• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 1

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
சந்தன நிற கால்சட்டையும் சிவப்பு நிற மேல்சட்டையுமாக கழுத்தை ஒட்டியிருந்த இரண்டு பட்டன்களைத் திறந்துவிட்டபடி பால்கனியில் அமர்ந்து கிட்டார் வாசித்துக் கொண்டிருந்த ஆண்மகனின் அருகே அப்போது தான் குளித்து முடித்து பாத்ரோப் அணிந்தபடி, இருக்கிறதா! இல்லையா! என்று கண்டறிந்திட முடியாத தன் இடையை இப்படியும், அப்படியுமாக அசைத்து நடந்து வந்தாள் அந்த மங்கை.

தன் அருகே வந்த மங்கையின் கையைப் பற்றி இதழ் ஒற்றியபடி நுகர்ந்தவன் தன் கண்களை மூடி அவள் பால்வண்ண மேனியில் இருந்து வந்த வாசத்தில் லயித்திருந்தான்.

"கட்... டேக் ஓகே" என்ற அந்த குளியல் சோப் விளம்பரதார இயக்குனரின் குரலில் பிடித்திருந்த கையை உருகிக் கொண்டு நகர்ந்து சென்றான் அந்த விளம்பர நாயகன் விக்ரம் பார்த்திபன். பிடித்தது அவனாக இருந்தாலும், விளம்பர இறுதியில் தன் கையை பிடிங்கிக் கொண்டு தான் நகர்ந்தான். அதனை உணர்ந்த நாயகியும் அவனை ஏக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

அதற்குள் இயக்குனர் நாயகியை நெருங்கி "மேடம் அடுத்த சீன் உங்களுக்கு மட்டும்... திறந்த வெட்டவெளியில் சந்தன வனப் பிரதேசத்தில் சந்தன மரங்களின் நடுவே வெண்ணிற குளியல் தொட்டியும் அதில் நிறைந்து வடிந்த நீரில் குங்குமப் பூக்களுக்கு நடுவே தோள்பட்டை மட்டும் தெரியும் படியாக அமர்ந்திருப்பது..." என்று விளக்கியபடி அந்த காட்சியை படம் எடுக்கச் சென்றார்.

விக்ரமோ அவனுக்காக காத்திருந்த நண்பர்கள் வினோத் மற்றும் உதயன் அருகே சென்று அமர்ந்தான். மற்றவர்களுக்கு விக்ரமின் காரியம் கண்களுக்குத் தெரிந்ததோ இல்லேயோ நண்பர்கள் கண்ணிலிருந்து தப்பவில்லை.

"இது எத்தானாவது டா?" என்ற வினோத்திடம்,

சின்ன இதழ் மூடிய சிரிப்பைச் சிந்தியவன், தெரியாது என்று தோள் குழுக்கி, வசதியாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, "கணக்கு வெச்சுக்கிறது இல்லே" என்றிட,

"நல்லா அழகா தானே இருக்கா! என்ன ப்ரச்சனை?"

"பாக்குறதுக்கு நல்லா இருந்தா போதுமா?"

"அப்போ பழகுறதுக்கு நல்லா இல்லேயா!!?" என்றிட, எதற்காக அந்த சிரிப்பு என்று தெரியவில்லை. ஆனால் மூவருமே சிரித்துக் கொண்டனர்.

"சரி... வேற என்ன எதிர்பாக்குறே? இப்போ உன் சேனல் டி.ஆர்.பி-க்கு முக்கிய காரணம் இவ தான். இந்த டைம்ல நீ ரிஜெக்ட் பண்ணினா உன் சேனல் கதி என்னனு யோசி..." என்று உதயன் கூறிட,

"அவ உன்னை லவ் பண்றா டா? அது உன் கண்ணுக்குத் தெரியலேயா?" என்றான் வினோத்.

"அது மட்டும் தெரிஞ்சா பரவா இல்லேயே... இதுக்கு முன்னாடி யார் யாரை லவ் பண்ணினா? இப்போ நான் நோ சொன்னா உடனே கை வசம் யாரை சப்டியூட்டா வெச்சிருக்கா? எல்லாம் தெரியரதுனால தான் வேண்டாம்னு சொல்றேன்"

"சரி இவளை விடு. அக்ஸரா-வுக்கு என்ன ப்ரச்சனை. அவ உன்னை மட்டும் தானே விரும்புறா? அவளையும் உன் பின்னாடி சுத்தல்ல விட்டுட்டு இருக்கே!!!" என்றான் உதயன்.

