அத்தியாயம் 1
தாமரைக்குளம், விருதுநகருக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட சின்ன கிராமம். கிராம தேவதை பச்சையம்மனுக்கு வருடாவருடம் நடக்கும் பங்குனித் திருவிழா கோலாகலமாக ஆரம்பித்து இருந்தது.
கொடி ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கான காப்பு கட்டும் சடங்கில் இருந்து திருவிழா ஆரம்பிக்கும். தினந்தோறும் அம்மனுக்கு நடைபெறும் புதுப்புது அலங்காரங்கள், கொடி மரத்தை சுற்றி வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் அனைவரும் பாடும் கும்மிப்பாட்டு, பூஜை முடிந்து வெளியேறும் போது தினம் ஒருவராக ஊர் பெரியவர்களால் வழங்கப்படும் விதவிதமான பிரசாதங்கள் என கோவிலுக்கு உள்ளேயும், வில்லுப்பாட்டு, ஆடல் பாடல், இன்னிசைக் கச்சேரி, சமூகக்கருத்து உள்ள நாடகங்கள் என கோவில் மண்டபத்திலும் தினம்தினம் பண்டிகை களைகட்டும்.
நேமிதம் என்று சொல்லப்படும் நேர்த்திக்கடன் செலுத்தும் சடங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. உடல்நிலை கோளாறு, பணமுடை, தொடர்ச்சியாக நடக்கும் கெடுதல் என எல்லாவற்றில் இருந்தும் காப்பாற்ற வேண்டியும், காப்பாற்றியதற்கு நன்றி சொல்லும் விதமாகவும் வெவ்வேறு விதமான நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் மக்கள்.
விதவிதமான தானியங்களைக் கொண்டு வளர்த்த முளைப்பாரி, உருவபொம்மைகள், ஆமணக்கு விதைகள் நிறைந்த முத்துப்பெட்டி, ஆயிரம் கண் பானை அதற்கு நடுவில் வைக்கப்படும் மாவிளக்கு என பலவற்றையும் தலையில் சுமந்து ஊர்வலமாக தத்தம் வீடுகளில் இருந்து கோவிலுக்கு நடந்து வருவார்கள். அதனுடன் சேர்த்து அலகு குத்துதல், அக்னிச்சட்டி என சிறியவர்கள் ஆரம்பித்து பெரியவர்கள் வரை நேர்த்திக்கடன் செலுத்துவதைப் பார்க்க கண்கோடி வேண்டும்.
அடுத்த நாள் திருப்பலிகொடுத்தல், பொங்கல் இடுதல், மொட்டையடித்தல், காது குத்துதல் போன்ற வைபவங்கள் நடைபெறும். அன்றைய இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் ஊர்வலம் நடக்கும். அதற்கு அடுத்த நாள் அன்னதானத்தோடு திருவிழா முடிவடையும்.
வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த திருவிழாவிற்காக ஊரை விட்டு வேலைக்காக வெளியூர் சென்ற இளைஞர்கள் அனைவரும் ஊர் திரும்புவார்கள். அப்படித்தான் அவனும் வந்தான். திருவிழாவிற்காக வருகை தந்த அவன் மனதில் துளியும் பக்தி இல்லை மாறாக நெஞ்சம் முழுவதும் வஞ்சம் பற்றி எரிந்தது.
“பராசரன் மகன் தானே நீ. என்ன மாதிரி வளர்ந்துட்ட. இத்தனை வருஷம் ஆச்சா உனக்கு இந்த ஊருக்குள்ள அடியெடுத்து வைக்க.” என்று பெரியவர் ஒருவர் கேட்க, அவரை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவன் வீடு இருக்கும் திசைக்கு எதிர்திசையில் கோவிலை நோக்கி நடந்தான்.
திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் எண்ணிக்கையில் ஆயிரத்திஎட்டு திருவிளக்குப் பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்தது அன்று. வயதுக்கு வராத பெண்களில் ஆரம்பித்து, வயதான பாட்டிகள் வரை பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளக் கூடிய சடங்கு.
