• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 02

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 02

வீட்டு வராண்டாவில் அனைவருமாக கூடி இருக்க மௌனத்தை கலைத்தார் ஓர் வயதான பாட்டி.

"இனி என்னப்பா ராஜேந்திரா.. நடக்க வேண்டிய சடங்குகள பார்ப்போம்..." என்றார்.

அனைவரும் ராஜேந்திரனை திரும்பிப் பார்க்க அவரோ "ம்ம்.." என்றதோடு சரி. ஏனென்றால் அப்போது மண்டபத்தை விட்டு வெளியேறிய ரிஷி இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.

சற்று நேரம் அவ்விடம் அமைதியை தத்தெடுத்திருக்க உள்ளே நுழைந்திருந்தான் ரிஷி. தலையெல்லாம் கலைந்து ஏதோ போல் வந்திருந்தான். அனைவரும் குவிந்திருப்பதை பார்த்தும் கணக்கில் எடுக்காதவன் போல் அறைக்குள் நுழையப் போக "நில்லு.." என்ற சத்தத்தில் அப்படியே நின்று விட்டான். அந்த சத்தத்தில் மதி உட்பட மித்ரன் பவித்ரா என அனைவரும் வெளியே வர மதிக்குத் தான் அவனை புரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.

"என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைனா ஏன் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லனும்..? பேசாம வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்ல.." என்று அந்நேரத்தில் அவளுக்கு தோன்றாமல் இல்லை.

ரிஷியோ இன்று தந்தையை நேருக்கு நேர் எதிர் கொண்டான். அதனை தன் கருத்தில் எடுத்துக் கொண்ட ராஜேந்திரன் "உனக்கு இங்க இருக்க இஷ்டமில்லைனா உன் மனைவியோட தாராளமா சென்னைப் போகலாம்..." என்றார். அதிலும் அந்த உன் மனைவி என்பதில் அழுத்தத்தை கூட்டி இருந்தார் அவர். ஏனென்றால் இந்தத் திருமணம் வேண்டாமென்று நேரடியாக மறுக்காவிட்டாலும் மறைமுகமாக எதிர்த்தான் என்பது அவர் அறிந்த ஒன்றாகிற்றே.

மனைவி என்ற சொல்லே வேதாளத்தை மீண்டும் முருங்கை மரம் ஏற்ற போதுமானதாய் இருந்தது. ஏதோ சொல்ல வாய் எடுத்தவனிடம் "இப்பவே போறியா இல்லை நாளைக்கு போகப் போறியா..? ஏன்னா உன் சம்மதம் எங்களுக்கு முக்கியமாச்சேப்பா..." அவர் குரலில் ஏகத்துக்கும் நக்கல்.

அவர் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தவன் சற்று நேரத்தில் ட்ரொளி பேக்குடன் வெளியே வந்து நின்றான். இதனை ராஜேந்திரன் கூட எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவரது முகமே பறைசாற்ற இப்போது ரிஷியின் முகத்தில் நக்கலுடன் கூடிய ஓர் திருப்தியான புன்னகை.

மதியோ நடப்பது புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க அப்பன் பிள்ளையின் சமரை பார்த்து தலையில் அடித்துக் கொண்டதென்னவோ மித்ரன் தான். மதியைப் பெற்றவர்களும் குழப்பத்தில் நிற்க நளினி தான் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

விறுவிறுவென வெளியேறியவன் காரில் தன் பையை வைத்து விட்டு மீண்டும் உள்ளே வந்து "உங்க மருமகளை கூட்டிட்டு போகனும்னா இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வந்து கார்ல ஏற சொல்லுங்க..." என்றவன் போய் விட்டான்.

இடையில் மாட்டிக் கொண்டு முழிப்பது மதி தான். எழுந்து அவளருகில் வந்த ராஜேந்திரன் முதன் முதல் ஒருத்தியிடம் தணிந்து பேசினார்.

