Home Antiheroதளிர் – 49

தளிர் 49

“ரவி ப்ளீஸ் இப்படி இருக்காதீங்களேன்… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாதுதான், அத்தை திரும்ப திரும்ப விக்கிய பேசவும்தான்… ப்ளீஸ் ரவி பேசுங்க…” என அழுகை முட்டியக் குரலில் பேசிய மனைவியை, வெறித்துப் பார்த்தான் ரவி. அவனுக்குமே மனைவியிடம் கோபத்தைக் காட்டப் பிடிக்கவில்லைதான்.

ஆனால் அவள் தனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பேசியதில், தான் ஒரு ஆண் என்ற எண்ணம், அவள் தன்னை எப்படி விட்டுக்கொடுத்து பேசலாம் என்ற ஈகோ, என எல்லாம் சேர்ந்து அவனை இறங்கி வர விடவில்லை.

அந்த வீட்டில் அவனுக்கு உரிமையான மூன்று பெண்களும் அவனை ஒரு சக மனிதனாகக் கூட மதிக்கவில்லையா? என்ற எண்ணமும்தான், அவனைக் கோபத்திலிருந்து இறங்கி வரவிடாமல் இழுத்துப் பிடித்து வைத்தது.

அன்று ஸ்வாதியைப் பற்றிய அனைத்தையும் விக்ரமிடம் பேசிவிட்டு வந்தபிறகு, தன் தாயைப் பார்த்து அத்தனை கோபம் ரவிக்கு.

அவரை நேருக்கு நேர் பார்த்தவன், “எதுக்குமா இப்படி செஞ்சீங்க?” என்றான் கோபத்தைக் கட்டுப்படுத்தியக் குரலில்.

“என்ன ரவி, நான் என்ன செஞ்சேன்? உன் பொண்டாட்டி சொல்லிக் கொடுத்தாளா, இப்படி எல்லாம் பேசச் சொல்லி…” என நிலவரம் தெரியாமல் வாயை விட,

“ஆமா அவ சொன்னாதான், உங்களைப்பத்தியும் உங்க பொண்ணைப்பத்தியும். ஆனா நான்தான் உங்கமேல இருந்த பாசத்துலயும் நம்பிக்கையிலயும் அவ சொன்னதை நம்பல. அப்படி சொன்னதை அன்னைக்கே கேட்டிருந்தா, நீங்க இவ்வளவு தூரம் போயிருக்க மாட்டீங்க. உங்க பொண்ணும் யாரோ ஒருத்தனுக்காக செத்திருக்க மாட்டா.” என்றான் ஆத்திரத்தை அடக்கி.

“என்ன ரவி மரியாதையெல்லாம் குறையுது. ஏன் சொத்து போச்சேன்னு உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் வயிறு எரியுதா? நான் என்ன உன் பொண்டாட்டி சொத்தையும், அவ வீட்டு சொத்தையுமா தூக்கி கொடுத்தேன்? என்னோட சொத்து… முறைப்படி என் பொண்ணுக்கு கொடுத்தேன். இதுல நீயோ உன் பொண்டாட்டியோ ஒரு வார்த்தைப் பேசக்கூடாது.” என அலட்சியமாகப் பேச,

“என்ன நான் கேட்கக்கூடாதா? ஏன் கேட்கக்கூடாது? என்னோட உழைப்பு இருக்கு இதுல. நான் கேட்காம யார் கேட்பா? ஆனா இது சொத்துப் பத்தின பேச்சு இல்ல. ஸ்வாதி இவ்வளவும் உங்களுக்குத் தெரியாம செய்ய வாய்ப்பே இல்லை. நீங்களும் இதுல கூட்டுதானே. அவ தப்பு செய்றானு உங்களுக்குத் தோனவே இல்லையா? எவ்வளவு பெரிய முடிவெடுத்திருக்கா? அவளைத் தடுக்கணும்னு தோனவே இல்லையா உங்களுக்கு?” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்.

“ஏன் தோனணும்? அவ அப்படி என்ன தப்பு செஞ்சா? இங்க இருக்குற எல்லாமே அவளுக்குப் போக மீதிதான் மத்தவங்களுக்கு. அவ எங்கிட்ட கேட்டு நான் இல்லனு எப்படி சொல்ல முடியும்? இது என் பொண்ணுக்கானது, என் பொண்ணு கேட்டா கொடுத்திட்டேன்.” என அப்போதும் அலட்சியமாகவேப் பேச,

“ஓ…” என்றவனுக்கு தாயின் பேச்சில் இருந்த அலட்சியம், தன்னைப் பற்றி யோசிக்கவில்லையே என்ற கோபம், இதில் சிக்கலான விக்ரம் மற்றும் நிசப்தியின் வாழ்க்கை, அதனால் ரேணுகாவிடம் முகம் கொடுத்து பேச முடியாமல் போன ஆற்றாமை என எல்லாம் சேர, கோபத்தில் உடல் இறுகிக் கொண்டே போனது ரவிக்கு.

கணவனின் நிலையை உணர்ந்த ரித்தி வேகமாக அவனிடம் வந்தவள், “ரவி ப்ளீஸ்… அவங்க ஏதோ கோபத்துல பேசுறாங்க, நீங்க டென்சன் ஆகாதீங்க. ப்ளீஸ் ப்ளீஸ் ரவி…” எனக் கையைப் பிடித்து அறைக்குள் இழுக்கப் போக, அவளால் அவனை ஒரு இன்ச்கூட நகர்த்த முடியவில்லை.

மனைவியை வெற்றுப் பார்வை பார்த்தவன், தன் கோபத்தை அடக்க முடியாமல், கீழிருந்த டீப்பாயை ஓங்கி உதைக்க, அதில் இருந்த கண்ணாடி உடைபட்டு நாலாப்பக்கமும் சிதற, “ரவி…” ரித்தி அலறிக்கொண்டு வந்து அவனைத் தடுத்துப்பிடித்தாள்.

“வாயை மூடு, எதுவும் பேசக்கூடாது.” என மனைவியிடம் அதட்டலாக, அதே சமயம் அழுத்தமாகச் சொல்ல, அந்தக் குரலில் அப்படியே அதிர்ந்து அமைதியாகிப் போனாள் பெண்ணவள்.

முதன் முதலில் ரவியின் கோபத்தைப் பார்க்கிறாள். பயமும் பதட்டமுமாக அவனையேப் பார்க்க, “அவ சொத்தா? ஹான்! அவ சொத்துதான், சரிதான். ஆனா நீங்க எப்போ இருந்து இப்படி பிரிச்சி பார்க்க ஆரம்பிச்சீங்க? அப்போ உங்களுக்கு உங்க பொண்ணு வாழ்க்கைதான் முக்கியம், நானோ என் குடும்பமோ இல்லை. அப்போ நான் உங்க பையன் இல்லையா? அப்படி என்ன உங்க பொண்ணுக்கு கொடுக்காம ஏமாத்திடுவேன்னு எனக்குத் தெரியாம இதெல்லாம் செஞ்சிருக்கீங்க?” எனக் கேட்டவனின் கலங்கிய குரலில் ஆற்றாமை, கோபம், இயலாமை என அனைத்தும் கலந்திருந்தது.

கணவனின் கலங்கியக் குரலில் ரித்திக்கும் அழுகை வர, “ரவி போதும் வாங்க.” என அவனை மீண்டும் அறைக்குள் இழுக்க,

“நான் இவ்வளவு கேட்டும் உங்களுக்கு எதுவும் சொல்ல முடியல இல்ல, போகட்டும். இனி நானும் உங்களை மாதிரிதான், என்னோட சுயநலத்தை மட்டும் பார்க்க போறேன். என்னோட அம்மா, அவங்களைப் பார்க்காம விட்டேன்னு எந்த பாவமும் எங்களுக்கு வேண்டாம். அதனால உங்களுக்கு என்ன தேவையோ அதை நான் கடைசி வரை பார்த்துடுவேன், செஞ்சிடுவேன். ஆனா இனி உங்களுக்கு நான் மகன் இல்ல. அந்த உண்மையை நான் அழிச்சிட்டேன், மொத்தமா என் வாழ்க்கையில் இருந்து அழிச்சிட்டேன்.” என ஆங்காரமாகக் கத்தியவன், பிடித்திருந்த மனைவியின் கையைத் தட்டிவிட்டு, வேகமாக வெளியில் சென்றான்.

அதுதான் ரவி தன் தாயிடம் கடைசியாகப் பேசியது. அதன்பிறகும் கூட எதுவும் நடாவதது போல மதியழகி வந்து அவனிடம் பேசத்தான் செய்தார். ஆனால் ரவி அதைக் கண்டுகொண்டதும் இல்லை, காதில் வாங்கியதும் இல்லை. ஏன் அவரை நேருக்கு நேர் பார்ப்பதும் கூட இல்லை. ‘இப்படியும் ஒரு அம்மாவா?’ என மதியழகியை நினைத்து ரித்திக்கு வெறுத்தே போனது.

அதையெல்லாம் யோசித்தபடியே இருந்தவனின் மொபைல் அலற, அதில் சுயநினைவு வந்தவனுக்கு, அழுதபடியே தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்த மனைவி கண்ணில் பட, போதும் அவளை வருத்தியது என நினைத்தவன், தன் இரு கைகளையும் விரிக்க, அடுத்த நொடி அவன் கைகளுக்குள் அடைக்கலமாகியிருந்தாள் ரித்தி.

“ஸாரி ரவி… ஸாரி நான் உங்களை ஹர்ட் பண்ண அப்படி பேசல. ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ…” என அழுதபடியே அவன் நெஞ்சில் சாய,

மனைவியின் கண்ணீரைத் தன் நெஞ்சில் உணர்ந்தவன், “ஐ க்னோ ரித்திமா, பட் அது… அந்த நேரத்துல ஒரு கோபம். உன்னை விட்டா எனக்கும் இப்போ யாரும் இல்ல. ம்ச்… விடு இனி நான் உங்கிட்ட கோபத்தைக் காட்டமாட்டேன், ஐம் ஸ்யுர்.” என சமாதானம் செய்ய, மீண்டும் போன் அலறியது.

இப்போது அழைத்தது ரேணுகா. யோசனையாக எடுத்தவன், “சொல்லுங்க அத்தை.” எனவும்,

“ரவி, நிசாவுக்கு வலி வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியாச்சு. நரேனுக்கும் விக்கிக்கும் கால் பண்ணிட்டே இருக்கேன், எடுக்கல. அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே? பார்த்துட்டு விக்கியை எனக்கு கால் பண்ண சொல்லு ரவி.” என அந்தப்பக்கம் அவர் பதட்டமாகப் பேச,

“இல்ல, இல்லத்த… நான் இங்க பார்க்குறேன், நாங்க உடனே கிளம்புறோம். நிசா எப்படி இருக்கா? அவ ஆல்ரைட்தான, நான் விக்கியைக் கூப்பிட்டு வந்துடுறேன். நீங்க அங்க கவனமா இருங்க.” என்று வைத்தவன், அடுத்து நிமிடமும் தாமதிக்காமல், உடனே தங்களுக்கான பயண வேலையை ஆரம்பித்தான்.

***

இங்கு இரண்டு நாட்களுக்கு முன்னமே முகுந்தனிடம் நிசப்தியைப் பற்றி விசாரித்திருந்தான் விக்ரம்.

எப்போது தன் குழந்தையை நிசப்தி சுமக்கிறாள் என்று தெரிந்ததோ, அப்போதிருந்து அவளைப்பற்றி முகுந்தனிடம் விசாரித்து தெரிந்து கொண்டுதான் இருக்கிறான்.

இதுவரை போனில் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தவன், இந்தமுறை ஏனோ நேரில் கேட்க வேண்டும் என்றுத் தோன்ற, மாலத்தீவிற்கே வந்துவிட்டான்.

இப்போதும் முகுந்தனின் அறையில்தான் பேசிக்கொண்டு இருந்தான் விக்ரம்.

(நாகேஷ் அவரது மகளின் கணவன்தான் முகுந்தன். விக்ரம் மற்றும் ரவியின் பள்ளிக்காலத் தோழன்)

“ஆன்ட்டி நார்மல் டெலிவரிக்குதான் ட்ரை பண்ணுவாங்க விக்கி, பட் அதுல ரிஸ்க் ஃபேக்டர் அதிகம்.” என்ற முகுந்தனிடம்,

“நோ, அதெல்லாம் வேண்டாம் சொல்லு முகுந்த், ரிஸ்க்னா கொஞ்சமும் ட்ரை செய்ய வேண்டாம். நமக்கு ரெண்டு பேரும் முக்கியம். ஆன்ட்டி எதுக்காக இப்படி யோசிக்குறாங்க?” என படபடத்தவனிடம்,

“அப்போ நிசாவை நீ மேரேஜ் செஞ்சிக்கிறியா? அதுக்கு உன்னால ஸ்யூரா பதில் சொல்ல முடியுமா?” எனப் பல்லைக் கடித்தான் முகுந்த்.

“வாட்! என்ன உளர்ற? நான் எப்படி, அவளை? நான் ஒரு விடோவர். அவ வாழ வேண்டிய பொண்ணு, நான் எப்படி? உனக்குப் பைத்தியமா இடியட்?” என்றவனிடம்,

“என்ன விடோவர்? நீ விடோவரா? கடுப்பக் கிளப்பாதாடா. நீ இன்னும் வெர்ஜின் பையன்தான், அதை மறந்துடாத. கல்யாணம் செஞ்சி இத்தனை வருஷம் எப்படிடா சும்மா இருந்த? என்ன கிழிச்ச நீ? உனக்கு இருந்த பொறுமையைத்தான் நல்லா யூஸ் செஞ்சிட்டு போயிருக்கா, உன் அருமை ஸ்வாதி.” என விக்ரமை விட கடுப்பில் கத்தினான் முகுந்தன்.

“ஹேய், இப்போ எதுக்கு அவளை இழுக்குற? எனக்கு அதுல ஐ மீன் ஃபிசிக்கல் ரிலேஷன்ஷிப்ல பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல. அதுக்கு ஸ்வாதியை பழியாக்காத. எனக்கு வேணும்னு கேட்டா ஓகே சொல்லிருப்பாளோ, என்னவோ? பட் ஐம் நாட் இன்ட்ரஸ்ட். அன்ட் இப்போ அது பிரச்சனையும் இல்ல. இந்த பொண்ணுக்கு சிசேரியனே பண்ணச் சொல்லு உன் அத்தைக்கிட்ட, சும்மா நார்மலுக்கு ட்ரை பண்ணலாம்னு எதுவும் சிக்கலை இழுத்துவிடாம…”

“வாயை மூடுடா எருமை. உன்னாலதான் இவ்வளவு பிரச்சனையும். அவங்க உனக்கும் அத்தைதான், நீயே பேசேன். பெருசா வந்துட்டான் ஆர்டர் போட, இப்போவும் நீ குழந்தை பிறந்ததும் தூக்கிட்டுப் போயிடுவனு சொல்லிட்டு இருக்க. அப்போ அந்த பொண்ணு என்ன பண்ணுவா? அவளுக்கு ஒரு லைஃப் வேண்டாமா? இப்படி வயிறை கிழிச்சிட்டு போனா எந்த ஆம்பிளை ஏத்துக்குவான்? முதல்ல நீ ஓகே சொல்வியா? பதில் சொல்லுடா, நீ ஓகே சொல்வியா?”

“ம்ச்… முகுந்த் இப்போ எதுக்கு நீ இவ்வளவு வைலன்ட் ஆகுற? நான் அவளை மேரேஜ் பண்றேனோ, இல்லையோ அது பின்னாடி பிரச்சனை. பட் இப்போ நான் யோசிச்சது அவளுக்காக. ப்ளீஸ் முகுந்த் புரிஞ்சிக்கோ.”

“விக்கி நீ என்னதான் ஊரே மெச்சும் வக்கீலா இருந்தாலும், இந்த விசயத்துல நீ மக்குதான். ஃபிசிக்கல் ரிலேஷன்ஷிப் வச்சுக்காம ப்ரெக்னென்ட் ஆனா, நார்மல் டெலிவரி ரொம்ப கஷ்டம். ஏன் உயிர் போகவும் வாய்ப்பிருக்கு. இது ஆன்ட்டிக்கு தெரியாம இருக்குமா?

பட் ஏன் அந்த ரிஸ்க் எடுக்குறாங்க தெரியுமா? நிசாவோட ஃபியூச்சருக்காக. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும் என்பதற்காக.” என நீளமாகப் பேசிய முகுந்தன், “நீ அவளைக் கல்யாணம் செய்துக்க விக்கி, அப்ப சிசேரியன் செய்யலாம். எல்லாம் உன்னோட விருப்பம்தான், யாரும் கேள்வி கேட்க முடியாது.” என்ற முகுந்தனிடம்,

“சாவடிச்சிடுவேன்டா உன்னை… என்னால முடியாது, அந்த தப்ப இப்ப பண்ண முடியாது. ஒருத்தி என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டா, நான் ஒரு ஆம்பளையே இல்லைன்னு காண்பிச்சிட்டு போயிருக்கா. அதை மறந்து இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்க சொல்றீயா?” எனப் பல்லைக் கடித்தான்.

“ஆல்ரெடி நீயும் செத்துப் போன உன் பொண்டாட்டியும் கெடுக்காத வாழ்க்கையா? வேண்டாம், எனக்கு வாயில அசிங்கமா வரும்.” எனக் கடுப்பான முகுந்தன்,

“ஆனா எனக்கு ஒரு சந்தேகம்டா, இன்னுமா அந்த ஸ்வாதிய நம்பிட்டு இருக்க? நீ இப்படி உருகி மருகி காதலிச்சு ஃபீல் பண்ற அளவுக்கு அவ வொர்த் இல்ல விக்கி. மூவ் ஆன் பண்ணிட்டு உன்னோட லைஃபை நிசாகூட லீட் பண்ணு. அதுதான் எங்க எல்லோரட விஷூம்.

“ம்ம்… நான் இன்னும் அந்த துரோகிய நினைச்சுட்டு இருக்கேன்னு உங்களுக்கு தோனுதா? ம்ம்ம்… உங்க எண்ணம் தப்பு இல்லை. என் நடவடிக்கை அப்படி தோன வச்சுருக்கலாம். அவ எப்படியோ, நான் அவளை உண்மையா காதலிச்சேன். ப்ச்… விடுடா, இதப்பத்தி இனி எப்பவும் பேச வேண்டாம்.

ஒருத்தி என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டா என்பதற்காக, மத்த பொண்ணுங்களை நம்பாம போறதுக்கும், நம்மளை நம்பி வர பொண்ணைக் கொடுமை பண்றதுக்கும் நான் என்ன சைக்கோவா?

ஒருதடவை என்னை மீறி தப்பு நடந்துடுச்சு, அதே தப்பு அடுத்தும் நடக்கும்னு நீ எப்படி நினைக்கிற? குழந்தை என்னோடதுதான், அதுக்கு நான்தான் அப்பா, அந்த பொண்ணுதான் அம்மா. அதுல எந்த மாற்றமும் இல்ல. ஆனா இதெல்லாம் சரியாக கொஞ்சநாள் ஆகும். சரியாகும், சரி பண்ணுவேன்.

அப்போதான் இந்த விக்ரம், ஏமாந்த விக்ரம் இல்லன்னு எல்லாருக்கும் புரியும், தெரியும். ஐ நீட் சம் டைம். பார்க்கலாம், டைம் இஸ் எ பிக் ஹீலர்னு சொல்றாங்கள்ள, இந்த காலம் என் காயத்தையும் ஆத்துதான்னு பார்க்கலாம்.” என யோகியாய் சித்தாந்தம் பேசிய விக்ரமை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்தன்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 13, 2026 - 4:41 pm

எல்லாருமே தும்பை விட்டு வாலை பிடிச்ச கதையாவே நடந்துக்கிறானுங்கப்பா.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured