Home Antiheroதளிர் – 51

தளிர் 51

குழந்தை பிறந்து இன்றோடு இருபத்தியெட்டு நாட்கள் ஆகியிருந்தது. இன்றுதான் தொட்டிலில் இட்டு பெயர் வைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான வேலைகளில் இருந்தனர் அனைவரும்.

ரேணுகாவிற்குத்தான் ஓய்வே இல்லை. ஓடிக்கொண்டே இருந்தார். குழந்தை பிறந்ததுமே சென்னை செல்லலாம் என அவர் சொல்ல, நிசப்தி மொத்தமாக மறுத்துவிட்டாள்.

‘இனி எனக்கு அங்கு எந்த வேலையும் இல்லை. அங்கு வரவோ, யாரையும் பார்க்கவோ விருப்பம் இல்லை’ என நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டாள். எப்போதும் அவள் உணர்விற்கு மதிப்பளிக்கும் ரேணுகாவும் புரிந்து சரியென்றுவிட்டார்.

முகுந்த் அழைத்து சொன்ன அடுத்த நான்கு மணி நேரத்தில், மருத்துவமனையில் இருந்தான் நரேன். தங்கையின் தலையை வருடிக் கொடுத்தவன், குழந்தையைப் பார்த்ததும் அவனுக்கும் மனம் பரவசமானது.

எப்படி வந்தாலும் அது இப்போது நிசப்தியின் குழந்தை, தன் தங்கையின் குழந்தை, அதை எப்படி அவனால் வெறுக்க முடியும்? கைகளில் வாங்கியவனுக்கு என்ன முயன்றும் தன் கண்களில் வழிந்த நீரை மறைக்கவோ, அடக்கவோ முடியவில்லை. தன்னோடு அணைத்துப் பொதிந்துகொண்டான் தன் பொக்கிசத்தை. பொக்கிசத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இப்போது அவனிடம்.

இடையில் ரித்தியும் ரவியும் குழந்தைகளோடு வந்து, ஒரு வாரம் தங்கி சென்றிருந்தனர். இந்த சமயத்தில் ரவி, நிசப்தியுடன் ஒரு சுமூக உறவை வளர்க்கப் பெரும்பாடுபட்டு, ஒரு வழியாக அதை ஏற்படுத்திக் கொண்டான். ஆனால் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரே உறவு மதியழகிதான். அவரை எப்போதும் மன்னிக்கும் நிலையில் இல்லை அவள்.

சுபா குடும்பம், ரஞ்சனி மற்றும் அங்கு உள்ள பழகிய சில உறவுகள் மட்டுமே வந்திருக்க, விக்ரம் வரவில்லை. அவனை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. ரேணுகாவிற்கு மகன்மீது அதீத கோபம். திருந்தவே மாட்டானா என்ற ஆற்றாமை வேறு.

நல்ல நேரம் ஆரம்பிக்க ரேணுகா, ரவியை அழைத்து குழந்தையை தொட்டிலில் இடச்சொல்ல, அவனோ நிசப்தியைப் பார்க்க, அதில் தெரிந்த விருப்பமின்மையைக் கண்டவன், “அத்த, நீங்க எந்த முறையில் கூப்பிடுறீங்க? குழந்தையை வச்சுன்னா நான் வரல. நிசா என் தங்கச்சி, அந்த முறையில கூப்பிட்டா வரேன்.” எனப் பளிச்சென்று சொல்ல, ரேணுகா இப்போது நிசப்தியைப் பார்த்தார்.

அவளோ யாரையும் பார்க்காமல், “என் அண்ணா இருக்கான், அவன் செஞ்சா போதும்.” என்றுவிட்டாள். அதுவே சொன்னது ரவி செய்வதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை என்று. அதில் ரித்திக்கு கோபம், ஆனால் நிசப்தியின் நிலையில் அவள் முடிவு சரிதான் என்பதால் அமைதியாகிவிட்டாள்.

