Home Antiheroதளிர் – 22

தளிர் 22

தன் அறையில் கூண்டுப்புலியாய் நடமாடிக் கொண்டிருந்தான் விக்னேஷ். அவனுக்கு எதிரே இருந்த நண்பன் கொண்டு வந்த செய்தியை இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. விக்ரம் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவான் என்று அவன் நண்பர்கள் யாருமே நினைக்கவில்லை.

முதல்நாள் இரவு நண்பர்களை அழைத்து ஒரு பார்ட்டி வைத்திருந்தான் விக்னேஷ். அப்போதுதான் ஒரு நண்பன், “விக்கி காலேஜ் லைஃப் காலேஜோட போச்சுடா. எப்பவும் இப்படியேவா இருக்கப் போறோம், உன்னோட மேரேஜுக்கு எங்களை இன்வைட் செஞ்ச மாதிரி விக்ரமையும் கூப்பிடு. அவன் வந்தா வரட்டும்.” என சொல்ல,

மற்றொருவனோ, “எனக்கு விக்ரமைத் தெரியும், கண்டிப்பா வருவான். அவன் இதெல்லாம் மனசுல வச்சுக்கமாட்டான்.” என,

இன்னொருவனோ, “எஸ், நாம என்ன இன்னும் சின்ன பசங்களா? யாராச்சும் ஒருத்தர் இறங்கி வந்துதானே ஆகணும். அதோட இது உன்னோட ஃபங்க்ஷன். கண்டிப்பா நீ இன்வைட் பண்ணு, அவன் வருவான்.” என நண்பர்கள் அனைவரும் சொல்ல, விக்னேஷிற்குமே அது சரியெனப் படவும்தான் தன்னுடைய நிச்சயதார்த்த இன்விடேஷனை எடுத்துக்கொண்டு விக்ரமின் ஆஃபிஸ்கு சென்றான்.

ஆஃபிஸ் வரைக்கும் சென்றவன் தன் ஈகோவைப் பார்க்காமல் நேராக விக்ரமிடம் சென்று கொடுத்திருந்தால், இந்தப் பிரச்சனைகளை மொத்தமாகத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவனோ இத்தனை நாள் இருவரும் அடி பிடியென இருந்துவிட்டு, இப்போது போய் நேரடியாகப் பேசுவது என்னவோ போல இருக்க, அதனால்தான் செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தான். ஆனால் விக்ரம் இப்படி செய்வான் என்று யாருமே அனுமானிக்கவில்லை. அடுத்து செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டிருந்தாலும், விக்னேஷின் எண்ணம் முழுக்க, நிசப்தி மனம் மாறிவிடுவாளோ என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தது.

மகளைக் காணவில்லை என்றதும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்த வேனுகோபாலை நரேனும் உஷாவும் தான் மருத்துவமனையில் சேர்த்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அதிர்ச்சியில் அவருக்கு அட்டாக் என்று மருத்துவர்கள் கூறிவிட, இருவரும் செய்வதறியாது திகைத்துப் போயினர்.

“அவக்கூட போகாம உனக்கு என்ன வேலை? அவளை எப்படி தனியா அனுப்பின? அப்படி என்ன மகாராணிக்கு வேலை?” என பார்க்கும் நேரமெல்லாம் உஷாவைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தான் நரேன். அவனுக்கு இருவரில் யாரைப் பார்க்க என்றிருந்தது.

வேனுகோபாலிற்கு இனி பிரச்சனையில்லை என்று தெரிந்ததும், உடனே விக்ரமைப் பார்க்க ஓடினான். ஆனால் அவனோ யாரும் கண்டுப்பிடிக்க முடியாத ஓரிடத்தில் இருந்தான்.

நரேன் வீட்டிற்குச் செல்ல, அங்கோ ரேணுகா அவனை வரவேற்ககூட இல்லை. ரித்தியோ அழுதுஅழுது முகமெல்லாம் வீங்கிப் போய் நின்றிருந்தாள். ‘என்னாச்சு’ என்று கேட்கக்கூடத் தோன்றாமல் விக்ரமைப் பற்றிக் கேட்டு, நிசப்தியைக் காணவில்லை என்று கூற, நரேனின் மேல் ஆத்திரம் பொங்கியது.

