• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 1

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
அச்சம் தவிர் அனிச்ச மலரே

அத்தியாயம் 1


வைகை மதுரையை உயிர்ப்பித்து கொண்டிருக்கும் உயிருள்ள அடையாளம். வைகை உருவான வரலாற்றை புராணங்களும் இதிகாசங்களும் பல்வேறு சுவாரஸ்யமான கதைகளில் விவரிக்கின்றன.

சுவாரஸ்யமான கதைகள் எல்லாம் உண்மையாகி விடுவதில்லை..

புவியியல் அமைப்பின் படி மேற்கு தொடர்ச்சி மலையின் வெள்ளி மலையில் உற்பத்தியாகி, வழியில் அம்மா கஜம் ஆறு, கூட்டாறு, உடங்கலாறு இவைகளை நட்பாக சேர்த்து கொண்டு, விஸ்வரூபம் எடுக்கின்றது வைகை. அவ்வாறு மலையில் இருந்து இறங்கி வரும் வைகையானது, பழனி, வருச நாடு, கம்பம் வழியாக பயணம் செய்து மதுரை மாநகரை வலம் வருகிறது . அதையடுத்து ராமநாத புரம் வழியாக சென்று வங்காள விரிகுடாவில் கலந்து கடலோடு காதலாகி விரிகிறது.



தமிழகத்தின் தென் மாவட்டங்கள் சிலவற்றை ஆக்கிரமித்து கொண்ட வைகையின் ஒரு அழகிய
கிளையாறு முல்லை பெரியாறு. கம்பம் பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் முல்லை பெரியாறு தேனி, உத்தம பாளையம், சின்னமனூர், கூடலூர் போன்ற முக்கிய நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகிறது.

முல்லை பெரியாற்றின் வள்ளல் குணத்தால் உருவான, தென்னந்தோப்புகளும், வாழைத் தோப்புகளும், திராட்சை தோட்டங்களும் சூழ்ந்து அரவணைக்க, செழித்தோங்கிய ஊர் அது.

தேனி மாவட்டத்தில், சில சிறு கிராமங்களை தன்னகத்தே அடக்கிய, பேரூராட்சி வகையறா. அந்த பேரூராட்சியில், முல்லை ஆற்றங்கரையில் ஒரு சிறு கிராமம் அது. கொங்கு தமிழும் பாண்டி தமிழும் கலப்பு மணம் புரிந்து அழகிய தமிழை பெற்றெடுத்து கொண்ட பகுதி..


அவ்வூர் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம். விவசாயத்தின் வாழ்வாதாரம் முல்லை பெரியாறு நதி.


உத்தம பாளையம் பேரூராட்சியின் நிரந்தர தலைவராக பார்க்கப்படுபவர் மதிவாணன். அந்த வட்டாரத்தில் பெயர் பெற்ற அரசியல் பெரும்புள்ளி. சாதி மறுப்பு கொள்கை கொண்ட ஆளுங்கட்சியில் மதிவாணன், தான் கொண்ட சாதியின், சாதிச்சங்கத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரன்றி ஓரணுவும் அசையாது உத்தமபாளையம் அரசியலில். அரசியலில் அணுகூட அசையவில்லை எனில் ஊருக்குள்ளும் அப்படித்தான். ஊரில் நடக்கும் கல்யாணங்களுக்கும், ஏனைய விசேஷங்களுக்கும், துக்கங்களுக்கும் இவரே தலைமை தாங்குவார்.



இன்றும் மதிவாணன் தலைமை தாங்கும் ஜாதியை சேர்ந்த, அவரது தூரத்து உறவினர் ராஜவேலுவின் மகள் கொடியழகியின் கல்யாணம். இந்த கல்யாணத்தையும் மதிவாணன் தான் தலைமை தாங்குகிறார்.



மாப்பிள்ளை அதே ஜாதியை சேர்ந்தவர் என்பதும் மாப்பிள்ளையின் முக்கிய தகுதி. மாப்பிள்ளையின் படிப்பு கொடியழகியின் படிப்பை விட சற்று குறைவு தான். என்றாலும் பரம்பரை சொத்து பல ஏக்கர் கணக்கில் தேறும். சொந்தமாக அரிசி மண்டியும், நவீன மளிகை கடையும், அதாங்க!... சூப்பர் மார்க்கெட்டும் இருக்கும் போது படிப்பை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். ராஜவேலுவுக்கு மாப்பிள்ளையை பிடித்து போனது. திருமண மேடைக்கு வந்து விட்டார் மாப்பிள்ளை.



பூட்டி வைத்த மணப்பெண் அறைக்குள் அலங்காரம் செய்யப்பட்ட தன் அழகு வதனத்தை பார்த்து அழுது கொண்டிருந்தாள் கொடியழகி. எவ்வளவு நேரம் அவள் இப்படி அழுது கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்கு நினைவில் இல்லை. தனிமையில் புடவை கட்டி கொள்வதாக சொல்லி கதவை தாழிட்டு கொண்டவள், இன்னும் பூட்டி வைத்த அறைக்குள் அழுது கொண்டிருக்கிறாள்.



நான்கு ஆண்டுகளுக்கு முன் அவனை சந்தித்த முதல் நாளை நினைவு கூர்ந்த போது அழுகை விசும்பலாக உருவெடுத்தது. ஒரு நொடி உத்திரத்தை பார்த்தாள். கான்கிரீட் உத்திரத்தில் சுற்றி கொண்டிருந்த மின் விசிறியின் இயக்கத்தை நிறுத்தி விட்டு, அதில் சேலையை கட்டி தொங்கி விடலாம் போல் தோன்றியது.



இல்லல்ல, நா செத்துட்டா என் தினேஷ்.......", விசுமபலுடன் இதயம் பேசியது.

இல்ல நா சாகக்கூடாது. என் தினேஷ் உயிரோட இருக்கணும்னா நானும் உயிரோட இருந்துதா ஆகணும்", என்று உரக்க ஒலித்தது இதயத்தின் மூலையில் ஒரு பெரும் குரல். இதயத்தை கல்லாக்கி கொண்ட சமயம், கதவு தட்டும் ஓசை கேட்டது. கவனம் கலைந்தாள். இயந்திரம் போல் எழுந்து நடந்தாள். கதவை திறந்தாள். திறந்ததுதான் தாமதம், சட்டென்று அறைக்குள் வந்து கதவை தாழிட்டு கொண்டாள் ஆண்டாள். கொடியழகியின் அம்மாவுக்கு தங்கையாகி போனதால் ஆண்டாள் கொடியழகியின் சித்தியாகவும் ஆகி போனாள்.



ரூம பூட்டி வச்சிட்டு எண்ட்றி பண்ணிட்டுருக்ற?", ஆண்டாள் கேள்விக்கு பதிலாக கண்ணீர் தான் வந்தது.


அந்த போக்கத்த பைய வந்து காப்பாத்துவான்னு கெனா கண்டுட்டுருக்றியாக்கு?", ஆண்டாள் ஆங்காரமாக பேசினாள்.

அப்டியொரு நினைப்பு இருந்தா அதை துடைச்சு போட்டுட்டு பொழப்ப பாரு. இந்தாடி,... அவனால எங்ககிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது,....", என்று கூறிய ஆண்டாள் தன் கையில் இருந்த அலைபேசியில் அந்த காணொளியை இயக்கினாள். அதில் தினேஷ் தூண் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்தான். மயக்கத்தில் இருந்தான். அங்கங்கு காயங்களும் இருந்தன.


இந்தேருடி, சத்தங்கித்தொ போடாம சட்டுனு வந்து பட்டுனு தாலி கட்டிகிட்டியானா, அந்த நாயி பொழைக்கு. இல்லன்னு வையி....., அந்த சாதி கெட்ட பையல கண்டந்துண்டமா வெட்டி ஆத்துலட்ருவோம் பாத்துக்க!!!”, ஆண்டாள் சொல்ல,


இல்லீங்க சித்தி, வேணாங்,..... அவர ஒண்ணும் பண்ணிராதீக. நீங்க என்ன சொல்றீகளோ அதிய கேக்கிறேனுங்க்”, என்று கூறும் போது கொடியழகியின் கைகள் தானாக ஆண்டாளை கும்பிட்டது.

ம்ம், இப்போ நாஞ்சொல்றத நல்லா மண்டையில ஏத்திக்கடி, ஏதோ தாலியை கட்டிக்கிட்டு, மாப்ளகிட்ட, ஒங்காதல் கதையை சொல்லி எதாச்சும், தகிடுதித்தம் பண்ணலாம்னு நினைச்சியாக்கு..., வேற ஆரும் தேவையில்ல, நானே உன் காதலன சங்கறுத்து போட்டுருவேனாக்கு", என்று ஆண்டாள் சொல்லும் போது கொடி இடவலமாக தலையசைத்தாள்.

இன்னிக்கு ராத்திரி மொத ராத்திரி ரூமுக்குள்ள சிரிச்சிக்கிட்டே போவணும். விடியிறப்போ, முழுசா கன்னி கழிஞ்சுத்தே வெளியே வரணும். அப்பத்தே, அந்த பைய, தினேசு உசுரோட ஊருக்குள்ள வருவான். புரிஞ்சுதல்ல!!”, ஆண்டாளின் குரலில் தெரிந்த குரூரம் கொடியின் உள்ளத்தை பயத்தால் நிரப்பியது.

பேசக்கூட இயலாமல் தலை குனிந்தபடியே சரி என்று தலையசைத்தாள். தோழியர்கள் சூழ, மணமகனின் அருகில் வந்து அமர்ந்தாள் கொடியழகி. அருகில் இருந்தவன் அவளை ஆசையோடு பார்த்தான். அவனது அழகில் குறை ஏதும் இல்லை. குணம் பற்றி பழகினால் மட்டுமே புரியும். மங்கள மேளங்கள் முழங்க, மணமகள் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான் மணமகன் துரையரசன்.


கெட்டி மேளம் முழங்கும் வேளையில் திருமண மண்டபத்தின் வாசலில் ஆயிரம் வாலா பட்டாசு பலத்த சத்தத்துடன் வெடித்தது. வெடித்து சிதறும் தீப்பொறியகளுக்குள் துள்ளி குதித்து, கையில் கேமராவுடன் ஓடி வந்தான் அந்த இருபத்தி ஐந்து இளைஞன்.

ஏலேய் செழியா, நில்லுல”, அவன் கூட்டாளிகளில் ஒருவன் சத்தமாக அழைத்தான்..,

தாலிக்கட்டு முடிஞ்சுற போவுதுலே. மாப்பிள்ளை கொடி கழுத்துல தாலி கட்டுறதை சரியா வீடியோ எடுக்கல, ராஜவேலு சித்தப்பா என்னய கட்டி வச்சி தோலை உரிச்சிப்புடுவாக”, சொல்லிக் கொண்டே ஓடினான் செழியன்.


ஏலே, உன்னை எங்கல்லாம்ல தேடுறது?. சீக்கிரம் வால”, என்ற படி கேமராவுக்கான மின்சார விளக்கை தூக்கி பிடித்தான் ஒருவன்.


இருல, வந்துட்டேன். சரியா புடில”, என்றபடி தன் கேமராவை இயக்க ஆரம்பித்தான் செழியன்.


இந்த பக்கம் காட்டுலே”, செழியன் சொல்ல மின்சார விளக்கை திருப்பி காட்டினான் செழியனின் நண்பன் பார்த்த சாரதி.

மணமகள் வீட்டார் சார்பாக வீடியோ பதிவு செய்யும் வேலையை செழியனிடம் ஒப்படைத்திருந்தார் ராஜவேலு. தன் சோட்டு நண்பர்களுடன் பொழுதை கழித்து கொண்டிருந்தவன், கெட்டிமேளம் கொட்டும் சத்தம் கேட்டதும் மணமேடை நோக்கி ஓடுகிறான். எப்படியோ மாப்பிள்ளை துரை, கொடி கழுத்தில் தாலி கட்டும் காட்சியை காணொளியில் பதிவு செய்து விட்டான். அவனது கேமரா தாலி கட்டும் சடங்கு முழுவதையும் பதிவு செய்த பிறகு, அந்த மண்டபத்தில் இருந்தோர் முகங்களையெல்லாம் வித விதமான கோணங்களில் படம் பிடித்தது.