"அவ என்னை மட்டும் தான் லவ் பண்றா. ஆனா இந்த செகெண்ட் லிவ் இன் டு கெதர் லைஃப்க்கு கூப்பிட்டாக் கூட ரெடியா இருப்பா... அது அவ காதலோட உச்ச கட்ட நம்பிக்கைனு சொல்லிக்கலாம். ஆனால் அதோட அடிப்படை, ஒத்து வராதுனு தெரிஞ்சா ஈஸியா கழட்டிவிடுறது தானே!!!"

"அப்போ தாலி கட்டி முறையா கூட்டிட்டு வர்ற பொண்ணு மட்டும் உன்னோட லைஃப் லாங் இருப்பானு கேரண்டி தர முடியுமா உன்னால?" என்று வினோத்தின் கேள்விக்கு பதில் கூறுவதற்குள் இயக்குனர் அடுத்த காட்சியின் படப்பிடிப்பிற்கு விக்ரமை அழைத்தார்.

விட்ட இடத்திலிருந்து படம் பிடிக்கப்பட்டது. அவள் கையிலிருந்து வந்த வாசத்தை உணர்ந்து அதில் லயித்திருந்தவன் அவளை கையோடு பிடித்து இழுத்து, கிட்டாருக்கு பதிலாக அவளை மீட்டுவது போலவும், அதில் மங்கையவள் துள்ளி குதித்து சிரித்து விளையாடுவது போலவும் முடிந்தது அந்த விளம்பரம்.

மீண்டும் நண்பர்களோடு வந்து அமர்ந்தவன், பேச்சையும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான். "முறையா தாலி கட்டி புகுந்த வீட்டுக்கு போற பொண்ணுங்க எல்லாருக்கும் என்னால கேரண்டி கொடுக்க முடியாது. ஆனால் எனக்கு மனைவியா வரக் கூடியவளை நான் ஒருபோதும் என்னைவிட்டு விலகிச் செல்ல அனுமதிக்கமாட்டேன்." என்று தீர்க்கமாக உரைத்தான் விக்ரம்.

"இதென்னடா அந்த காலத்து ராஜாக்கள் வாழ்க்கை மாதிரி, நீ உலகறிய ஒன்னும் போகிற ஊரெல்லாம் பலபலனு சுத்துவே.... ஆனா உன் மனைவி மட்டும் யாரையும் விரும்பியிருக்கக் கூடாது!!! அப்படியும் ஒருத்தி உன்னை மட்டும் தான் விரும்புறேனு சொல்லிக்கிட்டு வந்தாக் கூட அவ லவ்வை சந்தேகப்பட வேண்டியது..." என்ற வினோத்தின் கூற்றில் விக்ரமின் முகம் ரௌத்திரத்தில் சிவந்தது.

விக்ரமின் இறுகிய முகத்தைக் கண்டு "சரி... டாப்பிக் ரெம்ப சீரியஸா போயிட்டு இருக்கு... இத்தோட நிறுத்திக்கலாம்... பீச் ஹவுஸ் போலாமா?" என்று உடனே பேச்சை மாற்றினான் உதயன்... அவனைப் புரிந்து கொண்ட வினோத்தும் இதற்கு மேல் நண்பனுக்கு அறிவுரை வழங்கினால் பின்விளைவு தனக்குத் தான் என்று நினைத்து அமைதியடைந்து அவனுடன் புறப்பட்டான்.

தமிழகத்தின் முன்னனி தொலைக்காட்சி சேனலின் உரிமையாளன் விக்ரம் பார்த்திபன். தந்தை ஆரம்பித்த சேனலில் ஆரம்பத்தில் ஆர்வக் கோளாரில் பல விளம்பரங்களுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியவன் இப்போது விளம்பர நாயகனாக நடிப்பதே தன் முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டு அதற்காகவே தன் உடலையும் புஜபல பராத்கிரமசாலி போல் பராமரித்து வருகிறான்.

