• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அசுரனின் குறிஞ்சி மலரே..1

Oct 31, 2021
225
171
43
29
Sri Lanka Jaffna
மெல்லிய ஊதா நிறப் பூக்களை கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த, அந்தப் பெயர் தெரியாத மரத்தில் இருந்து, இரண்டு குருவிகள் சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன.

அதே நேரம் மரங்களின் இலைகளை ஊடறுத்து தன் கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டிருந்த,
காலைக் கதிரவனின் கதிர்கள் பட்டு, 'ஜீவோதயம்' எனப் பச்சைக் கல்லில் பொறிக்கப் பட்டிருந்த அந்தப் பலகை பளபளக்க, பலகையைத் தாங்கி நின்ற மதிற்சுவரை அடுத்து, பிரமாண்டமான அந்த பங்களா கன கச்சிதமாக நிமிர்ந்து நின்று, காண்பவரை வரவேற்றுக் கொண்டிருந்தது.

பங்களாவின் வலப் பக்க மூலையில் பெரிய நீச்சல் தடாகமும், இடப் பக்க மூலையில் மூலிகைத் தோட்டமும் என அந்த இடமே நவீனமும் பழமையும் ஒட்டியுறவாடக் கூடிய இடமாகவே தோற்றமளிக்க, பங்களாவும் கூட நவீனமும் பாரம்பரியமும் இணைந்த வகையிலேயே நடுவிலே அமைந்திருந்தது.

வெளியே இருந்த பிரமாண்டமான கதவில் இருந்து, உள்ளே பங்களாவின் தலை வாசல் வரை, கறுப்பும் சிவப்பும் கலந்த வட்ட வடிவக் கற்களைப் பதித்து நீண்ட நடைபாதை போல அமைத்திருந்தார்கள். அந்தப் பாதை இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் போகும் அளவிற்கு அகலமாக இருந்தது.

கற்கள் பதிக்கப் பட்டிருந்த நடைபாதையின் இருபக்கங்களிலும், நேர்த்தியாகப் பாக்கு மரங்களும், நடு நடுவே மயில்கொன்றை மரமும் நட்டு வளர்க்கப் பட்டிருந்தது. பங்களாவின் போர்டிகோவில் ஆறு ஃபாரின் கார்கள் என்னைப் பார் என் அழகைப்பார் என்பது போல நின்றிருக்க, ஒரேயொரு கறுப்பு நிற ஆடி கார் மட்டும் சற்று முன்னே புறப்படுவதற்குத் தயாராக நின்றிருந்தது.

பங்களாவின் தலைவாசலில் இருந்து பார்க்கும் போது, பார்வை வட்டத்தினுள் விழும் வகையில் நாய்களுக்குக் கூண்டு அமைத்து, பெரிய நாய் இனங்களில் ஒன்றான திபெத்திய மாஸ்டிஃப் நாய்களில் ஆறு நாய்களைச் சரியான பாதுகாப்போடு அடைத்து வைத்திருந்தார்கள்.

திபெத் நாட்டைச் சேர்ந்த சிங்கம் போன்ற உருவமுள்ள இந்த நாயின் ஒரு கடி, மனித எலும்பைச் சுக்கு நூறாக்கும் அளவுக்கு மோசமானது. இந்த இன நாய்களை வளர்க்க சில நாடுகளில் தடை விதிக்கப் பட்டிருந்தாலும், சில செல்வந்தர்கள் இதன் உருவத்துக்காகவே லட்சக் கணக்கில் காசு கொடுத்து இதை வாங்கி வளர்க்கிறார்கள். நாயின் தோற்றமே பயத்தையும் பிரமிப்பையும் தோற்றுவிக்கக் கூடியதாக இருந்தது. இப்படி அந்த இனத்து நாய்களில் ஆறை வாங்கி வளர்க்கிறார்கள் என்றால், இந்தப் பங்களாவின் அஸ்திவாரம் எத்தனை கோடி கொட்டி தன்னை உருவாக்கி இருக்கும் என்ற எண்ணம் வராமலில்லை.

