• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 20

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
மொழி: இருள் பாணி
அறத்துப்பால்
இல்லறவியல்

பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். (௱௯௰௧ - 191)

பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாகப் பேசப் படுவான் (௱௯௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான் (௱௯௰௧)
—மு. வரதராசன்

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான். (௱௯௰௧)
—சாலமன் பாப்பையா

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள் (௱௯௰௧)
—மு. கருணாநிதி

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது. (௱௯௰௨ - 192)

பலபேர் முன்பாகப் பயனற்ற பேச்சைப் பேசுதல், நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதை விடத் தீமையானது ஆகும் (௱௯௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும். (௱௯௰௨)
—மு. வரதராசன்

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது. (௱௯௰௨)
—சாலமன் பாப்பையா

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும் (௱௯௰௨)
—மு. கருணாநிதி

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. (௱௯௰௩ - 193)


பயன் இல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, ‘அவன் நல்ல பண்பில்லாதவன்’ என்பதை உலகுக்கு அறிவிக்கும் (௱௯௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும். (௱௯௰௩)
—மு. வரதராசன்

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும். (௱௯௰௩)
—சாலமன் பாப்பையா

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும் (௱௯௰௩)
—மு. கருணாநிதி

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. (௱௯௰௪ - 194)


பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையும் தராததோடு, உள்ள நன்மையையும் போக்கிவிடும் (௱௯௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும். (௱௯௰௪)
—மு. வரதராசன்

பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும். (௱௯௰௪)
—சாலமன் பாப்பையா

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும் (௱௯௰௪)
—மு. கருணாநிதி

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். (௱௯௰௫ - 195)


நல்ல பண்பு உடையவர்களும், பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்களானால், அவர்களுடைய சிறந்த தன்மையும் சிறப்பும் நீங்கிப் போகும் (௱௯௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும். (௱௯௰௫)
—மு. வரதராசன்

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும். (௱௯௰௫)
—சாலமன் பாப்பையா

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும் (௱௯௰௫)
—மு. கருணாநிதி

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். (௱௯௰௬ - 196)


பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை, ‘மனிதன்’ என்றே சொல்லக் கூடாது; மக்களுள், ‘பதர்’ என்றே கொள்ளல் வேண்டும் (௱௯௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும். (௱௯௰௬)
—மு. வரதராசன்

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள். (௱௯௰௬)
—சாலமன் பாப்பையா

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும் (௱௯௰௬)
—மு. கருணாநிதி

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. (௱௯௰௭ - 197)


நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாமலிருத்தல் நல்லது (௱௯௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும். (௱௯௰௭)
—மு. வரதராசன்

நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது. (௱௯௰௭)
—சாலமன் பாப்பையா

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது (௱௯௰௭)
—மு. கருணாநிதி

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். (௱௯௰௮ - 198)


அருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயன் இல்லாத சொற்களை ஒருபோதுமே சொல்ல மாட்டார்கள் (௱௯௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார் (௱௯௰௮)
—மு. வரதராசன்

அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார். (௱௯௰௮)
—சாலமன் பாப்பையா

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார் (௱௯௰௮)
—மு. கருணாநிதி

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். (௱௯௰௯ - 199)


மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் கூட ஒரு காலத்திலும் சொல்ல மாட்டார்கள் (௱௯௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார். (௱௯௰௯)
—மு. வரதராசன்

மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார். (௱௯௰௯)
—சாலமன் பாப்பையா

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார் (௱௯௰௯)
—மு. கருணாநிதி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (௨௱ - 200
)

சொன்னால், பயன் தருகின்ற சொற்களையே யாவரும் சொல்லுக; பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும் (௨௱)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது. (௨௱)
—மு. வரதராசன்

சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா. (௨௱)
—சாலமன் பாப்பையா

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும் (௨௱)
—மு. கருணாநிதி
 
Top