தளிர் 18
அந்த பெரிய அறையின் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்தான் விக்கி. அறை முழுவதும் அவன் தூக்கி எறிந்த பொருட்கள் உடைந்து சிதறிக் கிடந்தன. உடலும் மனமும் கோபத்தில் தகித்துக் கொண்டிருக்க, மூளை கிட்டத்தட்ட செயலிழந்த நிலைதான்.
இத்தனை ஆண்டுகள் அவன் போட்டு வைத்த திட்டம் நொடியில் கண்ணாயைடிப் போல் சில்லு சில்லாக நொறுங்கிப் போனதைப் போல் உணர்ந்தான். அவ்வளவு அறிவுரைக் கூறியும் தன் முட்டாள்தனத்தால் அனைத்தையும் கெடுத்து வைத்திருப்பவளைக் கொன்றுவிடும் அளவிற்கு கோபம் எரிந்து கொண்டிருந்தது.
இப்போது என்ன செய்வது? ஸ்வாதியை அனுப்பி, ரவியை வைத்து விக்ரமை நெருங்கி, அவனை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம் என்ற எத்தனை திட்டங்களை அவன் நினைத்திருக்க, இப்படி முதல் நாளே ரவியிடம் பிரச்சனை செய்து வைத்திருக்கிறாளே. அதோடு ரித்தி… ரித்தியைத் தொட்டால் விக்ரம் மட்டுமல்ல ரவி, நரேன் என அனைவருமே ஒன்று சேர்ந்து விடுவார்களே… இந்தப் பைத்தியக்காரிக்கு அது கூடப் புரியவில்லையா? என ஸ்வாதியை நினைத்து எரிச்சல் அடைந்தவன் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அப்போது அவனது அறையின் இன்டர்காம் ஒலிக்க, எரிச்சலோடு அதிருந்த திசைப் பக்கம் பார்க்க, அந்த அறையில் அவன் உடைத்தது போக அது மட்டுமே மிஞ்சியிருந்தது. இரண்டு முறை அடித்தும் எடுக்காமல் அப்படியே கட்டிலில் கிடந்தவன், மூன்றாவது முறையும் அடிக்கவும் வேறுவழியில்லாமல், எடுத்தவன், “வாட்ஸ் ராங்க் வித் யூ மேன்? வாட் டூ யூ வான்ட் ப்ளடி…” எனக் கடித்தப் பற்களில் வார்த்தையை விட, எதிரில் இருந்தவனுக்கு அவனின் கோபத்தின் அளவு நன்றாகத் தெரிந்தது.
அவன் கையில் தான் கிடைத்தால் அடித்தே கொன்றுவிடுவான் என்பது புரிய, தனக்கு எதிரே நின்ற பெண்ணைப் பார்த்துக்கொண்டே, “சார் உங்களைப் பார்க்க உங்க வொய்ப் வந்துருக்காங்க, உங்க போன் ரீச் ஆகலன்னு இன்டர்காம்ல கூப்பிட சொன்னாங்க.” என மிடறு விழுங்கியபடியேப் பேச,
“புல்ஷிட்… யாருக்கு யார் வொய்ஃப்? என்னோட வொய்ஃப்ன்னு யார் வந்து சொன்னாலும் உடனே எனக்கு கூப்பிடுவியா? டேமிட். அவளை அப்படியே போகச் சொல்லிடு, இனி இங்க வரக்கூடாது. அவளை இங்க பார்த்தேன், உன் வேலை உனக்கு இல்லை.” எனக் கத்திவிட்டு, மிச்சமாக இருந்த அந்த இன்டர்காம் போனையும் தூக்கிப் போட்டு நொறுக்கினான்.
அவன் பேசியது அருகில் இருந்த ஸ்வாதிக்கும் கேட்கத்தான் செய்தது. அதிலேயே இப்போது விக்கியின் கோபம் புரிய, அப்படியே செயலிழந்து நின்றாள். விக்கியின் இந்த கோப முகம் அவளை விதிர்க்க வைத்தது. அதிலும் யாருக்கு யார் வொய்ஃப் என்ற வார்த்தைகள் வேறு மனதில் ரணமாக அறுத்தது.
