• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்தமழை - 23

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,391
443
113
Tirupur
முத்தமழை - 23

அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் தேவர்களின் வாழ்த்து மழையிலும், உற்றோரின் அன்பு மழையிலும் நனைந்தபடியே, கெட்டி மேளம் முழங்க, தங்க விக்ரகமாய் தன்னருகில் அமர்ந்திருந்தவளை ஐயர் கொடுத்த, திருமாங்கல்யத்தை அணிவித்து வல்லபியை தன்னில் சரி பாதியாய் ஆக்கிக் கொண்டான் கர்ணன்.

தலை குனிந்து, கைகள் கூப்பி தன்னவனின் கையால் மாங்கல்யத்தை வாங்கிக் கொண்டவளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்பியது.

“ம்ம் ஹ்ம்ம்ம்” என மனைவியானவளின் கண்ணீர் துடைத்து, கன்னத்தை வருடி, நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான் கர்ணன்.

மெட்டி அணிவித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து பெரியவர்களிடம் ஆசி வாங்கி அவர்கள் ஓய்ந்து அமரவே நேரம் எடுத்தது.

வந்தவரகளில் பலர் வரலட்சுமியின் சொந்தமாக இருக்க, பல வருடங்கள் கழித்து பார்ப்பதால் கர்ணனிடம் பேசிக் கொண்டே இருந்தனர்.

அதில் ஒரு பாட்டி “ஒரு வழியா உன் சித்திக்காரிக்கு மனசு வந்து உனக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட்டாளா?” என்றார்.

அந்த குரலில் என்ன இருந்தது என கர்ணனால் உணர முடியவில்லை. ஆனால் வல்லபியால் உணர முடிந்தது.

அவரைப் பார்த்து மென்மையாக புன்னகைக்க, “சரி விடு ராசா.. இப்படியொரு ராஜாத்தி உனக்கு பொண்டாட்டியா அமையனும்னு தான் இவ்ளோ நாள் தள்ளிப் போயிருக்கு போல.. போனது போகட்டும்.. இனியெல்லாம் வெளிநாடு போறேன்னு கிளம்பிடாத. உன் அப்பாவை நினைச்சு இங்கேயே இரு.. இனியாவது உன் சித்திக்காரி கொட்டம் அடங்குதான்னு பார்ப்போம்..” என்றவரின் ஆதங்கம் இப்போது இருவருக்குமே புரிந்தது.

“இனி இங்கதான் அம்மாச்சி..” என கர்ணன் சிரித்துக்கொண்டே கூற,

“அப்போ சரி.. அப்படின்னா நம்ம வீட்டுக்கு ரெண்டு பேரும் விருந்துக்கு வந்துடுங்க.. முடிஞ்சா உன் அப்பாவையும் கூப்பிட்டு வா..” என்றார் மகிழ்வாக.

“இப்போ அப்பாவை அழைச்சிட்டு வர முடியாது பாட்டி. நாங்க மட்டும் வரோம். அப்பாவுக்கு சரியானதும் அழைச்சிட்டு வரேன்..” என நல்ல முறையிலேயே பேசி அனுப்பியவன், தன் நண்பர்களைத் தேடினான்.

“உட்காரலாம் பாவா.. எனக்கு முடியல..” என வல்லி முணுமுணுக்க..

“ஹேய் என்னடி நீ? இப்பவே முடியலன்னு சொல்ற?” என அரண்டு போய் பார்க்க,

“ம்ச் பாவா உங்களோட.. கால் வலிக்குது.. அதை சொன்னேன்..” என முறைக்க,

“அப்படி தெளிவா சொல்லுடி..” என்றவன், தங்கள் இருவரையும் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆளிசைக் கண்டு ‘வா’ என கையசைத்தான்.

அங்கு வந்தவளிடம் “ஆளிஸ்..” என கர்ணன் மனைவிக்கு கூற, வல்லபியின் உள்ளம் திக்கென்று அதிர்ந்தாலும், அதை வெளிக்காட்டாமல் “ஹாய்..” என புன்னகைத்தாள்.

“ஹலோ..” என வல்லபியை அனைத்துக் கொண்டாள் ஆளிஸ்.

“ஆர் யூ ஹேப்பி..” என ஆளிசை அனைத்துக் கொண்டு கர்ணன் கேட்க, ஆளிசும் கண்கள் கசிய “எஸ் ஐம் சோ ஹேப்பி..” என புன்னைகைத்தாள்.

‘என்ன நடக்குது?’ என்பது போல் வல்லபி பார்க்க,

“நீயோ.. இங்க இருக்குற மத்தவங்களோ நினைக்கிற மாதிரி அவ என்னோட கேர்ள் ஃப்ரன்ட் இல்ல. என்னோட ஃப்ரன்ட் மட்டும் தான்.. என்னை இங்க வர வச்சது, நீ தான் என்னோட பார்ட்னர்ன்னு எனக்கு புரிய வச்சது எல்லாம் இவ தான்..” என புன்னகைக்க, வல்லபியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்து கொண்டே போனது.

“நிஜமாவா?” என மீண்டும் கேட்க,

“ஹேய்..” என அவன் அதட்ட,

“இல்ல நான் கேள்விப்பட்டதெல்லாம் வேறையா? அதான் இப்போ நம்ப முடியல..” என சிரித்துக் கொண்டே கூறியவள், “தேங்க்ஸ்..” என ஆளிசை கட்டிக் கொண்டாள்.

இவர்கள் மூவரையும் பார்த்தபடி அங்கு வேகமாக வந்தார்கள் வந்தனாவும், வெற்றியும்.

இருவரின் முகமும் பதட்டமாக இருந்தது. அது எதனால் என புரிந்து பல்லைக் கடித்த கர்ணன் “என்ன டா?” என வெற்றியை அதட்ட,

“அது அது மாமா..” என திணறியவன், சட்டென “இவ தான் மாமா.. உங்க எக்ஸ் வந்து பிரச்சினை பண்ணிட்டுருக்காங்கன்னு சொல்லி என்னை இழுத்துட்டு வந்தா.” என வந்தனாவை மாட்டிவிட,

“அவ்வா அவ்வா.. ச்சீ இதெல்லாம் ஒரு குடும்பமா? கொஞ்சம் கூட யாருக்கும் உண்மையே பேசத் தெரியாதா? நான் என்னடா சொன்னேன்.. அது யாரு வெளிநாட்டுக்காரின்னு தான கேட்டேன். நீ தான இது மாமாவோட எக்ஸ்னு என்னை இழுத்துட்டு வந்த..” என வந்தனாவும் வெற்றியைப் போட்டுக் கொடுக்க, மற்ற மூவரும் இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

“கரனுக்கு இன்னொரு முகம் இருக்கு. அது எனக்கு மட்டும் தான் தெரியும். சீக்கிரம் நீயும் தெரிஞ்சிக்கோ.. அவனுக்காக எப்பவும் நீ இருக்கனும். இத்தனை வருசம் தனியாவே இருந்துட்டான். தனிமை ஒரு வரம் என்னை மாதிரி ஆளுங்களுக்கு. ஆனா அது இவனுக்கு கொடுமை. அந்த கொடுமை இனி கரனுக்கு வேண்டாம். இனிமேலாவது இந்த குடும்பத்தோட, உன்னோட கரண் சந்தோசமா இருக்கனும். எனக்கும் அதுதான் வேணும்..” என்றாள் ஆளிஸ் மனம் நிறைந்த புன்னகையுடன்.

“ம்ம்..” என்றவள் கணவனை அன்னாந்து பார்க்க, அவனோ ஆளிசைத் தான் கனிவாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த பார்வையில் துளியும் தவறைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு அப்பாவின் கனிவான பார்வை. ஒரு அண்ணனின் அன்பான பார்வை. அதை அங்கிருந்த யாராலும் உணர முடியும்.

“அண்ணா.. கோவிலுக்கு போகனும்னு அம்மா சொன்னாங்க. அப்படியே வீட்டுக்குத்தான் போகனும். கிளம்பலாமா? இல்ல கொஞ்ச நேரம் போகட்டுமா?” என கேட்டுக்கொண்டே யாழினி வந்து நிற்க

“யாழி இவன் உனக்கு வேணாம். வாயைத் திறந்தாலே பொய் சொல்றான். உன்கிட்டயும் பொய்யாத்தான் சொல்வான். யோசிச்சிக்கோ…” என வந்தனா யாழினியிடம் ஆரம்பிக்க,

“வந்தனா..” என மூவரிடமிருந்தும் கோரசாக அதட்டல் வந்து விழ,

“ம்ச் போங்கடா..” என அங்கிருந்து ஓடிவிட்டாள் பெண்.

“நிஜமாவே இவ உங்க வீட்டுப் பொண்ணுதானா? இல்ல பிறந்த நேரம் ஹாஸ்பிடல்ல மாத்தி தூக்கிட்டு வந்துட்டீங்களா?” என ஆயாசமாய் கேட்டான் கர்ணன்.

“எங்களுக்கே அந்த டவுட் இருக்கு..” என்றான் வெற்றியும் சிரித்தபடியே..

அதற்குள் வனிதா “ஏய் உன்கிட்ட என்னடி சொல்லி விட்டாங்க. இங்க வந்து ஈன்னு இழிச்சிட்டு நிக்கிற..” என மற்றவர்கள் மேல் இருந்த கடுப்பை யாழினியிடம் காட்டிணாள்.

“ம்ம் போலாம் வனி.. அப்பா எங்க?” என தங்கைக்கு பதில் கொடுத்தான் கர்ணன்.

“அந்த பாண்டியன் அப்பாவை அழைச்சிட்டு போயிட்டான்.” என்றாள் வெடுக்கென,

“ஹ்ம்ம் சரி நாமளும் கிளம்பலாம்..” என்றவன் வெற்றியிடம் திரும்பி “மாமாவையும் அத்தையையும் வர சொல்லு டா.” என்றான்.

“அவங்க எதுக்கு? நாம மட்டும் தான் போகனும். அவங்க வீட்டுல போய் இருக்கட்டும்..” என்றாள் அதே வெடுக்கென குரலில்.

“ம்ச் வனி.. எல்லாரும் தான் போறோம்.. போ.. போய் அம்மாக்கிட்ட சொல்லு,,” என அதட்ட, உம்மென்ற முகத்துடன் சென்றுவிட்டாள் வனிதா.

வனிதாவின் பேச்சில் வெற்றியின் முகம் சுருங்கிவிட, அதைப் பார்த்து யாழினிக்கு வருத்தமாக இருந்தது.

“வெற்றி” என்ற கர்ணன் “அவளைப் பத்தி தான் உனக்கு தெரியுமே.. விடு பார்த்துக்கலாம். நீ போய் அவங்க ரெடியான்னு பாரு..” என சமாதானம் செய்து அனுப்பிவிட்டான்.

“போலாம் யாழி..” என்று தங்கையையும் அழைத்துக் கொண்டு மனைவியோடு முன்னே நடந்தான் கர்ணன்.

ஒருவழியாக அனைவரும் குல தெய்வ கோவில் சென்று, வணங்கி வீடு வரவே மதியத்திற்கு மேல் ஆனது.

வீட்டில் தான் அனைவருக்கும் மதிய உணவு என்றிருக்க, ஊர்க்காரர்களுக்கு காலையில் இருந்தே பந்தி நடந்து கொண்டிருந்தது.

வனிதா ஆரத்தி எடுக்க, தன் வலது காலை எடுத்து வைத்து கணவனுடன் அந்த வீட்டில் முறையாக உள்ளே நுழைந்தாள் வல்லபி.

பூஜையறையில் விளக்கேற்றி வணங்கி பின், வரலட்சுமியின் படத்திற்கும் விளக்கேற்றி வணங்கிவிட்டு சொக்கலிங்கத்தின் அறைக்குச் சென்றார்கள் இருவரும்.

தன் மகன் விரும்பிய வாழ்க்கை. அவன் விரும்பிய பெண்ணுடன் மகனை மணக் கோலத்தில் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அந்த மனிதருக்கு.

கண்ணில் நீர் வழிய மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டு “நீ தான் அவனை பார்த்துக்கனும்..” என்றர் குளறலாக.

“மாமா.. நீங்க அதெல்லாம் யோசிக்கவே யோசிக்காதீங்க. நீங்க சீக்கிரம் சரியாகிடுவீங்க.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு, மனசை போட்டு குழப்பாதீங்க..” என அவருக்கு ஆருடம் சொல்லி வெளியே வர, வல்லபியின் வீட்டாட்கள் கிளம்ப ரெடியாகி இருந்தனர்.

அதைப் பார்த்ததும் வல்லபியின் முகம் கசங்க, வேகமாக சென்று சீதாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“வல்லி.. இப்படி வந்து தம்பி கூட உட்கார். இன்னும் பாழும் பழமும் கொடுக்கல..” என சீதா கூற,

அப்போது தான் சுமித்ராவும் எடுத்துக் கொண்டு வந்தாள். அவளை ஒரு பார்வை பார்த்தவர் அதை வாங்கி கர்ணனுக்கு கொடுத்து வல்லிக்கு கொடுக்க,

“இது என்ன எல்லாம் புதுசு புதுசா இருக்கு.. மாப்பிள்ளையோட தங்கச்சிங்க தான் கொடுக்கனும்னு தெரியாதா? இங்க நாங்க ரெண்டு பேரு குத்துக்கல்லாட்டம் இருக்கோம், எங்ககிட்ட சொல்ல வேண்டியதுதான..” என வனிதா ஆரம்பிக்க,

“ஏண்டிம்மா.. இவ்ளோ பேசுறவ.. இதை முன்னாடியே கொண்டு வந்து கொடுக்க வேண்டியது தான. எதுக்கு அவங்க கேட்குற வரை பார்த்துட்டு இருந்த..” என அந்த பாட்டி கேட்க,

“அம்மாச்சி.. நீங்க ஏன் இதெல்லாம் சொல்றீங்க..?” என வனிதா அவரிடமும் வெடுக்கென பேச,

“இங்க பார்… எங்கிட்ட எகத்தாளம் பேசனும்னு நினைச்ச, இருக்குற நாலு முடியையும் ஆஞ்சுப் புடுவே ஆஞ்சு. என்னைப் பத்தி உன் அம்மாக்கிட்ட கேட்டு பார்த்துட்டு பேசு.. சும்மா வெடுக்கு வெடுக்குனு ஆட்டிக்கிட்டு வந்துடுற..” என பாட்டி பேசும் போதே

“சின்னம்மா விடுங்க. அவ தான் சின்ன பொண்ணு.. அவளுக்கு சமமா நீங்க பேசனுமா?” என அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜலட்சுமி பேச,

“நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கோ ராஜி.. அடுத்த வீட்டுக்கு போன புள்ளைங்க நம்ம வீட்டுல நாட்டாமை பண்றது சரியில்ல. அப்போ நம்ம வீட்டுக்கு வந்த மருமகளுங்களுக்கு என்ன மரியாதை. உன் சின்ன மருமக இவ கூட ஒத்துப் போவா.. அவளுக்கு வேற வழியில்ல. ஆனா கர்ணன் பொண்டாட்டியை அப்படி நினைச்சிடாத. அவளுக்கு சரியான மரியாதை கொடுத்து பழகச் சொல்லு.. இல்ல நீ பழக்கி விடு.. அப்புறம் போன வீட்டுலயும் அசிங்கப்பட வேண்டியிருக்கும்..” என நறுக்கு தெரித்தார் போல பேசிய பாட்டி, சீதாவிடம் “நீங்க கிளம்புங்க ம்மா… நான் பத்து நாள் இங்க இருந்து தான் போவேன்.” என சொல்ல, வனிதாவிற்கும் ராஜலட்சுமிக்கும் ‘அய்யோ’ என்றாகிவிட்டது.

நடந்த அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் கர்ணன். அவனுக்கு இந்த குடும்ப அரசியல் புரியவில்லை.

ஆனால் வனிதாவிடம் ஏதோ தப்பிருக்கிறது என்று மட்டும் உணர்ந்து கொண்டான்.

தன் வீட்டாட்கள் கிளம்புகிறார்கள் என்றதுமே வல்லபி உடைந்துவிட்டாள். வந்தனாவைக் கட்டிக்கொண்டு அப்படியொரு அழுகை. வந்தனாவுமே தேம்பியழ ஆரம்பித்தாள்.

வெற்றி இருவரையும் அனைத்துக்கொள்ள, அவன் விழிகளும் கலங்கித்தான் போயிருந்தது.

ராமசாமியின் தோளில் சாய்ந்தபடி வெகுநேரம் அமைதியாகவே இருந்தாள் பெண்.

கர்ணன் இதில் எதிலும் தலையிடவில்லை. மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அமைதியாக விலகி நின்றான்.

“தம்பி உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்ல.. ஆனாலும்” என்று திக்கியவர் “என்னோட உலகம் தம்பி என் பொண்ணு. அவளை நல்லபடியா பார்த்துகோங்க..” என்றார் கண்கள் கலங்க, அதில் வெடித்து அழுதாள் பெண்.

பல பத்திரங்களை கூறி வல்லபியை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு அவளின் குடும்பம் திருப்பூர் கிளம்பியது.

அவர்கள் கிளம்பியதும் தான் வனிதாவிற்கு மூச்சே சீரானது.

“சுமி.. வல்லிக்கு கீழ இருக்குற ரூமை காட்டு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். அப்புறம் சாப்பிட வைக்கலாம்..” என்ற பாட்டியிடம்,

“அதெல்லாம் வேண்டாம் அம்மாச்சி.. நான் பார்த்துக்கிறேன்..” என மனைவியை அழைத்துக் கொண்டு யார் பேச்சையும் கேட்காமல் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

கர்ணன் அறைக்குள் நுழையும் வரை அமைதியாக இருந்த பாட்டி “ராஜி நீ செய்றது எதுவும் சரியில்ல.. உன் பையனுக்கும், பொண்ணுக்கும் இப்படித்தான் கல்யாணம் செஞ்சியா? நீ கரணனுக்கு செய்றது பாவம். அது என்னைக்கு உனக்கே திருப்பி கிடைக்கப் போகுதோ தெரியல. உன் அக்கா உனக்கு போட்ட பிச்சை இந்த வாழ்க்கை அதை மறந்துடாத..” என்றார் காட்டமாக.

“சித்தி என்ன பேசுறீங்க? அவ உயிரோடு இருக்கும் போது இந்த வாழ்க்கை எனக்கு கிடைக்கல..” என ஆத்திரமாக கூற,

“ஓ அப்படி வேற உனக்கு ஒரு எண்ணம் இருந்ததா?” என பாட்டி நக்கலாக கேட்க, ராஜியின் முகம் அவமானத்தில் கன்றி சிவந்து போனது.

இங்கு அறைக்குள் மனைவியோடு வந்த கர்ணன் அவளை இறுக்கமாக அனைத்துக் கொண்டு அவள் முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்தான்.

விசும்பல் குறைந்து அவள் சற்று நிகழ்வுக்கு வந்ததும் முகத்தை நிமிர்த்தி, அதை அழுந்த துடைத்து “போதும் பாப்பு..” என்றவன், அவள் கலங்கிய விழிகளுடன் பார்க்க, அந்த பார்வையை உள்வாங்கிக் கொண்டே அழுத்தமாக அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
 
  • Like
Reactions: saru and shasri