வணக்கம் மக்களே!
கதையை முடிக்க வேண்டிய நேரத்தில் தொடங்கி இருக்கேன். வேலை பளுவினால் நினைத்தது போல ஆரம்பிக்க முடியவில்லை ஆனால் முடிந்த வரை விரைவாக முடித்துவிடுவேன் அதற்கு உங்களோட ஆதரவும் கருத்தும் மிக அவசியம். படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க 


உயிர் கேட்கும் அமுதம் நீ! - 1
திருப்பூர் மாநகரில் அமைந்திருந்த பிரம்மாண்ட மண்டபத்தின் நுழைவு வாயிலில் திருவளர்ச்செல்வன் அபய் ஸ்ரீவத்சன் வெட்ஸ் திருவளர்ச்செல்வி நயனிகா வருஷி என்று மணமக்களின் பெயர்கள் மின் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது.
“நிச்சயத்துக்கு நேரமாச்சு கொஞ்சம் சீக்கிரமா ரெடி பண்ணுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார் மணமகளின் அன்னை தனலட்சுமி.
நிச்சயம் முடிந்ததும் ரிசப்ஷன் தொடங்கிவிடும் ஆனால் மணமகன் இன்னும் உடை மாற்றாமல் தன் கைபேசியை பார்த்திருந்தான்.
இன்று நேற்றல்ல கடந்த ஆறு மாதங்களாகவே சஞ்சனாவிடம் இருந்து ஒரு அழைப்போ மெசேஜோ வந்துவிடாதோ என்று கைபேசியை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்.
“மச்சான் நீ எவ்வளவு பார்த்தாலும் கண்டிப்பா சஞ்சு கிட்ட இருந்து கால் வர போறது கிடையாது... அவங்க அப்பா அம்மாவையும் நம்மால ரீச் பண்ண முடியலை, உன் வாழ்க்கையை சிக்கலாக்கிக்காத சொன்னா கேளு”
“அதோடு சஞ்சு வந்தாலும் உங்க அப்பா கல்யாணத்தை நடத்த விடுவார் என்று எனக்கு தோணலடா பெட்டர் இந்த வாழ்க்கையை நீ ஏத்துக்கோ..”
“அதுவும் நயனி எல்லா விஷயமும் தெரிஞ்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறாங்க, கண்டிப்பா நீ நினைக்கிற மாதிரி இல்லாம இந்த வாழ்க்கை நல்லா இருக்கும் டா” என்று சொல்ல எதையும் அவன் காதில் வாங்கினான் இல்லை.
கையில் இருந்த கைப்பேசியை மெத்தையில் விட்டெறிந்து விட்டு நேராக மணமகள் அறைக்கு சென்றான்.
“மச்சான் எங்கடா போற சொல்றத கேளு” என்று சுதர்ஷன் அவனை பின் தொடர... உள்ளே நுழைந்தவன் எனக்கு நயனி கிட்ட பேசணும் வெளியில போங்க” என்றான்.
அலங்காரத்தில் திருத்தம் செய்து கொண்டிருந்தவள் அவன் குரலில் தன் செய்கையை நிறுத்தி அவன் புறம் திரும்ப அவள் அத்தை முதல் பாட்டி வரை அனைவரும் அவளை பார்த்திருந்தனர்.
“நான் சொல்றது புரியல கெட் அவுட்” என்று அபய் சீறியதில் அனைவரும் தங்களுக்குள் பேசியபடி வெளியேறினர்.
அவளருகே இருந்த அழகுக்கலை நிபுணரும் அவள் தங்கையுமான நிதிஷா என்ன செய்வது என்று புரியாமல் அச்சத்தோடு அபய்யை பார்க்க, “உனக்கு தனியா சொல்லனுமா?! அவுட்” என்று கர்ஜிக்க ஓட்டமும் நடையுமாக வெளியேறினாள்.
கதவை தாளிட்டுவிட்டு நயனிகாவை நோக்கி அபய் முன்னேற அவளோ கையில் இருந்த துண்டை கீழே வைத்துவிட்டு கைகளை கோர்த்தபடி அவனை, எதிர்கொள்ள தயாராகினாள்.
அதேநேரம் மண்டப வாயிலில் அனைவரையும் வரவேற்று கொண்டிருந்த சக்ரவர்த்தியிடம் “ஸார் சொன்னா மாதிரியே கல்யாணம் முடிஞ்சதும் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிடுவீங்க தானே” என்று கேட்டுக்கொண்டிருந்தார் சேதுராமன்.
“என்னை பற்றி தெரியாதா சேது” என்று கேள்வியையே அவர் தன் பதிலாக கொடுக்கவும்.,
“தெரியும் சார் ஆனால் மாப்பிள்ளைக்கு பெருசா விருப்பம் இல்லாத மாதிரி இருக்கு. ஒருவேளை கல்யாணத்தை நிறுத்திட்டா..” என்று தயக்கத்தோடு நிறுத்தினார்.
“இந்த கல்யாணத்தை கடவுளே நினைச்சாலும் நிறுத்த முடியாது சேது, நயனிகா தான் என் மருமகள்” என்றார் உறுதியாக.
அங்கே வந்த நிர்மலா, “என்னங்க ஒரு நிமிஷம் உன்கிட்ட பேசணும்” என்றதில் சக்ரவர்த்தி சேதுராமனை பார்க்க, “நீங்க பேசுங்க சம்பந்தியம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று விலகினார்.
“உங்களுக்கே இது நியாயமா இருக்கா?!”
“என்ன நியாயத்தைடி எதிர்பார்க்கிற?”
“அபய் காதலை பிரிச்சு இப்படி அவனை சூழ்நிலை கைதியாக்கி நீங்க என்ன சாதிக்க போறீங்க?! நம்ம சொத்து, ஆஸ்தி எல்லாமே பசங்களுக்கு தான் ஆனா இதெல்லாம் அவங்களுக்கு சந்தோஷம் கொடுத்துடாதுன்னு ஏன் உங்களுக்கு தெரிய மாட்டேங்குது” என்று வேதனையோடு கேட்க சக்ரவர்த்தியின் முகம் கடினமானது.
“ஏன்டி தகுதி தராதரம் இல்லாம உன் பையன் கண்டவளையும் கட்டி வைக்க சொல்வான் நான் செய்யணுமா?! இந்த சக்ரவர்த்திக்குன்னு ஊருக்குள்ள ஒரு அடையாளம் இருக்கு அதை உன் மகனுக்காக இழக்க முடியாது”
“அந்த பொண்ணு சஞ்சனாவை எங்கேங்க மறைச்சு வச்சிருக்கீங்க? என்ன செய்ய போறீங்க? தயவு செய்து சொல்லுங்க. பெண் பாவம் பொல்லாதது நமக்கு அது வேண்டாம்”
“இதோபார் அந்த பொண்ணை தூக்கியிருந்தா அதை உன் மகன் கிட்டயே சொல்லியிருப்பேன் ஆனா நான் எதுவும் செய்யலை. நம்புறதும் நம்பாததும் உன் பிரச்சனை” என்று தோள்களை குலுக்கிய சக்ரவர்த்தி தொழில் சாம்ராஜியத்தில் நிஜமாகவே சக்கரவர்த்தி தான்.
திருப்பூரில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கோட்டீஸ்வரர்களில் அவரும் ஒருவர். அவரின் இளைய மகனான அபய் காதலித்ததில் கூட அவருக்கு பிரச்சனை இல்லை ஆனால் தகுதி இல்லாதவள் மீது அவனுக்கு பிறந்த காதலே தற்போதைய அவன் நிலைக்கு காரணமாகி போயிருந்தது.
இத்தனைக்கும் அவர் பெரிய மகன் வினோதன் தன் அத்தை மகளை காதல் மனம் தான் புரிந்திருக்கிறான்.
அதேபோல அபய் அவர்கள் ஜாதியில் காதலித்திருந்தால் அவரும் மனதார திருமணம் செய்து வைத்திருப்பார். அவன் வேறு ஜாதி பெண்ணை காதலித்ததில் தான் பிரச்சனை பெரிதாக வெடித்தது.
இளங்கன்று பயமறியாது என்பது போல காதலித்த பெண்ணை கரம் பிடிப்பேன் தந்தையை எதிர்த்த தமையனை தனக்கே உரிய பாணியில் கட்டுபடுத்தி கட்டாய திருமணத்திற்கும் அவனை சம்மதிக்க வைத்துவிட்டார்.
“என்னை கேள்வி கேட்கிறதை விட்டுட்டு போய் உன் மகனுக்கு புத்திமதி சொல்லு நிம்மி பார்க்கிறவங்க எல்லாம் ஏன் அவன் முகம் அப்படி இருக்குன்னு கேட்கிறாங்க கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருக்க சொல்லு. அதுதான் உனக்கும் நம்ம குடும்பத்துக்கும் நல்லது”
“அவன் மனசு வேதனையிலும் வலியிலும் இருக்கிறப்போ சிரிக்க சொல்றீங்களே?! என்ன அப்பா நீங்க?!”
“இந்த கேள்வியை வேற யாராவது கேட்டிருந்தா என் பதிலே வேறயா இருந்திருக்கும் ஆனா காதலிச்சு கட்டின பொண்டாட்டியா இருக்கிறதால அமைதியா இருக்கேன் போடி!” என்று மனைவியை அனுப்பி வைத்துவிட்டு விருந்தினர்களை வரவேற்க தொடங்கினார்.
அதேநேரம் “நான் அவ்வளவு சொல்லியும் நீ இந்த கல்யாணத்தை நிறுத்தல இல்ல, எவ்ளோ தைரியம் இருக்கணும்டி உனக்கு?” என்றவன் அவள் கழுத்தில் கையை வைத்து அழுத்தம் கொடுக்க இன்னும் திடமாக அவனை பார்த்தாள்.
“வேண்டாம் நயனி, உனக்கு நான் லாஸ்ட் சான்ஸ் கொடுக்கிறேன் உண்மையை சொல்லு என் சஞ்சு எங்க? அவளை என்ன பண்ணின?”
“நீங்க எத்தனை முறை கேட்டாலும் என்னுடைய பதில் தெரியாது” என்பது தான் என்றாள் தீர்க்கமாக.
“பொய்!! பொய் மேல பொய் சொல்லாதடி, எனக்கு நல்லா தெரியும் எங்க அப்பா சஞ்சுவை எவ்வளவு மிரட்டி இருந்தாலும் இப்படி என்கிட்ட சொல்லாம ஓடி போறவ கிடையாது...”
“எதுவானாலும் தைரியமா நிற்க கூடியவ இப்படி சொல்லாம கொள்ளாம போயிருக்கானா அதுக்கு நீ ஒருத்தி தான் காரணமா இருக்கணும்..”
“நீங்க தாப்பா புரிஞ்சிருக்கீங்க ஸ்ரீ எனக்கு நிஜமாவே சஞ்சு எங்கிருக்கான்னு தெரியாது”
“ச்சை, என்ன பொண்ணுடி நீயெல்லாம்?! உனக்கு நிஜமாவே அசிங்கமா இல்ல?”
“எதுக்கு அசிங்கபடனும்?”
“உன் ஃபிரண்ட் காதலிச்சவனை கல்யாணம் பண்ணிக்க உனக்கு உடம்பு கூசலை..”
“ஏன் நீங்களும் தான் காதலிச்ச பெண்ணோட ஃப்ரெண்டான என்னை கல்யாணம் பண்ணிக்க போறீங்க, உங்களுக்கு கூசலை” என்றதும் தான் தாமதம், அவள் கழுத்தில் அழுத்தம் கூட்ட திணறலோடு அவனை பார்த்தாள்.
“ஏய், அன்னைக்கு உன்னை பெண் பார்க்க வந்த போதே இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதம் இல்லன்னு நான் சொல்ல சொன்னேன் ஆனால் என் வார்த்தையை கேட்காமல் மண்டபம் வரைக்கும் கொண்டு வந்துட்ட இல்ல. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கனும்டி உனக்கு?”
“இதோ பாருங்க சஞ்சு எங்க இருக்கான்னு நிஜமாவே எனக்கும் தெரியாது.. அவ உங்க வாழ்க்கையில இல்லைன்னு நல்லா தெரிஞ்ச பிறகு தான் நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்...”
“என்னை பேசறீங்களே எங்கே உங்களால முடிஞ்சா சஞ்சுவை கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணுங்க பார்க்கலாம், நான் ஒன்னும் வேண்டாம்னு சொல்லலையே” என்று அழுத்தமாக அவனை பார்த்தாள்
அதேநேரம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த இளங்கொடியை அழைத்த முரளிதரன், “ஏன்டி உன் பொண்ணுக்கு இருக்கிற நகையை எல்லாம் போட்டு அலங்காரம் பண்ண சொன்னா ஏன்டி இப்படி கவுனை மாட்டி கூட்டிட்டு வந்திருக்க” என்றார்.
“ரிசெப்ஷனுக்கு இப்போ இந்த மாதிரி ஃப்ராக் தான்ங்க ட்ரென்ட். சௌந்தர்யா ரொம்ப அழகா இருக்கா இல்லைங்க” என்று எதார்த்தமாக அவர் சொல்ல மனைவியின் தலையிலேயே நங்கென்று கொட்டியவர்,
“உங்க ட்ரென்ட்ல தீயை வைக்க, ஏன்டி எங்க மாமா சொத்தை மொத்தமா வளைச்சு போடலாம்னு பார்த்தா வினோதன் தான் கையை விரிச்சுட்டான்..”
“சரி அபய்யை சௌந்தரியாக்கு கட்டி வைக்க நான் திட்டம் போட்டா அதுலயும் மண்ணள்ளி போட்டுட்டு புதுசா ஒருத்தியை கூட்டிட்டு வந்திருக்கார்..”
“எப்படிடா இவளை எங்கக்காக்கு மருமகளாக்குறதுன்னு நான் தலையை பிச்சுகிட்டு இருந்தா, அந்த கவலையே இல்லாம அம்மாவும் மகளும் ட்ரெண்டை கட்டிக்கிட்டு அழறீங்க. எங்கிருந்துடி எனக்குன்னு வந்து சேர்ந்தீங்க” என்ற முரளிதரன் நிர்மலாவின் சகோதரன்.
தன் இரு மகள்களையும் அக்காவின் குடும்பத்திற்கு மருமகள்களாக்கி விடவேண்டும் என்றவரின் எண்ணம் ஏற்கனவே பொய்த்து போக மனமே இல்லாமல் பெரிய மகளை கட்டி கொடுத்தவர் சின்ன மகளை வைத்து காய் நகர்த்த தொடங்கி இருந்தார் ஆனால் அது எதுவும் அபய்யிடம் செல்லுபடி ஆகாமல் போனது.
ஆனால் சஞ்சனா வேறு ஜாதி என்று தெரிய வரவும் சக்கரவர்த்தி தன் மகளை பெண் கேட்டு வருவார் என்று நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் அது பொய்த்து போக இப்போது எப்படியாவது திருமணத்தை நிறுத்தி தன் மகளை கட்டி வைக்கும் எண்ணத்தில் இருந்தவருக்கு மகள் மற்றும் மனைவியின் போக்கு அத்தனை ஆத்திரம் கொடுத்தது.
“எருமை போய் உன் மகளுக்கு நல்ல புடவை இல்ல லெஹங்கா போட்டு ரெடி பண்ணி வை. அபய் ஏற்கனவே அந்த பொண்ணு மேல கொலை வெறியில இருக்கான் யாருக்கு தெரியும் அவன் கொடுக்கிற டார்ச்சர்ல அந்த பொண்ணு கல்யாணம் வேண்டாம்னு ஓடி போனாலும் போக வாய்ப்பு இருக்கு..”
“என்னங்க சொல்றீங்க அப்படி கூட நடக்குமா?”
“ஏன்டி சந்தேகத்துக்கு பொறந்தவளே! எதுல தான் உனக்கு சந்தேகம் வரணும்ன்னு இல்லையா? போ போய் நான் சொன்னதை மட்டும் செய் என்று சொல்ல” அங்கே வந்த முரளியின் அத்தை அபய் நயனியோடு தனியாக பேச வேண்டும் என்று சொல்லி கதவடைத்து கொண்டதை சொல்ல அவர் முகத்தில் புன்னகை படர்ந்தது.
உடனே சென்று சக்கரவர்த்தியிடமும் நிர்மலாவிடமும் விஷயத்தை சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு மணமகள் அறை நோக்கி சென்றார்.
நயனியின் பேச்சில் கொதித்து போன அபய், “ஏய் என்னடி திமிரா?” என்றான் உரத்த குரலில்.
“நான் சாதாரணமா தான் சொல்றேன் ஆனா அது உங்களுக்கு திமிரா தெரிஞ்சா நான் ஒன்னும் செய்ய முடியாது...” என்றாள் விட்டேர்த்தியாக.
“வேண்டாம் நயனி என் கோபத்தை கிளறாத. என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்காக அவளை நீதான் என்னமோ செஞ்சிருக்க ப்ளீஸ் சஞ்சு எங்க இருக்கான்னு சொல்லு” என்று அவன் கேட்க கதவு தட்டப்பட்டது.
அதை காதிலேயே வாங்காமல் ஸ்ரீவத்சன் மேலும் பேசிக்கொண்டு செல்ல கதவு தட்டும் சத்தம் பலமாக ஒலித்தது.
“ஸ்ரீ நகருங்க கதவு தட்டுறாங்க” என்று அவனிடமிருந்து விலகப் பார்த்தாள்.
ஆனால் அவள் மணிக்கட்டை அழுத்திப்பிடித்தவன், “ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ இந்த கல்யாணம் பண்றதுக்காக நீ காலம் முழுக்க வேதனைப்படுவ.. வாழும்போதே நரகம் என்றால் என்ன என்று பார்க்க தான்டி போற”
“சந்தோஷம்! நீங்க சொல்ல வேண்டியது சொல்லி முடிச்சாச்சா?” என்று அவள் அனாயசமாக பார்க்க மூர்க்கமாகி போனான் அபய்.
“என்ன திமிருடி உனக்கு?!” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைய முற்பட அவன் கரத்தை தடுத்து பிடித்தவள்,
“உங்களுக்கு என்ன எனக்கு நரகத்தை காமிக்கணும் அவ்வளவுதானே?! அதுக்கு தான் காலம் முழுக்க இருக்கே இப்பவே என் அவசரப்படுறீங்க?”
“நான் சும்மா சொல்லலை நயனி. ஐ மீன் இட்!!” என்றவன் முகத்தில் அவளை கூறு கூறாக்கி விடுமளவு ரௌத்திரம்.
“நான் தான் சொல்லிட்டேனே ஐ’ம் ரெடி டு ஃபேஸ் எவ்ரிதிங்!! பட் இப்போ நேரமாச்சு முதல்ல நிச்சயத்தை முடிச்சுட்டு நாளைக்கு கல்யாணத்தையும் முடிச்சுட்டு அதுக்கு அப்புறமா உங்க வேலையை ஆரம்பிங்க” என்றாள் அலட்சியமாக.
“நயனி..” என்று அபய் பல்லை கடிக்க நயனிகாவோ அவனை தாண்டி சென்று கதவை திறக்க அங்கே அவள் பெற்றோரும் சக்கரவர்த்தியும் நின்று இருந்தனர்.
“நயனி உனக்கு ஒன்னும் இல்லையே?! ஆர் யூ ஓகே” என்று சக்கரவர்த்தி உள்ளே நுழைந்து மருமகளை கேட்க,
“ஒன்னும் இல்ல மாமா, சும்மா பேசிட்டு இருந்தோம்”
“நிஜமாவா?”
“ஆமாம் மாமா..” என்று அவள் சொன்ன போதும் அதை நம்பாமல் மகனைப் பார்த்தார் சக்கரவர்த்தி.
Last edited: