• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷24

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
அத்தியாயம் 24

ஒம்புருஷன் பண்ற திருட்டு வேலை எனக்கு தெரியக்கூடாதுன்னு தா வாசல்ல காவலுக்கு இருந்தியா?. ஏம்மா இப்டி இருக்க?”, செழியன் தாயிடம் கேட்க, எச்சில் விழுங்கிய அபிராமியின் கண்களில் நீர் தேங்கியது.

செழியனின் குரல் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்தார் பாண்டியன். உடன் வந்தான் சரவணன். செழியன் இருவரையும் தாண்டி அறைக்குள் எட்டிப் பார்த்தான். அவனது மடிக்கணிணி திறந்திருந்தது. அலமாரியில் துணிகள் கலைந்திருந்தது. தலையணை, படுக்கை விரிப்பு கலைந்திருந்தது.

திரும்பிய செழியன் பாண்டியனை பார்த்த படி நிற்க, அவர் அபிராமியை முறைத்து பார்த்தார். அவள் பேசாமல் நின்றாள்.

அண்ணே”, சரவணன் பாண்டியனை அழைத்து செழியனை கண்காட்டினான்.

பாண்டியன் செழியனை பார்த்தார். செழியன் முறைத்த படி நின்றிருந்தான்.

என்ன தேடுறீக?”, செழியன் கேட்டான்.

அண்ணே அவுக செயின கழத்தி எங்குட்டோ வச்சுபோட்டாக. அதேன் உன் ரூம்ல இருக்குதான்னு,.....”, சரவணன் வார்த்தையை இழுத்தபடி தயங்கி நிற்க,

செயினு, ஒங்கண்ணன், என் ரூம்ல,... அதிய நா நம்போணும்?”, சொல்லி முறைத்தான் செழியன்.

ஏன்? என் புள்ள ரூமுக்குள்ளார போவ எனக்கு உரிமையில்லியாக்கு?”, குரல் உயர்த்தி தொடங்கி சுருதி குறைத்து கேட்டு முடித்தார் பாண்டியன்.

ஆத்தீ, அது என் ரூமுன்னு ஆரு சொன்னாக?!. அது ஒங்க ரூமு, இது ஒங்க வீடு. ஒங்க சொந்த சம்பாத்தியத்துல,......... கொலை செஞ்சு சம்பாதிச்ச சம்பாத்தியத்துல கட்டுன ரூமு, வீடு. இதுல நா உரிமை கொண்டாட முடியுமாக்கு?!”, செழியன் குரல் உயர்த்தி பேச,

ஏல ஆர பாத்து என்னல பேசுற?”, அபிராமி தவித்தாள்.

ஏன்? இவுக கொலை செய்யலியாக்கு? இல்லாததையா சொல்லிபோட்டேன்?!”, கேட்டவன் தாயை பார்த்து பின்,

குத்தம் செஞ்சதாலதான, அவுகளுக்கு எதிரா ஆதாரம் ஏதும் இருக்குமான்னு நா இல்லாத நேரத்துல என் ரூம கொடையிறாக”, எகத்தாளமான குரலில் சொன்னான்.

எச்சில் விழுங்கினாலும், தன் செய்கைக்கான காரணம் பற்றிய மகனின் அனுமானம் தவறென்பதில்
தனக்குள் ஆஸ்வாசப்பட்டுக் கொண்டார் பாண்டியன். சரவணனும் பாண்டியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஒங்களுக்கு எதிரா ஆதாரம் தேடணும்னு நா நெனைக்கல. அது என் வேலையுமில்ல. ஒங்க மூச்சுக்காத்தே படாத தூரத்துக்கு போயிரணும்னு நெனைச்சிட்ருக்கேன்”, செழியனின் சொல்லில் பாண்டியன் உடைந்து போவார் என்று செழியன் அறிவான். அறிந்துதான் சொன்னான். உடைந்து தான் போனார். காட்டிக்கொள்ளவில்லை.

என்னல பேசுற? எவனோ என்னவோ பேசுனான்னு எங்கள வுட்டு போயிருவியா நீயி?”, அபிராமி செழியனை தன் பக்கம் திருப்பி, கேட்டு, அழுதாள்.

ஒன்னய வுட்டு போவேன்னு எப்போம்மா சொன்னேன்? இந்தாள வுட்டுதான போவேன்னு சொன்னேன்”, அவன் சொல்லி முடிக்கும் போது அபிராமி அவனை அறைந்திருந்தாள்.

என்னல நெனைச்சிட்டுருக்க? நீ கூப்டா நா இவுகள வுட்டு வந்துருவேன்னு நெனைச்சிட்டியா? உசுரு போனாலும் இவுகள விட்டு வர மாட்டேன்”, கண்களை கசக்கிய படி அழுது கொண்டே சொன்னாள் அபிராமி. தாயருகே வந்தான் செழியன்.

இவுக கையெல்லா ரத்தக்கறையோட நிக்றதுக்கு காரணமே நீதாம்மா”, சொன்னான். அதிர்ந்து நிமிர்ந்தாள்.

பாண்டியனும் அதிர்ந்து தான் போனார்.

எனக்கு பொறவு இன்னொரு பிரசவ வலிய ஒன்னால தாங்க முடியாதுன்னுதே, இன்னொரு புள்ள பெத்துக்கணும்னே அப்பா நெனைக்கல”, செழியன் சொல்ல, அபிராமி உறைந்து பார்த்தாள். சரவணனும் பாண்டியனும் அசையவே இல்லை.

இது கூட நீ சொல்லிதாம்மா தெரியும். ஒம்மேல இம்புட்டு பாசமா இருக்றவக, நீ சொன்னா கேட்டுக்குர மாட்டாகளா? இந்த பாவத்தொழில வுட்டுர சொல்லி நீ ஏன் சொல்லல?”, செழியன் கேட்க மூவரும் மலை போல் அசையாமல் நின்றனர்.

என்னால என் மனசாட்சிய சாகடிச்சிட்டு வாழ முடியாது. இப்போ கூட ஒண்ணுமில்ல, இவுகள அந்த மதிவாணன வுட்டு வர சொல்லு. எல்லாத்தையும் வுட்டுர சொல்லு”, செழியன் சொல்ல,

எதல வுடணும்?”, சத்தமாகவே கேட்டார் பாண்டியன்.

பணத்துக்காக மனுச உசுர எடுக்குற பாழா போன அரசியல வுட்டு வாங்க”,

அரசியலா? இது அரசியல் இல்லல. பாசம். என் எனத்து மேல எனக்கிருக்குற பாசம். எம்மச்சான் மேல எனக்கிருக்ற விஸ்வாசம். நாஞ்செய்றது கொலை இல்லல, வதம். என் எனத்து தர்மத்த காப்பாத்த நா செய்ற வதம்”,

மசுரு”, சொன்னான் செழியன். கோபம் மேல் மூச்சு கீழ் மூச்சாக ஏறி இறங்க நின்றிருந்தார் பாண்டியன்.

இது பாசமில்ல. வெறி, ரத்த வெறி, இன வெறி, சாதி வெறி, பச்சையா சொன்னா சாதி தீவிரவாதம்”, சொன்னான் செழியன். சட்டென்று மகனின் சட்டைக் காளரை பற்றிப் பிடித்தார் பாண்டியன்.

ஆத்தீ”, நெஞ்சில் கை வைத்தாள் அபிராமி. சரவணனும் பதறினான்.

தீவிரவாதமா? இந்த ஊர தாண்டி வெளிய போயி, நீ எம்புள்ளங்குற அடையாளமில்லாம ஒரு நாள் ஒன்னால வாழ முடியுமால. அடுத்த மதத்துக் காரனோ, அடுத்த சாதிக்காரனோ, அவன் வீட்டுத் திண்ணையில ஒதுங்க ஒரு நாள் ஒரு பொழுது ஒனக்கு எடந்தருவானால?”, கேட்ட பாண்டியன் இன்னும் மகனின் சட்டையை விடுவிக்கவில்லை. செழியன் கண்ணிமைக்காமல் தந்தையை பார்த்தான்.

எல்லாரும் அவனவன் மதத்து மேல, அவனவன் சாதி மேல தீவிரமாத்தே இருக்கான். நா என் சாதியில தீவிரமாயிருக்கேன். இதுல என்னல தப்பிருக்கு?”, குரல் உயர்த்தி சொன்னவரின் கைகளை தன் சட்டையிலிருந்து பிரித்தான் செழியன்.

அவனவன் அவஅவனுக்கு விருப்பமான சாதி வழக்கத்த, மதப்பழக்கத்த பின்பற்றி நடக்கலாம். அது தப்பில்ல. சொல்லப்போனா, அது தனி மனித உரிமை. ஆனா, ஒருத்தன் ஒரு மதத்துல இருந்துட்டு, இன்னொரு மதத்துல இருக்குற ஒருத்தன் மேல, இல்ல ஒருத்தி மேல பாசம் வச்சதுக்காக, அவனை கொல்றது காட்டுமிராண்டித்தனம். அது ரத்த வெறிதே, தீவிரவாதந்தே”, காற்றில் அடித்து பேசினான் செழியன்.

கோபத்தில் கண்கள் செந்தணலென சிவக்க நின்றிருந்தார் பாண்டியன்.

ஒங்க சாதி புள்ளைய ஒருத்தன் லவ் பண்ணா, அவன கொன்னுபோடுவீகல்ல!! நா வேத்து சாதி புள்ளைய லவ் பண்ணா என்னையும் கொன்னு போடுவீகளா?”, செழியன் ஆவேசமாக கேட்க, பற்களை கடித்தபடி நின்றிருந்தார் பாண்டியன்.

என்னால பேசிக்கிருக்க?", கேட்டு மகனின் கன்னத்தில் அறைந்தாள் அபிராமி. செழியன் சிரித்தான்.

சில நொடிகள் அமைதியாக பார்த்து விட்டு, சலிப்படைந்தவனாக தனது அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டான் செழியன்.

என்னடி வேடிக்கை பாத்துட்டு நின்னுட்டுருக்குற? போயி பையல சமாதானப்படுத்தி சோறு போடு போ”, அபிராமியிடம் சொன்னார் பாண்டியன்.

அவரை முறைத்து விட்டு பேச வழியின்றி சென்றாள் அபிராமி.

லேய் வால”, சொல்லி பாண்டியன் முன்னால் நடக்க, சரவணன் பின்னால் நடந்தான்.

வீட்டின் வெளியே வந்தார்கள்.

பாண்டியன் தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த புகைப்படத்தை வெளியே எடுத்தார். புகைப்படத்தை பார்த்து சரவணன் வியந்தான்.

பள்ளிக்கூட சீருடையுடன் செழியனும் சந்தியாவும் அருகருகே அசையாமல் நின்றிருந்தனர் புகைப்படத்தில்..

இதெப்டிண்ணே கெடைச்சுது? நா ரூம் பூரா அலசி பாத்தேன். எனக்கு கெடைக்கல”, சரவணன் சொன்னான்.

என் சீமந்த புத்திரன் படுத்திருக்குற, கட்டில்ல கெடக்குற மெத்தைக்கு அடியில இருந்துச்சுல”, பாண்டியன் சொன்னார்.

மெத்தைக்கு அடியிலன்னா,...”, சரவணன் இழுத்தான்.

ஞாபகப்படுத்தி பாத்துக்குறதுக்காக வச்சிருந்தா, பீரோவுல வச்சிருந்துருப்பான். அவ ஞாபகத்தோடயே சுத்துறதாலதாமுல மெத்தைக்கடியில வச்சிருக்கான். முல்லையாத்தங்கரையில அந்த பைய பாத்தது இவுகளத்தே”, கோபத்தால் விழிகள் சிவந்து போக சொன்னார் பாண்டியன்.

இப்போ என்னண்ணே பண்றது? மதிவாணன் அய்யாவுக்கு தெரிஞ்சா விசயம் வேற மாதிரி ஆயி போவும்”, சரவணன் பதட்டத்தோடு சொன்னான்.

அவளத்தே கட்டிக்குவேன்னு எம்புள்ள சொல்றதுக்கு முன்னாடி, அவள பொணமாக்கிறணும்ல”, பாண்டியன் சொன்னார்.

ம்ம்”, மேலும் கீழுமாக இறுக்கத்தோடும் வெறி நிறைந்த கண்களோடும் தலையசைத்தான் சரவணன்.






நீ சொன்னியேன்னு நானும் ரெண்டு வருசமா பொறுத்துட்டேன். நீ சந்தியாகிட்ட ஓ மனசுல இருக்குறத சொல்ற மாதிரியில்ல. இனியும் பொறுக்க முடியாது தனா”, காலை உணவை ருசித்து கொண்டிருந்த தனாவிடம் அவனது தாய் செல்லி சொன்னாள்.

கரெக்டா சொன்ன!”, என்றார் வெள்ளையன்.

அப்பா நீங்களுமா?”, கேட்டான் தனசேகர்.

ஆமாய்யா, இப்டியே வுட்டுத்தே கண்ட பையல்லா, நம்மூட்டு புள்ளைய பத்தி ஏதேதோ பேசுற மாதிரியாயி போச்சு. இனியும் காத்துட்டு இருக்றதுல அர்த்தமில்ல”, வெள்ளையன் சொல்ல,

தனசேகரின் பார்வை தட்டில் இருந்த உணவின் மீதிருந்தது.

வெள்ளையனும் செல்லியும் ஒருவரை ஒருவர் பார்த்து உதடு பிதுக்கி கொண்டனர்.

அவ மனசுல என்னருக்குதுன்னு நானே நேர்ல கேட்டு தெரிஞ்சிக்கணும்னு சொன்ன! நாங்களும் சரின்னோம். ரெண்டு வருசம் ஓடி போயிருச்சு. ஒனக்கு அவகிட்ட பேச துணிச்சல் வர்ற மாதிரி தெரீல”, செல்லி பேசிக் கொண்டிருக்கும் போதே,

துணிச்சலில்லாம இல்லம்மா”, குறுக்கிட்டான் தனசேகர்.

ரெண்டு வருசமா நானும் அவள நெருங்க ட்ரை பண்ணிட்டுத்தா இருக்குறேன். ஆனா, அவள என்னால புரிஞ்சிக்க முடில. அவ மனச படிக்க முடில”,

பொம்பள புள்ளைங்க அழுத்தமாத்தாய்யா இருப்பாக”, செல்லி சொன்னாள்.

அப்டியெல்லா இல்லம்மா. இதுலயென்ன ஆம்பள பொம்பள வித்தியாசம். மனசு லேசா இருந்தா ஆராயிருந்தாலும் சந்தோசமாயிருப்பாக. மனசு கனமா இருந்தா இறுக்கமா இருப்பாக. அம்புட்டுத்தே”, தனா சொன்னான்.

புரீலய்ய, என்ன சொல்ல வர்ற? சந்த்யா மனசுக்கு என்ன கவலையிருக்க போவுது?”, வெள்ளையன் கேட்டார்.

சொல்ல தெரீலப்பா. அவுக வீட்லருக்குற கடன் பிரச்சினையாலத்தா இப்டியிருக்கான்னு ஆரம்பத்துல நெனைச்சிட்டுருந்தேன். ஆனா,....”,

ஆனா என்ன சாமி?”, செல்லி கேட்டாள்.

என்னதா கடன் பிரச்கினை இருந்தாலும், ரெண்டு வருசத்துல ஒரு ரெண்டு நிமிசங்கூடவா சிரிக்க முடியாது?”, தனா கேட்டான்.

அவளுக்குள்ள எதோ ஒரு இறுக்கமிருக்குது. அந்த இறுக்கத்த மீறி என்னால அவகிட்ட பேச முடிலம்மா”, தனா சொன்னான்.

அதாய்யா நாங்க பேசுறோங்குறோம்”, வெள்ளையன் சொன்னார்.

தனா சிந்தித்தான்.

என்னயா சொல்ற? நாங்க சந்த்யா வீட்ல போயி பேசட்டுமா?”, செல்லி கேட்க,

ம்ம்”, பெருமூச்சு விட்டவனாக சரியென்று தலையசைத்தான் தனா.




காட்டன் புடவை ஒன்று, முகம் காட்டும் கண்ணாடிக்கு சந்த்யாவை அழகாக காட்டியது. கண்ணாடிக்கு அருகே இருந்த மேசை மீதிருந்த ஸ்டிக்கர் பொட்டினை எடுத்து நெற்றியில் ஒட்டிக் கொண்டாள்.

சீக்ரம் வாடி, தோசை ஆறிர போவுது”, காவேரி குரல் கொடுத்தாள்.

சாப்பிட்டு கை கழுவி விட்டு வீட்டுக்குள் வந்தாள் சந்தியா.

அப்பாவ இன்னைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போணும் சந்தியா”, காவேரி சொல்ல, ஒரு நொடி நின்று சிந்தித்தாள் சந்தியா.

ஏண்டி புள்ளைய போட்டு கொடையிற?”, மனைவியிடம் சொன்ன கதிரேசன்,

ஒண்ணும் அவசரமில்லடா. மாத்திரை இன்னும் மீதமிருக்குது. நாலஞ்சு நாள் போகட்டும்”, என்று மகளிடம் சொன்னார்.

ஆஃபீஸ்ல சம்பளம் வர ரெண்டு வாரமிருக்கே?”, தனக்குள் சொல்லிக் கொண்ட சந்தியா,

சரிப்பா. நா கூட்டிட்டு போறேன்”, என்றாள்.

சரிம்மா, நீ பத்ரமா போயிட்டு வா”, கதிரேசன் சொல்ல தன்னுடைய கைப்பையை தோளில் மாட்டிக் கொண்டாள் சந்தியா.

ஏ, நில்றி போயிராத”, என்ற காவேரி சமையல் அறைக்குள் ஓடினாள். சில நொடிகளில் திரும்பி வந்த காவேரியின் கையில் நேற்று செழியன் கொடுத்த மல்லிப்பூ, குளிரேறி இருந்தது.

திரும்பு”,

ஏம்மா?”, தெரிந்தே எரிச்சலோடு கேட்டாள் சந்தியா.

நேத்து நீ வாங்கிட்டு வந்த பூவ ஃப்ரிஜ்ல வச்சிருந்தேன்டி. மறந்தே போயிட்டேன்”, என்றபடியே மகளை திருப்பி, அவளது தலையில் பூவை சூட்டினாள் காவேரி.

வேண்டா வெறுப்பாக முகத்தில் உணர்வை தாங்கியவள் வீட்டு வாசலுக்கு, சிரித்த முகத்தோடு வந்த கல்யாணியை பார்த்து முறைத்தாள்.

வா கல்யாணி, ரங்கன் தோட்டத்துக்கு போயிட்டானா?", காவேரி கேட்டாள்.

ஆமா சித்தி, எங்க வூட்டுக்கு கரன்ட் பில்லு கட்டப்போறேன். அப்படியே ஓ வூட்டு பில்லையும் கட்டிபோட்டு வந்துர்றேன். அந்த இ.பி கார்ட எடு", என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள் கல்யாணி.

ஆமாண்டி, நாளைக்கு கடைசி தேதியில்ல", சொல்லிக் கொண்டே உள்ளே சென்றாள் காவேரி.

சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த கதிரேசன்,

உக்காரு கல்யாணி, அவ கார்ட தேடி எடுத்துட்டு வர அரை மணி நேரமாது ஆவும்", என்று சொல்ல கல்யாணி நாற்காலியில் உட்கார்ந்தாள்.

எனக்கு லேட்டாச்சுப்பா, நா கெளம்புறேன்", சொல்லி சந்தியா புறப்பட,

புது புடவை கட்டி, பூ வச்சி அசத்தலா இருக்ற சந்தியா", சொன்னாள் கல்யாணி.

அவளை முறைத்தாள் சந்தியா.

ம்ம், பூ வாசமா இருக்குடி. எங்க வாங்குன?", பூ கூந்தலேறிய விபரம் அறிந்தும் அறியாதவள் போல் கிண்டலாக கேட்டாள் கல்யாணி.

ம்ம், பூக்கடையிலதே, வேறெங்க? பேக்கரிலயா வாங்குவாக?", கேட்டு விட்டு பதில் பேச்சை எதிர்பார்க்காமல் ஸ்கூட்டியை கிளப்பி சென்று விட்டாள் சந்தியா. சிரித்தாள் கல்யாணி.




தன்னுடைய புத்தகங்களில் சிலவற்றை அடுக்கி, அவற்றை சணல் கயிறு கொண்டு கட்டிக் கொண்டிருந்த தினேஷ்,

வாம்மா காயத்ரி”, என்று வீட்டு வரவேற்பறையில் தாய் லட்சுமியின் சத்தம் கேட்டு, திரும்பி சிரித்து விட்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தான்.

ஆறுக்கு ஆறடி மட்டுமே அளவுள்ள வரவேற்பறையில்,

காயத்ரியின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்ட கமலி,

வெளையாடலாமா?’, என்று கேட்டபடி குழந்தை மோனிகாவின் விளையாட்டு சாமன்களை தரையில் விரித்தாள்.

ஒரு குடம் தண்ணி குடுங்கம்மா. நாளைக்கு ஸ்ண்டே. வீட்லதா இருப்பேன். தண்ணி வந்ததும் புடிச்சு குடுத்துர்றேன்”, குடத்தை லட்சுமியிடம் நீட்டியபடி காயத்ரி கேட்க, புத்தகங்களை கட்டி முடித்த செழியன் சிரித்துக் கொண்டான்.

குடத்தை வாங்கி கொண்ட லட்சுமி,

உக்காரும்மா, எடுத்துட்டு வர்றேன்”, என்றபடி சமையலறைக்குள் சென்றாள். காயத்ரி இரும்பு கட்டிலில் அமர்ந்தாள்.

தினேஷ் கட்டப்பட்ட புத்தகங்களை கொண்டு வந்து வரவேற்பறையில் கிடந்த இரும்புக் கட்டிலின் மீது, காயத்ரியின் அருகே வைத்தான்.

என்ன புக்ஸ் இது? ஏன் பார்சல் பண்ணி வச்சிருக்கீங்க?”, காயத்ரி கேட்டாள்.

இதெல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சி பத்தின புக்ஸ் அண்ட் டாக்கியூமென்ட்ஸ். என் ஃப்ரெண்ட் ஒருத்தி, ஆர்க்கியாலஜி படிக்கிறா. அவளுக்கு அனுப்ப பார்சல் பண்ணி வச்சிருக்கேன்”, தினேஷ் சொல்ல,

ஃப்ரெண்டுக்கா? இந்த புக்ஸ்ஸெல்லாம் நீ எவ்ளோ கஷ்டப்பட்டு கலெக்ட் பண்ணன்னு மறந்துட்டியால? யாருக்கோ ஃப்ரெண்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்ற?”, கமலி அதிர்ச்சியோடு கேட்க, வாலை ஆட்டியபடி ஓடிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் யானையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் குழந்தை மோனி.

ஆமாண்டி, ஆனா இனிமே இது எங்க எனக்கு யூஸாக போகுது? அவ படிக்கட்டும்”, என்றவன் புத்தகங்களை காகிதத்தால் பொதிந்து, செலோடேப் போட்டான்.

அப்போ எல்லாம் முடிஞ்சு போச்சா? உன் ஆர்க்கியாலஜிஸ்ட் ஆகுற ஆம்பிஷன பொதைச்சிட்டியா? இங்கயே செட்டிலாயிரலாம்ன்னு முடிவே பண்ணிட்டியா?”, சற்று கோபமாகவே கேட்டாள் கமலி.

ப்ச், தேவைப்பட்டா வாங்கிக்கலாம். புக்ஸ் தான?”, சொன்னான்.

புக்ஸ்தானவா? இந்த புக்ஸெல்லாம் வாங்க சோறு தண்ணியெல்லாம் மறந்துட்டு ஊர் ஊரா அலைஞ்சதெல்லாம் மறந்து போச்சா?, ஆனா இதெல்லாம் இப்போ மார்க்கெட்ல கெடைக்குமா சொல்லு?”, கமலி கேட்க,

இதெல்லா அவ்ளோ காஸ்ட்லி புக்ஸ்ஸா?”, கேட்டாள் காயத்ரி.

ஆமாக்கா, இதெல்லாம் புக் ஷாப்ல கிடைக்காது. ஆன்லைன்லயும் கிடைக்காது. வயசான புரொஃபெசர்ஸ், ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ் இவங்ககிட்டலாம் இருந்து, தேடி தேடி கலேக்ட் பண்ணது”, கமலி சொல்லும் போது யானை பொம்மை சுவற்றில் மோதி நின்றது.

விடுறி, தேவைப்படும் போது, இத வாங்குற ஃப்ரென்ட்கிட்ட கேட்டா, அவ குடுத்துற போறா”, தினேஷ் சொல்லும் போது குழந்தை மோனி நிமிர்ந்து பார்த்தாள்.

ப்பா”, என்றாள். குடத்தில் நீருடன் வந்த லட்சுமி குழந்தையின் சொல் கேட்டு திடுக்கிட்டு நிற்க,

ப்பா, ப்பா”, என்றபடி ஊர்ந்து தினேஷ் காலருகில் வந்தது குழந்தை. கமலி அதிர்ந்து பார்க்க, காயத்ரி உறைந்து போனாள்.

தினேஷின் காலை கட்டிக் கொண்டு, ப்பா, ப்பா”, என்று பொக்கை வாய் திறந்து சிரித்த குழந்தையை கையில் முகம் மலர அள்ளினான் தினேஷ்.

சட்டென்று நினைவு வந்தவளாக ஓடி வந்து குழந்தையை தினேஷ் கையிலிருந்து பிடுங்கி பறித்து கொண்டு வேகமாக வீட்டு வாயில் படியினை தாண்டி வெளியேறினாள் காயத்ரி. குழந்தை சென்ற திசையை பார்த்தான் தினேஷ்.





அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ்


தொடரும்......
 

vinodha mohan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 29, 2023
Messages
29
இன்னும் எத்தனையைத்தான்
பார்த்து நோக வேண்டுமோ இளம்மான்கள்....

இவற்றை சந்திக்க வேண்டிய வயதல்லவே!!!

நிம்மதியும் நியாயமான நேர்மையான வாழ்வை வாழ வேண்டியவர்கள்.‌..
எவர் சதியையும் எதிர்க்கலாம்.....
பெற்றோர் சதி???!!!!

👌👌👌👌👏👏👏👏👏👏❤️❤️❤️❤️
 

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
இன்னும் எத்தனையைத்தான்
பார்த்து நோக வேண்டுமோ இளம்மான்கள்....

இவற்றை சந்திக்க வேண்டிய வயதல்லவே!!!

நிம்மதியும் நியாயமான நேர்மையான வாழ்வை வாழ வேண்டியவர்கள்.‌..
எவர் சதியையும் எதிர்க்கலாம்.....
பெற்றோர் சதி???!!!!

👌👌👌👌👏👏👏👏👏👏❤️❤️❤️❤️
Thank you di vino❤️❤️
 
Top