அவசரமாக உள்நுழைய, அவனைக் கண்டுவிட்டு அவள் எழுந்து நின்றாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன் நேராக ஆய்வாளரை நெருங்கினான்.

“வணக்கங்க, ஐயா. எப்படி இருக்கீங்க? இப்போலாம் கடைப்பக்கம் ஆளையே காணும்” என்று புன்னகை முகமாக அவன் அவரை நலம் விசாரித்தான்.

இவ்வளவு நேரம் கடுகடுவென்றிருந்த ஆய்வாளரின் முகம் நெல்லளவு இளகிக் கொடுத்தது‌ “யோவ், நீ என்னயா இங்க?”

“இவங்க தான் நம்ம மனைவி. அவங்க மாமியார். ஹை, மச்சான்! இவனை எங்கருந்து புடிச்சுட்டு வந்தீங்க?” அவன் இயல்பாகச் சிரித்தான்.

“இவன் உன் மச்சானாய்யா! சாயங்காலத்துலருந்து இவனால ஒரே மண்டக் காய்ச்சல். ஒரு ஸ்கூல் கேர்ள காணும், மது. அந்தப் பொண்ணு காணாப் போறதுக்கு முன்னாடி, இவனும் அந்தப் பாப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சிருக்காங்க. எங்கடா பாத்தீங்க; என்னடா பேசுனீங்கன்னு கேட்டா வாயவே திறக்க மாட்றான். இவனைத் தேடி வீட்டுக்குப் போனா, போலிஸப் பாத்துட்டு எஸ்கேப் ஆக டிரை பண்ணிருக்கான்; இங்க வர வச்சாவது உண்மைய வாங்கலாம்னு பாத்தா, அழுது அழுதே சாவடிக்குறான்”

“திடீர்னு போலிஸ் யூனிஃபார்மைப் பாத்ததும் பய பயந்துருப்பான். உங்களுக்கு என்னங்க, ஐயா; டீயா, டின்னரா?” மது தன் இயல்பை மாற்றாமலே வினவினான்.

அடுத்த பத்து நிமிடங்களில் அங்குள்ள அனைத்து காவலர்களுக்கும் கைதிகளுக்கும் பிரியாணிப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. 

அதிலொரு பொட்டலத்தைக் கரத்தில் ஏந்திக் கொண்டு “சின்ன பையன்; பசி தாங்க மாட்டான்” என்றான் மது.

ஆய்வாளர் மனமிறங்கி இசைவு தெரிவிக்க, அவன் முத்துமாரியின் தோளைப் பிடித்து பக்கவாட்டு இருக்கைக்கு இட்டுச் சென்றான்; 

பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்தவன் அதில் சால்னாவை ஊற்றியவாறு “யார்றா அந்தப் பொண்ணு?” என்று வினவினான்.

“ஃப்ரென்டு தான், மாமா” இவன் மெல்லிய குரலில் முனகலாய் விடை பகர்ந்தான்.

“உள்ளதை உள்ளபடி சொல்லு, தம்பி. இனிமே மறைச்சுப் பிரயோஜனமில்ல” என்று மாது ஒரு பக்கம் புகைந்தாள்.

“நீயும் நம்பிக்கை இல்லாம பேசிட்டுருக்காத” இளையவன் வெகுண்டான்.

“அந்தப் பொண்ணுட்ட காசு வாங்குனியாடா? யார்ட்டயும் கைநீட்டி காசு வாங்கக் கூடாதுனு சொல்லியும் இதைப் பண்ணிருக்க. அப்படி என்ன நெஞ்சழுத்தம்! நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை என்ன செய்யலாம்?” ஒரு தமக்கையாக அவளின் ஆத்திரம் நியாயமானது என்றாலும் அந்தச் சூழ்நிலைக்கு அது அநாவசியம்.

எனவே, மது அவளின் ஒழுக்க வகுப்பில் அத்தியாவசியத்தோடு குறுக்கிட வேண்டியிருந்தது “மாது, நீ கொஞ்சம் அத்தையப் பாரு. மூச்சு விடாம அழுதுட்டு இருக்காங்க. அவங்களையும் சேகர் அண்ணாவையும் கூப்டுப் போய்ச் சாப்பிட வை. என்ன பாக்குற? போ. மாரிய நான் கவனிச்சுக்குறேன்”

அவள் அரைகுறை மனதுடனே அங்கிருந்து அகன்றாள்.

“மாரி, நீ அந்தப் பொண்ணு கூட பழகுனதலாம் விடு. அவளுக்கு உன்னால எந்த ஆபத்தும் வந்திருக்காதுன்னு நான் நம்புறேன். அதே மாதிரி இங்கருக்குற‌வங்களும் உன்னை நம்பணும்ன்னு நாம எதிர்பாக்க முடியாது. காலம் அவ்ளோ கெட்டு கிடக்கு. மனுஷங்க ரொம்ப மோசமா நடந்துக்குறாங்க. காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா, உன் மேல பழி விழுந்தது விழுந்துடுச்சு. நாம எவ்ளோ சீக்கிரம் அந்தப் புள்ளைய கண்டுபிடிக்கிறோமோ, அவ்ளோக்கு அவ்ளோ நம்ம குடும்பத்துக்கும் நல்லது‌. இப்போ சொல்லு; என்ன நடந்துச்சு? உன் ஃப்ரென்டு பேரென்ன?” அவன் நாசூக்காக மனதை அகழ்ந்தான்.

“அவ பேரு மேகலா. நானும் அவளும் ஒரே பஸ்ல தான் ஸ்கூலுக்குப் போவோம். அவங்க வீட்டுல கார்லாம் இருக்கு. ஆனாலும் அவளுக்குச் சாதாரண பசங்க மாதிரி, பஸ்ல போய்ட்டு வரத் தான் பிடிக்கும். எப்பவுமே பணம், பகட்டுக்கு அவ முக்கியத்துவம் தர மாட்டா. எங்களை மாதிரி கவர்மென்ட் ஸ்கூல் பசங்கள்ட்ட கூட கேஸுவலா பழகுவா. நானும் அவளும் திக் ஃப்ரென்ட்ஸ்” என்றுவிட்டு இவன் மேகலாவின் பெற்றோரை அச்சத்துடன் ஏறிட்டான்.

இவனின் முதுகைத் தட்டி ஆசுவாசப்படுத்தினான் மது “சாப்பிடு. சாப்பிடு. சாப்டுட்டே சொல்லு”

“எப்பவும் போல அவங்க வீட்டுல ஏதோ சண்டை. அவளை ஹார்ஷா திட்டிட்டாங்களாம்‌. காலைல இருந்து அப்செட்டாவே மூஞ்ச வச்சிருந்தா; வீட்டை விட்டுப் போகப் போறேன்னு சபதம்லாம் போட்டா. ஐயையோ, அப்படிலாம் செஞ்சிடாத; உங்க அப்பா, அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்கன்னு நான் தான் சமாதானப்படுத்துனேன். அப்படி இருந்தும் அவ நினைச்சதைச் செஞ்சுட்டா போல. எப்பவும் வீட்டுக்குப் போனதும் அவளோட மொபைல்ல இருந்து, அம்மா ஃபோனுக்கு டெக்ஸ்ட் பண்ணுவா. இன்னைக்கு நான் நம்ம வீட்டுக்குப் போயிட்டு அவளுக்கு மெசெஜ் போட்டேன்; ரிப்ளை எதுவும் வரல. எனக்கு அப்பவே டௌட்டு தான்” 

இவர்களின் உரையாடலைக் காவல் ஆய்வாளருமே கூர்மையாகக் கவனித்தார்.

“பொய் சொல்றான், ஸார். இவன் தான் என் பொண்ணை ஏதோ பண்ணிட்டான்” மகளைப் பெற்ற தாயுள்ளம் வேதனையில் பிதற்றியது.

“காலையில உங்க பொண்ணுட்ட சத்தம் போட்டீங்களா? எதுக்காகவாச்சும் அதட்டுனீங்களா?” என்ற ஆய்வாளரின் வினாவிற்கு, அத்தம்பதியினர் ஒருவரையொருவர் ஏறிட்டு விழித்தனர்.

“அப்போ‌ இவன் சொல்றது சரி தான். கொஞ்சம் பொறுமையா இருங்க. உங்க பொண்ணைச் சின்ன கீறல் கூட இல்லாம உங்கள்ட்ட திருப்பி ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு” உறுதிபட வாக்களித்தார் அவர்.

“நீ நல்லவன் தான்டா. நாங்க உன்னை நம்புறோம். மேகலா வீட்டுல கோவிச்சிக்கிட்டு வெளிய கிளம்பிட்டான்னே வச்சுப்போம். அப்படி அவ தனியா எங்கப் போயிருப்பா? உன் மூளையில எதாவது பொறி தட்டுதா? அவளுக்குத் தெரிஞ்சவங்க வீடு, அவளோட ஃப்ரென்ட்ஸ் வீட்டுப் பக்கம் அவ தலையே காட்டல. தேடிப் பாத்தாச்சு”

“அவங்க பாட்டி வீடு ஒன்னு மதுரைல இருக்கு. அவங்கன்னா அவளுக்கு ரொம்ப இஷ்டம்… இது வெறும் யூகம் தான். மத்தபடி, அவ இப்படி ஓடிப் போவான்னு எனக்குச் சத்தியமா தெரியாது. என்கிட்ட அவ சொல்லவும் இல்லை” இவன் தனக்குத் தெரிந்த வரையில் அனைத்தையும் ஒப்பித்துவிட்டான்.

“எங்க அம்மாக்கும் எங்களுக்கும் கான்டாக்ட்டே இல்ல, ஸார். அவங்கள நேருல பாத்தே ரெண்டு வருஷத்துக்கு மேல இருக்கும்” என்றார் மேகலாவின் தந்தை நொந்துபோய்.‌ 

பல்வேறு கோணங்களில் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்த ஆய்வாளர் வாக்கி டாக்கியைக் கையிலெடுத்தார்; “புது பஸ் ஸ்டான்ட ரௌன்ட்அப் பண்ணுங்கயா. மேகலா அங்கத் தான் இருப்பானு இன்ஃபர்மேஷன் வந்திருக்கு. அந்தப் பொண்ணு ஃபோட்டோவக் காட்டி ஒருத்தர் விடாம விசாரிங்க‌. நான் வந்துட்டே இருக்கேன். ஏட்டு, இவங்களைப் பாத்துக்க” என்றபடி  காவல் வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார். அவரின் கணிப்பு தவறவில்லை. புதிய பேருந்து நிலையத்தில் மதுரைக்குச் செல்லக் கூடிய ஒரு பேருந்துக்கு அருகே நின்றபடி, ஒற்றை நீள்குச்சியில் பரிமாறப்பட்ட உருளைச் சுருளை ருசித்துக் கொண்டிருந்தாள் மேகலா. அவளை வளைத்துப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் காவலர்கள். மாணவி பெற்றவர்களின் முன் நிறுத்தப்பட்டதும் அழுகை, ஆர்ப்பாட்டம் என அம்மூவருக்கும் உணர்வுகள் வெடித்தன. அவர்களின் குடும்ப நாடகத்தை சுற்றியிருந்த யாவரும் ஆவென வேடிக்கை பார்த்தனர்.

“மது, நீங்களாம் போகலாம்” என்று கனத்த பெருமூச்சுடன் ஆய்வாளர் கூறவும், முத்துமாரி உட்பட்ட, தம்மவர்களைக் காவலகத்திற்கு வெளியே வழிநடத்தினான் அவன்;

“ரொம்ப நன்றி. வரோங்க, ஐயா” என்று மரியாதையுடன் விடைபெற்றுக் கொண்டான்.

