கீழே வந்த மாதுளை வீட்டினைக் கூட்டிப் பெருக்க, சுலோச்சனா தவறவிட்ட ஐம்பது ரூபாய் இவளின் கட்டிலுக்கு அடியிலிருந்தே கிடைக்கப் பெற்றது.
“சுலோ, சுலோ…”
“சொல்லுங்க, அண்ணி”
“ஒரே ஒரு நிமிஷம் இங்க வாயேன்”
மும்முரமாய்த் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த இவள் அசிரத்தையோடே எழுந்து வந்தாள். மாது இவளது கரத்தில் அத்தாளை வைக்கவும் இவளின் விழிகள் பிரகாசித்தன.
“அண்ணி, இது, இது…”
“அதே தான். உங்க அண்ணாட்ட போய்க் கொடு”
“தேங்க்ஸ், அண்ணி. நான் இதை மறக்கவே மாட்டேன்” அவளைக் கட்டியணைத்துவிட்டு வரவேற்பறைக்குப் பறந்தாள் சுலோச்சனா.
அப்போது தான் வெற்று வாளியைத் தூக்கிக் கொண்டு, மதுசூதனன் படியிறங்கி வீட்டினுள் வந்தான்.
“நீ எப்போலருந்துணா வீட்டு வேலைலாம் பாக்க ஆரம்பிச்ச?” இளையவள் வாயைப் பிளந்தாள்.
“பாத்து, பல்லி எதுவும் உள்ள போயிட போகுது” என்றவன் அவளது தலையில் அந்த வாளியைக் கவிழ்த்தான்.
அதைத் தூக்கி ஓரமாக வைத்தவள் “அண்ணா, இங்கப் பாரு. டட்டடய்ன்!” என்றவாறு ரூபாய் நோட்டை நீட்டினாள்.
“இதை நீ இன்னும் மறக்கலையா?”
“மறக்குற அளவுக்கா என்னைத் திட்டுன!” இவள் வேதனையுடன் அந்நாளை நினைவு கூர்ந்தாள்.
“பாப்புமா, நான் இதுவரை உன்னைத் திட்டுனதே கிடையாது. உண்மையிலயே அண்ணன் திட்டிருந்தேன்னா எப்படி இருக்கும்னு மத்த மூனு பேரைக் கேட்டுத் தெரிஞ்சுக்க. இதையும் நீயா கண்டுபிடிக்கலை தான? உண்மையச் சொல்லு”
“ஹிஹீ. எப்படிணா எல்லாத்தையும் கரெக்ட்டா கெஸ் பண்ணுற? இந்த நோட்டு அண்ணி கைல தான் மாட்டுச்சு. ஆனாலும் நான் திருந்திட்டேன், ணா. இனிமே காசு விஷயத்துல எவ்ளோ கவனமா இருக்கேன்னு மட்டும் பாரேன்”
“பாக்குறேன்! இந்த ஐம்பது ரூபா உனக்குத் தான். அவசியமானதுக்குச் செலவு பண்ணு” அவன் அழுத்தமான பாவத்துடன் இயம்பினான்.
அந்நொடி தங்கையின் முகத்தில் ஒருவித நெருடல் உணர்ச்சி வளைந்து நெளிந்தது. அதற்கான காரணத்தை அறிந்தும் அவளின் உச்சியை வாஞ்சையாய் வருடி, அவன் சமையலறைக்குள் புகுந்தான்.
“மாது, சாப்பிட வா”
“எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க சாப்பிடுங்க” மனைவி உள்ளிருந்து கூக்குரலிட்டாள்.
“அதெல்லாம் கிடக்கட்டும். நீ இங்க வா முதல்ல” என்றவன் இருவருக்கும் சேர்த்து ஒரே தட்டில் உணவு பரிமாறினான்.
“வெறும் குழம்பா ஊத்திட்டு இருக்க பாரு. கறிய அள்ளி வைடா” என்றார் அருகிலிருந்த சிந்தாமணி.
“செல்ல அம்மா…” அவன் ஆசையோடு அவரின் கன்னம் கிள்ளிக் கொஞ்சினான்.
“என்னடா, ஐஸ்லாம் ஜாஸ்தியா இருக்கு?”
“எங்க அம்மாவுக்கு நான் ஐஸ் வைக்காம, வேற யார் வைப்பா!”
“சரி தான். அப்பறம், சம்பந்தி அம்மா ஃபோன் பண்ணிருந்தாங்க. உன்னையும் மாதுவையும் வீட்டுக்கு வரச் சொன்னாங்க. நேரம் ஒதுக்கிப் போய்ட்டு வந்துரு”
“ஓகே. சமையல் வேலைலாம் முடிஞ்சுதுல்ல. நீயும் வா; சாப்பிடலாம்” என்றவன் அவரையும் கையோடு இழுத்துச் சென்று கட்டிலில் அமர்த்தினான்.