நரேன்தான் செய்ய வேண்டும் என்று முடிவான பின், அவனை அழைத்து சடங்குகளை ஆரம்பித்தனர். முகுந்தன் தன் மொபைலில் வீடியோ காலை ஆன் செய்து, ப்ளூடூத்தை பொருத்திக்கொண்டு, மொபைலை பாக்கெட்டில் போட்டுவிட்டு, வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“இந்த வேலைக்கு ஒருநாள் அத்தைக்கிட்டயும் நிசாக்கிட்டயும் நல்லா அடி வாங்க போறீங்க. அன்னைக்கு நானெல்லாம் வந்து உங்களைக் காப்பாத்த மாட்டேன்.” என பக்கத்தில் இருந்த ரஞ்சனி சொல்ல, மனைவியை முறைத்த முகுந்தன், “சும்மா இருடி…” எனப் பல்லைக் கடிக்க,

“அவளை வாயை மூட சொல்லுடா, இவளே எல்லாருக்கும் சொல்லிடுவா போல…” என விக்ரம் அந்தப் பக்கம் கத்த,

“அம்மா வேண்டாம், புள்ள மட்டும் வேணுமா? எந்த ஊர் நியாயமோ தெரில? அவனை மட்டும் தப்பித் தவறி இந்தப் பக்கம் வந்திடவேண்டாம்னு சொல்லுங்க, வந்தா அவனை நானே வெளுப்பேன்.” என ரஞ்சனி விடாமல் பேச,

“ம்ச்… நான் அங்க பார்ப்பேனா? இவளை சமாளிப்பேனா? அவளை போய் நிசாக்கூட நிக்க சொல்லுடா.” என விக்ரம் பல்லைக் கடிக்க, “போயேன்டி…” என முகுந்தனும் சொல்ல,

“அவனுக்கு சப்போர்ட் பண்றதுக்கு இருக்கு உங்களுக்கு…” என்று கணவனை முறைத்தபடியே ரஞ்சனி சென்றுவிட, “எப்படிடா இந்த வாயாடியை சமாளிக்கிற?” என விக்ரம் பெருமூச்சு விட,

“அதான் என்னை அவக்கிட்ட மாட்டிவிட்டுட்டு நீ தப்பிச்சிட்ட இல்ல, அப்புறம் என்ன? மூடிட்டு உன் வேலையைப் பாரு.” என முகுந்தனும் பல்லைக் கடிக்க, “ஓவரா போறீங்கடா…” என்ற விக்ரமும் அடுத்து அவர்களிடம் வாய் கொடுக்கவில்லை.

ரஞ்சனி நகரவும் அங்கு குழந்தையுடன் ரவி அமர, விக்ரம் லைனில் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் பேச ஆரம்பித்தான் முகுந்தன்.

இங்கு நரேன் குழந்தையை கையில் வாங்கி தொட்டிலில் இட, “குழந்தையோட பெயரை மூணு தடவை சொல்லுங்கோ.” என ஐயர் சொல்ல,

அவனோ நிசாவைப் பார்க்க, அவளோ திருதிருவென விழிக்க, அவள் இதுவரை எந்த பெயரையும் யோசிக்கவில்லை எனப் புரிந்தது. அதோடு இதெல்லாம் ரேணுகா யோசித்திருப்பார் என்று நினைத்தாள். இப்போது எல்லோரும் அவளையேப் பார்க்க தப்பு செய்தது போல் ஆனது. இதை வீடியோவில் பார்த்த விக்ரமிற்கு ஒரு பக்கம் கோபம் வந்தாலும், அவளது நிலையை யோசித்து அமைதியாகப் பார்த்திருந்தான்.

தங்கையின் முகத்தில் தெரிந்த பாவனையில் அடுத்து நரேன் யோசிக்கவே இல்லை. குழந்தையின் காதில், “தசிரா… தசிரா… தசிரா…” என மூன்று முறை சொல்ல, தொடர்ந்து அனைவரும் வரிசையாக சொல்ல, விக்ரமின் முகத்தில் நரேனின் செயலில் ஏதோ சாதித்த உணர்வு.