“நாலு மணி நேரமா நம்மளலாம் மென்டல் பிரெஷர்க்கு ஆளாக்கிட்டு, ஒரு ஸாரி கூட கேக்க மாட்டாங்களா?” மாது சலித்து முறுக்கினாள்.

“ம்ச்ச், மாது. இங்கலாம் இப்படித் தான். இதோட விட்டாங்களேன்னு சந்தோஷப்படு” காவல் துறையின் நடைமுறை அறிந்த கணவனவன் மென்மையாக எடுத்துரைத்தான்.

அவளால் அத்தனை துரிதத்தில் நிதர்சனத்தை ஏற்க இயலவில்லை. அந்த உள்ளப் பொருமலை அப்படியே தாயிடம் வெளிப்படுத்தினாள் “எங்க உன் புருசன்?”

மருமகனின் முன்னிலையில் இந்தக் கேள்வி வந்து விழவும் அர்ச்சனா தயங்கி தலை குனிந்தார்.

“அது திருந்தவே திருந்தாது. வீட்டுல உள்ளவங்க தலையில இடியே விழுந்தாலும் அந்தாளுக்கு அவரோட குடியும் போதையும் தான் முக்கியம்” அவள் வழக்கம் போலவே அங்கலாய்த்தாள்.

“டென்ஷன் ஆகாத, மயிலு!” மது அங்ஙனம் குழைந்துரைக்க, அனைவரின் முன்னிலையிலும் அவளுக்குக் கூச்சமாகப் போயிற்று. 

“போயா!” என்றவாறு அதரங்களை இசைவித்தவள் அவ்விடத்தை விட்டு மின்னல் வேகத்தில் நீங்கினாள்.

மது பின்னர் அர்ச்சனாவிற்கு ஆறுதல் மொழிந்து, அவரையும் மாரியையும் சேகருடன் பத்திரமாக இல்லத்திற்கு அனுப்பி வைத்தான். அதற்கடுத்து அவன் தனது இருசக்கர வாகனத்தை அடைய, அதனருகாமையில் முந்தானை முனையை விரல்களால் திருகியவாறு மாது காத்திருந்தாள்.

“மத்தவங்க முன்னாடி அப்படிலாம் கூப்புடாதீங்க”

“எப்படிலாம்?”

“இந்த மயிலு, குயிலுலாம் வேணாம்னு சொல்றேன்”

“அப்டீனா மேடம்னு கூப்பிடலாங்களா, மேடம்?”

“நீங்க எக்ஸ்ட்ரா எதுவுமே சேக்க வேணாம். ஜஸ்ட் மாதுன்னு கூப்பிட்டா போதும்”

“மறுபடி ரூல்ஸ் போடுற; பாத்தியா?” 

மீண்டும் ஓர் உயிர் உரிக்கும் பார்வையே அவளிடத்திலிருந்து பதிலாகக் கிடைத்தது.

“மாதுளை… இனி இப்டியே கூப்புட்றேன். ஓகே தான?” அவன் அழகோவியமாகக் கண் சிமிட்டினான்.

‘முன்ன எவளையோ ரோஜாப்பூ இரவிக்கைக்காரின்னாரு. இப்போ மயிலுங்குறாரு. பொண்ணுங்களுக்குச் செல்லப்பேர் வச்சுக் கூப்புட்றது இவரோட வாடிக்கை போல. இந்த வேடிக்கைக்குலாம் மயங்காதடி, மாது!’ என அவளின் இதயம் ஓசையின்றி குமுறியது.

ஆகவே, அவளின் பிணக்கு ‘மயிலு’ என்ற அழைப்பினால் உருவானதில்லை; ரோஜாப்பூ இரவிக்கைக்காரி என்ற பட்டத்தினால் உண்டானது. அந்த ரோஜா தேசத்தின் கோமகள் யாரோ? 

***

You may also like

Leave a Comment

About Me

Featured