Home Antiheroதளிர்- 43

தளிர் 43

அழுது ஓய்ந்தவளை ஓரளவிற்கு சமாதானம் செய்த விக்ரம், மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, “அந்தப் பொண்ணு யாரு, உனக்கு எப்படி தெரியும்? யார் மூலமா கிடைச்சா? உனக்கு யார் ரெகமண்ட் பண்ணது?” என வரிசையாகக் கேள்விகளை அடுக்க,

சட்டென்று அவனிடமிருந்து பிரிந்தவள், “ஏன்… ஏன்… அவளைப்பத்தி கேட்குற? அப்போ நான் சொன்னது, நினைச்சது எல்லாம் நிஜமா? உனக்கு அவ மேல இன்ட்ரஸ்ட் வந்துடுச்சா?” எனக் கத்தியவளை முதலில் அதிர்ச்சியாகப் பார்த்தவன்,

பின் வந்த கோபத்தை அடக்கி அவளைப் பிடித்து உலுக்கி, “என்ன பேசுற ஸ்வாதி? உனக்கு என்ன பைத்தியமா? நான் என்ன கேட்குறேன், எதுக்கு கேட்குறேன்னு யோசிக்கமாட்டியா? மறுபடியும் போய் எந்தப் பிரச்சனையிலயும் மாட்டிக்கக்கூடாதுனு தான் கேட்குறேன், சொல்லு.” என விக்ரமும் கத்த,

“நோ… நோ… கண்டிப்பா நான் நம்பமாட்டேன். சொல்லவும் மாட்டேன். நான்… நானே என்னோட பிரச்சனையை ஹேன்டில் பண்ணிக்குறேன். அந்தப் பொண்ணை எப்படி கண்டுபிடிக்கிறதுனு எனக்குத் தெரியும்.” என ஆத்திரமாகக் கத்த,

“வாட் த ஹெல்…” என்று ஆரம்பித்தவன், “இவ்வளவு சொல்லியும் நீ திருந்தலைனா நான் ஒன்னும் செய்ய முடியாது.” என விக்ரமும் ஆத்திரமாகக் கத்த,

“என்ன திருந்தணும், நான் ஏன் திருந்தணும்? தப்பு செய்றது எல்லாம் நீங்க. அதையெல்லாம் மறைச்சிட்டு எங்கிட்ட வந்து நீ சண்டை போடுவியா? அப்போ அந்த கமல் சொல்ற மாதிரி நீ அந்த நிசாவைத்தான் லவ் பண்ணிருக்க, உன் தங்கச்சி லைஃப்க்காக என்னை கல்யாணம் பண்ணிருக்க…” என்று முடிக்கும் முன்னே,

“ஏய்…” என மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கியிருந்தான் விக்ரம். அப்போதும் திமிராய் நின்றவளைப் பார்த்து, ஓங்கியக் கையை அங்கிருந்த சுவற்றில் குத்தியிருந்தான் ஆற்றாமையாக.

“பார்த்தியா? பார்த்தியா? நான் அவளைச் சொன்னதும் உனக்கு கோபம் வருது. அப்போ அதுதான் உண்மை போல. அந்த கமல் சொன்னது சரிதான்.” என கத்தியவளைப் பார்த்து ஆயாசமாக வந்தது விக்ரமிற்கு.

“ஸ்வாதி ஏன் இப்படி நடந்துக்குற? நான் சொல்றது நிஜமாவே உனக்குப் புரியலையா? நான் உன்னை லவ் பண்ணலனு சொன்னதுக்காகவும், ரித்திக்காக உன்னை கல்யாணம் பண்ணேன்னு சொன்னதுக்காகவும்தான் இவ்வளவு கோபப்படுறேன். ஆனா நீ…” என ஆற்றாமையாகப் பேச,

“நான் யாரையும் நம்பமாட்டேன். என்னைச் சுத்தி எல்லாருமே நடிச்சிருக்காங்க. நான்தான் நீ மட்டுமே என் உலகம்னு இருந்துருக்கேன். என்னை ஏமாத்த எப்படி மனசு வந்தது? உன்னைத் தவிர என் வாழ்க்கைல யாருமே இல்ல. ஆனா நீ…?” என மீண்டும் தன் நடிப்புடன் கூடிய அழுகையை ஆரம்பிக்க,

“ஸ்வே என்ன நீ…?” என்றவன் தொய்ந்து போய் அமர்ந்துவிட்டான். என்ன சொன்னாலும் நம்பாமல் பேசுபவளிடம் என்ன பேசுவது என்றேத் தெரியவில்லை.

“அந்தக் குழந்தை வேணும், அது உன்னை மாதிரி இருந்தா ஓகே, அவளை மாதிரி இருந்தா என்ன செய்ய? நோ… நோ… எனக்கு அந்த குழந்தை வேண்டாம்.” என ஸ்வாதி விடாமல் திரும்ப திரும்ப இதையே பேசிக் கொண்டிருக்க, அதில் விக்ரமிற்கு கொஞ்சம் பயமே வந்துவிட்டது.

இது அவன் பார்த்த ஸ்வாதி இல்லையே. ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதா? எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி இப்படி ஆகிவிட்டாளா? என்ற எண்ணம் வேறு.

மேலும் எவ்வளவு பெரிய முடிவு. எப்படி யாரையும் கேட்காமல் தானே முடிவெடுத்திருக்கிறாள். அதிலும் இப்போது ஆறு மாதம் என்றால், இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். அப்படி என்றால் எட்டு மாதமாக இந்த செய்தியை நம்மிடமிருந்து மறைத்திருக்கிறாளா?

எப்படி… எப்படி… இவ்வளவு தைரியம் வந்தது? யாரால் வந்தது? அவனால் இன்னுமே நம்பமுடியவில்லை. இயல்பிலேயே கொஞ்சம் தைரியமும் நிறையத் திமிரும் உடையவள்தான் ஸ்வாதி. ஆனால் வீட்டிற்குத் தெரியாமல் இவ்வளவு பெரியக் காரியத்தைச் செய்யும் அளவுக்கு துணிச்சல் எப்படி வந்தது? அவனால் யூகிக்கவே முடியவில்லை.

ஒருவேளை ஸ்வாதி என்கிற நபரைத் தாண்டி யோசித்திருந்தால், அவனால் சரியாக யூகித்திருக்க முடியுமோ என்னவோ?! ஆனால் விக்ரம் அப்படி யோசிச்சதுமில்லை, ஸ்வாதி, விக்ரமை யோசிக்க விட்டதுமில்லை.

இப்போது ஸ்வாதியின் மனநிலைப் புரியாமல், அவளை எப்படி சரி செய்வது என்றுக் குழம்பி போய் அமர்ந்திருந்தான்.

எப்போதும் ஸ்வாதி என்று வந்தால் விக்ரமின் வக்கீல் மூளை ஒரு மூலைக்குச் சென்றுவிடும். இப்போதும் அதுவே நடக்க, விக்ரமின் யோசனையான முகத்தைப் பார்த்து, ‘இவன் யோசித்தாலே பிரச்சனை, யோசிக்கவே விடக்கூடாது.’ என நினைத்த ஸ்வாதி,

“என்ன யோசனை விக்ரம்? எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு, இனி என்னை எப்படி சமாளிக்கிறதுனு தானே யோசிக்குற. நீதான் கிரிமினல் லாயராச்சே… (இதைப் படிக்கும் போது ரீடர்ஸோட மைன்ட் வாய்ஸ் எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்க்குறேன், ஹா… ஹா… உருண்டு பொரண்டு சிரிச்சிங் மீ) என் வொய்ஃப்க்கு மென்டலி ப்ராப்ளம்ஸ், அவளால ஃபேமிலி ரிலேஷன்ஷிப்ல இருக்கமுடியாது.