“விக்கி உனக்கு கால் பண்ணானா?” என ரவி முகுந்தனிடம் கேட்க,

“ம்ச்… இங்க இருந்து போனதுதான், அப்புறம் இல்லை. ரஞ்சிதான் கூப்பிட்டுட்டே இருந்தா. அவன் எடுக்கலன்னு புலம்பிட்டு இருந்தா.” என பொய்யை அடுக்க,

“ம்ம்… நானும் கூப்பிட்டேன் எடுக்கல, ரித்தியும் அதேதான் சொல்லிட்டு இருக்கா. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப் போறான்? யாருக்காக, யாரைப் பார்த்து இப்படி பயந்து ஓடிட்டு இருக்கான்? என்னோட சுயநலத்துக்காக அவன் வாழ்க்கையையும் கெடுத்துட்டேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு முகுந்த். ம்ச்…” என ரவி வருத்தமாகப் பேச,

விக்கியை லைனில் வைத்துக்கொண்டு என்ன பேச எனத் தெரியாமல், “விடுடா, அதெல்லாம் அவன் சரியாகிடுவான். உடனே அக்செப்ட் பண்ணிக்க முடியாது இல்லையா? அவனுக்கும் நாம டைம் கொடுக்கணும் தானே…” என முகுந்தனும் சொல்ல,

“ம்ம்ம்… ஸ்வாதியும் அம்மாவும் இப்படி கீழ்த்தரமா இறங்குவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல. இன்னைக்கு நிசா என் முகத்தைப் பார்த்து, ‘என் குழந்தைக்கு நீ செய்யாதன்னு’ சொன்னது, செருப்புல அடிச்ச மாதிரி இருந்தது. ஆனா அதனால எனக்கு வருத்தமெல்லாம் இல்ல. எல்லாமே என் தப்புதானே? ஸ்வாதியை ஆரம்பத்திலேயே தட்டி வச்சிருக்கணும். அதை செய்யாம விட்டதுனாலதான் இன்னைக்கு இவங்க வாழ்க்கை மோசமா போயிடுச்சு.” என மேலும் வருத்தமாக பேச,

“விடுடா, எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு. இனி அதை பேசி ஏன் எல்லாரும் வருத்தப்படுறீங்க? அடுத்து என்ன செய்யலாம், குழந்தையை எப்படி பார்த்துக்கலாம்னு யோசிங்க.” என முகுந்தன் சொல்ல,

“ம்ம்… இதுல நான் என்ன செய்ய முடியும் தெரியல. முழுக்க முழுக்க விக்ரம்தான் பார்க்கணும். ஸ்வாதிக்காகன்னு இனி எங்கேயும் நான் நிற்கமாட்டேன், அவங்க முடிவுதான். ஏற்கனவே சொத்துல பாதியைத் தொலைச்சிட்டா, விக்ரம் சேரையும் முடிச்சிட்டா. இதெல்லாம் எங்க கவனத்துக்கு வராம எவ்வளவு ப்ளான் பண்ணி செஞ்சிருக்கா? நினைச்சாலே நம்ம ஸ்வாதியா இதுன்னுதான் நினைக்க வைக்குது. போனது எல்லாம் அவளோடவே போகட்டும், இனியாச்சும் விக்கி, நிசாவும் குழந்தையுமா வாழட்டும். அப்படி வாழ்ந்தா சந்தோசப்படுற முதல் ஆள் நான்தான்.” என மேலும் மேலும் குற்ற உணர்வில் பேச,

“ம்ச்… ரவி நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி இல்லடா விக்ரம். அவனுக்கு இன்னும் ஸ்வாதியை விட்டு வெளியில வரமுடியல. அவ செஞ்சதை நம்பவே அவனுக்கு முடியல. அதுக்குள்ள குழந்தை, நிசான்னும் போது ஒரு தயக்கம், பயம். அதெல்லாம் சேர்ந்து ரொம்பவே குழப்பிக்கிறான். அவன் பக்கமும் நாம யோசிக்கணும் இல்லையா? அதோட அவனுக்குத் தெரியாதது என்ன இருக்கு? குழந்தைக்காகவாவது தன் வாழ்க்கையை சரி செஞ்சிக்குவான் ரவி. அவனுக்கு கொஞ்சம் டைம் கொடுப்போம். குட்டிக்கு விவரம் தெரியும்போது ரெண்டு பேரும் ஒன்னா இருப்பாங்க. நீ வேணும்னா பாரு.” என்ற முகுந்தனின் கையைப் பிடித்த ரவி,

“நீ சொல்றது நடந்தா ரொம்ப சந்தோசம்டா, பார்ப்போம்.” என ரவி சொல்ல, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமிற்கும் அதே எண்ணங்கள்தான்.

அவனுக்கு நிறைய நிறைய யோசிக்க வேண்டும். முதல் தடவை அவசரமாக செய்ததைப் போல எதையும் செய்து மீண்டும் வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொள்ள அவன் விரும்பவில்லை.

அது நிசப்திக்கும் குழந்தைக்கும் செய்யும் நியாயம் இல்லை என்று அவனுக்கும் புரியத்தான் செய்தது. அவனுக்கு இன்னும் ஸ்வாதியின் மரணத்தில் பல குழப்பங்கள், பல சந்தேகங்கள் அதையெல்லாம் தீர்த்துக் கொள்ளாமல், நிசாவை இந்த வாழ்க்கைக்குள் இழுக்க அவனுக்கு விருப்பம் இல்லை. அதோடு அவளுக்கும் யோசிக்க, நிதானிக்க காலம் கொடுக்க வேண்டும் என்றும் நினைத்தான்.

அன்று மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவனுக்கோ நிசப்தியின், ‘லவ் யூ சீனியர்’ என்ற வார்த்தைகளே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

இத்தனை நடந்தும் இந்த வலியிலும் தன்னை எதிர்பார்த்து, தன் மீதுள்ள காதலை வெளிப்படுத்திய அந்தப் பெண்ணை வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

இப்படியொரு காதலை எண்ணி அவனுக்கு கர்வம் கூட வந்தது எனலாம். அதே சமயம் அந்தக் காதலை ஏற்க முடியாத தன்நிலையை எண்ணி கோபமும் ஆற்றாமையும் இயலாமையும் போட்டிப் போட்டு வர, இந்த நிலைக்கு கொண்டு வந்த விக்னேஷையும் ஸ்வாதியையும் கொல்லும் அளவிற்கு ஆத்திரம் உண்டானது.

அவர்கள் மட்டும் இருந்தால் என யோசித்தவனுக்கு அப்போதுதான் சிறு பொறி, ஒருவேளை இருப்பார்களோ எனத் தோன்றியது. இவ்வளவு திட்டங்களைத் தீட்டி, கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவனைப் பாதுக்காத்திருக்கிறாள் என்றால், எப்படி இறந்திருக்க முடியும்? இதில் எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று யோசித்தவன், கண்டுபிடிக்க வேண்டும், கண்டுப்பிடித்தே ஆகவேண்டும் என்று நினைத்தான்.

நினைத்த அடுத்த நொடி அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டான். தனக்கு தெரிந்த மிகவும் நம்பிக்கையான துப்பறியும் நிறுவனத்திடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்திருந்தான்.

விக்ரமின் எண்ணங்கள் இப்படியாக சுழல, இங்கு முகுந்தனிடம் வந்த ரஞ்சனி அவன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து, “விக்கி நீ பார்த்தது போதும், நீ சொன்ன பேரைத்தான் பாப்பாக்கு வச்சிருக்கு. உன் கிஃப்ட் நரேன் போட்டுட்டான். இப்போ நானும் என் புருஷனும் உன் பொண்ணுக்கு கிஃப்ட் கொடுக்க போறோம். சோ, பை…” என கட் செய்துவிட, முகுந்தனோ பட்டென்று ரவியைப் பார்த்து, “ஈஈஈ…” என இளித்துவிட்டு, “கோர்த்து விட்டுட்டியேடி கொலைகாரி…” என மனைவியைப் பார்த்து பல்லைக் கடித்துவிட்டு, முறைத்துக் கொண்டிருந்த ரவியைப் பார்த்து மீண்டும் பல்லைக் காட்டிவிட்டு, விட்டால் போதும் என்று அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டான்.

கணவனை யோசனையாகப் பார்த்த ரஞ்சனி, “ஏன் அண்ணா, முகுந்த் இப்படி ஓடுறார்?” என ரவியிடம் கேட்க,

“உன் புருஷன் வாயைத் திறந்தா சொல்றது எல்லாம் பொய், எதுக்கும் நீ பார்த்து இரு.” என முகுந்தனை மாட்டிவிட,

“எனக்குத் தெரியும், இன்னைக்கு இருக்கு அவருக்கு…” என அவனைத் தேடிப்போக, ரவியின் முகத்தில் மலர்ந்த புன்னகை, இங்கு விக்ரமின் முகத்திலும் அதே புன்னகை.