அவரிடம் ஒரு தட்டினை நீட்டியவன், தனக்கான தட்டை மடியிலேற்றி மனையாளைத் தேடினான் “மாது, இன்னும் எவ்ளோ நேரம்?”
“வந்துட்டேங்க. வந்துட்டேன். நான் இல்லாம சோறு, தண்ணியே இறங்காத மாதிரி தான்” அவள் முனகலோடு வந்து சேர்ந்தாள்.
“மாது, நீ சொல்லலைனாலும் அதான் நிஜம். அவன் உன்னால தான் காலைச் சாப்பாடே சாப்புட்றான். இல்லைனா, மதியம் பன்னெண்டு மணிக்குத் தான் சாப்பிடுவானே” என்றார் அவனைப் பெற்ற மாதர் குல திலகம்.
“என்ன அத்தை சொல்றீங்க?” அவள் திகைத்தாள்.
“ஆமாம்மா. விடிய விடிய எழுஞ்சு கடைக்குப் போயிடுவான். அங்கருக்குற வேலையைப் பாக்கவே நேரம் சரியா இருக்கும். கடையிலயும் வாங்கிச் சாப்பிட மாட்டான். சொல்லப் போனா, அவனுக்குக் கடை வாசமே பிடிக்காது”
“அன்னைக்கு என் கூட ஹோட்டெல்ல சாப்பிட்டாரே, அத்தை”
“என்னைக்காச்சும் ஒரு நாள்னா சாப்பிடுவான். எங்களுக்குலாம் பிரியாணி வாங்கிக் கொடுத்துட்டு, அவன் மட்டும் உப்புமா சாப்பிட்ற இரகம். அந்தளவுக்கு அவன்கிட்ட வீட்டுச் சாப்பாட்டுக்குத் தான் கிராக்கி ஜாஸ்தி”
“ஏங்க, என்னங்க இது? அன்னைக்கு நான் கேட்டப்போவே கடைச் சாப்பாடு பிடிக்காதுன்னு சொல்லிருக்கலாம்ல” அவள் அவனை நேருக்கு நேர் முறையிட
அவன் இலகுவாகத் தட்டிக் கழித்தான் “ஒரு வேளை சாப்பிட்டா ஒன்னும் ஆகிடாது. அதுவும் வாசு செய்யுற ஃப்ரைடு ரைஸ்னா, எனக்குச் சின்னதுல இருந்தே ரொம்ப பிடிக்கும்”
“வாசுவோட கடைக்குப் போனீங்களா?” சிந்தாமணி வியந்தார்.
“ஆமா, அத்தை. அவரு யாருன்னே தெரியாம, நாந்தான் இவரை அந்தக் கடைக்குக் கூட்டிட்டுப் போயிட்டேன்”
“அதனால ஒன்னுமில்ல, மாது. அவன் தான் நம்மகிட்ட முறுக்கிட்டுத் திரியுறான். முன்ன, எனக்கும் அவன் மேல கோவம் இருந்தது என்னவோ உண்மை தான். காலம் எல்லாத்தையும் மறக்கடிச்சிடுச்சு. வாசு எங்களைப் பத்தி உன்கிட்ட எதுவும் சொன்னானா?”
“இல்ல, அத்தை. வாமா, நல்லாருக்கியான்னு மட்டுந்தான் கேட்டாரு”
“அதையாவது கேக்க அவனுக்கு மனசு வந்துச்சே!”
“அத்தை, சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்களாவது ஒரு வார்த்தை அவரை நேருல பாத்துப் பேசலாம் இல்லையா?”
“அவன் என்னைக் கண்டாலே மூஞ்சைத் திருப்பிட்டுப் போயிடுவான். பின்ன எங்கருந்து பேசுறது?”
“உங்க பையன விட்டுப் பேச வைங்க, அத்தை. அத்தனை மனக் கசப்பும் நிமிஷத்துல சரியா போயிடும். சுத்தி இத்தனை சொந்தபந்தம் இருந்தும் அவர்ட்ட பேசாம இருந்தா, நாமளே ஒதுக்கி வச்ச மாதிரி ஆயிடாதா?” அவளின் உற்றார், உறவினர்கள் அவ்விதம் தான்; இராமசாமியின் குடும்பத்தைப் பொருட்படுத்துவதே கிடையாது. அவரின் குடிப் பழக்கத்தினாலும் கடன் கேட்டு நச்சரிக்கும் குணத்தினாலும் ஏற்பட்ட சங்கட நிலை இது. தந்தை வழி பந்தங்கள் எப்போதும் இவர்களை மட்டமாகத் தான் நடத்துவர். அதையே நாம் மற்றவருக்குத் திருப்பிச் செய்யக் கூடாது என்கிற எண்ணம் அவளுக்கு அதிகமாகவே உண்டு.