அதற்காகவே பல பெண்கள் அவனை விரும்புகின்றனர். பற்றாக்குறைக்கு மாடலிங் பெண்களுக்கு விக்ரமின் காதலி என்று கூறிக் கொண்டால் இன்னும் பல வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோக பெயர், புகழ், பணம் என அனைத்தும் விக்ரமின் மனைவி என்ற பதிவியை எட்டியதும் கிடைத்துவிடும் என்ற எண்ணம்... அதற்குத் தானே அரை சான் வயிற்றையும் தாண்டி பல பேர் ஓடி ஓடி உழைக்கிறார்கள்...

கிழக்கு கடற்கரைச் சாலையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த வீட்டினுள் நுழைந்தனர் மூவரும்... இது வழக்கமாக நடக்கும் வார இறுதி சோமபான கொண்டாட்டம் தான்.

கல்லூரி பருவத்தில் வருடத் தொடக்கத்தை சந்தோஷமாக வரவேற்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்த இந்த கொண்டாட்டம் அதன்பின் மாதத் தொடக்கத்தையும், இப்போது வாரத்தொடக்கத்தை, அதாவது ஞாயிறை வரவேற்று சனியை வழியனுப்பி வைக்கும் பொருட்டு வார இறுதியில் விக்ரமின் தலைமையில் இன்று வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நீச்சல் குளத்தின் அருகே தண்ணீரில் மூழ்கியபடி, தண்ணீரில் மூழ்கினர் மூவரும். மாலை வெயிலுக்கு இதமாக இல்லத்தின் இரண்டாம் தளத்தின் நிழல் முதல் தளத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் விழ, கடலைப் பார்த்தபடி பொழுதைக் கழித்தனர்.

இந்த பீச் ஹவுஸ் விக்ரமிற்கு சொந்தமானது. இப்படி மாதாமாதம் இங்கே வந்து தங்குவதற்கு ஏதுவாக பணியாட்கள் நியமித்து பராமரிப்பது வினோத்தின் பொறுப்பு. மற்றபடி உள் செலுத்தும் பானங்களும், சாப்பாடு வகைகளும் உதயனின் செலவு.

மறுநாள் முன்பகலில் தன் இல்லம் நுழைந்த விக்ரமை கூடத்தில் அமர்ந்திருந்த அவன் தந்தை ரத்தினகண்ணன் தான் வரவேற்றார். தந்தையிடம் பயம் இல்லை என்றாலும் மதிப்பும், மரியாதையும் சற்று அதிகமாகவே இருந்தது. 'இவர் இன்னேரத்தில் வீட்டில் எப்படி!!! இவரை தவிர்க்கத் தானே தாமதமாக வந்தேன்' என்று நினைத்தபடி தலையைக் கவிழ்ந்து கொண்டு படி ஏறிச் சென்றான்.

மகனின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்த தந்தை தான் என்றபோதும், தான் காத்திருந்த காரியத்தை சொல்ல வேண்டுமே என்று நினைத்து அவனை அழைத்தார். "பார்த்தி.... உன்கிட்ட கொஞ்சம் பேசனும் சீக்கிரம் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வா" என்றார்.

தலையசைத்துவிட்டு விறுவிறுவென்று தன் அறை நோக்கிச் சென்றவன் மண்டைக்குள் ஆயிரம் எண்ணங்கள். அரைமணி நேரத்தில் கீழிறங்கி வந்தனிடம் "சாப்பிட உட்கார்" என்றார்.

"இல்லே டாட் நாம மொதோ பேசலாம்..." என்றவனுக்கு பதில் கூறாமல், பணியாளை அழைத்து மகனுக்கு உணவு எடுத்து வைக்குமாறு பணிந்தார்.

அவன் உண்டு முடிக்கும் வரை செய்தித் தாளை புரட்டிக் கொண்டிருந்தார். பத்தே நிமிடத்தில் தந்தையின் அருகே வந்து அமர்ந்தவன், "சொல்லுங்க ப்பா" என்றான்.

ரத்தினகண்ணனோ டாட் என்ற அழைப்பைவிட அப்பா என்ற அழைப்பையே விரும்புபவர்... தன் மனைவி விசாலாட்சி மாம், டாட் என்றால் தான் பார்ப்பவர்களுக்கு நம் மேல் மரியாதை வரும் என்று அப்படித் தான் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அன்னை இல்லாத நேரங்களில் விக்ரம் அப்பா என்றும் அழைப்பதுண்டு.

சற்று பெருமிதமாக அவனைப் பார்த்தவர், "இன்னு பத்து நாள்ல விருதுநகர் போறோம்... அங்கே என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான். பேரு தாமோதரன். அவன் பொண்ணுக்கும் உனக்கும் நிச்சயதார்த்தம்" என்று அழுங்காமல் குழுங்காமல் அவன் தலையில் இடியை இறக்கினார்.

"வாட்!!!?" என்று அதிர்ச்சியாக வினவியவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு,

"இது நாம ஏற்கனவே பேசினது தான்னு நெனைக்கிறேன். இருந்தாலும் இன்னொரு முறை நியாபகப் படுத்துறேன் உனக்கு.... நீ விளம்பரத்துல நடிக்கப் போறேனு முடிவெடுக்கும் போதே உனக்கும், உன் அம்மாவுக்கும் சேர்த்தே சொல்லிட்டேன், இந்த வீட்டு மருமக என் சாய்ஸ் தான்னு. ரெண்டு பேரும் சம்மதிச்சதனால தான் உன்னை நடிக்க அலோவ் பண்ணினேன்....." என்று பொறுமையாக எடுத்துக் கூற,

"நானும் இப்போ இல்லேனு சொல்லலேயே!!! ஆனா அந்த பொண்ணை பார்த்து நான் பேச வேண்டாமா!!! விட்டா கல்யாணமே என்கிட்ட சொல்லாம முடிச்சிடுவிங்க போல!!!" சலிப்பாக வந்தது அவன் பதில். கத்தினான் என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் சத்தமாகத் தான் பேசியிருந்தான்.

"நிச்சயத்தை முடிச்சிட்டு சொல்ல நெனச்சிருந்தேன். இன்னு ஃபார்ட்டி ஃபைவ் டேஸ்ல கல்யாணம்...." என்று அடுத்த குண்டை இறக்கினார்.

"என்னால ஒத்துக்க முடியாது.... நான் அந்த பொண்ணை பார்த்து பேசனும்... அப்பறம் தான் கல்யாணம்" என்று அவனும் விடாபுடியாகக் கூறினான்.

"தாராளமா செய்... இது அவங்க அப்பன் ஃபோன் நம்பர்.... அவன்கிட்ட கேட்டு அந்த பொண்ணுக்கிட்ட பேசுவேயோ இல்லே அந்த பொண்ணு நம்பரை வாங்குவேயோ அது உன் பாடு...." என்று கூறி அவனது புலனத்திற்கு எண்ணை அனுப்பி வைத்தார்.

"நேரில் சந்தித்து பேச நினைத்தால் இன்னு வசதி" என்று கூறியபடி எழுந்து நின்றவரை ஆவலாகப் பார்த்தான்.

"பத்து நாள்ல நேர்ல பார்க்கத் தானே போற... அப்போ பேசிக்கோ" என்றபடி நகர்ந்து சென்றுவிட்டார்.

விக்ரமிற்கு தன் அன்னையின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. உடனடியாக அன்னையை சந்திக்க வேண்டுமென நினைத்தபடி அமர்ந்திருந்தவனை நிகழ்வுக்குக் கொண்டு வந்தது அவன் தந்தையின் குரல்.

"உன் அம்மாவே உதவிக்கு கூப்பிட நினைக்காதே! இந்த பொண்ணு தான் மருமகளா வரனும்னு அவ தான் ரெம்ப ஆசைப்படுறா..." என்று கதவின் அருகே சென்று கொண்டிருந்தவர் தன் மகனின் முகத்தைக் கண்டே, அவன் சிந்தனையை ஊகித்து பதில் கூறிவிட்டு கதவை அடைத்துச் சென்றார்.

விக்ரமிற்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. யோசிக்க யோசிக்க வினோத் கூறியது போல் அக்ஸராவே பரவாயில்லையோ என்று நினைக்கத் தொடங்கினான்.

'தெரியாத தேவதைக்கு தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல்' என்று தோன்றியது.



-தொடரும்​