• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இராக்கதனின் கண்மணி 1

kkp2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
36
27
18
Tamil nadu
அத்தியாயம் 1

"இனியா வெட்ஸ் விவேக்" பெயர் பலகை அனைவரையும் வரவேற்க, பிரமாண்டமாய் அந்த மண்டபம் விழாக் கோலம் பூண்டிருந்தது.

"எனக்கென்ன தெரியும்? நான் என்ன கனவா கண்டேன்?" என சினேகா தன் கணவன் சூர்யமூர்த்தியிடம் சொல்ல,

"பேசாம இரு டி. இங்க நடந்தது இப்ப எல்லாருக்கும் தெரியனுமா?" என்றார் பல்லைக் கடித்த சூர்யமூர்த்தி தன் மனைவியிடம்.

"நீயும் கொஞ்சம் அமைதியா இரு டா!" என சூர்யமூர்த்தியை அதட்டினார் அவரின் அண்ணன் சிவமூர்த்தி.

சிவமூர்த்தியின் மனைவி விமலா மணமகள் அறையில் இருந்து அழுது கொண்டிருக்க,

"க்கா! அழுது என்னாக போகுது? போகட்டும் விடுங்க!" என சினேகா சொல்ல, அப்படி ஒரு கோபம் சினேகா மேல் விமலாவிற்கு.

இவளெல்லாம் சொல்லும் அளவுக்கு தான் வந்துசிட்டோமே என ஏகத்திற்கும் கோபமும் இப்படி நடந்துவிட்டதே எனும் அதிர்ச்சியும் அழுகையுமாய் அமர்ந்திருந்தார்.

"ம்மா!" என சினேகாவின் அருகில் வந்து நின்றாள் துகிரா. மணப்பெண் அலங்காரத்தில் வந்து நின்ற மகளைக் காண கண்கள் போதவில்லை சினேகாவிற்கு.

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது முகூர்த்த நேரம் நெருங்க. இப்பொழுது தான் அனைவரும் வர துவங்கி இருக்க, பெண் வீட்டார் முகத்தில் எல்லாம் துளியும் மகிழ்ச்சி தெரியவில்லை.

சினேகாவைத் தவிர அனைவரிடமும் அத்தனை இறுக்கம். என்ன தான் பேசி சரி செய்து விட்டாலுமே யார் மனமும் நடந்ததில் முழுதாய் சமாதானம் அடையவில்லை.

சூர்யமூர்த்திக்கும் நடப்பதிலும் நடப்பதை ஏற்பதிலும் என அத்தனை யோசனை இருக்க தான் செய்தது. ஆனாலும் இனி பின்வாங்க முடியாதே என அமைதியாய் நடப்பதை கவனிக்க ஆரம்பித்தார்.

"இன்னுமா விவேக் வர்ல?" விமலாவின் அண்ணன் வந்து சிவமூர்த்தியிடம் கேட்க,

"வந்துட்டு இருப்பாங்க போல. போன் எடுக்கல!" என்றார் வாசலை பார்த்து நின்ற சிவமூர்த்தி.

"எல்லாம் சொல்லிட்டீங்க தானே?" என சந்தேகமாய் அவர் மீண்டும் கேட்க,

"சொல்லியாச்சு த்தான் வந்துடுவாங்க!" என்றார் அவரைப் பாராமலே!.

வேறு வழி இல்லை நின்றே ஆக வேண்டும் என்ற நிலையில் தான் அங்கிருக்கிறார் சிவமூர்த்தி. தம்பி சூர்யமூர்த்தியை இப்படி மாட்டிவிட்ட பின் எப்படி இங்கிருந்து செல்ல என தெரியாமல் தான் நின்றார் சிவமூர்த்தி.

"இது யாரு? புதுசா? நம்ம சொந்தக்காரங்க பக்கம் பார்த்ததில்லையே இப்படி ஒருத்தரை?" என விமலாவின் அண்ணன் வாசலில் வந்து கொண்டிருந்தவனைப் பார்த்து மீண்டும் சொல்லவும்,

"ப்ச்!" என அசட்டையாய் தான் திரும்பினார் அந்த பக்கம் சிவமூர்த்தி.

அவருக்குமே வருபவன் யார் என்று தெரியவில்லை. பட்டு வேஷ்டி சட்டையில் அத்தனை மிடுக்காய் வந்திறங்கியவன் அந்த கூட்டத்திற்குள் அத்தனை தனித்து தான் தெரிந்தான்.

இன்னும் என்ன? இதற்கு மேலும் என்ன அவமானத்தை தாங்கிட என தான் பயந்து நின்றார் சிவமூர்த்தி.

மாப்பிள்ளை விவேக் அத்தனை பெரிய இடம். விவேக் தந்தை தணிக்காச்சலம் அரசியல் ஆள் பலம் இருப்பவர். அரசியல்வாதிகளின் பின்புலம் கூடவே சொத்து மதிப்பு என பெருமையாய் தான் தன் மகளை பேசி வைத்திருக்க, இப்பொழுது நடந்ததை தணிக்காச்சலத்திடம் சொல்லி புரிய வைத்து அவரோடு அவர் மகனையும் மலையிறக்கி தான் திருமணத்திற்கு சம்மதமே வாங்கி இருந்தார் சிவமூர்த்தி.

இப்பொழுது இப்படி வந்து நிற்பவனைப் பார்த்ததும் இன்னும் திக்கென்று தான் ஆனது ஏன் என்று தெரியாமலே.

"உன்கிட்ட தானே கேட்குறேன்?" என பக்கத்திலிருந்தவர் மீண்டும் கேட்க,

"நீங்க போய் உக்காருங்க த்தான். நான் பாக்குறேன்!" என புதியவனை நோக்கி சென்றார் சிவமூர்த்தி.

மண்டபத்தை சுற்றிலும் பார்த்தான் அவன் விக்ரம் ஸ்ரீனிவாசன். மடிப்பு கலையாத பட்டு வேஷ்டி சட்டை என நிச்சயம் அது மாப்பிள்ளை கோலம் தான்.

கையில் இருந்த கண்ணாடியை சட்டையின் மேல்பட்டன் இடையில் மாட்டிக் கொண்ட விக்ரம் தன்னை நோக்கி வந்தவரைக் காண,

"வணக்கம். நீங்க..." என கேட்க வர,

"நீங்க?" என தானே கேட்டிருந்தான் விக்ரம்.

"நான் பொண்ணோட அப்பா!" சிவமூர்த்தி சற்று யோசனையோடு சொல்ல,

"ஓஹ்!" என்றவன்,

"என்ன இன்னும் பொண்ணு மேடைக்கு வர்ல?" என அவரிடமே கேட்டான்.

யார் இது? தான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் பதில் கேள்வி கேட்கிறானே என அவர் நிற்க,

"மாப்பிள்ளை இன்னும் வரலையாமே!" என பேசி தன்னைக் கடந்து ஒருவர் சென்றதில் தெளிந்த சிவமூர்த்தி,

"இந்தாளு வேற இன்னும் மண்டபத்துக்கு வராம என்ன கிழிக்குறாறோ!" என சொல்லி மொபைலை எடுத்து விவேக் தந்தைக்கு அழைத்துக் கொண்டே சூர்யமூர்த்திக்கு கைகாட்டி,

"பொண்ணை கூட்டிட்டு வந்து நலங்கு வைங்க. வந்திடுவாங்க!" என சொல்லிவிட்டு அலைபேசியில் கவனம் வைக்க,

"குட்!" என சொல்லிக் கொண்டு மணமேடை நோக்கி சென்றான் விக்ரம்.

"மூர்த்தி! என்ன நடக்குது இங்க?" என அலைபேசியில் அத்தனை ரௌத்திரமாய் தணிக்காச்சலம் கேட்க, சிவமூர்த்தி கவனம் மொத்தமும் அலைபேசியில் குவிந்துவிட்டது. துகிரா மனமேடைக்கு வந்திருந்தாள் அதே நேரம்.

"என்ன ஆச்சு சார்? அதான் எல்லாம் பேசிட்டோமே?" என பதறி சிவமூர்த்தி கேட்க,

"யோவ்! என் பையனை என் கண்ணு முன்னாடியே கடத்திட்டு போறாங்கய்யா. யாருய்யா அவங்க?" என தணிக்காச்சலம் கேட்க,

"என்ன?" என அதிர்ந்து சிவமூர்த்தி நிற்க,

"துகிமா!" என்ற சத்தமும் கூடவே கூச்சலும் என மேடை பக்கம் எழுந்த சலசலப்பில் சிவமூர்த்தி அங்கே பார்க்கும் போது வந்திருந்த புதியவன் துகிராவின் கைகளைப் பிடித்திருந்தான்.

"டேய்!" என்ற சிவமூர்த்தி அலறியவர் மேடை பக்கமாய் ஓட, சூர்யமூர்த்தி விக்ரம் சட்டையை பிடிக்க வந்தவரை கைநீட்டி விக்ரம் தடுக்கும் முன் அவர் தடுமாறி விழுந்திருந்தார்.

"ப்பா!" என துகிரா பதறி அவரருகே செல்ல இருந்தவள் கைகளை அத்தனை இறுக்கமாய் பற்றி இருந்தான் விக்ரம். சிவமூர்த்தி வேகமாஹ் வந்து தம்பியை பிடித்திருந்தார்.

"யார் டா நீ? என்ன டா பண்ணிட்டு இருக்க?" என சிவமூர்த்தி அதிர்ந்து கேட்கவும் சினேகாவும் தன் மகள் அருகே செல்ல போக,

"பொண்ணுக்கு விருப்பம் இல்லைனு தெரிஞ்சு கல்யாணத்தை ஏற்பாடு பண்ணின உங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!" என்ற விக்ரம் சினேகாவினைப் பார்த்த பார்வையில் அவர் தேங்கி நிற்க, அடுத்து அவன் பேச்சில் அதிர்ந்து நின்ற துகிராவை அத்தனை அழுத்தமாய் கண்டான் விக்ரம்.

தணிக்காச்சலம் மீண்டும் மீண்டும் சிவமூர்த்திக்கு அழைக்க, அதை ஏற்கும் நிலையில் எல்லாம் இல்லை அவர்.

"கல்யாணம்னா மாப்பிள்ளை வேணும்ல? எங்க இங்க இருக்க வேண்டிய மாப்பிள்ளை?" என விக்ரம் கேட்ட பாவனை அத்தனை நக்கலாய் வர, சிவமூர்த்திக்கு புரிந்துவிட்டது இவன் வேலை தான் என்று.

சுற்றிலும் சலசலப்புகள் அதிகமாகிவிட்டது. அங்கிருந்த பெரியவர்கள் கூட ஒன்றுகூடி விட்டனர்.

இத்தனை பேர் இருக்குமிடத்தில் இப்படி தனியாய் வந்து மிரட்டி பெண்ணை பிடித்துக் கொண்டு எவ்வளவு தைரியம் என்பதாய் அவர்களுக்குள் பேசி,

"இங்க பாருப்பா கல்யாண வீட்டுல இவ்வளவு பிரச்சனை பண்றது நல்லதில்ல. மாப்பிள்ளை வர்ற நேரம்!" என விமலாவின் அண்ணன் வந்து விக்ரமிடம் பேச,

"நான் போனா தான் மாப்பிள்ளை வர முடியும். நான் போகணும்னா.." என துகிராவைக் கண்டவன் பார்வையில் அவன் பிடியில் இருந்த தன் கையை மீட்டுக் கொள்ள போராடிக் கொண்டிருந்த துகிரா அரண்டு விழித்தாள்.

"இன்னைக்கு இந்த பொண்ணுக்கு கல்யாணம் தான். நீங்க எல்லாம் கோஆபரேட் பண்ணினா நல்ல நேரத்துல நடத்தி வச்சுடலாம்" என்று சத்தமாய் கூறிய விக்ரம், துகிராவை இழுத்துக் கொண்டு நடக்க, குறுக்கே நின்றுவிட்டார் சூர்யமூர்த்தி.

"என்ன விளையாடுறியா? கையை விடு டா. யாரு இடத்துக்கு வந்து என்ன பேசுற?" என அவர் கேட்க,

"உங்க பொண்ணுக்கு கல்யாணத்துக்கு விருப்பம் இல்ல. உங்க கோவத்துக்கு பயந்து கல்யாணத்துக்கு சம்மதிச்சு இங்க வந்து உக்காந்திருக்கா. அவ விருப்பம் அவ அப்பா அம்மாக்கு தெரிஞ்சும் கட்டாயக் கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்க. வேற எதுவும் டீடெயில்ஸ் வேணுமா?" என்றவன்,

"தணிக்காச்சலம் அவர் பையன் அவருக்கு கிடைக்கலைனா என்ன பண்ணுவார் தெரியும் தானே?" என பயமுறுத்த, அதுவும் புரிய தான் செய்தது சிவமூர்த்திக்கு.

தம்பிக்காக பார்த்து துகிராவை காப்பாற்றவா இல்லை தணிக்காச்சலத்திற்கு பயந்து விவேக்கை காப்பாற்றவா? என அவர் அசைவற்ற அதிர்ந்த நிலையில் நிற்க, விமலாவிற்கு நடப்பது அனைத்தும் புரிந்தது.

ஆனாலும் நடக்கட்டும் நடக்க வேண்டும் என சினேகாவின்பால் பொறாமை கொண்டு நிற்க,

விக்ரம் வார்த்தைகளில் இன்னும் குழம்பி நின்றார் சூர்யமூர்த்தி. ஏற்கனவே விவேக்கிற்கு மகளை கொடுப்பதில் விருப்பம் இல்லை. இதில் இவன் யார்? என்ன சொல்கிறான் என மகளைப் பார்க்க, அவளுமே புரியாமல் தான் நின்றாள்.

"துகி! துகி அம்மாகிட்ட வந்துடு டா!" என கெஞ்சினார் சினேகா.

"கையை விடு!" என சொல்லிய துகிராவை விக்ரம் திரும்பிப் பார்த்த வேகத்தில் பக்கென்று ஆக, பயந்து பதறி அவள் விழிக்கும் பொழுதே,

"ஒருத்தனை ஏமாத்திட்டு இங்க வந்து உக்காரும் போது இருந்திருக்கணும் இந்த பயம்!" என அத்தனை கோபமாய் கூறியவன், வேஷ்டி மடிப்பில் இருந்து கன்னை எடுத்து மேல உயர்த்தி காட்ட, அத்தனை சலசலப்பும் நொடியில் அடங்கிவிட்டது.

"ஒரிஜினல் தான்!" என்றவனுக்கு அடுத்த சில நொடிகளில் அவன் வேலை எளிதாக,

"எனக்கு ஷூட் பண்றது புதுசு இல்ல. புரியும் நினைக்குறேன்!" என்றவன் சொல்லில் அனைவரின் முன்னிலும் துகிராவை இழுத்து செல்வதும் எளிதானது.

அங்கேயே தொய்ந்து அமர்ந்துவிட்டார் சூர்யமூர்த்தி. சிவமூர்த்தி செய்வதறியாமல் நிற்க, அடுத்த அரை மணி நேரத்திலெல்லாம்,

"உன் பொண்ணும் வேண்டாம் உன் குடும்பமும் வேண்டாம். என் பையன் எனக்கு கிடைச்சதே போதும். ஆனா உன்னை சும்மா விட மாட்டேன். என்கிட்டயே வாலாட்டிட்டல்ல? உன்னை சும்மா விடமாட்டேன்!" என தணிக்காச்சலம் போனில் பேசியவர் சிவமூர்த்தி சொல்ல வந்ததை கூட கேட்க தயாராய் இல்லை.

அவர் சொல்லில் புரிந்தது என்னவோ அவருக்கு அவர் மகன் கிடைத்துவிட்டான் என்பது தான்.

"போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்துடுவோமாங்க?" என கேட்ட விமலா,

"ஆனா பொண்ணு விருப்பத்தோட போன மாதிரி தான் அந்த பையன் சொல்லிட்டு போறான். உண்மை தெரியும் முன்னாடி போய் அசிங்கப்பட்டுட கூடாதே!" என்றும் சொல்ல, சினேகாவிற்கு விமலாவின் பேச்சுக்கள் ஏன் என்று புரியாமல் இல்லை.

ஆனாலும் மகளை எண்ணி கலங்கி போய் தான் அமர்ந்திருந்தார்.

தொடரும்..

 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
247
106
43
Tamilnadu
அருமையான ஆரம்பம் 🤣கல்யாண பொண்ணு காணவில்லை பையனும் காணவில்லை இன்ஸ்டன்ட் பொண்ணும் காணவில்லை 🤣🤣🤣
 
  • Haha
Reactions: Rampriya and kkp2