• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 25

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
IMG_20230426_111521.jpg



அத்தியாயம் 25


புலியூர்பட்டி என்ற ஒரு கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் சுவாதி. பேருந்து நிறுத்தத்தின் நிழல்குடைக்கு கீழ் இரண்டு பெண்கள், புத்தகங்களை நெஞ்சோடு அணைத்தபடி, புத்தகப்பையை தோளில் சுமந்து கொண்டு நின்றனர். அருகில் ஒரு பாட்டி காய்கறி கூடையுடன் நின்று கொண்டிருந்தாள்.

மணி என்னாச்சு தாயி?', அந்த பாட்டி கேட்டாள்.

எட்டே முக்கால் ஆவுது பாட்டி”, தன் அலைபேசியில் பார்த்து சொன்ன சுவாதி ஸ்கூட்டியில் இருந்து இறங்கினாள்.

இந்த எட்டரை மணி பஸ்ஸ இன்னும் காணோமே!”, சலித்துக் கொண்டாள் பாட்டி. மெலிதான சிரிப்போடு நகர்ந்த சுவாதி ஒரு டீக்கடை முன்பு நின்று,

ஒரு டீ போடுங்கண்ணா”, என்றாள். டீக்கடையை சுற்றி ஈக்கள் போல் கூடி நின்ற ஆண்கள் கூட்டம் சுவாதியை ஏற இறங்க பார்த்தது. அந்த பார்வையை சட்டை செய்யாதவளாக டீக்கடை மேசை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிளகாய் பஜ்ஜியை எடுத்து கடித்தாள் சுவாதி.

வேங்கை வயல் கிராமத்தில், குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது” என்று மிகப்பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட செய்தித்தாள் டீக்கடை மேடைக்கு அடியில் தொங்கிக் கொண்டிருந்தது.

வாவ், இது போதுமே, வேங்கை வயல் நியூஸ்ஸ வச்சு கான்வெர்சேஷன் ஸ்டார்ட் பண்ணா, மணிகண்டன் மர்டர் கேஸ்ஸுக்கு வந்துரலாம்”, தனக்குள் சொல்லிக் கொண்ட சுவாதி,

வாட் நான்சென்ஸ், டீ குடிக்கிற எடத்துல இதையெல்லாம் ஒரு நியூஸ்னு மாட்டி வச்சிருக்கீங்க”, சொல்லி காற்றில், நாற்றத்தின் பிம்பம் தாங்கி ஆடிக் கொண்டிருந்த காகிதத்தினை, கை காட்டி கேட்டாள் சுவாதி.

அங்கு தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்கள் கவனித்தனர்.

ஏம்மா, நியூஸ்ல பாக்கும் போதே முகம் சுழிக்குதா?”, என்று கேட்டார் ஒரு பெரியவர்.

பின்ன, இத பாத்துட்டு எப்டி தாத்தா சாப்டுறது?”,

இதுக்கே நீ இம்புட்டு வெசனப்படுறியே, அந்த டேங்க்ல இருந்த தண்ணிய குடிச்ச சனங்களுக்கு எப்டி இருந்துருக்கு?”, என்று கேட்டார்.

கஷ்டந்தா தாத்தா, எவனோ குடி போதையில பண்ணிபோட்டு போயிட்டான். அத போயி சாதி வெறின்னு பேசுறதெல்லாம் ரொம்ப சீப்பான அரசியல்', சுவாதி சொல்ல,

எது சீப்? பாத்தீகளா? இது அரசியலுக்காக நடந்தது தெரியுமா உங்களுக்கு?”, ஒரு நடுத்தர வயது மனிதர் கோபமாக சாடினார்.

அரசியல் தா பாஸ். குடிதண்ணில போயி யாராவது வேணுமுன்னே இப்டி செய்வாகளா? தெரியாத்தனமா நடந்துருக்கும்”, இயல்பாகச் சொன்னாள் சுவாதி.

தெரியாத்தனமாவா?', அவன் சீறிக் கொண்டு வர, ஒருவன் அவனது கைப்பிடித்து தடுத்தான்.

வுடுல, இந்த மேட்டுக்குடிக்காரங்களுக்கு நம்ம வலி புரியவே புரியாது, இன்னும் பேசாமலே இருந்தோமுண்டா, நம்மள சாதி வெறி புடிச்சவன்னு சொல்லிருவாக”, என்றவன் கையை உதறினான்.

லேல, ச்சும்மா இருல”, சொன்னார் டீக்கடைக்காரர்.

சும்மா இருமுண்ணே!! வேவரந்தெரியாம பேசுறவகளுக்கு சொல்லி குடுக்க வேணாமா?", என்றான் அவன்.

எப்படியோ போ", என்ற டீக்கடைக்காரர் டீயை சுவாதி முன் வைத்தார். சுவாதி எடுத்து குடித்தாள்.

