Home Antiheroதளிர் – 19

தளிர் 19

அந்த பரந்து விரிந்த காட்டுக்குள் திக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தாள் நிசப்தி. அவளுக்குப் பின்னே இரண்டு முரட்டு தடியர்கள் அவர்களை விரட்டி வந்து கொண்டிருந்தனர்.

அவள் ஓட ஓட, காட்டின் நீளம் கூடிக்கொண்டே போனது போல இருந்தது அவளுக்கு. பின்னாடி வரும் இருவரும் நிச்சயம் இதில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் பல வெற்றிகளைப் பெற்ற அவளைவிட விரைவாக நிசப்தியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

“டேய்… இந்தக் கட்டையை எடுத்து அவ கால்ல எறி, விழுந்துடுவா. சிம்பிளா முடியறதுக்கு ஏன் இவ்வளவு ரிஸ்க்?” ஓடியபடியே ஒருத்தன் கேட்க,

“ம்ம்ச்… எனக்கு அது தெரியாதா? அந்த பொண்ணுக்கு ஒரு சின்ன அடி, கீறல் கூட விழாம கொண்டு வரணும்னு பாஸ் ஆர்டர். இந்தப் பொண்ணைத்தான் மேரேஜ் பண்ன போறார் போல.” என்று மற்றவனும் சொல்ல, அப்போது நிசப்தி ஓர் மரத்தின் வேர் தட்டி கீழே விழுந்திருந்தாள்.

அதற்குள் அந்த தடியர்களும் அவர்களை நெருங்கியிருக்க, அவள் சுதாரிக்கும் முன்னே, ஒருவன் தன் கையில் இருந்த மயக்க மருந்தை அவள் முகத்தில் அடித்திருந்தான்.

“என்ன ஓட்டம் ஓடுறா? பேய்கூட தோத்துடும் போல.” என்றவன் தன் கைப்பேசியில் இருந்து ஒரு நம்பருக்கு அழைத்து, “பாஸ் அவங்க மயங்கிட்டாங்க, ஆனா இப்போ நடுக்காட்டுல இருக்கோம். வெளிய வரதுக்குள்ள மயக்கம் தெளிய வாய்ப்பிருக்கு. என்ன பண்ணலாம்?” என்றான்.

“நோ… அவளை யாருக்கும் காட்டக்கூடாது. நீங்க இருக்குற இடத்துல இருந்து டூ கிலோமீட்டர்ஸ்ல ஒரு ரிவர் போகும், அதை ஒட்டின மாதிரி நடந்தா ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு, அங்க கொண்டு போயிடுங்க. நீங்க வரதுக்குள்ள நான் வந்துடுவேன்.” என்ற குரலில் இருந்தது நிச்சயம் வெற்றிப் பெருமிதம்தான்.

‘என்கிட்டயே உன் ஆட்டத்தைக் காட்டுறியாடி? நான் விக்கிடி… விக்னேஸ்வரன். நீ எங்க, எப்படி யார் பின்னாடி ஒளிஞ்சாலும், உன்னை விட்டுடுவேன்னு நினைச்சியா? ம்ம்… அதுக்கு இந்த விக்கி உன்னை மறந்துருக்கணும், இல்லை நீ இந்த உலகத்துல இருக்கக்கூடாது.” என்றவன் கைகள் தன் கன்னத்தில் இருந்த சிறு தழும்பை வருடிச் சென்றது.

கண்கள் இரண்டும் ரத்தமெனச் சிவக்க, கோபத்தில் உடலும் முகமும் இறுக, தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு சற்று முன்னர் தன் ஆட்களுக்கு விபரம் கூறிய இடத்திற்கு கிளம்பினான்.

‘உன்னைக் காப்பாத்த இப்போ யார் வராங்கன்னு பார்க்குறேன், எந்நேரமும் உனக்கு காவல் இருக்க எவனுக்கு நேரமிருக்கு? இன்னைக்கு உன்னை நான் முடிச்சிடுறேன்டி.’ என மனதுக்குள் சூளுரைத்தவன் வாகனத்தின் வேகத்தைக் கூட்டினான்.

யார் இந்த விக்கி என்ற விக்னேஸ்வரன்? இவனுக்கும் நிசப்திக்கும் அப்படி என்ன நடந்தது?

***

கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தனர் நிசப்தியும் உஷாவும். சிட்டுக் குருவிகளுக்கு சிறிது பக்குவம் வந்திருந்தது. அவர்களது சிறுபிள்ளைத்தனம் எல்லாம் கொஞ்சம் விட்டுச் சென்றிருக்க, ‘சீனியர்’ என்ற பதவிக்கு வந்திருந்தனர். கல்லூரி வாழ்க்கையில் இருவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

நரேனின் உதவியால் உஷாவும் விடுதியில் தங்கிவிட்டாள். அவளுக்கும் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைத்துவிட, அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவும் வேண்டுமா?

சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தவர்களின் வாழ்க்கையில், பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியாக வந்து நின்றது அவர்களின் கல்லூரி விழா. அந்த விழாவில் நரேன் முக்கியப் பொறுப்பில் இருக்க, முன்னாள் மாணவர்களை அழைக்கும் பொறுப்பை நிசப்தி மற்றும் உஷாவிடம் கொடுத்திருந்தான் நரேன்.

அப்படி அவர்கள் முதன்முதலில் அழைக்கச் சென்ற இடம், ‘ஈஸ்வரன் ட்ரேடர்ஸ்’. விக்கியின் குடும்பத் தொழிலான பெயின்ட் வியாபரங்களின் முக்கிய இடமான ஈஸ்வரன் ட்ரேடர்ஸிற்கு வந்திருந்தனர்.

கல்லூரியில் இருந்து வந்திருப்பதாக தெரிவிக்கவுமே விக்கியும் அவர்களை அழைத்து நல்லமுறையிலேயே உபசரித்தான். நரேன், ‘விக்கி’ என்றே சொல்லியிருக்க அந்த, ‘விக்கியில்’ மொத்தமாக விழுந்திருந்தாள் நிசப்தி. ஆனால் அவள் எதிர்பார்த்த விக்கி இவன் இல்லை என்பது அப்போது பாவம் பெண்னவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

தோழியின், ‘ஆவென்ற’ பார்வையில் என்ன உணர்ந்தாளோ, உஷாவே அனைத்தையும் பேசி முடிக்க, விழாப் பத்திரிக்கையையும் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்கள். பக்கத்தில் இருந்த உஷாவிற்கே தோழியின் நிலைப் புரியும்போது, ஒரு தொழிலை எடுத்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் எதிரில் இருப்பவனுக்குப் புரியாதா? புரிந்த செய்தி கோபத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக மகிழ்ச்சியையும், ஒருவிதக் குறுகுறுப்பையும் கொடுக்க, அந்த விழா நாளை ஆவலோடு எதிர்பார்த்தான் விக்கி என்றுதான் சொல்ல வேண்டும்.

“என்னடி இந்தாளை இப்படி பார்க்குறியே, உனக்கு முன்னாடியேத் தெரியுமா?”

“ஏன் தெரியாம? நம்ம காலேஜ் முழுக்க இவரைப் பற்றித்தான பேச்சே… சூப்பரா பாடுவாராம். நம்ம காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் சேர்மனா இருந்திருக்கார். ஃபுட்பால் கேப்டன். இவரோட சாங்க்ஸ் எல்லாம் தரமா இருக்குமாம், கேள்விப்பட்டிருக்கேன். அப்புறம் இன்னும் நிறைய இருக்கே…”

“அட எரும மாடே… உனக்கு கொஞ்சமும் அறிவே இல்ல. காலேஜ்ல பேசிக்கிட்ட விக்கிசார் இவர் இல்ல. அவர் விக்ரம், இவர் விக்னேஸ். உனக்கு மூளை என்ன மழுங்கி போச்சா?”

