தளிர் 52
“விக்கி யூ ஆர் ஆல் ரைட் விக்கி? யூ ஆர் ஆல் ரைட் விக்கி? நீ நல்லாயிட்ட விக்கி… என்னைப் பார்க்குற விக்கி, நீ பேசுற விக்கி…” என அழுகையும் புன்னகையுமாகத் தன்னை அணைத்து அழுத பெண்ணை ஆச்சரியமாய் பார்த்தான் விக்னேஷ். அவனுக்கு இந்த ஸ்வாதி மிகவும் புதிது.
கல்லூரி நாட்களில் தன்னிடம் காதலை சொல்லும் போது பெரிதாக எந்த ஈர்ப்பும் அவள்மீது இல்லை. அதனாலே அவள் காதலை நிராகரித்தான். அதற்கு மற்றொரு முக்கியக் காரணம் விக்ரமும் ரவியும்தான்.
விக்ரமை அவனுக்கு பிடிக்காது, விக்ரமின் நண்பன் என்பதால் ரவியையும் பிடிக்காது. அவர்கள் வீட்டுப் பெண் என்பதால் மட்டுமே ஸ்வாதியின் காதலை நிராகரித்தான்.
ஆனால் அவன் நிராகரித்ததையும் பொருட்படுத்தாது, தன்னைக் காப்பாற்றி இத்தனை தூரம் ரிஸ்க் எடுத்து, இங்கு வரை கொண்டு வந்திருக்கிறாள் என்றால், அவளது காதல் எத்தனை உண்மை? தன் மீது எத்தனை காதல்? இவளை மறுத்துவிட்டோமே என தனக்குள்ளே புழுங்கிக் கொண்டான் விக்னேஷ்.
இப்போது அவனது மனதிலும் மூளையிலும் ஸ்வாதி மட்டுமே நிலைகொண்டிருந்தாள். இன்னும் நடந்த எதுவும் அவனிடம் சொல்லப்படவில்லை. ஆனாலும் அவளை நம்பத் தோன்றியது.
தன் கைகளைப் பிடித்து அழுது கொண்டிருந்தவளின் கைகளில், மெல்ல அழுத்தத்தைக் கொடுத்து தன்னைப் பார்க்க வைத்தவன், ‘அழாதே…’ என்பது போல் தலையை ஆட்டினான்.
அது புரிந்தது போல, “நான் அழல விக்கி, ரொம்ப பயந்துட்டேன். நீ இனி எனக்கு கிடைக்க மாட்டியோன்னு ரொம்ப பயந்துட்டேன்.” என்றவளுக்கு மேலும் மேலும் கண்ணீர் வழிந்தது.
அதைத் துடைத்து விட்டவன் அறையைச் சுற்றி கேள்வியாகப் பார்த்தான். அதில் இருந்த கேள்விகளை உணர்ந்தவள் “உனக்கு நெறைய சொல்லணும் விக்கி. ஆனா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், நீ மென்டலி அன்ட் ஃபிசிக்கலி ஸ்ட்ராங் ஆனதும் சொல்றேன். இப்போ கமல் நம்மகூட இருக்கான். அவன்தான் எல்லாம் பார்த்துக்குறான்.” என்றவளின் வார்த்தைகள் புரியவில்லை என்றாலும், ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது.
‘சரி’ என்பது போல தலை அசைய, மூளை அதற்கு மேல் யோசிக்க விடவில்லை. எடுத்துக்கொண்ட மருந்துகளின் வீரியத்தில் கண்கள் சோர்வைக் காட்ட அதையும் உணர்ந்தவள், “தூங்கு விக்கி, யூ ஆர் ஆல்ரைட். பார்த்துக்கலாம், நான் இங்கதான் இருக்கேன்.” என விக்னேஷின் கைகளை வருடியபடியே மென்மையாக பேச,
அந்த குரலில் இருந்த குழைவும் அன்பும், அந்த வருடலில் இருந்த இதமும் சேர, விக்கியும் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றான்.
அவன் தூங்கிய சில நிமிடங்களில் ஸ்வாதியின் போன் அலறியது. அதை எடுத்து வேகமாக அதன் ஒலியைக் குறைத்துவிட்டு, “சொல்லு கமல், எனி இம்பார்டன்ட் நியூஸ்…?” என்றாள் மெல்ல.
“எஸ் ஸ்வே, நாம நினைச்ச எதுவும் அங்க நடக்கல. ஸ்பை கால் பண்ணான், நான் அப்பவே சொன்னேன். அந்த நிசப்தியை அப்படியே விட்டுட்டு வர வேண்டாம்னு கேட்டியா? இப்போ அவ குழந்தை பெத்து, அதை அவங்க குடும்பமே கொண்டாடிட்டு இருக்கு. அவ அப்பனை கொன்ன மாதிரி இவளையும் கொன்னுருந்தா இப்படியெல்லாம் ஆகிருக்குமா? ச்சே…” என கமல் கோபத்தில் படபட பட்டாசாக பொரிய,
ஆனால் கமலைப் போல அவளுக்கு கோபம் எல்லாம் வரவில்லை போல, “ஓ…” என நிதானமாக இழுத்தவள், “விக்ரம் என்ன ஆனான்? அவனைப்பத்தி சொல்லு.” என்றாள் கடினமானக் குரலில்.
“அந்த இடியட் கொஞ்ச நாள் தேவதாஸ் போல பைத்தியம் பிடிச்சு, இல்ல இல்ல ஸ்வாதி பைத்தியம் பிடிச்சு சுத்தினான். அப்புறம் எங்கேயும் இல்ல, இப்போ பிசினஸ் வேலையா ராஜஸ்தான் போயிருக்கான் போல. உன் அண்ணன்தான் இதெல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்கான். இன்னும் ஒன் மன்த்ல இந்தியா கூப்பிட்டு வந்துருவாங்கன்னு நியூஸ்.” என்றதும்,
“ஓ… ஓகே கமல், இப்போ நாம எதுவும் பண்ண வேண்டாம். விக்ரம் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, அவன் கண்டிப்பா நிசாவை ஏத்துக்க மாட்டான். அப்படியே ஏத்துக்கிட்டாலும் குழந்தையை மட்டும்தான் அடாப்ட் பண்ணுவான். சோ டென்சன் ஏத்திக்க வேண்டாம். இருந்தாலும் இனி நாம கவனமா இருக்கத்தான் வேணும்.” என்று பேசியபடியே யோசித்தவள்,
“எப்படியும் சேர்ஸ் அண்ட் ப்ராப்பர்டி விஷயத்துல ரவி என்மேல கோபத்துலதான் இருப்பான். அதுவும் நிசாவுக்கு ஹெல்ப் பண்ண ஒரு காரணமா இருக்கலாம்.” என்றவள் சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “கமல் அங்க நம்மாளை வச்சு அந்த குழந்தையைப் போட்டிரு, முடிஞ்சா நிசப்தியையும்…” எனக் கட்டளையாகச் சொல்ல,
“நானும் அதுதான் நினைச்சேன், ஃபர்ஸ்ட் அந்த குழந்தை. அதைப் பார்த்து அந்த நிசப்தி துடிக்கணும், கதறணும். ஏன்டா இந்த வாழ்க்கைன்னு அவளே தற்கொலை செஞ்சு சாகணும். அதுதான் அவ விக்கிக்கு செஞ்சதுக்கான தண்டனை.” என கமலும் ஆத்திரமாக கூறினான்.
“எஸ்… எஸ்… என் விக்கியை இப்படி படுக்க வச்சவளை அப்படியே விட்டுட்டு வந்தது, எவ்வளவு தப்புன்னு எனக்கு இப்போதான் புரியுது. அவ சாகணும் கமல், துடிக்க துடிக்க சாகணும். ஏன்டா இந்த வாழக்கை? ஏன் இவனை பகைச்சிக்கிட்டோம்னு சாகணும்.” என ஆத்திரமாகக் கத்தியவள், விக்னேஷிடம் தெரிந்த அசைவில் தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கி, குரலை சிறிதாக்கி, “ஓகே கமல், நீ உடனே இங்க வா. மத்ததை நேர்ல டிஸ்கஸ் பண்ணிக்கலாம்.” என போனை வைத்து விட்டவளுக்கு பல யோசனைகள்.
‘அன்னைக்கு கமல் சொன்ன மாதிரியே அந்த நிசாவைப் போட்டிருந்தா, இன்னைக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. விக்ரம் எப்படியும் அவளை சேர்த்துக்க மாட்டான்னு நினைச்சு அவளை விட்டது தப்பா போச்சு. எல்லாரும் சேர்ந்து ஃபங்க்ஷன் பண்றாங்க என்றால், சீக்கிரம் விக்ரம் மூளையைக் கழுவி நிசப்தியை சேர்த்து வைக்கவும் வாய்ப்பிருக்கு. அதோட விக்ரமும் ஒரு செண்டிமென்ட் இடியட், அவனுக்கு குழந்தைகள் மேல பாசமும் அதிகம். கண்டிப்பா அவன் மாறவும் வாய்ப்பிருக்கு. அதுக்கு முன்னாடி இந்த வேலையை முடிச்சிடணும்.’ என சிந்தித்தபடியே அதற்கான வேலைகளை யோசிக்க ஆரம்பித்தாள்.
அடுத்த சில நிமிட நேரங்களில் வந்த கமலுடன் வெளியே வந்த ஸ்வாதி, “என்ன பண்ணலாம் கமல்?” எனவும்,
“அவளை அப்படியே விட்டிருக்கக்கூடாது ஸ்வே, இங்க பாரு இங்க பாரு எல்லோரும் எவ்வளவு சந்தோசமா இருக்காங்கன்னு?” என தன் அலைபேசியில் இருந்த படங்களைக் காட்டி கொந்தளித்தான்.
அதைப் பார்த்து ஸ்வாதிக்கும் கோபமும் ஆத்திரமும் கட்டுக்கடங்காமல் பெருகியது. இது எல்லாவற்றிற்கும் விக்ரமின் அம்மாதான் காரணமாக இருக்கும் என்று ஸ்வாதிக்கு நூறு சதவீதம் நிச்சயம். முதலில் இவருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தவள்,
“கமல், அந்த குழந்தை அப்புறம் நிசப்தி எல்லாம் இருக்கட்டும், முதல்ல விக்ரமோட அம்மாவுக்கு கொஞ்சம் பயம் காட்டிவிடணும். அந்தம்மாவுக்கு முன்னாடியே என்னைப் பிடிக்காது, இப்போ நான் இல்ல, அந்த இடத்துக்கு நிசப்தி வரணும்னு அந்தம்மாதான் இதெல்லாம் பன்றது போல இருக்கு. முதல்ல அந்த அம்மாவை கவனி, அப்புறம் மத்தவங்களைப் பார்த்துக்கலாம்.” என்றபடியே தன்னுடையத் திட்டத்தைக் கூற ஆரம்பித்தாள்.
அதைக் கேட்ட கமலுக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் பயமே வந்துவிட்டது. நிசப்தி, குழந்தை என்றால் கூட விக்ரம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. அவனது அம்மாவையும் தங்கையும் தொட்டால் சும்மா இருப்பானா? யோசித்தபடியே அனைத்துக்கும் சரி, சரியென்று தலையசைத்தான்.
“இந்த வீக் நீ கிளம்பு கமல், விக்கியை நான் டிஸ்சார்ஜ் பண்ணிட்டு வீட்டுக்கு கொண்டு போயிடுறேன். சப்போஸ் உன்னை அவங்க கண்டுபிடிச்சா நூல் பிடிச்சு ஹாஸ்பிடலையும் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு. இன்னும் கொஞ்ச நாள் நான் விக்கியை சேஃப் செய்யணும். சோ, பீ சேஃப்.”
“ஸ்வே, இது தெரிஞ்சா விக்ரம் சும்மா இருக்கமாட்டான்.”
“எனக்குத் தெரியும் கமல், பட் அந்த லேடியை அப்படியே விட எனக்கு மனசில்ல. என்னை சீண்டினதுக்கு கொஞ்ச நாள் ஹாஸ்பிடல் எப்படி இருக்கும்னு டூர் போயிட்டு வரட்டும்.”
“ம்ம் ஓகே, இனி நான் என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்ட. நான் டிக்கெட்ஸ் பார்க்குறேன், அதுக்குள்ள உனக்கு வீடு எல்லாம் பார்த்து, உங்களை அங்க செட்டில் செஞ்சிடுறேன்.”
“ம்ம்… இந்த டாக்டரோட ஃபார்ம் அவுஸ் ஒன்னு இருக்காம், அங்கேயே போயிடலாம்னு ஐடியா. ரிசெர்ச் சென்டரும் அங்கேயே இருக்கிறதுனால சடனா யாரும் வரமாட்டாங்க. அன்ட் கவர்மெண்ட் அப்ரூவல் இல்லாம செர்ச் பண்ணவும் முடியாது. பக்கா சேஃபான இடம், சோ டோன்ட் வொரி.”
“ஓகே ஸ்வே, அப்போ மத்த வேலைகளை நான் பார்த்துக்குறேன்.” என்ற கமலுக்கு விடை கொடுத்து அனுப்பியவள், விக்கியின் அறைக்குள் நுழைந்தாள்.
இங்கு ரேணுகா வேறு இந்தியா போகலாம் என்று வார்த்தைகளால் கூறாமல், செய்கைகளால் ரித்தியைப் பற்றி புலம்புவது, விக்ரமைப் பற்றி புலம்புவது என நிசப்தியை பல வழிகளில் நச்சரிக்க ஆரம்பித்தார்.
இது நிசப்திக்கு புரிந்தாலும், அவளால் இந்தியா வர ஒத்துக்கொள்ள முடியவில்லை. பேர் சூட்டும் விழா முடிந்த இந்த ஆறு மாதத்தில் ரவியும் ரித்தியும் இரண்டு முறை வந்து சென்றிருந்தனர். ரித்தி இப்போது இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்க, அடுத்து அவளால் வர முடியாது என்று தெரியவே, ரேணுகாவின் புலம்பல்கள் தொடங்கியது.
அன்று முகுந்தனும் ரஞ்சனியும் வீட்டுக்கு வந்திருக்க, இருவர் முகமும் கலையிழந்ததை போல் இருந்தது. அதோடு வருவதற்கு முன் இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்க வேண்டும். அதன் சுவடாக இருவரும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர்.
இது ரேணுகாவிற்கும் நிசப்திக்கும் புரிந்தாலும், அவர்களாக சொல்லாமல் கேட்கக்கூடாது என விருந்தோம்பலைக் கவனித்தனர்.
“தசிக்குட்டி எங்க நிசாம்மா?” என்ற முகுந்தனுக்கு, “ஆன்ட்டி குளிக்க வச்சாங்க அண்ணா, அதான் மேடம் நல்ல தூக்கம்.” எனச் சிரிக்க, “ஒரே ஆட்டம் தண்ணில…” என ரேணுகாவும் சொல்ல, மற்றவர்களும் சிரித்துக்கொண்டனர்.
சில நிமிட அமைதிக்குப் பிறகு, “முகுந்தனோட பேரண்ட்ஸ் மொத்தமா எங்களை சென்னை வரச் சொல்றாங்க நிசா. அம்மாவும் அப்பாவும் சரின்னு சொல்லிட்டாங்க. எனக்குத்தான் இங்க இருந்து போகவே பிடிக்கல.” என என்ன பிரச்சனை என்பதை தெரிவித்தாள் ரஞ்சனி.
“என்ன ரஞ்சி திடீர்னு…?” என்ற நிசப்தியிடம்,
“சடனா எல்லாம் இல்ல நிசா. முன்ன இருந்தே அம்மாவும் அப்பாவும் கூப்பிட்டுட்டேதான் இருந்தாங்க. நான்தான் நீ இங்க இருக்கவும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிருந்தேன். இப்போ அப்பாவுக்கு ஹெல்த் இஸ்ஸூஸ் வரவும் அம்மாவுக்கு பயம். அதனால மொத்தமா அங்க வர சொல்றாங்க.” என மனைவிக்குப் பதிலாக முகுந்தன் பதில் கொடுக்க,
“ஹோ…” என்றவளுக்கு அடுத்து என்ன பதில் சொல்வது என்றுத் தெரியவில்லை, அமைதியாகிவிட்டாள்.
“அவங்க கேட்குறதும் சரிதானே ரஞ்சி, அண்ணாவுக்கு எல்லாம் தெரியும். நீ மூட்டை கட்டுற வேலையைப் பாரு. அவங்க ஹெல்தியா, நல்லா இருந்தாங்க. நீங்க தனியா இருக்கணும்னு சொன்னதும் அதுக்கு அவங்க ஒத்துக்கிட்டு டைம் கொடுத்தாங்க. இப்போ அவங்களுக்கும் வயசாகிடுச்சு, கூட இருந்து நீங்கதானே பார்த்துக்கணும். அதுக்காக போய்த்தானே ஆகணும். பெத்த பிள்ளைங்க கூட இருக்குறதுக்கு எல்லாம் ஒரு குடுப்பினை வேணும் ரஞ்சி. நீ சண்ட, சச்சரவு போடாம முகுந்தன் கூட கிளம்பு. எங்களுக்காகப் பார்க்காத, நாங்களும் சீக்கிரம் அங்க வந்துடுவோம்.” என்ற ரேணுகாவை அமைதியாகப் பார்த்தாள் நிசப்தி.
இத்தனை நாள் மறைமுகமாக சொல்லிக் கொண்டிருந்தவர், இன்று நேரடியாகவே சொல்லிவிட்டார். இனி என்ன செய்வது என்ற யோசனைகள் சூழ, மற்றவர்கள் பேசியது எதுவும் அவள் காதில் ஏறவில்லை.
“அத்தை இதெல்லாம் விக்ரம் ப்ளான்தான், அவன்தான் எங்க மாமியாருக்கு கொம்பு சீவி விட்ருக்கான். நாங்க இங்க இருந்தா நிசா அங்க வரமாட்டான்னு நினைச்சு, இப்படி பண்ணிட்டு இருக்கான். இப்போவும் நான் நிசாவுக்காகத்தான் போறேன்.” எனக் கணவனை முறைத்தபடியே ரேணுகாவிடம் பேசினாள் ரஞ்சனி.
“அப்படி இருந்தா சந்தோசம்தான் ரஞ்சி, ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை. உன் அத்தானுக்கு அவ்வளவு சீக்கிரம் ஸ்வாதி பைத்தியம் தெளியாது.” என்றவர் நிசப்தியைப் பார்க்க, அவளோ பார்வை இங்கிருந்தும் யோசனை வேறெங்கோ வைத்தபடி அமர்ந்திருந்தாள்.
அவளைக் கவனித்தபடியே, “நான் செய்றது தப்புன்னு புரியுது ரஞ்சி, ஆனா எனக்கப்புறம் விக்ரம் தனியாகிடுவானோன்னு ஒரு பயம் வந்துடுச்சு. அதான் நிசாவுக்குப் பிடிக்கலன்னாலும் பரவாயில்லன்னு அவளை ஃபோர்ஸ் பண்றேன். இதுவும் ஒரு வகையில சுயநலம்தான் இல்லையா?” என்றவரின் குரலில் அத்தனை குற்றவுணர்ச்சி.
“அத்தை நீங்க விக்கிக்காக யோசிக்கலன்னு எனக்குத் தெரியும். நிசாவுக்காக அவ குழந்தைக்காகன்னு யோசிக்கிறீங்கன்னும் எனக்குத் தெரியும். யார் என்ன சொன்னாலும் நான் உங்களைத் தப்பாவே நினைக்க மாட்டேன் அத்தை. நானும் நிசாக்கிட்ட பேசுறேன், நீங்க டென்சன் ஆகாதீங்க.” என்றுவிட்டு முகுந்தனோடு கிளம்பிவிட்டாள்.
அவர்கள் கிளம்பிய சில நிமிடங்களில், “நிசாம்மா நான் மார்கெட் போயிட்டு வரேன், பாப்பா எழுந்தா பார்த்துக்கோ.” என்றவரிடம், ‘சரி’ என்று தலையசைக்க ஒரு பெருமூச்சோடு கிளம்பினார்.
ஐபிஎல் டீமில் ராஜஸ்தான் அணியின் லீகல் அட்வைசராகத்தான் சென்றிருந்தான் விக்ரம். அப்போது வீரர்களுக்கான ஏலம் போய் கொண்டிருக்க, எந்தெந்த வீரர்கள் எப்படி வேண்டும் என்று அவனது டீமுடன் விவாதித்துக் கொண்டிருந்த நேரம், அவனுக்குப் பின்னே ஃபோனுடன் வந்து நின்றான் நரேன். அவன் முகத்தில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.
புருவத்தைச் சுருக்கி யோசனையாக நரேனைத் திரும்பிப் பார்க்க, “பாஸ் அம்மாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சாம், ஹாஸ்பிடல்ல இருக்காங்கன்னு முகுந்தன் சொல்றார்.” என அதேப் பதட்டத்துடன் சொல்ல, “வாட்…!” என்று எழுந்தவன், சூழ்நிலைக் கருதி அமர்ந்து, “என்னாச்சு? எப்படி…?” என பயத்துடன் கேட்க,
“மார்கெட் போயிட்டு வரும் போது, கார் அடிச்சிட்டு போயிருக்கு. தலையில் காயம், கால்ல ஃப்ராக்சர்னு முகுந்தன் சொன்னார்.” என்றதும், “பாப்பா…” என்றான் பதட்டத்துடன்.
“தனியாதான் போயிருக்காங்க.” என்று நரேன் சொன்னதும் ஆசுவாசமானவன், “ஓகே, டிக்கெட்ஸ் இருக்கா பாரு, ஸ்ட்ரெயிட் ஃப்ளைட் இருக்கான்னு செக் பண்ணிக்கோ. அரேஞ்ச் பண்ணிட்டு சொல்லு, இங்க நான் சொல்லிட்டு வந்துடுறேன்.” என்றவன், அந்த அணியின் முக்கியஸ்தரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
***
1 comment
ஐய்யே..! இந்த ஸ்வாதி ஏன் தான் இப்படி மானம் கெட்டு பிழைக்கிறாளோ தெரியலை போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797