குடிகார பைய செஞ்சானா? எவனோ சுயநினைவேயில்லாத குடிகாரப்பையளோ, பைத்தியக்கார பையலோ, கிட்டத்தட்ட 25லருந்து 30 அடி உயரமுள்ள தொட்டியில ஏறி, அந்த அசிங்கத்த போட்டுட்டு, பத்திரமா ஏறங்கி காணாம போயிட்டானாக்கு?!. அத நீங்க நம்புனீங்கன்னா, ஒங்கள விட பெரிய முட்டாள் இருக்க முடியாது. இது தெரியாம நடந்த விபத்து இல்ல, மேட்டுக்குடிக்காரனுக மனசுல, ரெண்டாயிரம் வருஷமா ஒட்டிக்கிட்டுருக்குற சாதி வெறிங்குற அசிங்கம். அத கொண்டு போயி குடிதண்ணி தொட்டியில கொட்டிபோட்டு போயிட்டானுங்க. இனியாது மனுசனாவுறானுங்களா பாக்கலாம்”, என்றார்.

என்னங்கணா பேசுறீங்க? ஒலகம் எங்க போயிட்டுருக்குது? அவவன் செவ்வா கெரகத்துல மனுசன் வாழ வழியிருக்குதான்னு ஆராய்ச்சி பண்ணிட்டுருக்கான். இந்த காலத்துல போயி சாதி வெறி, கவுரவக் கொலன்னு பேசிகிட்டு. கொலை நடந்தா கொலை செஞ்சவன குற்றவாளியா பாக்கணும். அத விட்டுபோட்டு அவன் சாதியென்ன மதமென்னன்னு யோசிக்கிறதெல்லாம் முட்டாள் தனம். இப்பொலாம் யார்ணா சாதி மதமுன்னு பாக்குறாக?”,சுவாதி சலனமின்றி கேட்க,

இந்த மாதிரி பேசி சாதி வெறி கொண்டு திரியிறவன காப்பாத்துறதுதே கடைஞ்செடுத்த அயோக்கியத்தனம்”, என்று அவர் சட்டென்று சொன்னார்.

சட்டென வாயடைத்து நின்றாள் சுவாதி.

இந்த நாட்டுல சாதியுமிருக்குது, மதமுமிருக்குது, சயின்ஸ்ஸும் இருக்குது, அந்த சயின்ஸ்ல பண்ற ஆராய்ச்சிக்கு எலியா கீழ் சாதிக்காரனையும், சிறுபான்மை மதத்த சேந்தவனையும் பயன்படுத்துவாங்க. அதே ஆராய்ச்சி சக்ஸஸ் ஆயிருச்சுன்னா ஒங்கள மாதிரி மேட்டுக்குடிக் காரவுக செவ்வா கெரகத்துல குடியிருக்க போவீக. அங்கயும் கூட பீ அள்ள ஒரு கூட்டத்தை உருவாக்குவீக”, ஆவேசமாக அவன் பேசி முடிக்க,

எங்கியோ கண்ணுக்கு தெரியாத இடத்துல, அங்கொண்ணு இங்கொண்ணு நடக்குறத வச்சி எல்லாரையும் தப்பா நெனைக்கக் கூடாதுங்கணா”, சுவாதி சொன்னாள்.

எங்கியோவா? ஹூம்,.....", விரக்தி கலந்த எள்ளல் சிரிப்பை உதிர்த்தவன்,

ரெண்டு வருசத்துக்கு முன்னால இங்கிட்டு, இந்தா இங்கிட்டு ஒருத்தனை கண்டந்துண்டமா வெட்டி சாச்சானுக", என்று அந்த சாலையை கை காட்டி சொன்னான்.

காரணம் என்னண்டு தெரியுமா? அவன் ஒரு வேத்து சாதி பொண்ண லவ் பண்ணிட்டான். ”, அவர் தொடர்ந்து சொல்ல, சுவாதி தன் திட்டம் வென்றதில் தனக்குள் மகிழ்ச்சி அடைந்தாள்.

இங்கிட்டா? என்னணே சொல்றீங்க?”, சுவாதி அதிர்ச்சியடைந்தவள் போல் கேட்க,

ஏல, வாய வச்சிட்டு சும்மா இருல”, சத்தமாக சொன்னார் டீக்டைக்காரர்.

நீ சும்மாயிருந்தே, ஆறுகிட்டயாது கொட்டி தீத்தாதே நமக்கும் ஆறும்”, என்றவன்,

இந்தாமா தங்கச்சி, இங்கிட்டுதே, இந்தா இங்கனதே அந்த பையல வெட்டி சாச்சாக. மணிகண்டன் கௌரவக்கொலைன்னு பேப்பர்ல படிச்சிருப்பியே”, என்று கேட்க ஆம் என்பதாக தலையசைத்தாள் சுவாதி.

