தளிர் 27
நரேன் இப்போது விக்ரமிடம் வேலைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தங்கள் குடும்ப தொழிலான தேங்காய் ஏற்றுமதியில் கால் பதிக்க யோசித்திருந்தான். தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் இருந்த தென்னந்தோப்பைக் குத்தகைக்கு விட்டிருந்தவர்களிடமிருந்து வாங்கியிருந்தான். அந்த வேலைக்காக அவன் அடிக்கடி பொள்ளாச்சி போக வேண்டியிருந்தது. சில நாட்கள் அங்கேயேத் தங்க வேண்டியும் இருக்க, மனைவியை நிசாவின் வீட்டில், வேணுகோபாலின் பாதுகாப்பில் விட்டுவிட்டு சென்றிருந்தான்.
அவன் முடிவை யாருமே வேண்டாம் என்று சொல்லவில்லை. படித்த படிப்பிற்கான வேலை இல்லை என்று மட்டும் வேணுகோபாலிற்கு வருத்தமாக இருந்தது. ஆனால் இதுதான் அவர்களது எதிர்காலத்திற்கு நல்லது எனும் போது அவரால் மறுத்துக் கூற முடியவில்லை.
பெண்கள் இருவருக்கும் அவனது முடிவில் வருத்தம்தான், அரசு வேலைக்கு முயற்சி செய்ய நிசப்தியும் சொன்னாள்தான், ஆனால் ஏனோ நரேனுக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. கடைசியில் அவன் முடிவிற்கே விட்டுவிட்டனர்.
இதெல்லாம் அவர்கள் திருமணம் முடிந்த மூன்றே நாட்களில் நடந்தது. நாலாவது நாள் மனைவியை நிசாவிடம் விட்டுவிட்டு பொள்ளாச்சி கிளம்பியிருந்தான்.
இவர்கள் அறியாத ஒரு விஷயம் அவனால் ரித்தியையும், அவளது துரோகத்தையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அதோடு உஷாவையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னதான் மனைவி என்றாலும், அந்த எண்ணம் மனதில் ஆழமாக பதிய வேண்டுமே. கட்டாயமாகப் புகுத்தப்பட்ட ஒரு உறவு, அதை ஏற்கவும் பழகவும் சில நாட்கள் தேவைப்படும். அது மட்டுமில்லாமல் ஒரே வீட்டில் இருந்தால் ரித்தி மீது இருக்கும் கோபத்தில் உஷாவை வருத்திவிடுவோமோ என்ற பயமும் கூடவே வந்தது. இன்றைக்கு எப்படி இருந்தாலும், பின்னாளில் நன்றாக வாழ வேண்டிய வாழ்க்கை. அதை கொடுமையான வார்த்தைகளைப் பேசி கெடுத்துக்கொள்ள அவன் தயாராக இல்லை.
இதெல்லாம் யோசித்துதான் அவன் சென்னையை விட்டே கிளம்பியது. சில நாட்கள் தனிமை, அவனுக்குத் தேவையான நிம்மதியையும், தீர்வையும், நிதானத்தையும் கொடுக்கும் என நினைத்தான். அதற்காகவே இந்த வேலையும் பயணமும்.
உஷாவின் வீட்டில் வேணுகோபால் சென்று பேச அவளின் அப்பாவோ, “அவளாதான் போனா… அப்படியே போகட்டும். இனி இந்த வாசப்படியை மிதிக்கக்கூடாது.” என்றுவிட, என்ன ஜென்மங்களோ என்றுதான் தோன்றியது அவருக்கு.
இங்கு மகளைப் பார்க்க வந்திருந்தார் ரேணுகா. டெல்லிக்கு சென்ற விக்ரமிற்கு வேலைகள் அதிகமானதால் அவனால் நகர முடியாமல் போக, அவன் இல்லாமல் ஸ்வாதியும் அங்கு செல்லவில்லை. அவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்று நினைத்த ரேணுகா, மகளைப் பார்க்க வந்தார். மதியழகியுடனான நலம் விசாரிப்புகள் முடிந்த பிறகு மகளின் அறைக்கு வந்தார்.