“அடடடடா… ஒரே ஒரு தடவை பாத்த வாசு அண்ணாவுக்காக எவ்ளோ வருத்தப்படுறா என் பொண்டாட்டி!” கணவனவன் உள்ளுக்குள் பெருமிதத்தோடு உச்சு கொட்டினான்.
“என்னைக் கலாய்க்குற முடிவோட தான் வாயவே திறப்பீங்க போல. போங்க; இனிமேல் உங்க குடும்ப விவகாரத்துல நான் தலையிட மாட்டேன்” அவள் வீண்வாதம் செய்தாள்.
அத்தருணம் சிந்தாமணி இடைமொழிந்தார் “அப்படிலாம் அவசரப்பட்டு வார்த்தைய விடாத, மாது. அன்னைக்கே நான் என்ன சொன்னேன்; உனக்கு நம்ம குடும்பத்துல எல்லா உரிமையும் இருக்கு. நான் போனப்புறம் நீ தான இவங்களலாம் கட்டிச் சமாளிக்கணும்”
அந்த வாக்கியம் அவளைச் சுடாமல் சுட்டது “அத்தை, சும்மா கூட அப்படிலாம் பேசாதீங்க. நீங்க இன்னும் நிறைய வருஷம் உங்க புள்ளைக்குத் துணையா இருக்கணும். மாமா அவரோட ஆயுசையும் சேத்து உங்களுக்குக் கொடுத்துட்டுப் போயிருக்காரு. எனக்குத் தெரியும்; நீங்க இன்னும் முப்பது நாப்பது வருஷத்துக்கு நல்லாருப்பீங்க. நீங்க எதுக்காகவும் அலட்டிக்க வேணாம். நீங்க நினைச்சத விட நான் பொறுப்பா நடந்துப்பேன். என் கூட இருந்து இதைச் செய், செய்யாதன்னு வழிநடத்துனா போதும்” அவள் கனிவன்போடு நவின்றாள்.
அதில் நெஞ்சம் நெகிழ்ந்து மது புன்னகைக்க, அவளோ அதைக் கேலியாகவே பொருட்படுத்தினாள்.
“இவரைப் பாருங்க, அத்தை. என் நம்பிக்கையக் கெடுக்குற மாதிரி நக்கலா சிரிக்கிறாரு. நான் எது சொன்னாலும் இப்படியே தான் நடந்துக்கிறாரு” அவள் சிணுங்கலோடு அலுத்துக் கொண்டாள்.
“ஏன்டா, என் மருமகளைப் பாத்துச் சிரிக்குற? காலையிலயே புள்ளை எவ்ளோ அறிவா பேசிட்டுருக்கு! இப்போலாம் புத்திசாலியா தான் நடந்துப்பா. புருஷனைக் காணும்னு வை; நடுராத்திரினு கூட பாக்காம காது, கழுத்துல நகையோட ரோட்டுல ஊர்வலம் போவா” அவளுக்கு எந்த வகையிலும் இன்னல் நேர்ந்திடக் கூடாது என்கிற அக்கறையில் அவர் இவ்விதம் பகடி செய்தார்.
“அத்தை… நீங்களும் அவரோட சேந்துட்டீங்களா?” அவளின் சிருங்காரம் பன்மடங்கானது.
“குடும்பத்தோட உக்காந்து சாப்பிடாம, இந்தச் சின்னது மட்டும் உள்ள என்ன பண்ணிட்டுருக்கு?” மது சற்றே எரிச்சல்பட்டான்.
“அதுவா; ஃபோனைப் பாத்து பசு மாடு மாதிரி பல்லைக் காட்டிட்டு இருக்கும். ஒன்னு, அந்த ஃபோன உடைக்கணும். இல்லையா, ஈன்னு இளிக்குற அந்தப் பல்லுல நாலைத் தட்டி எடுக்கணும். நம்ம குடும்பத்துலயே இவ ஒருத்தியாவது காலேஜ் வரைக்கும் போயிட்டாளேன்னு சந்தோஷப்பட்டேன். இதுவும் தேறாது போல” சிந்தாமணி வருத்தம் தெரிவித்தார்.
‘மாது, வேற எதைப் பத்தி வேணாலும் நீ உன் மனசுக்குப் பட்டதைப் பேசு. ஆனா, அவரோட அம்மாவைப் பத்தியோ, தங்கச்சிங்களைப் பத்தியோ ஏனோதானோன்னு வார்த்தையை விட்டுடாத. ஒன்னுக்கு முப்பது தடவை யோசி. அவங்க மேல தப்பே இருந்தாலும் ஆம்பளைங்களால அதை அவ்ளோ சீக்கிரம் ஏத்துக்க முடியாது’ என்ற அன்னையின் குரல் மூளையில் எதிரொலிக்க, அவள் அமைதியாகி உணவை விழுங்கினாள்.
