தளிர் 20
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கல்லூரி விழா நாளும் வந்தது. நரேன் முழுப் பொறுப்பில் இருக்க, வந்தவர்களை வரவேற்கும் பணியில் நிசப்தியும் உஷாவும் நின்றிருக்க, மேடையில் பேச ரித்தியும் ஸ்வாதியும் ரெடியாகியிருந்தனர். பழைய மாணவர்களும் விருந்தினர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர்.
தன் நண்பர்களின் கேலிப்பார்வையை ஒதுக்கிவிட்டு, ஆளுக்கு முதலில் வந்தது விக்னேஸ்வரன்தான். அவனால் நிசப்தியின் மீதான தன்னுடைய ஆவலை அடக்க முடியவில்லை. அதனால் அனைவருக்கும் முன்னமே நிசப்தியைப் பார்க்கும் எண்ணத்தில் வந்திருந்தான்.
அவன் வந்ததுமே ரிசப்சனில் நின்றிருந்த நிசப்தியின் முன்னே வேகமாகச் சென்று நிற்க, அவள்தான் அவனை அன்றே மறந்திருந்தாளே, அதனால் வந்தவனை அடையாளம் தெரியவில்லை. ஆனாலும் இருக்கும் இடம் உணர்ந்து புன்னகை முகமாகவே அவனைப் பார்த்தாள்.
விக்னேஷின் ஆர்வமான முகத்தைப் பார்த்து அவளும் அதே புன்னைகயுடன், “வெல்கம் சார், உங்க கார்ட்…” எனக் கை நீட்ட, அவனும் எதுவும் யோசிக்காமல் தன்னுடைய இன்விடேசன் கார்டை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கியவள் அப்போதாவது அவனைக் கண்டுபிடித்திருக்கலாம், அதை விட்டு அவனைக் குறிப்பிட்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
விக்னேஷும் அவளை ஒரு பார்வை பார்த்தவன், நண்பர்கள் மத்தியில் கலந்துகொண்டான். அவன் அங்கு இருந்தாலும், பார்வை மொத்தத்தையும் நிசப்தியின் மேல்தான் வைத்திருந்தான். அப்போதுதான் ஸ்வாதி வந்து அவனிடம் பேச நிற்க, அவனோ அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. கேட்டக் கேள்விகளுக்குகூட ஏனோதானோவென பதில் சொல்ல, அதில் கடுப்பனவள் அவனைப் பார்க்க, அவன் பார்வை முழுவதும்தான் நிசப்தியின் மேல் இருந்ததே. அதைக் கண்ட ஸ்வாதிக்கு வயிறு பற்றி எரிய, நிசப்தியின் மேல் எரிச்சல் பொங்கியது.
அப்போது நிசப்தியின் அருகில் இருந்த உஷாதான், “நிஷ் அந்த மனுஷனை உனக்கு ஞாபகம் இல்லையா? அவர் உன்னையே பார்க்குறார், நீ எதுவுமே தெரியாத மாதிரி இருக்க?” என விக்னேஷைக் காட்ட, “யாரு மச்சி அது?” என அவளும் அறியாமல் கேட்க,
“ஏய்… என்னப்பா நீ? அன்னைக்கு அந்த மனுஷனைப் பார்த்துதான் லிட்டர் லிட்டரா ஜொல்லு ஊத்தின, மறந்திட்டியா?” எனக் கலாய்க்க, “அச்சோ அந்த விக்கியா, இந்த விக்கி? நான் வேற யாரோ மாதிரி பேசிட்டு இருந்தேனே, என்னை எதுவும் தப்பா நினைச்சிருப்பாரோ? நான் போய் ஒரு சாரி சொல்லிட்டு வரவா?” என ஆரம்பிக்க,
“ஆத்தா பரதேவதை நீ எதுவும் பண்ணத் தேவையில்ல, நானே ஹேண்டில் பண்ணிக்கிறேன்.” என உஷா திட்ட, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டாள். அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே மற்ற வேலையைப் பார்க்க, நிசப்தியின் மீது ஒரு பார்வையை வைத்திருந்த விக்னேஷிற்கும், ‘சரியான சேட்டைக்காரியோ’ என நினைத்துச் சிரிப்பு வந்தது.
அப்போது அரங்கத்தின் வாயிலில் மாணவர்களின் சத்தம் கேட்க, என்னவென்று பார்த்த விக்னேஷின் முகத்தில் கோபம் பொங்கியது என்றால், நிசப்தியின் முகத்தில் புன்னகை விரிந்தது. காரணம் விக்ரமும் ரவியும் உள்ளே வந்து கொண்டிருந்தனர். மாணவர்களின் சத்தம் கேட்டதுமே உஷா சொல்லிவிட்டாள், “இப்போ வர்றதுதான் நீ ஈஈன்னு பல்லைக் காட்டப்போற விக்கி.” என அவள் சொல்லி முடிக்கும் முன்னே, நிசப்தியின் முகம் ஈ மோடுக்கு தானாகப் போயிருந்தது.
“பக்கத்துல வந்துட்டாங்க நிஷ், தயவுசெஞ்சு மூஞ்சில ரியாக்சனை மாத்து, மானத்தை வாங்கிடாத…” என அவள் கையில் கிள்ளி வைக்க, அதன்பிறகு அமைதியானவள் அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும் மீண்டும் ஈ மோடுக்கு சென்றுவிட்டாள்.
இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நான்கு விழிகளிலும் கோபம் வெறியாக மாறியது. ஏற்கனவே விக்ரமை எதிரியாக நினைக்கும் விக்னேஷ் முதன்முதலாக தான் விரும்பும் ஒரு பெண், தன்னை பார்க்காமல் எதிரியானவனைப் பார்த்தால் அவன் எப்படி உணர்வான்? விக்னேஷ் கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இருந்தான்.
முதலில் தன்னிடம் பல்லைக் காட்டிவிட்டு, இப்போது அவனைப் பார்த்து சிரிக்கும் நிசப்தியின் மேல் கொலைவெறியே வந்தது. தன் பொருளை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலையில் இருந்தான் விக்னேஷ்.
அதே நேரம் விக்னேஷைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாதிக்கும் கோபம்தான். ஆனால் அதை அப்போது அவளால் வெளிப்படுத்த முடியவில்லை. முதலில் விக்னேஷிடம் நிசப்தியின் மேல் இருக்கும் நல்ல எண்ணத்தை மாற்ற வேண்டும். பிறகுதான் அவனிடம் தன் காதலைச் சொல்ல வேண்டும் என எண்ணியவள், அதை செயல்படுத்துவதற்காக நேராக விக்னேஷிடம் வந்து நின்றாள்.
“விக்கி, என்னாச்சு டல்லாகிட்டீங்க.” என மெல்ல ஆரம்பிக்க,
“அந்த பொண்ணு யாரு?” என்றான் சுற்றி வளைக்காமல்.
அவளும் யார் என்று கேட்காமல், “நிசப்தி பேரு. ஜூனியர்தான். அந்த நரேன்கூட சுத்திட்டு இருப்பா. நீங்க ஏன் கேட்குறீங்க?” என்றாள்.
“ம்ச்… ஒன்னுமில்ல. எனக்கு அவளைப்பத்தின டீடையில்ஸ் வேணும்.” என்றான் எரிச்சலாக.
“என்ன வந்து உன்னையும் மயக்கிட்டாளா? இந்த மாதிரி பொண்ணுங்களைத்தான் இப்போ எல்லாருக்கும் பிடிக்குது.” அதே எரிச்சலில் ஸ்வாதியும் கத்தினாள்.
“என்ன சொல்ற? தெளிவா சொல்லு.” இப்போது இறுக்கமாக வந்தது விக்னேஷின் குரல்.
“ம்ச்… என்ன சொல்ல? அவ கொஞ்சம் வேறமாதிரி, பசங்க கூடவே சுத்துவா. அதுலயும் பணக்காரங்க பசங்களை மயக்கி, ஏமாத்துறது…” என சலிப்பாக சொல்வது போல் சொல்ல,
“வாட்? நீ சொல்றதை நம்ப முடியலையே. பார்த்தா அப்படித் தெரியல. பட் நான் அவளைக் கவனிக்கிறேன். எனக்கு அவளைப் பத்தின டீடையில்ஸ் மட்டும் கொடு.” என்று ஸ்வாதியின் மேல் எழுந்த கடுப்பில் அந்தப் பேச்சை அப்போதே முடித்தான்.
“ம்ம்… நான் சொல்றதுனாலத்தான் உன்னால நம்ப முடியல. அது எனக்குத் தெரியும். பட் சீக்கிரம் நீயே கண்டுபிடிப்ப. ஏன் இந்த ஃபங்க்ஷன் முடிஞ்சி போறதுக்குள்ளயே நீ தெரிஞ்சிப்ப.” என்றவள் அங்கிருந்து நகர, விக்னேஷிற்கு முகம் யோசனையில் சுருங்கியது.
அதற்குப்பிறகு அவன் வந்த வேலையை மறந்து நிசப்தியைக் கண்காணிப்பதை மட்டுமே வேலையாக வைத்துக்கொண்டான். நிசப்தியின் கெட்ட நேரமோ, அல்லது ஸ்வாதியின் நல்ல நேரமோ விக்னேஷ் அவளைத் தப்பாக நினைக்கும் படிதான் அனைத்தும் நடந்தது.
நரேனுக்குத் தங்கை என்று கல்லூரி முழுவதும் பரவியிருந்ததால், அங்குள்ள அனைவருக்குமே அவள் செல்லப்பிள்ளை என்பதை ஸ்வாதி சொல்லாமல் விட்டிருந்தாள். அதற்குத் தகுந்தாற்போல, நரேனின் நண்பர்கள் அனைவரும் நிசப்தியுடன் பேச, விக்னேஷ் அவளைத் தப்பாகவே அர்த்தம் கண்டுகொண்டான். அதில் அவனது முகத்தில் கனல் பறந்தது. அவளிடம் பேசும் அனைவரையும் அடித்து நொறுக்கும் அளவிற்கு கோபம் பொங்கியது. ஆனாலும் இருக்கும் இடத்தை நினைத்து அமைதி காத்தான்.
பார்த்த நாளில் இருந்து அவனை மனதளவில் பெரும்பாடு படுத்தியிருந்தாள் நிசப்தி. இன்று வந்து அவளிடம் பேசிவிட்டு வீட்டில் பேசலாம் என்று நினைத்து அவன் கற்பனைக் கோட்டைக் கட்டியிருக்க, அனைத்தும் இடிந்து தரைமட்டாமாகியிருந்தது அவளின் செயலில்.
இப்போது நரேன் வந்து அவளை அழைத்துச் சென்று விக்ரமிடமும் ரவியிடமும் அறிமுகப்படுத்த, அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்களுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டாள் நிசப்தி. இதைப் பார்த்ததும் ஸ்வாதி சொல்லிச் சென்றதுதான் உண்மையோ என யோசிக்க ஆரம்பித்தான்.
அதே நேரம் மேடையில் ரித்தியும் ஸ்வாதியும் நிகழ்ச்சியைத் தொடங்க, பேராசிரியர்கள், தலைமையாளர்கள் என அனைவரும் பேசி முடிக்க, முன்னாள் மாணவர்கள் தங்களின் பொன்னான நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள என நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமாக நகர்ந்தது.
அடுத்து மேடையில் விக்ரமைப் பாடுவதற்கு அழைக்க அவனும் எந்த பிகுவும் இல்லாமல் மேடையேறினான். “அண்ணா உங்க ஃபேவரைட் சாங் பாடுங்க. உங்க வாய்ஸ் ரொம்ப மிஸ் பண்றோம்.” என அவனுக்கு ஜூனியராக இருந்தவர்கள் கத்த, மற்றவர்களும் “எஸ்… எஸ்…” எனக் கூச்சலிட, அதையெல்லாம் ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
பிறகு, “ஓகே… ஓகே உங்களுக்காக ஒரு சாங், எனக்காக ஒரு சாங். சரியா? இப்போ எனக்கான சாங்.” என்றவன் மைக்கில் மெல்ல ஸ்வரம் பிடிக்க ஆரம்பித்தான். அவன் ஸ்வவரத்திலேயே என்ன பாடல் என மற்றவர்கள் கண்டுப்பிடிக்க,
“இதோ இதோ என் பல்லவி…” என பாட ஆரம்பிக்க, மெய் மறந்த நிலையில் நின்றாள் நிசப்தி. அவன் பாடுவான் என்று எல்லோரும் சொல்லக் கேட்டிருக்கிறாள், ஆனால் இன்றுதான் முதல் தடவையாக கேட்கிறாள். அவனின் அந்தக் குரலில் மொத்தமாக கரைந்து கொண்டிருந்தாள் பெண்.
“நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா…” என்ற வரிகளில் தன்னை மறந்தே போனாள் நிசப்தி. அவனையே இமைக்காமல், கண்களில் காதல் பொங்க பார்த்திருந்தாள். அவளது முகபாவனைகளைப் பார்த்துக்கொண்டிருந்த விக்னேஷ்கு அந்த நொடியே விக்ரமையும் நிசப்தியையும் கொன்றுவிடும் அளவிற்கான கோபம் கிளர்ந்தது.
அப்போது அவளிடம் வந்த ஸ்வாதி, “என்ன இப்படி ஆன்னு பார்த்துட்டு இருக்க? ஹீ இஸ் மைன் தெரியுமா? ஐ க்நோ விக்ரம் வெரி சார்மிங் அண்ட் வெரி ஹாட். சோ உங்களுக்குப் பிடிக்க சான்ஸ் நெறைய இருக்குத்தான். ஆனா அதுக்காக அப்படியே கொத்திக்கிட்டு போயிடணும் நினைச்சா நடக்குமா? ஹ்ம்ம்… பார்க்குறதே தப்புன்னு சொல்லணும், பட் இன்னும் விக்கி என் ப்ராப்பர்டி ஆகலங்குறதுக்காக பார்த்தா பார்த்துட்டு போன்னு விடுறேன்.” என எகத்தாளமாக பேச, சுற்றியிருந்த ஸ்வாதியின் தோழிகள் அனைவரும் நிசப்தியைப் பார்த்து நக்கலாகச் சிரிக்க, அவமானமாகப் போய்விட்டது அவளுக்கு.
தோழியின் நிலையை உணர்ந்த உஷாதான் நிசப்தியை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள். இதுவும் விக்னேஷின் கண்களில் இருந்து தப்பவில்லை. இதை அப்படியே தொடரவிடும் எண்ணம் அவனுக்கு இல்லை.
முடிந்தளவிற்கு விரைவாக நிசப்தியை தனக்கு உரியவளாக மற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதற்கு முதலில் அவளிடம் பேசித் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நினைத்து, அவள் தனியாக மாட்டும் நேரத்திற்காகப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தளவிற்கு அவள் மேல் பைத்தியமாக இருந்தான் அவன்.
இங்கு நிசப்தியைத் தனியே அழைத்து வந்த உஷா அவளை நன்றாகத் திட்டிவிட்டு ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு நகர்ந்துவிட, தனக்கான நேரம் இதுதான், இதை தவற விடக்கூடாது என்று நினைத்த விக்னேஷ் யார் பார்வையையும் கவராமல் அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான்.
அவனைப் பார்த்ததும் சிரிக்க முயன்றவளைப் பார்த்து, “ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் சிரிக்க வேண்டாம்பா, நான் விக்னேஷ்.” என புன்னகைக்க,
அவன் பேச்சில் உண்மையிலேயே சிரிப்பு வந்தது அவளுக்கு, “வெரி சாரி… ஒரு குட்டி மூடவுட். இப்போ ஓகே, ஐம் நிசப்தி.” என மெல்ல புன்னகைத்தாள்.
“வாவ்… உன்னோட ஸ்மைல் ரியல்லி ஏஞ்சல் ஸ்மைல்தான். யூ ஆர் வெரி அட்ராக்டிவ். சொல்லு எப்படி என்னை மறந்த? என் ஆஃபிஸ்ல என்னையவே அவ்ளோ ஆர்வமா பார்த்துட்டு இருந்த, இங்க வந்து கண்டுக்கவே இல்ல. ம்ம்… என்னாச்சு?” எனவும்,
“அது அதுவந்து… சாரி நான் தப்பா… உங்களை… இல்ல, இல்ல… உங்களை இல்ல… நான்தான் தப்பா நினைச்சிட்டேன். சாரி அது உங்களை ஹர்ட் பண்ணிருந்தா சாரி.” என மிகவும் கசந்து போனக் குரலில் குற்ற உணர்வு மிஞ்ச பேச,
“ஹேய் இட்ஸ் ஜஸ்ட் ஜோக். நான் சும்மா தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன், நீ தப்பா எடுத்துக்காதே ஓகே. அன்ட் என்னை இவ்ளோ ஆர்வமா பார்த்த பொண்ணு யாருடான்னு தெரிஞ்சிக்கணும்னு ஒரு கியூரியாசிட்டிலதான் இங்க வந்தேன்.” அதில் உனக்காகத்தான் வந்தேன் என்ற அர்த்தம் பொதிந்து கிடக்க, திடுக்கிட்டுப் பார்த்தாள் நிசப்தி.
“ம்ச்… மறுபடியும் என்ன? நான் உன்னை யாருன்னு தெரிஞ்சிக்கத்தான் வந்தேன், அதுக்கே இவ்ளோ ஷாக்கா? கூல் பேபி… நாம இனி ஃப்ரண்ட்ஸ் ஓகே.” என நார்மலாகப் பேசிப்பேசியே, அவளிடமிருந்து தனக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வாங்கிக் கொண்டவன் கிளம்பிவிட்டான்.
“என்ன, வந்தான், உக்காந்தான், அவன் பாட்டுக்கு பேசினான், போயிட்டான்.” என நிசப்தி புலம்பியபடியே அடுத்த வேலையைப் பார்க்க, அதற்கு விடையாக அடுத்த இரண்டாம் நாள் காலையில், தன் குடும்பத்துப் பெரியவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு அவள் வீட்டின் நடுஹாலில் அமர்ந்திருந்தான் மாப்பிள்ளையாக.
நிசப்தியின் தந்தைக்கு மிகவும் மகிழ்ச்சி. தான் தேடினாலும் கிடைக்காத அளவிற்கு வசதியான குடும்பம். வீட்டு ஆட்கள் குணத்திலும் பேச்சிலும் நல்லமாதிரியாக இருக்க, அவரால் மறுத்துச் சொல்ல முடியவில்லை. அவரது வேண்டுதல் எல்லாம் மகள் வேண்டாமென சொல்லிவிடக் கூடாதே என்பதில்தான் இருந்தது.
நிசப்திக்கும் இது பெரும் அதிர்ச்சிதான். அதனால் அவளால் உடனே பதில் சொல்லிவிட முடியவில்லை. “எனக்கு ரெண்டு நாள் டைம் தரீங்களா? நான் யோசிச்சு சொல்லட்டுமா?” என அவனிடமே கேட்க, சரி என்பதைத் தவிர வேற என்ன பதில் சொல்வான்? ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டிவிட்டு வந்தவனுக்கு, வேண்டாமென்று விடுவாளோ என்ற பயத்தில் அடுத்துக் கடந்த இரண்டு நாட்களும் நரகம் போல்தான் கழிந்தது.
ஆனால் அவன் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அவள் சரியென்று சொல்ல, ஸ்வாதியின் ரூபத்தில் விதி தன் தாண்டவத்தை ஆரம்பித்தது.
***
1 comment
ஆக மொத்தம், இந்த ஸ்வாதி விக்ரம் & விக்கிங்கிற ரெண்டு போட்லேயும் ஒரே நேரத்துல பயணம் பண்ண இவை நினைச்சிட்டு எல்லா இமுவையையும் நிசப்தி தலையில இழுத்து வைச்சிட்டாப் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797