“அச்சோ என்னடி சொல்ற? அப்போ அவர் இவர் இல்லையா? நான் வேற அப்படியே முழுங்கின மாதிரி பாத்து தொலைச்சிருக்கேன். இப்போ என்னடி பண்றது? நான் போய் ஒரு சாரி சொல்லிட்டு வரட்டுமா?”

“சாரியா? அது சரி. என்னனு சாரி சொல்வீங்க மேடம்? நான் விக்ரம் சார்னு நினைச்சு உங்களை அப்படியே சாக்லேட்ட முழுங்கின மாதிரி பார்த்துட்டேன். ஆனா அவர் நீங்க இல்லன்னு இப்போதான் தெரிஞ்சது. அதனால என்னைத் தப்பா எல்லாம் நினைச்சிடாதீங்க இப்படி சொல்லலாமா?”

“ஆமா, ஆமா… அப்படியே சொல்லிட்டு வந்துடலாம்டி. அந்த மனுஷன் வேற என்னை ஒரு மார்க்கமா பார்த்து வச்சிருக்கார்.”

“அடிங்க அவதார்குட்டி… நீ இப்போ போய் சொன்னேன்னு வையேன், அப்போதான் இன்னும் ஆர்வமா பார்ப்பார். கூடவே கொஞ்சம் கோபமும் வரும். ஏன் தெரியுமா? ரெண்டு விக்கிக்கும் காலேஜ் டைம்ல கொஞ்சமும் சேராதாம். காலேஜ் படிக்கும்போதே ரெண்டும் கிரவுண்ட்ல அடிச்சிக்கிட்டு உருளுமாம். இப்போ வரை அப்படித்தானாம். நீயும் போய் பேசி, சும்மா இருக்குறவனை சாமியாட வச்சிடாத. என்ன ஃபங்சன் அன்னைக்கு மட்டும்தான அவரைப் பார்க்க போறோம். அப்புறம் அவர் யாரோ? நாம யாரோ? கண்டுக்காம விடு. ஃபங்சன்ல அவர் எதுவும் பேசினாலும், சிரிச்சிட்டே சமாளி. மத்ததை அப்புறம் பார்க்கலாம்.”

“ம்ம் மச்சி, ஆனா ஏனோ மனசே சரியில்லடி.”

“நீ கண்டதையும் போட்டு யோசிக்காத, விடு பார்த்துக்கலாம். ஆனா எனக்கொரு டவுட். ஏன் இந்த விக்கியை மட்டும் மேடம் அவ்வளவு ஆவலா எதிர்பார்க்கிறீங்க? அவரை முன்னாடியே தெரியுமா என்ன?”

“ம்ம்… பேசினது இல்ல, பட் நரேன் அண்னாக்கூட பார்த்திருக்கேன். நல்ல டைப். கைண்ட்லி பெர்சன். ஏனோ மனசு அவரைப் பர்க்கணும் போல சொல்லுது.”

“ம்ம்… அதுசரி, ஆனா இது எங்க போய் முடியப் போகுதோ தெரியல. ஒன்னு மட்டும் நிஜம். இது நல்லதுக்கு இல்லன்னு மட்டும் எனக்குத் தெரியும்.” என்ற உஷாவின் பேச்சில் நிசப்திக்கு குற்ற உனர்ச்சி உண்டானது. அதோடு ஒரு பயமும்.

‘அய்யோ தேவை இல்லாத பிரச்சனையை இழுத்து விட்டுவிட்டோமோ’ என்று சற்று பயம் வந்து மனம் அடித்துக்கொண்டாலும், பத்து நிமிடம்கூட இருக்காது அவனைப் பார்த்து. அப்படி ஒன்றும் அது அவன் கவனத்தில் பதிந்திருக்காது. அதோடு அவன் ஸ்டேட்டஸ் என்ன? என் ஸ்டேட்டஸ் என்ன? நிச்சயம் என்னை ஞாபகத்தில் கூட வைத்திருக்க மாட்டான்.’ என்று உறுதியாக நம்பி அடுத்த வேலையைப் பார்த்தவளுக்கு, அவள் நினைத்தது, நினைக்காதது என மொத்தமாக நடந்து அவள் வாழ்க்கையை சீரழிக்கப் போகிறது என, அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இங்கு ரித்திகாவைப் பார்க்கும் ஆவலில் விக்ரமின் வீட்டிற்கு வந்திருந்தான் நரேன். அவன் எதிர்பார்த்த போலவே விக்ரம் வீட்டில் இருக்க, ரவியும் அங்குதான் இருந்தான். இருவரையும் பார்த்து இன்விடேசனை கொடுத்தவன், ரேணுகாவிடமும் பேசிவிட்டு, ரித்தியைக் கண்களால் விழுங்கியபடியே அமர்ந்திருந்தான்.

நரேன், ஸ்வாதி மற்றும் ரித்தி மூவரும் ஒரே வகுப்பு என்பதால் அவர்களின் பழக்கம் பெரிதாக யாருக்கும் தவறாகப் படவில்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே ஸ்வாதிக்கு நரேனைப் பிடிக்காமல் போயிருக்க, அவனைப் பார்க்கும் போதெல்லாம் மட்டம் தட்டும் வேலையை சரியாகச் செய்வாள்.

இன்றும் அப்படியே ஆண்கள் மூவரும் பேசியபடி இருக்க விக்ரமின் அருகில் வந்த ஸ்வாதி, “விக்கி உங்களுக்கு வேலை இருக்குன்னு சொன்னீங்க, போகலையா? வேலை வெட்டி இல்லாதவங்ககூட உங்களுக்கு என்ன பேச்சு?” என சிரித்தபடியே கேட்க, அது யாரைத் தாக்க வேண்டுமோ அவனைத் தாக்கியது.

சட்டென்று எழுந்தவன், “சாரி சீனியர், நான் கிளம்புறேன். கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் வந்திருங்க.” என்று விட்டு ரித்தியைக்கூட பார்க்காமல் போய்விட்டான்.

அவன் கிளம்பவும் ரவிதான், “எத்தனை தடவை சொல்லிருக்கேன், பிசினஸ் பேசுற இடத்துக்கு வராதன்னு. உன்னை மாதிரிதானே ரித்தியும். இப்படித்தான் மூக்கை நுழைக்கிறாளா? வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி கொஞ்சமாச்சும் மேனர்ஸா நடந்துக்கப் பழகு.” எனக் கத்த ஆரம்பிக்க,

“ம்ச்… விடு ரவி, சின்ன பொண்ணுதானே. போகப்போக சரியாகும். சரி கிளம்பு எனக்கும் டைம் ஆகிடுச்சு. ஆஃபிஸ் போயிடுத்தான் கோர்ட் போகணும்.” என்ற விக்ரம், ஸ்வாதியைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தான்.

“விக்கி இந்த கல்ச்சுரல்ஸ்ல உங்க சாங்ஸ் எல்லாரும் எக்ஸ்பெக்ட் பண்ணுவாங்க, கூடவே நானும். சோ கண்டிப்பா நோ சொல்லாம பாடுங்க ப்ளீஸ்.” என்ற ஸ்வாதியின் பேச்சில் மயங்கிக் கொண்டுதான் இருந்தான் விக்ரம்.

“ஸூயர் ஸ்வே, யாருக்காக இல்லைன்னாலும், கண்டிப்பா உனக்காகப் பாடுவேன். ஓகேயா? பாய்.” என்றவன் துள்ளல் நடையில் கிளம்ப, இருவரையும் யோசனையாகப் பார்த்தார் ரேணுகா.

அவருக்கு ஸ்வாதியின் பேச்சில் எரிச்சல் வந்தது. விக்ரம் இருக்கும்போது ஒரு பேச்சும், அவன் இல்லையென்றால் ஒரு பேச்சுமென இருப்பவளைக் கண்டாலே கோபம் தலைக்கேறியது. ஆனாலும் பிள்ளைகளை மனதில் வைத்து அமைதி காத்தார்.

விக்ரமின் பின்னே சென்ற ரவியோ ரித்தியைத் திரும்பி திரும்பி பார்த்து செல்ல, அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் சிந்தனையை முழுவதும் வியாபித்திருந்தது நரேன்தான். அவன் அவளைப் பார்க்காமலேச் சென்றது மனதைக் குடைந்தது. முதலில் அவனை சரி செய்ய வேண்டும் என்று நினைத்து தன் போனோடு உள்ளேச் சென்றாள்.

ஹாலில் மீதமிருந்தது ஸ்வாதியும் ரேணுகாவும்தான். “ஆன்ட்டி எனக்கு ஒரு பைனாப்பிள் ஜூஸ்.” என்றபடியே வசதியாக அமர்ந்து டிவி ரிமோட்டை எடுக்க,

“பைனாப்பிள் எல்லாம் இங்க இல்லமா, லெமன் ஜூஸ் வேணும்னா போடுறேன். அதுவும் லேட்டாகும்.” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட,

“இந்தக் கிழவிக்கு என்னைப் பார்த்தா மட்டும் ரொம்ப திமிர் வந்திடுது. இதை சும்மா விடக்கூடாதே…” எனத் தனக்குத்தானேப் பேசியபடி சுற்றும் முற்றும் பார்த்தவள் டேபிளில் இருந்த பேப்பர் வெய்ட்டை எடுத்து, சுவரின் நடுநாயகமாக மாட்டியிருந்த விக்ரமின் அப்பா போட்டோவை நோக்கி எறிந்தாள்.

சிலீரென்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு இரு பெண்களும் வந்துவிட, ஸ்வாதியும் அவர்களைப் போலவே அதிர்ச்சியாக நிற்க, ரேணுகாவிற்குத் தெரிந்தது, அது அவள்தான் செய்தது என்று. ஆனால் சொன்னால் தன் இரு பிள்ளைகளும் நம்பமாட்டார்கள் என்று உணர்ந்து, ஸ்வாதியை எரிக்கும் பார்வைப் பார்த்தபடி, கீழே கிடந்த கணவரின் போட்டோவை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்துகொண்டார். அவர் உள்ளத்தில் ஸ்வேதாவை வறுத்துக் கொண்டிருந்தார். உள்ளம் எரிமலையாகக் கனன்றுக் கொண்டிருந்தது.

அவருக்கு விக்ரமின்மீது நம்பிக்கை இருந்தது. நிச்சயம் ஸ்வாதியை மருமகளாக இந்த வீட்டிற்கு கொண்டுவர மாட்டான் என்று உறுதியாக நம்பினார்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் கடவுள் என்பவனுக்கும், அவன் ஆட்டிவைக்கும் விதி என்பதற்கும் வேலை என்பதே இல்லையென்றாகி விடுமே!

கடவுள் தன் கோலைச் சுழற்ற, விதி தன் வேலையை அழகாகச் செய்ய ஆரம்பித்திருந்தது.

தாயின் பின்னாடியே ஓடிய ரித்தியைப் பிடித்தவள், “காலேஜுக்கு டைம் ஆகிடுச்சு ரித்தி, வா போலாம்.” என்று இழுத்துக்கொண்டு போனாள். உள்ளே வந்த ரேணுகாவோ ஸ்வாதியை வீட்டிற்கு வராமல் எப்படித் தடுப்பது என யோசிக்க, விக்ரமோ ஸ்வாதியின் பேரழகில் மயங்கி, அவளிடம் எப்படி காதலைச் சொல்வது என யோசிக்க, ஸ்வாதியோ விக்கியிடம் தன் மனதை சீக்கிரம் சொல்ல வேண்டும் என்ற முடிவில் இருக்க, ரித்தியோ நரேனை எப்படி சமாதானப்படுத்துவது என நினைக்க, ரவியோ ரித்தியின் மனதில் எப்படி இடம் பிடிப்பது என்று யோசிக்க, இவர்களின் சதுரங்க ஆட்டத்தில் தானாக வந்து மாட்டினாள் நிசப்தி.

***

You may also like

1 comment

mriomrio28399 February 22, 2026 - 7:39 pm

அட ராமா..! இதுவொரு தொடர் காதல் விருப்பம் போலயிருக்கே..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment