நள்ளிரவிற்கு மேல் மதுசூதனனும் மாதுளையும் வீடு வந்து சேர்ந்தனர். சோர்ந்து படுக்கையில் விழுந்தவளின் விழிகளை, உறக்கம் தீண்ட மாட்டேன் என்று கூறி போக்கு காட்டியது. அவள் தூக்கம் வராமல் உருண்டு பிரள, அருகில் இருந்தவனாலும் நிம்மதியாக நித்திரையைத் தழுவ இயலவில்லை.
“என்னாச்சு?”
“ஹான்? ஒன்னும்ல”
“கண்டதையும் யோசிக்காம தூங்கு, மயிலு… ம்ச்ச், மாது, மாது. தூங்கு” அவன் அரை தூக்கத்தில் அரற்றினான்.
“எனக்குத் தூக்கம் வரல. காலையில இருந்து நடந்த விஷயங்கள் அப்படி. பிறகு எப்படி நான் தூங்குறதாம்?”
“நான் ஒரு யோசனை சொல்லட்டா?”
“ம்ம்” அவள் அமைதியாக அவனின் முகம் பார்த்தாள்.
“என்கிட்ட ஒரு மாயாஜாலத் தலைகாணி இருக்கு. அதுல தலை வச்சுப் படுத்தா, எப்பேர்ப்பட்ட கவலையா இருந்தாலும் பறந்தோடிப் போயிடும்; தானா தூக்கமும் வந்துரும்”
“மாயாஜாலத் தலைகாணியா?”
“ஆமா. இது தான் அது” என்றவன் தனது உறுதியான கரத்தை அவளின் புறமாக நீட்டினான்.
அவள் திருதிருவென விழிக்க “தூக்கம் வரணும்னா படு. இல்லைனா, உன் இஷ்டம்” என்றவன் தமது இமைகளை மூடிக் கொண்டான்.
அவளும் அவனுக்குச் செவி சாய்க்கக் கூடாது என்று தான் முதலில் நினைத்திருந்தாள். மணியோ ஓட்டமாய் ஓடி விடிகாலை மூன்றை நெருங்கிற்று. இதற்கு மேலும் உறங்காமல் கொள்ளாமல் நேரத்தை விரயப்படுத்தினால், அடுத்த நாள் எங்ஙனம் கல்லூரிக்குச் செல்வது என்று அவள் சிந்திக்கலானாள். அவன் நீட்டிய கரம் நீட்டியபடியே இருக்க, பெருந்தயக்கத்திற்குப் பின்னதாக அதில் தனது சிரம் பொருத்தினாள் அவள். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவே, அவனது சரீரத்திலிருந்து கடத்தப்பட்ட மெல்லிய வெப்பத்தை அனுபவித்தபடி அவளும் நித்திரா தேவியிடம் சரணடைந்தாள். உறக்கத்தில் அவனது கரத்திலேயே அவள் அசைந்து கொடுக்க, அதில் ஆடவன் கண்விழித்தான். முன்பை விட அவர்களிடையே இருந்த இடைவெளி குறைந்திருந்தது; நெருக்கம் அதிகரித்திருந்தது. ஆனால், அவனுக்கு இது போதுமானதாக இல்லை. அவளைக் குறித்து அவன் கண்டு வைத்த கனாக்கள் பற்பல. இந்த வேகத்தில் போனால், தான் உள்ளுக்குள் கோட்டை கட்டி வைத்திருக்கும் காதல் இலக்குகளை எந்தக் காலத்தில் நிறைவேற்றுவது என்றெண்ணி அவன் மனக்கிலேசத்திற்கு ஆட்பட்டான். அவளின் நெஞ்சமெனும் அரியணையில் இடம் பிடிப்பது பிரம்மப்பிரயத்தனம் என அவனுக்குத் தெரியாமல் இல்லை. இருப்பினும் அந்நன்னாளை எதிர்பார்த்து அவன் மிதமிஞ்சிய ஆவலுடன் காத்திருக்கிறான் என்பதே சத்தியம். அவனை நோக்கி ஒருபுறமாய்ப் படுத்திருந்தவள் உறக்கத்தில் சற்றே அண்மைக்கு வந்திருந்தாள்.