நடைபாதை தவிர்ந்த ஏனைய இடங்களில் எல்லாம் வகை வகையான மரங்கள் நாட்டியிருக்க, அவையெல்லாம் கப்பும் கிளையுமாகப் பசுமை கூட்டி வளர்ந்து, கண்களுக்குக் குளிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தன.

பங்களாவின் பின்புறத்தில் இடப் பக்க மூலையில், அங்கே வேலை செய்பவர்களுக்கென்றே வரிசையாக குளியலறைகளுடன் கூடிய அறைகளும் கட்டப் பட்டிருந்தன.

அந்தக் காலை நேரத்தில் அங்கே புகையிலைக்கொட்டை விழுந்தால் கூடச் சத்தம் வரும் அளவிலான நிசப்த விரதத்தை அனுஷ்டித்தபடி, வேலையாட்கள் தங்கள் கடமைகளைச் செய்யச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்களில் மெல்லிய மணியோசை கேட்கவே, அங்கே வேலைக்கு அமர்த்தப் பட்டிருந்த முப்பது வேலையாட்களும் வரிசையாக, பங்களாவை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். ஏற்கனவே பங்களாவில் எட்டு வேலையாட்கள் இருந்தார்கள். ஆக மொத்தம் அந்த பங்களாவில் இருந்த பங்களாவாசிகளுக்குச் சேவகம் செய்யவென்றே முப்பத்தெட்டு வேலையாட்கள் அங்கே வேலைக்கு வைக்கப் பட்டிருந்தார்கள்.

பங்களாவினுள் வேலையாட்கள் வரிசையாகச் சென்றதுமே, அவர்களுக்கெல்லாம் தலைமையாக இருந்து வேலை பிரித்துக் கொடுக்கும் அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்த வியாகேசு அனைவருக்கும் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். அங்கிருந்த அத்தனை வேலையாட்களிலும் ஒருவர் கூடப் பெண்ணில்லை.

சில நொடிகளிலேயே அத்தனை வேலையாட்களும் ஓசை எழுப்பாமல் பம்பரமாகச் சுழன்று வேலை செய்யத் தொடங்க, பங்களாவின் உட் பக்கமாக காலிங் பெல் சத்தங் கேட்டது.

காலிங் பெல்லின் சத்தங் கேட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம், ஒருவனை இரண்டு பாடிகார்ட்ஸ் இழுத்துக் கொண்டு வந்து, அந்தப் பெரிய கூடத்தில் நிறுத்தினார்கள்.

நிறுத்தப் பட்டவனுக்கு ஒரு ஐம்பது வயது இருக்கும். அவனோ ஒரு நிலையில் இல்லாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான். குறிப்பாக ஒரு பெயரைச் சொல்லி உரக்கத் திட்டிக் கொண்டிருந்தான்.

அந்தப் பங்களா அமைந்திருக்கும் திருகோணமலை மாவட்டத்தில், இருக்கும் எவரும் அந்தப் பெயரை உச்சரிக்கவே நடுங்குவார்கள். அப்படியிருக்கையில் இவன் அந்தப் பெயரைச் சொல்லித் தரக் குறைவாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க, அடுத்து என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ என்பது போல அங்கிருந்தவர்களுக்கு உள்ளூர உதறலாகவே இருந்தது.

"என்னங்கடா ஜேம்ஸ் எண்டாப் பெரிய பருப்போ மண்ணாங்கட்டி.. வெளிய வரச் சொல்லுங்கடா அவனை.. ஆள் விட்டுத் தூக்குறானா என்னை.. நான் யாரெண்டு தெரியுமோ இருக்கிற இடந் தெரியாமல் ஆக்கிப் போடுவன் அவனை.. அவனைப் புதைச்ச இடத்துல புல்லென்ன பூவரச மரமே முளைச்சிடும் சொல்லீட்டன்.. யாருக்கு யாரு போட்டிக்கு வாரது.. காலங் காலமா நாங்கள் தான் இந்த பீரு சாராயம் விஸ்கி எல்லாம் எடுத்து உள்ளால விக்கிறம்.. உவன் ஆரடா பொடிப்பயல் நடுவுல வந்திட்டு நாட்டியம் ஆடிக் கொண்டு நிக்கிறான்.. எங்கடை தலை தில்லையம்பலம் பத்தித் துரைக்கு தெரியேலை எண்டு நினைக்கிறன்.. நாயைச் சுடுற மாதிரி சுட்டிடுவார்.. வரச் சொல்லடா அந்த வளந்து கெட்ட எருமையை.."
என வந்தவன் எகிறிக் குதித்துக் கொண்டு நிற்க, மாடிப்படிகளில் டக்டக்கென்ற சத்தம் கேட்கவே, கத்தியவன் நிமிர்ந்து பார்த்தான்.

பார்த்தவனின் விழிகள் அதிர்ந்து நிற்க, அடுத்த கணமே துப்பாக்கியின் தோட்டா ஒன்று அவனது தோள்பட்டையைப் பதம் பார்த்துச் செல்ல, ஐயோ அம்மா என அலறிக் கொண்டு மயக்கம் போட்டு விழுந்தான் அதுவரை கத்திக் கொண்டிருந்தவன்.

விக்கித்துப் போன வியாகேசு மாடியைப் பார்க்க, விழுந்து கிடந்தவன் சொன்ன வளர்ந்து கெட்ட எருமை, கறுப்பு ஷேர்ட் கறுப்பு பேண்ட் என கறுப்பு மயமாக உடையணிந்து, தன் அடர்ந்த தாடியை ஒரு கையால் நீவி விட்டுக் கொண்டு, துப்பாக்கியின் முனையை ஊதி விட்டுக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு திருத்தம் அது எருமையல்ல சிறுத்தை என்பதை நீல நிறத்து விழிகள் பழுப்பு நிறத்திற்கு மாறிய விதம் சொல்லிற்று.

வலது கையில் இருந்த துப்பாக்கியை பேண்ட்டின் பின் பாக்கற்றில் சொருகி விட்டு, இரண்டிரண்டு படியாகத் தாவி வந்தான், தற்போது அண்டகிரவுண்டில் போதை கடத்தலில் கொடி கட்டிப் பறப்பவனும், அவுட்சைட்டில் ஜேம்ஸ் பூட்சிட்டி, ஜேம்ஸ் காலேஜ், ஜேம்ஸ் ஜுவல்லரி, ஜேம்ஸ் பிற்நெஸ், ஜேம்ஸ் கொஸ்பிடல் என ஜேம்ஸ் மயத்தைத் தோற்றுவித்தவனுமான
'ஜேம்ஸ் பீட்டர் ஃபோல்'.

எப்போதுமே காதுகளில் ப்ளூருத்தை மாட்டிக் கொண்டு அலையும் அவன், அநாவசியமான சத்தங்களை விரும்புவதில்லை என்றாலும் கூட, ஒரு நாளில் அவனது பங்களாவில் அவன் கை பட்டு உடைவதற்கென்றே குறைந்தது பத்துப் பொருளாவது வெயிற்றிங்கில் இருக்கும்.

ஆக்ரோஷமான அடுத்த நொடியே கையில் எது கிடக்கிறதோ அதைத் தூக்கியடிப்பான். அப்படி உடைந்த பொருள் வரிசைகளில் கட்டில்கள் கூட விதிவிலக்கில்லை.

கீழே வந்தவனுக்கு உணவு எடுத்து வைக்க நான்கு பையன்கள் முன்னே வர, வியாகேசின் கையில் இருந்த அலைபேசி தன் இருப்பைக் காட்டிட, அந்த அழைப்பை ஏற்று வியாகேசு பேச, ஒரு கையசைவில் சாப்பாட்டை மறுத்தவன், வியாகேசைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினான்.

மறுமுனையில் சொல்லப் பட்டதைக் கேட்க கேட்க வியாகேசுக்கு பதட்டத்தில் லேசாகக் கைகள் நடுங்கத் தொடங்கியது. தன் லேசர் கண்களால் அனைத்தையும் நொடியில் ஊடுருவிப் பார்க்கும் ஜேம்ஸ்க்கு, அவரின் நடுக்கம் தெரியாமல் போகுமா, பட்டென்று அவரின் காதில் இருந்த ஃபோனைப் பிடுங்கித் தன் காதில் வைத்தான்.

வியாகேசுக்குத் தன் காது பிய்ந்து விட்டதோ என்கிற பயம் வந்து போனது. அவன் பிடித்திழுத்த வேகத்தில் ஃபோனோடு காதும் சேர்ந்து போகாமல் விட்டது தான் ஆச்சர்யம்.

ஜேம்ஸ்ஸின் காதில் இருந்த ஃபோனின் மறு முனையில், தில்லையம்பலம் சொல்லில் கூத்தாடிக் கொண்டிருந்தார். அவ்வளவு தான் அடுத்த செக்கன் அந்தப் ஃபோன் பறந்து போய் சுவரில் மோதி பரிதாபமாக வேலை நிறுத்தம் செய்தது.

அதைப் பார்த்த வியாகேசு
"போச்சா நானூத்தெட்டாவது ஃபோனு.. அதுக்கு ரெண்டு நாள் தான் வாழ்க்கை போல.."
என முணுமுணுத்துக் கொண்டே அடுத்து என்ன பொருள் உடையப் போகிறதோ என்பது போல காதுகளைப் பொத்திக் கொள்ள, நீண்ட பெரிய சாப்பாட்டு மேசையை ஒற்றைக் கையால் தூக்கிப் புரட்டி விட்டு, வேகமாக வெளியே போனான் ஆக்ரோஷத்தில் பிறந்து ஆக்ரோஷத்தில் வளர்ந்து ஆக்ரோஷத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆக்ரோஷ மன்னன் ஜேம்ஸ் பீட்டர்.

ஜேம்ஸ்ஸுக்கு பெண்வாடை சுத்தமாக ஆகாது. அவனைப் பொறுத்தவரை அவனொரு தனிக்காட்டு ராஜா, அங்கே ராணிக்கென்ன சேடிகளுக்குக் கூட ஒதுங்க இடம் இருப்பதில்லை.

அவன் வீட்டில் இருக்கும் உறவுப் பெண்கள் இருவரும் கூட மறந்தும் அவன் முன்னால் வருவதேயில்லை. யாரேனும் பெண்கள் பக்கத்தில் வந்து அவனோடு பேச்சுக் கொடுத்தாலே அவன் தசைக்கோளம் இறுகி, நரம்பு புடைத்து, வெண்ணிற முகம் சிவந்து போய், நீல விழிகள் பழுப்பு நிறமாகி விடும். உடனே கிடக்கும் பொருளையெடுத்து வீசி விடுவான்.
அப்படி வாங்கிக் கட்டிக் கொண்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு லிஸ்டே வரும்.

ஜேம்ஸ் வெளியே போய் விட்டான் என்பது உறுதிப் படுத்தப் பட்ட பின்னரே, அந்த வீட்டில் இருந்த மற்ற அங்கத்தவர்கள், கூடு திறந்ததும் பறந்தோடி வரும் கோழிகள் போல ஒரே நேரத்தில் வெளியே வந்தார்கள்.

ஜேம்ஸ்ஸின் தாய் வழி மாமன் ஜோசப், அவனின் மனைவி மாலினி, தந்தை வழி சித்தப்பா அல்போன்ஸ் அவரின் மனைவி மேரி என நான்கு பேரும் மெல்லக் கூடத்துக்கு வந்ததும், தங்கள் அராஜகத்தைத் தோடரவே இவை பழக்கப் பட்டுப் போன வேலையாட்களும் அவர்களது ஏவல்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்தார்கள்.

அந்த நால்வரைப் பார்த்ததும் முகம் சுளித்த வியாகேசு, அங்கிருந்து பங்களாவின் முன்னால் இருந்த தன்னறைக்குப் போய் விட்டார். அவர் அறையினுள் போன அடுத்த கணமே அந்த பங்களாவின் மாடியில் மூலையாக இருந்த அறையில் இருந்து
"என்னை விடு என்னை விடு.."
எனக் கத்தும் சத்தங் கேட்கவே, வியாகேசு பதறியடித்துக் கொண்டு அங்கே ஓடினார்.

அந்த அறையினுள் இப்போது வியாகேசைத் தவிர வேறு யாரும் நுழைவதற்கு அனுமதியில்லை. வேகமாக அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றவர், அங்கே கண்ட காட்சியில் உறைந்து போனார்.

இரும்புச் சங்கிலியால் இரண்டு பெண்கள் பிணைக்கப் பட்டிருந்தார்கள். ஒன்று ஜேம்ஸின் தாய் எலிசபெத் மற்றது ஜேம்ஸின் அப்பம்மா செபமாலை. இருவருமே மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் என்பதால், அவர்களை ஜோசப்பும் அல்போன்ஸும் தான் அந்த அறைக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

இப்போது எலிசபெத் கையில் கட்டிய இரும்புச் சங்கிலியால், தன் காலைப் படீர் படீரென அடித்ததால் காலில் இருந்து இரத்தங் கசிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த செபமாலைக்கு வலிப்பு வந்து வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்தது.

பதறிப் போன வியாகேசு மேலே இருந்தபடியே ஜோசப்பையும் அல்போன்ஸையும் அழைக்க, அந்த இருவரும் நெய்யில் சுட்டுக் கொடுத்த மொறு மொறு தோசைகளை ஆட்டுக் கறியில் முக்கி எடுத்து முழுங்கிக் கொண்டிருந்தனர்.

காலையிலேயே மாமிசம் உண்ணும் மாமிச மலைகள் தான் அழைத்தால் மட்டும் நகரவா போகின்றன என நொந்து கொண்ட வியாகேசு, தனியாளாக எலிசபெத்துக்கு நித்திரைக் குழுசையைக் கரைத்துப் பருக்கி விட்டு, கால் காயத்துக்கு மருந்து கட்டி விட்டு, செபமாலையின் கைகளில் இரும்புச் சாவி கொடுத்து, அவரையும் சரிப் படுத்தித் தூங்க வைத்து விட்டே வெளியே வந்தார்.

மாடியில் இருந்து இறங்கும் போதே, சிதறிக் கிடந்த சாப்பாட்டு மேசையை நிமிர்த்திக் கூட வைக்காமல், பக்கத்தில் இருந்த ஷோபாவில் இருந்து சாப்பாட்டை முழுங்கிக் கொண்டிருந்த நால்வரையும் பார்க்கப் பார்க்க வியாகேசுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

"உந்த நாதாரியளுக்கு ஒரு பாடையைக் கட்ட மாட்டன் எண்டுறானே பீட்டர்.."
என முனகிக் கொண்டு அவர் தன்னறைக்குப் போய் விட்டார்.
இனி வெளியே போனவன் வீடு வரும் வரை அவருக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தொண்டையில் இறங்காது. தன்னறையில் இருந்த சாளரத்தின் வழியே சற்றே தொலைவில் தெரிந்த வாசலைப் பார்த்தபடி அமர்ந்து விட்டார் அந்த நன்றியுள்ள விசுவாசி.

அவரது எண்ணத்தில்
'போனவன் இரத்தக்கறை படியாமல் வருவானா? தில்லையம்பலம் இந்த தேரத்துக்கு கூத்தாடும் சிவனைக் குசலம் விசாரிக்க கைலாயத்துக்குப் பாதி வழியில் பயணப் பட்டுக் கொண்டிருப்பானா?'
என்ற கேள்விகள் உருவாகி பதில் அறியா பாதையில் பயணித்துக் கொண்டிருந்தன.
 

Attachments

  • eiN5UR626060.jpg
    eiN5UR626060.jpg
    64.7 KB · Views: 9