• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே🌷 30

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
IMG_20210622_163933.jpg


அத்தியாயம் 30

ஹூஊம், இந்நேரம் கருப்பசாமி கோயில்ல ஆடு வெட்டி கொடை ஆரம்பிச்சிருக்கும்”, பெருமூச்சு விட்டு அங்கலாய்த்து கொண்டார் தேவேந்திரன்.



பெருமூச்சு வுட்டு என்ன செய்ய? நமக்குத்தே குடுப்பனையில்லாம போச்சே! எல்லாம் அந்த பாழா போன காதல் கருமத்தால வந்த வெனை?”, லட்சுமி சற்று கடுப்பாகவே சொன்னது அறைக்குள் மடிக்கணிணி முன்னால் இருந்த தினேஷின் காதுகளில் விழுந்தது. வலித்தது.



என்னத்துக்கு இப்டியொரு காதல் கருமத்த பண்ணணும்? பெத்தவக வயித்தரிச்சல கொட்டிக்கணும்? சொந்த ஊரையும் சனத்தையும் வுட்டு பரதேசம் வந்து, நல்லதொரு நாளும் பொழுதுமா, இப்டி குடும்பமா ஒக்காந்து ஏங்கிட்டு கெடக்க வேண்டியிருக்கு. இல்லன்னா, கட்டுக்கழுத்தியா வாழ வேண்டிய வயசுல அறுத்துகட்டிட்டு ஏங்கிட்டு கெடக்க வேண்டியிருக்கு”, லட்சுமியின் புலம்பல் கேட்டு, குழந்தை மோனியை வாங்க வந்த காயத்ரி, வீட்டுக்கு வெளியே சற்று மறைவாகவே, அதிர்ந்து நின்று விட்டாள்.



ம்மா, இப்போ நீ யார பேசுறன்னு நல்லாவே புரியுது. அநாவசியமா அடுத்தவங்க பர்சனல் லைஃப் பத்தி பேச நமக்கு உரிமை கெடையாது”, கமலி தாயை அதட்டினாள்.



வாய மூடுறி, ஒனக்கு வாழ்க்கைய பத்தி என்ன தெரியுமுண்டு பேசுற? பெத்த புள்ள ஒடம்பு முழுக்க ரத்தமொழுக அடிபட்டு வந்து நிக்கும் போது, பெத்தவளுக்கு வலி எப்டியிருக்குமுண்டு தெரியுமா?”,



விளையாடிக் கொண்டிருந்த மோனியின் அருகில், கமலி பேச முடியாமல் அமர்ந்திருக்க, தினேஷ் அவர்களின் உரையாடலில் கவனம் கொண்டிருக்க, காயத்ரி அதிர்ச்சி குறையாமல் நின்றிருந்தாள்.



நமக்காது பரவால்லடி, அண்ணன் உசுரோட வந்து சேந்துட்டான். அந்த மணிகண்டனோட அப்பா அம்மாவ நெனைச்சு பாரு”, லட்சுமி சொல்ல, காயத்ரியின் கன்னங்கள் நனைந்தது.



அந்த புள்ள காயத்ரிய நெனைச்சு பாரு. அவள பெத்தவக வலிய நெனைச்சு பாரு. இந்தா, அப்பனில்லாம ஏங்கிட்டு கெடக்க பச்சப் புள்ளைய பாரு. என்ன மயித்துக்கு இம்புட்டு பேருக்கு வலிய குடுக்குற காதல செய்யணும்?”, ஆவேசமாக சொன்னாள் லட்சுமி.



அதான, நா நெனைச்சேன். ஒனக்கு காதல் பிரச்சனையில்ல. மோனி தினேஷ அப்பான்னு கூப்டறதுதா பிரச்சன. அதுக்குதா இப்டி ஏதேதோ சுத்தி வளைச்சு பேசுற. ”, கமலி கடிந்து சொன்னாள்.



ஆமாண்டி, பிரச்சனதா. எம்புள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு எனக்கு ஆசையிருக்காதா?”,



இப்பொ எங்கல்யாணத்துக்கு என்ன கேடு வந்து போச்சு?”, தினேஷ் சத்தமாகவே கேட்டான்.