அந்த சுந்தர வதனத்தை விழிவிரிய இரசிக்க ஆரம்பித்தவனுக்குத் தூக்கம் தூர போனது. மின்விசிறிக் காற்றடித்து நெற்றியில் புரளும் பூனை முடிகள்; சிப்பி இமைகள்; அளவெடுத்த நாசி; மாதுளை நிறத்தில் கருஞ்சிவப்பாய் அழுந்தப் பொருந்திய அதரங்கள்; குழிப்பேரியைப் பிரதிபலிக்கும் முகவாய்; செம்புற்றுப் பழம் போல மேலே திரண்டு கீழே வடிவாய்க் குறுகிய கன்னம்; அடர்த்தியான புருவங்கள்; இத்துணை அலைச்சலிலும் கலையாத ஒற்றைச் சிவப்புப் பொட்டு ஆகியவை அவன் ரசிப்பதற்கென்றே மிகவும் நெருக்கத்தில் பளபளத்தன. அதுவும் மஞ்சள் மயங்கொளியில் வெளிச்சமும் இருளுமாகக் காட்சியளித்த அந்தக் கழுத்து வளைவு கலைப் பொக்கிசமாக மதிக்கத்தக்கது. கழுத்திற்கும் செவிக்கும் இடையே இருந்த பள்ளத்தில் சிறு தங்கக் காதணி சரிந்து விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு பொன்னிரவில் தான் இந்த ஆயிழையைத் தழுவுகையில், அக்காதணி மேனியைக் குத்திப் புண்படுத்துவதாகச் சிணுங்கி அவள் அதை ஓரங்கட்ட வேண்டும்; அதற்கு மாற்றாக நெற்றிப் பொட்டிலிருந்து கடைவிரல் மெட்டி வரை தன்னையே அணிகலனாக அவள் பூண வேண்டும்; இப்போது ஒய்யாரமாய் அவளோடு ஒட்டி உறவாடும் இந்த உறுவனை, அத்தருணம் ஏளனமாய்க் கண்ணுற்று தான் நகைக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்துக் குதூகலித்தான் அவன். அந்தக் கற்பனையால் உண்டான புன்சிரிப்போடு, அவளைக் கண்டுகளித்தபடியே அவன் உறங்கியும் போனான். சில மணி நேரங்களில் விடிந்துவிட, அவளே அவனை எழுப்பி மது விடுதிக்கு அனுப்பி வைத்தாள். மறுபடி வீடு திரும்பிய மதுவுடன் முத்துமாரியும் வருகை தந்தான்.
“காலையிலயே இவனை எதுக்கு இங்கக் கூட்டிட்டு வந்துருக்கீங்க?” அவள் கல்லூரிக்குத் தயாராகியவாறு வினவினாள்.
“இன்னைக்குப் பூரா மாரி என்னோட தான் இருக்கப் போறான்”
“நீங்க வேற! அவனுக்குப் பிராக்டிகல்ஸ் வருது. படிக்க வேணாமா?”
“ஒரு நாள்ல ஒன்னும் ஆகிடாது. என்னால இன்னைக்கு உன்னை டிராப் பண்ண முடியாது. கவனமா போயிட்டு வா”
“ஓகே. சாயந்தரம் நான் அம்மா வீட்டுக்குப் போயிட்டு, தாமதமா தான் வருவேன். பாத்துக்கங்க” என்று கூறியவள் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்; தம்பியிடம் நேரடியாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அன்று மாலை தாயகத்தில், வழக்கத்திற்கு மாறாக, மகளின் வாயால் அன்னைக்குப் பூசை நடந்தது.
“அவன் கையில ஃபோன கொடுத்து, ஏடிஎம்ம கொடுத்து… என்னமா பண்ணி வச்சிருக்க? கொஞ்ச நாள் வீட்டுல இல்லைனா, இப்படித் தான் உன் புள்ளைய ஊர் மாடு மாதிரி மேய விடுவியா?”
