• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 35

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
d36770b43c7fa64806478f5c9c60ef26.jpg




அத்தியாயம் 35



மாவட்டத்திலேயே அந்த எலும்பு முறிவு மருத்துவமனையில் தான், விபத்தில் அடிபட்டவர்களை எந்த விசாரணையுமின்றி அனுமதி செய்வார்கள். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மதிவாணன். ஊரின் முக்கியஸ்தர்களும் கௌசல்யாவும் அவசர சிகிச்சை பிரிவின் முன்னே கூடி நின்றனர்.



மருத்துவமனையின் வாசலில், ஆண்களும் பெண்களும் கூட்டமாக சாலையை மறித்து அமர்ந்திருந்தார்கள்.



எதிர்க்கட்சி அராஜகம் ஒழிக! காவல் துறையே, குற்றவாளியை கைது செய்!”, போன்ற கோஷங்கள் வலுவாக இருந்தது.



பைக்கை நிறுத்திய, சுவாதி மருத்துவமனைக்குள் வேகமாக ஓடினாள். சுவாதியை பார்த்ததும் கௌசல்யா ஓடி வந்து மகளை கட்டிக் கொண்டு அழுதாள்.



இரண்டடி தொலைவில் நின்ற நவீனை பார்த்தாள் சுவாதி. தாய்க்கு சமாதானம் சொல்லி மருத்துவமனை வரவேற்பறையில் உட்கார வைத்த சுவாதி, நவீனிடம் வந்தாள்.



எப்டி நவீன்? யார் செஞ்சது?”, சுவாதி கேட்க,



அதான்,.. வெளிய கோஷம் போட்டுட்டு இருக்காங்களே! கேக்கல”, நவீன் சொன்னான்.



அது நியூஸ் பேப்பருக்கு நியூஸ் குடுக்குறதுக்காக! உண்மையா என்ன நடந்தது?”,



நவீன் சுவாதியை பார்த்தான்.



மதிவாணன் மாமனுக்கு கொஞ்சம் லேடீஸ் வீக்னெஸ் உண்டு”, நவீன் சொல்ல சுவாதி உடைந்தாள்.



அது,...”, நவீன் தயங்கினான்.



சொல்லு, நவீன் ப்ளீஸ்”, சுவாதி கெஞ்சிக் கேட்டாள்.



காலணிலருக்ற ஒரு பொண்ணு, புருஷனில்லாதவ. அந்த பொண்ணு நம்ம செங்கச்சூளையில வேலை செய்றா. மாமா அந்த பொண்ணுகிட்ட தப்பா,....”, நவீன் தயங்கி நிறுத்தினான்.



சுவாதி தலை குனிந்தாள். விழிகளிலிருந்து கழன்ற துளி நீர் நிலம் நனைத்தது.



அந்த பொண்ணோட பையன், அவஞ்சோட்டு பையலுகள கூட்டிட்டு வந்து, அடிச்சிருக்யான். கைல, கால்ல, தலையிலன்னு இரும்புத் தடியால அடிச்சிருக்கானுக. பொழைச்சாலே பெருசுன்னு டாக்டருக சொல்றாக”, நவீன் சொல்லி முடித்தான்.



ஒரு தனி மனுஷனோட பர்சனல் ப்ரச்சினைய, அரசியல் கொலை முயற்சின்னு மீடியா நியூஸ் போடுது. அங்க, நம்மாளுங்க இதை சாதி பிரச்சினையாக்கி, காலணியில இருக்ற வீடுகளை ஒடைச்சு, அந்த ஆட்களையும் அடிச்சு காயப்படுத்தீருக்கானுக.”, நவீன் சொல்ல சுவாதி அதிர்ச்சியாக பார்த்தாள்.



பாண்டியன் சித்தப்பா குடுத்த வாக்குமூலமும் நியூஸ்ல போயிட்டுருக்கு. இவனுகளுக்கு அதெல்லா மூளையில ஏறல. சாதிதே ஏறியிருக்குது வெறியா! முடியல சுவாதி, எங்கூட பொறந்தவளுகள கரையேத்த இந்த காக்கிச்சட்டை வேணும்னு இம்புட்டு நாளா, இவைங்க பண்ண அக்ரமத்தலாம் பார்த்து பல்ல கடிச்சுட்டு இருந்துட்டேன். இப்போ முடியல”, நவீன் சொன்னான்.



காவல் நிலையத்தின் வாசலில், தாயுடன் பைக்கில் வந்திறங்கினான் செழியன்.



அப்பா எங்க சாமி”, அபிராமி அழுதாள்.



அப்பா முன்னால அழாதம்மா”, செழியனின் சொல் கேட்டு அழுகையை முந்தானைக்குள் மறைத்தாள்.



மணிகண்டன் உட்பட பல பேரை கொன்னது நான் தான்னு வாக்குமூலம் குடுத்துருக்காரு. ஜாமீன்லாம் சான்சே இல்ல சார்",சொல்லி நாற்காலியில் சாய்ந்தார் இன்ஸ்பெக்டர். வழக்கறிஞர் துரையை பார்த்து உதடு பிதுக்கி இடவலமாக தலையசைத்தார்.



ஏனுங்க”, அபிராமியின் குரல் கேட்டு பாண்டியன் எழுந்தார். ஓடி வந்தவள் கணவனை கட்டிக் கொள்ள, அவரின் பார்வை தன் மகனின் மீது படிந்தது. செழியனின் கண்ணீரைக் கண்டவர் சிரித்தார். அந்த கண்ணீர் அவருக்கு புது தெம்பை கொடுத்தது.



ப்பா”,



ஏல, பொம்பள மாதிரி அழுவாதல!! என்னைய என்ன பண்ணிருவானுக? நாந்தான் எல்லாத்தியும் ஒத்துக்கிட்டேனல்ல! மூணு மாசம் ரிமாண்ட்ல வைப்பானுக! பொறவால ஜாமீன பாத்துக்கிரலாம்”, தெம்பாக பேசினார் பாண்டியன்.



பாத்தீகளா? இவருக்கு போயி எரக்கப்பட்டீகளே?!”, இன்ஸ்பெக்டர் துரையிடம் கேட்டார். துரை சிரித்தான்.



அபிராமியை சமாதானப்படுத்த தான் பாண்டியன் சிரமப்பட்டு போனார். மகனை பார்த்தார்.



ஒங்காத்தாளுக்கு நீயும் நானுந்தே ஒலகம். அவள வுட்டுராத சாமி, நீ வுடமாட்ட, தெரியும். ஆனாலும் நானும் சொல்லணுமல்ல?!”, போலீஸ் காரருகில் நின்று சொன்ன பாண்டியன், மகனுக்கு அருகில் நெருங்கி வந்தார்.



ஒன்ட்ற கண்ணீரு, அது கண்ணீரில்லய்யா! இந்த கொலைகார அப்பன் மேல நீ வச்சுருக்ற பாசம். அது குடுக்ற தெம்பு, எந்திமிரு குடுக்ற தெம்ப விட பெருசுலே!”, பாண்டியன் சொல்லி முடிக்கும் போது அவரை அணைத்துக் கொண்டான் செழியன்.



போலீஸ் கார் பாண்டியனை ஏற்றி சென்றது. தாயை அரவணைத்தபடி நின்றான் செழியன்.



போலீஸ் ஜீப் வந்தது. அதிலிருந்து கைதியாக இறங்கினான் கோபால். உடன் இறங்கினார்கள் கிருஷ்ணா மற்றும் வெங்கையா. அதனைத் தொடர்ந்து வந்த காரிலிருந்து இறங்கினான் தனா.



செழியனை பார்த்த கோபால் அதிர்ச்சியாகி தலை குனிந்தான்.



நடல, நின்னு என்னல வேடிக்கை”, சொல்லி கோபாலின் பொடதியில் தட்டி, மூவரையும் இழுத்து சென்றார் கான்ஸ்டபிள்.



துரையும் புரியாமல் பார்க்க,



ஒண்ணுமில்லீங்க், நா இவன வேலைய வுட்டு எடுத்தத மனசுல வச்சிட்டு, நேத்து ராத்திரி எங்க ஆஃபீஸ் புகுந்து என்னை கொலை பண்ண பார்த்தான். அட்டெம்ப்ட் டூ மர்டர்”, தனா சொல்ல செழியனுக்கும் துரைக்கும் அவனது கூற்று புரிந்தது.



கம்பனி பின்னாடி கேட் வழியா, வந்துருக்கான். அதுக்கு அந்த வாட்ச்மேன் ஒடந்த. பின்னாலருக்ற கேட் கேமரால வாட்ச் மேன் தொறந்து வுட்டு, கோபால் உள்ள வந்தது பதிவாயிருக்கு. உள்ளருக்ற ஆஃபீஸ் கேமராவ ஆஃப் பண்ணிருக்றானுங்க. அதனால ஆஃபீஸ்ல நடந்தது எதுவும் ரெக்கார்டாகல”, தனா சொன்னான். செழியன் சிரிப்பை வரவழைத்தான்.



ஆரு செழியா இந்த பைய? என்ன சொல்றான்?”, அபிராமி கேட்க, தனா சிரித்தான். செழியனும் துரையும் கூட சிரித்தனர்.





தெளித்த சாணத்தின் மேல் வரைந்திருந்த கோலத்தின் ஈரம் விடியலின் புத்துணர்வை பெருக்கியது. புழக்கடை விறகடுப்பின் புகை மூட்டம் குளிருக்கு இதமாக இருந்தது. அடுப்பின் நெருப்பு கங்கின் மீது ஊதுகுழலால் ஊதினாள் காவேரி. வீட்டுக்குள்ளிருந்து வந்த கல்யாணி,



வாடி”, என்றழைக்க, சந்தியா புழக்கடைக்கு வந்தாள். நீளமான ஈரத் தலை மயிர்களை விரித்து, குளிச்ச சடை போட்டிருந்தாள். காவேரி நிமிர்ந்து பார்த்தாள். சந்தியா தன் பார்வையை தாழ்த்தினாள். எழுந்து வந்து மகளின் தலை கோதினாள் காவேரி.



சாரிம்மா, நேத்து பயத்துல,....”, என்ற சந்தியா லேசாக தலை குனிந்து பின் சொன்னாள்,



செழியனை எனக்கு புடிக்கும்”,



காவேரிக்கு அழுகை முட்டியது. சந்தியா முன் அழக்கூடாது என்ற கல்யாணியின் கண்டிப்பை முன்னிறுத்தி அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.



புடிக்கும்னா கட்டிக்க”, காவேரியின் சொல்லில் அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தாள் சந்தியா.



சும்மா பேச்சுக்கில்ல, கட்டிக்க. எங்குட்டாது போயி சந்தோசமாயிரு”, என்றாள் காவேரி. சந்தியா கல்யாணியை பார்த்தாள். அவள் சிரித்தாள்.



அப்பன் இதுக்கு ஒத்துக்காது, நம்ம சனங்க ஆரும் ஒத்துக்க மாட்டாக”, சந்தியா சொன்னாள்.



இந்தா, நேத்து ஒன்னைய தேடி ஆராரு அலைஞ்சாகளோ அவகதே ஒன் சனம். ஒன்ங்கப்பங்கூட ஒனக்காக அலையல புள்ள”, காவேரி சொல்ல,



பாவம், அப்பாவால முடியாதுல்லம்மா”, சந்தியா சொன்னாள்.



ஆமா, பொசகெட்ட பையலுக்கு வாய்க்கு வந்தா மாதிரி பேச மட்டும் முடியும்”, காவேரி முணு முணுத்தாள்.



என்னம்மா?”, சந்தியா கேட்டாள்.



இந்தா, அதும் இதும் இப்போ என்னத்துக்கு? நீயும் செழியனும் கட்டிக்க ஒங்காத்தாளுக்கு சம்மதம். ஒங்கப்பன ஒங்காத்தா சரி கட்டிக்குவா. நீ என்ன சொல்ற?”, கல்யாணி நறுக்கென்று விஷயத்துக்கு வந்தாள்.



சந்தியாவின் முகத்தில் நாணமும் பயமும் குழப்பமும் கலந்தது.



இன்னும் என்னடி ரோசன?”,



நா அவங்கிட்ட பேசிட்டு சொல்லவா?”, சந்தியா வந்த சிரிப்பை அடக்கினாள்.



எவங்கிட்ட?”, கல்யாணி கிண்டலாக கேட்டாள்.



அவந்தே, செழியன்”, சந்தியா சிரித்தாள்.



ஆத்தீ சிரிச்சுட்டா சித்தி”, கல்யாணி சந்தியாவை கட்டிக் கொண்டாள். காவேரி இமை தாண்டாத நீரை முந்தானையால் துடைத்தாள்.



பாண்டியன் ஜெயிலுக்கு போனதை நினைத்து அபிராமி கொடியிடம் வெகுநேரமாக புலம்பிக் கொண்டிருந்தாள். அவளை முழுவதுமாக கொடியிடம் ஒப்படைத்து விட்ட செழியன் துரையுடன் ஹாலில் அமர்ந்திருந்தான். புலம்பி புலம்பி சோர்ந்து தூங்கி போனாள் அபிராமி.



கொடி வந்தாள்.



பயப்படாதண்ணே! பெரியம்மாக்கும் லாவநஷ்டம் புரியும். நாளாக நாளாக சரியாயிருவாக”, கொடி சொன்னாள். செழியன் பெருமூச்சு விட்டான்.



அபிராமியின் ஆறுதலுக்காக கொடியும் துரையும் ஓரிரு நாட்கள் அங்கு தங்கியிருப்பது என்று முடிவானது.



இரவானது.



அபிராமிக்கு சாப்பாடு கொடுத்து, வீட்டு வேலைகளை முடித்து விட்டு படுக்கை அறைக்கு வந்தாள் கொடி.



வாசித்தே பழக்கப்பட்ட துரை கிடைத்த புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். அவளை பார்த்ததும் புத்தகத்தை கீழே வைத்து விட்டு, நிமிர்ந்தான். கொடி அவனருகில் படுக்கையில் அமர்ந்தாள். இருவரும் ஓரிரு நிமிடங்கள் பேசாமலிருந்தனர்.



தினேஷ் எங்கருக்காக?”, துரை மௌனம் கலைத்தான். அதிர்ச்சியில் மௌனமாக பார்த்தாள் கொடி.



ஒனக்கு தினேஷ ரொம்ப புடிக்குமல்ல?”, துரை கேட்டான். அவளுக்கு மேலும் அதிர்ச்சி.



நீயும் தினேஷும் லவ் பண்ணீங்கன்னு,...... “,

கொடி எழுந்து கொண்டாள்.



என்னாச்சு? உக்காரு”, என்றான் துரை. பார்வையை தரையில் தாழ்த்தினாள்.



கொலைக்குத்தமா பண்ணிட்ட? உக்காரு”, என்றான். புரியாமல் பார்த்தவள் புரியாமலே உட்கார்ந்தாள்.



தினேஷோட ஃப்ரெண்ட்ஸ்ங்க சொன்னாங்களா?”, கொடி கேட்டாள்.



இல்ல”, என்றவன் விரக்தியாக சிரித்தான். அவள் அவனை பார்த்தாள்.



பாண்டியன் மாமா கூடவே சுத்திட்டுருப்பாகளே சரவணன், அவுக சொன்னாக”, என்றான். விழிகள் விரித்தாள்.



ஒம்மேல அவருக்கு நிறைய கோவமிருக்குது. ஊருக்கு வெளிய பொறம்போக்கு நெலத்துல இருக்ற தினேஷ, கொடி காதலிச்சதால சரவணனோட சாதி தீட்டுப்பட்டு போயிருச்சாமா. ஒன்னால நானும் தீட்டுப்பட்டு போயிட்டேன்னு அவுகளுக்கு ரொம்ப கவல. போதை ஏறுனதும் மனசுல கெடந்த சாக்கடைய கொட்டிப்புட்டாக”, துரை சொன்னான். லேசாக மூச்சை இழுத்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள் கொடி.



நீங்க என்ன முடிவு பண்ணிருக்கீக?”, உறுதியான குரலில் கேட்டாள்.



நீதா முடிவு பண்ணணும்”, அவன் தெளிவான குரலில் சொன்னான். அவள திரும்பி பார்த்தாள். அவன் வலியை மறைத்து சிரிப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.



நேத்து சரவணன், விசயத்த சொன்னப்போ, ஒரு நொடி உன் தலையை வெட்டி வீசுறாப்புல ஒரு கற்பனை, மின்னல் மாதிரி மனசுல வெட்டிட்டு போச்சு”, சொன்ன துரை எழுந்தான். அவள் பார்த்தாள்.



என்னத்த, சமூக நீதி படிச்சென்ன? படிச்சத வாழ்க்கையில கடைபுடிக்க தனி தைரியம் வேணும். சுத்தியிருக்ற ஊர பகைச்சு நீதிய காப்பாத்த திராணி இருக்கணும். கட்டுன பொண்டாட்டிய பாதுகாக்க துப்பில்ல, எவங்கூடயோ போயிட்டாளாமுன்னு பேசுற வக்கத்த பையகக்கிட்ட, ஒங்க பொண்டாட்டிகளுக்கு ஒங்ககூட படுக்க விருப்பமான்னு ஒரு தடவையாது கேட்டுருக்கீகளான்னு திருப்பி கேக்க ஒரு நெஞ்சுரம் வேணும். நேத்து ராத்திரி எனக்கு நெஞ்சுரம் இல்லாமதா போச்சு. அதனால தா, ஏற்கனவே ஒங்கப்பன் செஞ்ச தப்பை மறைக்க, வரப்போற கேவலத்த தடுக்க, ஒன்னை கொல்லணும்னு கோவப்பட்டுட்டேன்”, சொன்னவன் திரும்பி பார்த்தான்.



சந்த்யா செழியன் மச்சான ஓடிப் போயி கட்டிப்புடிச்சிக்கிச்சி பாரு! அப்போ புரிஞ்சுது, காதல்னா என்னன்னு! ஒரு பொண்ணு மனசுன்னா என்னன்னு! ஒம்மனசுல நா இல்லன்னு”, சொல்லி நிறுத்தியவன் கலங்கிய தன் கண்களை மறைக்க திரும்பிக் கொண்டான். அவள் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.



இவனுங்க இப்டியே மனச பத்தி கவலைப்படாம நிச்சயம் பண்ணி கல்யாணம் நடத்தீட்டு இருந்தானுங்கன்னா, நிச்சயக் கல்யாணம் கேலிக்கூத்தா போயிரும்”, என்றான் துரை.



தொடரும்.......
























 
  • Like
Reactions: Maheswari

vinodha mohan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 29, 2023
29
20
3
Plano , tx
இன்னுமும் பெண்கள் சந்திக்க இயலாத சில தருணங்கள் இருக்கத்தான் செய்கிறது...
இல்ல மீனா!!!
துரை நல்லவனாகவே இருந்தாலும் சமூகம், கட்டுப்பாடுன்னு பல சங்கட நிலைகளை கடக்க கசப்பினை விழுங்கித்தான் ஆகனும்...‌
ஒரு நல்ல பகுத்தறிவு கொண்ட ஆணை கூட இப்படி நிலை தடுமாற வைக்குது இல்ல!!!


Waiting for the twists meena!!!
😍😍😍👏👏👏👏👏👏👌👌👌👌
 

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
இன்னுமும் பெண்கள் சந்திக்க இயலாத சில தருணங்கள் இருக்கத்தான் செய்கிறது...
இல்ல மீனா!!!
துரை நல்லவனாகவே இருந்தாலும் சமூகம், கட்டுப்பாடுன்னு பல சங்கட நிலைகளை கடக்க கசப்பினை விழுங்கித்தான் ஆகனும்...‌
ஒரு நல்ல பகுத்தறிவு கொண்ட ஆணை கூட இப்படி நிலை தடுமாற வைக்குது இல்ல!!!


Waiting for the twists meena!!!
😍😍😍👏👏👏👏👏👏👌👌👌👌
சங்கடங்களை கடக்காதவர்கள் யார் இருக்காங்க இங்க? கொடியும் கடந்து வருவார்கள். நன்றி வினோ.