எய்யா, வுடு சாமி, அம்மா எதோ ஆத்தாமையில பொலம்புறா. நாம்பேசி புரிய வைக்கிறேன்”, தேவேந்திரன் மகனை பிடித்து, தடுத்து சமாதானம் செய்ய முனைந்தார். ஒரு பெருமூச்சை விட்டு தன்னை சமாதானம் செய்து கொண்டவன் கேட்டான்,


இப்போ நா என்னம்மா செய்யணும்?”,


நாம நம்மூருக்கு போவணும். மொதல்ல கமலிக்கும் மாறனுக்கும் கல்யாணத்த முடிக்கணும். அவ கல்யாணம் முடிஞ்ச கையோட, நாம்பாக்குற பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கணும். பொறவு, நீ எந்த ஊருக்கு கூப்டாலும், ஒங்கப்பனும் நானும் வந்து உங்கூடவே இருக்றோம்”, லட்சுமி திட்டவட்டமாக சொன்னாள்.


தினேஷ் ஆலோசனை செய்தான்.



அவ்விடமே அமைதியில் நிறைந்தது.



சரி,.......



எல்லோரும் தினேஷ் வாயிலிருந்து உதிரப் போகும் சொல்லை பற்றிக் கொள்ள ஆர்வத்துடன் நின்றனர்.



நீங்க யார வேணா பாருங்க. நா கட்டிக்குறேன். அவ கருப்பா, செவப்பா, ஊனமா, படிச்சவளா, படிக்காதவளா, எனக்கு கவலையில்ல. ஆனா, நீங்க பாக்ற பொண்ணு, மோனி என்னய அப்பான்னு கூப்டறத புரிஞ்சிக்கிற அளவுக்கு ப்ராட் மைண்டடா இருக்கணும். அப்டியொரு பொண்ணா பாருங்க, கட்டிக்குறேன்”,



ஒனக்கென்ன பைத்தியமா? இது மாதிரி கண்டிசனுக்கு எந்த பொண்ணாவது சம்மதிப்பாளா?”, லட்சுமி வெடித்தாள்.



எவ சம்மதிக்கிறாளோ அவள பாருங்க. இல்லாட்டி என்னை ஆள வுடுங்க”, சொன்னவன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.



ஏலேய், எங்கிட்டயே ஒன்ட்ற சங்கதிய காட்றியால நீயி. ஒம்மனசுல என்னதிருக்குதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்லே. இந்த கைபுள்ளைக்க அம்மக்காரிய கட்டிக்கிடலாம்ன்னு நெனைப்பிருந்தா அதிய தொடச்சு போட்டுரு. நா உசுரோட இருக்ற வரைக்கும் அது நடக்காதாமா”, லட்சுமி தினேஷுக்கு கேட்கும் படி சத்தமாக சொல்ல,



ம்மா, ஒனக்கு என்ன கேடு வந்துச்சு?”, கமலியும் கத்த, கோபமாக வீட்டுக்குள் காயத்ரி வர, படாரென்று கதவை திறந்து வெளிவந்து கோபமாக நின்ற தினேஷை கண்டு எல்லோரும் அதிர்ந்து நின்றனர். காயத்ரியும்.



குழந்தை மோனி மெதுவாக எழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.



காயத்ரியை பார்த்த லட்சுமி கூசி நிற்க,



இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு அப்டியொரு ஐடியா இல்ல. இப்பொ நீங்க சொன்ன பொறவுதா யோசிக்றேன், கயத்ரிய கட்டிக்கிட்டா என்ன தப்புன்னு?”, தினேஷ் சொல்லி முடிக்கும் போது அவனை அறைந்திருந்தாள் காயத்ரி.



தினேஷின் காலை பிடித்து ப்பா” என்றழைத்தாள் மோனி.



வாய் பிளந்து, பிளந்த வாயை கையால் மூடி நின்றாள் லட்சுமி.



தேவேந்திரனும், கமலியும் அதிர்ந்து பார்க்க, தினேஷின் முன் கோபத்தால் சிவந்த கண்களும், அக்கண்களில் கண்ணீருமாக நின்றாள் காயத்ரி. அவளை பார்த்தவனுக்கு, குழந்தையின் தொடு உணர்வும் புரியவே, குனிந்து குழந்தையை தூக்கினான். அவன் தூக்கிய குழந்தையை பறித்துக் கொண்ட காயத்ரி கோபத்தை இறக்காமலே, வீட்டை விட்டு வெளியேறினாள். ஏனோ தினேஷின் மனம் வலித்தது. லட்சுமி குற்ற உணர்வை தாங்கினாள்.









பணியில் என்றுமுள்ள வேகம் காட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த சுவாதிக்கு இரவு ஒன்பது மணியை கடந்த பிறகுங்கூட அலுவலக பணி பூர்த்தியாகவில்லை. செழியனிடம் இன்று தன் காதலை உடைத்து பேசிவிட வேண்டுமென்று தீர்மானித்திருந்ததே அவளுடைய பதற்றத்துக்கு காரணமாக இருந்தது. அவ்வப்போது செழியனை பார்த்துக் கொள்கிறாள்.



செய்திகளுக்கான காணொளியை எடிட் செய்ய மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த செழியனோ மருந்துக்கு கூட அவள்புறம் திரும்பவில்லை. சந்த்யாவின் நினைப்பு கூர்முனை கத்தியாக அவனை தொந்தரவு செய்து கொண்டிருந்தது.



சாரதிக்கும் இன்ன பிற ஊழியர்களுக்கும் கூட வேலை அதிகமாகவே இருந்தது.



ஸ்வாதி, ஒன்னை தேடி ஒரு பாட்டி வந்துருக்காங்க”, அங்கு பணிபுரியும் பெண்ணொருத்தி வந்து சொல்லி விட்டு போனாள்.



பாட்டியா? யாரோட பாட்டி?”, வேடிக்கையாக சொல்லி சிரித்தவள் எழுந்து வெளியே சென்றாள்.



புலியூர்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சந்தித்த காய்கறி விற்பனை செய்யும் பாட்டி, சோஃபாவில் அமர்ந்து அலுவலகத்தை ஏதோ ஆகாயத்தில், அந்தரத்தில் நிற்கும் சொர்க்க லோகத்தை பார்ப்பது போல், வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.





நாம்பாத்தேன் தாயி, ஒரு ஜீப்புல ஏழெட்டு பேரு வந்து இறங்குனாங்கோ. அதுல மெயினா நின்னவெ நல்லா, பெரிய மனுசங்கணக்கா, வெள்ளையுஞ்சொள்ளையுமா இருந்தான். அவன இங்குட்டு நெறைய பேருக்கு தெரியுந்தாயி", என்ற காய்கறி விற்கும் பாட்டி, அந்த அலுவலகத்தை, சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு, தனக்கு எதிரில் அமர்ந்திருந்த, சுவாதியின் முகத்துக்கு அருகில், வந்து சொன்னாள்.



அவம்பேரு பாண்டியன்",


மேசையில் இருக்கும் வாய்ஸ் ரெக்கார்டர் பாட்டியின் பேச்சை சேகரித்து கொண்டிருப்பதை பாட்டி அறிந்திருக்க நியாயமில்லை.



பாண்டியனா?", சுவாதி கண்கள் சுருக்கினாள்.



ஆமாந்தாயி, அந்த கொலைகாரப்பாவி, ஒரு அரசியல்வாதிக்கு ரொம்ப வேண்டப்பட்டவனாமா. எங்கூரு பஸ் ஸ்டாப்புல பேசிக்குவாங்கோ",



யாரந்த அரசியல் வாதி?. அவனை பத்தி ஒங்களுக்கு ஏதாது தகவல் தெரியுமா? அவன எங்கியாது பாத்துருக்கீங்களா பாட்டி?”, சுவாதி கேட்டாள்.



ஆமா தாயி, அவந்தே நம்மூருலருக்குற அம்புட்டு அரசியல் போஸ்டர்லயுமிருக்குறானல்ல!! கோயில் கொடை, தீபாவளி, பொங்கல்னா அந்த கட்டையில போறவனத்தே ப்ரைஸ் குடுக்க கூப்டுவாகோ. அவன் பேரு தொண்டைக்குழிக்குள்ள நிக்குது. வெளிய வர மாட்டேங்குது", காய்கறி கூடை பாட்டி சொல்ல, சுவாதி ஆர்வமாக பார்த்திருந்தாள்.



சுவாதி அந்த வட்டாரத்திலுள்ள பிரபலமான அரசியல்வாதிகளின் பெயர்களை மனதிற்குள் பட்டியலிட தொடங்கினாள். தன் தகப்பனின் பெயர் நினைவை எட்டினாலும்,



ப்ச், அப்பாவ போயி”, நினைத்துக் கொண்டே நினைவை கடந்தவளுக்கு, பாண்டியன் என்று பாட்டி சொன்ன பெயர் சுள்ளென்று சுட்டது. அதிர்ந்தாள்.



தன் தகப்பன் குற்றவாளியில்லை என்பதை தனக்கு நிரூபித்துக் கொள்ளவே அலைபேசியில் தகப்பனின் புகைப்படத்தை தேடினாள்.



இவரா பாருங்க”, மதிவாணனின் புகைப்படத்தை அந்த பாட்டியின் முன் காட்டினாள்.



இந்த பேதியில போவாந்தே ஆத்தா”, பாட்டியின் சொல் கேட்டு உள்ளுக்குள் நொறுங்கினாள் சுவாதி.



பாவிப்பைய, நாசமா போக, அவன் குலமே வேரறுந்து போக, வெளங்குவானுங்களா? பச்ச மண்ணு தாயி அந்த புள்ள, கட்டுக்கழுத்தியா, அம்புட்டு சந்தோசமா புருசங்கூட அந்த பஸ்ல வந்துச்சு”, பாட்டி காயத்ரியின் கதையை சொல்ல தொடங்கினாள்.



உள்ளுக்குள் உழன்று கொண்டிருந்த சூறாவளியின் வலியோடு பாட்டியின் பேச்சில் கவனம் செலுத்தியவளுக்கு வெடித்து அழ வேண்டும் போலிருந்தது.



நா ஒக்காந்துருந்த சீட்டுக்கு முன் சீட்லதே இருந்தாக. பேச்சும் சிரிப்பும் சோடி பாக்கவே கண்ணுக்கு நெறைஞ்சிருந்துச்சாத்தா. இதுகளுக்கு நெரம்ப ஆயுசை குடுன்னு நாங்கூட புளியந்தோப்பு பேச்சியாத்தாகிட்ட வேண்டிகிட்டேன்”,



உணர்விழந்தவளாக வெளிறிய முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் சுவாதி.



திடீர்னு அந்த சீப்பு பஸ்க்கு முன்னால வந்து நின்னுச்சு. ஏழெட்டு பேரு திபு திபுன்னு சீப்புலருந்து எறங்கி பஸ் உள்ளார ஏறுனானுங்கோ. அம்புட்டு பையலுகளும் காட்டெருமை கணங்கா இருந்தானுக. பையனையும் புள்ளையும் இழுத்து பஸ்லருந்து வெளிய போட்டானுக. அதுக்கு பொறவுதே அவன் வெள்ளையுஞ்சொள்ளயுமா சீப்லருந்து இறங்கி வந்தான். அவந்தே தாயி, பாண்டியே", கிசு கிசுப்பாக பாட்டி சொல்ல, சுவாதியின் இதயம் இன்னும் துடிப்பதை நிறுத்தவில்லை என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.



அந்த பையல போட்டு அடி அடின்னு அடிச்சானுக. பைய எம்புட்டோ போராடி பாத்தான். புருசன காப்பாத்த நடுவால போன புள்ளை, தலை முடிய புடிச்சு தர தரன்னு இழுத்துட்டு போயி, அவ தலைய அங்க இருந்த புங்கை மரத்துல மோதினான். அவந்தே, பாண்டியந்தே, அரக்கன் மாதிரி அந்த புள்ளைய அடிச்சான். அவ மசங்கிட்டா. மசங்குனாலும் கையிலயும் கால்லயும் அசைவுருந்துச்சு",



சுவாதிக்கு உலகமே சூன்யமானது.



பையல நாங்க வந்த பஸ் முன்னாலேயே போட்டு அடிச்சானுக பாரு, பஸ் டிரைவருக்கு வண்டி எடுக்க முடியல. அல்லா சனமும் வேடிக்கை பாக்குது. நானுந்தே, பொறவு, வேற என்ன செய்ய முடியும் ஆத்தா?! எம்பொண்ண ஒருத்தங்கையில புடிச்சு குடுக்குற வரை நா உசுரோட இருக்கோணும்ன்னு சுயநலமா இருந்துட்டேன்", பாட்டி சுருக்கம் விழுந்த கண்களை துடைத்துக் கொண்டாள்.



அவனுக அந்த பையல அங்குட்டே சரமாரியாக வெட்டி சாச்சானுக. பச்ச மண்ணு, எந்த தாய் பெத்த புள்ளையோ?! ரத்தக் கொளத்துக்குள்ள உசுரு போயிருச்சு", பாட்டியின் குரல் சுருதி குறைந்து, துக்கம் தூக்கி வந்தது.



சில நொடிகள் நிலவிய அமைதியில் இருவரின் இதயமும் பாலைவன வெயிலாக எரிந்தது. உள்ளங்கள் வியர்த்து, மூச்சு முட்டியது.



ஒரு தடியன் பஸ்க்குள்ள ஏறி வந்து, ரத்தத்துல நனைஞ்ச அருவாள நீட்டி சொன்னான்", பாட்டி வெறித்தாள்.



என்னல?! படமா காட்டுதாக? இங்ஙன நடக்கத பாத்து போலிஸ்க்கு சாட்சி சொல்ல போறிகளா?", அவனின் கேள்வியில் பயணிகள் மிரண்டு நின்றனர்.



பலரும் இல்லை என்பதாக தலையசைத்தனர்.



அதே நேரத்தில் பேருந்துக்கு வெளியே நின்ற தடியன்கள் அங்கிருந்த கடைக்காரர்களையும் அரிவாள்களை காட்டி மிரட்ட, சிலர் முழுக்கதவையும், பலர் அரைக் கதவையும் அடைத்து விட்டு, எழுந்து, விழுந்து ஓடினர்.



போ, போ, எல்லாம் எடத்த காலி பண்ணு", அவனின் மிரட்டலில் தீ பட்ட கூட்டிலிருந்து பறந்த குளவிகள் போல, மக்கள் பேருந்தின் வாசலில் இறங்கி ஓடினர். உடன் ஓடிய பாட்டி, சற்று தொலைவில் இருந்த அரச மரத்தின் வேரில், தடுக்கி சாய்ந்தாள்.



சாய்ந்தவள் எழுந்து ஓட இயலாதவளாக அந்த மரத்தின் பின்னால், தன் காய்கறி கூடையுடன் மறைந்து கொண்டாள்.



பாட்டி மேசை மீது, பாரிஸ் டவர் பிம்பம் வரையப்பட்ட கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீரை குடித்தாள்.



தண்ணீர் கூட ஜீரணமாகாத அளவுக்கு நெஞ்சடைத்து, கழுத்தடைத்து அமர்ந்திருந்தாள் சுவாதி.



திடீர்னு ஒரு கார் வந்துச்சு தாயி. அதுலருந்து ஒருத்தன் இறங்கி வந்தான். அந்த படு பாவி, கொலைகார பைய பாண்டியே அரை மசக்கத்துல பொலம்பிட்டு கெடந்த புள்ளைய தூக்கி, அவன்கிட்ட ஒப்படைச்சான்", பாட்டி சொல்ல கண்கள் சுருக்கி, சிந்தனை செய்த சுவாதி அலைபேசியில் தேடிப் பிடித்து அந்த புகைப்படத்தை காட்டினாள்.



கார்ல வந்தவன் இவனா?", பரிதவிப்பும், எதிர்பார்ப்பும் கலந்து கேட்டாள்.



இவந்தா தாயி, இந்த பாவிதே, நாசமா போக, இவனே தா", எதையோ சாதித்து விட்ட பிரமிப்போடு பாட்டி, கேசவன் புகைப்படத்தை பார்த்து சொன்னாள்.



சுவாதிக்கு எல்லாம் விளங்கியது.



இத கோர்ட்ல வந்து சொல்வீகளா பாட்டி", சொரணை இழந்த குரலில் சுவாதி கேட்டாள்.



சொல்லுவேந்தாயி, அன்னைக்கு என்னய நம்பி எம்புள்ள இருந்தா. இன்னைக்கு எனக்கு எந்த தடையுமில்லை. அன்னைக்கு அம்புட்டு சனமும் ஓடி போனப்போ, என்னைய மட்டும் பேச்சியாத்தா எதுக்கு அங்குட்டே புடிச்சு வச்சான்னு நெனைச்ச? அந்த பையலுகள அழிக்கிற ஆயுதமா, ஆத்தா என்னைத்தே நெனைச்சுருக்கா. ரெண்டு வருஷமா ஆத்தா கனவுல வந்து, நா ஒனக்கு தந்த கடமைய நீ முடிக்கலன்னு சொல்லிட்டு சொல்லிட்டு போறா. மனசெல்லாம் பொதுமி கிடக்குது தாயி. நா எங்கடமைய முடிக்கோணும். நா சொல்லுவேன். எங்க வேணா கொண்டு போயி நிறுத்தாத்தா. நா சொல்றேன்", ஆவேசமும், நெகிழ்ச்சியும் பொங்க பாட்டி பேசி முடித்தாள். தன் உடலில் பேச்சியம்மன் ஏறி பேசியதை போல், பாட்டி கண்கள் மூடி சிலிர்த்துக் கொண்டாள்.



சுவாதி இயந்திரமாக பேசி பாட்டியை அனுப்பி வைத்தாள். பாட்டியின் வாக்கு மூலத்தை பென் டிரைவ் ஒன்றில் பதித்து, அதை உயிரென பாவித்து, பீரோ ஒன்றில் பத்திரப்படுத்தினாள்.



வெறித்தபடி நடந்து வந்தவள், அங்கிருந்த நாற்காலியில் தன்னிச்சையாக அமர்ந்தாள்.



ப்பா, ப்பா, அப்பாஆஆஆ", என்றவள் முகம் மூடி அழுது சிதறினாள்.



அவளது கதறல் சத்தம் கேட்டு அறையின் வாசலுக்கு வந்த, சுவாதியின் அலுவலக தோழியை கரம் நீட்டி தடுத்தார் செம்பன்.



சார், சுவாதி",



"வேண்டாம்" என்பதாக தலையசைத்து "செல்" என்று சைகை செய்ய அவள் சென்றாள்.



தான் எதிர்பார்த்த தருணம் வந்ததில் மகிழ்ச்சி தான் என்றாலும், சுவாதியின் அழுகையில் தானும் கரைந்த நலம் விரும்பியாக, அவளின் அழுகைக்கு காவல் நின்றார் செம்பன்.



அழுகையினூடே சுவாதியின் அலைபேசி ஒலித்தது. திரையில் நவீன் காலிங் என்று தெரிந்தது.



முகம் துடைத்து, கண்ணீர் துடைத்து, குரல் செருமி, துக்கம் மறைக்க முயன்று அலைபேசி அழைப்பை ஏற்று காதில் ஏற்றினாள்.



சுவாதி, செழியன் எங்க?", நவீனின் குரலில் பதற்றம் இருந்தது.



சுவாதி கண்கள் சுருக்கினாள்.



செழியன், அவன், இங்கதான்,.... என்னாச்சு? ஏன் இவ்ளோ பதட்டமா பேசுற?",



செழியன் உயிருக்கு ஆபத்து. ஒங்கப்பா செழியனை கொலை பண்ண ஆள் ஏற்பாடு பண்ணிட்டாக. இன்னைக்கு ராத்திரி மட்டும் செழியன் சேனலை விட்டு வெளிய வராம பார்த்துக்க. விடிஞ்சதும் பாண்டியன் சார்கிட்ட பேசி ஏதாச்சும் பண்ணிக்கலாம்", பட படவென்று சொன்ன நவீன் அலைபேசியை துண்டித்து விட, சுவாதியின் கைகளும் கால்களும் உதறியது.



பதட்டமாக தன்னை தாண்டி ஓடிய சுவாதியின் கையை பிடித்து நிறுத்தினார் செம்பன்.



என்னாச்சு?”, என்று அவர் கேட்கும் முன்னே,



செழியன்,.... செழியன் எங்க சார்?”, தடுமாறிய குரலில் கேட்டாள்.



அவன் அப்பொவே போயிட்டானே!!”, செம்பன் சொல்ல, பயம் எனும் அரக்கன் சுவாதியின் உடல் முழுவதையும் ஆட்கொண்டான். அதிர்ச்சியில் உடலின் நரம்புகள் எல்லாம் அதிர, சுவாதியின் கையிலிருந்த அலைபேசி தரையில் விழுந்து மூன்று துண்டுகளானது.



என்னாச்சு சுவாதி?”, ஸ்தம்பித்து நின்று விட்டவளை உலுப்பி கேட்டார் செம்பன்.



சார், எங்கப்பா, எங்கப்பா நல்லவரில்ல சார்”, சொல்லும் போது கண்களை தாண்டி கோடிட்டது துக்கம் நிறைந்த வெந்நீர்.



நா செழியன லவ் பண்றேன்னு தெரிஞ்சதும், அவன கொலை பண்ண ஆளனுப்பிட்டாரு. செழியன பாக்கணும்”, என்றவள் பதட்டத்தோடு ஓட முனைய, அவளின் கை பிடித்து தடுத்த , செம்பன் தன் அலைபேசியை எடுத்து, எண்களை தட்டி காதில் வைத்தார்.



எங்கடா இருக்கீங்க”, கேட்டார்.



நாங்க டீ குடிச்சிட்டுருக்கோம் சார்”, எதிர்முனையில் சாரதி சொன்னான்.



செருப்பு பிஞ்சிரும், உண்மைய சொல்றா மாடு”,



சார், ஓரே ஒரு பெக்தா சார்”, சாரதி வழிந்தான்.



எந்த பார்லடா இருக்கீங்க?”,



நம்ம சேனலுக்கு பக்கத்துலருக்குற டாஸ்மாக்ல சார், எதாது வேலையா?”, சாரதி கேட்க,



நா அங்க வர்ற வரைக்கும் செழியன வெளிய போக விடாத. செழியன் உயிருக்கு ஆபத்து”, என்றவர், தன் அலைபேசியை துண்டிக்க,



சார்,... சார்,....”, என்று அனத்தினான் சாரதி.




என்னல ஆச்சு?", செழியன் கேட்டான்.


தெரீலல! எதோ ஆபத்துன்னாரு, ஃபோன் கட்டாயிருச்சு”, சாரதி சொல்ல, ஆயாசமாக டம்ளரில் இருந்த மதுவை கையிலெடுத்த செழியனின் அலைபேசி ஒலித்தது.



கல்யாணி அழைத்திருந்தாள்.



என்ன மதனி?’, காதில் வைத்தவன் இயல்பாக கேட்டான்.



சந்த்யாவ காணோம் செழியா”, எதிர்முனையில் கல்யாணி பதட்டத்தோடு சொல்ல, செழியன் தன் கை கடிகாரத்தை பார்த்தான்.



மணி பதினொன்றை கடந்தது.



என்னாச்சு? தனா சார்கிட்ட சொன்னீகளா?”,



ஆமால, ஆஃபீஸ்லருந்து முன்னாடியே போயிட்டான்னு சொல்றாக. அவுகளும் தேடி பாக்றேன்னாகளாம். அந்த கோபால் எதாது பண்ணீட்டானோன்னு பயமாருக்குது செழியா”, கல்யாணி தன் பயத்தை முழுதும் வெளிப்படுத்தும் முன், அலைபேசியை துண்டித்தவன்,



வால, அர்ஜென்ட்”, என்றபடி உடலுக்கு வேகம் செலுத்தி எழுந்தான். அவனின் கைப்பிடித்து தடுத்த சாரதி,



செம்பன் சார் ஒன்னய எங்கியும் போகக்கூடாதுன்னு சொல்லிருக்காரு”, என்றான்.



சந்த்யாவ காணோமால. நா அவள ஒடனே பாக்கணும்”, என்ற செழியன் சாரதியின் கையை உதறி விட்டு ஓடினான். அவனின் பின்னால் ஓடிய சாரதி, செழியன் ஸ்டார்ட் செய்த பைக்கின் பின்னால் ஏறிக் கொள்ள, பைக் மண் புழுதியை கிளப்பி கொண்டு பறந்தது.



டேய், செழியா, நில்றா”, என்று கத்தி கூப்பிட்ட படி ஓடி வந்த சுவாதியுடன், ஓடி வந்த செம்பனும் மூச்சு வாங்க நின்றார். உடனே அலைபேசியில் யாரையோ அழைத்துக் கொண்டே ஓடி சென்று தன் பைக்கை ஸ்டார்ட் செய்தார். அந்த பைக்கின் பின்னால் ஏறிக் கொண்டாள் சுவாதி.







சந்த்யா அணிந்திருந்த புடவையினை தரையில் வீசி எறிந்தான் கோபால். அலுவலகத்தின் மேசை, நாற்காலிகளும், இன்னபிற உயிரில்லா பொருட்களும் அவனை அருவருப்பாக பார்த்தன.



இந்த கதவ ஒடைச்சுட்டு உள்ள வர்றது எனக்கு அம்புட்டு பெரிய விசயமில்லடி. ஆனா அதிய நா செய்ய மாட்டேன். விடிஞ்சு வந்து பாக்குற சனம் முழு சம்மதத்தோட நீ எங்கூட இருந்ததா நம்பணும். ஒடைஞ்ச கதவ பாத்தா அந்த நெனைப்பு வராதல்ல!!”, கோபால் கதவை பார்த்து சொன்னான்.



கதவில் அசைவோ சப்தமோ இல்லை.



ஊரு முழுக்க என்னய பொம்பள பொறுக்கின்னு பேச வச்சானே, ஒங்கள்ள புருசன், அவம்பேரென்னடி, செழியனா? அந்த பரதேசி நாயி வந்து ஒன்னய இந்த கோலத்துல பாக்கோணும். அவன் வாயால ஒன்னய அவிசாரின்னு சொல்லோணும். சொல்ல வைப்பேன்”, ஆங்காரத்துடன் கர்ஜித்துக் கொண்டிருந்தான் கோபால்.



கதவுக்கு பின்னால், பூட்டியிருந்த அறைக்குள், பாவாடையும் ரவிக்கையும் மட்டும் அணிந்தபடி, முழங்கால் மடக்கி தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த சந்தியாவின் உடலெல்லாம் வியர்த்து நடுங்கி கொண்டிருந்தது.. அவளின் உதடுகள் அசைந்தது ,

"செழியா" ,.....


வாசலில் நின்றிருந்த வெங்கையாவும் கிருஷ்ணனும் பயமும், பதற்றமும், கலக்கமும் என்று ஏதேதோ உணர்வுகளை தாங்கி நின்றனர்.







தொடரும்,..........



சக்திமீனா,......
 
Last edited:

vinodha mohan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 29, 2023
Messages
29
யாரு யாரை காப்பாத்த????
உங்க கொள்கைகள்தான் என்னடா!!!
காயத்ரி நிலை ஒரு நிமிடம் கண்ணீர் சுரக்க வைத்துவிட்டது....
இவ்வளவு ஆத்மார்த்தமாக எழுதி இருக்கிறீர்கள்....
சூப்பர் மீனா❤️!!!!!
 

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
யாரு யாரை காப்பாத்த????
உங்க கொள்கைகள்தான் என்னடா!!!
காயத்ரி நிலை ஒரு நிமிடம் கண்ணீர் சுரக்க வைத்துவிட்டது....
இவ்வளவு ஆத்மார்த்தமாக எழுதி இருக்கிறீர்கள்....
சூப்பர் மீனா❤️!!!!!
அது தான் எனக்கும் புரியல வினோ. இவனுங்க கொள்கைகள் தான் என்ன?! Thank you 😊❤️
 
Top