“ஃபோன்ல புள்ளை ஏதோ படிக்கிறான் போலன்னு நினைச்சேன்டி. எனக்கு எந்த இங்லீச தெரியும்! அவன் யார்ட்ட, என்ன பேசுறான்னு நான் எப்புட்றி கண்டுபிடிக்குறது? எனக்குத் தான் தமிழே ஒழுங்கா படிக்க வராதே”
“அவன் நடத்தையில உனக்குத் துளி கூடவா சந்தேகம் வரல? அப்படி என்ன தான் கவனம் உனக்கு!”
“சின்ன சின்ன விஷயத்தையும் தோண்டித் துருவிட்டுருந்தா, தேவையில்லாத சங்கடங்கள் வரும். அந்தந்த வயசுக்குப் பசங்க ஒரு தினுசா தான் இருப்பாங்க”
“ஆன், அவன் தினுசுல சுத்தட்டும். நீ சட்டையே பண்ணாம உக்காந்துட்டுரு. அம்மா, இப்போலாம் ஸ்கூல் பசங்களே கஞ்சா அடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. உஷாரா இருந்து புள்ளையக் காப்பாத்திக்குற வழியைப் பாரு”
“யாரு உன் தம்பியா! அப்படி எதாவது போதைப் பொருள் பக்கம் கை போச்சுனா, கைய காலை உடைச்சி வீட்டுல உக்கார வச்சிருவேன். ஏற்கனவே கட்டிட்டு வந்தவனை வீட்டோட வச்சு கஞ்சி ஊத்திட்டுருக்கனே. அதே மாதிரி அவனுக்கும் நாலு வா கஞ்சி ஊத்திட்டுப் போயிடுவேன். தவிர, அவனைச் சும்மா விடுவேன்னு மட்டும் நினைச்சிடாத. அந்த மாதிரி நினைப்பு அவனுக்கு என்னைக்கு வருதோ, அதுக்கப்பறம் அவன் வெளியுலகத்தையே பாக்காதபடிக்குப் பண்ணிடுவேன்”
“எல்லாம் வெறும் வாய்ச்சவடால்! செயல்ல ஒன்னுமிருக்காது. அவனைப் பாத்துட்டா கண்ணு, தங்கம்னு கொஞ்ச வேண்டியது”
“நானும் கண்டிச்சுட்டுத் தான்டி இருக்கேன். நேத்து இராத்திரி வீட்டுக்கு வந்ததும் மத்துக்கட்டையாலயே நாலு மாத்து வாங்குனான். காலையில விடிஞ்சதும், நம்ம மாப்ள அமுதாவுக்கு ஃபோன போட்டு விசாரிச்சுருப்பாரு போல. அவ என்னத்தை உளறுனாளோ! விடியல்லயே வந்து, தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி கையோட கூட்டிட்டுப் போயிட்டாரு. அவனை நாலு வார்த்தை திட்ட முடியாம, எனக்கு வேற மனசே அடங்க மாட்டேங்குது. பாவி மகன், குடும்பத்தையே ஸ்டேசன் வாசலை மிதிக்க வச்சுட்டானே!”
“இப்போ புலம்பி? அந்த இலட்சணத்துல தான் நீ அவனைப் பாத்துக்குற!”
“நீயும் தான் ஒரு காலத்துல ஃபோனும் கையுமாவே திரிஞ்ச. இப்போ நீயா திருந்தி நல்ல மருமகளா இல்லையா? அது மாதிரி அவனும் திருந்திட்டுப் போவான்; விடு. முடிஞ்சு போனதைப் பேசிப் பேசி, நாமளே அவனுக்குத் தூபம் போட்டுறக் கூடாது”
அவள் பதிலேதும் பேசாமல் அன்னையைப் பார்த்திருந்தாள். அவளின் பார்வைக்கான அர்த்தம் தெரிந்தும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். மகனுடைய வழக்கில் அவர் முன்வைத்த அதே வாதம் தான் மகளுக்கும். கடந்த காலத்தை இம்மியளவேனும் அவர் கிளற விரும்பவில்லை.
முனைந்து அவரே அந்த மௌனத்தைக் கலைத்தார் “நாளைக்கு மாப்பிள்ளையும் நீயும் வீட்டுக்கு வாங்க”
“எதுக்கு?”
“சும்மா அழைச்சிட்டு வாயேன்டி. நீயும் அவரும் வரப் போக இருந்தா தான நல்லாருக்கும்”
“சரி, மதியமா வரப் பாக்குறேன். அவருக்கு வேற எதுவும் வேலை இருந்தா வர முடியாது”
“அவரைக் கட்டாயப்படுத்திலாம் அழைச்சுட்டு வரச் சொல்லல. அவருக்கு ஜோலி ஏதும் இல்லைனா மட்டும் கூட்டிட்டு வா. குடல் வாங்கி குழம்பு வைக்கிறேன். சாப்பிட்டுப் போவீங்க”
“அம்மா, எனக்குக் குடல் வேணாம்மா. நண்டு இரசம் வையேன்”
“இந்த வாரம் இவ்வளவு தான் முடியும். மத்ததுக்கெல்லாம் சம்பளப் பணம் வரட்டும்டி. செஞ்சுக்கலாம்”
“எனக்கு இன்னும் ரெண்டு, மூனு நாள்ல சம்பளம் வந்துரும். அதை என்ன செய்யறது?”
“உன் மாமியார் சம்பளத்தைப் பத்தி எதுவும் விசாரிச்சாங்களா?”
“யாரும் அதைப் பத்தி மூச்சே விடல”
“உனக்கு என்ன தோனுது?”
“அத்தை கையில கொடுத்தா, எப்படியும் மதுகிட்ட கேளுமான்னு சொல்லிடுவாங்க. அதுக்குத் தான் அவர்ட்டயே நேரா பேசிரலாம்னு இருக்கேன்”
“ம்ம். காசு சம்பந்தமா சண்டை எதுவும் வேணாம். என் காசு, உன் காசுன்னு பிரிச்சுப் பேசிட்டுத் திரியாத. எதா இருந்தாலும் இனி உங்க காசு. ரெண்டு பேரும் சேந்து முடிவெடுங்க. புரிஞ்சுதா?”
“அதுலாம் அவரு பேசுறதப் பொறுத்தது”
“மாது…” வீட்டினருகே இருந்த செடியில் கொள்முதல் செய்த மல்லியை, நூலில் இறுக்கிய வண்ணம் அர்ச்சனா அவளைக் கூர்மையாக ஏறிட்டார்.
அந்த ஒற்றைப் பார்வையில் அவள் புலியிலிருந்து பூனையாக மாறிப் பம்மினாள் “சர்ரி. சர்ரி. நான் சூழ்நிலை புரிஞ்சு, பக்குவமா நடந்துக்கிறேன். உன் மாப்பிள்ளை மனசு கோணாம பாத்துக்குறேன். ஓகே?”
பதிலுக்கு “குட் கேர்ள்” என்றார் அவர் அழுத்தமான உச்சரிப்போடு.
அவளுக்கோ வியப்பு தாளவில்லை “மம்மி, எப்போல இருந்து இங்லீஷ்லாம் பேச ஆரம்பிச்ச?”
“நான் புதுசா ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போறேன்ல. அந்த வீட்டுல ரெண்டு வயசு குட்டிப் புள்ளை ஒன்னு இருக்கு. அதுட்ட அவங்க ஆத்தாக்காரி எப்பவும் இங்லிஷுல தான் பீத்தும். அதுல ஒன்னு, ரெண்டு வார்த்தை தானாவே நாக்குல ஒட்டிக்கிது”
“ஹ்ம்ம், நீயும் படிச்சிருந்தா இந்நேரம் எங்கயோ போயிருக்கலாம்!”
“எங்க, கைல பல்பம் புடிக்க வேண்டிய வயசுலயே என்னை எங்க அப்பன் கல்லக்காய் பிடுங்க அனுப்பிட்டான். எங்க ஊருல ஸ்கூல் இருக்குற திசை தெற்கா, வடக்கானு தெரிஞ்சுக்காமலே, கல்யாணம் பண்ணி அடுத்த ஊருக்குப் போயிட்டேன்”
“உன் சோகக் கதையக் கேக்க ஒரு மாமாங்கம் போதாது, ஆத்தா. இந்த அர்ச்சனா தேவி காவியத்தை இன்னொரு நாள் பொறுமையா உக்காந்து கேக்குறேன். இப்போ கிளம்புறேன். பை, மம்மி!”
“வேலை வெட்டி இல்லாமலா இதைக் கட்டிட்டு இருக்கேன். இதை வச்சுட்டுப் போ, புள்ளையே” என்றவர் அவளை இழுத்து வைத்து, ஒரு கையளவு நெருங்கக் கட்டிய குண்டு மல்லியைக் கூந்தலில் செருகினார்.
“அதான் காலேஜ் போயிட்டு வந்துட்டேனாம்மா. இப்போ எதுக்குப் பூவு?”
“கல்யாணம் ஆயிடுச்சுன்னு தான் பேரு. ஒரு வெவரமும் தெரிஞ்சு தொலைய மாட்டேங்குது”
அவரின் எரிச்சலுக்கான காரணத்தைக் கண்டறிய இயலாமலே அங்கிருந்து எழுந்தாள் அவள். அவளின் தந்தை நடுவீட்டில் போதையில் கிறங்கிக் கிடந்தார்.
“இதைப் பாரேன்; கூச்ச நாச்சமே இல்லாம காலைப் பொளந்து போட்டுத் தூங்கிட்டு இருக்கு. யாராச்சும் பாத்தா வெக்கக் கேடு! வாசக் கதவையாச்சும் மூடி வையும்மா” என்று முணங்கியவாறே அவள் புறப்பட்டாள்.
அன்றிரவு மதுவும் மாரியும் ஒன்றாகத் தான் வீடு வந்தனர். இருவருக்கும் உணவு பரிமாறி, அடுக்களையைச் சுத்தம் செய்த பின்னர் அவள் அறைக்குள் நுழைந்தாள்.
பாத்திரம் துலக்கி ஈரமான கரத்தைத் துண்டில் துடைத்தபடியே அவள் வினவினாள் “தம்பிய பாருக்குக் கூட்டிட்டுப் போனீங்களா?”
“ஆமா”
“ஏங்க, அவன் சின்ன பையன்ங்க. அவனை எதுக்கு அங்கல்லாம் கூட்டிட்டுப் போனீங்க?”
“அவன் மேல் ஃப்ளோர்ல இருக்குற ஃபேமிலி செக்ஷன்ல தான்மா உக்காந்துருந்தான். கீழ அவனை நான் விடல. வீட்டுல இருந்தா அவனுக்கு ஒரு மாதிரி இருக்கும். மன மாற்றத்துக்காகத் தான் அங்க அழைச்சுட்டுப் போனான்”
“நம்மூர்ல குடும்பமா கூட குடிக்க வருவாங்களா?”
“ம்ம். சிலர் கப்பிளா வருவாங்க. அதில்லாம பொண்ணுங்க கேங்கும் வரும். அதனால, முதல் மாடியை ஜென்ட்ஸுக்கு அலாட் பண்ணிட்டேன். ரெண்டாவது மாடியை ஃபேமிலி ஃப்ரென்ட்லியா மாத்தியாச்சு. அன்னைக்கு நானும் அனுவும் செகன்ட் ஃப்ளோர் பால்கனில உக்காந்துருந்தோம்; பாத்தியா? அங்க பொண்ணுங்க மட்டுந்தான் அலோவ்டு”
“பொண்ணுங்க கேங்குனா? எங்க காலேஜ்ல இருந்துலாம் வருவாங்களா?”
“நான் அந்தளவு கவனிச்சது இல்லமா. பாக்குறதுக்குச் சின்ன வயசா தெரிஞ்சா மட்டும் ஐடி கேட்டு, செக் பண்ணுவோம். உங்க காலேஜ் பிரின்சிபால் ஸார் நமக்குத் தோஸ்த்து தான். வேணா, இன்ட்ரோ பண்ணி வைக்கவா?”
“அவருமா குடிக்கிறாரு?” அவள் அதிர்ந்து போய் உதடுகளை விரல்களால் பொத்தினாள்.
“அடுத்த நாள் வாழ வழியில்லாதவன்ல இருந்து, பத்து தலைமுறைக்குச் சொத்து சேத்து வச்சிருக்குறவன் வரை எல்லாருமே தான் குடிக்கிறானுங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு நியாயம். வசதிக்கேத்த இடம். பணத்துக்கேத்த சரக்கு. ஒரு காலேஜ் பிரின்சிபால டாஸ்மாக் வரிசைல பாத்தா எவனாவது மதிப்பானா; சொல்லு. வீட்டுலயும் பொண்டாட்டி, புள்ளைங்க தொல்லை தாங்காது. அதான் நம்ம கடையைத் தேடி வராங்க”
“எது, எது; பொண்டாட்டி, புள்ளைனா தொல்லையா தெரியுதா உங்களுக்கு? உங்க நல்லதுக்குச் சொன்னா, நச்சரிப்பா தான் தோனும்”
“ஆனா, என் பொண்டாட்டி அப்படி இல்லைப்பா. ரொம்ப ஸ்வீட்!”
“என்ன, வஞ்சப் புகழ்ச்சியா? அதுவும் உங்ககிட்ட நான் ஸ்வீட்டா எப்பவும் நடந்துகிட்ட மாதிரி தெரியலையே”
“என்னோட உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுங்குற விஷயமே ரொம்ப ஸ்வீட் தான!”
“எல்லாரும் தான் கல்யாணம் பண்றாங்க. சும்மா உளறாதீங்க” அவள் அவனின் அகவுணர்வை உணராமல் தட்டிக் கழித்தாள்.
“இல்ல, மாது. நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண விசயம் இல்லை” அவனது குரலில் நிறையவே மாற்றம் தெரிந்தது.
“என்னாச்சு, மது? நான் எப்பவும் போல தான் பேசிட்டுருந்தேன். ஏன் திடீர்னு சீரியஸ் ஆயிட்டீங்க?” அவளோ பதறினாள்.
“ம்ச், அதைப் பத்தி பேச வேணாம். தூங்கலாம்” என்றவன் சட்டையைக் கலைந்துவிட்டு, நேற்றிரவு அணிந்திருந்த டீசர்ட்டினை உடுத்தி படுக்கையில் வீழ்ந்தான்.
திருமணம் ஆன தினந்தொட்டு அவன் ஒரு பொழுது கூட இங்ஙனம் முகம் சுணங்கியது கிடையாது. அவன் இந்தளவு உள்ளம் வேகும்படி, தான் என்ன தவறாகப் பேசி விட்டோம் என அவளுக்கு விளங்கவில்லை. அந்தச் சிந்தையிலே உழன்றவளுக்கு உறக்கமும் பிடிபடவில்லை. வளையலொலி முட்டி மோதி மேலெழும்பும் விதமாக, அவள் அவன் பக்கமாக ஒருக்களித்தாள்; தனது அச்சம், மடம், நாணம் யாவற்றையும் ஒதுக்கி ஓரந்தள்ளிவிட்டு, என்றுமில்லாமல் அவன் தனக்குக் காண்பிக்கும் பரந்த முதுகின் நடுவே மோதிர விரல் கொண்டு சுரண்டினாள். கொஞ்சமாகத் திரும்பிப் பார்த்தவனின் நெறிந்த புருவங்களில் சத்தமில்லா வினாவொன்று தொக்கி நின்றது.
அவள் மெல்லிய தயக்கத்துடன் புன்னகை ததும்பக் கேட்டாள் “எனக்கு மாயாஜாலத் தலைகாணி வேணும்; கிடைக்குமா?”
அவள் வினவிய விதத்தில் தொலைந்து போக இருந்த மாயச் சிரிப்பு அவனிதழ்களில் நயமாக மீண்டது. மறுநாள் காலை அவள் எழுந்து பார்த்தபோது முத்துமாரி அகத்திலில்லை. சற்று முன்பு அவன் இங்கிருந்து கிளம்பிப் போய்விட்டதாக சிந்தாமணி தெரிவித்தார். அவருடன் இருந்து சமையல் பணிக்கு உதவிவிட்டு, துணி துவைப்பதற்காக மாடிக்குச் சென்றாள் அவள். பக்கத்து மாடியில் கால் மூட்டளவு சேலையைச் சுருட்டியபடி ஒரு நடுத்தர வயது அம்மையார் துணியலசிக் கொண்டிருந்தார். அந்நேரம் கையில் தேநீர்க் குவளையோடு மதுசூதனன் படியேறி வந்தான். அவளின் விழிகள் பக்கத்து மாடிக்கு விரைய, அந்தப் பெண்மணி சுற்றம் சூழலைக் கவனியாமல் ஆடை விலகி அங்கங்கள் தெரிந்தும் தன் பணியில் மும்முரமாய் இருந்தார்.
“குட் மார்னிங்!” அவன் உற்சாகத்தோடு நவின்றான்.
“மார்னிங், மார்னிங்” என்றவள் உடைகளை ஊற வைத்தவாறு, அவ்வப்போது கணவனின் போக்கையும் கண்காணித்தாள்; அவனது பார்வை அரை நொடியேனும் மாற்றான் வீட்டுப் பக்கம் சாய்கிறதா என்று தீவிரமாகச் சோதித்தாள்.
அவனோ அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என்று எங்கும் திரும்பவில்லை. அவளுக்கு நேரெதிரே நின்று கொண்டு, உலகத்திலேயே அவளொருத்தி தான் பெண் என்பது போல பார்த்து வைத்தான். அவள் அந்தப் பார்வையை மூளைக்கு எடுத்துச் செல்லாமல், துணிக்குச் சலவைக் கட்டி தேய்க்கும் வேலையில் இறங்கினாள். ஒன்று மாற்றி ஒன்று அவள் துணிகளைக் கும்மியெடுக்க, அவனின் நிலையில் எந்தவொரு மாற்றத்தையும் காணோம். அடுத்த மாடி அம்மையார் தூக்கி முடிந்திருந்த பாவாடையை இறுதியாக இறக்கி, கீழேயும் சென்றுவிட்டார். அப்போதும் அவன் தனது பிரபஞ்சத்தையே அவளொருத்தியிடம் ஒப்புவித்த கணக்காக, அங்கிருந்த தடுப்பிலேயே அமர்ந்துவிட்டான். நிமிடத்திற்கு நிமிடம் அவனது பார்வைக் கோணம் மாறுபட, அவளால் நிம்மதியாக வேலை செய்ய இயலவில்லை.
“அத்தை, இந்நேரம் சமைச்சு முடிச்சிருப்பாங்க. போய்ச் சாப்டுங்க. சாப்பிட்டு கடைக்குப் போங்க”
“ஏன் துரத்துற? மனுசன் ஒரு நாள் வீட்டுல ரெஸ்ட் எடுக்கக் கூடாதா?”
“மொட்டை வெயில்ல நின்னு யாராவது ரெஸ்ட் எடுப்பாங்களா? வீட்டுக்குள்ள போங்க”
“நான் நிக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை?”
அவள் இதற்கு என்ன விடை பகர்வாள்! மீண்டும் தலையைக் கவிழ்த்துக் கொண்டு, தான் தொட்ட காரியத்தை நிறைவேற்றி முடித்தாள். அவள் துவைத்து முடிக்கும் வரை அலுப்பேதுமின்றி அவளையே வேடிக்கை பார்த்திருந்தவன், இத்தருணம் அவளுக்கு உதவ முன்வந்தான்.
“நானும் காயப் போட்றேன்”
“இதெல்லாம் செய்யச் சொல்லி உங்கள்ட்ட இப்போ யார் கேட்டா?” நெற்றியில் துளிர்த்து, நாசியில் வழிந்தோடிய வியர்வைத் துளியைத் துடைத்தவாறு அவள் வினா வீசினாள்.
“என் துணியையும் தான துவைச்சிருக்க? நானே எல்லாத்தையும் காயப் போட்டுக்குறேன். நீ நிழல்ல ஒதுங்கி நில்லு”
“பரவால்ல. சேந்தே காயப் போடலாம்” என்றவள் ஆடைகளைப் பிழிந்து, முன்னிருந்த கொடியில் தொங்கவிட்டாள்.
பின்புறமிருந்து அவளை அளந்தபடி வாளியை ஆராய்ந்தவனுக்கு முதலாவதாகக் கையில் கிடைக்கப் பெற்றது ஒரு கைக்குட்டை “ஐ, அனுவோட கர்ச்சீப்பு!”
அதை அவனிடமிருந்து சடுதியில் கைப்பற்றியவள் “எங்க, காட்டுங்க. நான் கூட உங்களோடதோன்னு நினைச்சேன்” என்று கூறி, தரையில் தேங்கியிருந்த நுரை ததும்பிய நீரில் அதை விட்டெறிந்தாள்.
“ஏ, அதை ஏன் தூக்கிப் போட்ட?” அவன் திகைத்தான்.
“அது எதுக்கு உங்களுக்கு? பேசாம வேலையப் பாருங்க” என்று விட்டு அவள் பணியைத் தொடர முயல, அவனிடம் முகங்கொள்ளா புன்னகை மலர்ந்து விரிந்தது.
அதைக் கண்டு கொண்டவளால் நிதானமாய் இருக்க முடியவில்லை “என்ன அங்கச் சிரிப்பு?”
“படிச்ச பொண்ணு; சோசியலா இருப்பேன்னு நினைச்சிட்டேன்” அவன் குறுநகை மாறாமலே உரைத்தான்.
“நீங்க எந்தப் பொண்ணுட்ட வேணாலும் பேசுங்க; பழகுங்க. நான் தடுக்க மாட்டேன். ஆனா, அந்த அனுஷா உங்களை லுக்கு விடுற விதமே சரியில்ல. அதான் அவ வேணாம்னு முடிவு பண்ணிட்டீங்கள்ல. அப்பறம் என்ன அனு, அனுன்னு கொஞ்சல் வேண்டிக் கிடக்கு?”
“உனக்குத் தான் நான் செல்லமா கூப்பிட்டா பிடிக்கலல்ல”
“அதுக்கு?” என்ற வினவலோடு விழிப் பாவைகளை உருட்டி அவனுடைய கண்களைப் பார்த்தாலே பார்க்கலாம்!
“எம்மா, கத்திப் பார்வை!” அவனின் இதயம் இரயிலோடும் தண்டவாளம் போல தடதடத்தது.
“ம்க்கும்” அவள் அலட்டலோடு மோவாயைத் தோளில் இடித்துக் காட்டினாள்.
“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்னதுடைத்து” அவள் அவனைக் கண்ணோடு கண் எதிர்நோக்கியபடி மொழிந்தான்.
“என்னது?”
“திருக்குறள்”
“ஐயையோ! ஆள விடுங்க” என அலறியவள் படியிறங்கி ஓடியேவிட்டாள்.
இவள் என்ன காதல் என்ற பதத்தைக் கூறுமுன்னே காத தூரத்திற்கு ஓடுகிறாள் என்ற விந்தையோடு, அவன் மீதமிருந்த உடைகளை உலரப் போட்டான்;
“இந்த ஸ்ட்ரிக் ஆஃபிசர அவன் மட்டும் எப்படி உசார் பண்ணான்னு புரியலயே! பேசாம அவன்ட்டயே ஐடியா கேட்ருவோமா?” புத்தியில் உதித்த அந்த மானங்கெட்ட சிந்தனையைக் கைவிடும் வகையில் தனக்குத் தானே பின்னந்தலையில் தட்டியும் கொண்டான்.
***