படம் பிடித்து கொண்டே வருகையில் கேமரா ஃபிரேமுக்குள் தெரிந்தது அவளின் மஞ்சள் மெருகேறிய முகம். கேமராவின் வழியாக அவளின் முகத்தை பார்த்தவன் அதன் பிறகு கேமராவை வேறு திசைக்கு திருப்பவில்லை.


அவளின் சிரிப்பை, கையசைவை, பேசும் அழகை, கேமராவின் வழியே ரசித்து கொண்டிருந்தான் செழியன்.


போச்சுடா, இந்த புள்ளய பார்த்து போட்டானா?. இனி கேமராவை திருப்ப மாட்டானே!!. எய்யா, ராசவேலு உம்மொவ கல்யாண வீடியோல இனி மீதி இருக்குற ஸ்டோரேஜ் ஃபுல்லா சந்தியா மட்டுந்தே!!”, என்று புலம்பினான சாரதி. சாரதியின் புலம்பல் செழியனின் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை.


ஏ புள்ள சந்தியா, உங்க அம்மா கூப்பிடுறாக. ஓடியாடி”, யாரோ அவளது தோழி அழைக்க,

இந்தா வாரேன் புள்ள”, என்ற சந்தியா, அருகில் இருந்த, வயதான பாட்டியிடம் விடைபெற்று, அழைப்பு வந்த திசை நோக்கி ஓடினாள்.,

செழியனின் கேமரா அவளை துரத்தி கொண்டே நகர்ந்தது.

லேய் மடப்பயலே, பொண்ணும் மாப்ள்யும் அங்கே மேடையில நிக்குறாக. நீ இங்க யார தொறத்திட்டுல ஓடுற?", கேட்டு செழியனின் பின்னந்தலையில் சற்று வேகமாகவே அடித்தார் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்கவர்.

அப்படித்தான் பாண்டியா, இன்னொண்ணு போடு”, என்றான் சாரதி.


ஏல, எம்புட்டு தைரியம் இருந்தா என் பேரை சொல்லுவ?”, சொல்லி சாரதியின் பின்னந்தலையிலும் ஒரு அடி போட்டார் பாண்டியன்.


ஆ ஆ ஆ “, என்று அலறினான் சாரதி.


யப்போவ், சொன்னா போதாதா?. எதுக்கு இப்போ பொடதியில அடிச்ச?”, அடித்தவரை பார்த்து கேட்டுக் கொண்டே தன் பின்னந்தலையை தடவிக் கொண்டான் செழியன்.

போல, போய் குடுத்த சோலிய சரியா செஞ்சு முடிக்கிற வழிய பாரு”, என்றார் அவர்.

பாண்டியண்ணோவ், உங்களை மதிவாணய்யா கூப்பிடுறாருங்கோ”, என்று ஒருவன் உரத்த குரலில் சொல்ல,

என்னையா கூப்பிட்டாக?.!”, என்று ஆச்சரியமாக கேட்டபடியே அவனுடன் சென்றார் பாண்டியன், செழியனின் தகப்பனார்.

ஹப்பாடா”, என்று பெருமூச்சு விட்ட செழியன் மீண்டும் சந்தியாவை தேடி கண்களை கேமரா வழியே சுழல விட்டான். கேமாரா முன்னால்,


ஹாய் செழியா”, சொல்லிக் கொண்டே வந்தாள் ஒரு இளம் யுவதி.

அய்யோ”, என்று கூறி தலையில் கை வைத்து விட்டான் செழியன்.

இப்போதான் எங்க அப்பாட்டருந்து தப்பிச்சேன். அடுத்து நீயா?", சொல்லி நெற்றியில் அடித்துக் கொண்டான் செழியன்.

ஏண்டா என்னை பார்த்தாலே இப்படி அநியாயத்துக்கு சலிச்சிக்குற?”,

பின்ன என்னடி?, ரெண்டு பேரும் ஒரே சேனல்ல தானே வொர்க் பண்றோம்?. எதாவது சொல்லணும்னா அங்கேயே சொல்லலாமல்ல!! செழியன் கேட்டான்..,

ஏன்டா, இங்க பேசுனா என்ன தப்பு?”, கேட்டு தலையை சரித்து அழகாக சிரித்தாள் சுவாதி.

ப்ச்", சலித்துக் கொண்டு திரும்பினான் செழியன்.

ஒண்ணும் புரியாதவளாட்டமே பேசுவ!! ஏ சுவாதி, நீ இந்த ஊரு பிரசிடன்ட் மதிவாணன் அய்யாவோட பொண்ணு. இவன் உங்கப்பங்கிட்ட வேலை செய்ற டிரைவர் பையன். இது கிராமம் சுவாதி. வயசுப்பொண்ணும் பையனும் பேசுறதை பார்த்தாலே எதாவது கதை கட்டிடுவானுக. இதை கூட சொல்லி குடுக்கணுமா ஒனக்கு”, என்று சாரதி சொல்லும் போதே, ஒரு வயதான பெரியவர் இருவரையும் ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றார்.

பாத்தியா?, அந்த பெருசோட பார்வைய!!. நேரா போய் எதாவது இன்னொரு முட்டி செத்த பெருசு காதுல பேசும் பாரு”, என்றான் செழியன்.

அப்படிங்குற”, என்றவள் அந்த வயதானவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். செழியன் சொன்னதை போலவே அவரும் இன்னொரு பெரியவர் காதுக்குள் இவர்களை கை காட்டி பேசிக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் சிரித்தே விட்டாள் சுவாதி.

நம்ம ஊரு ஆளுங்களை பத்தி கரெக்டா கெஸ் பண்ணி வச்சிருக்க செழியா”, சொல்லி அவனின் தோளில் தட்டினாள் சுவாதி.

ஏ லூசு, இந்தூரு பெருசுங்கல்லாம் விஷண்டி. உங்க அப்பாகிட்ட எதாவது உன்னையும் என்னையும் சேர்த்து தப்பா சொன்னானுங்கன்னு வை. அடுத்து ஊர்ல கூடுற பஞ்சாயத்துல எனக்குத்தே சவுக்கடி. அதுவும் எங்கப்பந்தே மொதல்ல அடிப்பாக”, என்றான் செழியன்.

ஏண்டா இப்படி பயந்து சாவுற?. எவன் என்ன சொன்னா நமக்கென்ன?. நாம யாருன்னு நமக்கு தெரியாதா?. சரி...., அப்படியே நீயும் நானும் லவ் பண்ணாதான் என்னடா தப்பு?”, சுவாதி கேட்க,

அய்யோ லவ்வா?!”, என்று அலறியே விட்டான் செழியன்.

ஏண்டா எரும?”,

இந்தேரு சுவாதி, நீ எப்போவுமே என் குட்டி சுவாதிதே. என் பெஸ்டெஸ்ட் ஃப்ரெண்ட். ஃப்ரெண்ட் என்னைக்குமே லவ்வராக முடியாது, புரியுதா?! அப்றம் இந்த வீணா போனவனுங்க பஞ்சாயத்து கூட்டி என்னைய அடிச்சு போடுவானுங்கங்குறதெல்லாம் ரெண்டாம் பட்சந்தே. நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை கொச்சைப்படுத்துற மாதிரி எவனாவது எதாவது பேசுனான்னா அதை என்னால சகிச்சுக்க முடியாதுடி. அதுக்குத்தே சொல்றேன், இந்த ஊருக்குள்ள நம்ம ஃப்ரெண்ட்ஷிப்ப அடக்கி வாசி. பந்தி போட்டுட்டானுங்க. போ, ஓடி போய் தொந்தியை ஃபில் பண்ணு”, என்று கூறிவிட்டு மீண்டும் மணமக்கள் நிற்கும் மண்மேடை நோக்கி சென்றான் செழியன். பின்னால் சென்றான் சாரதி.

ஃப்ரெண்ட்ஷிப் லவ்வா மாறி ரொம்ப வர்சமாச்சுறா செழியா. உனக்குத்தா புரியல. சீக்ரமா புரிஞ்சிக்கிவ", தனக்குள் சொல்லிக் கொண்டே பந்தி நடக்கும் இடத்தை நோக்கி நடந்தாள் சுவாதி.

மண்டபத்தின் முன்வரிசையில், வி.ஐ.பி நாற்காலியில் அமர்ந்திருந்தார் மதிவாணன்.

அவர் முன்னால் வந்து நின்று

என்னங்க் மச்சான்?? கூப்டீங்களாக்கு”, என்று பவ்யமான குரலில் கேட்டார் பாண்டியன். சரவணனும் அருகில்தான் நின்று கொண்டிருந்தான்.

ம்ம், ஆமா பாண்டியா, கல்யாணம் முடிஞ்சுருச்சி. இனி அந்த பயல,....”, மதிவாணன் சொல்லி முடிக்கும் முன்,

நான் பார்த்துக்குறேனுங்க”, என்று சொல்லி விட்டு,

ஏல சரவணா, நம்ம பையலுகள கூபட்டு வால”, என்று சரவணனுக்கு கட்டளை பிறப்பித்த படி முன்னால் கம்பீரமாக நடந்தார் பாண்டியன். பின்னால் நடந்தான் சரவணன். மண்டபத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த ஜீப்பில் பாண்டியன் ஏறிக் கொள்ள, சரவணன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். இன்னும் சிலர் ஜீப்பில் ஏறிக்கொள்ள, ஜீப் புழுதியை பறக்க விட்டு சீறி பாய்ந்தது.

~~~~~~~~~~~~~~~~

கல்யாண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் இனிதே முடிந்தது. ஆங்காங்கு ஆண்களும் பெண்களும் கூட்டமாக நின்று பேசிக் கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தனர்.

சந்தியா தன் தோழிப்பெண்களும் பேசி சிரித்து கொண்டிருப்பதை தூரத்தில் நின்று கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் செழியன்.

ஏல செழியா, எனக்கென்னவோ ரொம்ப பயமாருக்குல”, என்று சாரதி சொல்ல,

எதுக்குல பயம்?”, இயல்பாக கேட்ட செழியனின் கண்கள் இன்னும் சந்தியாவின் மீதிருந்து விலகவில்லை.

சந்தியா நம்ம சாதி புள்ள இல்லல்ல!! ஒங்கப்பனுக்கு மட்டும் விசயம் தெரிஞ்சது, ரண களமாயி போவும்”, என்றான் சாரதி. சட்டென திரும்பி சாரதியின் முகம் பார்த்தான் செழியன்.

சொன்னா கேளு செழியா, அந்த புள்ள வாழ்க்கையையும் சேத்தி சிக்கலாக்கி வுட்டுராத”, சாரதி சொல்ல,

சாரதி,... நான் சந்தியாவை லவ் பண்றேன். அவளுக்கும் என்னை பிடிச்சிருந்தா நாங்க கல்யாணம் பண்ணிக்குவோம். எங்க கல்யாணம் நடக்காம இருக்கணும்ன்னா, ஒண்ணு எனக்கு அவளை புடிக்காம இருக்கணும். இல்ல, அவளுக்கு என்னை புடிக்காம இருக்கணும். இந்த ரெண்டு காரணத்தை தவிர வேற எந்த காரணமும் எங்க கல்யாணத்தை நிறுத்த முடியாது. எனக்கு சந்தியாவை புடிக்கும்.”, என்றான் செழியன்.

சந்தியாவுக்கு உன்னை புடிக்கலன்னா”, சாரதி சொல்ல,

புடிக்கும், புடிக்காம எங்க போவும்?. அவ என் சந்தியால”, என்றபடி தன் பைக்கை நோக்கி நடந்தான் செழியன்.

அப்போ சாதி?”, அவனின் பின்னால் நட்ந்து கொண்டே கேட்டான் சாரதி.

சாதியா?. அப்படின்னா,.....?. அது எங்க இருக்கு? கண்ணுக்கு தெரியுமா?”, கேட்டு கொண்டே பைக்கின் ஸ்டார்ட்டரை உதைத்தான் செழியன். பின்னால் ஏறிக் கொண்டான் சாரதி. பைக் சாலையில் சீறி பாய்ந்தது.



சாதீயத்தை வெல்லுமா காதல்?



தொடரும்.....







சக்தி மீனா...........
 
Last edited: