Home Ongoing Novelsமுத்தமழை – 25

முத்தமழை – 25

by Vathani S

முத்தமழை – 25

மிக மிக அழகாக சென்றது கர்ணன் மற்றும் வல்லபியின் திருமண வாழ்க்கை. 

இருவருக்குள்ளும் இருக்கும் அந்நியோன்யத்தை பார்த்து சொக்கலிங்கத்திற்கும், அவள் குடும்பத்திற்கும் அத்தனை மகிழ்வும் வியப்பும் உண்டானது என்றால், சிலருக்கு அதிலும் ராஜலட்சுமிக்கு வெறுப்பும் எரிச்சலும் உண்டானது நிஜம்.

மறு வீட்டு விருந்து முடிந்த கையோடு வெற்றி தன் வேலைக்கு கிளம்பிவிட, மற்றவர்களின் வாழ்க்கையும் இயல்பிற்கு திரும்பியது.

திருப்பூரில் இருக்கும் கார்மெண்ட்சில் யாழினியை, அவளுக்கேத் தெரியாமல் மெல்ல மெல்ல தங்கள் தொழிலை கற்றுக்கொள்ள வைத்திருந்தான் கர்ணன்.

அவளது எதிர்காலம் திருப்பூரில் தான் எனும் போது, அங்கிருக்கும் தொழிலை, அதிலும் அப்பா மிக மிக விரும்பி செய்த ஒரு தொழில், அது அவரின் செல்ல மகளின் கைக்கே செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.

இதை அவன் யாரிடமும் கேட்கவில்லை, இப்படி செய்கிறேன் என்று சொல்லவுமில்லை. ஆனால் அது வீட்டிற்கு தெரியும் போது ஒரு பிரளயமே வெடிக்கும் என அவன் அறியாமலும் இல்லை. நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான்.

கர்ணனுக்கு தன் செல்லத் தங்கையின் விருப்பம் தான் முக்கியமாகப்பட்டது.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை.. வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என சீதா முதல்நாளே வல்லபியிடம் கூறியிருந்தார். அதனால் காலையில் விரைவாகவே குளித்துக் கிளம்பி கீழே வந்திருந்தாள் வல்லபி.

வீடே இன்னும் உறக்கத்தில் தான் இருந்தது. அதை கவனித்தபடியே கிச்சனுக்கு சென்றவள் பாலை அடுப்பில் ஏற்றிவிட்டு சாமிக்கு படைக்க என்ன இனிப்பு செய்யலாம் என யோசித்து, உடனே கேசரி செய்ய முடிவு செய்து, வேக வேகமாக செய்ய ஆரம்பித்தாள்.

மூன்று காபி தயாரித்து, பாட்டிக்கும், மாமனாருக்கும், பாண்டியனுக்கும் எடுத்து வைத்தவள், கேசரியை ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து தனியாக வைத்தாள்.

சொக்கலிங்கத்தின் அறைக்கு செல்ல, அங்கு பாட்டியும் மாமனாரும் அப்போது தான் விழித்து இருந்தனர். 

பாண்டியன் மற்றொரு அறையில் இருந்து வந்தார்.

மூவருக்கும் காஃபியை கொடுத்தவள், பூஜை அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அப்போதே மணி ஆறாகிவிட்டது.

சரியாக அந்த நேரம் யாழி வர, “ஷப்பா வந்தியா.. சீக்கிரம் இந்த பூவெல்லாம் வச்சி விடு யாழி. நான் சந்தனம் குங்குமம் வைக்கிறேன்..” என வல்லபி கூற,

அப்போது தான் எழுந்து வந்த ராஜிக்கு அதைக் கேட்டு கோபம் பொங்கியது.

“நீதானே இந்த வீட்டுக்கு மூத்த மருமகன்னு பீத்திக்குவ.. நீயே செய்ய வேண்டியது தானே. என் பொண்ணு உனக்கு என்ன வேலைக்காரியா..?” என எரிச்சலாக கேட்க, யாழியின் கையில் இருந்த பூவை அமைதியாக வாங்கியவள், அந்த வேலையைத் தொடர,

“வல்லி.. உனக்கென்ன பைத்தியமா? அவங்கதான் ஏதோ சொல்றாங்கன்னா, நீயும் ஏன் இப்படி நடந்துக்கிற?” என்ற யாழினி தாயைப் பார்த்து, “ம்மா.. முதல்ல போய் அப்பாவை பாருங்க. அதைத் தவிர மத்த எல்லா வேலையும் செய்வீங்க.” என பல்லைக் கடித்தாள்.

“இப்போ நான் சொல்றது எல்லாம் உனக்கு புரியாது. புரியும் போது ரொம்பவே கஷ்டப்படுவ..” என அவரும் மகளைக் கடிந்துவிட்டு கணவரின் அறைக்கு சென்றுவிட்டார்.

இந்த சத்தத்தில் வீடே விழித்துவிட்டது. வல்லபி பூஜையை ஆரம்பிக்க, பாண்டியனின் உதவியோடு சொக்கலிங்கம் பூஜையறைக்கு வர, பாட்டியும் ராஜலட்சுமியும் அமைதியாகவே வந்து நின்றனர்.

பூஜை முடிந்து அனைவருக்கும் குடிக்க கொடுத்தவள், கணவனுக்கும் காஃபியை எடுத்துக்கொண்டு தங்கள் அறைக்குச் செல்ல, அதுவரை அமைதியாக இருந்த பாட்டி ராஜியிடம் வாய் திறந்தார்.

“அவ இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு மாசம் கூட ஆகல. ஆனா எவ்ளோ பொறுப்பா எல்லாத்தையும் பார்த்துக்குறா, எல்லாரையும் அனுசரிச்சு போறா. ஆனா நீ கட்டிக் கொண்டு வந்த மருமக இன்னும் ரூமை விட்டு வெளியில் வரல. இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா? என்ன பேசனுமோ யோசிச்சு பேசனும். வாய் இருக்கு, வல்லியை பேசனும்னு உன் இஷ்டத்துக்கு பேசக்கூடாது. இருக்க இருக்க கர்ணனுக்கு உன் மேல இருக்குற நல்ல எண்ணமே போயிடும் பார்த்துக்கோ..” என நீளமாக பேச,

“சித்தி.. என்ன பேசுறீங்க..? ரெண்டு பிள்ளைங்கள சமாளிச்சு பார்த்துக்கிறது என்ன சாதாரண வேலையா? ரெண்டும் சீக்கிரத்துல தூங்காதுங்க வேற.. சுமிக்கு அவங்களை சமாளிக்கவே நேரம் சரியா இருக்கும்.. இவளுக்கு என்ன புள்ளையா குட்டியா? அப்படி இருந்தாதானே சுமியோட கஷ்டம் புரியும்..” என ராஜியும் கடுப்பாகவே பேச, 

கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் கூட முடியல, அதுக்குள்ள புள்ளகுட்டி கேட்டா, மரத்துல இருந்து பறிச்சா போட முடியும். உன்கிட்ட பேச வந்தது என் தப்புதான்.. என ராஜியைப் பார்த்து கடுமையாக திட்டிவிட்டு நகர்ந்துவிட்டார் பாட்டி.

சொக்கலிங்கமும் மனைவியை முறைத்தபடியே பாண்டியனிடம் ‘தோட்டத்திற்கு போகலாம்’ என சைகையில் கூற, பாண்டியனும் சக்கர நாற்காலியை தோட்டத்தை நோக்கி நகர்த்திவிட்டான்.

யாழினிக்கு வீட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பார்த்து தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

வேலையாளிடம் சொல்லி காபியை வாங்கிக் கொண்டு தன்னறைக்குச் சென்று வெற்றிக்கு அழைக்க ஆரம்பித்தாள்.

முதல் அழைப்பிலேயே எடுத்தவன் “குட் மார்னிங் யாழிமா” என்றதும், “குட்மார்னிங் வெற்றி..” என்றாக் சுரத்தே இல்லாமல்.

அதை வைத்தே அவள் மூட் சரியில்லை என்று உணர்ந்தவன் “என்னாச்சு யாழி டார்லிங்குக்கு, ஏன் மார்னிங்கே இவ்ளோ டல்..” என்றான் பொறுமையாக.

“ம்ச்.. ஒன்னுமில்ல.. மார்னிங்கே இந்த அம்மா ஆரம்பிச்சிட்டாங்க. பாவம் வல்லி.. இன்னைக்கு அவ விரதம் வேற. காலையிலேயே அவளை டென்சன் பண்றாங்க..” 

“ம்ம்.. இதெல்லாம் தெரிஞ்சது தானே யாழி.. நீதான் வல்லியை பார்த்துக்கனும். நீ கூட இருக்குறது தான் எங்க எல்லாருக்கும் தைரியமே..”

“ம்ச் நான் என்ன செய்றேன். அண்ணாவே எல்லாம் பார்த்துப்பார். நான் அம்மாவை பேச பேச அவங்களுக்கு என் மேல கோபம் அதிகமாகிட்டே போகுது. அது நம்ம காதலுக்கு பிரச்சினையா வந்து முடியுமோன்னு பயமா இருக்கு வெற்றி..”

“இப்போ என்ன சொல்ல வர யாழி. அதுக்காக வல்லிக்கு சப்போர்ட் பண்ண முடியாதுன்னு சொல்றியா? இல்ல என்னை மேரேஜ் பண்ண முடியாதுன்னு சொல்றியா?” என கடினமாக வெற்றி கேட்க, இந்த மாதிரியெல்லாம் யோசித்திராத யாழிக்கு சட்டென கண்கள் கலங்கிவிட்டது.

“வெற்றி..” என கலங்கிய குரலில் யாழினியின் குரல் வரவும் தான் வெற்றி தன் நிதானத்திற்கே வந்திருந்தான்.

“ம்ச்.. சாரி சாரி யாழி..” என்றான் மிக வருத்தமாக.

“நான் அப்படியெல்லாம் யோசிக்கிற ஆளா வெற்றி. நீ அப்படித்தான் என்னை நினைச்சிட்டு இருக்கியா..” என்றவளின் குரல் முற்றிலுமே உடைந்து போயிருந்தது.

“ம்ச் யாழிமா சாரி சாரிடா.. ப்ளீஸ் கண்ணா அழாத.. நான் ஒரு லூசு. நீயே டென்சன்ல பேசிட்டு இருக்கும் போது நானும் உன்னை டென்சன் பண்ணிட்டேன். யாழி கண்ணா ப்ளீஸ்டா மன்னிச்சுக்கோ, இனி எப்பவும் இப்படி பேசமாட்டேன்..” என எவ்வளவோ சமாதானம் செய்தும், யாழினியின் மனம் அவனின் அந்த பேச்சை சாதாரனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

“நான் கிளம்பனும் வெற்றி. அண்ணா இன்னைக்கு கார்மென்ட்ஸ் போகனும் சொன்னாங்க. நான் அவர்கூடவே போகனும்.. பை..” என வைத்துவிட, ‘அய்யோ’ என்றானது வெற்றிக்கு.

இப்போது எப்படி தன்னவளை சமாதானம் செய்வது என தெரியாமல் தவித்து போனான்.

இங்கு அறைக்குள் வந்த மனைவியையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கர்ணன்.

அவள் முகம் வழக்கம்போல மலர்ச்சியாகவே இருந்தது. 

“அம்மு இங்க வா..” என்றவனிடம்

“நோ பாவா.. நான் இன்னைக்கு விரதம். நீங்க அமைதியா எந்த சேட்டையும் செய்யாம கிளம்புங்க. நைட் பேசிக்கலாம்..” என்றவள் கண்ணாடி முன் அமர்ந்து தலையை உலர்த்த ஆரம்பித்தாள்.

“ஹேய் இதெப்ப.?” என்றான் அதிர்ச்சியாக.

“ஹான் நேத்து நைட்டே சொன்னேன் தானே..” என்றாள் அவளும் முறைப்பாக.

“அப்படியா? நீ சொன்னதை கவனிக்கவே இல்ல அம்மு. சொல்லிருந்தா இன்னும் கொஞ்சம் எனெர்ஜி ஏத்திருப்பேன்..” என்றான் பாவமாக.

“என்ன கவனிக்கலயா? நான் சொன்ன பிறகுதானே நீங்க பாஞ்சி பாஞ்சி வேலை பார்த்தீங்க. இப்போ என்ன பேச்சு பேசுறீங்க. உங்களை என்னதான் பண்றது..” என பல்லைக் கடித்தவளைப் பார்த்து அசடு வழிந்தான் கணவன்.

“எழுந்து கியம்புங்க பாவா.. யாழி ரெடி ஆகிட்டா.”

“ஹ்ம்ம் இன்னைக்கு கார்மென்ட்ஸ்ல ஒரு மீட்டிங்க் இருக்கு. அதுக்கு யாழியை கூட்டிட்டு போறேன். கொஞ்சம் கொஞ்சமா கார்மென்ட்ஸை அவ பார்க்கிற மாதிரி கொண்டு வரனும். பின்னாடி அவ திருப்பூர்ல செட்டில் ஆனா அவளே பார்த்துக்கிற மாதிரி இருக்கும்..”

“அவ திருப்பூர்ல செட்டில் ஆவான்னு எப்படி முடிவு பண்றீங்க.? வெற்றி ண்ணா எங்க போஸ்டிங்கோ அங்கதான் அவளும் இருக்க முடியும். அவங்க லைஃபை நீங்க டிசைட் பண்ணாதீங்க.”

“ஹேய் நான் அப்படி யோசிக்கலடி.. இது அவளுக்கு ஃபியுச்சர்ல யூஸ் ஆகும்னு தான் சொல்றேன். அதோட அப்பாவோட ப்ராப்பர்டில இது அவளுக்கு போனா நானும் அப்பாவும் ரொம்ப சந்தோசப்படுவோம்..” 

“ஹ்ம்ம் ஆனா.. அதுக்காக நீங்க வெற்றிண்ணாவையோ, யாழியையோ கம்பெல் பண்ணக்கூடாது. என்றாள் ஸ்ட்ரிக் ஆஃபிசராக.

“சரி சரி சரிடீ.. நீ சொல்றதை தானே நான் அப்படியே கேட்குறேன். இன்னும் என்னடி பண்ணனும்.. நான் ஆமாம் சாமி போடுறதை எல்லாரும் பார்க்கனுமா? இல்ல பொண்டாட்டி தாசன்னு ஊரெல்லாம் சொல்லனுமா?” என்று போர்வையை சுருட்டி அவள் மேல் எரிய,

“ஹான் உங்களுக்கு அவ்ளோ வருத்தமா இருந்தா நீங்க டிபிக்கல் புருசனா நடந்துக்கலாமே மிஸ்டர் கர்ணன். குடிச்சிட்டு வந்து அடிக்கிறது, அம்மா வீட்டுல அதை வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வான்னு சொல்றது, இன்னும் ப்ளா ப்ளா..” என சிரிக்க,

“ஹாஹா.. இந்த தமிழ் சினிமா பார்த்து ரொம்பவே கெட்டு போயிருக்கன்னு மட்டும் தெரியுது. இதுதான் டிபிகல் ஹஸ்பன்டா.. என்ன ஒரு மனப்பக்குவம்..” என அவளைக் கிண்டல் செய்து சிலாகித்தவனுக்கும் சிரிப்பு வர, தன் கையிலிருந்த சீப்பை அவனை நோக்கி வீசியவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

கீழே ஹாலில் அமர்ந்திருந்த ராஜலட்சுமிக்கு வல்லபியின் மீதான் கோபம் ஏறிக்கொண்டே சென்றது.

அப்போதுதான் அவள் வந்த நாளில் இருந்து ஒவ்வொன்றையும் யோசித்துக் கொண்டே வந்தார்.

இந்த இரண்டு மாத காலத்தில் அவள் வீட்டுக்கு தூரம் என கேள்விப்படவே இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு வெள்ளியும் அவள் விரதமிருந்து பூஜை செய்வது அவருக்குத் தெரியும்.

அப்படியென்றால் என யோசித்தவருக்கு கிடைத்த விடை உவப்பாகவே இல்லை.

வல்லபி கருவுற்றிருக்கிறாள் என்று அவரால் நிச்சயமாக நம்ப முடிந்தது.

‘எது நடக்கவே கூடாதுன்னு நினைச்சேனோ அதுவே நடக்குதே.. இப்போ இந்த கருவை வளர விடுவதா? வேண்டாமா?’ என தீவிரமாக யோசித்தார்.

அவர் எண்ணம் நிறைவேறுமா? சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படத்தில் இருந்த வரலட்சுமியின் கண்கள் மிக தீர்க்கமாக ராஜலட்சுமியைப் பார்ப்பது போல் இருந்தது.

அன்றைய நாளில் கார்மெண்ட்சில் மீட்டிங்கில் இருந்த கர்ணனுக்கு வந்த செய்தியில், பதறிப்போய் அடித்து பிடித்து கரூர் நோக்கி பறந்து வந்திருந்தான் கர்ணன்.

You may also like

Leave a Comment

About Me

Featured