• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-24

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
அத்தியாயம் 24

மாறனும் நிலாவும் இரண்டு தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஒன்று பிரிவு இன்னொன்று நினைவு. இரண்டும் ஒருசேரத் தாக்க இருவரும் உயிரற்ற உடலாய் அலைந்தனர். கல்லூரியில் இருந்தாலும் நினைவைத் தூதனுப்பி அவன் உலகுக்குள் அழைத்துச் சென்று விடுகிறான். தொலைதுரங்களில் இருந்தாலும் மனங்கள் அருகிலிருக்க அவர்களின் காதலுக்கு பலம் மேலும் கூடியதேத் தவிர இம்மியும் குறையவில்லை. அவனிடம் முழு சரணாகதி அடைந்து ஒப்படைத்த பின் அவள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை தான். அத்தனை நம்பிக்கை அவன் மேல். ஆனால் அவனுடன் கதைத்த நாட்களும் அவனுடன் இருந்த நொடிகளும் ஒருபுறம் மலர்ச் சோலையென தென்றலாய் வருடியதென்றால் மறுபுறம் நெருப்பாய் சுட்டது. காதுக்குள் ரீங்காரமிடும் அவன் குரலொலி தூக்கத்திலும் கேட்டுக் கொண்டே இருப்பது போல் பிரம்மை.

அவள் நிலைமை அப்படியென்றால் மாறனின் நிலையோ சொல்லவே வேண்டாம். மலர் தேடும் வண்ணத்துப்பூச்சி போல் அவள் காதல் தேடி வட்டமிட்ட காதல் பூச்சி அவன். வானத்தில் இருந்து குதித்த தேவதையாய் அவன் வெறுமையைப் போக்கியவள். இன்று அவள் கிள்ளை மொழி கேளாமல் மனம் முழுவதும் வெறுமையை நிறைத்து விட்டது. முதன்முதல் அவன் படிப்பிற்கேற்ற வேலைக்குச் செல்கிறான். ஆனால் அவளிடம் சொல்லி மகிழ முடியவில்லை.

'பேசத் தானே கூடாது?' என்று அவளுக்கு மட்டும் தெரியும்படி ஸ்டேட்டஸ் வைத்தான், 'முதல் நாள் ஆபிஸ் இன் புனே' என்று.

முப்பொழுதும் அவன் நினைவுகளை சுமந்து ப்ரோபைலில் உள்ள அவன் போட்டோவை ஷூம் செய்து பார்த்துக் கொண்டிருந்தவள் ஸ்டேட்டஸ் அப்டேட் வரவும் வேகமாக சென்று பார்க்க.. சிமெண்ட் கலர் ஃபேன்ட் மற்றும் ப்ளூ கலர் சட்டை போட்டு ஃபார்மல் உடையில் ஆளே வித்தியாசமாக அழகாக இருந்தான். இதுவரை அவன் போட்டிருந்த உடைக்கும் இதற்கும் அத்தனை வித்தியாசம். பெண்ணவள் அவன் அழகில் மெய்மறந்து ரசித்து பூரித்துப் போனாள்.

ஸ்டேட்டஸ் வைத்து இரண்டு விநாடிகளிலே அவள் பார்த்ததுக்கான ஹிஸ்டரி காண்பிக்க.. அவள் பார்த்து விட்ட திருப்தியில், இல்லை இல்லை அவளுக்குத் தகவல் சொன்ன திருப்தியில் முதல் நாள் அலுவகலத்திற்குச் சென்றான். இப்படித் தான் ஆபிஸ் கிளம்பிட்டேன், காலேஜ் கிளம்பிட்டேன், சாப்டேன், தூங்கிட்டேன், இன்னைக்கு லீவ் என்று ஸ்டேட்டஸ் வைத்து தனது நிலையை ஒருவர் பற்றி மற்றவர் தெரிந்து கொண்டனர். குரல் கேட்காவிடிலும், முகம் காணாவிடிலும் இதுவே அவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கப் போதுமானதாக இருந்தது. அருகில் அமராமல் அரவணைப்பில் இல்லாமல் அன்பை மட்டும் தொலைபேசி ஸ்டேட்டஸ் வழியாக அனுப்பி வைத்துக் கொண்டனர்.

மாறனின் நினைவு அதிகமாய் வாட்ட, இருவரும் சந்தித்துக் கொண்ட அந்த காஃபி ஷாப்க்குச் சென்றாள் நிலானி. முன்னால் காஃபியும் கட்லட்டும் ஆறிப்போய் இருந்தது. ஆர்டர் செய்தவளுக்கு சாப்பிடும் எண்ணம் தான் இல்லை. நினைவை முழுவதும் மாறன் ஆக்கிரமித்துக் கொள்ள சுற்றி நடப்பது எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை.

அப்போ அங்கே வந்த ரோகித், "நிலா.. நிலானி.." என்று இருமுறை அழுத்தி அழைத்த பின்னே சுயநினைவு வந்தவள், 'இவன் எப்போ வந்தான்?' என்று கேள்வியாய் அவனைக் கண்டாள்.

"என்னாச்சு?. ரொம்ப சோகமா இருக்குற மாதிரி இருக்கு?"

"ஒன்னுமில்லை. கொஞ்சநாளா சண்டைக்காரி மாதிரி விலகிப்போன. இப்போ எதுக்கு திரும்ப வந்துப் பேசுற?"

"அன்னைக்கு அவன்கூட சேர்ந்துக் கிட்டு என்னை அசிங்கப் படுத்துனதால கோவம் இருந்துச்சு. பேசாம இருந்தேன். என்ன இருந்தாலும் நீ நான் லவ் பண்ண பொண்ணு. அவ்ளோ சீக்கிரம் உன்னை விலக முடியுமா?" என்று உள் அர்த்தத்துடன் பேச.. அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

"இன்னும் அதே நினைப்போட இருக்கியா?. உன்கிட்ட தான் அன்னைக்கே சொல்லிட்டேனே நான் மாறனை லவ் பண்றேனு. இந்த நெனைப்பை இத்தோட மறந்துட்டு நல்ல ப்ர்ணட்டா என்கிட்ட பேசுறதா இருந்தா பேசு. இல்லனா என்கிட்ட பேசாத"

அவள் பேசியதில், "ஹாஹா" என்று சத்தமாக சிரித்தவன், "நீ இன்னுமா அவன் கூட சேருவனு கனவு கண்டுட்டு இருக்குற?. அய்யோ பேபி.. அவன் கூட உன்னை சேர்த்து வைக்க விருப்பமில்லாம தான் உன்னை அவன்கிட்ட இருந்து பிரிக்க நாலு வருஷம் அவனை மாநிலம் விட்டு மாநிலம் போறமாதிரி ஆக்கி வச்சுருக்காரு உங்கப்பா. பக்கத்துல இருந்தாலே பலவருட காதல் கூட புட்டுக்கும். உன்னோடது ஆஃப்டர்ஆல் ஆறு மாச லவ். டக்குனு மறந்துட்டு அப்பா சொல்ற மாப்ளையை கல்யாணம் பண்ணிட்டு லைஃப்ல செட்டிலாகிடுவ. அவனும் உன்னைலாம் மறந்துட்டு ஊருக்காரி எவளையாது கிடைச்சதை கல்யாணம் பண்ணிட்டு நீயிலாம் யாருனு கேட்டுட்டு போய்க்கிட்டே இருப்பான். இது புரியாம அவனை நினைச்சு வாழ்வே மாயம்னு சுத்திட்டு இருக்குற.. ஃபன்னி கேர்ள்" என்று தலையிலடித்துக் கொண்டு சிரித்தான்.

"போதும் நிறுத்து. எனக்கு மாறன் மேல நம்பிக்கை இருக்கு‌. அவனுக்கும் என்மேலே நிறையவே நம்பிக்கை இருக்கு. எங்க உண்மையான காதல் எங்களை எத்தனை வருஷம் கழிச்சுனாலும் எப்டி இருந்தாலும் சேர்த்து வைக்கும். உன்கிட்ட பேசவே எனக்குப் பிடிக்கல" என்று கோவத்தோடு எழுந்து செல்ல.

அவள் கையை இறுக்கிப் பிடித்தவன், "அவன் தான் இல்லேல?. போயிட்டான்ல. அப்புறம் எதுக்கு அவனை நினைச்சு உருகிட்டு இருக்குற?. அவன் கடனை அடைச்சு அக்காவுக்கு செட்டில் பண்ணி அவன் செட்டிலாகி வர்றதுக்குள்ள அவனுக்கும் வயசாகிடும். நீயும் ஔவையாராகிடுவ. பேசாம நீ
வா நிலா பேபி நாம லவ் பண்ணலாம். ஜாலியா என்ஜாய் பண்ணலாம். நான் ஃப்ராட் மைன்டேட். அவன்கூட நீ இருந்ததையெல்லாம் நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன்" என்று வக்கிரமாய் பேசினான். அவள் தோழி பிரியாயிடத்தில் பகிர்ந்து கொண்ட மாறனைப் பற்றிய விஷயங்கள், வீட்டில் நடந்தது அனைத்தும் அவள் மூலம் அவனுக்கும் சென்று விட்டது. எப்படியோ மாறனைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டவன் அதை சாக்காக வைத்து இவன் அவள் மனதை மாற்ற முயற்சி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். உண்மையான காதலை யாரும் பிரிக்க முடியாது. பிரிவைக் கூட சந்திப்பார்கள் ஆனால் நினைவுகளால் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று அந்த முட்டாளுக்குத் தெரியவில்லை. காதல் என்பது வெறும் ஆசை என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அதை அவன் உணரும் காலமும் வரும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

அவள் உக்கிரமாகி அவன் கையைத் தட்டி விட்டு பொறி பறக்க அவன் கன்னத்தில் ஒன்று வைக்க.. காஃபி ஷாப்பில் இருந்த மொத்தக் கூட்டமும் அங்கே தான் பார்வையை பதித்திருந்தார்கள்.

அவன் அதிர்ந்து, "ஏய்.." என்று கர்ஜிக்க.

"சீ வாயை மூடு. இன்னொரு வார்த்தை பேசுன.. கொன்னுடுவேன் உன்னை. மாறன் இடத்துலே நீயா?. அவன் கால் தூசுக்குக்கூட பெறமாட்ட நீயி. கண்ணியம்னா என்னனு அவன்கிட்ட நீ கத்துக்கனும். இடியட். இன்னொரு தடவை என் வழில க்ராஸ் பண்ண பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண வேண்டிவரும்" என்று எச்சரிக்கை விடுத்து விட்டு கிளம்பி விட்டாள். அவன் தான் போகும் அவளையே குரூரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

--------

நான்கு வருடங்களுக்கு பிறகு..

'ஏஞ்சல் கூட பேசி கூட நாலு வருசம் ஆச்சு. முன்னாடியாது ஸ்டேட்டஸாது வைப்பா என்ன பண்றேன் ஏது பண்றேன்னு. ரெண்டு வருஷமா அதுவும் இல்லை. படிச்சு முடிச்சுருப்பா. ஒருவேளை ஜாப்ல ஜாயின் பண்ணி பிஸியாகிட்டாளோ என்னவோ' என்று தனக்குள் புலம்பிக் கொண்டு கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்துக் கொண்டான் மாறன். அவனுக்கே அவனை நினைத்து வியப்பாக இருந்தது. 'இது நான் தானா?' என்று அவன் அழகை அவனே ரசித்துக் கொண்டான்.

