• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று - 12

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
154
110
43
Dindigul
காற்று - 12

“சம்மந்தி ஏகன் சொன்னதை எல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டாம். ஆனா அவன் சொல்றதுல ஒன்னு மட்டும் நிஜம். ஆரம்பத்துல இருந்தே தர்ஷி இங்கேயே இருந்துருந்தா இவ்ளோ பிரச்சினை வந்திருக்க வாய்ப்பிருக்காது. இனியும் அந்த தப்பு நடக்க வேண்டாம். அவ இனி இங்கதான்..” என பெரியவர் முடித்துவிட, ஆனந்தி மகளைப் பார்த்தார்.

புனிதாவுமே “மாமா சொல்றதும் சரிதான் மா, இனி நாங்க இங்கேயே இருந்துக்கிறோம். பெரியம்மாக்கிட்ட கொஞ்சம் டைம் கேளுங்க. இல்லை முடியாதுன்னா வேறபக்கம் பார்க்கட்டும். தர்ஷி இப்போ இருக்குற மனநிலையில நாம எந்த முடிவும் எடுக்க முடியாது. அவளுக்கு எல்லாமே தப்பாதான் தெரியும். அவ யோசிக்கவும் நாம டைம் கொடுக்கனும்..” என புனிதா தன் தாயை சமாதானம் செய்ய,

“நான் பேசுறேன்டி… நிசாந்த் மாதிரி பையன் கிடைக்க மாட்டான். பேசித்தான் பார்ப்போம்.. நிசாந்த் அவசரப்படமாட்டான்னுதான் நினைக்கிறேன்.” என்றவர் சொல்லிக்கொண்டு கிளம்ப, தர்ஷன் அவரை விட்டுவர கிளம்பினான்.

தர்ஷி யாரையும் மதிக்காமல் தன் அறைக்குள் சென்றுவிட, பிரகாஷ் அங்கிருந்த யார் முகத்திலும் முழிக்க முடியாமல் வெளியில் சென்றுவிட்டார்.

அமரன் ஆராவிடம் “ஆரா வா கொஞ்சம் ரெஸ்ட் எடு..” என எழுப்ப,

“அத்தான் தர்ஷி..” என ஆரா ஏதோ சொல்ல வாயெடுக்க,

“அவ கிடக்கா பைத்தியக்காரி. அவ பேசுன எதையும் யோசிச்சு டென்சன் ஆகாத, இப்போ அது உன் உடம்புக்கும் நல்லதில்ல, அமர் நீ ஆராவை கூட்டிட்டு போ. தர்ஷியை எப்படி சரி பண்ணனும்னு எனக்குத் தெரியும்..” என்ற புனிதாவிடம் அமரனால் வேறு என்ன பேசிட முடியும்.

“சரிங்க த்த..” என்ற அமரன் தூங்கிவிட்ட மகளை தூக்கிக்கொண்டு மனைவியோடு தன் அறைக்கு செல்ல, அங்கு இடிந்து போய் அமர்ந்திருந்தார்கள் வீட்டின் மூத்த தம்பதிகள்.

பெரியவர்களைப் பார்த்ததும், இதுவரை இவர்களுக்காக ஒன்றுமே செய்ததில்லை, இனியும் அப்படி இருக்கக்கூடாது, அதை தன் மனசாட்சியே ஒத்துக்கொள்ளாது என உணர்ந்துகொண்ட புனிதா, அவர்களிடம் சென்றார்.

“அத்த என்னை மன்னிச்சிடுங்க.. நான் செஞ்சது எல்லாம் தப்புதான். அதை சரின்னு சொல்லி உங்ககிட்ட வாதாட வரல. அப்போ ஏதோ கோபம். என்னை மதிக்கலையேனு ஒரு ஆத்திரம் அதுதான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்துடுச்சு. இனியும் அப்படி இருக்காது. நான் சொன்னா உங்களால நம்ப முடியாது. ஆனா நிஜமாவே நான் திருந்திட்டேன் அத்த. இனிமேல் இந்த வீட்டுல இருக்குற யாரும் வருத்தப்படுற மாதிரி நான் நடந்துக்கமாட்டேன். நம்புங்க அத்த..” என வருத்தமாக கூற,

“ஏன் புனிதா இப்படி.? நாங்க என்னைக்குமே உன்னைத் தப்பாவோ, வேறாவோ நினைச்சதில்ல. இனியும் அப்படி நினைக்கமாட்டோம். வயசான காலத்துல எங்களுக்கு என்ன வேணும். எம் புள்ளைங்க நிம்மதியாவும், சந்தோசமாவும் இருந்தா போதும்.. அந்த நிம்மதியை எங்களுக்கு கொடுங்க போதும்.” என்ற வேதவல்லியின் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டார் அவர் கணவர்.

இருவரையும் ஒருவாராக சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டு, உணவுக்கு என்ன செய்ய என கிச்சனுக்குள் நுழைந்தார் புனிதா.

இத்தனை ஆண்டுகளில் இப்படியெல்லாம் தானாக செய்ய வேண்டும் என்று புனிதா செய்ததே இல்லை. அகிலா இருந்தவரை அவர் பார்த்துக்கொண்டார்.

விருந்தாளி போல் வந்து, வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்பி விடுவார். அடுத்து பாக்யா செய்தார். அப்போது மேற்பார்வை மட்டும் பார்த்துக்கொள்வார், அதுதான் அவருக்கு வந்தது. இப்போது அவரைப் போலவே தர்ஷியும் இருக்கிறாள்.

எண்ண ஓட்டங்கள் இப்படியாக இருந்தாலும், வேலைகள் வேகமாக நடந்தன. சமையல் வேலைக்கு இருக்கும் பெண்மணியிடம் என்ன செய்ய வேண்டும் எனக் கூறிக்கொண்டே தன் வேலைகளைப் பார்த்தார்.

புனிதா வேலை வாங்குவதைப் பார்த்துக்கொண்டே மீண்டும் வந்து ஹாலில் அமர்ந்தார் வேதவல்லி. அவர் எதிர்பார்த்ததும் இதைத்தானே. ஏனோ இனி எல்லாம் சரியாகும் என்று நினைத்தவாறே ஹாலின் முகப்பில் மாட்டியிருந்த தன் மகன் மருமகள் போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தார்.

அறைக்குள் வந்த அமர் “ஆராம்மா தர்ஷி பேசுனதை நினைச்சு யோசிக்கவே கூடாது. அது நம்ம பிரச்சினை இல்லை. அதை சரி செய்ய புனிதா அத்த இருக்காங்க. ஏகன் இருக்கான். நீ இதையெல்லாம் யோசிச்சு ப்ரசர் ஏத்திக்காத, மறுபடியும் உன்னை அப்படி பார்க்க என்னால முடியாது புரியுதா?” என ஆராதனா பேசும் முன்னே அமரன் பேசிவிட, தலையாட்டுவதை தவிர அவளால் வேறொன்றும் பேச முடியவில்லை.

அமைதியாக குழந்தையின் அருகில் அமர்ந்துவிட, “ஆரா இப்போதான் எல்லாத்தையும் மறந்து ஆதியும் ஏகனும் சேர்ந்துருக்காங்க. நீயோ இல்லை நானோ எதையும் பேசி அதை கெடுக்க வேண்டாம். அவங்களோட கஷ்டமெல்லாம் இப்போதான் தீர்ந்திருக்கு, அத நினைச்சு சந்தோசப்பட்டுக்குவோம் குட்டிம்மா..” என மேலும் பேசி அவளை சமாதானம் செய்திருந்தான்.

ஆராதனாவுக்கு இதெல்லாம் புரியாமல் இல்லை. ஆனால் தர்ஷி அமைதியாக இருப்பாள் என்று தோன்றவில்லை. அவள் மனதில் தங்கள் மேல் இவ்வளவு வன்மம் இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இப்போது அதை அவள் வாயாலே கேட்கும் உயிரெல்லாம் வலித்தது. வழக்கம்போல பெற்றவர்களின் அனைப்பைத் தேடியது பெண்மனம்.

அதை வெளிக்காட்டினால் கணவனானவன் வருத்தப்படுவானே என்று அமைதியாகவே தலையசைத்து படுத்துக்கொண்டாள்.

மனைவியின் மனதில் ஓடும் எண்ணங்கள் அவனுக்கு புரியாமலில்லை. ஆனால் அதை பேசி மேலும் அவளை வருத்த அவனால் முடியாது. அதனால் அவனும் அமைதியாகவே அவளுக்கருகில் படுத்துவிட்டான்.

இங்கு மனைவியோடு தன் அறையை நோக்கி நடந்தான் ஏகன். நான்கு வருடங்களுக்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இந்த அறைக்குள் வருகிறான் ஏகன்.

அவன் அறைதான்! அவன் இங்கேயேதான் இருந்தும் இருக்கிறான்! ஆனால் இத்தனை மகிழ்ச்சியாக இருந்ததில்லை.

“நானும் இந்த ஊஞ்சலும் உனக்காக நாலு வருஷம் காத்துட்டு இருந்தோம்!” என்றவனின் குரல் சட்டென்று கரகரப்பானது.

அதை உணர்ந்தவளின் உடல் நடுங்க, அவனோடு அனைப்பை மேலும் கூட்டிக் கொண்டாள்.

அவன் மார்பில் முட்டிக் கொண்டவளின் அழுகை விசும்பலாக ஆரம்பித்து கதறலாக மாறியது. தன் மன்னிப்பை வேறெப்படி கேட்க என்றும் தெரியவில்லை பெண்ணவளுக்கு.

தன்னோடு அனைத்திருந்தவனின் விழிகளில் வழிந்த ஒற்றைத் துளி நீர் அவள் உச்சியை நிறைத்தது. அதை உணர்ந்தவள் மேலும் மேலும் அவனை ஒட்டிக் கதறினாளே ஒழிய அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

முடியாது! அவளால் முடியாது! அவளது அத்தானின் இந்த முகத்தை எப்போதும் அவளால் பார்க்க முடியாது. முகத்தை அவன் மார்பிலேயே தேய்த்து, தன் அழுகையை அடக்க, இவர்களின் வரவிற்காக காத்திருந்த ஊஞ்சலில் அமர வைத்து, தானும் அவளுக்கருகில் நெருக்கமாக அமர்ந்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

நிறைய பேச வேண்டும்.. நிறைய விளக்கங்கள் கொடுக்க வேண்டும் என இருவருக்கும் பேச்சுக்கள் வரிசைக்கட்டி இருந்தாலும், அதை இருவரும் செய்யவில்லை. இத்தனை ஆண்டுகளின் ஓட்டத்தில் இருவருக்கும் ஒரு ஆசுவாசம், ஒரு அமைதி, இருவருக்குமான தனிமை தேவைப்பட, அதை ரசித்து உணர ஆரம்பித்தனர்.

நிமிடங்களோ, மணிகளோ கடந்து ஏகனின் மொபைல் அழைக்க, அதை எடுத்துப் பார்க்க “சாமி ண்ணா” என்றிருக்க, எடுத்து காதில் அழைத்தான்.

“சாமிண்ணா சொல்லுங்க.” என்றவனிடம்,

“சார்.. இன்னைக்கு நைட் நீங்க ஸ்டேஷன் வரீங்களா? இல்ல நாங்க எல்லாம் குவார்டஸ் வரவா சார்.?” என்றதும் தான், இன்று ஒரு முக்கியமான கேஸ் டிஸ்கசிங்க் இருப்பது நினைவுக்கு வந்தது.

“சாமிண்ணா நான் ஸ்டேஷன் வந்துடுறேன். நீங்க மத்த எல்லாரையும் அசெம்பிள் பண்ணிடுங்க..” என்றவனிடம்,

“சரிங்க சார், அப்புறம் எப்போ பால் காய்ச்சுறதுன்னு பாண்டி மீனா மேடம் கேட்டாங்க..” என சிறு சிரிப்புடன் கேட்க,

“சாமிண்ணா..” என பல்லைக் கடித்தாலும், அவனுக்கும் சிரிப்பு வந்துவிட,

“இந்த வீக் வேண்டாம் சாமிண்ணா.. நாங்க ஹனிமூன் போறோம். போய்ட்டு வந்து பார்க்கலாம். அதுக்குள்ள மத்த வேலையை எல்லாம் முடிக்க சொல்லுங்க பாண்டி மீனா மேடம்கிட்ட..” என அவனும் சிரித்தே பதில் சொல்ல,

“ஸார்.. நீங்க இருக்கீங்களே.. முதல்ல உங்க காதல் காயத்தை சரி பண்ணுங்க..” என பக்கத்தில் பாண்டிமீனா கத்துவது இவனுக்கு இங்கே கேட்டது.

“கையிலதானடி காயம்.. அதுக்கும் ஹனிமூனுக்கும் என்ன சம்மந்தம்..” என வெற்றி அவளுக்கு பதில் கொடுப்பதும் அவனுக்கு கேட்டது.

“ஸாமிண்ணா வர வர நீங்களும் அவங்க கூட சேர்ந்து சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டீங்க..” என சிரித்தவாறே பேசி வைத்து விட்டான்.

இங்கு கணவன் பேசியது முதலில் புரியவில்லை. ஆனால் போக போக புரிய, ஆதிராவின் முகம் குங்குமாமாய் சிவந்து விட்டது, அவன் தோளில் இருந்து வேகமாக விலகியவளை இழுத்து மேலும் தன்மேல் சாய்த்துக் கொண்டவன் மீண்டும் பேச ஆரம்பித்திருந்தான்.

ஒருவழியாக போனை வைத்தவன், தன்னவளை குறுகுறுவென பார்க்க, “அத்தான் இப்படியெல்லாம் பார்க்கக்கூடாது…” என ஸ்ட்ரிக்டாக பேச நினைத்தாலும் குழைந்து கூற,

“இப்போதாண்டி நிறுத்தி நிதானமா பார்க்குறேன். அதுக்கும் தடா போட்டா எப்படி..? பார்க்குறதுக்கே இப்படி சிவக்குறியே, அப்போ மத்ததுக்கு..” என பேசி மேலும் சிவக்க வைக்க,

“அத்தான் ப்ளீஸ்… ப்ளீஸ்… இப்படி எல்லாம் பேசாதீங்க. அப்புறம் என் கன்ட்ரோல் எங்கிட்ட இருக்காது..” என்றவள் பட்டென எழுந்துவிட,

மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டவன், “ஓக்கே ஓக்கே கூல்.. டைம் எடுத்துப்போம்… நோ ப்ராப்ளம்..” என அவள் முதுகை வருடி சமாதானம் செய்தவன், “நான் ஸ்டேஷன் போகனும் ஆதிம்மா.. நீ ரெஸ்ட் எடு.. நான் வர லேட்டானா உனக்கு கால் பன்றேன். இப்போ ஆன்ட்ரசன் வருவான். பார்த்துக்கோ..” என ஏகன் கிளம்பிவிட, மீண்டும் அந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள் ஆதிரா.

ஊஞ்சலின் கம்பிகளையும், கைப்பிடிகளையும் மெல்ல மெல்ல, ஒரு பூவைப்போல வருடிக் கொடுத்தவளுக்கு என்ன முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை.

இந்த ஊஞ்சலை அவளின் ஒரு வார்த்தைக்காக, அவளுக்காக வாங்கி மாட்டியிருந்தான் ஏகன். இதனால் வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள், ஏகனும் அமரனும்தான் இதை மாட்டியிருந்தார்கள்.

பாக்யாவும் புனிதாவும்தான் அத்தனை பேச்சு பேசியிருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் அவன் காதில் வாங்கியதாக கூட தெரியவில்லை. அவள் முதன்முதாலாக கேட்டிருக்கிறாள் அதை எப்படி அவனால் செய்யாமல் இருக்க முடியும்.

எண்ணச் சுழல்கள் அவளை மீண்டும் தங்களின் பழைய நினைவுகளுக்கு இழுத்து சென்றது.

அதே நேரம் தர்ஷினி தன் போனை எடுத்து ஒரு எண்ணுக்கு அழைக்க, “என்ன தர்ஷி? ம்ம் நீங்க சொன்ன மாதிரியே பேசிட்டேன் மாமா? எல்லாரும் என்மேல கோபத்துல இருக்காங்க. என்ன நடக்குமோ தெரியல?” என கொஞ்சம் வருத்தமாக பேச,

“ரொம்ப பயப்படாத தர்ஷி. நாம நினைச்சது தான் நடக்கும் தைரியாமா இரு. நான் உன்கூடவே இருக்கேன்.. என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்..” என அவளை சமாதானம் செய்து வைத்தவனின் முகத்தில் மின்னி மறைந்த புன்னகையில் இருந்தது என்னவோ?