• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 40

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu




Screenshot_20230721_230818.jpg




அத்தியாயம் 40



இரவு வேளையில், தனது அறையில் மடிக்கணினியை தட்டிக் கொண்டிருந்தான் துரை. அறைக்கு வந்த கொடி அவனருகில் அமர்ந்தாள்.



“நா காலேஜ்ல அப்ளை பண்லாம்னு இருக்கேன்”, கொடி சொன்னாள்.



“ம்ம், பண்ணு”, என்றான் கணினியை பார்த்தபடியே!



“அத்த கண்டிப்பா கோச்சுக்குவாங்க”, என்றாள்.



“அப்ப பண்ணாத”,



“ஹலோ, நா ஒங்ககிட்டயும் ஒங்க அம்மாகிட்டயும் பர்மிஷன் கேக்கல. இன்ஃபர்மேஷன் சொன்னேன்”, என்று கொடி சொல்ல நிமிர்ந்து பார்த்தான்.



“ஆமா, நா படிக்க போறேன். ஒங்கம்மாவ சமாளிக்க வேண்டியது ஒங்க ப்ரச்ன! அவ்ளோதா”, என்றவள் படுத்துக் கொண்டாள். மடிக்கணினியை ஒதுக்கியவன் படுத்து, அவளது முகம் பார்த்தான்.



“என்ன?”,



“ம்ஹூம்”, என்றவன் திரும்பி கண்களை மூடிக்கொள்ள, அவனை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள் கொடி. கண்களை திறந்து விரித்தான். திரும்பினான்.



“லவ்விருக்கு! கொஞ்சூண்டுதான்! ஒங்களவுக்கில்ல”, அவள் சொல்லி முடிக்கும் போது, அவனது அணைப்புக்குள் சுருண்டிருந்தாள்.



“போதும், இந்த கொஞ்சூண்டு லவ்! இந்த வாழ்க்கைய வாழ்ந்து முடிக்க”, என்றான். அவள் கண்களில் கசிந்த நீர் அவன் நெஞ்சை நனைக்க, காதலின் சுவடுகள் காமம் நோக்கி நகர்ந்தது.



சந்தியா கோபாலை அடித்த விஷயம் ஊருக்குள் தலைப்புச் செய்தியானதும், பேசுப்பொருளானதும் நான்கைந்து நாட்களுக்குத்தான்! மேலத்தெரு பரமசிவன் மகள், தெக்குத்தெருவுக்கு கட்டிட வேலைக்கு வந்தவனுடன் ஓடிப் போனதும், சந்தியா கோபாலை அடித்த சம்பவத்தை மக்கள் மறந்து போனார்கள். தினேஷ் கல்யாணம் முடிந்து மனைவி குழந்தையுடன் வந்ததில் அவனுடைய சேக்காளிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. கருப்பசாமிக்கு காயத்ரியை ரொம்ப பிடித்து விட்டது.



காயத்ரி தினேஷின் கல்யாண செய்தியை கேள்விப்பட்ட, காயத்ரியின் பெற்றோருக்கு, காயத்ரியை பார்க்க சாதி தடையாக இல்லை. சாதி என்ற பெயரில் தன்னை சுற்றி அவர்கள் கட்டி வைத்திருந்த கௌரவ வேலி தடையாக இருந்தது. பெற்றவர்கள் பார்க்க வரவில்லை என்று காயத்ரியும் வருந்தவில்லை.



தினேஷ் தமிழ்நாடு தொல்லியல் துறையில் வேலைக்கு விண்ணப்பித்து விட்டு, தற்காலிகமாக மாறனுடன் இணைந்து டியூஷன் சென்டர் ஒன்றை தொடங்கியிருக்கிறான். குறைவான கட்டணத்தில் தரமான கல்வியை தரும் டியூஷன் என்பதால் ஊரின் பணக்கார வீட்டு பிள்ளைகளும் தினேஷின் டியூஷனில் இணைந்துள்ளார்கள்.



மாறன் கமலியின் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் ஏற்பாடானது. மாறன் ஊர் திருமண மண்டபத்தை தவிர்த்து, காலணியில் இருக்கும் தினேஷின் வீட்டிலேயே கல்யாண சடங்குகளை நிகழ்த்தி விட்டதால், காலணிக்கு வருவதை கௌரவக் குறைச்சல் என்று நினைத்த குடியானவர்களும், உயர்வானவர்கள் என்று தங்களை கருதிக் கொண்டவர்களும் “மாறன் கமலி” கல்யாணத்தில் கலந்து கொள்ளவில்லை. மாறனும் கமலியும் விரும்பியதும் இதைத்தான்.



ஜாமீனில் வந்த பாண்டியன் சந்தியாவின் வீடேறி பெண் கேட்டதில் கதிரேசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அபிராமிக்குதான் தன் சகோதரன் மகளை விட்டுவிட்டு, வேற்று சாதியில் பெண் எடுக்கிறோமே என்று கொஞ்சம் வருத்தம். கல்யாணம் விமர்சையாக நடந்தது.



கல்யாண நிகழ்ச்சி தொடங்கிய நேரத்திலிருந்தே, சுவாதி நவீனையேதான் கவனித்துக் கொண்டிருந்தாள். ஏனோ காலையிலிருந்தே அவளுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறான்.



காலையிலிருந்து தானா? கடந்த ஓரிரு மாதங்களாகவே நவீன்தான் அவளுக்கான தேவைகள் அனைத்திற்கும், முந்திக்கொண்டு வந்து நிற்கிறான். பாண்டியன் அரெஸ்டானதாலும், சந்தியாவை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததாலும், மதிவாணன் படுக்கையில் என்று ஆனபிறகு, செழியனால் சுவாதிக்காக ஓடிவர இயலவில்லை. சாரதி உதவிக்கு வருகிறான்தான்! என்றாலும் நவீனின் இந்த திடீர் அக்கறை புதிதாகவும், வியப்பாகவும் இருந்தது சுவாதிக்கு! இப்போதும் அவளுக்காகவும், கௌசல்யாவுக்காகவும் டீ எடுத்து கொண்டு வந்து தந்து விட்டு செல்கிறான்.



“ஏனுங்கம்ணி, மதிவாணய்யா இப்ப எப்டி இருக்றாருங்க்?”, யாரோ ஒரு பெண் கௌசல்யாவிடம் விசாரிக்க,



“அல்லாம் படுக்கையிலதானுங்க்கா, ஆனாலும் பரவால்லீங்க்! அவுக உசுரோட இருக்றதே போதுமுங்க்”, என்றாள் கௌசல்யா. அவர்களின் உரையாடல் தொடரவே, சுவாதி நவீனிடம் சென்றாள்.



“என்ன ஸ்வாதி, எதாது வேணுமா?”, கேட்டான்.



“என்னடா ஆச்சு ஒனக்கு?”, அவள் பதிலுக்கு கேட்டாள்.



அவன் கண்கள் சுருக்கினான்.



“கொஞ்ச நாளாவே பாத்துட்டுதா இருக்கேன். எனக்காக ஓடி ஓடி எல்லாம் செய்ற! இப்ப டீ கூட எடுத்து த்ர்ற! ஒரு இன்ஸ்பெக்டர் டீ எடுத்துக் குடுத்தா பாக்றவங்க தப்பா நெனைக்க மாட்டாங்களான்னுகூட தோணாதாடா?”,



அவன் சிரித்தான்.



“இதுலென்ன இருக்கு ஸ்வாதி? ஒங்கப்பாக்கு ஒடம்பு முடில. அதான் என்னாலான ஹெல்ப்ப பண்ணேன்”,



“எங்கப்பாக்கு ஒடம்புக்கு முடிலன்னுதா இந்த டீயையும் எடுத்து தந்தியா?”,



அதில்லடி”, நவீன் ஏதோ சொல்ல வாயெடுக்கும் போது,



“இந்த மதிவாணனுக்க மவா சரியில்லியப்பா! நேத்துவரைக்கும் அந்த பாண்டியன் மொவங்கூட சுத்தீட்டு திரிஞ்சா. இன்னைக்கு இந்த பையகிட்ட காட்டி மினுக்கீட்ருக்றா”, ஒரு வயதானவன் தன் சேக்காளியிடம் சொல்லியபடியே கடந்து சென்றான். சுவாதி விழிகள் விரித்து பற்களை கடித்தாள்.



“யோவ் கெழம், நில்லுயா”, சொல்லி திரும்பியவளின் கையை பிடித்தான் நவீன்.



“ஏ, விடு! அவனுங்களுக்கு ஃப்ரெண்ட்ஷிப்பும் தெரியாது, லவ்வும் தெரியாது, ஆம்பள பொம்பளன்னாலே தப்பா நெனைக்கதா தெரியும்”, நவீன் சொன்னான்.



சுவாதி அமைதியானாள்.



“நீ என்னை லவ் பண்றியா நவீன்?”, சில நாட்களாகவே இருந்த சந்தேகத்தை கேட்டு விட்டாள்.



“இதோ வந்துட்டேண்டா, யாரோ கூப்டுறாங்க சுவாதி, இந்தா வந்துடுறேன்”, சாமாளிப்பாக, சொல்லிவிட்டு நகர முயன்றவனின் சட்டைக்காளரை பற்றியிழுத்து நிறுத்தினாள் சுவாதி.



“ஒன்னை எவனும் கூப்டல, மரியாதையா நா கேட்டதுக்கு பதில் சொல்லு”, என்றாள்.



“ஈ ஈ ஈ ஈ”, அசடு வழிய சிரித்தான்.



இரண்டு வருடங்களுக்கு பிறகு,



செழியனுடன் சந்தியாவின் தாம்பத்ய வாழ்க்கை நிறைவாகவே இருந்தாலும், அபிராமிதான் சந்தியாவிடம் அடிக்கடி சிடுசிடுவென இருந்தாள். பாண்டியனுக்கு அனுபவத்தால் ஏற்பட்ட முதிர்ச்சியும் சமூகநீதி நினைப்பும் அபிராமிக்கு ஏற்பட வாய்ப்பில்லையல்லவா? வீட்டுக்குள்ளேயே இருப்பவளுக்கு இத்தனை வருட கால பழக்கவழக்கமும், முன்னோர்கள் சொல்லித் தந்த பாடமும் தான் சரியென்பதாக தோன்றும்.



சந்தியாவை வேலைக்கு போகக்கூடாது என்று அபிராமி தடுக்க, பொருளாதார சூழலையும் தன் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு சந்தியா மறுக்க, அது வேறு புதிய பிரச்சினையாக வெடித்தது. மாமியார் மருமகள் சண்டைக்கு நடுவே, செழியன் விழி பிதுங்குவதை பார்க்க, பாண்டியனுக்கு குதூகலமாக இருக்கும். என்ன ஒன்று? முழுநேரமும் பார்த்து ரசிக்க முடியாதபடி ஜாமீன் முடிந்து ஜெயிலுக்கு செல்வதும், கோர்ட்டு கேஸ் என்று அலைவதுமாக சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் மனிதர்.



“நானும் பொறுத்து பொறுத்து போயிட்டுருக்றேன். ஒங்கம்மா பேச்சு எல்லை மீறி போயிட்டுருக்குது. தெரியாமதா கேக்குறேன், படிப்புக்கும் புள்ள பெத்துக்கறதுக்கும் என்னங்க் சம்மந்தம்? சும்மா சும்மா புள்ள பெக்காம படிக்க போறான்னு சாடை பேசிட்டுருக்றாக! சொல்லி வையிங்க, ஆமா”, கொடி பொறிந்து தள்ள, அரிசி மில் அலுவலகத்தில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தான் துரை.



“கன்னத்துல கைவச்சுட்டா சரியா போச்சா? எந்திரிங்க், வந்து ஒமங்கம்மாவ கேளுங்க்”, என்றவள் நிற்க முடியாமல், தடுமாறினாள். எழுந்து வந்து அவளை தாங்கி பிடித்தான் துரை.



கொடியின் கைப்பிடித்து பார்த்த டாக்டர், அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னார்.



புவனாவுக்கும், துரைக்கும், விஷயத்தை கேள்விப்பட்ட கொடியின் தகப்பனாருக்கும், தினேஷுக்கும், தினேஷின் குடும்பத்தாருக்கும் சந்தோஷம்.



“ஏனாத்தா, புள்ள பொறக்குற வரைக்குமாது ஆபீஸுக்கு லீவு போடக்கூடாதா?”, எப்போதுமே சிடுசிடுவென எரிந்து விழும் அபிராமி, சந்தியாவின் நாடியை பிடித்து கெஞ்சிக் கேட்டாள். மறுக்க மனமில்லை சந்தியாவுக்கு..



“சரிங்கத்த, ஆஃபீஸ்ல கேட்டுப் பாக்குறேன்”, என்றாள் கனிவாக. அபிராமி அறையை விட்டு வெளியேறியது தான் தாமதம்,



“தேங்க்ஸ் டி”, என்றபடி படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த சந்தியாவை கட்டிக்கொண்டான் செழியன்.



“எதுக்கு தேங்க்ஸ்? நா வேலைக்கு லீவு போடுறேன்னு சொன்னதுக்கா? ஒங்கம்மா புத்திதானல ஒங்கிட்டயும் இருக்குது.”, கேட்டு முறைத்தாள் சந்தியா.



“ஏய், என்னடி இப்டி ஆரம்பிச்சுட்ட?”,



“பின்ன! எதோ, பெரிய மனுஷி, கெஞ்சிக் கேக்றாங்களேன்னு சும்மானாச்சு சொன்னனாமா. டெலிவரி லீவ் வேணா போட்டுக்கலாம். வேலையெல்லா வுடமுடியாது, சொல்லிட்டேன்”,



“அடியேய், நீ என்னை அப்பாவாக்கிருக்ற!, அதுக்குதே சந்தோசம்ன்னேன். வரவர நீ எங்கிட்ட அன்பாவே இருக்க மாட்ற சந்தியா”, சொல்லி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான். சிரித்தாள். கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். சிரித்தான். முத்தங்கள் பேசியது.



“லவ் யூ செழியா, இனி எனக்காக நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணுல, ஒங்கூடவே இருக்கணும் போல இருக்கு”, என்றாள்.



“கண்டிப்பாடி, இனி சீக்ரம் வீட்டுக்கு வந்துருவேன்”



அதன் பிறகு வார்த்தைகளுக்கு இடம் கிடைக்கவில்லை. முத்தங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன.



“நா படிக்கணும், இன்னும் ஒரு வருச படிப்பு இருக்குது”, சொல்லி அழுது கொண்டிருந்தாள்.



“இந்தா, இந்த நீலிக்கண்ணீர் வடிக்கிற வேலையெல்லா எங்கிட்ட வேணாம். புள்ளைய பெத்து எங்கையில குடுத்துபோட்டு, நீ படிக்க போவியோ, மலையேற போவியோ, போ! அம்புட்டுத்தே, ஆமா”, கோபமாக சொல்லிவிட்டு சென்றாள் புவனா.



“கொழந்தை சாமியா பாத்து குடுக்றது கொடி! படிக்றது எப்போ வேணா படிச்சிக்கலாம்”, துரையின் அக்காக்கள் அறிவுரைகளாக அடுக்கி விட்டு சென்றனர்.



எல்லோரும் சென்ற பிறகு, கொடியும் துரையும் மட்டும்! அவளருகில் அமர்ந்தான்.



“இப்ப என்னத்துக்கு கண்ண கசக்கீட்டுருக்ற? ஆரென்ன சொன்னா என்ன? நானிருக்றேன் ஒங்கூட”, என்றான். அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.



“அம்மாகிட்ட நா பேசிக்கிறேன். இனி தினமும் நானே காலேஜ் கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வர்றேன். கொழந்தை பொறக்குற வரை, நா ஒன்னைய கவனிச்சிக்குறேன், நீ படிப்ப கவனி. கொழந்த பொறக்கும் போது ஒன்ட்ற கையில டிகிரி இருக்கும். அதுக்கு நானாச்சு”, அவன் சொல்ல,



நெசமா?”, கேட்டாள். ஆமென்பதாக விழிகள் மூடி திறந்தான். கொடி சிரித்தாள்.



சந்தியா பிரசவ விடுமுறைக்கு எழுதி கொடுத்தாள். தனா சந்தியாவை எப்போது வேண்டுமானாலும் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தான்.



“நானா? எனக்கு அரசியல் பத்தி என்ன தெரியும்? எலக்ஷன்ல நிக்க எனக்கென்ன தகுதியிருக்கு?”, பயத்தோடு மறுத்தாள் சுவாதி.



துரையின் அரிசி மில் குடோனில் கூடியிருந்தார்கள்.



“ஒங்கப்பா தப்பானவர்னு தெரிஞ்சதும் அவர தண்டிக்கணும்னு முடிவெடுத்த தைரியமிருக்கு ஒங்கிட்ட”, செழியன் சொன்னான்.



“கிரைம் பத்தின தகவல்களை சேகரிக்கிற திறமையிருக்கு”, சாரதி சொன்னான்.



“கரெக்ட்”, என்றான் தர்மன்.



“ம்ம், எந்த சிட்டுவேஷன்லயும் ஒடைஞ்சு போகாத ஸ்ட்ரெங்க்த் இருக்குடி”, நவீன் சொன்னான்.



“இல்லடா செழியா! பயமாருக்குதுடா”, செழியனின் கையை பிடித்து சொன்னாள் சுவாதி.



“ஏ லூசு, இதுக்கு போயி பயப்படுவியா? கை ஏண்டி இப்டி நடுங்குது?”, செழியன் கேட்டான்.



“தெரீலடா, பயமாருக்குது”,



“ஏலே நீயெல்லா ஒரு லவ்வருக்கு அழகாலே? பயமாருக்குதுங்குறாளல்ல? பாத்துட்டு சும்மா நிக்குற?”, செழியன் நவீனிடம் கேட்க,



“நானிருக்றேண்டி, பயப்படாத”, என்றான் நவீன்.



“நீயிருந்து, என்னத்த கிழிப்ப?”, சட்டென கேட்டாள் சுவாதி. சந்தியாவும், கொடியும், கமலியும், காயத்ரியும் சிரித்தனர்.



“போதுமால, இப்போ திருப்தியா?”, செழியனிடம் சலித்துக் கொண்டான் நவீன்.



“நாளைக்கு ஒன்னைய கட்டிக்கப்போறவண்டி, கொஞ்சம் மருவாதியா பேசலாமல்ல?”, செழியன் கேட்டான்.



“அது கெடக்குது! எலெக்ஷன் எனக்கு வேணாஞ்செழியா”, இன்னும் பயந்தாள் சுவாதி.



அதுவா?”, தனக்குள் சொல்லி விழித்தான் நவீன்.



“இங்கேரு ஸ்வாதி, மதிவாணன் சாருக்கு நம்ம தொகுதியில இருக்ற செல்வாக்கு, பாதி ஒடைஞ்சாலும் மீதி அப்டியேதா இருக்குது. அதோட ஒன்னோட கேரக்டர் தகுதியெல்லாம் பார்த்துதே கட்சியிலருந்து ஒன்னைய கேண்டிடேட்டா செலெக்ட் பண்ணிருக்காக. இப்போ நீ எலெக்ஷன்ல நிக்கலீன்னா, அந்த சல்லிப்பைய சனாதனம்னு தூக்கிட்டு வந்து, சாதிவெறிய தூண்டி வுட்டு ஊரு முச்சூடும் அழிச்சிபோடுவான்”, துரை சொன்னான்.



“நீ மதிவாணன் பொண்ணுங்குறதுக்காகவே, அம்பது பர்சண்ட் ஓட்டு விழுந்துரும். மீதி அம்பது பர்சண்ட் ஓட்டுக்கு நானாச்சு. நீ சரின்னு சொல்லு”, மாறன் சொன்னான்.



“பொம்பளைங்க ஓட்டெல்லாம் நாங்க கவர் பண்ணீர்றோம். கவலைய வுடு”, என்றாள் கல்யாணி.



“ஆனா ஸ்வாதி, ஒண்ண நெனைப்புல நெறுத்திக்க! ஒங்கப்பா கட்சியில இருக்ற எல்லாரும் யோக்கியனுங்கங்குறதுக்காக அந்த கட்சிக்கு நாம சப்போர்ட் பண்ல. இந்த கட்சி ஆட்சிக்கு வர்லீன்னா, அம்பேத்கர் எழுதுன கான்ஸ்டிடியூஷன அழிக்க நினைக்கிற கட்சி, நம்ம ஏரியால ஸ்டிராங்கா கால் ஊணிரும். அது நடக்கக்கூடாது. நீ நில்லு, நாங்க ஒன்னை உக்கார வச்சிர்றோம். பிரசிடெண்ட் சீட்ல”, சொல்லி சிரித்தான் தினேஷ்.



“இந்தா என்னத்துக்கு இப்டி பயந்துட்டுருக்ற, நாங்க இத்தன பேர் இருக்றோமுல்ல! எறங்கு ரெண்டுல ஒண்ணு பாத்துபோடலாம்”, என்றான் ரங்கன்.



ஆமா, நாங்கல்லாங்கூட இருக்கோம்”, கமலி சொல்ல அவளோடு தோள் சேர்ந்தனர் சந்தியா, காயத்ரி, கொடி.



“சரிப்பா, எல்லாரும் இவ்ளோ சொல்றீங்க. நிக்குறேன்”, சுவாதி சொல்ல எல்லோரும் சிரித்தனர்.



அச்சம் எங்கே? அச்சம், அச்,... காணவில்லை. அச்சம் அழிந்தது.







முற்றும்.



சக்தி மீனா.






 
  • Like
Reactions: Maheswari