“உனக்காக, உன்கூட பழகினதுக்காக நான் இங்க அடி வாங்கி கிடக்க, உனக்கு இன்னும் அவதான் வேணுமா? தங்கச்சி தங்கச்சின்னு எங்கிட்ட பொய் சொல்லிருக்க. அவ காணாம போனா உனக்கு என்ன? கடத்தினாங்களோ, இல்ல யார் கூடவும் ஓடிப் போயிட்டாளோ யாருக்குத் தெரியும்?” என்று முடிக்கும் முன்னே நரேனின் கை அவள் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.

“எனக்கு கூடப் பிறந்தவங்க யாரும் இல்லைதான், ஆனா அதுக்காக அக்கா, தங்கச்சி உணர்வு எப்படி இருக்கும்னு தெரியாதவன் இல்ல. எனக்கு நிசா எப்பவும் கூடப் பிறக்காத தங்கச்சிதான். அதை யாராலையும் மாத்த முடியாது. உன்னை லவ் பண்ணிட்டு அவக்கிட்ட போய்… ச்சே என்ன புத்தி உனக்கு? உங்கிட்ட நான் இதை சத்தியமா எதிர்பார்க்கல. அப்போ நான் பொறுக்கியா? என்ன சொல்ல வந்தேன், என்னப் பிரச்சனை என எதையும் கேட்காம பேசுற…” எனக் கோபத்தில் கத்தியவன், அதிர்ந்து நின்ற ரேணுகாவிடம், “சாரிமா…” என்றுவிட்டு வேகமாக வெளியேறினான்.

அங்கிருந்து வெளியே வந்தவன் ரவியிடம் விஷயத்தைச் சொல்ல, அவனோ வீட்டில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ‘இது வேறையா’ என நொந்து போயிருந்தான். ஆம்! அதற்கு காரணம் அவனுக்கு எதிரே இருந்த ஸ்வாதி.

“சீனியர்…” என்று நரேன் ஆரம்பிக்கும் முன்னே, “நோ ரவி, விக்ரம் அப்படி செய்யமாட்டார். கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டார். அவர் என்னைத்தான் லவ் பண்றார், இவன் பொய் சொல்றான். பொய் எல்லாமே பொய்…” என்று ஆங்காரமாய் கத்தியபடி, தன் அறைக்குள் ஓடினாள் ஸ்வாதி. அவருக்குப் பின்னே மதியழகி பயந்து ஓட, ரவியும் ஓட, அந்த இடத்தில் ஒன்றும் புரியாமல் நின்றிருந்தான் நரேன்.

அறையில் இருந்த பல பொருட்கள் உடைந்து சிதறுவதைப் பார்த்தவன், அங்கிருப்பது பிரயோஜனம் இல்லை என உணர்ந்து, நிசப்தியைத் தேடச் சொன்ன தன் நண்பர்களுக்கு அழைத்தபடியே வெளியேறினான். வழியே இல்லாத கானகத்தில் விட்டதைப் போல தலை சுற்றியது அவனுக்கு.

“ஸ்வாதி சொல்றதைக் கேளு, விக்ரம் அப்படி செஞ்சிருக்க வாய்ப்பில்ல. முதல்ல என்னனு விசாரிக்கலாம். அதுக்குப்பிறகு என்னனு யோசிக்கலாம், முதல்ல நீ அமைதியா இரு.” என தங்கையை சமாதானப்படுத்தியவனுக்கு, கொஞ்ச நேரத்திற்கு முன்பு ஸ்வாதி தன்னிடம் பேசியது ஞாபகம் வந்தது.

அப்போதுதான் ஆஃபிசில் இருந்து வந்திருந்தான் ரவி. வந்தவன் முன்னே அமர்ந்த ஸ்வாதி, “எனக்கு விக்ரமைப் பிடிச்சிருக்கு, அவரைத்தான் மெரேஜ் செஞ்சிப்பேன்.” எனப் பட்டென்று சொல்ல, தாயுக்கும் மகனுக்கும் அதிர்ச்சியாகிப் போனது.

“என்ன சொல்ற? தெளிவா சொல்லு.” என மீண்டும் ரவி கேட்க,

“ம்ச்… அதுதான், எனக்கு விக்ரமைப் புடிச்சிருக்கு. ஐ ஆம் லவ் வித் ஹிம். அவருக்கும்தான். ஆனா இன்னும் சொல்லிக்கல, பட் இது லவ் மேரேஜா இல்லாம, அரேன்ஞ்சுடு மேரேஜா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். அதை நீதான் செய்யணும்.” என ஆர்டர் போட்ட தங்கையை என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்தான்.

“உனக்குப் பிடிக்கிறது இங்க முக்கியம் இல்லை, அவனுக்கும் பிடிக்கணும். அவனுக்குப் பிடிச்சா மட்டும்தான் என்னால பேச முடியும். உன் இஷ்டத்துக்கு எதையும் எடுத்தோம், கவுத்தோம்னு செய்ய முடியாது.” என்றவன் தாயைப் பார்க்க அவர் முகம் யோசனையில் இருந்தது.

“என்னம்மா நீங்க ஒன்னும் சொல்லாம இருக்கீங்க?” எனத் தாயை தன் பேச்சில் இழுக்க,

“இல்ல ரவி, ஸ்வாதி சொல்றதும் ஒரு வகையில எனக்கு சரின்னுதான் படுது. நீயே யோசிச்சுப் பாரு, நம்ம தொழில் குடும்பத் தொழில். பார்ட்னர்ஷிப்ல ஆரம்பிச்ச தொழிலை எப்படியும் பிரிக்கப் போறது இல்ல. அப்படி இருக்கும்போது ஏன் நாம பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கக்கூடாது? சொத்தும் வெளிய போகாது, அதோட உன் தங்கச்சி குணத்துக்கு வெளியக் கொடுத்து, நாம அசிங்கப்படுறதுக்கு விக்ரமுக்கு கொடுத்துடலாம். பொண்ணு எடுத்து பொண்ணு கொடுத்தா நமக்கும் பிரச்சனையும் இல்ல. ரேணுகாவும் ரொம்ப நல்ல மாதிரி, இவளைப் பொறுத்துப் போவாங்க. எனக்குத் தோனினதை சொன்னேன், நீ யோசிச்சு சொல்லு.” என நிறுத்த,

“ஆனா அம்மா ரித்தி…” என ரவியும் நிறுத்த,

“உனக்கு ரித்தியைப் பிடிச்சிருக்கா? அதை மட்டும் சொல்லு.” என இப்போது அவசர அவசரமாக ஸ்வாதி கேட்க,

“எனக்குப் பிடிக்கிறது முக்கியம் இல்லை, எனக்கு அவளை எப்பவும் பிடிக்கும். அது இப்போ பிரச்சனை இல்லை. ஆனா அவளுக்கும் என்னைப் பிடிக்கணும், அதுதான் முக்கியம்.” என்றவனிடம்,

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். ரித்தியைப் பொறுத்தவரை விக்ரம் சொல்றதை அப்படியே கேட்பா. சோ நான் விக்ரம்கிட்ட பேசுறேன்.” என்று அறைக்குச் செல்லும் நேரம்தான் நரேன் வந்தது.

ஒருவழியாக தங்கையை சமாதானம் செய்தவனுக்கு, எப்படி விக்ரமைத் தேடுவது எனப் புரியவில்லை. விக்ரம் பெண்கள் விஷயத்தில் மிகவும் ஒழுக்கமானவன், மரியாதை எள்ளளவும் குறையாது கொடுப்பவன். அப்படியிருக்க அவன் செய்தான் என்பதையே முதலில் நம்பமுடியவில்லை. ஆனாலும் நிதர்சனம் அது உண்மை என்று உரைக்க, அவன் செல்லும் இடமெல்லாம் தன் ஆட்களை வைத்து தேடிப்பார்க்க சொல்லியவன், நரேனுக்கு அழைத்து எதுவும் தெரிந்ததா எனக் கேட்க, நரேனும் இல்லையென்று கூறிவிட, அவனாக வராமல் கண்டுபிடிக்க முடியாது என்றுப் புரிந்தது.

அதே நேரம் அந்தக் காட்டுக்குள் இருந்த சிறு வீட்டின் உள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சேரில் அமர வைக்கப்பட்டிருந்தாள் நிசப்தி. அவளுக்கு எதிரே ஒரு சேரில் கால் மேல் கால் போட்டபடி அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் விக்ரம். நிசப்திக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.

“டேய் என்ன ஸ்ப்ரேவடா அடிச்சுத் தொலைஞ்சிங்க? சரக்கடிச்ச மாதிரி இப்படி மட்டையாகிக் கிடக்குறா. அந்த தண்ணியை எடுத்து அவ மூஞ்சில ஊத்து.” என அங்கிருந்தவனிடம் கத்த, அவனோ பக்கத்தில் இருந்த ஜக் தண்ணீரை எடுத்து நிசப்தியின் மேல் பொலபொலவென ஊத்திவிட, அதில் அரண்டு போய் எழுந்தவள் கை, கால்கள் கட்டப்பட்டிருக்க, சேரோடு சேர்ந்து கீழே விழுந்துவிட்டாள்,

அவளது அரண்டத் தோற்றமும், பயந்த முகமும் விக்ரமை அசைத்தாலும், வெளியேக் காட்டிக் கொள்ளாமல் பக்கத்தில் ஜக்கோடு இருந்தவனை ஓங்கி ஒரு அறைக் கொடுக்க, அந்த அடியின் சத்தம் இடியை ஞாபகப்படுத்த, அப்படியே நகர்ந்து சுவரோடு ஒன்றிக்கொண்டாள் பெண்.

அவளால் இன்னும் இந்த சூழ்நிலையையே கிரகிக்க முடியவில்லை. ‘நாம் எங்கு இருக்கிறோம், இது எந்த இடம், எனக்கு என்ன ஆனது.’ என மழுங்கிய மூளையைத் தட்ட ஆரம்பித்திருந்தாள். ஆனால் இன்னமும் விக்ரம்தான் இதை செய்தான் என்று அவள் யோசிக்கவில்லை. கடத்தியவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற வந்திருக்கிறான் என்றே நினைத்திருந்தாள்.

அதற்குள் அடி வாங்கியவன் வேக வேகமாக அவளது கட்டுக்களை அவிழ்த்துவிட்டு, குடிக்கத் தண்ணீரைக் கொடுக்க, நிசப்திக்கும் அது தேவையாகப் பட, அவனிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கி மொத்தமாகக் குடித்து முடித்தாள். இப்போது சற்று சுற்றுப்புறம் நினைவுக்கு வர, தான் எவ்வாறு கடத்தப்பட்டோம் என்பதும் நினைவுக்கு வந்தது.

அவளையேப் பார்த்தபடி சேரில் அமர்ந்திருந்த விக்ரம், “என்ன உன்னோட என்கேஜ்மென்ட் நின்னு போச்சுன்னு வருத்தமா இருக்கா? இல்ல அந்த விக்கியை மிஸ் பண்ணிட்டோம்னு கவலையா இருக்கா?” என நக்கலாகக் கேட்க, புரியாத மொழி பேசுவது போல் முழித்தாள் பெண்.

“என்ன பேக்கு மாதிரி முழிக்கிற? ஒன்னும் புரியலையா? உன்னைக் கடத்தி வச்சிருக்கேன். உன்னோட விக்கி இன்னைக்கு அத்தனை பேர் முன்னாடியும் அவமானப்படணும்னு உன்னைத் தூக்கிட்டு வந்திருக்கேன். யார் வீட்டு பொண்ணை யார் போட்டோ எடுக்குறது? எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சியை போட்டோ எடுத்து எனக்கே அனுப்புவான்? அவனை சும்மா விட நான் என்ன பொட்டையா டேமிட்…” எனக் கோபத்தில் கர்ஜிக்க, அவள் மேனி நடுங்கியது.

அவன் கடத்தினான் என்பதிலேயே அவளது உலகம் நின்று போயிருந்தது. நல்லவன் என்று நம்பி மனதில் கட்டிய கோட்டை மணல் கோட்டையாக சரிந்து விழுந்தது. அவனது நல்லவன் என்ற பிம்பம் மங்கி சரிய, அவனையே வெறித்துப் பார்த்தாள் நிசப்தி.

அந்தப் பார்வையில் என்னக் கண்டானோ தன் கையில் இருந்த போட்டோக்களை அவளை நோக்கி விசிறியடிக்க, அது அவள் முன்னே பறந்து விழ, எல்லாம் அவளது அண்ணனும் அவனது தங்கையும்.

“நரேன் அண்ணா…” என வாய்க்குள் முனங்கியவள் பதட்டமாக விக்ரமைப் பார்க்க,

“அவனைப் பழிவாங்கத்தான் உன்னைக் கடத்திருக்கேன். நாளைக்கு காலையில் நீ வீட்டுல இருப்ப, அதுவரைக்கும் அமைதியா இருந்தா உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது. தப்பிச்சு போகணும்னு நினைச்சா சேதாரம் எனக்கில்ல புரியுதா? எனக்கு இந்த வைலன்ஸே ஆகாது. புரிஞ்சு நடந்தா நீ சேஃப்.” என்றவன் அங்கிருந்து நகர, அவனையே வெறித்தவள் பின், “ஒரு நிமிசம்…” என விக்ரமை நிறுத்தினாள்.

என்ன என்பது போல் பார்க்க, “எத்தன ஜெனரேஷன் முன்னேறி வந்தாலும் பழிவாங்க உங்களுக்கு எல்லாம் பொம்பளைங்கதான் கிடைச்சாங்க இல்ல. என்ன மனுஷங்க நீங்க எல்லாம்? பொம்பளைங்க என்ன உங்களுக்கு கிள்ளுக்கீரையா? உங்க வீட்டுப் பொண்ணை போட்டோ பிடிச்சான்னு இவ்ளோ தூரம் குதிக்கிற நீங்க, அவ ஒரு ஆம்பளகூட சுத்துறதைத் தப்புன்னு நினைக்கவே இல்லையா?

அவன் போட்டோ எடுத்தது தப்புன்னா, நாலு பேர் பார்க்க சுத்துறதும் தப்புதானே. அப்போ உன் வீட்டுப் பொண்ணைத்தான நீ அடக்கி வச்சிருக்கணும். அதை விட்டுட்டு எதிலயுமே சம்மந்தப்படாத என்னை ஏன் இப்படி பழிவாங்கின? உன் மேல வச்சிருந்த அத்தனை நம்பிக்கையும், நல்ல எண்ணமும் இந்த நிமிசம் தவிடு பொடியாகிட்டு.

என்னைப் பத்தி நீ யோசிச்சியா? ஒரு பொண்ணு இந்த நேரம் காணாம போனா ஊர்ல என்ன பேசுவாங்க, நான் எவனையோ காதலிச்சு அவன்கூட ஓடிப்போயிட்டேன்னுதான நினைப்பாங்க. என் அப்பா அவர் என்ன தப்பு பண்ணினார்? இந்த பேச்செல்லாம் கேட்டு அவர் எப்படி நிம்மதியா வெளிய போய் வருவார்? நீயெல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்? பழிவாங்கணும்னா பொண்ணைத் தூக்கினா சரியாகிடும்னு நினைக்கிற நீயெல்லாம் சரியான ஆளா?

ம்ம்… நீ பழிவாங்கணும்னா அவனத் தூக்கிருக்கலாம், இல்ல கொலைகூட செஞ்சிருக்கலாம். அவன்கூட நீ நேருக்கு நேர் மோதிருக்கணும். அதை விட்டுட்டு, ச்சே நீயெல்லாம்…” என அவள் அடுத்த வார்த்தை சொல்லி முடிக்கும்முன் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்திருந்தான்.

அதில் கண்களெல்லாம் இருள, கால்கள் துவள அப்படியே மயங்கியவளை வேகமாக வந்து பிடித்துக்கொண்டான் விக்ரம். ஆனாலும் அவன் கோபம் கொஞ்சமும் குறையவில்லை. தன் கைகளில் இருந்தவளின் கன்னத்தைத் தட்டி எழுப்ப முயன்று கொண்டிருக்க, திடீரென அந்தக் கதவு திறக்க அதிலிருந்து, “சபாஷ்” எனக் கைகளைத் தட்டியபடி உள்ளே வந்தான் விக்னேஷ்.

***

You may also like

1 comment

mriomrio28399 February 27, 2026 - 1:05 pm

அடப்பாவி..! நிசாப்தி கேட்டதும் பாயிண்ட் தானே. இவன் வீட்டு பொண்ணு சரியில்லைன்னா…
அவளை கன்ட்ரோல் பண்ணியிருக்கணும் இல்லைன்னா, நரேனை தூக்கியிருக்கணும் அதை விட்டு இவளை ஏன் தூக்கணும்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured