• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 32

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 32

தன் உடைப்பெட்டியுடன் தயாராக நின்றாள் நித்திலா, அவள் மனதை துண்டாக்கிவிட்டு வெளியே சென்றிருந்த ஆரவ்வும் சரியாக அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தவன், கையில் பேக்கோடு நின்றவளை, விழிகள் சுருங்க பார்க்க, அவளோ,.. "நான் வீட்டை விட்டு போறேன் சார்" என்றாள், அவன் விழிகளிலோ அதிர்ச்சி, அந்த அதிர்ச்சியோடு சோபாவில் அமர்ந்திருந்த தாயை பார்க்க, அவரோ கண்டும் காணாததும் போல அமர்ந்திருந்தார்,...

மீண்டும் நித்திலாவை பார்த்தவன்,... முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் "குட் டிஸிசன்" என்று சொல்ல, அவன் வார்த்தை உள்ளே வலித்தாலும், வெளியே இதழ் பிரித்து புன்னகைத்து,.. எதுவும் பேசத் தோன்றாது வாசலை நோக்கி நடக்க, அவனுக்கோ ஒருமாதிரி மனம் என்னவோ செய்யவும்,.. "அம்மாகிட்ட சொல்லலையா?" என்றான் போய்க் கொண்டிருந்தவளிடம்,..

திரும்பி அவன் முகம் பார்த்தவள்,.."சொல்லிட்டேன், அம்மா பர்மிஷனோட தான் போறேன், கவலைப்படாதீங்க அவங்க என்னை தேடி வந்து அழைச்சிட்டு வர மாட்டாங்க" என்றவள் விறுவிறுவென்ற நடையுடன் வெளியேறி விட்டாள்,...

அவள் சென்ற வழியையே சில கணம் பாரத்துக் கொண்டிருந்தவன், அவள் கண்களை விட்டு மறைந்த பின்னரும் அவள் போன பாதையை தான் கண்களை விலக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்,... 'இது நீ விரும்பியது தான்' என்று மனம் சொன்னாலும், அந்த நிமிடத்தில் அவள் போன வெறுமையை மனம் ஏற்கவும் மறுத்தது...

தாயிடம் எதுவும் பேசத் தோன்றாது, அறைக்குள் வந்தவன் படுக்கையில் சாய்ந்தான், படுக்கையின் ஓரத்தில் அவள் அமர்ந்திருப்பது போலவே ஒரு பிரம்மை, அவளின் மென்மையான வாசம் கூட இன்னும் அந்த அறையில் தங்கியிருப்பது போல் உணர்ந்தவனுக்கு, அவள் இல்லாத அமைதி அவனை குத்தியது....

உள்ளம் முழுக்க என்னவோ செய்தது, அவளது மென்மையான கைகள் அவன் மார்பில் படரும் காட்சி, அவள் அசைவுகள், அவள் சிரிப்பு,
அவள் நாணம் ஒவ்வொன்றும் நினைவில் வந்து மனதை நொறுக்கியது....

'நான் தான் அவளை போக சொன்னேன், அவ போவதை தான் விரும்பினேன், ஆனாலும் ஏன் என் மனசு இப்படி துடிக்குது' தன்னோடு வெகுநேரம் புலம்பிக் கொண்டிருந்தான்,.. அந்த இரவு தூக்கம் கூட கண்களை எட்டாமல் போனது, இருள் சூழ்ந்த அறை, அவளது ஸ்பரிசம் இல்லா அமைதி எல்லாம் அவனை மூச்சுத்திணறச் செய்தது, அவள் அருகில் இல்லாததால், அவன் பக்கம் திரும்பிய கையை வெறுமையாகத் தொட்டுக் கொண்டே தவித்தான்..

அடுத்த நாள் அலுவலகத்தில் கூட அவன் இயல்பாக இல்லை, மேசையில் வேலைக் கோப்புகள் குவிந்திருந்தாலும், அவன் மனம் அனைத்தையும் விட்டுவிட்டு அவளை மட்டும் நினைத்து அலைந்தது, கண்களில் ஒரு கவலையும், முகத்தில் ஒரு சோர்வும், யாரோ அவன் உயிரையே பறித்து விட்டார்களோ என்ற நிலையிலும் இருந்தான், சக ஊழியர்கள் கூட அவனின் மாற்றத்தை எளிதில் கவனித்தார்கள்...

ஒரு வாரம் கடந்தும் அவள் பிரிவு அவனை வாட்டிக் கொண்டே இருந்தது, ஒவ்வொரு இரவும் அவள் இல்லா வெறுமை அவனை தவிக்க வைத்தது, அவள் இல்லா அந்த இடம் ஒரு சிறை போல தோன்றியது....

நாட்கள் கடந்து செல்லச் செல்ல, அவன் மனம் ஓர் உண்மையைத் தெளிவாக உணர்ந்தது அவள் இல்லாமல் தான் வாழ முடியாது என்று,..

அந்த உணர்வு அவனை மொத்தமாக வதைத்தெடுக்க அதற்கு மேலும் முடியாது என்ற நிலையில் தாயின் முன்பு வந்து நின்றான், குழி விழுந்த கண்களுடன், இதயத்தில் நெருப்பு போலக் காய்ந்த குற்ற உணர்வுகளுடன்.. "நித்திலா எங்க இருக்காம்மா? அவளை நான் பார்க்கணும்…" என்றான்,..

சித்ரா முகத்தில் சற்று கடினம் தெரிய,... "எனக்கு தெரியாது," என்றார் சுருக்கமாக...

"அம்மா, ப்ளீஸ்… என் தவறை நான் உணர்ந்துட்டேன், இப்போ எனக்கு புரியுது, அவ இல்லாம என்னால இருக்க முடியாது, சொல்லுங்க… அவ எங்க இருக்கா.." அவன் குரல் பிளந்து வர, சித்ரா பார்வையை விலக்கிக்கொண்டே "எனக்கே தெரியாது," என்ற வார்த்தையை தான் மீண்டும் சொன்னார்....

"ஏன்மா இவ்வளவு கல்மனசா இருக்கீங்க, அதான் இவ்வளவு கெஞ்சி கேட்கிறேன்ல, சொல்லுங்களேன்" என்றான் சற்று கோபமாக,...

"அவ கிட்ட சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன் சொல்ல மாட்டேன்னு, முடிஞ்சா நீயே கண்டுபிடிச்சிக்கோ ஆரவ், இந்த விஷயத்துல என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது, ஐ ஆம் ஸாரி" என்பதோடு தன் பேச்சு முடிந்ததென உள்ளே சென்று விட,
அவன் அங்கேயே மடிந்து அமர்ந்தான் மனம் முழுதும் சிதறிப்போய்...

அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நகரம் பெருங்கடலைப் போன்றது
ஆயிரக்கணக்கான முகங்களுக்குள், அவள் முகத்தை தேடுவது எளிதல்ல என்பது அவனுக்கு நன்கு புரிந்தது,
எங்கிருந்து ஆரம்பிப்பது? யாரிடம் கேட்பது? எந்தத் தெருவில் நிற்பது? எந்த நிலையத்தில் தேடுவது? என்பது
எதுவும் தெரியாமல் திக்குமுக்காடிப் போனான்,..

நாட்கள் வாரங்களாக உருண்டன,
ஒவ்வொரு நாட்களும் அலுவலகத்தில் அவன் உடலை மட்டுமே காண முடிந்தது, அவன் மனதோ அவளைத் தேடி ஓடிக் கொண்டிருந்தது, 'இவ்வளவு பெரிய ஊர்ல அவளை நான் எப்படி கண்டுபிடிப்பேன் ஒரு முகவரி கூட இல்லாம… அவளை என்னால இனி பார்க்க முடியாமலேயே போய்விடுமோ' என்ற அச்சம் அவனை ஒவ்வொரு நாளும் வாட்டியது....

அவனுக்கு தெரிந்த சீக்ரட் ஏஜென்ட்டிடமும் சொல்லி வைத்திருந்தான், ஆனால் அவருக்கும் நித்திலாவை பற்றிய தகவல் கிடைக்காமல் போகவும், மிகவும் நொந்து போய்விட்டான்,..
மாதங்கள் கடந்தும் அவளின் நினைவு அவனை விட்டுப் போகவில்லை, அவளது நாணம், அவளது குரல், அவளது வாசம் இவை அனைத்தும் தான் அவனை உயிரோடு வைத்திருந்தது, எப்படியும் அவள் கிடைப்பால் என்ற நம்பிக்கை அவனை வாழவைத்தது...

தான் ஒரு பெண்ணுக்காக அதுவும் தான் வெறுத்த ஒருத்திக்காக இப்படியெல்லாம் ஏங்கி தவிப்போம் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை, அவளுக்கு, தான் கொடுத்த துன்பங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தவன் இது தனக்கு தேவை தான் என்று மனதை தேற்றிக் கொண்டாலும், அவள் இல்லாத ஒவ்வொரு நொடிகளும் வலிக்க வலிக்க கொன்று கொண்டிருந்தது,...
அவளது அருகாமை தான் தன் உயிரின் மூச்சு என்று இப்போது தான் அவனுக்குப் புரிந்தது....

மாதங்கள் கடந்தும் நித்திலாவின் முகம் அவன் நினைவில் பசுமையாய் பதிந்திருந்தது, தன்னால் முடிந்த அளவிற்கு தேடினான், கிடைக்கவில்லை, மனம் வெறுத்து போனாலும், ஒரு நாள் நிச்சயம் கிடைப்பாள் என்ற நம்பிக்கையோடு நாட்களை கடத்திக் கொண்டிருந்தான்,..

இப்படி போய்க்கொண்டிருந்த சமயத்தில் தான் அவனது நண்பன் தீபன் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் விஷயம் தெரிய வந்தது, பெரிதாக பிரட்சனை இல்லை காலில் ஃபிராக்சர் ஆகியிருந்தது, மனதில் எவ்வித ஆர்வமும் கடமை உணர்வும் இல்லாமல் இருந்தவனுக்கு, நண்பனை பார்க்காமல் இருக்க முடியவில்லை,...

போய் பார்த்தான், நலம் விசாரித்தான், தீபன் மற்றும் தனிஷாவின் பெற்றோர்களும் அங்கு தான் இருந்தனர், அவர்களுடனும் கொஞ்ச நேரம் பேசி விட்டு கிளம்புவதாக கூறி விடைபெற்று, வார்டின் வெளியே வந்துக் கொண்டிருந்தவனின் கண்கள் திடீரென உறைந்தன, ஒரு நொடி அவன் மூச்சே நிற்க, இதயத்துடிப்பு எல்லையை மீறி ஓடிட, அந்த கூட்டத்தில் இருந்த அந்த உருவம் மட்டும் அவனது பார்வையைப் பிணைத்துக் கொண்டது...

'இவள் அவள் தானா?' நம்ப முடியாமல் சில நொடிகள் அதே இடத்திலேயே நிலைத்து நின்று விட்டவனுக்கு, கண்ணுக்கு தெரிந்த காட்சி உண்மையா? அல்லது தன் ஏக்கத்தில் உருவான மாயையா? என்று பிரித்தறிய முடியவில்லை,
ஆனால் அந்த முகம் அவளது கண்கள், நடையின் மென்மை, அனைத்தும் அவனுக்குப் பரிச்சயமானதே...

காலம் நிற்பதுபோல் தோன்றியது,
எத்தனை மாதங்கள் அவளை தேடித் தேடி தடுமாறியவனின் கண்முன்னே,
அவள் இப்போது சில அடி தூரத்தில் தான் நின்றிருந்தாள்...

அவன் விழிகள் சுருங்கின,
மனதுக்குள் எரிந்த கோபமும், அவளை மீண்டும் கண்ட சந்தோஷமும், சேர்ந்து ஒரு கலக்கத்தை உருவாக்க, அந்த கலக்கமே அவன் நடையை வேகப்படுத்த, வேக வேகமாக அவளை நோக்கி சென்றவன்,.. "எங்கேடி போய் தொலைஞ்ச" என்று கேட்டு இடம் பொருள் சூழலை மறந்து சப்தமிட்டிருந்தான், தன் ஏக்கம், வலி, துக்கம் எல்லாம் அவளை பார்த்த கணத்தில் கோபமாய் மாறி இருந்தது,..

அவளுக்கோ அந்தக் கணம் மூச்சே நின்ற உணர்வு, ஒரு பக்கம் அவனை கண்ட அதிர்ச்சி, மற்றொரு பக்கம் அவனது கோபம் இரண்டுமே சேர்ந்து அவள் விழிகளில் மிரளும் அச்சத்தை கொண்டு வந்தது, ஆனால் எல்லாம் அந்த சில கணம் மட்டும் தான்,...

"உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும், என்னை விட்டு போக!"
அர்த்தமில்லாமல் பாய்ந்த அவன் வார்த்தைகள், அவளைக் கோபப்படுத்தியது, இருப்பினும் வெறித்த பார்வையுடன் அமைதியாக அவள் நிற்க, அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவளை இன்னும் இன்னும் நெருங்கிக் கொண்டே வந்தன....

ஒரு கட்டத்தில் அவளை நெருங்கி வந்திருந்தவனுக்கு ஏதோ ஒன்று அவனை முன்னே செல்ல விடாமல் தடுக்கவும், மெல்ல கீழே குனிந்தவனின் கண்கள் அவளது மேடிட்ட வயிற்றை கண்டு உறைந்து போயின,..

அவன் விழிகளில் அதிர்ச்சி பிரதிபலிக்க, மூச்சு ஒரு மாதிரி அடைக்க, இதயம் சிதற, அவனது அடிகள் அந்த இடத்திலேயே நின்றுபோனது....

'அவள் கர்ப்பமாக இருக்கிறாள், தன் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள், அவனுக்கென்று ஒரு குழந்தை, அவனை அப்பா என்று அழைக்க ஒரு குழந்தை வர போகிறது, இந்த உண்மையை கூட எனக்கு சொல்லாமல் மறைத்து விட்டார்களே' கோபம், வலி, சந்தோஷம், துக்கம் அனைத்தும் சேர்ந்த உணர்வுகளோடு அவன் கால்கள் அசையாமல் நின்றுபோயின,..

அந்த ஒரு கணம் அவன் முழுமையாக மௌனமானான், அதிர்ச்சியில் அவனது மனம் பலதை பற்றி சிந்திக்க தொடங்கி இருக்க,
அந்த நொடியை அவள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எண்ணி, அவனது கவனம் தன் மீது இல்லை என்பதனை உணர்ந்து
கூட்டத்திற்க்குள் கலந்துவிட்டாள்...

அவன் இன்னும் அதே இடத்தில் தான் நின்றுகொண்டிருந்தான், விழிகளில் அதிர்ச்சி, இதயத்தில் ஓர் புயலே வீசிக் கொண்டிருக்க, ஏதோ அவளிடம் கேட்க வந்தவன், அவளை காணாததை கண்டு அவன் முகத்தில் அதிகளவு ஏமாற்றம், அக்கணம் தான் அவள் போய்விட்டதை உணர்ந்தான், அவனையும் மீறி கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது,...
 
  • Love
Reactions: shasri