மருத்துவமனையில் இருக்கும் போதே விக்கி அழைத்துப் பேச, ரித்தியைப் பற்றியோ குழந்தையைப் பற்றியோ கொஞ்சமும் யோசிக்காமல் அவன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்திருந்தாள். வருகிற வழியில் எல்லாம் அவனுக்கு முயற்சித்துக் கொண்டேதான் இருந்தாள். ஆனால் அவனுடைய போன்தான் சுவற்றில் அடிபட்டு சிதறிக் கிடந்ததே. தன்னைப் பார்த்தால் அவன் கோபம் குறைந்துவிடும் என்ற ஸ்வாதியின் எண்ணத்தில் மொத்தமாக நீருற்றி அணைத்திருந்தான் விக்கி.
யாரிடமும் எதற்காகவும் தேவை என்று சென்றிராதவள், மற்றவர்களை உதாசீனப்படுத்தியே சந்தோசப்பட்டவள், இன்று யாரிடம் போவது, எப்படி விக்கியை சமாதானம் செய்வது என அறியாமல் திக்கென்று நின்றாள். அவனது உதாசினம் அவளை பெரிதாக வலிக்க வைத்திருந்தது.
விக்கி தங்கியிருந்த அறைக்கு வந்தவள், வெளியில் கிடந்த சேரில் அமர்ந்தபடி கதவையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். விக்கியின் கோபம் குறையும் என்ற நம்பிக்கையில்.
***
இங்கு டெல்லியில் இருந்து கிடைத்த ப்ளைட்டில் கிளம்பியிருந்தான் விக்ரம். நடந்த எதையும் முழுதாக அவனிடம் சொல்லவில்லை. படியில் தவறி விழுந்துவிட்டாள் என்று மட்டுமே ரேணுகா சொல்ல சொல்லியிருக்க, நரேனும் அதையே சொல்லியிருந்தான்.
வீட்டில் இருந்த பெண்களுக்கும் அதையே சொல்லியிருக்க, பிள்ளைகளைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.
மருத்துவமனையில் இரண்டு உயிரில் ஒன்றுதான் பிழைக்கும் என்றிருக்க, அவர்கள் சொன்னதைப் போலவே ஒரு உயிரைத்தான் அவர்களால் காப்பாற்ற முடிந்தது.
அதிக ரத்த அழுத்தம், அளவுக்கதிகமான ரத்தப் போக்கு, வருகிற வழியிலேயே பனிக்குடமும் உடைந்திருக்க, சிறிய உயிரைக் காப்பாற்றுவதில் பெரும் சிக்கலாகிப் போனது.
இரு உயிரையும் காப்பதற்காகப் போராடினால் இரண்டுமே இல்லாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது என்று உணர்ந்த மருத்துவர், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ரித்தியை மட்டும் காப்பாற்றியிருந்தார்.
“ஸாரி ரவி… உங்களுக்குத் தெரியும், நான் ரொம்பவே ட்ரை பண்ணேன், ஆனா என்னால குழந்தையைக் காப்பாத்த முடியல. வெரி சாரி… ரித்திக்கு இன்னும் ட்வென்டி ஃபோரவர்ஸ் கழிச்சுதான் நினைவு திரும்பும். அவங்களை டிஸ்டர்ப் செய்யாம பார்த்துட்டு வாங்க.” என்று நகர்ந்த மருத்துவரையே வெறித்துக் கொண்டிருந்தான் ரவி.
அவர் சொன்னது அங்கிருந்த மற்றவர்களுக்கும் கேட்டிருக்க, “அய்யோ…” என ரேணுகா நெஞ்சிலடித்தபடி அழ, ரவியோ அருகே இருந்த சுவற்றில் சாய்ந்தவன், கால்கள் வழுவிழந்து தொப்பென்று கீழே விழுந்தான்.
அதைக் கண்ட நரேன், ரேணுகாவை சேரில் அமர வைத்துவிட்டு வேகமாக ரவியின் அருகில் ஓடி வந்து, “சீனியர், சீனியர்… என்ன செய்யுது உங்களுக்கு? ஒன்னுமில்ல…” என்றவாறேத் தூக்கினான். ஆனால் அதை உணரும் நிலையில் ரவி இல்லை. அவனுடைய உயிர் இந்த உலகத்தைப் பார்க்காமலே பறந்துவிட்டதை நினைத்து நினைத்து உள்ளுக்குள் செத்துக்கொண்டிருந்தான் ஒரு தந்தையாக.
ரவியை ஒருவழியாக இழுத்து வந்து சேரில் அமரவைத்தவன், போனை எடுத்து உஷாவிற்கு அழைத்து உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு, பின் விக்ரமிற்கு அழைத்தான்.
“பாஸ்… இங்க சிச்சுவேஷன் கொஞ்சம் மோசமாகிடுச்சு. பாப்பா… பாப்பா இல்ல.” என்றவனின் கரகரப்பானக் குரலைக் கேட்ட, விக்ரமிடமும் சில நொடிகள் அமைதி. பின், “ரித்தி எப்படி இருக்கா? அவளுக்கு என்ன சொன்னாங்க?” என்றவனின் குரலும் உடைந்துதான் போனது.
“பாஸ் ட்வென்டி ஃபோரவர்ஸ் டைம் கொடுத்துருக்காங்க, ஆனா ரவி சார் தான்…” என இழுக்க, “நான் சென்னை ரீச்சாகிட்டேன், ஒன் அவர்ல அங்க இருப்பேன். அம்மாவைப் பார்த்துக்கோ நான் வந்துடுறேன்.” என்றவனின் மனம் முழுக்க ஸ்வாதியைக் கொன்றுவிடும் அளவுக்கான வெறி வேகமாக வளர்ந்து நின்றது.
அவனுக்கு ஒரு யூகம், இதற்குப் பின் நிச்சயம் ஸ்வாதி இருப்பாள் என்று. இவர்களுக்கு ஒரு முடிவைக் கட்டியே ஆகவேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டவனுக்கு, நிசப்தியின் அழுத முகம் மனத்திரையில் வந்து வந்து போனது.
அவளது பிரசவத்தின் போது அவளருகே இருந்து பார்க்க முடியவில்லை என்றாலும், தசிராவின் தந்தையாக அந்த பன்னீர் பூவை அவன்தான் முதலில் வாங்கினான். அந்த நாள் இன்றும் விக்ரமின் மனதில் கல்வெட்டாகப் பதிந்து போயிருந்தது. நினைவுகள் அந்த நாளை நோக்கி ஓட, அதை இழுத்துப் பிடித்தவன் ரித்தியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
இங்கு வீட்டில் உஷா அவசரமாகக் கிளம்புவதைப் பார்த்த நிசப்தி, “என்னாச்சு உஷா? ஏன் இவ்வளவு பதட்டமா கிளம்புற?” என யோசனையாகக் கேட்டாள்.
“தெரியலப்பா, நரேன் உடனே கிளம்பி வரச் சொன்னார். அவர் குரலே சரியில்ல. நான் போயிட்டு வந்துடுறேன், நீ மேனேஜ் பண்ணிப்ப தானே…”
“ம்ம் அதொன்னும் பிரச்சனை இல்லை. நீ போய் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணு. நான் இங்க மேனேஜ் பண்ணிப்பேன்.”
“ம்ம் சரி.” என்ற உஷா மருத்துவமனையை நோக்கி பறந்தாள். அவள் கிளம்பிய நொடி விக்ரமின் எண்ணுக்கு அழைத்திருந்தாள் நிசப்தி.
இவளது எண்ணைப் பார்த்ததும் எடுக்கவா வேண்டாமா என யோசித்தவன் பின் எடுத்துவிட, “என்ன நடக்குது? ஏன் எல்லாரும் ரொம்ப கலவரமா இருக்காங்க. ரித்தி அக்காவுக்கு என்னாச்சு?” எனப் படபடப்புடன் பேசியவளுக்கு, என்ன பதில் சொல்வதென்றேத் தெரியவில்லை. குரல் அடைத்துப் போனது. மனதின் வலி அவனை பேசவே விடவில்லை.
ஆனாலும் முயன்று குரலை சரி செய்தவன், “நான் இங்க வந்துட்டேன், நேரா ஹாஸ்பிடல் போறேன். அங்க போய் பார்த்துட்டு உனக்கு சொல்றேன், நான் வர வரைக்கும் யாரும் வெளியேப் போகக்கூடாது.” என்றவனின் குரலில் இருந்தக் கோபம் நிசப்தியை யோசிக்க வைத்தது.
“என்னாச்சு? ஏன் இவ்ளோ டென்சன்? அப்போ ஸ்வாதி இங்க வந்துட்டாளா?” என யோசனையாகக் கேட்க,
“ம்ம்… வந்துட்டா. கூடவே விக்கியும் வந்துருக்கான். சொன்னது ஞாபகம் இருக்கட்டும், வெளியே யாரும் வரக்கூடாது. குழந்தைங்க பத்திரம் சரியா?” என்றவனின் அதட்டலில், “விக்கி… விக்கியா… அவன் எப்படி…? அப்போ அவன் அன்னைக்கு சாகலையா? இன்னும் உயிரோட இருக்கானா? அப்போ அன்னைக்கு நான் கொன்னது?” எனத் தன்பாட்டில் பதட்டமாக கேட்டவளிடம்,
“ஷட்டப் நிசப்தி! என்ன சொல்ற? நீ யாரைக் கொன்ன? அதெல்லாம் ஒன்னுமில்ல. புரியுதா? நீ யாரையும் கொல்லல, அவனும் சாகல, ரைட். மனசைப் போட்டுக் குழப்பாம குழந்தைங்களைப் பாரு. அவன் வந்திருக்கான், பழிவாங்கத்தான் வந்திருக்கான். ஆனா அவனை நான் பார்த்துப்பேன். அது ஒரு பிரச்சனையே இல்லை. ஆனா ஃபர்ஸ்ட் எல்லாம் லீகலா முடியணும் புரியுதா? தசிக்குட்டிக்கும் ஸ்வாதிக்கும் எந்த சம்மந்தமும் இல்லன்னு அவ லீகலா ஸ்டேட்மென்ட் கொடுக்காம எதுவும் பண்ணமுடியாது. அதனால மட்டும்தான் அவங்க ரெண்டு பேரையும் இன்னும் உயிரோட விட்டு வச்சிருக்கேன். இனியும் நான் சும்மா இருப்பேன்னு நினைச்சா அது அவங்களோட முட்டாள்தனம். நான் சொன்னதை மைண்டல வை. குழந்தைங்க சேஃப் ரொம்ப முக்கியம் அதைப்பாரு. செக்யூரிட்டிஸ் இருக்காங்கதானே…” என ஆத்திரத்தில் கத்தியவனின் குரல் அவள் செவிகளை எட்டவே இல்லை.
“அப்போ நடந்த எல்லாத்துக்கும், நடக்கப்போற எல்லாத்துக்குமே நான்தான் காரணமா? ஆனா நான் ஒரு தப்பும் பண்ணலையே? உங்களுக்குத் தெரியுமா? நான் எந்தத் தப்பும் பண்ணல.” என்றவளின் குரல் விரக்திக்கு சென்றிருந்தது.
“ஹேய் என்னடி பிரச்சனை உனக்கு? நான்தான் நீ காரணம் இல்லன்னு சொல்றேன் இல்ல. உன் மண்டைல ஏறுதா, இல்லையா? இப்போ எனக்கு அர்ஜென்ட்டா ஹாஸ்பிடல் போகணும், அங்க கண்டிப்பா நான் இருக்கணும். இல்லைன்னா வந்து உன்னை நாலு அறை அறைவேன்.” என ஏகவசனத்தில் திட்ட,
“நான்… நீங்க போங்க, நானும் வர்றேன். இங்க என்னால இருக்க முடியும்னு தோனல. எனக்குப் பயமா இருக்கு.” எனும் போதே குரல் உடைந்து போயிருந்தது நிசப்திக்கு.
இப்போது விக்ரமின் நிலை மிகவும் மோசம். தங்கையைப் பார்ப்பானா, இவளைப் பார்ப்பானா? மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தவன் காரை வேகமாக வீட்டிற்குத் திருப்ப சொல்லியிருந்தான். நிசப்தியின் நிலையும், அவளது பயமும் புரிய போனை கட் செய்யாமல் அவளுடன் பேசிக்கொண்டே நரேனுக்கு உடனே செய்ய வேண்டிய சில வேலைகளை அனுப்பியிருந்தான்.
பிறகு முகுந்தனுக்கு ஒரு அறையை ரெடியாக வைத்திருக்கும்படி மெசேஜ் செய்தவனுக்கு, அவளை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு பயம் அப்பிக்கொண்டது. அவளது இந்த நிலைக்கு அவனும் ஒரு வகையில் காரணம்தான்.
‘நரேன் எச்சரித்த அன்றே விக்கியை அவள் வாழ்க்கையில் இருந்து விலக்கியிருந்தால், இப்போது இந்தப் பிரச்சனைகளே வந்திருக்காது. எல்லாம் தன்னுடைய முட்டாள்தனத்தாலும், என்னால் முடியும் என்ற இறுமாப்பிலும் வந்த வினை.’ என்று யோசித்துக்கொண்டும் நிசப்தியுடன் பேசிக் கொண்டும் வந்தான்.
இங்கு தன் கோபம் குறைந்ததும் அறைக்கதவைத் திறந்த விக்கியை வேகமாக வந்து அனைத்துக்கொண்டாள் ஸ்வாதி.
“சாரி… சாரி விக்கி. நான் தெரியாம செஞ்சிட்டேன். அந்த ரித்தி என்னைப் பார்த்து ஏளனமா பேசவும் எனக்கு கோபம் வந்துடுச்சு விக்கி. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு, இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல. ப்ளீஸ் விக்கி…” எனக் கதறியவளைக் கண்டு மனம் இறங்கிப் போனது விக்கிக்கு.
“ஓகே… இட்ஸ் ஓகே. பார்த்துக்கலாம். டோன்ட் க்ரை ஸ்வீட்டி. ஐ நோ யுவர் எமோசன்ஸ். பட் நம்ம ப்ளான்ஸ் எல்லாம் இப்போ வேஸ்ட் ஆகிடுச்சு. இனி கொஞ்சநாள் வெயிட் செஞ்சுதான் அவங்களை அட்டாக் பண்ண முடியும். அதோட இன்னொரு முக்கியமான நியூஸ், அந்த பேபி இறந்துடுச்சு. இப்போ எல்லோரோட கோபமும் உன் மேலத்தான் இருக்கும். அதை மாத்த ட்ரை பண்ணணும். நீ உன் அம்மாவை கைக்குள்ள வச்சுக்கோ, அதுதான் உனக்கு சேஃப். நம்ம ப்ளானுக்கும் எப்பவாச்சும் தேவைப்படும். வா உன்னை வீட்டுல விடுறேன்.” என அழைத்துச் சென்றவனின் இழுப்புக்குச் செல்லாமல் நின்றவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான் விக்கி.
‘என்ன’ என்பது போல் பார்த்தவனிடம், “அப்போ நான் உன் வொய்ஃப் இல்லையா விக்கி? உன்னோட ப்ளானுக்காகத்தான் என்னை யூஸ் செய்துக்கிட்டியா?” என மீண்டும் அழ ஆரம்பித்தவளின் இதழ்களை, அடுத்த வார்த்தை பேசும் முன்பாகவே வேக வேகமாக சிறை செய்திருந்தான் அவன்.
“நான் உங்கிட்ட அப்படியா நடந்துக்கிட்டேன், அதுதான் என்னோட ப்ளான்னா, உன்னை இங்க வரைக்கும் கொண்டு வரணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை ஸ்வீட்டி. அது ஒரு கோபத்துல சொன்னது. ஆனா என் மனசு உனக்கு மட்டும்தான். நீ மட்டும்தான் என்னோட மனைவி சரியா? வா ரெஃப்ரஷ் ஆகிட்டு சாப்பிட்டு கிளம்பலாம். உங்க அம்மாவை மட்டும் அவங்க பக்கம் விட்டுடாத புரியுதா?” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு நகர, இங்கு நிசப்தியோ பயத்தில் எதை மறந்துவிட்டோம், எது மறந்து போனது என நினைத்தாளோ, அதெல்லாம் இப்போது அவள் மனதில் படமாக ஓடிக் கொண்டிருந்தது.
***
1 comment
ஆஹா..! ரொம்பவே குழப்புறாங்களே…?
😀😀😀
CRVS (or) CRVS 2797