• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-26

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
96
28
Chennai
அத்தியாயம் 26

பைரவியும் அவள் கணவனும் குடும்பத்தோடு மாறனைக் காண வந்திருந்தனர். முன்னாடியெல்லாம் அவளது கணவன், 'உங்க வீட்டுக்கு வந்தா மருமகனுக்கு விருந்து வைக்க மாமியார் இருக்காங்களா மாமனார் இருக்காரா?. நீ போய் உன் தம்பியை பாத்துட்டு வரனும்னா வா' என்று அவளை மட்டும் அனுப்பி வைப்பவன், இன்று மாறன் நல்ல நிலைமையில் இருக்கவும் பைரவி மேலையும் கொஞ்சம் பாசத்தையும் மரியாதையும் கூட்டி சிரித்துக் கொண்டே வந்திருந்தான்.

அக்காவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் அவனுக்கு சந்தோஷமே. அது என் கடமை‌. அதை சரியாக செய்து முடித்த திருப்தி அவன் மனதில். தம்பிக்கு பிடித்த உணவுகளை வகைவகையாய் செய்து போட்டாள். ஆனா எதுவும் அவன் நாவிற்கோ மனதிற்கோ சுவை தரவில்லை. மனமெல்லாம் தன்னவளின் நிலை மட்டுமே ஆக்கிரமித்திருக்க அதைத் தாண்டி உணவு தொண்டைக் குழிக்குள் இறங்க மறுத்தது.

"ஏன்டா மாறா நல்லாவே சாப்டவே மாட்டேங்குற?. அங்க காஞ்ச ரொட்டியா தின்னு தின்னு நாக்கு செத்துப் போயி வந்துருப்ப. இந்தா நாட்டுக்கோழி வறுவல் வச்சுக்கோ. நல்லா காராசாரமா இருக்கு சாப்டு" என்று தட்டில் எடுத்து வைத்தாள்.

அவன் சோற்றை அளந்து கொண்டே, "நிலாவோட அப்பா நம்ம ஊருக்கு வந்தாராக்கா?. உனக்கு போன் பண்ணாறா?. அவருகிட்ட என்ன சொன்ன?" என்றான் மாறன் நேரிடையாக.

"எ.. என்ன சொல்ற?. நிலா யாரு?. எனக்குத் தெரியாதே?"

"அப்போ உனக்குத் தெரியாது?. அவரு கிட்ட நீ எதுவும் பேசல?" என்று விழிகள் இடுங்க நோக்கினான்.

அதற்கு மேல் மறைப்பது வீண் என்று நினைத்தவள், "ஆமா பேசுனேன். அதுக்கென்னடா இப்போ?. வந்ததும் வராததுமா கேள்வி கேட்டுட்டு இருக்குற?. உன் நல்லதுக்கு தான் சொன்னேன். நீ லவ் பண்ணியாம். அவளுக்கு ஆக்ஸிடென்ட் ஆகி புத்தி பேதலிச்சுப் போச்சாம். நீ வந்து அவளைக் குணப்படுத்தனுமாம். நீயே இப்போ தான் கஷ்டப்பட்டு வாழ்க்கைல முன்னேறிக் கிட்டு இருக்குற. அவளை குணப்படுத்தி குடும்பம் நடத்துறது தான் உன் வேலையா?. இங்க பாருடா நடந்தது எல்லாம் உன் நல்லதுக்கு தான். நீ வேண்டாம்னு சொன்னதால அருணாவையும் இப்போ வேறொருத்தருக்கு கட்டிக் கொடுத்துட்டாங்க‌. நம்ம சொந்தத்துலே நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். உனக்கென்ன தலையெழுத்தா அந்தப் பைத்தியக்காரியை கல்யாணம் பண்ணிட்டு கஷ்டப்படனும்னு.." என்று சொல்லி முடிக்கவில்லை..

"அக்கா.." என்று தட்டைத் தூக்கி எறிந்து எச்சில் கையோடு சுவரை ஓங்கிக் குத்தி மேல்மூச்சு கீழ் முச்சு வாங்க முறைத்தவனை பார்த்து பயத்தில் அதிர்ந்தாள் பைரவி.

"ஏன்கா அப்படி பண்ண?. அவ எப்டி இருந்தவ. ஆனா இப்போ அவ எப்டி இருக்காத் தெரியுமா?. அவளுக்கு ஆக்ஸிடேன்ட் ஆனப்பவே நான் வந்து பாத்துருந்தா அவளுக்கு சரியாகிருக்குமோ என்னமோ?. அதை நினைச்சாலே எல்லாம் என்னால தானோனு நெஞ்செல்லாம் வெடிக்குறாப்புல இருக்குக்கா" என்றவனுக்கு கண்ணில் கண்ணீர் தானாக வடிந்தது.

"இப்போ நீ வந்து அவளை பாத்துட்டு தான வர்ற?. அவளுக்கு சரியாகிருச்சா?. உன்னைப் பார்த்தவுடனே மாறன்னு ஓடி வந்தாளா?. இல்லேல?. அவளுக்கு அப்படி ஆனதுக்கு நீ என்னடா பண்ணுவ?. அவளை காதலிச்சு ஏமாத்தலியே?. வாழ்க்கைல பாதி நாள் எனக்காக ஓடுன. மீதிபாதி உன்னை காப்பாத்திக்க ஓடுன. இனிமேலாவது நீ சந்தோஷமா இருக்க வேண்டாமாடா?. அதைக்கூட நான் நினைக்கக் கூடாதா?" என்று முந்தானையில் கண்ணீரைச் சிந்தினாள்.

"உனக்குப் புரியல கா. ஒருத்தி எனக்காக என்னையவே நினைச்சு என்னால சித்தம் கலங்கிப் போயி இருக்கா‌. அவளைத் தவிர என்னால யாரையும் என் வாழ்க்கைல யோசிச்சுக் கூட பார்க்க முடியாது. என்னைப் புரிஞ்சுக்கோக்கா"

"இதான் உன் முடிவாடா?. இதுவரைக்கும் நீயே சமைச்சு சாப்டு காலத்தைக் கடத்துன.. இனிமேயும் அதே மாதிரி தான் இருக்கனும்டா. நல்லா யோசிச்சுக்கோ. உன்னைக் கவனிக்க ஒருத்தி வேணாமா?" என்றவளுக்கு தம்பியின் வாழ்க்கையை நினைத்து பரிதவிப்பு.

"நான் நிலாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அவங்க வீட்ல பேசிட்டேன். நல்ல நாள் பார்த்து சொன்னோம்னா கல்யாண ஏற்பாடு பண்ணுவாங்க. எப்போனு பார்த்து சொல்லுக்கா". அதற்கு மேல் அதைப் பற்றி பேச எதுவுமில்லை இதுதான் தன் முடிவு என்று அடித்துச் சொல்லி விட்டான்.

"உன் தம்பிக்கென்ன பைத்தியமா?. ரெண்டாந்தரமா எவளையும் சொத்துக்காக கட்டிட்டு வந்தாக்கூட பரவால. கிறுக்கா இருக்குறவளை கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறானாம்?" என்று நேரிடையாக மாறனிடம் பேசாமல் பைரவியிடம் அவள் கணவன் எகிறினான்.

"இன்னொரு வார்த்தை நிலாவைப் பத்தி யாரும் பேசக்கூடாது. ஒரு அக்காவா நீ வந்து முன்ன நின்னு என் கல்யாணத்தை பண்ணி வைக்க ஆசை இருந்தா வந்து நில்லு. உனக்கு விருப்பம் இல்லேன்னா நானே என் கல்யாணத்தைப் பண்ணிக்கிறேன். ஆனா தம்பியா உனக்கு செய்ய வேண்டிய என்னோட கடமைல இருந்து எப்பவும் தப்ப மாட்டேன். அதைப்பத்தி என்னைக்கும் நீ கவலைப்பட வேண்டாம்" என்று தனது முடிவை தீர்க்கமாய் சொல்லி விட்டுச் செல்ல.. பைரவிக்கு புலம்புவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அவள் கணவனும், 'எப்படியோ போய்த் தொலைங்க' என்று விட்டு விட்டான்.

ஒரு நல்ல நாளில் மங்கள நாண் பூட்டி நிலாவை தன் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் மாறன். புவனா ஆயிரத்தெட்டு தடவை அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லி சொல்லியே கூட்டி வந்ததால் அமைதியாக சடங்குகளை செய்து கொண்டிருந்தாள். மனம் மட்டுமே மன்னவனின் நினைவில் சற்று பேதலித்து இருக்கிறது. ஏற்கனவே ஏஞ்சல். இப்போது கல்யாணக் கலையோடு பேரழகியாக தன்னருகில் அமர்ந்திருந்தவளை ரசிக்கத் தவறவில்லை மாறன்.

அவளது சென்னை நண்பர்களை மட்டும் சிலரை அழைத்திருக்க ப்ரியாவும் ரோஹித்தும் வந்திருந்தனர். ரோஹித்தின் பார்வை கல்யாண மேடையில் நிலைக்குத்தி நின்றது. சில நேரம் அமைதியாக இருந்தாள் நிலா. சில நேரம் எதையோ அவள்பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தாள். அதற்கு முகம் சுளிக்காமல் மாறன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. ஏனென்றே தெரியமால் முகம் முழுவதும் வியர்த்துக் கொட்டி மனது பிசைந்தது.

"டேய் ஏன்டா உனக்கு இப்படி வியர்க்குது. ஏசில தான உட்கார்நதுருக்க. பேயைப் பார்த்த மாதிரி அரண்டு போய் இருக்குற. என்ன உன் லவ்வரை வேறொருத்தன் கல்யாணம் பண்ணவும் பீலிங்கா?. ஒருவேளை அந்த இடத்துலே நீ இருந்து நிலாக்கு இப்படி ஆகிருந்தா நீ அவளை ஏத்துக்கிட்டு இருந்துருப்ப?" என்று நக்கலாய் கேட்டு சிரித்தாள் ப்ரியா. அவனுக்கு சாட்டையால் அடித்த உணர்வு. என்ன நினைத்தானோ, "நான் கிளம்புறேன். எனக்கு ஒரு வேலை இருக்கு. நீ இருந்துட்டு வா" என்று கிளம்பி விட்டான்.

அவளை அமர்த்தி சடங்குகள் செய்ய வைத்து திருமணத்தை முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது புவானாவிற்கு. அவள் அருகிலே நின்றிருந்தார்.

பைரவிக்கோ அதைப் பார்க்கவே பொம்மைக் கல்யாணம் என்பது போல் தான் தோன்றியது. 'கடவுளே! ஏற்கனவே இளமையில் இருந்து கஷ்டப்பட்டவனுக்கு இப்டியொரு வாழ்க்கையா அமையனும். அவனே அவனை ஏமாத்திக்குறது போல இருக்கு. ஏன் அவன் தலையெழுத்தை இப்படி எழுதுன?' என்று உள்ளுக்குள் ஆதங்கப்பட்டாள்.

ஒற்றை மகளின் திருமணம். எவ்வளோ விமரிசையாக நடத்த வேண்டும் என்று நினைத்தது‌. இன்று சிம்பிளாக ஒரு மினி ஹாலில் நடந்து முடிந்ததை நினைத்து ஒரு ஓரத்தில் வருத்தமாக இருந்தது மனோகருக்கு. மறுபக்கம் தன் பாரம் இறங்கி விட்டது என்று நினைக்கவா இல்லை மாறனின் மேல் பாரத்தை இறக்கி வைத்துவிட்டோம் என்று கவலை கொள்வதா என்று மனோகருக்கு புரியவில்லை. ஆனால் பெற்றவராக, 'அவர்கள் வாழ்வு சிறக்க வேண்டும். அவன் அருகாமை தனது மகளைக் குணப்படுத்த வேண்டும்' என்று மானசீகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

சடங்குகள் முடித்து மாறன் வாங்கிய ப்ளாட்டில் முன்னாடியே சிம்பிளாக பால் காய்ச்சி முடித்ததால் இப்போது அங்கு சென்றனர்.

"நான் எதுக்கு இங்க இருக்கனும். மாறன் தேடி வருவான். நம்ம வீட்டுக்குப் போலாம் ப்பா" என்று அடம்பிடித்த நிலாவை மாறன் தான் சமாதானம் செய்தான்.

"இங்க பாரு ஏஞ்சல். உனக்கு உன் மாறனை பாக்கனும்னு ஆசை இல்லையா?. என்கூட இருந்தா தான் மாறன் உனக்குக் கிடைப்பான். எனக்குத்தான் அவனைப் பத்தித் தெரியும். நான் அவனைக் கூப்டு வர்றேன். என்கூட இருக்குறியா?" என்று குழந்தை போல் கெஞ்சிக் கொஞ்சிக் கேட்க.

அவன் அருகாமையும் விழிகளின் ஏக்கமும் அவளை யோசிக்க வைத்தது. சில விநாடிகள் அவனையே பார்த்தவள், "உனக்குத் தெரியுமா மாறனை?. நான் அவனை ரொம்ப மிஸ் பண்றேன். உன்கூட இருந்தா வருவானா?" என்று ஆர்வமாய் கேட்டாள்.

"ம் கண்டிப்பா வருவான் உனக்காக" என்று கன்னம் பிடித்து ஆட்டிக்கொண்டே அவளுக்கு ஏற்றது போல் மழலையாக மாறி சொன்னான்.

"சரி அப்போ நான் உன்கூட இருக்குறேன். ம்மா ப்பா நீங்க வீட்டுக்கு போங்க. நான் பயப்படாம இருந்துப்பேன்" என்று அவர்களை வழியனுப்பி வைத்தாள் நிலா.

"பாத்துக்கோங்க மாறன். ஏதாவது ப்ராப்ளம்னா கால் பண்ணுங்க" என்று கண்ணீரோடு விடைபெற்றனர் நிலாவின் பெற்றவர்கள்.

பைரவியும், 'இங்க இருந்து சடங்கு சம்பிரதாயம்னு என்ன பண்ணப் போறோம்' என்று அன்றே கிளம்பி விட்டாள்.

அவன் நிலவுப் பெண்ணும் அவனும் தனிமையில். இந்த நாளுக்காக எத்தனை கற்பனைக் கோட்டைகள் கட்டி வைத்திருந்தான் முன்னாடி. இப்போது அதைப்பற்றிய எண்ணம் சிறிதும் இல்லை. தாம்பத்யம் இருந்தால் தான் வாழ முடியுமா என்ன?. அவளுக்காக அவன் வாழ வேண்டும். அது மட்டும் தான் தோன்றியது. அவள் அருகாமை மட்டுமே போதும் இப்போதைக்கு அவனுக்கு.

அவளுக்கு எப்டி தாய்க்கு தாயாக, தந்தைக்குத் தந்தையாக, மழலைக்கு மழலையாக மாற வேண்டும் என்ற யோசனை மட்டுமே சிந்தையில் ஓடியது.

அவன் யாரென்று மூளைக்கு உரைக்கவில்லை அவளுக்கு. ஆனால் அவனுடன் நெருக்கமாய் இருந்த மனம் உணர்ந்ததோ எண்ணவோ அவன் சொல்வதை தட்டாமல் கேட்டுக் கொண்டாள். அவன் அருகாமை அவளுக்கு பாதுகாப்பான உணர்வைக் கொடுத்தது போல் உணர்ந்தாள்.

"ஏஞ்சல்.. ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டுத் தூங்கலாமா?. இந்த ட்ரெஸ் போட்டுக்கோ" என்றவனை இமைக்காமல் பார்த்தாள்.

அவள் விழியில் கலந்து விழுந்து எழுந்தவன், "என்னாச்சு?" என்று கேட்டான்.

"நீங்க என்னை என்ன சொல்லி கூப்டேங்க?" என்று ஆர்வமாய் விழிகள் மின்னக் கேட்டாள்.

அவனுடன் இருக்கும் போது அவன் அருகாமையில் விழிகள் மின்னல் வெட்ட நாணிச் சிவக்கும் அதே பார்வை. அப்படியே அள்ளி அணைக்கத் துடிக்கும் கைகளை அணைபோட பெரும்பாடாய் இருந்தது மாறனுக்கு.

"ஏஞ்சல்னு கூப்டேன். நீ தான என்னோட ஏஞ்சல்" என்று அவள் கன்னங்களை ஏந்தி அவள் மனதோடு மூளையைத் தட்டி எழுப்ப முயற்சித்தான்.

"ஹான்.. ஏஞ்சலா? நானா?.. ம் ஓகே" என்று முடித்து விட அவனுக்கு சப்பென்றாகி விட்டது.

'மாறன் வருவானா வருவானா?' என்று கேட்டுக்கொண்டே அவன் நெஞ்சினில் சாய்ந்து தூங்கி விட்டாள். அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் தந்தவன், "எப்பவும் நீ எனக்கு குழந்தை தான்டி. என்ன முன்னாடி நீயே உன் வேலையே செஞ்சுக்குவ. இப்போ சொன்னா செய்யிற" என்று சிரித்தவன், எப்போதும் போல் அவள் அழகை ரசித்து மனதில் நிரப்பினான். அவன் காதல் கை சேர்ந்து விட்டது. ஆனால் முழுதாய் அதை அனுபவிக்க முடியாத அவன் விதியைத் தான் என்ன சொல்வதோ.

நிலா அழகாய் அவனுடன் பொருந்திக் கொண்டாள். அவ்வப்போது அவள் காதலன் மாறனைப் பற்றிக் கேட்பவள் மற்றநேரம் கணவன் மாறனிடம் ஐக்கியமாகினாள். வேலைக்குச் செல்லும் நேரம் புவனாவிடம் அவள் வீட்டில் விட்டுச் செல்பவன் மாலை வரும் போது உடன் அழைத்து வந்துவிடுவான் அவன் வீட்டிற்கு.

இப்படியே நாட்கள் கடக்க ஒருநாள் மனோகர் செக்கப்பிற்காக அவளது ரிப்போர்ட்டுடன் மாறன் வீட்டிற்கு வந்திருந்தார் மனோகர்.

"லாஸ்ட் டைம் போனப்போ டாக்டர் என்ன சொன்னாங்க மாமா?. என்னைப் பார்த்தா அவளுக்கு ஏதாவது ஞாபகம் வரும்னு சொன்னாங்களா?. அவளுக்கு என்னைக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு. அவ ரிப்போர்ட் குடுங்க" என்று வாங்கிப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், அதிலிருந்த முதல் ரிப்போர்டில் குறிப்பிட்டிருந்த தேதியில் கண்கள் நிலைக்குத்தி நின்றது.

விரல்களால் அந்த தேதியைத் தடவியவன், 'இந்த டேட்?' என்று யோசித்தவன், "மா.. மாமா.. நிலாவுக்கு என்னைக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு?. அவ ப்ரத்டே அன்னைக்கா?" என்றவனுக்கு உள்ளம் அதிர்ந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் உள்ள அவ பிறந்தநாள் தேதி குறிப்பிட்டிருந்தது அதில்.

"ஆ.. ஆமா மாறன். ஏன் என்னாச்சு?"

அவர் ஆம் என்கவும், இதயம் வெடித்துச் சிதறுவது போல் இருந்தது அவனுக்கு. "அய்யோ நிலா.. உன் நிலைமைக்கு நான் தான் காரணமா?" என்று ஓவென்று கதறினான்.

தொடரும்.