தளிர் 17
தங்கை உயிருடன் வந்துவிட்டாள் என்று சற்று நிமிடம்கூட மகிழ்ச்சியடைய முடியாதளவிற்கு, ஏன் இங்கு வந்தாள் என்றே யோசிக்க வைத்து விட்டாள் ஸ்வாதி.
உள்ளே நுழைந்த நொடி, தாயைப் பற்றியோ, தன்னைப் பற்றியோ எதைப்பற்றியும் விசாரிக்காமல், ரவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு தன் நாடகத்தை அரங்கேற்றி இருந்தாள் ஸ்வாதி.
“எனக்கு என் விக்கியும், ‘அவன் குழந்தையும்’ வேணும் ரவி. அவங்க இல்லாம இனி என்னால வாழ முடியாது ரவி. ப்ளீஸ் ரவி…” என்று தன் நீலிக் கண்ணீர் நாடகத்தை எந்த முகமனும் இல்லாமல் ஆரம்பிக்க, அதில் எல்லோரும் ஸ்வாதியை அதிர்ந்துப் பார்க்க, ரித்தி மட்டும் தோழியை, இல்லையில்லை தோழி என்று ஒருகாலத்தில் உறவாடிக் கெடுத்தவளை வெறுப்புடன் பார்த்தாள்.
மூவரில் யார் அதிகம் அதிர்ச்சியடைந்தது என்று யாராலும் கணிக்க முடியாத நிலையில் இருந்தனர். முதலில் நிகழ்வுக்கு வந்தது ரித்திதான். தன் பெருத்த வயிறைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆங்காரமாக ஸ்வாதியின் முன் நின்று, “என்ன… என்ன சொன்ன உன் விக்கியா? இது எப்போ இருந்து? கேட்கவே நாராசமா இருக்கு. ஆமா ஏன் விக்கி வேணும்? உனக்கு எதுக்கு குழந்தை வேணும்? இன்னும் அவன் உயிரோட இருக்கிறது உன் கண்ணை உறுத்துதா என்ன? நீயெல்லாம் என்ன பொம்பள? எத்தனை பேர் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி வந்து நடுவீட்டுல நிக்கிற? முதல்ல எந்த தைரியத்துல நீ இந்த வீட்டுக்குள்ள வந்த? யார் உன்னை உள்ள விட்டது?” என ஆங்காரமாய் கத்த, மனைவியின் கத்தலில் ரவிகூட சற்றுப் பயந்துதான் போனான்.
“ரித்தி கொஞ்சம் அமைதியா இரு. என்ன ஏதுன்னு விசாரிப்போம். எதுக்கு வந்த உடனே பிரச்சனை? அவக்கிட்ட விசாரிச்சப் பிறகு மத்ததைப் பேசலாம்.” என ரவி, மனைவியை சமாதனம் செய்ய,
அவன் கையை வேகமாகத் தட்டி விட்டவள், “என்ன இவ செஞ்சது எல்லாம் மறந்துப் போச்சா? இவ பண்ணி வச்ச வேலைக்கு நாம பாவம் சுமக்குறோம், அதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா? இல்ல உங்க பாசக்காரத் தங்கச்சி வந்ததும் எல்லாம் மறந்துடுச்சா? எனக்கு இன்னும் ஒரு விஷயம் தெரியணும், நேத்து நீங்க அமைதியா இருந்ததுக்கு காரணம் இவதானா? இவ வருவான்னு உங்களுக்குத் தெரியுமா? அதனாலத்தான் என்னைக்கூட அவாய்ட் பண்ணிட்டு தனியா இவளை எப்படி வீட்டுக்கு கூப்பிட்டு வர்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தீங்களா?” என கோபமும் ஆங்காரமும் போட்டிப் போட கத்தினாள் ரித்தி.
மனைவியின் முகம் வியர்த்து, மூச்சு வாங்கி, சிவந்துப் போன இந்தக் கோபத்தை பார்க்கவே பயமாக இருக்க, இப்போது அவளது உடல்நிலைக்கு இப்படி எமோஷனல் ஆகக்கூடாது என்பது ரவிக்கும் புரிய, சட்டென்று சூழ்நிலையை மாற்ற, “ரித்தி நான் சொல்றேன்ல பொறுமையா பேசலாம்னு, ஏன் இப்படி எமோசனல் ஆகுற? நான்தான் பார்த்துக்குறேன் சொன்னேன்ல, நீ எமோசனல் ஆகி குழந்தைக்கு எதுவும் பிரச்சனை ஆகிடப் போகுது. ப்ளீஸ் ரித்தி காம் டவுன்…” எனச் சமாதனப்படுத்த,
“ஆமா… ஆமா இப்போதான் இவ முதல் குழந்தையைப் பெத்துக்கப் போறா? நீ அவளுக்கு பக்குவம் சொல்ற, அதான் வதவதன்னு பெத்துப் போட்டுக்கிட்டுத் தானே இருக்கா, அவளுக்குத் தெரியாதா?” என நக்கலில் ஸ்வாதி ஆரம்பிக்க,
ஸ்வாதியின் அந்த நக்கல் குரல் ரித்தியை மேலும் உசுப்பி விட்டுவிட, அவளோ அடங்குவேனா என்பது போல, “சரி நீங்க சொல்லுங்க, இப்ப இந்த நிமிஷம் முடிவு பண்ணுங்க, இந்த வீட்டுல நான் இருக்கணுமா? இல்லை இந்த துரோகி இருக்கணுமா? இன்னும் என்ன என்ன பிரச்சனை எல்லாம் வரப் போகுதோ தெரியல. இவ இருக்குற இந்த வீட்டுல என்னால நிம்மதியா பயமில்லாம வாழ முடியாது. சொல்லுங்க நான் இருக்கணுமா? இல்ல அவ இருக்கணுமா?” என வரவழைத்த நிதானத்துடன் கேட்க,
“என்ன ரித்திம்மா நீ… முதல்ல என்னன்னு விசாரிக்கலாம், அப்புறம் முடிவு பண்ணுவோம்.” என ரவியும் பதில் கொடுக்க, அடுத்த நொடி தன்னைப் பற்றியிருந்த கணவனின் கைகளை வேகமாகத் தட்டிவிட்டவள்,
“இனி ஒரு நிமிசம்கூட நான் இங்க இருக்கமாட்டேன். நீங்க என்ன பேசணுமோ பேசி, செய்யணுமோ செஞ்சிட்டு, எனக்கு சொல்லுங்க. அப்புறம் நான் யோசிக்குறேன், இங்க வரலாமா, வேண்டாமான்னு.” என அவனைத் தீப்பார்வைப் பார்த்துவிட்டுக் கிளம்பப் போக,
“போதும் கிருத்திகா… இதுவரை நான் பார்த்ததும் போதும், நீ பேசினது எல்லாம் போதும்.” என அதுவரை அமைதியாக இவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மதியழகி பேச,
“ம்மா நீங்களும் ஆரம்பிக்காதீங்க, கொஞ்சம் பொறுமையா இருங்க. அதெல்லாம் ரித்தி புரிஞ்சிப்பா.” எனத் தாய்க்கு பதில் சொன்னவன், “ரித்திம்மா நீ வா. நான் உன்னை அத்தைக்கிட்ட விடுறேன். இங்க எல்லாம் சரியானதும் வரலாம்.” என அழைக்க, அழைத்தவனை வேறெதுவும் சொல்லாமல் வெறித்துப் பார்த்தவள், அமைதியாக அவனைக் கடந்து வாயிலை நோக்கி நடந்தாள்.
மனைவியின் வெறித்தப் பார்வையும், வலி நிறைந்த முகமும் கணவனானவனை கலங்கச் செய்ய, “ஷிட்…” என்றவன்,” ரித்தி… ரித்தி…” என அவள் பின்னே ஓட,
“செத்துப் பிழைச்சு வந்த என்னை வான்னு கூப்பிடக்கூட இந்த வீட்டுல ஆள் இல்ல. நான் அப்படியே அனாதையாவே இருந்துருக்கலாம், எனக்கு ஏன் உங்களை எல்லாம் ஞாபகம் வரணும்? நான் ஏன் இங்க வரணும்?” எனத் தன் நாடகத்தை மீண்டும் தொடர்ந்தவள், “தெருவுல போனவளை எல்லாம் வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்தே ஆகணும்னு ஒத்தக் கால்ல நின்ன என்னைத்தான் செருப்பால அடிக்கணும்.” என ரித்தியைப் பார்த்து தன் கேவலமான வார்த்தைகளை எடுத்து வீச, அது சரியாக சென்று ரித்தியைத் தாக்கியது என்று அவள் நடை நின்ற வேகத்திலேயேப் புரிந்தது.
“ஸ்வாதி என்ன பேசுற நீ? யாரைப் பார்த்து என்ன வார்த்தையெல்லாம் சொல்ற?” என ரவி காட்டமாய் கேட்க,
“ஏன் உண்மையத்தான் சொன்னேன், இல்லைன்னு உன் பொண்டாட்டியாலக்கூட சொல்ல முடியாது.” எனச் சொல்லி முடிக்கும் முன் ரித்தியின் கை ஸ்வாதியின் கன்னத்தைப் பதம் பார்க்க, அந்த அதிர்ச்சியைத் தாங்கும் முன்பே வேகமாக ரித்தியைப் பிடித்துக் கீழேத் தள்ளியிருந்தாள் ஸ்வாதி.
அனைத்தும் ரவியின் கைகளை மீறி நொடியில் நடந்து முடிந்திருந்தது. “அம்மா…” என்ற மனைவியின் அலறலில் அவளிடம் விரைந்து வந்து தூக்கியவனின் பார்வையில் பட்டது நெற்றியில் அடிபட்டு வலிந்த ரத்தமும், மூக்கில் இருந்து கோடாக இறங்கிய ரத்தமும்தான்.
“ரித்தி… ரித்தி… ரித்திம்மா…” எனக் கதறியவன், தன் தாயை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, மனைவியை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
மகனின் அந்தப் பார்வையில் தான் செய்த தவறு புரிந்தது. ஆனாலும் மகள் சொன்னது போல செத்துப் பிழைத்து வந்தவளை விசாரிக்கக்கூடச் செய்யாமல், நிற்க வைத்துக் கேள்விக் கேட்ட மருமகள் மேல், என்றுமே இல்லாத எரிச்சலும் கோபமும் இன்று வந்தது.
அவள் இரண்டு உயிராக இருக்கிறாள் என்பதையே மறந்து போனவர் போல, மகளை மட்டுமே விடாமல் பார்த்துக்கொண்டிருந்தார். என்னதான் தவறு செய்தாலும், அவள் அவர் பெற்ற மகளாயிற்றே? அதை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க அவர் தயாராக இல்லை.
இத்தனை நாளும்கூட ஸ்வாதி இல்லையென்பதால்தான் மருமகளிடம் சற்று இணக்கமாக இருந்தார். இனியும் இருப்பாரா என்றால் கேள்விக்குறிதான். அவருக்கு ரித்தியைப் பிடிக்கும்தான், ஆனால் மகளா மருமகளா என்ற நிலை வரும்போது மகள் என்ற பக்கமே அவரது எண்ணமும் செயலும் செல்லும்.
“மம்மி நீயும் என்னை நம்பலையா?” எனப் பாவமாகக் கேட்க, அப்போதுதான் மகளை முழுதாகப் பார்த்தவர் கட்டிக்கொண்டு கதறிவிட்டார். தானும் அந்த அழுகையில் கலந்து கொண்டாலும், தாயை வைத்தே அடுத்து வரும் தன் திட்டங்களை நடத்திக் கொள்ளலாம் என தனக்குள் முடிவெடுத்துக்கொண்டாள்.
ஒருவழியாகத் தாயை சமாதானம் செய்தவள், “மம்மி நான் கொஞ்சம் கோபமா நடந்துக்கிட்டேன், என்னாலதான் ரித்திக்கு இப்படியாச்சு. நானும் போய் கூட இருந்து பார்த்துட்டு வர்ரேன். எனக்கு மனசே சரியில்ல.” என்ற மகளின் பேச்சை உண்மை என நம்பியவர், ‘சரி’ என்பது போல தலையசைத்து அனுப்பி வைத்தார்.
அந்த தனியார் மருத்துவமனையின் வளாகத்தை இதோடு நான்கு முறை சுத்தி வந்துவிட்டான் ரவி. ஆனாலும் உள்ளத்தில் பொங்கிய கோபமும், எரிச்சலும் கொஞ்சமும் குறைந்தபாடில்லை.
பிரசவ அறையில் தன் மனைவி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள், அதற்கு காரணமான ஸ்வாதியோ நடந்ததற்கும், தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல, அங்கிருந்த சேரில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
‘இவளை…’ எனப் பல்லைக் கடித்துக் கொண்டே, கோபத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க, அந்நேரம் பதட்டத்துடன் நரேணுடன் வேகமாக வந்து கொண்டிருந்தார் ரேணுகா.
அவர் கண்ணுக்கு ஸ்வாதி தெரியவில்லை, ஆனால் நரேனின் கண்ணிலிருந்து அவள் தப்பவில்லை. அவளை அங்கேப் பார்த்த நொடி, அதிர்ச்சியில் நரேனின் நடை சற்றேத் தடுமாறியது. பின் இதெல்லாம் பாஸ்க்கு தெரியாமல் இருக்க வாயிப்பில்லை, தெரிந்துதான் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துவிட்டு அங்கு சென்றிருக்கிறார் என்று புரிய, நடையில் சற்று வேகம் கூட்டி ரவியிடம் விரைந்தான்.
“என்னாச்சு ரவி? டாக்டர் சொன்னதுக்கு இன்னும் நாள் இருக்கே, ஏன் இப்படி?” என ரேணுகா பதட்டமாகக் கேட்க, அவனால் பதில் சொல்லவே முடியவில்லை.
அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டவன், “சாரி அத்த, நான்தான் காரணம். கொஞ்சம் கவனக் குறைவா இருந்துட்டேன், ரித்தி கீழே… கீழே விழுந்துட்டா.” என வேதனைத் ததும்பியக் குரலில் கூற,
“என்ன சொல்ற ரவி? டாக்டர் என்ன சொல்றாங்க? விக்கி வேற இப்போ இல்லையே? இந்த நேரத்துல என்ன பண்றது? எத்தனைத் தடவை சொல்லிருப்பேன் தெரியுமா, பார்த்து கவனமா நட, கவனமா இருன்னு… அப்படி என்ன வேலையை இழுத்துப் போட்டு செஞ்சா? மதி வீட்டுல இல்லையா?” எனக் கோபமும் ஆற்றாமையும் பொங்கக் கேட்க,
“ஏன் எங்கம்மாதான் பார்க்கணுமா? நீங்க எதுக்கு இருக்கீங்க? மாசமா இருக்கப் பொண்ணைக் கூப்பிட்டுப் போய் நீங்க வச்சுக்காம, எங்கம்மாவை குறை சொல்லுவீங்களா?” என ஆத்திரமாக ரேணுகாவின் முன் வந்து நின்றாள் ஸ்வாதி.
அவளை அந்த நேரம், அதிலும் இறந்து விட்டாள் என்று நம்பிய ஒருத்தி உயிருடன் வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ந்த அந்த நொடி, அப்படியே நெஞ்சில் கை வைத்தபடியே பின்னுக்குச் சாய, நல்லவேளையாக ரேணுகாவிற்குப் பின் நரேன் நின்றிருக்க வேகமாய் அவரைப் பிடித்திருந்தான்.
“வாயை மூடிட்டுப் போய் ஒரு ஓரமா உட்கார். உன்னை யார் இங்க கூப்பிட்டா?” எனக் கடித்தப் பற்களுக்கிடையே வார்த்தைகளைத் துப்பியவன், “டாக்டர்…” என்றுக் கத்தியபடியே அவரது அறையை நோக்கி ஓடினான் ரவி.
ரேணுகா மயங்கியிருக்க, நரேனோ ஸ்வாதியை கொன்றுவிடும் ஆத்திரம் இருந்தும், அதை செயல்படுத்த முடியாத ஒரு கையாலாகாதத் தனத்தில் நிற்க, அவனது அந்த கையறு நிலையைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தாள் ஸ்வாதி.
“அப்புறம் உனக்கும்கூட கல்யாணம் ஆகிடுச்சு போல, உன்னை நம்பி வந்த முட்டாள் சாகப் போனாளாம் அப்படியா? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதும், விசம் குடிச்சு சாகுறதும் ஒன்னுதான்னு அந்த முட்டாளுக்கு ரொம்ப லேட்டாவே புரிஞ்சிருக்கு. ம்ம்…” என நக்கலாகப் பேச ஆரம்பிக்க,
உடல் இறுக, கண்களை மூடி அவளை இதே இடத்தில் கொன்றுவிடு என ஓலமிட்ட மனதையும், மூளையையும் நிதானப்படுத்தி, “இன்னும் ஒரு நிமிசம் நீ இங்க இருந்தா உன் உயிர் உனக்கு சொந்தமில்ல.” என்ற வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் நரேன்.
நரேனின் உடல் மொழியிலேயே ஸ்வாதியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவன் கண்கள் இரண்டும் கோவைப் பழமாய் சிவந்து கிடந்தது. விட்டால் இப்போதே அடித்து கொன்று விடுவான் போலொரு தோற்றத்தில் நின்றவனைப் பார்த்து அரண்டு போனாலும், வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் அதே திமிருடன் அவனைக் கடந்து முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே மீண்டும் போய் அமர்ந்தாள்.
அதற்குள் ரவி ஸ்ட்ரெச்சர் சகிதம் வந்துவிட, ரேணுகாவை கேசுவாலிட்டி அறைக்குள் கொண்டு சென்றனர். ஆண்கள் இருவரும் அறைக்கு வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்திருக்க, ரித்தி வலியில் கத்துவது இங்கு வரைக்குமேக் கேட்டது.
அந்த சத்தத்தில் ஆண்கள் இருவருக்கும் உடல் தூக்கிப்போட நரேன்தான், “நீங்க அங்க போங்க சீனியர், நான் அம்மாக்கூட இருக்கேன். உங்க சிஸ்டரப் பார்த்த அதிர்ச்சியில மயக்கம் வந்துருக்கும், பயப்பட ஒன்னுமில்ல, நீங்கப் பாருங்க.” என அனுப்ப முயல,
“ம்ம்… எதுனாலும் உடனே சொல்லுடா. நான்… நான் அங்க இருக்கேன். ரித்திக்கு ஓவர் ப்ளீடிங். பிபி சடனா ரைஸாகிடுச்சு. அதனால நோஸ் ப்ளீடிங்க்…” என்றவன் முகத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ள, அவன் முதுகு குலுங்குவதில்தான் அழுகிறான் என்றே நரேணுக்குப் புரிந்தது.
“சீனியர் ப்ளீஸ்… நீங்க உடைஞ்சுப் போயிட்டா யார் அவங்களைப் பார்த்துப்பா? ரேணும்மா வர வரைக்குமாச்சும் நீங்க தைரியமா இருங்க. பாஸ் வேற இங்கே இல்ல. வீட்டுல குட்டீஸ் மூனு பேரையும் நிசாவால சமாளிக்க முடியாதுன்னுதான் லட்சுமியையும் விட்டுட்டு வந்துருக்கேன், இல்லைன்னா இங்க அழைச்சிட்டு வந்துருப்பேன். ஆமா எங்க ஆன்ட்டியைக் காணோம்.” என ரவியின் மனநிலையை மாற்ற நரேன் பேச, அது சரியாக வேலை செய்தது.
“அதெல்லாம் நாம பார்த்துக்கலாம், அத்தை இப்போ முழிச்சு நார்மல் ஆகிடுவாங்க. ஸ்வாதியைப் பார்த்ததும் அம்மாவுக்கு அதிர்ச்சி ஆகிடுச்சு. அப்புறம் வீட்டுல நடந்த பிரச்சனையில ரித்தி பேச, ஸ்வாதி பேசன்னு பிரச்சனை பெருசாகிடுச்சு. அதுவே அம்மாவுக்கு பிபியை அதிகமாகிடுச்சு. கடைசில பேச்சு வார்த்தை அதிகமாகி ரித்தி, ஸ்வாதியை அடிக்க அவ ரித்தியைக் கீழேத் தள்ளிட்டா.” என நடந்ததை சுருக்கமாக சொல்ல, நரேனுக்கு உடல் இறுகியது.
ஒரு வயிற்றுப் பிள்ளைக்காரி என்றுகூட யோசிக்காமல் என்ன காரியம் செய்திருக்கிறாள்? இவளை அன்றேக் கொன்றிருக்க வேண்டும், நிசாவிற்காக விட்டது, இப்போது வளர்ந்து வேண்டாத மரமாக நிற்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்க, ரித்தியின் அறையில் இருந்து ஒரு செவிலிப் பெண் வேகமாக ஓடி வந்தாள்.
“ஸார்… ஸார் சீக்கிரம் வாங்க, அவங்க பல்ஸ் ரொம்ப கம்மியாகுது. சிசேரியன் பண்ணிடலாம்னு டாக்டர் சொன்னா, உங்க வொய்ப் கேட்க மாட்டேங்குறாங்க, நீங்க வாங்க.” என அவனிடம் சொல்லிவிட்டு, மீண்டும் அறைக்குள் ஓட இப்போது ரவியும் அவளுக்குப் பின்னே ஓடினான்.
இந்தக் காட்சியைக் கண்ட நரேனுக்கு இதயம் ஒரு நொடி தன் பழையக் காதலை எண்ணி இறுகியது. ரவி இடத்தில் தன்னை வைத்துப் பார்த்தான். ஆனால் இப்போது ரித்தியைத் தன் காதலியாக அவனால் நினைக்க முடியவில்லை.
ஒரு நொடி, ஒரே நொடி தன் பழையக் காதலை நினைத்ததைக் கூட தன் மனைவிக்கு செய்த துரோகமாக எண்ணினான். மனைவியை முழுதாய் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தனக்கு வந்துவிட்டதை அவன் மனம் உணர ஆரம்பித்தது. இப்போதே அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் விதையாய் விழுந்து நொடியில் விருட்சமாக வளர்ந்து நின்றது.
மரமாய் வளர்ந்த ஆசையை சூழ்நிலைக் கருதி அமைதிப்படுத்தியவன், ரேணுகாவைப் பார்க்க உள்ளே சென்றான். இவன் வருகைக்கு காத்திருந்ததைப் போலவே அவரும் விழித்துக் கொள்ள, அவருக்குத் தைரியம் சொன்னவன் ரவி தன்னிடம் கூறியதையும் கூறி, இப்போது ரித்தியைப் பார்ப்பதே முக்கியம் என்பதையும் எடுத்துச் சொல்லி, ரித்தியின் அறைக்கு அழைத்து வந்தான்.
அங்கு மருத்துவர்கள் அவளையும் குழந்தையையும் மீட்க போராடிக் கொண்டிருக்க, ரித்தியோ மயக்கத்திற்கு சென்றிருந்தாள்.
மகளின் நிலைக் கண்டதும் கண்ணில் நீர் பூக்க ரேணுகா நின்றிருக்க, “வேற வழியே இல்லை ரவி. கண்டிப்பா சிசேரியன்தான் பண்ணணும். அதுலயும் ஸ்யோரா ரெண்டு பேரையும் சேவ் பண்ணிக் கொடுக்க முடியும்னு என்னால உங்களுக்கு நம்பிக்கை கொடுக்க முடியாது. இன்னும் இன்னும் லேட் செஞ்சா ரெண்டு பேரையுமே காப்பாத்த முடியாம போகலாம்.” என மருத்துவர் கூறிவிட,
“எனக்கு என் ரித்திதான் வேணும் டாக்டர். அவ இல்லாம என்னால வாழ முடியாது. எப்படியாவது அவளை என்கிட்ட திருப்பி கூப்பிட்டு வந்துடுங்க ப்ளீஸ்…” எனக் கதறியவனைப் பார்க்க அங்கிருந்த அனைவருக்கும் மனம் கனத்துப் போனது.
“ஐ வில் ட்ரை மை பெஸ்ட் ரவி. ப்ளீஸ் என்னை நம்புறதைவிட கடவுளை நம்புங்க. அவர் உங்களை கைவிட மாட்டார்.” என ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு மருத்துவர் உள்ளே நகர, மருத்துவரின் பேச்சு ரேணுகாவிற்கு நெஞ்சில் இடியை இறக்கியது.
தன் போன் அழைப்பதை உணர்ந்து அதை எடுத்துக் காதில் வைத்த ஸ்வாதி, “விக்கி…” என குழைந்து பேச, “முட்டாள்… முட்டாள்… முட்டாள். என்னக் காரியம் பண்ணி வச்சிருக்க? உங்கிட்ட நான் என்ன சொன்னேன், உன்னை அங்க எல்லாரும் நம்பணும், யாரும் உன் மேல சந்தேகப்படக்கூடாது, முக்கியமா நீ கோபப்படக் கூடாதுன்னு சொல்லித்தானே அனுப்பினேன். ஆனா நீ என்ன செஞ்சி வச்சிருக்க? இடியட். இனி என் மூஞ்சிலயே முழிக்காத. அப்படியே போய் செத்துத் தொல.” என்றவன் போனைத் தூக்கி எதிரில் இருந்த சுவற்றில் எறிந்தான்.
***
1 comment
அப்படின்னா.. குழந்தை உசிருக்குத்தான் ஆபத்து போல.
😯😯😯
CRVS (or) CRVS 2797