தளிர் 46
தனக்கு முன்னே அமர்ந்திருந்த இருவரையும் கட்டுப்படுத்தியக் கோபத்துடன் பார்த்திருந்தார் மருத்துவர் நாகேஷ், அருகில் அவரின் மனைவி சுபா.
“அண்ணா…” என்ற ரேணுகாவைப் போதும் நிறுத்து என்று செய்கையில் காட்டியவர், “நாங்க எல்லாம் இருக்கோம்னு உனக்கு இப்போதான் தெரியுதா? எத்தனை தடவை உனக்கு சொல்லிருப்பேன், அந்த பொண்ணு ஸ்வாதி சரியில்லன்னு… கேட்டியா? இப்போ வந்து குத்துதே குடையுதேன்னா…” என்றதும்,
“சும்மா இருங்க நான் பேசுறேன்.” என அவரை அடக்கிய சுபா, “அண்ணி என்ன செய்யலாம்? சொல்லுங்க.” என ரேணுகாவைப் பார்த்தார்.
“எந்தப் பிரச்சனையும் இல்லாம ரெண்டு பேரும் எனக்கு உயிரோட வேணும் அண்ணி.” என்றார் ரேணுகா.
“அண்ணி அது என்னால முடியும். ஆனா லீகல் ஃபார்மாலிடிஸ் நெறைய இருக்கு, அதுதான் இப்போ ப்ராப்ளம்.” எனக் கணவரைப் பார்க்க,
“உங்களால முடியும் மேம், ப்ளீஸ் சார். விக்ரம் சாரை நீங்க பார்க்காதீங்க. அம்மாவுக்காக, உள்ள இருக்க நிசாவுக்காக பாருங்க சார். பணம் பிரச்சினையில்லை.” என்ற நரேனை யோசனையாகப் பார்த்தார்கள் இருவரும்.
“நிசாவோட அண்ணா.” என்ற ரேணுகாவிடம்,
“உன் பையன் செஞ்சி வச்ச வேலைக்கு…” எனப் பல்லைக் கடித்த நாகேஷ், “அதுதான் அவ போய் சேர்ந்துட்டாளே, மொத்த குடும்பத்தையும் சீரழிச்சிட்டு. இனியாச்சும் இந்த பொண்ணை கட்டிட்டு நிம்மதியா இருக்க வேண்டியதுதானே?” என்றவர், “உன் பையன் என்னைக்கு யாரையும் மதிச்சிருக்கான், இப்போ நான் சொல்றதைக் கேட்க? என்னால் என்ன முடியுமோ அதை பெட்டரா செஞ்சி தரேன் ரேணு. அதுக்கு மேல அவன் இஷ்டம். அந்த பொண்ணைப்பத்தி கொஞ்சமும் யோசிக்காம, ஒரு திமிர் பிடிச்ச கழுதைக்காக தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருக்கான்.” என்றார் எரிச்சலாக.
“விடுங்கப்பா, அண்ணி சும்மாவே வருத்தத்துல இருக்கும்போது, இதுதான் சாக்குன்னு நீங்களும் அவங்களை டென்சன் பண்ணாதீங்க.” என்ற சுபா,
“அண்ணி எனக்கு ஒரே ஒரு ரெக்வெஸ்ட்தான், இப்போ நாம செய்ற எல்லாமே இல்லீகல்தான். இதுல என்ன நடந்தாலும் ஹாஸ்பிடல் பேரை வெளியச் சொல்லக்கூடாது. விக்ரம் இந்தப் பிரச்சனையில எங்கேயும் வரக்கூடாது. முக்கியமா முகுந்தனைத் தூண்டிவிட்டுட்டு வேடிக்கைப் பார்க்கக்கூடாது.” எனக் கண்டிப்பாகச் சொல்ல,
“இல்ல அண்ணி, அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். விக்ரம் இனி நிசா பிரச்சனைல எங்கேயும் இருக்கமாட்டான். அதுக்கு நான் உத்திரவாதம் கொடுக்குறேன். நீங்க அடுத்து என்ன செய்யலாம் சொல்லுங்க.”
“ரேணு நாம லீகலா செய்யலாம்தான், ஆனா அதுக்கு அந்த ஸ்வாதி உயிரோட இருக்கணும். நான்தான் இதை செஞ்சேன்னு அவ சொல்லணும். சொல்றதுக்கு அவ இல்ல, மத்த எல்லாம் இப்போ விக்ரம்கு எதிரா இருக்கு. நிசா பொண்ணு கேஸ் கொடுத்தா இப்போ விக்ரம் நிலைமை என்னாகும் யோசி. அதனாலதான் இதை இப்படியே முடிச்சிக்கலாம்னு சொல்றேன். நீ என்னைத் தப்பா எடுத்துக்கக்கூடாது.” என்ற நாகேஷிடம்,
“அண்ணா நீங்க என்னை நாலு அடி அடிச்சாகூட எனக்கு வருத்தம் இல்ல, என் பையன் சரியா இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காதுதானே. அவளை எனக்கு கட்டி வைங்கனு வந்து நிக்கும்போது, நான் என்ன செஞ்சிருக்க முடியும்? ஆனா செஞ்சிருக்கணும், அப்படி செஞ்சிருந்தா ஒரு பொண்ணோட வாழ்க்கை தப்பிச்சிருக்கும். இனி பேசி பிரயோஜனமில்ல, நீங்க என்ன செய்யணுமோ செய்யுங்க.” என்றவர் நரேனுடன் வெளியேறிவிட்டார்.
ரேணுகாவின் சொந்தத்தில் அண்ணன் முறை நாகேஷ். படிக்கும் போதே காதல் திருமணம் என்பதால், ஆரம்பத்தில் யாரும் அவரைக் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. பெரியவர்களின் காலங்கள் கடந்த பிறகு, இரண்டும் பெண்பிள்ளைகள் என்றானபிறகு, வலுக்கட்டாயமாகக் குடும்பத்தில் இணைந்துகொண்டார். இன்று அந்தக் குடும்பத்தில் இன்றியமையாதவர் அவர்.
பெரிய பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்குதான் வாசம். இப்போதுதான் இந்தியா வந்திருந்தார். வந்தவருக்கு, ரேணுகாவின் மூலம் கேள்விப்பட்டச் செய்தி அவ்வளவு கோபத்தைக் கொடுத்தது. விக்ரமின் மேல் அளவில்லாத கோபத்தைக் கொண்டுவந்தது. ஆனால் தங்கைக்காகவும் நிசாவுக்காகவும் அமைதியாகிவிட்டார்.
“சுபா அந்த பொண்ணு இங்க இருக்குறது அவ்வளவு சேஃப் இல்லனு தோனுது. ரேணுக்கிட்ட சொல்லி ஹில்ஸ் ஸ்டேஷன் போல அனுப்பி வச்சிடலாம்.” என யோசனையாகச் சொன்ன நாகேஷிடம்,
“ஏன் ப்பா விக்ரம் எதுவும் பிரச்சினை செஞ்சிடுவான்னு யோசிக்கிறீங்களா?”
“இல்ல விக்ரம் இதுக்கும் கீழ இறங்கமாட்டான். இது அந்த பொண்ணோட அம்மா மேல வந்த டவுட்ல சொல்றது. அவங்கம்மாவுக்கு இதெல்லாம் தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை. அதை மறைக்கத்தான் அதிகமா கோபப்படுறாங்க போல.”
“ம்ம், ரித்தி சொல்றதை வச்சுப் பார்த்தா அப்படித்தான் தோனுது.” என்ற சுபாவும், அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.
அன்று அரை உயிராய் இருந்தவளைப் பிரபலமான ஒரு மருத்துவமனையில் சேர்க்க, அங்கு கேட்ட எந்த கேள்விக்கும் யாரிடமும் பதிலில்லை. இது க்ரிமினல் என்று போலீசில் தகவல் கொடுக்கப்போக, அந்த நேரம்தான் நாகேஷ் அங்கு வந்தார். ஒரு நோயாளியைப் பார்க்க வந்தவர், ரேணுகாவைப் பார்த்து என்னவென்று விசாரிக்க, அவரும் அண்ணனைப் பார்த்த நிம்மதியில் அனைத்தையும் சொல்லிவிட்டார்.
நாகேஷுக்கும் தங்கையின் மேல் அளவு கடந்த கோபம்தான். ஆனால் அதை இப்போது காட்ட முடியாதே. முதலில் அங்குள்ள மருத்துவர்களிடம் பேசி நிசப்திக்கு முதலுதவி செய்து, தன் மருத்துவமனைக்கு மாற்றிக்கொண்டார். அவர் மனைவியும் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால், பிரச்சனையின் வீரியம் சற்று குறைந்தது. ஆனால் நிசப்தியிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. அவளை அவளது கஷ்டத்தில் இருந்து இப்போது மீட்டெடுக்க முடியாது என்று, அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.
காலம் ஒரு மிகச்சிறந்த மருத்துவம். அது அவளது காயத்தையும் ஆற்றும் என்ற நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டனர். அதன்படி ரேணுகாவிடம் பேசி நிசப்தியை, நாகேஷின் இரண்டாவது மகள் வசிக்கும் மாலத்தீவிற்கு மிகவும் பத்திரமாக அனுப்பி வைத்தனர். முதல் சில மாதங்கள் ரேணுகா அவருடன் இருப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
அதற்குள் உஷாவின் பிரச்சனையைத் தீர்த்து, நிசப்தியின் துணைக்கு உஷாவை அனுப்பலாம் என்று முடிவானது. இது எதுவுமே விக்ரமிற்கு தெரியாமலே நடந்தது.
நரேன் கூட, “அம்மா சீனியருக்கு சொல்லலாம். நாளைக்கு இதையும் ஒரு பிரச்சனையா ஆரம்பிப்பார்.” என்று சொல்லிப் பார்த்தான்தான்.
ஆனால் ரேணுகாவோ, “இதுவரைக்கும் அவன் செஞ்சது, நாங்க பட்டது எல்லாம் போதும் நரேன். இல்லாத ஒருத்திக்காக இருக்குற எல்லாரையும் உயிரோட கொன்னுட்டு இருக்கான். இனி நிசப்தி பத்தியோ குழந்தைப் பத்தியோ அவனா கேட்காம யாரும் அவன்கிட்ட மூச்சுக்கூட விடக்கூடாது.” என்றுவிட்டார்.
நிசப்திக்கு தன் நினைவே இல்லாத போது, இவர்களது பேச்சுக்கள் எதுவும் அவளைச் சென்றடையவில்லை. எதற்காக, யாருக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரிக்க, மிகவும் ஒடுங்கிப் போய்விட்டாள்.
அவளைப் பார்த்த ரேணுகாவிற்கு குழந்தை மட்டும் இல்லையென்றால், இவள் இந்நேரம் என்னவாகிருப்பாள் என்றுதான் நினைக்கத் தோன்றியது. புது இடம், புது மனிதர்கள், புதுவிதமான சூழல் நிச்சயம் அவளை மாற்றும் என்ற நம்பிக்கை அவருக்கு. அதற்காக என்னவெல்லாம் செய்யலாம் என்று நரேனுடன் பேசி, நாகேஷின் மகள் ரஞ்சனி உதவியுடன் செயல்படுத்த ஆரம்பித்தார்.
***
இங்கு ரித்தியைப் பார்த்தது பார்த்தபடி இருந்தான் ரவி. மனைவி சொன்னதை அவனால் இன்னுமே நம்பமுடியவில்லை. வீட்டில் இருந்த இரண்டு பெண்கள். இருவருமே தன்னைச் சேர்ந்தவர்கள். அவர்கள் செய்த எந்த ஒரு செயலும் தனக்குத் தெரியாமலேப் போய்விட்டதே என்று, வெட்கமும் வேதனையும் கொண்டான்.
ரவி முகத்தில் இருந்து அவன் என்ன யோசிக்கிறான் என்று, ரித்தியால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவள் பார்த்த, யூகித்த விஷயங்களை அவனிடம் சொல்லியிருக்க, அதிலிருந்து இப்படித்தான் இருக்கிறான்.
அவள் சொல்லாமல் விட்ட சில விஷயங்களையும் அவனால் யூகிக்க முடிந்திருந்தது. அது கொடுத்த குற்றவுணர்ச்சியில்தான் அவன் அமைதியாக இருக்கிறான் என்று, அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. ரவிக்கு தன் தாய்மீதும் தங்கை மீதும் வெறுப்பு மண்டிப் போனது. இனி எதைப் பற்றியும் யோசிக்காமல் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு, என்ன செய்யலாம் என்று யோசித்து மனைவியைப் பார்க்க,
“நிசாவோட எந்த விசயத்துலயும் நாம யாரும் இன்வால்வ் ஆகக்கூடாதுனு அம்மா சொல்லிட்டாங்க. இது என் வீட்டு வாரிசு. விக்ரம் ஏத்துக்கிட்டாலும், இல்லைன்னாலும் அது இல்லனு ஆகிடாது. அதனால அவளைப்பத்தி யார் கேட்டாலும் எதுவும் சொல்லக்கூடாதுனு அம்மா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டு போயிட்டாங்க. முக்கியமா விக்கிக்கு சொல்லவேக்கூடாதுனு சொல்லிட்டாங்க.” என்றவளிடம், எதிர்த்து வாதாட முடியாமல் அமைதியாகிவிட்டான் ரவி.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல், குடும்பம், தொழில் என அனைத்தையும் மறந்துவிட்டு மொத்தமாக ஸ்வாதியின் நினைவில் மூழ்கிப்போனான் விக்ரம்.
‘நான் இல்லன்னா அந்த நிசாவை மேரேஜ் பண்ணிப்பியா விக்கி? அந்த பேபி அவளை மாதிரியே இருந்தா என்ன செய்ய? நான் உனக்காகத்தான் இப்படி பண்ணேன், ஆனா இப்போ என்னால அந்தக் குழந்தையை ஏத்துக்க முடியல விக்கி. அதனாலக்கூட நான் இப்படி பைத்தியம் போல மாறிட்டேனோ?’ என ஒருநாள் அவனின் அணைப்பில் ஸ்வாதி கூறியதையே நினைத்து நினைத்து மருகிப்போனான்.
அவளைக் கவனித்திருக்க வேண்டும். சிறுபெண் சரியாகி விடுவாள் என்று நினைத்தது தவறு. எல்லாமே தன்னுடைய தவறுதான் என அனைத்தையும் தன்மேல் தூக்கிப்போட்டுக் கொண்டான். ஸ்வாதியின் மேல் இருந்த காதல், அவனை அந்த குற்றவுணர்ச்சியில் இருந்து வெளிவர விடவில்லை.
மேலும் தான் ஒரு நல்ல கணவன் அல்ல என்று, தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, போதைக்கு அடிமையாகிப் போக, தன்னைச்சுற்றி நடந்த எதுவும் அவனுக்குத் தெரியாமல், புரியாமல் போனது. தொழிலில் மொத்தமாக சறுக்கிப் போனான் விக்ரம்.
இப்படியே முழுதாக ஒரு மாதம் முடிய, இவனை இப்படியே விட்டால் சரிவராது என உணர்ந்த ரேணுகா நரேனை, விக்ரமோடு இருக்க வைத்தார். மெல்ல மெல்ல சூழலைப் புரியவைக்க ஆரம்பித்தார். அவனும் ஸ்வாதியின் மாயையை விட்டு வர முயற்சித்தாலும் முடியவில்லை. அவள் சார்ந்த ஏதோ ஒன்றை மதியழகி ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
அதைத் தெரிந்து கொண்ட ரேணுகா, ரவிக்கு அழைத்து, “ஏன் ரவி, உன் தங்கச்சி போய் என் பையன் வாழ்க்கையைக் கெடுத்தா, உங்கம்மா இருந்து அவன் வாழ்க்கையைக் கெடுக்குறாங்களா?” என மிகவும் கடுமையான வார்த்தைகளில் கேட்க, அது சரியாக வேலை செய்தது.
“ம்மா, நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக மட்டும்தான், அந்தப் பொண்ணைப் போய் பார்க்கவோ, பேசவோ இல்லாம, என் மனசாட்சியைக் கொன்னுட்டு இங்க இருக்கேன். ஆனா இனியும் நீங்க விக்ரம்கிட்ட உங்க மகளைப் பத்தி செண்டிமெண்டா எதாச்சும் பேசி, அவனை அப்படியே வைக்கணும் நினைச்சா, செய்ங்க. ஆனா நான் இங்க இருக்கமாட்டேன். என் பொண்டாட்டி, பிள்ளைங்களோட நான் தனியா போயிடுறேன். இங்க இல்ல, வெளிநாட்டுக்கு.” என அடக்கப்பட்டக் கோபத்துடன் பேச,
கப்சிப் என்றாகிப் போனார் மதியழகி. பின்னே வாயைக் கொடுத்து மகனிடம் வாங்கிக்கட்ட அவரென்ன பைத்தியமா? சமீபகாலமாக மகனும் மருமகளும் தன்னிடம் நடந்து கொள்ளும் முறையில் இருந்த வித்தியாசத்திலேயே, இவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று புரியத்தானே செய்தது. அதை தன் வாயாலே உளற அவரென்ன முட்டாளா? அதோடு ஸ்வாதி மீது முழுப்பைத்தியமாக இருக்கும் விக்ரம், இனியும் மாற வாய்ப்பில்லை என்றும் அறிந்து கொண்டாரே. அதனாலே ரவி சொன்னதும் விக்ரமின் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கிக்கொண்டார்.
அன்று நிசப்தியைக் காண மாலத்தீவிற்கு வந்திருந்தான் நரேன். இப்போது அவனைப் பார்த்து புன்னகைக்க ஆரம்பித்திருந்தாள் நிசப்தி. அதுவே நரேனுக்கு போதும் போல இருந்தது. முதன்முதலில் அவள் அறிமுகமான நிகழ்வு தன்னைப்போல் மனதுக்குள் ஓடி மறைய, பெருமூச்சு வந்தது. அவள் தலையைத் தடவிக் கொடுத்துவிட்டு ரேணுகாவிடம் வந்து அமர்ந்தான்.
இப்போது அங்கேயே தனியாக ஒரு வீடு எடுத்து இருந்தார் ரேணுகா. சில கணக்குகளைப் போட்டுப் பார்த்தவருக்கு, அதுதான் அனைத்திற்கும் வசதி என்று புரிய, ரஞ்சனியின் கணவனிடம் பேசி அவர்களுக்கு அருகிலேயே வீட்டை வாங்கித் தனியாக வந்துவிட்டார்.
இப்போது அந்த வீட்டில் எதிரெதிரே நரேனும் ரேணுகாவும் அமர்ந்திருக்க, மீண்டும் உஷாவைப்பற்றி ஆரம்பித்தார் ரேணுகா. உஷாவைப்பற்றி எப்போது பேசினாலும் பிடி கொடுக்காமல் இருந்தவனிடம். “என்னாச்சு நரேன், இப்படியே அடுத்தவங்களுக்காகவே உங்க வாழ்க்கையை நாசம் பண்ணிக்கப் போறீங்களா? இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு, குழந்தைப் பிறந்திடும். அடுத்து என்ன செய்யலாம்னு நீ முடிவு பண்ணிருக்க?” எனக் காட்டமாகக் கேட்க,
“நான் கூப்பிட்டா அவ வரணும்ல…” என முணுமுணுத்தவனிடம்,
“உஷாவுக்கு இங்க என்ன நடந்ததுனு தெரியுமா? நீ சொன்னியா?” என யோசனையுடன் கேட்டவரிடம்,
“இல்ல, அவளுக்கு எதுவும் தெரியாது. அவ இங்க இல்ல, அவ படிச்ச அந்த ஆஸ்ரமத்துக்குப் போயிட்டானு அவங்கப்பா சொன்னார். அங்க போய் விசாரிச்சா அங்க இல்ல, கேட்டா யார் வந்து கேட்டாலும் எங்க இருக்கேன்னு சொல்லக்கூடாதுனு சொல்லிட்டு போயிருக்கா. அவளை மீறி யாரும் சொல்லவும் மாட்டேங்குறாங்க.” என வலியுடன் சொன்னவனைப் பார்த்து, பரிதாபம்தான் வந்தது அவருக்கு.
இப்படி எல்லாருடைய வாழ்க்கையையும் கேள்விக் குறியாகிவிட்டு சென்ற ஸ்வாதியோ, விக்கியைக் குணமாக்கிவிடும் வெறியோடு லண்டனில் சுற்றிக் கொண்டிருந்தாள்.
***
1 comment
அந்த விக்கியும் ஸ்வாதியும் திரும்பி வராமலே போய் சேர்ந்திடணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797