சிரிக்கவே மறந்தவனின் உதட்டில் மலர்ந்த புன்னகை. அது அன்றைய நாளின் நிகழ்வுகளினால் தோன்றியது என்றால் பொய்யில்லை.

விசேஷம் முடிந்து அனைவரும் கிளம்ப, குழந்தையுடன் தன் அறைக்கு வந்த நிசப்திக்குள் வழக்கம்போல பல யோசனைகள்.

அன்று மருத்துவமனையில் நடந்ததை எல்லாம் யோசித்தவளுக்கு தன் மீதே வெறுப்பு உண்டானது.

தன் வாழ்க்கையை மொத்தமாக சூரையாடிய ஒருவனை இன்னும் தன் ஆழ்மனம் விரும்புகிறதை நினைக்கையில், அதையும் அவன் கேட்டு தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான் என்று யோசிக்கையில், ஏன் இந்த வாழ்க்கை என்ற எண்ணம்தான்.

இதிலிருந்து வெளியில் வர வேண்டும். யாரையும் சாராமல் இருக்க வேண்டும். என்ன செய்ய? என்ன செய்ய? என்ற நினைப்பு வேறு.

அதோடு மற்றொன்று ரேணுகாவை நினைத்து கலங்கினாள். தனக்காக சொந்த பிள்ளைகளையே ஒதுக்கி இங்கு வந்து கஷ்டப்படும் போது, எப்படி சுயநலமாக அவரை விட்டுப் போவது என்ற குற்றவுணர்வு.

ஆனால் இங்கிருந்து இவர்களை விட்டு ஒதுங்கி தூரமாக, ரொம்பத் தூரமாகப் போய்விட வேண்டும் என்று மட்டும் முடிவாக யோசித்திருந்தாள்.

அப்போது, “நிசாம்மா என்ன யோசனை?” என்றபடியே வந்து அமர்ந்தான் நரேன்.

அவனைப் பார்த்ததும் முகம் இளக, “ம்ம் சும்மாதா ண்ணா… அடுத்து என்னனு யோசிச்சேன்.” என கண்களை எட்டாத புன்னகையுடன் கூற,

“என்னடா? என்ன யோசனை? நீ எதுக்கு அடுத்து என்னனு எல்லாம் யோசிக்குற? அதுதான் நான் இருக்கேனே! அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ மறுபடியும் கண்டதையும் யோசிச்சு சின்னப்புள்ளத்தனமா பிரச்சனையை இழுத்துக்காத.” என படபடவென்று பேச,

“ஹேய்! இரு… இரு… நீ எதுக்கு இப்போ இவ்வளவு பதட்டப்படுற? ஒரு தடவை செஞ்ச தப்பை மறுபடியும் செய்ய நான் என்ன முட்டாளா? இது வேற… அதை விடு, நீ இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படியே இருப்ப? எப்போ உஷாவை அழைச்சிட்டு வருவ? அவ இருக்குற இடம் தெரிஞ்சதா, இல்லையா?” என பேச்சை மாற்ற,

“ம்ம்ம்… இருக்கா… எங்கையோ இருக்கா… ஆனா சேஃபாதான் இருக்கா. வருவா, நம்புவோம்.” என வேதனையோடு பேச, நரேனின் இந்த வேதனைக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ள, ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்று முடிவே செய்துவிட்டாள் நிசப்தி.

அவளின் இந்த முடிவால் பாதிக்கப்படுவது விக்ரம் மட்டுமல்ல நரேனும் என்றுத் தெரிந்தால், அந்த முடிவை எடுக்காமல் இருந்திருப்பாளோ?

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 13, 2026 - 5:18 pm

இப்பவாவது விக்ரம் மனசுல அந்த ஸ்வாதி உயிரோட இருந்தாள்ன்னு தோணிச்சே அதுவே ஒரு துப்புத் தான் போங்க.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment