Home Antiheroதளிர் – 45

தளிர் 45

முடிந்தது… அனைத்தும் முடிந்தது. முடிந்து முழுவாரமே கடந்திருந்தது. யாரும் யாருமே எதிர்பார்க்காத ஒரு மோசமான நிகழ்வு. ஸ்வாதி இப்படி செய்து கொள்வாள் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவளுக்கான அத்தியாயங்கள் முடிந்துவிட்டது என யாராலும் இப்போதும் நம்பமுடியவில்லை. குடும்பத்தினர் மொத்தமாய் உடைந்து போயிருந்தனர். அதிலும் விக்ரம் அவள் இல்லாததை ஏற்றுக்கொள்ளவே முடியாமல் திணறித்தான் போனான்.

வீட்டில் ரித்தியுடன் நடந்த ஒரு சின்ன வாய் தகராறு, அதில் வழக்கம்போல காரை எடுத்துக்கொண்டு போனவள்தான், திரும்பி அவர்கள் கைகளில் அடையாளம் தெரியாத ஒரு சடலமாகத்தான் கிடைத்தாள்.

சமீப நாட்களாக வீட்டில், ரித்தியுடனும் விக்ரமிடமும் நினைத்த நேரம் தேவையில்லாத சண்டைகள். எது பேச ஆரம்பித்தாலும் வாக்குவாதத்திலும் சண்டையிலும்தான் போய் முடிந்தது.

அதிலும் விக்ரம் அந்த குழந்தையைப் பற்றியோ, நிசாவைப்பற்றியோ பேச ஆரம்பித்தாலே கையில் கிடைப்பதை எல்லாம் தூக்கி எறிய ஆரம்பித்துவிட்டு நேரம், காலம் பார்க்காமல் காரை எடுத்துக்கொண்டு சுத்த ஆரம்பித்துவிடுவாள். யார் சொல்லியும் கேட்பதில்லை. அதோடு இரவுநேர ரோந்து பணியில் இருக்கும் காவலர்களுடனும் வம்பிழுத்து, பிரச்சனைகளை உண்டாக்கி காவல் நிலையம் வரை செல்ல, விக்ரம்தான் போய் கேஸ் இல்லாமல் பேசி அழைத்து வருவான்.

நாளுக்கு நாள் அவளது தொல்லைகளும் பிரச்சனைகளும் அதிகமாக, பொறுத்துப் பார்த்த விக்ரமும் அவளைக் கண்டுகொள்ளாமல் விட, அது ஸ்வாதிக்கு மேலும் வசதியாகிப் போய்விட, இதற்குத்தானே ஆசைப்பட்டேன் என்பது போல அவளுக்கான வேலைகளில் இறங்கிவிட்டாள்.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே தனக்கான வேலைகள் அனைத்தையும் முடித்துக்கொண்ட ஒரு சாமர்த்தியசாலி அவள். இந்த இடைப்பட்ட நாட்களில் கமலுடனான சந்திப்பை நிறுத்தியிருந்தாலும், அவர்களது திட்டம் மட்டும் எந்த தொய்வும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில் நிசப்தியிடம் இருந்த கோகிலாவை சென்னை வரவைத்து, மருத்துவருடன் சேர்ந்து மிரட்டி அவளை ஊரைவிட்டே அகற்றியிருந்தாள். அதோடு மருத்துவருக்கும் அவளுக்கும் இருந்த தொடர்பை, பணத்தைக் கொடுத்து முடிவுக்கும் கொண்டு வந்திருந்தாள்.

நிசப்தியைப் பழிவாங்க என செய்த செயல்கள் அனைத்தும் வெற்றிதான். அடுத்து அவள் சுதாரித்து எழவே வருடக் கணக்குகள் ஆகும். அதற்குள் விக்கி குணமடைந்து தங்கள் வாழ்க்கை மிகவும் சுமூகமாக சென்றுவிடும் எனப் பலத்திட்டங்கள். அதுவெல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

தன் காரில் ஏற்கனவே இறந்து போன ஒரு பெண்ணை வைத்து, தன் அடையாளங்களான உடை மற்றும் நகைகளைப் போட்டு கமலுடன் சேர்ந்துதான், அந்த ஆக்சிடென்ட் ப்ளானையும் நடத்தியிருந்தாள்.

“கமல் இந்த பொண்ணுக்கு பதிலா அந்த நிசப்தி என் கார்ல இருந்திருந்தா இன்னும் சந்தோசப்பட்டிருப்பேன்.” எனக் குரூரமாகச் சொல்ல,

“ம்ச் ஸ்வே, இப்பவும் அவ செத்த பிணத்துக்கு சமம் தானே. அவளை எங்கேயும் திரும்ப முடியாம, எதையும் யோசிக்க விடாம செஞ்சாச்சுல்ல, அதுவே போதும்.” என கமலும் கூற,

“ம்ம்… அவ அழணும், இந்த வாழ்க்கை முழுசும் அழணும். ஏன்டா என் விக்கியைப் பார்த்தோம்னு அழணும்.” என வெறியாகச் சொல்ல,

“அவங்கப்பனும் போயிட்டான் போல, ஸ்பை இன்ஃபார்ம் பண்ணான். அவனை அங்கிருந்து கிளம்ப சொல்லிட்டேன். இனி நாதியில்லாத நாய் மாதிரி தெருவுலதான் நிக்கப் போறா. என்ன அதைப் பார்க்கத்தான் நாம இங்க இருக்கமாட்டோம்.” என கமலும் பதில் சொல்ல,

“ஹான்! என் விக்கியை எங்கிட்ட இருந்து பிரிச்சு, அவனை இந்த நிலமைக்கு கொண்டு வந்தவளை இதோட விட எனக்கு மனசு இல்லதான். ஆனா இப்போ நமக்கு அந்த நிசாவை விட, விக்கிதான் முக்கியம். அவனைப் பார்க்கலாம், எப்படியும் இனி அவளால எதுவும் செஞ்சிட முடியாது. அப்படியே இங்கே வந்தாலும், விக்ரம் கண்டிப்பா அவளை நம்பமாட்டான். சோ, நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல.” என முடித்த ஸ்வாதியும் கமலும், அன்றே விக்னேஷோடு லண்டன் பறந்திருந்தனர்.

மனைவி என்று எந்த ஒரு உரிமையும் அவள் விக்ரமிற்கு கொடுத்ததில்லை. அவனும் அவளிடம் அப்படியான எண்ணங்களுடன் நடந்து கொண்டதுமில்லை. ஆனால் அவளை, அவளை மட்டுமே நேசித்தான். அவளுக்கு சில குழப்பங்கள் அதைத் தாண்டி தன்னிடம் வருவாள் என்ற நம்பிக்கையில்தான், ஸ்வாதியை விட்டிருந்தான். ஆனால் அவளோ மொத்தமாக அவனைத் தவிக்கவிட்டு போவாள் என்று நினைத்திருக்கவில்லை.

சூனியங்களாய் நாட்கள் கரைந்து காணாமல் போய் கொண்டிருந்தது. கணவனையும் மாமியாரையும் ஆறுதல்படுத்தவே ரித்திக்கு நேரம் போதவில்லை. எந்த நேரமும் அழுகையுடன் காணப்படும் மதியழகி. உணவும் உறக்கமும் இல்லாமல் தங்கையை கவனிக்காமல் விட்டுவிட்ட குற்றவுணர்ச்சியுடன் அறைக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் ரவி. ஒரு மனைவி என்ன செய்கிறாள், எங்கு செல்கிறாள் என்று தெரியாமல், தன் வேலையை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த, தன் முட்டாள்தனத்தையும் திமிரையும் அறவே வெறுத்தான் விக்ரம்.

யார் என்ன சொன்னாலும் தன்னைச்சுற்றி என்ன நடந்தாலும், அதைப்பற்றிய கவலையே எனக்கு இல்லை என்று, மொத்தமாக ஸ்வாதிதாசனாக மாறிப்போன விக்ரம் என இவர்கள் மூவரையும், சமாளிக்க முடியாமல் திண்டாடிப் போனார்கள் ரித்தியும் ரேணுகாவும்.

ஸ்வாதி இறந்துவிட்டதாக எல்லோரும் நினைத்து வருந்திக் கொண்டிருந்த பதினான்காம் நாள், நரேனோடு விக்ரம் வீட்டின் வாசலில் நின்றாள் நிசப்தி.

எண்ணெய் வைக்காமல் மொத்தமாய் அள்ளிக் கட்டியிருந்த கொண்டையும், ஏனோதானோவென்ற ஒரு உடையும், உடல் மெலிந்து, கண்களெல்லாம் உள்ளே சென்று, கண்ணைச் சுற்றி கருவளையம் வந்து, சிரிக்கவேத் தெரியாதது போலொரு முகம்.

அவளைப் பார்த்ததுமே ரித்திக்கு ஏதேதோ எண்ணங்கள் தோன்ற, சட்டென்று திரும்பி தன் மாமியாரைத்தான் பார்த்தாள். அவரோ இது எதையும் கவனிக்காமல், ஸ்வாதியின் போட்டோவை கையில் வைத்து அழுது கொண்டிருந்தார்.

“நிசா… நிசா நீதானா? என்ன… என்ன இப்படி இருக்க? முதல்ல உள்ள வா.” தன் எண்ணத்தை ஒதுக்கி, முதலில் சுதாரித்து நிசப்தியை உள்ளே அழைத்து வந்தாள்.

ரவியும் விக்ரமும் அறையில் இருக்க, பெண்களாகத்தான் வரவேற்பறையில் இருந்தனர்.

அவளை அப்படியொரு கோலத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை என்று, அங்கிருந்த அனைவரின் அதிர்ந்த முகமும் சொல்லாமல் சொன்னது. அதிலும் மதியழகியின் முகத்தில் கூடுதல் அதிர்வு, பதட்டம்.

தங்கையோடு உள்ளே வந்த நரேன் அவர்களைப் பார்க்க, ரேணுகாவின் முகத்தில் குழப்பம். மதியழகியின் முகத்தில் கோபமும் எரிச்சலும். ரித்தி உள்ளே சென்று ரவியை அழைத்து வந்தாள்.

அவனும் வந்தவர்களைப் பார்க்க நரேன், நிசப்தியைப் பார்த்தான். அவள் எதுவும் பேசப்போவதில்லை என்பதை உணர்ந்த நரேன், ஒரு பெருமூச்சோடு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “சாரி சீனியர்…” என நடந்த அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டான்.

ஸ்வாதியின் மற்றொரு பக்கம் நரேனால் வாசிக்கப்பட, அதை நம்பத்தான் யாராலும் முடியவில்லை. எல்லோரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர். ஸ்வாதி இறந்ததைப்பற்றி விசாரிக்க வந்திருக்கிறார்கள் என்றுதான், அங்கு எல்லோரும் நினைத்திருக்க, நரேன் சொன்னதை ஏற்கவே முடியாமல் தவித்தனர்.

முதலில் சுதாரித்த மதியோ, “ஏய் என் பொண்ணு இல்லனு தெரிஞ்சிக்கிட்டு வந்து இப்போ நாடகம் போடுறியா? என் பொண்ணைப்பத்தி பேச உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? எங்கையோ போய் யாருக்கிட்டயோ கெட்டுப்போய்ட்டு, அதை மறைக்க என் பொண்ணைக் காரணம் காட்டுவியா? நீயெல்லாம் என்ன பொண்ணு? ச்சீ…” என நிசப்தியைப் பார்த்து அகங்காரமாகக் கத்த,

“போதும் நிறுத்துங்க, யாருக்கிட்ட வந்து யாரைப் பேசுறீங்க? என் தங்கச்சியைப் பத்தி பேச இங்க யாருக்கும் தகுதி இல்ல. என்னனு விசாரிக்கலாம்னு நானும் அமைதியா இருந்தா, என்ன வேணும்னாலும் பேசுவீங்களா?” என நரேனும் பதிலுக்கு கத்த,

“போதும் நிறுத்து நரேன். இதுக்கு மேல பேசினா உனக்கு மரியாதை இருக்காது, கிளம்பு.” என வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து ரவி பேச,

“சீனியர் ப்ளீஸ்… தப்புதான், நான் குரல் உயர்த்தி பேசியிருக்கக்கூடாது சாரி. என்னை மன்னிச்சிடுங்க, எனக்கு எதாச்சும் பனிஸ்மென்ட் கொடுத்தாலும் சரி, ஆனா என்ன நடந்ததுனு கொஞ்சம் விசாரிங்களேன். இங்க வீட்டுல யாருக்கும் தெரியாம இருக்காது ப்ளீஸ் சீனியர்.” என நரேன் கெஞ்ச,

“என்ன விசாரிக்க? யாரை விசாரிக்க? நாங்களே எங்க பொண்ணு போய்டாளேனு கவலைல இருக்கும் போது, இவளைக் கூப்பிட்டு வந்து நின்னா நாங்க நம்பணுமா? இவ்வளவு நாள் இல்லாம இப்போ ஏன் திடீர்னு வந்து நிக்கிற? அப்போ என் பொண்ணு இல்லனு தெரிஞ்சிதான் வந்தியா? இல்ல, நீதான் என் பொண்ணைக் கொன்னியா? சொல்லுடா, சொல்லு.” என நரேனின் சட்டையைப் பிடித்துக் கத்த,

இவர்களின் சத்தத்தில் வெளியில் வந்த விக்ரம் பார்வையில் பட்டது, எதையுமே கவனத்தில் கொள்ளாமல் தொலைதூரத்தில் பதிந்த பார்வையுடன் அமர்ந்திருந்த நிசப்திதான். ‘இவள் ஏன் இங்கு? அதிலும் இப்படி? இத்தனை நாள் எங்கு போனாள்? ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்ற யோசனையுடன் வந்தவன், தன் மாமியாரின் பிடியில் இருந்து நரேனைப் பிரித்து விட்டு,

“என்னாச்சு?” என்றான்.

“அது ஒன்னுமில்ல விக்கி, நான் பார்த்துக்குறேன். நீ ரெஸ்ட் எடு.” என ரவி ஆளுக்கு முதலாய் சொல்ல,

“என்னாச்சுனு கேட்டேன்.” என்ற பார்வை நிசப்தியைத் தொட்டு, ரித்தியிடம் சென்றது. தங்கையின் பார்வையில் தெரிந்த பயமும் கோபமும் அவனை நிதானிக்க வைக்க, “சொல்லு நரேன் என்னாச்சு?” என, இப்போது நரேனைப் பார்த்து மீண்டும் அழுத்தமாகக் கேட்டான்.

“சீனியர் அது…” என்றவன் பின் ஒரே மூச்சாக அனைத்தையும் சொல்லி முடிக்கவும், எதிரில் இருந்த டீப்பாயை விக்ரம் காலில் உதைத்து தள்ளவும் சரியாக இருந்தது.

“சீனியர்… விக்கி… ராஜா… ண்ணா…” என அங்கிருந்தவர்களின் பதட்டமானக் குரலை, சட்டை செய்யாமல் நேரே நிசாவிடம் சென்றவன், அவளை இழுத்துக்கொண்டு வெளியில் நடந்தான்.

அதுவரை அங்கு நடந்த அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ரேணுகா, மகனின் செய்கையில் அவனிடம் வந்தவர், நிசாவைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு அவனை ஓங்கி அறைந்திருந்தார்.

“ம்மா…” என்றவனை நேராகப் பார்த்தவர், “என்ன செய்திட்டு இருக்க நீ? உன்னோட திமிரையும் கோபத்தையும் காட்ட அவ ஆள் இல்ல.” என கோபமாகச் சொல்ல,

“அப்போ என்ன சொல்ல வரீங்க? என் பொண்ணு தப்பா?” என மீண்டும் மதி பேச வர,

“எனக்கு அதைப்பத்தி எந்த எண்ணமும் இல்ல மதி. ஆனா நிசாவை இப்படி பேசுறது ரொம்ப தப்பு. முதல்ல என்ன ஏதுனு விசாரிச்சு, அதுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வரலாம். அவசரம் வேண்டாம். ரித்தி, நிசாவுக்கு சூடா பால் கொண்டு வா.” என,

“என்ன பேசிட்டு இருக்கீங்க அண்ணி? என் பொண்ணு இல்லாம போய் முழுசா ஒரு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள உங்க பையனை புதுமாப்பிள்ளை ஆக்குறீங்களா? அப்பவே என் பொண்ணு சொன்னா, உங்களுக்கு அவளைப் பிடிக்கல, குழந்தை வேணும்னு டார்ச்சர் பன்றீங்கனு சொன்னா. நான்தான் அப்படியெல்லாம் இருக்காது, அத்தை ரொம்ப நல்லவங்க, அப்படியெல்லாம் யோசிக்கக்கூட மாட்டாங்கனு சொன்னேன். ஆனா இப்போ தோனுது, நீங்க பேசிப்பேசி டார்ச்சர் செஞ்சிதான் என் பொண்ணு மொத்தமா போயிட்டா போல.” என,

“ம்மா, நீ கொஞ்சம் சும்மா இரு. நான் பேசுறேன்.” என மதியின் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக, இறுகிப் போன ரேணுகாவைப் பார்த்துக்கொண்டே தன் தாயை அடக்கினான் ரவி.

அவனுக்குத்தான் தெரியுமே, அவர் ஒருநாள் கூட இப்படியெல்லாம் தன் தங்கையிடம் பேசியதில்லை என்று. அதோடு ஸ்வாதி எப்போது அந்த வீட்டில் மாமியாருடன் தங்கியிருந்தாள் ரேணுகா பேசி சண்டையிட? அவருக்கு எப்போதும் விக்கியின் நிம்மதி முக்கியம், அதற்காகவே ஸ்வாதியிடம் அனுசரித்து போய்விடுவார். அதை நினைத்துக் கொண்டே தாயை அடக்க,

அவரோ அடங்குவேனா பார் என்பது போல, “ஹ்ம்ம்… ஏன்… ஏன் பேசக்கூடாது? உனக்குத்தான் தங்கச்சி மேலப் பாசம் இல்ல, அவருக்கு பொண்டாட்டி மேல உரிமை இல்ல. இவங்களுக்கு வீட்டுக்கு வந்த மருமக மேல அக்கறை இல்ல, எனக்கும் அப்படியேவா இருக்கணும்? நான் பத்து மாசம் சுமந்து பெத்த என் பொண்ணு, அவளை பெத்த இந்த வயிறு பத்தி எரியிறது உங்களுக்கு எங்க தெரியும்?” என ஆக்ரோசமாகக் கத்த, ‘ச்சீ…’ என்றானது நரேனுக்கும் ரித்திக்கும்.

நரேனுக்கு எப்போதும் நிசாதான் முக்கியம். அது ரித்திக்குப் புரிந்த பிறகுதான் அவர்களது பிரிவு. அவளால் நிசாவை நரேனுக்கு முக்கியமானவளாகப் பார்க்க முடியவில்லை, அதனால் அவளைப் பிடிக்காமல் போனதுதான். ஆனால் அதற்காக நிசா கஷ்டப்பட வேண்டும் என்றெல்லாம் ஒருநாளும் நினைத்ததில்லை. இப்போது அவளது இந்த வெறித்த தோற்றம், தனக்குள் எதையோ அசைத்தது. தானும் இதற்கு ஒரு காரணம் என்பதை அவளால் மறுக்க முடியாதே.

இந்த ஸ்வாதியின் பேச்சைக் கேட்ட தன் புத்தியை என்ன செய்ய? போனது போகட்டும், இனியாவது இவளுக்குத் தன்னால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைக்க, இந்த அத்தை ஏன் இப்படி பேசுகிறார் என எரிச்சலாக நினைத்தாள்.

அப்போது, “போதும் நிறுத்துங்க.” என மதியை விட சத்தமாய் கத்தினான் விக்ரம். அந்த சத்தத்தில் நிசப்தியின் உடல் தூக்கிப்போட, கையும் காலும் ஒரு பக்கமாய் இழுக்க, அமர்ந்திருந்த சோபாவில் அப்படியே மயங்கி சரிந்தாள்.

பேச்சு இங்கு நடந்தாலும், நிசப்தியின் மேல் ஒரு கண்ணை வைத்திருந்த நரேனும் ரேணுகாவும் வேகமாக அவளிடம் ஓடினர்.

“ரித்தி தண்ணி கொண்டுவா, ரவி டாக்டருக்கு போன் பண்ணு, நரேன் அவளை அப்படியேத் தூக்கு.” என ஆளுக்கொரு வேலையைக் கொடுத்துக் கொண்டே தன் அறை நோக்கி ஓடினார் ரேணுகா.

அதற்குள் அருகில் சென்ற ரித்தி, அவள் கைகளை இறுக்கிப் பிடித்து சாவிக் கொத்தைக் கொடுக்க, நரேன் அப்படியே அவளைத் தூக்கிக் கொண்டான்.

இதையெல்லாம் பார்த்த விக்ரம், “ம்மா போதும்… இந்த நாடகத்தை எல்லாம் என்னால பார்க்க முடியல நிறுத்துங்க.” என இறுகிப் போனக் குரலில் கட்டளையாய் சொல்ல, தன் மகனை அதிர்ந்து பார்த்தார் ரேணுகா.

“அவ இனி ஒரு செகன்ட் கூட இந்த வீட்டுல இருக்கக்கூடாது, தூக்கிட்டு கிளம்பு. இனி அவளுக்கும் இந்த வீட்டுல இருக்குற யாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படியே அவ சொன்னமாதிரி ஸ்வாதியாலத்தான் இந்த நிலமைன்னா, அதுக்கான செட்டில்மென்ட் என்னனு கேட்டு சொல்லிடு பண்ணிடலாம். குழந்தைப் பிறந்ததும் சொல்லி அனுப்புங்க, வந்து எடுத்துக்குறேன்.” என அதே குரலில் சொன்னவனை வெறித்துப் பார்த்த நரேன்,

தங்கையின் கைகளைப் பிடித்திருந்த ரித்தியின் கைகளைத் தட்டிவிட்டவன், தன் கையில் இருந்தவளைத் தூக்கிக்கொண்டு வெளியில் நடந்தான்.

“விக்ரம்…” என ரவியும் ரேணுகாவும் ஒன்றாக கத்த,

“போதும்… இனியும் நான் யாருக்காகவும் இறங்கி வரப்போறது இல்ல. அவ உண்மையே சொன்னாலும் எனக்குத் தேவையே இல்ல. ஏன் என் ஸ்வாதியே வந்து சொன்னாலும் நான் நம்பமாட்டேன். இனி அவ இந்த வீட்டுக்கு வரக்கூடாது, அப்படி வந்தா…” என நிறுத்த,

“ச்சீ… நீயெல்லாம் ஒரு மகனா? இல்ல, ஒரு மனுசனா இருக்கக்கூட தகுதியில்லாத ஆள். உன்னையும் இந்த வயித்துலதான் சுமந்தேன்னு நினைக்கும் போது, எனக்கே அசிங்கமா இருக்கு.” என்று மகனைப் பார்த்துச் சொல்லிவிட்டு நரேனுக்குப் பின்னே நடந்துவிட்டார் ரேணுகா.

மனைவியிடம் ஒரு கண்ணைக் காட்டிய ரவியும் அவருக்குப் பின்னால் நடக்க, “நீ எங்கேயும் போகக்கூடாது ரவி. அப்படி போனா திரும்பி வந்து பார்க்கும் போது நான் இருக்கமாட்டேன். என் பொண்ணு போன இடத்துக்கே நானும் போய்டுவேன்.” என மகனின் கையைப் பிடித்துக் கத்திய தாயை அதிருப்தியாய் பார்த்தான் ரவி.

நிசா வந்ததில் இருந்து தன் மாமியாரையேக் கவனித்துக் கொண்டிருந்த ரித்திக்கு, இவருக்கு நிச்சயம் ஸ்வாதி பற்றி ஏதோ தெரிந்திருக்கிறது. அதை மறைக்கவே இப்படி ஓவர் எமோஷ்னல் ஆகிறார் எனப் புரிந்துகொண்டாள். அதைப்பற்றிக் கணவனிடம் பேச வேண்டும் என்றும் நினைத்தவள், அறைக்கதவு அடைக்கும் சத்தத்தில் நிமிர, மதியழகிதான் தன் அறைக்கதவை அப்படி அடைத்திருந்தார்.

***

You may also like

1 comment

M Sarathi Tio March 31, 2026 - 5:43 pm

போடா.. போடா.. பொண்டாட்டி தாசா…!

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M Sarathi Tio Cancel Reply

About Me

Featured