அந்த பையல இந்த பஸ் ஸ்டாப்லதே வெட்டி சரிச்சானுக”, அவர் சொன்னார்.

இங்கயா? நீங்க பாத்தீகளா?”, சுவாதி கேட்டாள்.

நா மட்டுமில்ல இங்கிட்டு கடை போட்டுருக்குற பையலுக, டீ குடிக்க வந்த பையலுக, வூட்டுக்கு சாமான் வாங்க வந்த பையலுகண்டு அம்புட்டு பையலுந்தே பாத்தாக. என்ன செய்ய முடிஞ்சுது”, அவர் ஆவேசமாக சொல்ல,

கொலைய செஞ்சது யாரு?”, ஆர்வமாக கேட்டாள் சுவாதி.

இந்தா, இதெல்லாம் இங்க பேசக்கூடாது. வந்தா, டீய குடிச்சியா? வடைய கடிச்சியான்னு போயிட்டே இருக்கணும்”, என்றார் டீக்கடைக்காரர்.

கோவிச்சிக்காதீங்கன்னா, நமக்குள்ளதான பேசிக்கிறோம்”, சுவாதி சமாளித்தாள்.

பேசக்கூடாது தாய், அவுக ஆரென்னன்னு பேசக்கூடாது. அது எங்களுக்கும் நல்லதில்ல. ஒங்களுக்கும் நல்லதில்ல”, டீக்கடைக்காரர் சொனனார்.

சரி, எங்கிட்ட சொல்ல வேணாம். கோர்ட்ல வந்து சொல்லுங்க”, என்றாள் சுவாதி.

அதிர்ந்து உறைந்தார் ஆவேசமாக பேசிய நடுத்தர வயதுக்காரர்.

ஆரம்பத்துலயே சொன்னேனே கேட்டியால?”, என்று கேட்டு தன் நெற்றியில் அடித்துக் கொண்டார் டீக்கடைக்காரர்.

அங்கிருந்து இரண்டாவதாக இருக்கும் கடையில் இளநீர் வாங்கி குடித்துக் கொண்டிருந்த நவீனும் தன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

சொல்லுங்க, இத்தனை பேர் பாத்தீங்கல்ல!! கொலை செய்தவன ஒங்களால அடையளங்காட்ட முடியாதா? இம்புட்டு பேசுற சாட்சி நீங்க கோர்ட்டுக்கு வந்து ஏன் சொல்லல?”, சுவாதி கேட்டாள்.

நீங்க,.... யாரு?”, தயங்கிய படியே கேட்டார் அந்த நடுத்தர வயதுக்காரர்.

நா ஃபியூச்சர் நியூஸ் சேனல் ரிப்போர்ட்டர் சுவாதி”, சுவாதி சொல்ல அதிர்ந்து பார்த்தனர் அனைவரும்.

எட்டரை மணி பேருந்து வந்தது. பேருந்துக்காக நின்ற இளம்பெண்கள் பேருந்தில் ஏறிக் கொண்டனர். காய்கறி கூடை வைத்திருந்த பாட்டி ஏறவில்லை. பாட்டியின் பார்வை சுவாதி மீது படிந்திருந்தது.







உத்தம பாளையம் முடியும் இடமல்ல அது. ஏரி பாளையம் ஊர் தொடங்கும் இடம் அது. முல்லையாற்றின் கரையோரமாக வாழும் அவ்விரு ஊர்களுக்கும் நடுவில், தமிழ்ச்சமூகத்தின் வீரன் ஒருவனுடைய வீரத்தின் அடையாளமாக நின்று கொண்டிருக்கும் கருப்பசாமியின் கோயிலுக்கு வெளியே, கம்பீரமாக நின்று கொண்டிருந்த, மிகப்பெரிய ஆலமரத்தின் கீழ் கூடியிருந்த வெள்ளை வேட்டிக் கூட்டத்தின் முகங்கள் தீவிரமாக இருந்தன. ஊர் இளந்தாரிகளின் முகங்கள் கோபமாக தெரிந்தது.

கூட்டத்துக்குள் நின்றிருந்த மாறன் வேர்க்கடலை கொரித்துக் கொண்டிருந்தான். அவனை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த பாண்டியனின் முகத்தில் எரிச்சலும் கோபமும் அப்பிக் கிடந்தது.

மதிவாணன் கூட்டத்தின் நடு நாயகமாக, ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிலிருந்து நான்கடி தூரத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தவர் தன் மேனியை சந்தன நிற சரிகை துண்டால் மறைந்திருந்தார். தலையில் கூந்தலை முடித்து சிறு கொண்டை போட்டிருந்தார்.

இந்த சாமி பெங்களூர்லருந்து வந்துருக்காங்களாம். ஒரு தடவ சோசியம் பாக்கணும்ன்னா, இருவதாயிரமும், புது வேட்டி சட்டையும் காணிக்கையாமா”, கூட்டத்துக்குள் ஒருவன் சொல்ல,

ஏல பெங்களூரு இல்லல, கேரளாலருந்து வந்துருக்காக. எல்லாரு எடத்துக்கும் பொசுக்குன்னு போயிர மாட்டாங்களாம். நம்மூரு மாரியம்மங்கோயில் பூசாரி ரொம்ப ப்ரஸ் பண்ணி சொன்னதுனாலதா இங்க வந்துருக்காக”, என்றான் ஒருவன். தன் பைக்கின் மீது உட்கார்ந்திருந்த படி கடலை கொரித்துக் கொண்டிருந்தான், மாறன் இவர்களின் உரையாடலை கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டான்.

வழக்கம்போல இந்த வருசமும் சித்திரை மாசத்து கொடையை சிறப்பா செஞ்சு போடணுஞ்சாமி. நீங்க பிரசன்னம் பார்த்து நல்லதா ஒரு நாள சொல்லி போட்டீகன்னா, கொடை நடத்துறதுக்கான வேலைய ஆரம்பிச்சிருவோம்”, ராஜவேலு பேச்சை தொடங்கினார்.

கண்கள் மூடி கைகள் கூப்பினார் பிரசன்னம் பார்க்க வந்த சுவாமிகள். அவருக்கு முன்பாக வரையப்பட்டிருந்த நட்சத்திர கோலத்தின் மீது சோழிகளை உருட்டி போட்டார். கை விரல்களை எண்ணினார்.

கண்கள் மூடி வாய்க்குள் ஏதோ முணு முணுத்தார். சுற்றி நின்ற அனைவரும் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சில வினாடிகளுக்கு பிறகு கண்கள் விழித்தார் சுவாமிகள்.

எல்லோரும் ஆர்வமாக அவரை நோக்கினர்.

வர்ற சித்திரை மாசம் இருபத்திரெண்டாம் தேதி வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி, சுவாதி நட்சத்திரம். அன்னைக்கு பிரம்ம முஹூர்த்ததில கொடைய ஆரம்பிச்சிருங்கோ. எல்லாம் நல்லபடியா நடக்கும்', சுவாமிகள்.

இந்த தேதி குறிக்க, திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கத்த பாத்தா போதாதாடா. இதுக்கு எதுக்குடா ஊரு பணம் இருவதாயிரத்த செலவு பண்றீங்க?”, சற்றே குறைவான சத்தத்துடன் குடிக்காத குடிமகன் ஒருவர், தனக்கு அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும் படியாக சொல்ல,

என்ன பெருசு லந்தா? பிரசிடென்ட் ஐயாகிட்ட போயி சொல்றியா?”, என்று கேட்டான் மாறனுக்கு அருகில் நின்றிருந்த தர்மன்.

நீ வேற ஏழரைய கூட்டி வுட்ராதல!! ஏதோ பணம் இருவதாயிரம் போவுதேன்னு ஆத்தாமையில சொன்னா, கருப்பசாமிக்கு என்னையே வெளி குடுத்துருவியாட்டமிருக்குது”, என்று சொல்லி வாயை பொத்திக் கொண்டார்.

இப்டி எம்புட்டு நாளைக்குத்தே வாய மூடிட்டு கெடக்றது? ஆடு வெலி வாங்கி ஆவேசமா சாமியாடுற கருப்பனுக்கு, தேதி குறிக்க, காய்கறி திங்குற பூசாரி என்னத்துக்குல?. இத கேட்டா நம்மள பைத்தியக்காரன்னு சொல்லுவானுக”, ஒரு வயதான முதியவர் புலம்பினார்.

ஏல, அங்க என்னல சத்தம்? கொஞ்சம் அமைதியா இருங்கப்பா. சாமி பேசிட்டுருக்றாரல்ல!', சத்தமாக சொன்னார் பாண்டியன்.

கப் சிப்பென்று அமைதியாகி விட்டது கூட்டம்.

மாறன் சிரித்துக் கொண்டான்.

ஊருக்குள்ள இருக்குற அம்மன் மந்திரக்கட்டுக்குள்ள இருக்காங்க. அதனால அவளோட காவல்காரன், கருப்பன் பலமில்லாம இருக்கான்”,சுவாமிகள் சொல்ல,

ஆத்தீ, கருப்பா, ஒனக்கா இந்த நெலமை வரணும்?”, வயதான பாட்டி ஒருத்தி தலைக்கு மேல் கைகளை தூக்கி கும்பிட்டு, உணர்ச்சி பொங்க கூறினாள்.

ஊருக்குள்ளார நாலஞ்சு அம்மன் இருக்குதுங்களே!! அதுல எந்த அம்மன் கட்டுக்குள் அகப்பட்டுருக்குதுங்க?”, ஒரு வயதான முதியவர் கேட்டார்.

இப்போ சாமி கன்ஃபியூஸ் ஆவாரு பாரு”, மாறன் தர்மனிடம் சொன்னான்.

கண்கள் மூடிய சுவாமிகள் சில நிமிடங்கள் தாண்டியும் கண்கள் திறக்கவில்லை.

திடீரென்று திறந்தார்.

ஒண்ணும் சரியா புடிபடல. சுத்திலும் ஒரே இருட்டா இருக்கு. யட்சிகள் குறுக்கிலும் மறுக்கிலும் ஓடிட்டுருக்கு. அம்மன் அழுதுட்டுருக்குறது மட்டுந்தா எனக்கு தெரியுது”, சொல்லும் போது சுவாமிகள் அழுதார்.

ஆத்தா”, பெண்கள் சிலரும் ஆண்கள் சிலரும் சத்தமாகவும் தங்களுக்குள் முணு முணுப்பாகவும் சொல்லிக் கொண்டனர்.

நீ சொன்னது சரிதாமுல”, தர்மன் மாறனிடம் சொன்னான். மாறன் சிரித்தான்.

அம்மனோட கட்ட அவுத்து விடலன்னா, ஊருக்குள்ள நெறைய உயிர் பலிகள் நடக்கும்", சுவாமிகள் சொல்ல,

இது சரியாக என்ன செய்யனும் சாமி", மதிவாணன் கேட்டார்.

ஒரு மகா யாகம் செய்யணும்",

செஞ்சிரலாம் சாமி",

ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகும்”. சுவாமிகள் சொன்னார்கள்.

என்ன சாமி ஆகும்? எவ்வளவு செலவானாலும் செஞ்சிரலாம்”, மதிவாணன் சொன்னார்.

என்னோட சேத்து நாலு பேரு யாகத்துக்கு வருவா. அவங்களுக்கெல்லாருக்கும் சேர்த்து, அம்பதாயிரம் பணமும், புது துணியும், குடுத்துருங்கோ. யாகம் முடிஞ்சதும் சாமிய பிரதிஷ்டை பண்ணி, கண்ணு தொறக்க, ஒரு தங்க ஊசி வாங்கி கொடுத்துருங்கோ. சுவாமி கண் தெறந்த பெறகு அந்த ஊசிய கோயில்ல வச்சிண்டுருக்கப்டாது. அந்த ஊசிய தெய்வ பணிவிடையிலேயே வாழ்ந்துட்டுருக்குறவாளுக்கு தானமா குடுத்துரணும். யாகத்துக்கு தேவையான பொருளெல்லாம் லிஸ்ட் போட்டு குடுத்துர்றேன், வாங்கிருங்கோ. யாகத்துக்கான வேலையெல்லாம் சுப்ரமணியன் பார்த்துப்பான்”, என்று அருகில் நின்ற மாரியம்மன் சுவாமி கோயிலில் பூசாரியை கை காட்டி, சொல்லி முடிக்க,

சிரித்த மாறன், கடலை பொதிந்த காகிதத்தை சுருட்டி வீசி விட்டு எழுந்தான்.

லேய், எங்கல போற?. எதையாது பேசி வில்லங்கத்த கூட்டிராதல”, மாறனின் கைப்பிடித்து சொன்னான் தர்மன்.

வுடுல”, சொல்லி விட்டு கூட்டத்தின் முன்னால் வந்த மாறன்,

எங்க ஊரு அம்மா ஒண்ணும் அம்புட்டு சோதா இல்ல. அவனும் இவனும் கட்டிப்போட்டுட்டு போக!!”, சத்தமாக சொன்னான்.

ஆமாங்க், இந்த சாமியாரு சொல்லுகத நாங்க நம்ப மாட்டோம்', கூட்டத்துக்குள் இன்னொருவர் சொன்னார்.

மதிவாணன் பாண்டியனை பார்த்தார்.

ஏல, இவரு ஆரு தெரியுமா? சர்வ சக்தி படைச்ச சாமி. அவுக சொல்லுகத போயி பொய்யின்னு சொல்லுவியால?”, மாறனை பார்த்து அதட்டி சொன்னார் பாண்டியன்.

சர்வ சக்தின்னா, நம்மூரு ஆத்தாள விட சக்தி படைச்சவரா?”, மாறன் கேட்டான்.

பாண்டியன் வாயடைத்து போனார்.

எங்க ஊரு அம்மன் மேலயும், கருப்பசாமி மேலயும் எங்களுக்கு நம்பிக்கையிருக்குது. அப்டியெல்லாம் எந்த பையலும் அவுகள கட்டி போட்டுர முடியாது”, சத்தமாக சொன்னான் மாறன்.

ஆமாங்க, நாலு நாளைக்கு முன்னால எம்புள்ளைக்கு அம்மா போட்டு முடியாம போச்சு. ஆத்தா கோயில்லதே புள்ளைய கொண்டு போயி போட்டேன். புள்ள இப்போ சுகமாயிருக்கா. அப்படிப்பட்ட ஆத்தா இல்லன்னு சொன்னா, நா எப்புடிங்க நம்புவேன். ஆத்தா இருக்கா, அவள எந்த கொம்பாதி கொம்பனும் கட்டிப்போட முடியாதுங்க”, ஒரு பெண், முன்னால் வந்து சொன்னாள்.

மதிவாணனுக்கு மாறன் மீது கோபம் ஏறியது. அடக்கி கொண்டார்.

ஆமாங்க, போன மாசம், கருப்பசாமிக்கு கெட நேந்து விட்டேங்க. எம்மொவளுக்கு கல்யாணம் கூடி வந்துருக்கு. கருப்பனுக்கு பலமில்லன்னா இதெல்லாம் நடக்குங்களா?”, ஒரு பெரியவர் சொன்னார்.

இவ்வாறாக பலரும் தங்களுக்கு தெய்வத்தின் மீதுள்ள நம்பிக்கையை சான்றாக எடுத்து வைத்தனர்.

விலையுயர்ந்த சரிகை துண்டை உதறி விட்டு எழுந்தார், விலையுயர்ந்த சுவாமிகள்.

அவரை எல்லோரும் பார்த்தனர்.

என்னை அவமானப்படுத்தத்தான் இங்க கூப்புட்டீங்களா?”, சுவாமிகள் மதிவாணனை பார்த்து கேட்க,

நீ சொன்னீயேன்னு தா இவர வரவழைச்சேன். இதுதா எங்களுக்கு குடுக்குற மரியாதையா மதிவாணா?”, மாரியம்மன் கோயில் பூசாரி சுப்பிமணியும் கோபம் கொண்டார்.

கோவப்படாதீக சாமி, உக்காருங்க”, மதிவாணன் இரு சாமிகளையும் சமாதானம் செய்ய முயன்றான்.

அய்யா, ஒங்கள அவமானப்படுத்துறது எங்க நோக்கமில்லீங்க. எங்க ஊரு அம்மன் மேலயும், கருப்பன் மேலயும் எங்களுக்கு நம்பிக்கையிருக்குது. அவுகளுக்கு எப்டி பூசை பண்ணணும், யாரு பூசை பண்ணணும்ங்குறத நாங்க பாத்துக்குறோம். நீங்க தேதிய குறிக்குறதோட நிறுத்திக்கோங்க”, மாறன் சொல்ல,

யார பாத்து என்ன பேச்சுல பேசுற? மெதப்பு ஏறிப்போச்சா? ஒன்னையெல்லா ஊர்க்கூட்டத்துக்க சேத்ததே தப்புல. யாரை எங்கிட்டு வைக்கணுமோ அங்கிட்டு வைக்கணும்”, ராஜவேலு கோபமாக பேசினார்.

எங்கிட்டு வைக்கணுமோன்னா? என்னயா எங்களுகள மட்டந்தட்டி பேசுறீகளா?”, மாறனுடன் நின்ற ஒருவன் கேட்டான்.

மதிவாணன் ராஜவேலுவை முறைத்தார்.

ஆமாலே, ஒங்களையெல்லாம் பார்த்தா சாமிக்கே அழுக்கு ஒட்டிக்கிரும். சாமி காரியம் பேச ஒங்கள சேத்ததே குத்தந்தே”, மதிவாணனுக்கு பின்னால் நின்றவர்களிடம் ஒருவன் சொன்னான்.

ஹேய், ஹேஏஏ”, என்று கூட்டத்திற்குள் சத்தம் எழும்ப,

ஏலே,நெறுத்துங்கலே, நெறுத்துங்கலே,.... கூறு கெட்ட பையலுகளா”, என்ற படி, தன் மேல் துண்டால் இளந்தாரி வாலிபர்களை அடித்துக் கொண்டே சொன்னார் டீக்கடை கருப்பசாமி.கூட்டம் சற்று சாந்தமானது.

இந்தா..., நேத்து வெள்ளன, ஒண்ணுக்கு ஊத்த தெரியாம மூக்கு ஒழுக்கிட்டு திரிஞ்ச பையல்லாம் சாதி பேசுறீகளா? சாமிக்கு கொடை நடத்த கூடுனா சாமிய பத்தி பேசுங்கல, சாதிய பத்தி என்னல பேச்சு?”, கருப்ப சாமி சத்தமாக சொல்ல, சுவாமிகள் இருவரும் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

எழுந்து நின்றது கருப்பசாமி அல்லவா!? மதிவாணனும் பாண்டியனும் கூட கலங்கி தான் போயினர்.

கூட்டம் மயான அமைதி கொண்டது.

எவமுல அது சாதிய சொல்லி, ஒரு உசுர மட்டந்தட்டி பேசுறது? முன்னால வால”, மதிவாணன் சொல்ல, அவருடன் நின்றவர்கள் அமைதியாயினர்.

நம்மூர்ல எதுல சாதி? எல்லாம் ஓடப்பொறந்த புள்ளைகதே. மாறன் ஆறுல. நம்ம பைய. அவனுக்கும் ஊரு நல்லது கெட்டதுல பேச முழு உரிமையிருக்கு. இப்போ என்ன?! சாமி சொன்ன பிரசன்னம் மேல இவைகளுக்கு நம்பிக்கை வர்ல. எப்போ நம்பிக்கை வருதோ அப்போ, சாமி சொன்ன பூசைய நடத்திட்டா போச்சு”, சொன்னார் மதிவாணன்.

மாறனும் கருப்பசாமியும் தனக்குள் சிரித்துக் கொண்டனர்.

நீங்கதே ஊர்லயே வயசுலயும் அனுபவத்துலயும் பெரியவுக கருப்பசாமியண்ணே. நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க தேதிலயே கோயில் கொடையை வச்சிக்கிருவோம்”, மதிவாணன் சொல்ல,

இதுல நானென்ன சொல்றது மதிவாணா? காலங்காலமா சித்ரா பௌர்ணமி அன்னைக்கு கருப்பன் கொடைய நடத்துறதுதே வழக்கம். அப்டியே செஞ்சிபோடுவோம்”, கருப்பசாமி சொல்ல, கூட்டத்தில் எவருக்கும் மறுத்து பேசவோ, எதிர்த்து பேசவோ திராணி இல்லை.

சாமி குறிச்சி குடுத்த தேதியையே கருப்பசாமியண்ணன் ஒத்துக்கிட்டாக. வார சித்திரை மாசம் 22ஆந்தேதி, அதாவது,.... இங்கிலிஷ்க்கு மே மாசம் அஞ்சாந்தேதி நம்மூரு கருப்பனுக்கு கொடையப்பா. அன்னைக்கு ராத்திரி ஏழூர் வரிக்காரவுக கொண்டு வார கெடவ பலி குடுத்து சாமி வேட்டை நடக்குமப்பா”, சொன்னார் மதிவாணன்.

ஆடல் பாடல், கலை நிகழ்ச்சி பத்தி, நம்மூரு எளந்தாரி பையலுக கூடி பேசி முடிவு பண்ணி சொல்லுங்கப்பா”, என்றார் வயதான பெரியவர் ஒருவர்.

கூட்டம் சலசலப்பான பேச்சுடன் கலைந்தது.

மதிவாணன் பாண்டியனை கண்காட்ட, பாண்டியன் மதிவாணன் அருகில் வந்தார்.

இந்த மாறன் பைய ரொம்ப துள்ளிட்டுருக்கானே!”, மிக மெலிதான குரலில் மதிவாணன் சொல்ல,

நானும் கவனிச்சிட்டுதே இருக்கேன் மச்சான். அவன் அப்பங்கிட்ட பேசி பாப்போம். முடியட்டி”,

முடியாட்டி முடிச்சிரணும் மச்சான், வெச வித்து மரமாயிட்டா சாய்க்கிறதுக்கு சாங்கியம் பாத்துட்டுருக்கணும். நேரமில்ல, நெறைய சோலி கெடக்கு”, மதிவாணன் சொன்னார்.

நாம்பாத்துக்குறேன் மச்சான்”, பாண்டியன் சொல்ல, மதிவாணன் தனது விலையுயர்ந்த காரில் ஏறினார். ராஜவேலுவும் உடன் ஏறிக் கொண்டார். நவீன் காரின் முன்னுரையில் தோற்றி கொண்டான்.



எல்லோரும் சென்ற பின் அவ்விடம் அமைதியாக இருந்தது.

பாண்டியன் சரவணனை கண்காட்ட சரவணன் அருகில் வந்தான்.

வர்ற சித்ரா பவுர்ணமி அன்னைக்கு ராத்திரி, கருப்பன் வேட்டைக்கு போவும் போது, ஊரே கருப்பசாமி கோயில்லதே இருக்கும். அன்னைக்குதே அந்த புள்ளைய முடிக்கணும்", பாண்டியன் மெலிதான குரலில் சொன்னார்.

யாரண்ணே?",

ஏலே கூறு கெட்ட பையலே!! சந்தியாவல", என்றார் பாண்டியன்.

முடிச்சிரலாண்ணே", உற்சாகமான குரலில் சொன்னான் சரவணன்.




அரசாங்க மதுபானக் கடையில் போதையை விலைக்கு வாங்குபவர்கள் சொகுசாக அமர்ந்து நிதானமாக, போதை ஏற்றிக் கொள்ளப்பட்ட பார் அது.

வர்ற மே மாசம் ஆறாந்தேதி VR கம்பனிக்கு டெண்டர் குடுக்கணும் சார்", வாட்ச்மேன் உடையில் இருந்த அவன் சொல்ல, கோபால் மதுக்கோப்பையை மேசை மீது வைத்தான்.

அப்போ, அஞ்சாந்தேதி தனசேகர் டெண்டர் ரெடி பண்ண ஓவர் டைம் வொர்க் பண்ணுவான். வழக்கம் போல, சுஹாசினியையும் சந்தியாவையும் தான் உதவிக்கு வச்சிருப்பான். அன்னைக்குதாமுல அந்த சந்தியாவும், தனசேகரும் ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடக்க போற கடைசி நாள். ஆறாந்தேதி விடியும் போது, அவைங்க ரெண்டு பேரும் ஊருக்கு முன்னால அசிங்கப்பட்டு நிப்பாங்க. நிக்க வைப்பேன்", சொன்ன கோபால் ஒரு கால் லிட்டர் மதுவை வாய்க்குள் ஊற்றினான். பாட்டிலை பட்டென்று மேசை மீது வைத்தவன்,

ஆஃபீஸ் ஸ்டாஃப்சும், ஊரு சனமும் அந்த சந்தியாவை வேசின்னு சொல்லும். சொல்ல வைப்பேன். எம்பொண்டாட்டிக்கு வேலைய குடுத்து, என்னய அவளுக்கு எடுபிடியாக்கி விட்டானே, அந்த தனசேகரன்,.... அவன்தா அந்த சந்த்யாவோட ஃபர்ஸ்ட் கஸ்டமர்", சொல்லி சிரித்தான் கோபால்.

வாட்ச் மேன் உடையில் இருவரது முகத்திலும் பயம் தெரிந்தது.

என்ன சார் சொல்றீக? கேக்கவே கொல நடுங்குது", என்றான் ஒருவன்.

என்னல பயப்படுறியா?",

அதில்லீங்க சார், நான் புள்ளைக்குட்டிக்காரன்", ஒரு வாட்ச் மேன் சொல்ல,

எந்த புள்ளைக்குட்டி?! உன் வப்பாட்டிக்கு பொறந்துருக்கே அதுவா? ஓ பொஞ்சாதிக்கு தெரியுமா? ஒனக்கு புள்ளைக்குட்டி பொறந்துருக்குற விசயம்?", கேட்டு சிரித்தான் கோபால். எச்சில் விழுங்கினான் அவன்.

போன மாசம், ஆஃபீஸ்ல நாப்பதாயிரம் ரூவா காணாம போச்சே, ஞாவகமிருக்கா?! அதிய எடுத்தது யாரென்னன்னு சொல்லட்டுமால?", கேட்டான் கோபால்.

வேணாம் சார், நீங்க என்ன சொன்னாலும், அத நாங்க செய்றோம்", என்று சொன்னான் வாட்ச்மேன்களில் ஒருவன். அதற்கு ஒத்திசைத்து தலையசைத்தான் இன்னொருவன்.

கோபால் சிரித்தான்.




கார் பயணத்தில் இருந்த ராஜவேலு தனக்கு அருகில் அமர்ந்திருந்த மதிவாணனிடம் சொன்னார்,

இப்போ பாத்துருக்குற மாப்ள ஊத்துக்குழி ஜமீன் குடும்பம் மச்சான். நமக்கேத்த சம்மந்தம்", என்று.

வர்ற சித்ரா பவுர்ணமிக்குள்ளார நம்ம சுவாதிக்கு நிச்சயத்த முடிச்சிபோடணும் ராஜவேலு", சொன்னார் மதிவாணன்.

ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த நவீனின் முகம் வாடியது.





உள்ளங்களில் கிளர்ந்தெழும்
உணர்வுகளில்
உருவாகும் முடிவுகளில்
உயிர் பெறும் கதைகளில்.....


தொடரும்......




வேசி :

பரத்தையர்கள் வாழ்ந்த பகுதிகளிலும் சாதி பிரிவுகள் இருந்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதில் உயர் குடியில் பிறந்த பரத்தை தாசி என்றும், சேரியில் பிறந்த பரத்தை வேசி என்றும் அழைக்கப்பட்டாள். [சான்று:பரத்தையர் மாலை புத்தகம். பதிப்பாளர் மு.தேவராஜ், பக்கம் Viii]

ஒரு மனித ஆணுக்கு பல பெண் இணைகளும் ஒரு மனித பெண்ணுக்கு பல ஆண் இணைகளும் என்று வாழ்ந்த ஆதி தாய் வழி சமூகம் பண்பட்டு ஒழுக்கம் கண்ட பின், வேசி என்ற வார்த்தை கெட்ட வார்த்தை ஆனது. ஆனால் வேசியுடன் இணை சேரும் ஆணை குறிப்பிடும் கெட்ட வார்த்தை தமிழில் இல்லை.



சக்தி மீனா....
 
Last edited:
  • Like
Reactions: Maheswari