அடிமுடியற்ற சிவபெருமானின் துணைவி அம்பிகையை ஜோதியின் வடிவில் உருவகப்படுத்தி அவளை மகிழ்விக்க, அனைவரும் ஒன்றாக அமர்ந்து மந்திர உட்சாடனம் செய்து வழிபடும் இந்த முறையானது சுற்றுவட்டாரத்தில் மிகப் பிரபலம்.
தீபமேற்றப்பட்ட திருவிளக்கில் இருந்து வந்த வெளிச்சம் கோவிலை வண்ணமயமாக்கியது என்றால் அதில் இருந்த நல்லெண்ணையின் மணம் கோவில் முழுவதும் தெய்வீக மணத்தைப் பரப்பியது.
ஆயிரம் பெண்களுக்கு நடுவில் இளம்பச்சை நிற சேலையில் இருந்த குறிப்பிட்ட பெண்ணைக் கண்டுகொண்ட மித்ரனின் கண்கள் நாகத்தின் கண்கள் போல் பளபளத்தது.
“அகல்யா” என்று தன்னோடு சொல்லிக்கொண்டான். யாரோ தன்னைக் கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்த்த அகல்யா அவன் நின்று கொண்டிருந்த பக்கம் மட்டும் பார்க்காமல் போனது விந்தையான விஷயம் தான். அவள் தான் பார்க்கவில்லையே தவிர, அவள் அருகில் பூஜைக்காக அமர்ந்திருந்த அவளின் பெரியம்மா பெண்ணான மேனகா அவனை அடையாளம் கண்டுகொண்டாள். ஆசையாக அழைக்க வந்தவள் அவன் கவனம் மொத்தமும் அகல்யாவிடம் இருப்பதைக் கண்டு கடுப்பாகி அமைதியாகிவிட்டாள்.
உறவாக நினைத்தவர்களைப் பழிவாங்க வந்திருந்தவன் அதற்கு பகடைக்காயாய் அகல்யாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்பது புரியாமல் பொறாமையில் பொங்கிக் கொண்டிருந்தாள் மேனகா.
விளக்கு பூஜை முடிய நேரமாகும் என்பதால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்னும் நினைப்பில் மித்ரன் வீட்டை நோக்கி பயணப்பட்டான். சில காலமாக தனிமையை மட்டுமே உணர்ந்திருந்தவனுக்கு மனிதர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் இயற்கையாய் உருவாகி இருந்த வெட்கை அசௌகர்யத்தைக் கொடுத்தது. கோவிலில் இருந்து கிளம்புவதற்கு அதுவும் ஒருகாரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
மித்ரன் குடும்பம் சற்றே வித்தியாசமானது. அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் தங்கள் ஜோடியுடன் நெடுநாள்கள் வாழும் பாக்கியம் கிடைத்தது இல்லை. சாபம் வாங்கிய குடும்பம் என்கிற பெயர் உண்டு அந்த கிராமத்திற்குள்.
பராசரர், சத்யவதி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த பெண் ரேணுகா தேவி, இரண்டாவது பெண் அருந்ததி, மூன்றாவது விஷ்வாமித்ரன். நீண்டநெடுங்காலம் கழித்து பிறந்தவன். அவன் பிறந்த வீட்டிற்குள் தாய் சத்தியவதி இறந்து போக, திருமணத்திற்கு காத்திருந்த அக்காக்கள் இருவர் தான் அவனுக்கு அம்மாவாகிப் போனார்கள்.
ரேணுகாவிற்கு தம்பி என்றால் கொள்ளைப் பிரியம். அவன் தானாக தன் வேலைகளைச் செய்து பழகும் வரை தனக்கு திருமணம் வேண்டாம் என்று விடாப்பிடியாக நின்றுவிட, வேறுவழியில்லாமல் அருந்ததிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார் பராசரர்.
நல்ல வாழ்க்கை தான் என்றாலும் மேனகை வயிற்றில் ஆறு மாதக் குழந்தையாக இருந்த நேரத்தில் தோட்டத்தில் பாம்பு கடித்து இறந்து போனார் அருந்ததியின் கணவர். அதன் பின்னர் பிள்ளையோடு தந்தையின் வீட்டில் வந்து சேர்ந்துகொண்டார் அருந்ததி.
இரண்டாவது மகள் வாழ்வு தான் மலர்ந்ததும் மடிந்து போனது, மூத்த மகளுக்காகவது நல்ல வாழ்வு வேண்டும் என்று நினைத்து பார்த்து பார்த்து மாப்பிள்ளை தேடினார் மனிதர்.
ஆனால் விதி வேலையைக் காட்ட அவரும் மகள் அகல்யாவோடு தனியாக தந்தையின் வீட்டில் தான் வசிக்கிறார். வயதான தந்தை, வாழ்க்கையைத் தொலைத்த அக்காக்கள் இருவர் என மூவருக்கும் மித்ரன் ஒருவன் தான் வாழ்க்கையின் பிடிப்பு.
அவனைக் கொண்டு தான் இனி தங்கள் வாழ்வு என்பது புரிய, அவனை முழுதாக சொந்தமாக்கிக்கொள்ள தங்கள் மகளை அவனுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் அருந்ததி, ரேணுகா இருவரும் உறுதியாக இருந்தனர்.
ஆரம்பத்தில் வெறும் வாய் பேச்சாக இருந்த அவ்விஷயம் மித்ரன் வளர வளர அக்கா தங்கை இருவருக்கு இடையில் விலகலை உண்டாக்கி மேனகா சடங்கான நேரம் பெரிய பிரச்சனையாக வெடிக்க வைத்தது.
வயதில் மூத்தவள் மேனகா தான் என்றாலும் முதலில் பூப்பெய்தியது அகல்யா தான். இதில் அருந்ததிக்கு அதீத வருத்தம். பல வருடங்களுக்குப் பிறகு வீட்டில் நடக்கும் முதல் விஷேஷம் என்பதால் தடபுடலாக அகல்யாவின் பூப்புனித நீராட்டு விழாவை நடத்தினார் பராசரர்.
விஷேஷத்துக்கு வந்தவர்களில் சிலர் அருந்ததியின் மனதில் எரிந்து கொண்டிருந்த தீயிற்கு எண்ணைய் ஊற்றும் வேலையை சிறப்பாகச் செய்தனர்.
“மூத்தவ தான் காரியக்காரின்னு பார்த்தா அவ பொண்ணும் அவளை மாதிரியே இல்ல இருக்கா. அக்காவுக்கு முன்னாடி உட்கார்ந்திரணும் னு நித்தமும் கடவுள் கிட்டவேண்டுனாளோ என்னவோ.” பூ மலர்வதும் பெண் மலர்வதும் இறைவன் ஒருவனே அறிவான் என்று தெரிந்திருந்தும் வேண்டுமென்றே பேசிச்சென்றார் ஒருவர்.
“உன் பொண்ணை ஏதாவது ஹாஸ்பிடலில் காட்டுறியா ரேணுகா. இந்தக் காலத்தில் வாயில் நுழையாத பெயரில் கண்ட கண்ட நோயை எல்லாம் சொல்லுறாங்க. அப்படி ஏதாவது இருந்தா பிள்ளையை இப்பவே சரிபண்ணிடலாம் பாரு.
என்ன தான் மேனகா மூத்தவளா இருந்து மித்ரனுக்கு அதிக உடைமைப்பட்டவளா இருந்தாலும் பொண்ணா பிறந்ததுக்கான தகுதின்னு ஒன்னு இருக்கு இல்ல. உன் பொண்ணு தாமதம் பண்றதை அகல்யா சாதகமா பயன்படுத்திக்க கூடாது பாரு. சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன் விருப்பம்.” என்று அருந்ததியை ஏற்றி விட்ட இன்னொரு பெண்மணி அப்படியே ரேணுகா வசம் வந்தார்.
“உன் பொண்ணு அழகில் அப்படியே உன்னை உரிச்ச வைச்சிருக்கா ரேணுகா. புது பொண்ணு பாரு முகம் எல்லாம் பூரிச்சு போய் தேவதை மாதிரி இருக்கா. உன் தங்கச்சி கண் முழுக்க உன்பொண்ணு மேல தான். அவ பொண்ணு இன்னும் உட்காரல இல்ல. அந்தப் பொறாமையும், எங்க தம்பியை உன் பொண்ணுக்கு பேசி முடிச்சிடுவியோங்கிற பயமும் சேர்ந்து தான் கொள்ளிக் கண்ணை வைக்கிறா. மறக்காம புள்ளைக்கு சுத்திப்போடு.
அப்புறம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. தாயும் தகப்பனுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேற தான். தங்கச்சி, தங்கச்சி பொண்ணுன்னு பார்த்து உன் உரிமையை விட்டுக் கொடுத்திடாத. அவ பொண்ணு முதலில் பிறந்திருக்கலாம். ஆனா நீ தான் மித்ரனுக்கு மூத்த அக்கா. அவனுக்கு மாமியாராகும் உரிமை உனக்கு தான் அதிகம் இருக்கு.
உன் வாழ்க்கை தான் இப்படியாகிடுச்சு. உன் பொண்ணையாச்சும் நல்லபடியா வாழ வை. மேனகாவும் நல்லா பூரிப்பா தான் தெரியுறா? எப்ப வேண்ணா நல்லது நடக்கலாம். அதுக்குள்ள நீ உன் அப்பாகிட்டேயும், தம்பிகிட்டேயும் பேசி உன் பொண்ணுக்கும் மித்ரனுக்கும்பேசி முடிச்சிடு." என்று பற்றவைத்து விட்டுப்போனார்.
மித்ரனுக்கு அப்போது பதினேழு வயது தான். பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். வீட்டில் நடக்கும் சச்சரவுகள் தெரிந்தாலும் வயதுக்குண்டான விளையாட்டு பரபரப்பில் அவன் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளும் நாளும் வந்தது.
ஒருவழியாக தன் பதினைந்து வயதில் வயதுக்கு வந்தாள் மேனகா. தன் முதல் பேத்திக்கும் எந்த வித குறையும் இல்லாமல் சீர் செய்தார் பராசரர். ஆனால் அருந்ததிக்கு அது மட்டும் போதவில்லை.
“அப்பா இன்னைக்கு நல்ல நாள் தானே. பேசாம மித்ரனுக்கும் மேனகாவுக்கும் பேசி வைச்சு உப்பு தாம்பூலம் மாத்திக்கலாமா?” என பேச்சை ஆரம்பித்தார்.
“என்ன அருந்ததி பேசுற. இரண்டு பேருமே சின்னப் பசங்க. அவங்க வளர்ந்து வரட்டும், எதுவா இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம்.” பொதுவாக சொன்னார் ரேணுகா.
“ஏன் அதுக்குள்ள ஏதாவது பண்ணி உன் பொண்ணுக்கும் மித்ரனுக்கும் முடிச்சுப் போட பார்க்கிறியா? என் பொண்ணு தான் மூத்தவ. தம்பியைக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு தான் உரிமை அதிகம்.” வேகமாக கடுமையாக சொன்னார் அருந்ததி.
“உன் பொண்ணு என் பொண்ணை விட மூத்தவளா இருக்கலாம். ஆனா நான் உன்னை விட மூத்தவ. அப்ப யாருக்கு உரிமை அதிகம் னு சொல்லு பார்ப்போம். எனக்கு பேசத் தெரியாம இல்ல. பேச வேண்டாம் னு அமைதியா இருக்கேன். தம்பி யாரைக் கல்யாணம் பண்ணிக்கனும் அப்படிங்கிறது நீயோ நானோ எடுக்கிற முடிவு இல்ல அருந்ததி. மித்ரன் நினைக்கணும்.” அதிகாரம் இல்லாமல் அழுத்தமாய் சொன்னார் ரேணுகா.
இத்தனை நாள் தான் என்ன பேசினாலும் பெரிதாக உரிமை போராட்டம் நடத்தாத அக்கா இப்போது இப்படி பேசுவதில் பயந்து போன அருந்ததி, “இத்தனை உறுதியா சொல்றன்னா மித்ரனை உன் பொண்ணை நினைக்க வைக்க எதுவும் திட்டம் வைச்சிருக்கீங்களா தாயும், மகளும்.” என வெடுக்கென்று கேட்டுவைக்க அக்கா, தங்கை இருவருக்கு நடுவிலும் பயங்கர வாக்குவாதம்.
இது அடிக்கடி நடப்பது தான் என்பதால் வழக்கம் போல் அவர்களின் சண்டைக்கு நடுவில் தலையைக் கொடுக்காமல் வெளியே இருந்து வேடிக்கை பார்த்தார் பராசரர். அவருக்கும் தன் பேத்திகளில் ஒருவரைத் தான் மகனுக்கு எடுக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அது யார் என்பதை மகன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
எப்போதும் சில மணி நேரங்களில் சமாதானமாகும் சகோதரிகளின் சண்டை இந்த முறை நாளுக்கு நாள் அதிகமாகத் தான் ஆகியது. காரணம் எப்போதும் பொறுமையாக விட்டுக்கொடுத்து போகும் ரேணுகா இந்த முறை தங்கையை வந்து பார் என்னும் விதத்தில் சரிக்கு சரி பேசுசியது தான்.
இப்படியே சண்டை வலுப்பெற அது அந்த ஊரில் உள்ள அனைவரின் வீட்டிலும் சுவாரசியமான கிசுகிசுவாக பேசப்பட்டது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைப்பது போல் வெளியூரில் தங்கி கல்லூரி படித்துக்கொண்டிருந்த மித்ரன் வீட்டிற்கு வருகை தந்திருந்த நேரம், அவனை நடுமுற்றத்தில் நிறுத்தி இரண்டு அக்கா மகளில் யாரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறாய் என்று சொன்னாலே தீரும்.” என்று கொடிபிடித்தனர் சகோதரிகள் இருவரும்.
“எனக்கு என் அக்காக்கள் இரண்டு பேருமே முக்கியம். என் அக்கா பொண்ணுங்க இரண்டு பேருமே எனக்கு தேவதைகள் தான். இரண்டு பேரில் ஒருத்தரை என்னால் என்னைக்கும் தேர்ந்தெடுக்க முடியாது.
இரண்டு பொண்ணுங்களுக்கும் நானும், அப்பாவும் நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம். என்னை விட்டுடுங்க.” என்று பேசி இருக்க, அன்று இரவு ஆரம்பித்து அவன் நல்லதாய் ஒரு சேதி சொல்லும் வரை உணவு உண்ண மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தனர் பெண்கள் இருவரும்.
பேச்சுக்கு கூட இருவரில் ஒருவரை சொல்லிவிட்டால் அன்றோடு தன் குடும்பத்தில் மிச்சம் இருக்கும் சிலதுளி நிம்மதி கூட மொத்தமாக போய்விடும் என்பது புரிய பல்லைக் கடித்து பொறுமை காத்தான் மித்ரன்.
இரண்டு நாள்கள் தொடர்ந்து மூன்றாம் நாளும் வீட்டு மகாலட்சுமிகளின் உண்ணாவிரதம் நீடிக்க, “இப்ப இந்த நிமிஷம் நீங்க சாப்பிடல. நான் காலேஜ் னு போறவன் திரும்பி இந்த வீட்டுக்கு வரவே மாட்டேன்.” மித்ரன் சொல்ல பதறிப்போனது அக்காக்கள் இருவருக்கும்.
வேகமாக எழுந்த ரேணுகா தட்டில் தனக்கான உணவை எடுத்து போட்டு தம்பி முன்னாலே அமர்ந்து சாப்பிட்டார். அருந்ததி தம்பியை சந்தேகமாய் பார்க்க, அன்று கோபித்துக்கொண்டு கல்லூரி வந்தவன் படிப்பு, வேலை என வருடங்கள் கடந்தும் ஊர் திரும்பவில்லை. அழைத்து அழைத்து பார்த்து நொந்த பராசரர் அவ்வப்போது தான் வந்து மகனைப் பார்த்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
என்ன ஆனாலும் இந்த ஊருக்கு வரவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவன் இப்போது வந்திருக்கிறான். ஆனால் அவன் நெஞ்சம் முழுவதும் வஞ்சம் அல்லவா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
"மித்ரா" என காதோரம் யாரோ அழைப்பது கேட்க, "யாரையும் சும்மா விடமாட்டேன்." என்கிற சூளுரையோடு வீட்டிற்குள் நுழைந்தான்.