***
அன்று மாலை சுலோச்சனா ஒரு குறுக்குச் சந்தில் நின்றிருந்தாள்; மேலும் விளக்கமாகக் கூறப் போனால், ஓர் ஆடவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
“ஹலோ, எங்க இருக்க? எவ்ளோ நேரமா வெய்ட் பண்றேன். சொன்ன நேரத்துக்கு வரத் தெரியாதா?” என்று அவள் காய்ந்து கொண்டிருக்க அந்த அவன், வினோத், அவளின் பின்னே மிக நெருக்கத்தில் வந்து நின்றான்.
“உஃப்ப்” அவன் காதோரம் காற்றூத
அவள் செவியைப் பொத்தி, இரண்டடி விலகி நிமிர்ந்தாள் “எருமை, ஏன்டா எப்போ பாரு லேட் பண்ணுற?” என்று கேட்டு அவனைத் தோளில் தட்டினாள்.
“ஸாரி…” அவன் இதழ் வளைவோடு இராகமிழுக்க, அவள் சடுதியில் வெம்மை தணிந்தாள்.
தமையன் கொடுத்த ஐம்பது ரூபாய் தாள்களை ஐந்து வாரங்களுக்குச் சேர்த்து வைத்து, அவள் அவனது கரத்தில் காப்பாக அணிந்தாள்.
“ஹை, சில்வரா?” அவன் கண்களில் மின்னல் வெட்ட
அந்த மின்னலை இருட்டடிக்கச் செய்தது அவளின் கூற்று “ஆஹ்ன், நானே எங்க அண்ணன்ட்ட ஒன்னோ ரெண்டோனு தேத்திக் கஷ்டப்பட்டு வாங்கிருக்கேன். இதுல உனக்கு வெள்ளில நொட்டுறாங்க”
அவனும் நாளைய இலாபத்தை மனதிலேற்றி, நாவில் இதம் கூட்டி உரையாடலைத் தொடர்ந்தான். அவன் அணிந்திருப்பது முகமூடி என்றும் அதற்குக் கீழே அவனுக்கு ஒரு கோரமுகம் இருக்கிறது என்பதையும் அவள் அறியாள். அவ்வழியே கடந்து போன ஓர் இருசக்கர வாகனம் அவர்களைக் கண்டுவிட்டு, சிறிது தொலைவில் ஓரங்கட்டிற்று.
அந்நபர் அலைபேசியைக் கையிலெடுத்து மதுவின் எண்ணிற்கு அழைக்கலானான் “மச்சான்!”
“சொல்லு, மச்சான்!”
“கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது?”
“அமர்க்களமா போகுது, மச்சான்” அவன் இங்ஙனம் கூறியபோதே பின்னணியில் பலவித உபசரிப்புக் குரல்கள் கேட்கலாயின.
“மாமியார் வீட்டுல இருக்கியா, மது?”
“ஆமா, மச்சான்”
“மச்சான்…” இவன் சொல்வதா, வேண்டாமா என்று தயங்கினான்.
“சொல்லு, மச்சான்”
“நம்ம தங்கச்சி சுலோ… இங்க ஒரு பையன் கூட பேசிட்டு இருக்காடா. அவங்களைப் பாத்தா ஃப்ரென்ட்ஸ் மாதிரியும் தெரியல. நான் போய் என்னனு விசாரிக்கவா?”
“எந்தத் தெரு, மச்சான்?”
“கோவில் வீதியில. அவன் பாக்க பச்சைப் பொறுக்கி மாதிரியே இருக்கான், மச்சான். அப்படியே விட்டுட்டுப் போக மனசு வரல”
“உனக்குச் சந்தேகமே வேணாம். அது பொறுக்கி தான், மச்சான். ஏற்கனவே பாஷா பாய் எனக்குத் தகவல் சொல்லிட்டான்; பத்து நிமிஷம் முன்னாடி தான் ஃபோனடிச்சான். நான் பாத்துக்குறேன்”
“ஷ்யூரா?”
“ஆமாமா. கண்டுக்காம விடு” என்றதோடு நண்பனும் அழைப்பைத் துண்டித்தான்.
மது சிந்தையோடு அலைபேசியைக் கீழிறக்க, “என்னங்க, என்னாச்சு? சாப்பிடுங்க” என்றாள் மாது.
அவன் அவளிடம் சிரித்து மழுப்பி உண்ணத் துவங்க, மறுபடியும் அழைப்பு வந்தது. இந்த முறை அழைத்ததோ அனுஷா.