அதனால டிவோர்ஸ் வேணும்னு கேட்டு லீகலா என்னைப் பிரிஞ்சி, அவளை… அந்த நிசாவை மேரேஜ் பண்ணிக்கலாம்னு நினைப்ப, இல்லைனா ரோட்ல போகும் போது ஒரு ஆக்சிடென்ட் நடக்க வச்சு என்னை கொன்னுட்டு, அவளை லீகலா கொண்டு வந்துடுவ, இதுதானே நடக்கும். இப்படியெல்லாம் நீ நினைப்பனு எனக்குத் தெரியும். நீ யோசிக்கலனாலும் உன் அம்மாவும் தங்கையும் கட்டாயப்படுத்தியாச்சும், அவளை உனக்கு கட்டி வைப்பாங்க.” என ஆத்திரமாகப் பேசியவளை நிதானமாகப் பார்த்தான் விக்ரம்.

“நீ எங்கிட்டதான் பேசிட்டு இருக்க, நான் உனக்கு பதில் சொன்னா போதும். இப்போ எதுக்கு தேவை இல்லாம அம்மாவையும் ரித்தியையும் இழுக்குற? உனக்கு முதல்ல என்ன பிரச்சனை? அத சொல்லு. தேவையில்லாம எத்தனை பிரச்சனையை இழுத்து விட்ருக்க தெரியுமா? அதையெல்லாம் விட்டுட்டு இப்போ ஏன் தேவையில்லாம நிசாவை இழுக்குற? அவ எங்க இருக்கா? என்ன பண்றா? எதுவும் எனக்குத் தெரியாது.

அன்னைக்கு நான் நிசாவுக்கு ஹெல்ப் பண்ணேன்தான். இல்லைனு சொல்லல, அதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமும் இல்ல. ஆனா அந்த இடத்துல யார் இருந்திருந்தாலும், லுக்! யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்திருப்பேன். அதோட இன்னொரு காரணம், என்னாலதான் அவ லைஃப் ஸ்பாயில் ஆச்சு. அதனாலதான் நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணேன். இவ்வளவுதான் எனக்கும் அவளுக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப்.

அதை விட்டுட்டு நீயா எதையாச்சும் யோசிச்சிட்டு இருந்தா, உன் கற்பனைக் குதிரைக்கு நான் பொறுப்பாக முடியாது.” என்றவன்,

அவள் பேச வருவதைப் பொருட்படுத்தாமல், “இதுவரைக்கும் நாம ஒரு நார்மல் லைஃப் லீட் பண்ணல. அப்படி பண்ணியிருந்தா உனக்கு இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. நீயெல்லாம் சொல்லி திருந்துற ஆளே இல்ல, பட்டு திருந்துற ஆள். நாளைக்கு நீ எந்தப் பிரச்சனையில இருந்தாலும் நான்தான் வந்து நிக்கணும். அதை மனசுல வச்சிட்டு யோசி.” என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் அந்த அறையில் இருந்து அகன்ற பிறகே ஸ்வாதிக்கு மூச்சு சீரானது, “ஷப்பா…” என்றவள், ‘இந்த கமல் எங்க போய் எப்படி இவங்கிட்ட சிக்கினானோ தெரிலயே? இனி இதையும் வேற மெயின்டன் பண்ணணும். ஷிட்… சீக்கிரம் இதுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்றேன்.’ என மனதுக்குள் நினைத்தவள் கமலுக்கு அழைத்து,

“கமல் இனி விக்ரம் உன்னை அவனோட சர்வைலன்ஸ்க்கு கொண்டு வந்துடுவான். நீ எந்த காரணத்தைக் கொண்டும் என்னையவோ, இல்லை விக்கி இருக்குற ஹாஸ்பிட்டலையோ கான்டாக்ட் பண்ணாத. முக்கியமா அந்த நிசப்தியை பழிவாங்குறேன்னு போய் நிக்காத. கண்டிப்பா மாட்டிக்குவ, நானே உன்னை சீக்கிரம் கூப்பிடுறேன்.” என்று வைத்துவிட்டு, அடுத்தக்கட்ட வேலைகளை அவசரமாக ஆரம்பித்தாள்.

***

இங்கோ நிசப்தியின் உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள், ஹார்மோனின் ஏற்ற இறக்கத்தால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தாள். வேனுகோபாலின் உடல்நிலையும் நாளுக்கு நாள் பின்னடைவே ஏற்பட, மொத்தமாக உடைந்து போனாள்.

அடுத்து என்ன செய்வது என்ற யோசனையோடு, பின்கட்டில் இருந்த குளக்கரையில் அமர்ந்திருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தார் அந்த வீட்டின் பெண்மணி.

“ஏன்டாம்மா இங்க வந்து உட்கார்ந்திருக்க? இந்த கோகிலா பொண்ணு ஊருக்குப் போனவ எப்போ வராளாம்? உனக்கும் இந்த மாசம் செக்கப் இருக்கே, அந்த டாக்டர் கூடவே வருவாளா?” எனவும்,

“ம்ஹூம்… எனக்கு தெரில பொன்னும்மா. என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியல. யாரையும் கேட்காம ஒரு முடிவு எடுத்து தப்பு பண்ணிட்டேன் போல. அப்போ சரியா இருந்தது, இப்போ எல்லாம் தப்பா இருக்கு.” எனக் கலங்கியக் குரலில் பேச,

“விடு மோளே, அல்லாம் சரியாகும்.” என்றவரின் ஆறுதல் அவளிடம் எடுபடவில்லை. கடந்த சிலநாட்களாக இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறாள். இந்த முடிவை எடுக்கும் போது தனக்கென ஒரு வாழ்க்கை இனி இல்லை என்று உணர்ந்துதான் எடுத்தாள். தந்தை தன்னுடன் இருப்பார் என்ற எண்ணம்தான் ஸ்வாதியை நம்பி தன் வாழ்க்கையைப் பணயம் வைக்கக் காரணம்.

ஆனால் அதுவே இன்று ஆட்டம் கண்டது ஸ்வாதியின் நடவடிக்கையில். இப்போது யாரிடம் சென்று நிற்பது என்று கூடத் தெரியவில்லை. இந்த முறை ஸ்வாதி வந்ததும் எப்படியாவது பேசி சென்னைக்கோ, திருச்சிக்கோ சென்றுவிட வேண்டும் என்று மட்டும் உறுதியாக நினைத்திருந்தாள்.

ஆனால் ஸ்வாதி மட்டுமல்ல, அவள் சம்மந்தப்பட்ட யாருமே இனி நிசப்தியைத் தொடர்பு கொள்ளப் போவதில்லை என்பதை, அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.

காலம் மிகவும் விரைவாக ஓடி மறைந்தது. நிசப்திக்கு அப்போது எட்டாம் மாதம் தொடக்கம். கடந்து போன இரண்டு மாதங்களும் அவளுக்கான மாதாந்திர செக்கப் எதற்கும் ஸ்வாதியும், அவரது மருத்துவரும் அவளைத் தொடர்பு கொள்ளவே இல்லை.

முக்கிய வேலைகளாக இருக்கலாம் என்று நினைத்தாள். ஏனென்றால் இந்தக் குழந்தைக்காக ஸ்வாதி எவ்வளவு முயற்சிகளையும், ரிஸ்க்கையும் எடுத்தாள் என்று அவளுக்குத் தெரியுமே. அதனால் நிசப்தி தப்பாக எதையும் யூகிக்கவில்லை.

அப்படியே முதல் மாதம் கடக்க, அடுத்த மாதமும் அதுவே தொடரவும்தான், அதோடு குழந்தையின் துடிப்புகளும் அதிகமாக, இனி தாமதிக்க வேண்டாம் என்று நினைத்தவள், உள்ளூரிலேயே இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு தன்னுடன் துணைக்கு என இருந்த பொன்னும்மாவோடு சென்று வந்தாள்.

அங்கு சென்று வந்ததில் இருந்து அவளது குழப்பம் மேலும் அதிகமானது. மருத்துவர் அவளைப் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கியிருக்க, மனமும் உடலும் சோர்ந்து போய் வீடு வந்திருந்தாள்.

இதை ஸ்வாதிக்குத் தெரிவிக்க வேண்டும் என நிசப்தி தொடர்பு கொண்ட, அனைத்து எண்களும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வர, உள்ளுக்குள் பெருமளவு பயமும் தொற்றிக் கொண்டது. அவளது தைரியமும் தன்னம்பிக்கையும், இப்போது எங்கோ ஓர் மூலையில் போய் அமர்ந்துகொண்டது.

இப்படியான சிந்தனையில் இருந்தவளை, “கண்ணும்மா, இன்னும் நீ பொறுமையா இருக்குறது நல்லதில்ல. அப்பாவுக்காகனு பார்த்தது எல்லாம் போதும். பிறந்தவங்க எல்லாம் ஒருநாள் இறக்கத்தான் போறாங்க. அதுதான் மனித நியதி. கடவுளோட நியதியும் அதுதான். நீ இப்படி செஞ்சது உன் அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சா, அவர் நிம்மதியா இருப்பாரா சொல்லு? உன்னை முதல்ல மன்னிப்பாரா யோசி. உனக்கு இப்படி ஒரு கஷ்டத்தைக் கொடுக்குறதுக்கு பதிலா என் உயிர் போயிடுறதே நல்லதுனு தானே நினைப்பார். இதுதான் பெத்தவங்களோட மனநிலை. அது தப்புனு சொல்ல முடியாது.” என்றதும் நிசப்தியின் விழிகள் கலங்கிச் சிவந்தது.

‘அப்பா நன்றாக இருந்திருந்தால், தனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கவே செய்யாதே, ஏன் இந்த கடவுள் எனக்கு மட்டும் சோதனைகளையும் வேதனைகளையும் மட்டுமே பரிசாக கொடுக்கிறார். அவர் இல்லாமல் இந்த வாழ்க்கையில் நான் என்னவாகப் போகிறேன்?’ இதுதான் சமீப நாட்களாக நிசப்தியின் உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது.

போதாதற்கு இப்போது குழந்தை வேறு. இனியும் ஸ்வாதி வந்து குழந்தையை வாங்கிக்கொள்வாள் என்றுத் தோன்றவில்லை. அந்த நம்பிக்கை இப்போது சுத்தமாகப் போயிருந்தது.

மீண்டும் யோசனைக்குப் போனவளிடம், “போனது எல்லாம் போகட்டும், இனியும் நாம சும்மா இருக்க முடியாது. ஊருக்குப் போய் அங்க என்ன நடக்குது, என்னனு பார்த்து விசாரிக்கலாம். உனக்கு முழு பொறுப்பும் அவங்கதான். அப்படி இருக்கும் போது ஏன் உன்னை பார்க்க வரல. இதெல்லாம் எந்த வகையிலும் சரியில்ல.” என்றவரிடம்,

“நான் எப்படி, அதுவும் அப்பாவை விட்டுட்டு…” எனத் தயங்கியவளிடம்,

“சரி வேண்டாம், உன்னைத் தனியா விட்டுட்டு நானும் போக முடியாது. என் வீட்டுக்காரரை அனுப்பலாம். போய் விசாரிச்சிட்டு வரட்டும். அங்க என்ன நிலவரம் என்பதைப் பொறுத்து அடுத்து யோசிக்கலாம்.” என்ற பொன்னம்மாவிடம் மௌனமாகத் தலையசைத்துவிட்டு தந்தையின் அறைக்குள் நுழைய, அங்கு அவருக்கு இதயத் துடிப்பைக் காட்டும் அந்த கருவி துடிப்பை நிறுத்தி வெகுநேரமாகியிருந்தது.

***

You may also like

1 comment

M. Sarathi Rio March 27, 2026 - 2:41 pm

எனக்கு இப்ப இந்த ஸ்வாதியை ஏதாவது பண்ணனும், அவளை யாராவது தனியா எங்க தெருப்பக்கம் கூட்டிட்டு வாங்களேன் ப்ளீஸ்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured