• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 40 நிறைவுப் பகுதி

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
அத்தியாயம் 40 நிறைவுப் பகுதி

"குட் மார்னிங் வாலு பாப்பா!" என்று மகிமாவை கார்த்திக் வரவேற்க, அவன் பக்கத்து இருக்கையில் அமர்ந்தவள்

"குட் மார்னிங் ண்ணா! எங்க டிஎல்?" என்று கேட்க,

"இப்ப தான் எட்டிப் பார்த்துட்டு போனான். மீட்டிங் டென்ஷன் மாதிரி தெரியுது!" என்றான் கார்த்திக்

"ம்ம்!" என்றவள் திரும்பிப் பார்க்கும் பொழுது நக்கலாய் யாழினி சுஜாதா சிரிப்பது தெரிய, "ஹாய்!" என அவர்களுக்கு கையசைத்த மகிமாவைப் பார்த்து முறைப்புடன் திரும்பிக் கொண்டனர்.

"மகி! எல்லாம் ஓகே தான? உன்னை நம்பி தான் இருக்கான் பிரகாஷ்!" கார்த்திக் சீரியஸாய் கேட்க,

"மாமாக்காக இது கூட செய்ய மாட்டேனா ண்ணா? அதான் பிரியா மேம் ஹெல்ப் பண்ணினாங்களே!" என்றவள்,

"ஆமா ரெண்டாயிரம் ரூபா வாங்கி ஏழு நாள் ஆச்சு. இன்னும் காசு வர்ல?" என்று கேட்க,

"இங்க பாரு! ஃபர்ஸ்ட்டு நான் உன்கிட்ட காசு வாங்கல என் பிரண்ட்கிட்ட வாங்குனேன்! செகண்ட் இப்படி டார்ச்சர் பண்ணினா என் சாவுக்கு நீ தான் காரணம்னு எழுதி வச்சுட்டு இதோ இந்த டேபிள் நேரா தூக்கு போட்டுப்பேன்!" என்று மிரட்டியவன்,

"இவளை காப்பாத்த இவ புருஷன் இவ சீட்டை மாத்தினா பக்கத்துல உட்கார்ந்து என் உசுர வாங்குறா. சீக்கிரமா இதுக்காகவே ப்ரோமோஷன் வாங்கி வெளியூர் போயிடணும்!" என்று வேண்டுமென்றே சத்தமாய் கூறி கணினிப் பக்கம் திரும்பிக் கொண்டான்.

"உங்க பிரண்ட் என் வீட்டுக்காரர் ஆகி மூணு மாசம் ஆச்சு.. என் வீட்டு காசு அது!" என்றவள்,

"இருங்க நானே தொங்க விடுறேன் உங்களை!" என்று சொல்லி மீட்டிங்கிற்கு தேவையானதை தயார் செய்தாள்.

திருமணம் முடிந்து மூன்று வாரங்கள் விடுப்பில் இருந்துவிட்டு மீண்டும் அலுவலகம் வர ஆரம்பித்துவிட்டாள் மகிமா. அதற்கு ஒரு வாரம் முன்பே சிவாவும் அலுவலகம் வந்துவிட்டான்.

விடுமுறையில் இருவரும் ஹனிமூன் சென்ற இடம் வயநாடு. திருமணம் முடிந்த மூன்றாம் நாள் மறுவீடு சென்று வந்தவன் கையோடு இங்கே அழைத்து வந்துவிட்டான்.

ஈஸ்வரியின் எண்ணம் புரிந்து தெரிந்த பின் அங்கே என்னவோ தனது மனம் சஞ்சலமடைய, அன்னையிடம் அதை கூறவும் கனகவள்ளி தான் அந்த யோசனையை கூறியது.

அதன்படி அடுத்த ஒரு வாரமும் அவர்களுக்கான நாட்கள் தான் வயநாடு.

அவளை ரசிக்கவும் ஆராதிக்கவும் என நாட்கள் போதவில்லை சிவாவிற்கு. மகிமாவிற்கு சொல்லவும் தேவை இல்லையே!

தான் விரும்பி தனக்கு பிடித்து தான் ஆசைப்பட்டு என தன்னை மட்டும் கொண்டு தானே திருமணத்திற்கு கேட்டு என ஆரம்பித்த பந்தம் இதோ தனக்கானவன் என தான் தேர்வு செய்தவன் தன்னைக் கொண்டாடும் பொழுது முகமெங்கும் அகத்தோடு பளிச்சிட்டது.

வீட்டிற்கு வந்த அடுத்த நான்கு நாட்களும் அவர்களுக்கான நேரங்கள் தான். விருந்து உபசரிப்பு என சொந்தங்கள் அழைத்து செல்ல அடுத்த ஐந்தாம் நாள் அலுவலகள் கிளம்பிவிட்டான் சிவா.

"நானும் வர்றேன் மாமா. கூடவே இருந்துட்டு நீங்க மட்டும் போனா எனக்கு போரடிக்காதா?" என மகிமா கேட்க,

"போராடிச்சா உன் ஈஸு பாட்டி கூட கதை கேளு! கதை கதையா நிறையா வச்சிருப்பாங்க. ஆனா இப்ப ஆபீஸ் வேண்டாம். நான் போய் ஒரு வாரம் போகட்டும்!" என்றவன் சொன்னது போலவே அடுத்த வாரத்தில் அவளையும் இழுத்துக் கொண்டான் அவளுக்கு பிடித்த விதமாய் ஒரு வண்டியையும் வாங்கிக் கொடுத்து.

"நான் உங்க கூட வர்ரேன் மாமா. ப்ளீஸ்!" என அவள் கெஞ்ச,

"டைமிங் செட் ஆகாது டா. எனக்காக நீ வெயிட் பண்ண வேண்டிருக்கும். இது தான் சரி உனக்கு!" என அவனே அவளுக்காக யோசித்து யோசித்து செய்ய, முடிவில் வேறு வழி இல்லை என்றால் மட்டும்,

"மாமா சொன்னா சரியா தான் இருக்கும்!" என்ற வார்த்தை வரும்.

"கேடி!" என கன்னம் கிள்ளுபவன் அவள் காதுமடல் சிவக்க தண்டனையையும் சேர்த்தே சொல்லிவிடுவான் அன்றைய பொழுதுக்கு.

அலுவலகம் வந்த முதல் நாளே யாழினி பேச்சினில் முகம் சுழித்தவள் ஒரு வார்த்தை பேசாது தனியே சென்று கேன்டீனில் அமர்ந்து சிவாவிற்கு அழைக்க அவன் எடுக்கவே இல்லை.

நீண்ட நேரத்திற்கு பின் அழைத்தவன், "நீ பிளேஸ் மாறிக்கோ! கார்த்திக் பக்கத்து சீட் தான் இனி உன்னோடது!" அழைத்ததும் இதை தான் கூறினான் சிவா.

என்ன நடந்தது என்ற கேள்வியே இல்லை அவனிடம். அவனே அலுவலகம் உள்ளே பேசி அவளுக்காக என இட மாற்றம் செய்ய மறுக்காமல் அந்த கணமே அங்கே சென்று அமர்ந்து கொண்டாள்.

ஆனாலும் அங்கே வைத்து எதுவும் பேசாதவள் வீட்டிற்கு வந்ததும் ஆடி தீர்த்தாள். சிவா வந்து வாட்சை கழற்றி வைத்து முகம் கழுவிவிட்டு டவலில் துடைத்துக் கொண்டிருக்க,

"பொண்ணுங்களா அதுங்க! பொறுக்கிங்க.. நாக்கை இழுத்து வச்சு அறுக்கனும். ச்சை!" என்றவள் ஆத்திரம் தீரவே இல்லை.

"நான் என்ன பண்ணினா இதுங்களுக்கு என்ன மாமா. ச்சீ!" என்று அவனிடம் கூறியவள்,

"பொறுக்கிங்க பொறுக்கிங்க!" என்று சத்தமாய் கூறி,

"ஒரு காமன் சென்ஸ் கூட இல்லாமல் ஃபர்ஸ்ட் நைட் பத்தி...." என்று முணுமுணுத்தவள் தலையை உதறி,

"ச்சீ! பிசாசு!" என அந்த நேரத்தை நினைத்து இப்பொழுது கூட வேண்டாததை நினைத்துவிட்டதைப் போன்று முகம் மாற, கைகளைக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள்.

கேட்டுக் கொண்டிருந்தாலும் தானாய் அவளிடம் எதையும் கேட்கவில்லை சிவா.

வெகு சாதாரணமாய் எப்பொழுதும் போல தான் அவள் இருப்பிடத்தை அந்த நேரம் பார்த்திருந்தான் சிவா. அவள் முகச் சுழிப்பும் யாழினி சுஜாதாவின் கேவலமான பார்வையும் என எதையோ உணர்த்தவே அப்பொழுதே பேசி இவளை இடத்தை மாற்ற வைத்திருந்தான்.

அலுவலகம் மாற்றி விடலாம் தான். போகும் இடத்தில் எல்லாம் இப்படி யாரேனும் இருக்க தானே செய்வர்? பயந்து ஓடிக் கொண்டே இருந்தால் எப்பொழுது இவள் கற்றுக் கொள்வது என்று தான் அவன் இப்பொழுது அமைதி காத்ததும்.

"அச்சோ!" என அமைதி கிடைக்காமல் மீண்டும் கத்தப் போனவளை பிடித்து இழுத்து தன் மடியில் நிறைத்துக் கொண்டான்.

"ஆபிஸ் டென்ஷன் எல்லாம் வீட்டுக்கு கொண்டு வர கூடாதுன்னு உனக்கு தெரியாது?" என்றவன் அவள் நெற்றியில் விரல் வைத்து மெதுவாய் நீவிவிட, மனம் கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியை தேடிக் கொண்டது.

"அதான் பிளேஸ் மாறியாச்சு தானே! பார்த்துக்கலாம் அம்மு!" என்று சொல்லி அவளை மீட்டிருந்தான்.

அடுத்த பத்து நாட்களில் ஆறு மாதங்களில் முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் ஒன்று சிவா கைகளுக்கு வர, அவனுக்கு கீழ் வேலை செய்பவர்களை தேர்ந்தெடுத்தது என்னவோ அங்கே இருக்கும் மானேஜரே!

யாழினி, சுஜாதா கூடவே மகிமா. இம்மூவர் மட்டும் என்றதும் திகிலடைந்தது என்னவோ மகிமா தான். என்னவோ மனம் உறுத்த கணவனை காண, பார்த்துக்கலாம் என்பதாய் கண்ணமர்த்தினான் அவளிடம்.

காரணமே இல்லாமல் சிவாவை எதிரியாய் உருவகித்து அவனுக்கு மனைவி என்ற காரணத்தால் தனக்கு அடிமை போல உபயோகித்த மகிமாவையும் தற்போது அவர்கள் எதிரயாய் பார்க்க, முடிவில் பதவி வேலை என அனைத்தும் விட அவர்கள் தோற்க வேண்டும் என்ற கீழ்தனமான எண்ணமே அவர்களை ஒருவழியாக்க காத்திருந்தது.

சிவா ப்ராஜெக்ட் பற்றிய குறிப்பிற்கு என மூன்று முறை அந்த குழுவிற்கு சிறியதாய் மீட்டிங் வைக்க, மூன்று முறையும் யாழினி சுஜாதா பங்கு பெறவில்லை.

இரண்டு மாதங்களுக்கு பின் இன்றைய நாளுக்கு முதல் பார்வைக்கு வர வேண்டியது இந்த ப்ராஜெக்ட். அந்த வேலையில் தான் தீவிரமாய் இருந்தான் சிவா.

அவ்வபோது அவனை தேடி சென்ற மகிமா ஒன்றும் பேசாமல் தன்னிடத்திற்கே வந்துவிட, அவளுமே ப்ராஜெக்ட் பற்றிய சிந்தனையில் இருக்கிறாள் போலும் என நினைத்துக் கொண்டான் சிவா.

இதோ மீட்டிங் ஆரம்பித்துவிட, யாழினி, சுஜாதா, சிவா, மகிமாவோடு பிரியா என்ற சீனியரும் வந்து அமர, புரியாமல் பார்த்துக் கொண்டனர் யாழினி சுஜாதா இருவரும்.

"சோ! வாட் அபௌட் தி மாடல்?" என்ற மேலதிகாரி கேள்விக்கு சிவா பதில் சொல்ல துவங்க,

"இதெல்லாம் நீங்க எங்களுக்கு சொல்லவே இல்லையே! நீங்க சொன்னத வச்சு தான் நாங்க மாடல் டிசைன் பண்ணிருக்கோம்!" என்று சிவாவிடம் வந்தனர் யாழினி, சுஜாதா.

அவர்களது எண்ணப்படி அவன் தான் தவறாய் வழிகாட்டுவதாய் அங்கே பதிவு செய்ய இவர்கள் நினைக்க,

"சாரி சார்! ப்ராஜெக்ட் கைடன்ஸ் பண்ண வேண்டி சம் டைம் ஃபிக்ஸ் பண்ணி எல்லாருக்குமே மெயில் பண்ணிருந்தோம். இவங்க ரெண்டு பேரும் அந்த மூணு மீட்டிங்லையும் அட்டன் பண்ணல. அதற்கான எவிடன்ஸ்!" என நேராய் எடுத்ததும் சிவா போட்டுடைத்ததோடு வீடியோவோடு அந்த நேரம் அவர்கள் இருந்த கேன்டீன் அறையையும் கூடவே இவனது மாடல், டிசைன் என அவனது மெயில் மகிமாவிற்கு அனுப்பிய மெயில் என அனைத்தையும் காட்ட ஆரம்பத்திலேயே அரண்டு போயினர் யாழினி சுஜாதா.

எப்பொழுதும் அமைதியாய் இருப்பவன் என்ன செய்திடுவான்? என்ன செய்ய முடியும்? என தன் விருப்பத்திற்கு இருந்து அவனை பழி வாங்க வெறியோடு நினைக்க, தனது வேலை பற்றிய சிந்தனை இல்லாத முட்டாளாய் ஆனதற்கான வெகுமதி அவங்களது டீப்ரோமோஷன்.

யாரையும் யாரிடமும் மாட்டிக் கொடுக்கும் வழக்கம் எல்லாம் அங்கே இல்லை. மிஞ்சி மிஞ்சி போனால் தாங்கள் ஒழுங்காய் வேலையை செய்யவில்லை என புகார் சொல்லுவான். பெண்கள் அதை மறுத்தால் பெண்கள் சொல்லுவதே சபை ஏறும் என நினைத்திருக்க, ஏற்கனவே அவர்களின் மேல் கோபத்தில் இருப்பவன் அவர்களாய் மாட்டும் சமயம் விட்டுவிடுவானா என்ன?

"இவங்க ஜூனியர் நேம் மகிமா! பிரியா மேம் ஹெல்ப் பண்ணினாங்க. சோ ஃபர்ஸ்ட் மாடல் டிசைன் இவங்க தான் பண்ணிருக்காங்க!" என மகிமாவை அங்கே நிலைநிறுத்த, கண்கள் மயக்கம் வரும் போல சுழன்றுவிட்டது யாழினியோடு பூஜாவிற்கு.

"வெல்டன்! கோ வித் யுவர் ஃபுளோ!" என வாழ்த்தி மகிமாவை அனுப்பி வைத்தவர் மற்ற இருவரையும் கண்டித்து ஆதாரத்தின் அடிப்படையில் தான் வேலையின் பதவி குறைப்பும் என்றானது.

அன்று மாலை சீக்கிரமே வீடு திரும்பிவிட்டாள் மகிமா. முந்தைய நாளில் இருந்து ப்ராஜெக்ட் சம்பந்தமான ஏற்பாடுகளில் தூக்கம் இல்லாமல் அதிக வேலையில் இருந்த சிவாவும் ஆறரை மணிக்கெல்லாம் கிளம்பி வீடு வர,

"மாமாஆஆ!" என அறைக்குள் வந்தவனை ஓடி சென்று அணைத்தவள் அத்தனை முத்தம் வைக்க,

"டேய்! டேய்!" என பிடித்து நிறுத்தியவன்,

"மாடல் தான் முடிச்சிருக்கோம் அம்மு!" என்றான் புன்னகையுடன் அவளின் இந்த சந்தோசம் அதற்கு தான் என நினைத்து.

"ஆமாமா! மாடல் தான்!" என்று குறும்பாய் கண் சிமிட்டியவள் பாஷையில்,

"என்ன டி!" என்று அந்த அழகில் அவளின் கன்னம் வருடி போதாமல் இதழ் நெருங்க,

"டிசைனிங் ஓகே தான்! ப்ராஜெக்ட் டெலிவரிக்கு தான் இன்னும் ஒன்பது மாசம் இருக்காம்!" என்றவள் பின்னிருந்து தன் உள்ளங்கையை விரிக்க, அதைப் பார்த்தவன் விழிகளும் விரிந்து கொண்டது.

"அம்மு!" என்றவனுக்கு சட்டென்று பேச்சு வரவில்லை.

"காங்கிரஜுலேஷன் சிவப்பிரகாஷ்! நீங்க அப்பா!" என்று இரு கைகளையும் அவள் விரிக்க அவளோடு இணைந்து கொண்டவன் பேச்சச்சு அவள் அணைப்பினில் நின்றான்.

"மார்னிங்கே தெரியுமே! டென்ஷனா கிளம்பி போனீங்களா! அதான் அப்ப சொன்னா இந்த முகத்தை நிறுத்தி நிதானமா பார்க்க முடியாதேன்னு சொல்லல!" என்றாள் அவன் நெஞ்சில் சாய்ந்து கண்ணோடு கண் பார்த்து.

"ஹே அம்மு! அதுக்காக இவ்வளவு நேரமா....!" என்றவன் அவள் காலையில் இருந்து தன்னைப் பார்த்த பார்வைகளை நினைத்து இன்னும் அவளோடு ஒன்றினான்.

"இங்க என்னவோ ஆகுது அம்மு!" என்றவன் நெஞ்சைக் காட்டி சொல்ல,

"அதெல்லாம் நம்ம பாப்பா வந்ததும் சரியாகிடும்!" என்றவள் வார்த்தைகளில் இன்னுமே உணர்ச்சிவசப்பட்டான் சிவா.

"டேய்! நீ அம்மா!" என்றவன் நினைத்து, சிரித்து, கண் கலங்கி அணைத்து அழுத்தமாய் முத்தம் ஒன்றை பதித்தான் அவளின் இதழ்களில்.

அவர்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயம் கடவுளின் ஆசிர்வாதமாய் அவர்களின் உயிரில் கலந்து வரமாய் கைகளில் வர காத்திருந்தது.

எபிலாக் on the way......
 
Last edited: