• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 55

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
அரசியல்

செங்கோன்மை

ஓர்ந்துகண் நோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (௫௦௪௧ - 541)

நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாக (௫௱௪௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும். (௫௱௪௧)
-மு. வரதராசன்

குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பம், வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி. (௫௱௪௧)
—சாலமன் பாப்பையா

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும் (௫௱௪௰௧)
-மு. கருணாநிதி

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி. (௫௦௪ - 542)


மழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும்; மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள் (௫௱௪௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். (௫௦௪௨)
-மு. வரதராசன்

உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர். (௫௦௪௨)
—சாலமன் பாப்பையா

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது (௫௱௪௨)
-மு. கருணாநிதி

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (௫௦௪ - 543)


அந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாக நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோன்மையே ஆகும் (௫௱௪௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும். (௫௱௪௩)
-மு. வரதராசன்

அறிவை வளர்த்துக்கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே. (௫௱௪௩)
—சாலமன் பாப்பையா

அரசின் ஓர் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும் (௫௱௪௰௩)
-மு. கருணாநிதி

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (௫௦௪ - 544)


குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் மாநிலத்து வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து வாழ்வும் நிலைபெறுவதாகும் (௫௱௪௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். (௫௦௪௪)
-மு. வரதராசன்

குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர். (௫௦௪௪)
—சாலமன் பாப்பையா

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும் (௫௱௪௰௪)
-மு. கருணாநிதி

இயல்புக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. (௫௦௪ - 545)


அரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும் (௫௱௪௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும். (௫௱௪௫)
-மு. வரதராசன்

அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும். (௫௱௪௫)
—சாலமன் பாப்பையா

நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும் (௫௱௪௰௫)
-மு. கருணாநிதி

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (௫௦௪ - 546)


மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்தானால் அதுவே வெற்றி அளிப்பதாகும் (௫௱௪௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின். (௫௱௪௬)
-மு. வரதராசன்

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும். (௫௱௪௬)
—சாலமன் பாப்பையா

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான் (௫௱௪௰௬)
-மு. கருணாநிதி

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். (௫௦௪௭ - 547)


உலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும் (௫௱௪௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும். (௫௱௪௭)
-மு. வரதராசன்

ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும். (௫௱௪௭)
—சாலமன் பாப்பையா

நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும் (௫௱௪௰௭)
-மு. கருணாநிதி

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். (௫௦௪௮ - 548)


முறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய், அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலே சென்று தானே கெடுவான் (௫௱௪௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான். (௫௱௪௮)
-மு. வரதராசன்

நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான். (௫௱௪௮)
—சாலமன் பாப்பையா

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும் (௫௱௪௰௮)
-மு. கருணாநிதி

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். (௫௦௪ - 549)


குடிகளைப் பகைவரிடமிருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை செய்து பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால் வேந்தனுக்குக் குற்றம் இல்லை; அதுவே அவன் தொழில் (௫௱௪௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று. (௫௱௪௯)
-மு. வரதராசன்

அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறையாது. அது அவர் தொழில். (௫௱௪௯)
—சாலமன் பாப்பையா

குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும் (௫௱௪௰௯)
-மு. கருணாநிதி

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (௫௱௫௰ - 550)


கொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும் (௫௱௫௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும். (௫௱௫௰)
-மு. வரதராசன்

கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம். (௫௱௫௰)
—சாலமன் பாப்பையா

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும் (௫௱௫௰)
-மு. கருணாநிதி.