திரையில் ஒளிர்ந்த அப்பெயரைக் கண்டவள் “முதல்ல சாப்பிடுங்க. அப்பறமா ஃபோன்லாம் பேசிக்கலாம்” என்றுரைத்து, அதைப் பிடுங்கிக் கொண்டு போனாள்.
அவளின் தன்னுடைமை உணர்வை நினைத்து மேலும் புன்னகைத்தவன், சுலோவைப் பற்றிய யோசனையைக் கலைய இயலாமல் உணவைக் கொறித்தான்.
அந்நேரம் “குழம்புல உப்புலாம் சரியா இருக்கா, மாப்ள?” என்றார் அர்ச்சனா பரிவாய்.
“அதை என்ன கேக்குற? உப்பு டப்பாவை எடுத்துட்டு வந்து வையு. வேணும்னா அவரே போட்டுக்கிறாரு. நீங்க கூச்சப்படாம சாப்பிடுங்க, மாப்பிள்ளை” என்றார் இராமசாமி.
அதற்கு அவன் தலையசைக்க, அடுத்ததாக முத்துமாரி குரல் கொடுத்தான் “மாமா, இந்த பைக் சாவி தரீங்களா?”
“அது எதுக்குடா உனக்கு?” என்றாள் மாது சீறிக் கொண்டு.
“வண்டிய எடுத்துட்டு எங்கயும் போக மாட்டேன்கா. சும்மா ஸ்டார்ட் பண்ணிப் பாக்குறேன்” இவன் கெஞ்சியும் பயன் கிட்டவில்லை.
“அம்மா, அந்தத் தொடப்பக் கட்டைய எடேன்”
“மாது, என்ன? எதுக்கெடுத்தாலும் அவன்ட்ட கத்தாத” என்ற மது கால்சட்டைப் பையிலிருந்த சாவியை எடுத்து வீச, மாரி கச்சிதமாக அதைக் கைப்பற்றினான்.
“அவன் ஒன்னுந்தெரியாத மண்ணு. மடியில தூக்கி வச்சுக் கொஞ்சுங்க” என்றாள் அவள் வாயை அடக்க முடியாமல்.
“ச்சூ.. அவரைக் கொஞ்சம் சாப்பிட விடேன்டி. அங்கயும் போய் இப்படித் தான் வாயடிக்கிறியா?” என்று கடிந்தார் அர்ச்சனா.
“நான் எவ்ளோ சமத்துன்னு எங்க அத்தைட்ட வந்து கேளு” அவள் புகுந்த வீட்டுப் பெருமை பேசினாள்.
“எதுக்கு அவ்ளோ தூரம் போகணும்? மாமாட்டயே கேக்கலாமே” என எடுத்துக் கொடுத்தான் தம்பி.
“ஏன்டாப்பா, நான் நல்லா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா? நான் எதாச்சும் சொல்லப் போய், உங்க அக்கா என்னை வெளிய துரத்திடப் போறா” என்றான் மது சிரிக்காமல் கொள்ளாமல்.
“என்னைப் பத்தி நல்லதா ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களே!” அவள் அலட்டினாள்.
அவனோ “இருந்தா தான சொல்றதுக்கு” என்க
“மது…” என்ற உச்சரிப்போடு அவள் விழிகளை உருட்டினாள்.
“மாப்பிள்ளையப் பேர் சொல்லிலாம் கூப்பிடாத, சாமி” என்றார் இராமசாமி பதறிக் கொண்டு.
‘ஐயோ, நாமளே வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டோமே. நம்ம ஆத்தா காதுல மட்டும் விழுந்துச்சு... அச்சோ, அவளும் கேட்டுட்டா. தாய் பத்ராகாளியா மாறப் போகுது. நம்ம மானம் கப்பலேறப் போகுது’ அவள் பயபக்தியோடு அன்னையை ஏறிட, அவளின் உள்ளக் குமுறலை முக பாவனையை வைத்தே படித்துத் தெளிந்தான் கணவன்.
“அத்தை, பேர் இருக்கறதே கூப்பிடத் தானே. ஊர்ல இருக்குற எல்லாரும் மதுன்னு தான் சொல்லிக் கூப்புட்றாங்க. என் பொண்டாட்டி கூப்பிட்றதுல தான் குறைஞ்சு போயிட்றனா, என்ன!” என்ற சாக்கோடு அவன் குறுக்கே வர, அர்ச்சனாவின் இறுக்கம் தளர்ந்து புன்னகை மலர்ந்தது.
அவனது நியாயத்தைக் கேட்டு இதயம் சிலிர்த்து, அவளின் தேகம் முழுமையும் செவ்வானம் போல சிவந்தது.
வாகனத்தின் ஆராய்ச்சியை முடித்துவிட்டு, மாரி உள்ளே வர அவனைப் பிடித்துக் கொண்டாள் தமக்கை “அந்தப் பொண்ணு பேரென்னடா, தம்பு?”
“ஏன் கேக்குற? மேகலா”
“அந்தப் பொண்ணுட்ட இப்பவும் பேசுறியா?”
“நேருல பாத்தா மட்டும் பேசுவேன்”
“ரெண்டு நாள் கழிச்சு, எனக்குச் சம்பளம் போடுவாங்க. அங்கருந்து வாங்குன காசலாம் திருப்பிக் கொடுத்திடு”
“ஆன், கொடுத்தாச்சு, கொடுத்தாச்சு. நேத்தே மாமாவும் நானும் அவ வீட்டுக்கே போயி கொடுத்துட்டு வந்தோம்”
அங்கிருந்த யாருக்கும் அது பற்றி தெரிந்திருக்கவில்லை. அப்போது தான் கேள்விப்படுகின்றனர்.
“நீங்க எதுக்குங்க கொடுத்தீங்க?” மாது திகைப்புடன் வினவினாள்.
“என் மச்சானுக்கு நான் செலவு பண்ணுறேன். உனக்கென்ன?”
“அங்கலாம் எதுக்கு மாப்ள போனீங்க? அவங்க மூச்சுக்கு முந்நூறு தடவை நம்ம குடும்பத்தைக் குறையா பேசுறாங்க”
“நம்ம அப்படி இல்லன்னு நாம தான தெரியப்படுத்தணும். அதுவும் வார்த்தையால இல்ல; செயல்ல நிரூபிக்கணும். இதுக்கு மேல அவங்க தப்பா பேசுறதுக்கு நாம இடங்கொடுக்கக் கூடாது. சரி தான, மாரி?”
மாமன் வாக்கே தெய்வ வாக்கெனக் கருதத் தொடங்கியிருந்தான் இவன் “ஆமா, மாமா. அதும் இல்லாம, மாமா அந்த ரெண்டாயிரத்து ஐநூறை எனக்குக் கடனா தான் கொடுத்திருக்காரு. என்னைக்கா இருந்தாலும் நான் சம்பாதிச்சு, அதைத் திருப்பி அடைச்சிடுவேன்”
“நொட்டுவ நல்லா” இவனை இடித்துரைத்தார் தந்தையார்.
“அதெல்லாம் பொறுமையா பாத்துக்கலாம், மாமா. இப்போ அவன் படிப்புல கவனம் வைக்கட்டும். அப்போ நான் கடைக்குப் போயிட்டு வரேன், மாது”
“சரி, கவனமா போங்க” என்றவள் உள்ளேயே இருந்து கொண்டாள்.
அவள் வழியனுப்ப வெளியே வருவாள் என்று எதிர்பார்த்து, அவன் தன் இருசக்கர வாகனத்தின் கைப்பிடியைத் திருகினான்; அதற்குப் பதிலேதும் கிடைக்காமல் போகவே, முறுக்கிக் கொண்டு கிளம்பிவிட்டான். அவன் தெருமுனையை அடைகையில், அவள் எட்டிப் பார்த்துச் சென்றதை அவனறிய வாய்ப்பில்லையே! அன்றிரவு வாசற்கதவு தட்டப்பட, அவள் தூக்கக் கலக்கத்துடனே போய்க் கதவைத் திறந்தாள். அதற்கு முன்னரே ஒலித்து அடங்கிய வாகனச் சத்தம், வந்திருப்பது யாரென அவளுக்கு அடையாளம் காட்டிற்று.
“இங்க எதுக்கு வந்தீங்க? அங்கப் போயிருக்கலாமே. சரி, உள்ள வாங்க. சாப்புட்றீங்களா?”
“ம்ம்ம். நல்ல பசி”
“தோசை சாப்புட்றீங்களா?”
“இந்த நேரத்துல வேணாமே. நெஞ்சைக் கரிக்கும்”
“அதுவும் சரி தான்” என்றவள் கொட்டாவி விட்டபடியே அடுப்படியை அடைந்தாள்.
“மாது, குழம்பைச் சூடு பண்ணு” என்றார் தாயார் விழிகளை மூடிய வண்ணம்.
“ஆன்மா. பண்றேன்” என்றவள் விரைவாகச் செயலாற்றி, அவனுக்காக அன்னை வாங்கி வைத்திருந்த பிரத்தியேக தட்டில் சோற்றைப் பரிமாறினாள்.
அவன் உண்டு முடித்ததும் கட்டிலை நெருங்கியவள், அதை அவனுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டு கீழே படுத்தாள். அங்கே பாய் விரித்து வரிசையாக இராமசாமி, முத்துமாரி, மற்றும் அர்ச்சனா படுத்திருக்க, அவள் தாய்க்கருகே இடம் பிடித்தாள்.
மது அலைபேசி உபயோகிப்பதைக் கண்ணுற்றவள் புலனத்தைத் திறந்து அவனுக்குச் சேதி அனுப்பலானாள் “இந்தக் கட்டில் உங்களுக்குப் பத்தாது; கால் இடிக்கும். நீங்க நம்ம வீட்டுக்குப் போயே தூங்கி இருக்கலாம்”
அவன் சில நிமிடங்களில் விடை பகர்ந்தான் “சீதை இருக்குற இடம் தான இராமனுக்கு மிதிலை”
“அது அப்படி வராதே”
“எனக்கு அப்படித் தான்” என்று அவன் கூறவும்
அவளின் நெஞ்சமோ ‘ஐஸ்! ஐஸ்! பால் ஐஸ்! கப் ஐஸ்! கோன் ஐஸ்!’ என்று ஏலமிட்டது.
அவள் சத்தமின்றி சிரிக்க, அவனிடமிருந்து மற்றொரு செய்தி வந்தது “ஓய்!”
“தூங்குங்க”
“நோ. பேசு”
“என்ன பேசணும்?”
“என்ன வேணாலும்”
பெண்ணவளின் இதயம் குறுகுறுத்தது.
“பொண்டாட்டி” என்ற அவனின் சொல்லாடலில் அவ்வுணர்வு இமயத்தை எட்டியது.
“நான் வெளிய எழுஞ்சு ஓடிடுவேன்; பாத்துக்கங்க” அவள் சிறுபிள்ளைத் தனமாக மிரட்டல் விடுத்தாள்.
“நான் விட மாட்டேனே. கட்டிப் பிடிச்சுப்பேன்” அவனுக்கு அந்த நடுநிசி நேரத்தில் அவ்வாறெல்லாம் உறவாடத் தோன்றுகிறது போலும்.
முதல் முறையாக அவளின் இதயத்தில் இரயிலோடியது. இருந்தாலும் சமாளித்தாள் “பேச்சு ஒன்னும் சரியில்ல. ரெண்டு பெக் இறக்கிட்டு வந்த மாதிரி தெரியுது”
“பெக்கா? அந்த வார்த்தைலாம் தெரியுமா உனக்கு? நீ தான்டி சரியில்ல” அவன் தாராளமாகச் சலுகை எடுத்துக் கொண்டான்.
“டி?!!!” எமோஜியிலும் முட்டை முட்டையாய் உறுத்தாள் அவள்.
“ஹிஹீ” அவன் முப்பத்து இரண்டு பற்களையும் காண்பித்தான்.
“வாய உடைச்சிடுவேன்” அவள் துணிவுடன் மிரட்டிப் பார்த்தாள்.
“இரு, இரு, அத்தைட்ட சொல்றேன். அத்தை…” அவன் தட்டச்சில் தான் அழைத்தான்.
அதற்கே அவள் பம்மினாள் “வேணாம். வேணாம். ஸ்டாப்ப்ப்”
“ஐ லவ் யூ” அவன் அடுத்த இடியை இறக்கினான்.
அவளால் ஒரே தருணத்தில் அத்துணை இன்ப அதிரடிகளைத் தாள இயலவில்லை “என்னைத் தூங்க விடாம பண்றீங்க”
“பதில் வரணும். அதுவரை விட மாட்டேன்” உடனுக்குடன் அலைபேசி ஒலியெழுப்பியது.
அவள் நிறுத்தி நிதானமாக மறுசெய்தியைத் தட்டினாள் “ஐ… லைக் யூ”
“அவ்ளோ தானா?” அவன் அனுப்பிய முகக் குறியீட்டில் சோகம் வடிந்தது.
“ஃபோன்ல சொல்றவங்களுக்குலாம் அவ்ளோ தான்”
“ஊருக்கே கேக்குற மாதிரி கத்திச் சொல்லவா?”
“ஷ்ஷ்ஷ்ஷ்” அவளிடமிருந்து நீண்டதோர் அமைதிப்படுத்தல்.
“மாது”
“ம்ம்ம்”
“மயிலு!”
அதுவரை அவளது அலைபேசி வெளிப்படுத்திக் கொண்டிருந்த கூவல்களைக் கலாபம் அசைந்தாடும் இமைக்காரி கவனத்தில் கொள்ளவில்லை. அதே ஒலி அர்ச்சனாவை உறங்கவிடாமல் நச்சரித்தது “மாது, ஏன்டி காதுகிட்ட வந்து உன் ஃபோன் முணுமுணுங்குது. இந்த நேரத்துல என்னத்த நோண்டிட்டு இருக்க? எல்லாத்தையும் அமுத்திப் போட்டுட்டு தூங்குடி, புள்ளையே”
“ஸாரிம்மா. ஸாரி” என்றவள் பட்டென்று அதனை அமைதிப்படுத்தினாள்; பின் போர்வைக்குள் தலையை நுழைத்தவாறு இணையவழிப் பரிமாற்றத்தைத் தொடரலானாள்.
அவனிடமிருந்து இறுதியாக வந்த செய்தியை வாசித்தாள் “உனக்குத் தான் அப்படிக் கூப்பிட்டா பிடிக்காதாச்சே. வேற யாரையாச்சும் மயிலுன்னு கூப்பிட்டுக்கிறேன்”
அவளுக்குச் சட்டெனக் கோபம் துளிர்த்தது. ஆகினும் விரல் நுனியை அது தாண்டவில்லை “ஆன். உங்க தங்கச்சிங்கள்ல யாரையாவது கூப்பிட்டுக்கோங்க. யாரு வேணாம்னா?”
“உனக்குலாம் பயமே இல்ல”
“அப்படிலாம் என்னை விட்டுப் போக மாட்டீங்கனு தெரியும்”
“எப்படி வந்துச்சு இந்த நம்பிக்கை?”
“நீங்க தான் என் ஹப்பி ஆச்சே”
“அப்படினா?”
“புருஷன்னு சொன்னேன்”
“ஓ… அதுக்கு அப்படி ஒரு வார்த்தை இருக்கா?”
“ஆமா. கத்துக்கோங்க”
“கத்துத் தா” அவன் கிறங்கி அவளையும் கிறங்கடித்தான்.
“டன். டன்” அவள் நேர்த்தியாய் அதைக் கையாண்டாள்; ஆசிரியை அல்லவா!
அவன் அத்தோடு விடுவதாயில்லை; அடுத்த தாக்குதலைத் தொடுத்தான் “நானும் சிலது கத்துக் கொடுக்கணும்”
“என்னது?”
“காதலிப்பது எப்படி?”
“எப்படி??”
“இங்க வா. சொல்றேன்”
“எங்க?” அவள் திடுக்கிடலோடு போர்வையை விலக்கினாள்.
“கட்டிலுக்கு”
“எகத்தாளம் தான். பேசாம படுயா”
“மேஜிக் பில்லோவ் வேணாமா?”
“ம்ஹூம்ம்”
“மாது” நொடிக்கு நொடி பேச்சின் வெம்மை கூடியது.
“மூச்ச்” அவள் அதரங்களில் விரல் பதித்தாள்.
“ஐ லவ் யூ, பொண்டாட்டிடிடி” அவன் இராகம் பாடியவாறு தரையில் இருந்தவளைக் கண்காணித்தான்.
அவளின் கன்னக் கதுப்புகள் குன்று போல மேலுயர்வதைத் திரை வெளிச்சம் தெளிவாகப் புலப்படுத்தியது.
“இந்த சைடு திரும்புனா, நானே முகத்தைப் பாத்து என்ன எமோஜினு தெரிஞ்சுப்பேன்” அவன் கூச்சநாச்சமின்றி வினவினான்.
அவளோ அடுத்தடுத்த செய்திகளைப் பறக்கவிட்டு, வேகவேகமாக இணையத் தொடர்பை அணைக்க முயன்றாள் “குட் நைட். நாளைக்கு வேலை இருக்கு. உங்களுக்கும் தான். அமைதியா தூங்குங்க. ஸ்வீட் டிரீம்ஸ்”
காலத்தை விஞ்சி, கணவிநாடி முன்னரே, அவனின் காதல் ஏவுகணை “மிஸ் யூ” என்பதாய்த் திரையில் ஒளிர்ந்தது. அந்த ஒற்றை வரி அவளை நிம்மதியாகத் தூங்க விட மாட்டேன் என்று அக்கப்போர் புரிய, என்செய்வாள் பாவை!
அலைபேசியை ஓரங்கட்டியவள் மெல்ல அவன்புறம் திரும்பிப் படுத்தாள். அவன் அடுத்த சேதியைத் தட்டிவிட்டு, அதில் நீல நிறம் ஒளிர்க்காதலால் அந்தக் காரிருளில் அவளை அலசி எடுத்தான். அவளோ அவனை நோக்கியிருக்க, அலைபேசிக்கு ஓய்வு கொடுத்தவன் அவளையே ஆழ்ந்து பார்த்தான். ஆட்காட்டி விரலை நீட்டி மடக்கி அவன் அழைத்திட, அவளுக்குள் புது வெள்ளம் பாய்ந்தோடியது. மிகுந்த மனப் போராட்டத்திற்குப் பிறகு தன் கரத்தைக் கட்டிலின் மேற்பரப்பில் வைத்தாள் அவள். மறுகணமே கன்னியின் விரல்களை அண்ணலின் உள்ளங்கை, மலைமுகடு தீண்டிய முகிலைப் போல அணைத்துக் கொண்டன.
***