உடல் சோர்ந்து படுத்திருந்தவளைப் பார்க்கவே மனம் பதறியது. யாரும் ஒன்றும் சொல்லவே இல்லையே என, யோசனையுடன் மகளின் முன்னே அமர்ந்தார்.
“என்ன ரித்திமா, ஏன் இவ்ளோ டல்லா இருக்க?” என்றார் மெதுவாக.
‘ஒன்னுமில்லை’ என்பது போல தலையை ஆட்டினாள் பெண்.
“ஏன் சோர்வா இருக்க? நாள் தள்ளிப் போயிருக்கா… என்ன பண்ணுது?” என இப்போது இதமாகவேக் கேட்க, நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்து நீர் அருவியைப் போல் கொட்டியது.
மகளின் நிலையைப் பார்த்து என்ன நினைத்தாரோ, ரவிக்கு அழைத்து, “ரவி, ரித்தியை நான் ரெண்டு நாளைக்கு வச்சிருந்து அனுப்புறேன்.” எனவும்,
“ஏன் என்னாச்சு அத்த? மார்னிங் நான் வரும்போது நல்லா இருந்தாளே…” என ரவியும் கேட்க,
“பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்ல ரவி, அங்க நான் தனியாதானே இருக்கேன், ரித்தி வந்தா கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவேன். கைக்குள்ளயே இருந்தாளா, இப்ப அவ இல்லைன்னதும் ஒரு மாதிரி இருக்கு.” என ரேணுகா வருத்தமாகப் பேச,
“சரி சரி அத்தை, நீங்க அம்மாக்கிட்ட சொல்லிட்டு அழைச்சிட்டுப் போங்க, நான் ஈவ்னிங் அங்க வரேன்.” என்று வைத்து விட்டவனுக்கு, ‘நானும் தனியாதானே இருக்கேன்’ என்ற பதம், அவனை நன்றாகவே பதம் பார்த்தது. விக்கி ஊரில் இல்லையென்பதால் தான் தங்கை இங்கிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவனும் இரண்டு நாட்கள் வெளியூர் சென்று வந்தானே, அப்போது ரித்தியும் அங்கு போயிருக்கலாமே, அவனும் சொல்லத்தானே செய்தான். ஆனால் அவளோ, ‘அத்தை தனியா இருப்பாங்கதானே, நீங்க வந்ததும் போகலாம்.’ என்று எவ்வளவு பொறுப்பாக சொன்னாள்.
அந்தப் பொறுப்பு ஏன் தன் தங்கையிடம் இல்லை, ஏன் இதையெல்லாம் விக்ரம் கவனிக்கவில்லை என முதல் முறையாக தங்கையைக் கவனிக்க ஆரம்பித்தான். இன்று அவளிடம் பேச வேண்டும் என்றும் நினைத்தும் கொண்டான். ஆனால் அதற்கு அவனது தங்கை இடம் கொடுக்க வேண்டுமே.
இரண்டு நாட்களுக்கு முன் மயங்கி விழுந்த மனைவியின் எண்ணமே, இப்போது வந்து வந்து போனது. மயக்கத்தில் அவள் உடல் நடுங்கியதை இப்போதும் அவனால் உணர முடிந்தது. மருத்துவரிடம் காட்டினால் சத்து குறைபாடு, உடல் சோர்வு வேறொன்றுமில்லை என்று விட்டார். ஆனால் அன்றிலிருந்து அவளிடம் ஒரு மாற்றம். மிகவும் அமைதியாக இருக்கிறாள். தனிமையில் யோசனையில் அமர்ந்திருக்கிறாள். அம்மா ஞாபகமோ? தன்னிடம் சொல்லியிருந்தால் அழைத்துச் சென்றிருப்பேனே. ஏன் இப்படி இருக்கிறாள்? சொன்னால்தானே தெரியும்… என யோசனைகளோடு அமர்ந்திருந்தான். மாலையில் அவளிடம் நிச்சயம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
ஸ்வாதி வீட்டில் இல்லை, இருந்த மதியழகியிடம் சொல்லிவிட்டு மகளை அழைத்துக்கொண்டு நேராக மருத்துவரிடம் சென்றார் ரேணுகா. பரிசோதனைகளின் முடிவில் அவர் எதிர்பார்த்தது போலவே நாட்கள் தள்ளிப் போயிருக்க, தன் வருத்தத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டு மகளை அணைத்துக் கொண்டார்.
வீட்டுக்கு வந்ததும், “ரவிக்கு அழைச்சு நீ சொல்லிடு, நான் மதிக்கும் விக்கிக்கும் சொல்லிடுறேன்.” என்றவர் போனை எடுத்துக்கொண்டு வெளியில் வர, ஒருவித தயக்கத்துடனும் பரவசத்துடனும் கணவனுக்கு அழைத்தாள் ரித்தி.
கொஞ்சம் முன்னேதானே அத்தை பேசினாங்க, இப்போ என்ன? என யோசித்தபடியே அட்டெண்ட்ட் செய்தவன், “ஹலோ மேடம், இப்போதான் அம்மா வீட்டுக்கு போனீங்க, அதுக்குள்ள அத்தான் ஞாபகமா?” எனச் சிரித்தபடியேக் கேட்க,
“ம்ம்ம்… அது இப்போ இங்க அம்மா வீட்டுக்கு வர முடியுமா…?” எனத் தயங்கி தயங்கி பேச,
“என்னம்மா… என்னாச்சு… உடம்புக்கு முடியலையா… எங்கிட்ட மறைக்கிறியா?” என அக்கறையாகக் கேட்க,
“இல்ல… இல்ல அதெல்லாம் இல்ல… இது வேற, நீங்க வாங்களேன்…” என கெஞ்சலும், சிணுங்கலுமாகப் பேசிய மனைவியின் பேச்சை உள்வாங்கியபடியே உடனே கிளம்பியிருந்தான் ரவி.
ரேணுகாவும் மற்றவர்களுக்கு அழைத்து சொல்ல, விக்ரம் அன்று கிளம்பி வருவதாக தாய்க்கு சொல்லிவிட்டு, ஸ்வாதிக்கு அழைத்தான்.
இரண்டு முறை அழைத்தும் எடுக்கவில்லை என்றதும், அவளாக அழைக்கட்டும் என்று விட்டுவிட்டான். ஆனால் அவன் அழைக்கும் போது கையில்தான் போனை வைத்திருந்தாள் ஸ்வாதி. அப்போதுதான் மதி அழைத்து ரித்தியின் கர்ப்பம் பற்றி சொல்லியிருந்தார். இனி அடுத்து இருவரும் தன்னை நெருக்குவார்கள் என்று அவளுக்குத் தெரிந்து போனது.
இதுவரை விக்ரமிடமிருந்து ஒதுங்கியேதான் இருக்கிறாள். இனியும் இருக்க முடியுமா? விக்ரம் விடுவானா தெரியாது. அதற்குள் இந்த விக்னேஷிடம் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று, யோசித்தபடியே இருக்கும் போதுதான் விக்ரம் அழைத்தது. அவனும் இதைப் பற்றித்தான் பேசுவான் என்று அறிந்ததால்தான் போனை எடுக்காமல் விட்டாள். இனி அவனையும் சமாளிக்க வேண்டும். எப்படி? எப்படி? என யோசிக்க ஆரம்பித்திருந்தவளுக்கு மதியழகி பேச்சு ஞாபகம் வந்தது.
“ஸ்வாதிம்மா, ரித்திக்கு உண்டானது எனக்கு சந்தோசம்தான், ஆனா நீ உண்டாகி உனக்கு ஒரு குழந்தை வந்தாதானே தங்கம் அம்மாவுக்கு சந்தோசம். நான் இருக்கும்போதே உனக்கு நல்லது, கெட்டது பார்த்துட்டு போயிடணும்னு நினைக்கிறேன். ரவியும் ரித்தியும் அப்படி ஒன்னும் உன்னை விட்டுட மாட்டாங்கதான், இருந்தாலும் மனசு கேட்கலயே, என்ன பண்ண? எதுக்கும் டாக்டர்கிட்ட ஒரு செக்கப்புக்கு போயிட்டு வருவோமா?” என ஆதங்கத்தில் கேட்க,
“ம்மா! என்ன பேசுறீங்க? நான் நல்லாத்தான் இருக்கேன். பேபி வேண்டாம்னு கொஞ்சநாள் தள்ளிப் போட்டோம் அவ்ளோதான், ரித்திக்கு எல்லாம் முடியட்டும். அப்புறம் எனக்கு பார்க்கலாம். சும்மா எதுவும் சொல்லிட்டே இருக்காதீங்க…” என எரிச்சலாகக் கத்திவிட்டு வெளியில் வந்துவிட்டாள்.
இப்போது அதை யோசித்தவளுக்கு மின்னலாக ஒரு ஐடியா தோன்ற, தனக்குத் தெரிந்த தோழி மூலம் ஒரு மருத்துவரிடம் சென்றாள். அவரிடம் தன்னுடைய பிரச்சனையை சொன்னவள், “எனக்கு தேவையானதை நீங்க செய்தா, கண்டிப்பா உங்களுக்குத் தேவையானது உங்களைத் தேடி வரும்.” எனவும், பணத்திற்கு விலை போன அந்த மருத்துவரும் உடனே சரியென்றுவிட, அடுத்த ஒரு மணி நேரத்தில் விபத்தில் அடி பட்டதாக அந்த மருத்துவமனையில் சேர்ந்திருந்தாள் ஸ்வாதி.
அடித்துப் பிடித்து எல்லோரும் வர, இடுப்பிலும் காலிலும் அடியென்றும், இப்போதைக்கு நடக்கவேக் கூடாது என்று மருத்துவரும் கூறிட, தன்னால்தான் இப்படி ஆனதோ என்று அழவே ஆரம்பித்து விட்டார் மதியழகி.
இந்தக் களேபரத்தில் குழந்தை உண்டான ரித்தியும் அவளது மகிழ்ச்சியும், ரேணுகாவைத் தவிர மற்ற யாருக்கும் தெரியாமலேப் போனது.
அன்றிரவு மருத்துவமனைக்கு வந்த விக்ரமிடம் ஒரே அழுகை ஸ்வாதி. என்ன என்று கேட்டும் சொல்லாமல் அழ, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுக்கு ஆறுதல் சொல்லியபடியே இருந்தவனிடம், அடுத்தநாள் வந்த மருத்துவர் அவன் தலையில் ஒரு அனுகுண்டைத் தூக்கிப் போட்டார்.
“என்ன சொல்றீங்க டாக்டர்…?” என அதிர்வில் வந்து விழுந்தன வார்த்தைகள்.
“எஸ் மிஸ்டர் விக்ரம், உங்களுக்கு இது ரொம்பவே ஷாக்கான நியூஸ்தான். பட் நாங்க உங்ககிட்ட சொல்லாம விட முடியாதே…” என்றவர், “உங்க வொய்ஃப்பால இனி குழந்தை பெத்துக்க முடியாது. அவங்களுக்கு ஒரு குழந்தையைத் தாங்கிக்குற அளவுக்கு கர்ப்பப்பை ஸ்ட்ராங்கா இல்லை. வீணா ரிஸ்க் எடுக்க வேண்டாம்.” என்றவர், “தென் மிஸ்டர் விக்ரம், நான் என்ன சொல்ல வர்ரேன்னா கொஞ்ச நாள் நீங்க கவனமா இருக்கணும். அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க, ஃபோர்ஸ் பண்ணாதீங்க. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன், பார்துக்கோங்க.” என்று விட, அதிர்ச்சியும் குழப்பமுமாக அமர்ந்திருந்தான் விக்ரம்.
ஆனால் அப்படியே எத்தனை நேரம் அமர்ந்திருக்க முடியும்? உள்ளே அழுது கொண்டிருந்த மனைவியை சமாதானம் செய்ய வேண்டுமே, இரவெல்லாம் அவள் அழுததற்கு காரணமும் புரிந்தது. சரி, முதலில் அவளை சமாதானம் செய்யலாம் என்று நினைத்தவன், ஸ்வாதியிடம் வந்தான்.
அவனைப் பார்த்ததுமே தன் நாடகத்தை ஆரம்பித்துவிட, “ஒன்னும் இல்லடா… அதுதான் நான் கூடவே இருக்கேனே, பார்த்துக்கலாம் விடு. எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும். நீ மனசையும் உடம்பையும் போட்டு அழுத்தாதே.” என ஆறுதல் சொல்ல,
“அத்தைக்கு உங்க குழந்தையைப் பார்க்க அவ்வளவு ஆசை, அது நடக்கவே நடக்காதுனு தெரிஞ்சா என்ன செய்வாங்க? என்னை உங்கள விட்டு பிரிச்சிடுவாங்களா? நீங்க என்னை விட்டுடுவீங்களா?” என நீலிக் கண்ணீர் வடிக்க,
“ஹேய் என்னப்பா நீ! அதெல்லாம் அம்மா அப்படி இல்லை. கண்டிப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங்க, எனக்காக அம்மா எல்லாத்தையும் பொறுத்துப்பாங்க. இது தெரிஞ்சாதானே பிரச்சனை, நான் சொல்லமாட்டேன். நீயும் சொல்லாத, பார்த்துக்கலாம். நீ டென்சன் ஆகாத.” என ஒருவாறு அவளை சமாதானம் செய்வதற்குள், மூச்சு முட்டிப்போயிருந்தது விக்ரமிற்கு.
அறைக்குள் மதியழகி வர, ஒரு சோர்ந்த நடையுடன் வெளியே சென்றவனைப் பார்த்து, வெற்றிச் சிரிப்பு சிரித்துக் கொண்டாள் ஸ்வாதி. அனைத்துமே அவளது திட்டப்படியே நடந்து கொண்டிருந்தது.
அவளது உடல்நிலையையும் தாயின் பேச்சையும் யோசித்த விக்ரம், அவளை தாய் வீட்டிலே இருக்கட்டும் என்று விட்டான்.
ரேணுகா இது எதையும் கண்டுகொள்ளவில்லை. பிடிக்காத மருமகள்தான், அதற்காக அவளை அப்படியே விட்டுவிட வேண்டும் என யோசிக்கவில்லை. மருத்துவமனையில் சென்று பார்க்கும் போது சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. பேசினாலும் பதில் சொல்லவில்லை. அதில் அவருக்கு மொத்தமாக வெறுத்தே போனது. இவளோடு மகனது வாழ்க்கையை நினைத்து நினைத்து மனம் வெதும்பி போனது அவருக்கு.
இப்படியே நாட்கள் நகர, ரித்திக்கு வளைகாப்பு வைக்கலாம் என்ற பேச்சை ஆரம்பித்தார் ரேணுகா. அவருக்கு மகள் மீதும் மகன் மீதும் கோபம்.
மசக்கை நேரம் வந்து இங்கு இரு என அழைத்தும் ரித்தி வரவில்லை என்பதோடு, ரவி அனுப்பவில்லை. விக்ரமும் வேலை முடித்து நேராக மனைவியிடம் செல்பவன் உறங்க மட்டுமே வீட்டுக்கு வந்திருந்தான். இது எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துதான், வளைகாப்பைப் பற்றி பேசியது. ஆனால் அதுவே எல்லாப் பிரச்சனைக்கும் மூல காரணமாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அன்று ஸ்வாதியைப் பார்க்க வீட்டிற்கே வந்திருந்தான் விக்னேஷ். அப்போது விக்ரமும் அங்குதான் இருந்தான். வந்தவன் ஸ்வாதியிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றுவிட, விக்ரமிற்கு பெரும் யோசனை. அதே யோசனைதான் ரவிக்கும். இருவரும் அதேப் பார்வையுடன் ஸ்வாதியைப் பார்க்க அவளோ, “என் ஃப்ரண்ட் என்னைப் பார்க்க வரக்கூடாதா? உங்களுக்குள்ள சண்டைனா நாங்க பேசக்கூடாதா?” எனக் கேட்க, ஒன்றும் சொல்லவில்லை இருவரும். ஆனால் அன்றிலிருந்து விக்னேஷை கண்காணிக்கத் தொடங்கினர்.
***
1 comment
ச்சீ…! இவை எல்லாம் ஒரு பொண்ணா, என்னைக் கேட்டால் பேய், பிசாசுன்னுத்தான் சொல்லுவேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797