'இப்போ இப்படி என்னைப் பார்த்தா எப்டி ரியாக்ட் பண்ணுவா?. என்னை அடையாளம் தெரியுமா?. கொஞ்சம் இல்ல நிறையவே மாறிட்டடா மாறா?. அந்த டிரைவர் மாறனுக்கும் இந்த டீம் லீட் மாறனுக்கும் நிறைய வித்தியாசம். ஏஞ்சல் என்னைப் பார்த்து ஷாக்காகப் போற. நீ எப்படி இருப்படி இப்போ. இன்னமும் அதே பேபி ஏஞ்சலா தான் இருப்பியா. இல்லை மெச்சூர்டாகிருப்பியா. முன்னவே உன்னைப் பார்த்தாலே தூக்கிக் கொஞ்சனும் போல இருக்கும். இப்போ மெச்சூர்டான பொண்ணா பார்த்தா அப்டியே கடத்திட்டு ஆளில்லாத தீவுக்கு ஓடிறனும்னு தோனும். மொத உன்னைப் பார்த்து என் ஆசை தீர என் கண்ணுல நிரப்பனும்டி. அதுக்கப்புறம் தான் எல்லாம். இப்போ வந்து உங்கப்பா கிட்ட பொண்ணு கேட்குறேன். அவரு மறுக்க எந்தக் காரணமும் இல்லடி. கடன் அடைச்சுட்டேன். அக்காவுக்கு சொன்னதை விட அதிகமாகவே நகை போட்டுட்டேன். அதை விட சூப்பர் சர்பிரைஸ் உனக்கு வச்சுருக்கேன். கேட்டா நீயே ஆச்சர்யப்படுவ. வந்து நேர்ல சொல்றேன். இத்தனை நாள் இருளுக்குள்ள வாழ்க்கையை நகர்த்துறாப்புல இருந்துச்சு. நாளைக்கு விடியிறது தான்டி நாலு வருஷம் கழிச்சு நான் பாக்கப்போற விடியல். அதுக்கப்புறம் வர்ற நாளெல்லாம் உன் முகம் பார்த்து தான் விடியனும். இனி ஒருதடவை உன்னைப் பிரியிற நிலை வந்தா அது என் மரணமாத் தான் இருக்கனும்' என்று உணர்ச்சிப் பெருக்கில் நின்றவன், விமானத்திற்கு நேரமாவதை உணர்ந்து அதுவரை தன்னுடன் விடுதியில் இருந்த நண்பர்களிடம் விடைபெற்று ஏர்போர்ட் சென்றடைந்தான். புனேவிலிருந்து பல கனவுகளுடன் சென்னையை நோக்கிப் புறப்பட்டான் தனது ஏஞ்சலைக் கரம்பிடிக்க. அவனே எதிர்பாராத மிகப்பெரிய அதிர்ச்சி அவனுக்கு அங்கு காத்திருப்பது அவனுக்குத் தெரியாது. பல கனவுகளுடன் செல்பவனுக்கு அந்தக் கனவு பலிக்குமா கானல் நீராகுமா என்று பார்ப்போம்.

சென்னை சென்று இறங்கியதுமே நேராக சென்று நின்ற இடம் நிலானி வீடு. வீடே அமைதியாக இருந்தது. காலிங் பெல் அடிக்கவும் மனோகர் தான் வந்து கதவைத் திறந்தவர் எதிரில் நின்றவனைக் கண்டு அதிர்ந்தார். ஒருபக்கம் தன் மகளுக்காக அவன் உயர்ந்து நிற்கும் நிலையைக் கண்டு பெருமிதம் கொண்டார் எனில் மறுபக்கம் கலக்கம் கவலை விரக்தி அத்தனையும் வந்து போனது.

உள்ளே அழைத்து அமர வைக்க, "நிலா எங்க சார்?. படிப்பு முடிஞ்சு வேலைக்கு ஜாயின் பண்ணிட்டாளா?. வீட்ல இல்லையா?" என்றவனின் விழிகள் வீட்டையே சுற்றி வந்து விட்டது. ஆனால் அவன் ஏஞ்சலைத் தான் காணவில்லை.

"உங்க ஸ்டேட்டஸ் அளவுக்கு இல்லைனாலும் நீங்க சொன்ன மாதிரி ஒரு ஜாப்ல உட்கார்ந்து என் தகுதியை உயர்த்திட்டு வந்துருக்கேன் சார். இப்போ உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேங்களா?. அவளை சந்தோஷமா நான் பார்த்துப்பேன்" என்று எதிர்பார்ப்போடு கேட்க..

அவருக்கு வார்த்தை வரவில்லை. விழிகளெல்லாம் கலங்கி கண்ணீர் கன்னத்தில் இறங்க, 'ம்ஹூம்' என்று இடவலமாய் தலையாட்டியவர், "உன்னைக் கல்யாணம் பண்ணிக்க என் பொண்ணுக்கு குடுத்து வைக்கலப்பா" என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க அவனுக்கு இதயத் துடிப்பே நின்று போனது என் ஏஞ்சலுக்கு என்ன ஆனது என்று நினைத்து.

தொடரும்.