"அவனுக்கு உன்னை மாதிரி பொண்ணு ஒன்னு தான்ம்மா சரி. அவனுக்கு கொஞ்சம் மேல படிச்சிட்டான்ட திமிரு. எல்லாம் சரியா வரும். போய்ட்டு வாம்மா..." என்றவருக்கு எத்தனை முயன்றும் பிள்ளைப் பாசம் குரலில் வெளிப்பட்டிருந்தது. அவரின் இந்தப் பரிமாணம் புதிது. ஊரே அவரை வியந்து பார்த்திருக்க மதிக்கு அந்தக் குரலை மீற மனம் வரவில்லை.

தலையாட்டி பொம்மை போல தலையை உருட்டி விட்டு தன் உடைகளுடன் தயாராகியிருந்த பெட்டியை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.

காரில் ஏற முன்னர் திரும்பிப் பார்க்க அவளது சகோதரர்கள் கண்ணில் ஏக்கத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வந்தவள் அவர்கள் இருவரையும் கட்டியணைத்து விட்டு சிறு தலையசைப்புடன் காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். அடுத்த கணம் அவனது கையில் கார் வேகமெடுத்தது. மகளின் உதாசீனத்தில் முகம் கறுக்க நின்றிருந்தனர் அவளது பெற்றோர்.

அந்தக் காரின் பின்னே மித்ரனும் பவித்ராவும் உடன் சென்றனர். பவித்ராவிடம் இருவரையும் பார்த்துக் கொள்ளும் படி ஆயிரம் பத்திரம் கூறி அனுப்பி வைத்திருந்தார் நளினி.


...


இதோ இரண்டு வாரம் ஆகிவிட்டது அவர்கள் திருமணம் முடித்து. காலம் தான் சென்றிருக்கிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

வேலை செய்து கொண்டிருந்தவள் இதனை நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள். மணி ஏழைத் தொட்டுக் கொண்டிருக்க கடகடவென சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் மதி.

அவள் உணவுகளை மேசையில் அடுக்கிக் கொண்டிருக்க தனதறையிலிருந்து ஆபிஸிற்கு தயாராகி வெளியே வந்தான் ரிஷி. வழக்கம் போல அவளை பைசாவிற்கும் கண்டு கொள்ளாமல் வெளியேறப் போக "சாப்பிட்டு போங்க..." என்றவளது பேச்சிற்கு அவளை திரும்பி முறைத்தவன் மீண்டும் முன்னேறப் போக "உங்களுக்காக தானே செஞ்சு வச்சிருக்கேன். இப்படி சாப்பிடாம போனா என்ன அர்த்தம்..." என்றாள் இடுப்பில் கைகுற்றி.

"ம்ம் சாப்பிட இஷ்டமில்லனு அர்த்தம்.." என்றான் அவனும்.

"இஷ்டமில்லைனா..?" என்றவாறு விடாமல் அவள் முன்னேற அவளை மேலும் கீழும் பார்த்தவன் "ஐ டோன்ட் லய்க் யூ என்ட் யுவர் குக்.." என்றான் வன்மமாக..

அதில் வெகுண்டெழுந்தவள் "இங்க ஒன்னும் நீங்க எங்கள விரும்பனும்னு யாரும் ஆசைப்படல.." என முகத்தை திருப்ப அவனோ சிரித்தவனாக அவளுக்கு வலிக்க வேண்டும் என "ப்பாஹ் பரவாயில்லையே இங்லீஷ் எல்லாம் புரியுதே..." என்றதும் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் வெறுமையே குடியேறி இருந்தது. முயன்று இதழை விரித்தவள் கடகடவென அடுக்கிய உணவுகளை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள். அந்த பார்வை அவனை ஏதோ செய்ய தோள்களை உலுக்கி விட்டு சென்று விட்டான்.

...

வெளியே எவ்வளவு தான் பலமானவளாக காட்டிக் கொண்டாலும் அவளும் உயிரும் சதையுமுள்ள சக மனுஷி தானே.. இதோ கண்களைத் தாண்டி கண்ணீர் கன்னம் தழுவியது. இந்த இரண்டு வாரமும் அவனின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ஏராளம். அதில் பட்டிக்காடு, யூஸ்லெஸ்ஃபெலோ, இடியட், ஸ்டுப்பிட், லோக்லாஸ் இப்படி எத்தனையோ...

அதெற்கெல்லாம் முகத்துக்கு நேரே பேசி விட்டு வருபவள் தனதறையில் கண்ணீரில் கரைவாள். கட்டியவனின் பழி வார்த்தைகளை அவளால் தாங்கிக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. அடுத்த நாள் மறந்து விட்டு, இல்லை இல்லை மறந்தவள் போல நடித்து விட்டு மீண்டும் அவனுடன் வம்பு வளர்ப்பாள்.

தன்னை மீறி விம்மல் வெடிக்க வாயில் கை வைத்து அடக்கியவளின் மனக்கண்ணிலோ அன்றைய நாள் நடந்தவை ஓடின..


...


திருமணமான அன்று அவனுடன் காரில் பயணப்பட்டாள். தெரு தாண்டுவதற்குள் சட்டென கார் நிற்க சுற்றி சுற்றிப் பார்த்தாள் மதி.

"ஏய்..." என்ற சத்தம் அவளது காதில் ஏனோ விழவில்லை. மீண்டும் மீண்டும் ரிஷி அழைக்க ஓர் கட்டத்தில் "ஏய் ப்ளடி இடியட்..." என்ற கர்சனையில் திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பிப் பார்க்க அவனோ பார்வையாலே அவளை பொசுக்கிக் கொண்டிருந்தான். ஏனென்று தெரியாமல் அவள் விழிக்க "காதுல என்னடி பிரச்சினை. எவ்வளவு நேரம் கூப்பிடுறது நோன்ஸன்ஸ்..." என்றவனே மீண்டும் "ஓஓ முன்ன பின்ன கார்ல எல்லாம் போய் இருந்தா தானே.. அது தான் இப்படி ஓய்யாரமா உட்காந்து வாய் பார்த்துட்டு வர்ர போல..." என்றவனின் பேச்சு முதல் முதல் அவளை செருப்பால் அடித்தது போலிருந்தது. முகம் கறுக்க அமர்ந்திருந்தவளை மனத் திருப்தியுடன் பார்த்தவன் "நான் என்ன உனக்கு வேலைக்காரனா..? ம்ம் வந்து முன்னாடி ஏறு..." என்றான் ரிஷி.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏற்கனவே பலதை யோசித்து தலை வலிக்க அமர்ந்திருந்தவளுக்கு இவன் இன்னும் தலை வலியைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

எரிச்சலுற்றவன் "ஏய் உன்னத் தான்.. நான் ஒன்னும் இங்கிலீஷால பேசலயே.. உனக்குத் தெரிஞ்ச தமிழ் தானே பேசுறேன் பட்டிக்காடு..." என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

இவன் கோபக்காரன் என ஒரே நாளில் புரிந்து கொண்டவள் இப்படிப் பேசுவான் என எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதும் திரும்பிப் பேச தெம்பில்லாமல் அப்படியே இறங்கி முன்னே போய் அமர்ந்து விட்டாள்.

பிடிக்காத மனைவி நின்னாலும் குற்றம் எழுந்தாலும் குற்றமென்பது போல அவள் தனதருகில் இருப்பதும் அவனது கௌரவத்திற்கு இடைஞ்சலாகியது. அவளை முறைத்து விட்டு வண்டியை மீண்டும் செலுத்த ஆரம்பித்தான். அவளுக்கோ சிறிது நேரத்தில் தூக்கம் கண்ணை சொக்க அப்படியே சீட்டில் சாய்ந்து உறங்கி விட்டாள்.

வேண்டுமென்றே சட்டென ப்ரேக் போடுவதும் பள்ளத்தில் ஏற்றி இறக்குவதுமாக ஒருவாறு சென்னை வந்து சேர்ந்தான் ரிஷி.



தொடரும்...


தீரா.